செவ்வாய், 25 டிசம்பர், 2012

இந்தக் கதை எழுதியதற்கு நான் வெட்கப்படுகிறேன். மன்னித்து விடுங்கள் :-((

ஆக்ரோஷத்துடன் இருந்த அந்த இளைஞர்கள் கூட்டத்தைப் பார்க்கும்போதே மனதுள் கொஞ்சம் கிலி பரவியது.  இத்தனை நாட்களுக்குப் பிறகும் இதெப்படி இந்த நெருப்பு இன்னும் அணையாமல் இருக்கிறது என அர்விந்த் ரதோர் ஆச்சர்யப்பட்டான்.  கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடியப் போகிறது, அக்கோரச் சம்பவம் நடந்து. 

நேர்மையான, துணிவான அதிகாரிதான் இந்தக் கொடூரத்தை விசாரிக்கவேண்டும், இதற்கு சரியான ஆள் இவர்தான் என்று பலரின் ஏகோபித்த ஆதரவுடன், கடைசியாய் அர்விந்த் தேர்ந்தெடுக்கப்பட்டான். 
அதன்படியே, அர்விந்த் மிகச் சரியான கோணத்தில், எந்த அரசியல் இடையூறுமின்றி, சாட்சிகளை சரியாகச் சேர்த்து, அந்தக் கொடுமைக்காரர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை அடுக்கி வைத்திருந்தான். 

நாடு முழுக்க பெருங்கோபத்தை கிளறி விட்ட இந்த பாலியல் வன்முறை வழக்கு, விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருவதால், இன்னும் ஓரிரு வாரத்தில் தீர்ப்பு வரும் நிலையை எய்தியுள்ளது.  நிச்சயம் ஒரு குற்றவாளி கூட தப்ப முடியாத அளவு, வலையைப் பின்னியிருந்தான் அர்விந்த்.  செண்டிமெண்ட் கேஸ் வேறு என்பதால் அதிகபட்ச தண்டனையை பெறுவார்கள் என அர்விந்த் உறுதிபட இருந்தான்.  ஆனால், ஊர்மிளாவின் கேள்வி மட்டும் உள்நெஞ்சைக் குடைந்துக் கொண்டே இருந்தது.

"ஜி, அவனுங்கள தூக்குல போடுவாங்கல்ல ?"

"இரண்டு ஆயுள், மூன்று ஆயள் வரை கூட கிடைக்கலாம், தூக்குக்கு வழியில்லம்மா"

"ம்க்கும், அதுக்கு அவனுங்கள வெளியவே
விட்டுடலாம்"

"ஹாஹா, காமன் இண்டியன் வுமன், ஒன்னு தெரியுமா ஊர்மி, என் விசாரணையில அவுங்க எவனையுமே ஒரு அடி கூட அடிக்கல, என் இதுவரை போலிஸ் லைப்ல இவ்வளவு ஒத்துழைச்ச கிரிமினல்ச பாத்ததே இல்ல !   "கதறி அழுவுறான், 'விட்டுலாம் அண்ணான்னு கெஞ்சினேன், என்னையே அடிச்சதுமட்டுமில்லாம, நீதாண்டா மொதல்ல செய்யனும், அப்பத்தான் காட்டிக் கொடுக்கமாட்டன்னு' சொல்லி, வாய்ல இன்னும் கொஞ்சம் ஊத்தி விட்டிருக்கானுங்க, அவன் சொல்றது உண்மையாடான்னு கேட்டா, 'ஆமா, சாப் போதைல என்ன காரியம் செய்யுறோம்னு புரியாமலேயே, இந்தப் பாவத்த செஞ்சிட்டோம், என்ன அடிச்சே கொல்லுங்க'ன்றான்."

"அவங்களுக்காக நாங்களே வக்கீல்கள ஏற்பாடு பண்ணோம், இந்த மாநகர்ல ஒரு வக்கீல் கூட அவுங்களுக்காக வாதாட விரும்பல, கொஞ்சம் சந்தோஷமா இருந்தாலும், இவனுங்களே பெரிய அரசியல் இல்ல பணபின்புலம் உள்ள ஆளுங்களா இருந்தா இது சாத்தியமான்னு தெரில"

"என்ன, நம்ம மதராஸ்ல இருந்தோமே, அப்ப  இதுமாதிரி அங்க நடந்திருந்தா மொத்த பேரையும் எதாவது ஒரு சாக்கு சொல்லி போட்டுத் தள்ளியிருப்போம்"

"பேங்க் லூட்டர வேளச்சேரில போட்டீங்களே, அது மாதிரியா......?"

"ஹஹா...ஊர்மி செம்ம ஞாபகசக்தி உனக்கு, ஆனா ஒன்னு தெரியுமா, ஆக்ச்வலா அன்னிக்கு அவுனுங்கள பொறி வச்சி, குண்டுகட்டா அமுக்கிட்டோம், அதுல ஒருத்தன் சமையக்காரன்,  ரொட்டி சுடுறத தவிர வேறெதுவும் தெரியாதவன், கொடுமை என்னன்னா அன்னிக்கு காலைலதான் கயால இருந்து வந்திருக்கான், வேன்ல கையக்கட்டி தூக்கீட்டு ஹெட்குவார்டர்ஸ் போயிட்டு இருந்தோம், 'அவ்வளவு பேரையும் போடாம, இங்க எதுக்குய்யா கூட்டிட்டு வரீங்கன்னு' திடீர்ன்னு ஒரு ஆண்டிக்ளைமேக்ஸ், திரும்ப அந்த பிளாட் போயி நாலுபேர இதோ இந்தக் கையால சுட்டேன், ரொட்டி சுடுறவன சுட மனம் ஒப்பல, வேற ஒருத்தர்தான் போட்டாரு, அப்பப்பா பாராட்டவிட 'கொலைகாரரே' ன்னு எவ்வளவு எதிர்ப்பு தெரியுமா ?  என்ன, இன்னிக்கு நிம்மதியா இருக்காங்க, இங்க அந்த வேலையெல்லாம் மிலிடரி மட்டும்தான் செய்ய முடியும், சரி தூங்கலாம்" 

ஒவ்வொருமுறையும் இந்தக் குற்றவாளிகளை விரைவுக் கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் போதெல்லாம், கோர்ட்டுக்கு வெளியில்
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பதாகைகளை ஏந்தி, அவர்களை 'தூக்கில் போடு', 'கல்லால் அடித்துக்கொல்' கோஷமிடுவது நாளுக்கு நாள் அதிகமானதே அன்றி குறையவே இல்லை.  நாளை குறுக்கு விசாரணைக்கு கொண்டுசெல்ல வேண்டும், சிரமமில்லாமல் அவர்களை கோர்ட்டுக்குள் அழைத்துச் செல்ல, அர்விந்த் ஒரு மாஸ்டர் ப்ளான் வைத்திருந்தான்.  அது சரியாய் செயல்பட வேண்டுமே என்ற கவலையுடன் தூங்கிப் போனான்.  

திகார் சிறையிலிருந்து வரும்வழியில், வழக்கமாக அவர்களைக் கொண்டு செல்லும் அந்தக் கவசவாகனத்தை தவிர்த்து, ஒரு டெம்போ டிராவல்லரில் குற்றவாளிகள் அனைவரையும் மாற்றி ஏற்றிவிடப்பட்டனர்.  பாதுகாவலர்களில் பெரும்பாலோர் அந்தக் கவசவாகனத்தில் அமர்ந்து பின்தொடர, அர்விந்த், மற்றும் அவனுடைய இரு
மெய்காப்பாளர்கள் மட்டும் அந்த வேனில் சென்றனர். 

நகருக்குள் நுழையும்போது, அந்தக் கவச வாகனுத்துக்கும், குற்றவாளிகளின் வேனுக்குமிடையேயான இடைவெளி அதிகரித்தது.  அர்விந்த் வாக்கிடாக்கியில் கவசவாகன ஓட்டுனரை திட்டப்படி,  கோர்ட் முன்வாசல் வழியாக வரச் சொன்னான். 

அந்தக் கவசவாகனத்தைச் சுற்றி, ராட்சத சங்கிலியாய் கைகோர்த்து பாதுகாப்பு வளையமாய் தில்லி மாநகரக்காவலர்கள் அரண் அமைத்தனர்.  கூட்டம் நெருக்கியடித்து அந்த வேனை முற்றுகையிடத் துடித்துக் கொண்டிருந்தது.  ஆனால், விரைவுக் கோர்ட் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே அமைதியாய் குறுக்கு விசாரணை நடந்துக் கொண்டிருந்ததை, அவர்கள் அறிந்திருக்கவில்லை. 

திகார் செல்ல, கோர்ட்டின் பின்புறமிருந்த ஒரு மறைவான சந்தில் இருந்து,  அந்த வேன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.  அர்விந்த் சிகரெட் கரைவதற்க்காக, வேன் ட்ரைவர் காத்திருந்தார்.   திடீரென ஒரு சலசலப்பு, கையிலிருந்த கறுப்புக் கோட்டை வைத்து மறைத்திருந்த ஆயுதங்களை கையிலேந்தி, இருபதுக்கும் மேற்பட்ட ஒரு கும்பல் அந்த வேனை நோக்கி ஒடி வந்தது.  அர்விந்த் சுதாரிப்பதற்குள், ஒருவன் அர்விந்த் கழுத்தில் கூரிய வாளை வைத்து, வேன் ட்ரைவரையும், பாதுகாவலர்களையும், முன்புறம் செல்லுமாறு எச்சரித்தது. 

அவர்களை நெட்டித் தள்ளிச் சென்ற அக்கும்பல், ஒரு கழிவறையில் தள்ளி அடைத்தது.  இவற்றையெல்லாம், உற்று நோக்கியவாறே இருந்த வாளைக் கையில் வைத்திருந்தவன்,  அர்விந்தைப் பார்த்து "முஜே மாப் கீஜியே சாப்" என்று பக்கத்தில் இருந்தவனுக்கு கண்ணைக் காட்ட, அவன் அர்விந்த் தலையில், தன் கையில் வைத்திருந்த பேஸ்பால் மட்டையால் அடித்தான்.  பிறகு, அந்தக்கும்பல் பீப்பாயில் வைத்திருந்த பெட்ரோலை  வேன் முழுக்கத் தெளித்து,  மிச்சமிருந்ததை வேனுக்கு அடியில் ஊற்றியது.  அதுவரைதான் அர்விந்த் பார்த்தது. 

அதற்குள் கழிவறையில் சிக்கியவர்கள் கொடுத்த தகவலால், உடனடியாக பாதுகாப்புப் படை பின்புறம் வந்து சேர்ந்தது.  தீ அணைப்பு வாகனமும் ஏற்கனவே அங்கிருந்ததால், நல்லவேளையாக அந்த வேன் முழுதாய் எரிந்து விடாமல் அணைக்கப்பட்டது.  ஆனால், வேனில் இருந்த குற்றவாளிகள் அனைவருக்குமே கடுமையான தீக்காயம் ஏற்பட்டிருந்தது.  அவர்களுடைய ஓலங்களை எல்லா டிவி சேனல்களும் பதிவு செய்தன. 

அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்றாலும் நாற்பது முதல் ஐம்பது சதவிகிதம் தீப்புண் ஏற்பட்டிருப்பதால், பாதிப்பு அதிகம்தான் என அரசு மருத்துவமனையின் டீன் எல்லோருக்கும் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.   

அதேநேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அர்விந்த் நெற்றியில் 'ஷுக்ரியாஜி' என்று புன்னகை ததும்பி வழிய, முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.

                                             --  முடிந்தது (முடிந்ததா ?)  --


  


         

          

  

செவ்வாய், 20 நவம்பர், 2012

குயிலினிது குழலினிதென்பார்.......

பெருந்திடுக்கிடலோடு
விழித்தெழுந்தமர்ந்தேன்......
தீங்கனவுமில்லை
எவரும் எழுப்பியிருக்கவுமில்லை.......
க்ரிக் க்ரிக் க்ரிக் க்ரிக்
ரீங்காரமட்டும் எங்கோரத்திலிருந்து
கசிந்தோடிக் கொண்டிருந்தது !


நா வறண்டு
குளிர்ந்த நீர்க் கோர.......
அடுக்களை சென்று
ஸ்விட்சைப் போட்டேன்......
வெள்ளமென வெளிச்சம் பாய
பாய்ந்து பதுங்கின
கரப்பான்கள் ஏழெட்டு !தேகம் கூசி
அருவெறுப்பில் சிலிர்த்தேன்......
இவ்வுலகில் வெறுக்கப்படும்
தலையாய ஜந்தல்லவா அது......
தாகத்தை தவிக்க விட்டுவிட்டு
பூச்சிக்கொல்லி திரவத்தை
பார்வையால் துழாவினேன் !


மழலைப்பருவத்தில் பாடப்புத்தகத்தில்
பெரிதாய் வரைந்திருந்ததை தவறாய் ஊகித்து.......
தேனீக்கள் எங்கிருக்கும் என்ற கேள்விக்கு
'கக்கூஸில்' என்று பதிலளித்த.....
மீரான்தான் கற்றுக்கொடுத்தான்
எப்படியெல்லாம் துன்புறுத்திக் கொல்லலாம்
கரப்பான்களை என்று !என்னை ஓர் அறையில்
பூட்டிவைத்து......
ஒரு பறக்கும் கரப்பானை விட்டுவிட்டால்
பயத்தில் மரணித்தே விடுவேன்......
அதன் எண்ணற்ற கால்களும்
கால்கள் முழுக்க முடிகளும்
அரையடி மீசையும் ச்சீ ச்சீ !


ஆத்திரம் தீருமட்டும்
தெளித்தவாறே இருந்தேன்......
சிக்கிய ஒன்றிரண்டு
கரப்பான்களின் மேல் விஷத்தை......
மல்லாக்க புரண்டு
அதுகள் துடித்ததை பார்த்தபின்னே
கிட்டியது ஆனந்தமல்ல பேரானந்தம் !படுக்கையில் துயில
முயல்கையில் கவனித்தேன்......
அந்தச்சத்தம் நின்று போயிருந்தது
நிசப்த இரவின் அடையாளச்சின்னமல்லவா அது.....
அதையுமா கொன்றேனென்று
மனம் வலித்து
நித்திரை மறந்தது !


பெருந்திடுக்கிடலோடு
விழித்தெழுந்தமர்ந்தேன்......
க்ரிக் க்ரிக் க்ரிக் க்ரிக்
காதில் தேனாய் பாய்ந்த........
அந்த ஓசைக்குப் பின்
இனி நிம்மதியாய்
கண்ணயர்வேன் !                                                                - நன்றி - 

  

 

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வா வா வால்மார்ட் ........!

வால்மார்ட் வருகையால் திவாலாகப் போவது ரிலையன்ஸ் 'ப்ரஷ்' , நீல்கிரிஸ், மோர், பிக்பஜார், இன்னபிற பெரிய 'டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்'  போன்ற ஜாம்பவான்களின் கடைகள் மட்டுமே.    பிறகெதற்கு சில்லறைக்கடை வியாபாரிகள் வாழ்வு  நாசமாகும், விவசாயிகள் அழிவார்கள்,  மக்கள் துயருருவார்கள் என்ற கூக்குரல்கள் ?   அது உண்மையா...........பார்ப்போமா ?


வால்மார்ட் என்பது உலகத்தின் பெரிய டிபார்ட்மெண்டல் கடைகள்
அமைக்கும் ஒரு நிறுவனம்.  கூகுள் சர்ச்சில் நீங்கள் தேடிய எல்லாமே
ஏறக்குறைய கிட்டிவிடுமல்லவா ?  அதுபோல, இந்தக் கடையில்
உங்களுக்கு வேண்டுவன உலகில் எந்த மூலையில் இருந்தும்
கொண்டுவந்து கொடுக்கப்படும். 

எத்தனை கார்கள், எத்தனை பைக்குகள்
வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ள பார்க்கிங் வசதி இந்தக் கடையில் இருக்கும்.  பொருட்களை நீங்கள் கிஞ்சித்தும் சுமக்காமல், கேட்டதை உங்கள் காலடியில் வந்து கொட்ட பணியாட்கள் டை கோட்டுடன் வலம் வருவர்.  எல்லாக் கார்டுகளும் ஏற்கப்படும்.  வங்கி உத்திரவாதம் கொடுத்தால் உங்களுக்கு கடனும் கொடுக்கப்படும்.  டோர் டெலிவரி கிட்டும்.  ஆரம்பக் கால சலுகை பண்டிகைகாலச் சலுகை, ரெகுலர் கஸ்டமர், கோல்டன் கஸ்டமர் என்று பல டிஸ்கவுண்ட் ஆப்ஃபர் கிட்டும்
அடடா இதில் எதுவும் புதிதாய் இல்லையே, ஏற்கனவே இதுபோல நிறைய பார்த்துவிட்டோமே  என்கிறீர்களா ?  எஸ், இந்த வால்மார்ட் பத்து வருடங்களாக இந்தியாவுக்குள் நுழைய விரும்புகிறது.  எதிர்கட்சிகள் அல்லது கூட்டணிக் கட்சிகள், எதிர்ப்பால்  அதன் ஆசை உடனடியாக நிறைவேறவில்லை.  கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தில், இங்கிருந்த நம்முடைய  நிறுவனங்கள் வால்மார்ட் உத்திகளை கையாண்டு நம்மை ஏற்கனவே அந்தப் பழக்கங்களை நகரங்களுக்குள் புழங்க விட்டுவிட்டன.

ஆனால், வால்மார்ட் உள்ளேவந்தவுடன் கிடைக்கும் முதல் ஆப்பு
இவர்களுக்கு என்று சொன்னேன் இல்லையா ?  அது தவறு (!)
வால்மார்ட் என்பது கடல் போல் பரந்து விரிந்து கிடக்கும் ஒரு கடை.
அது நகரத்தின் முக்கியமான அல்லது மையப் பகுதியில் அமையப்
பெற்றால்தான் வணிகம் சிறக்கும்.  திடீரென அவ்வளவு பெரிய இடம்
எங்கிருந்து உருவாகும் ? 

அம்பானி மூளை அங்கே சிந்திக்கும்.
அம்பானி சுதேசி ஆயிற்றே, நாம் ஏன் வால்மார்ட்டுடன்
போராடக் கூடாது என்று சிந்திக்க அவர் ஒன்றும் வ.உ.சி இல்லையே ?  பேரம் படிந்துவரின் எல்லா ரிலையன்ஸ் கடைகளும் வால்மார்ட்டின் ஒரு பகுதியாய் மாறிவிடும்.  அம்பானி போட்ட  கணக்கு  தப்பாமல்  துட்டு கொட்டும்.   அந்தக் கடை ஊழியர்கள் எல்லோருமே வால்மார்ட் ஊழியராகவும் ஆகலாம், அல்லது இதர கடைகளில் இருந்தும் பேராசை காட்டி அழைத்து வரப்படலாம்.   ஆக, தமிழகத்திலே காலம்காலமாய் வணிகம் செய்துவரும் உள்ளூர் ஒரளவு பெரிய வணிகர்கள் முதலில் பாதிக்கப் படுவர். 

அவர்களுக்கு திடீரென வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும்.
அல்லது வால்மார்ட்டுக்கு நிகராக சம்பளம் கொடுத்து ஆட்களைத்
தக்க வைக்க நேரிடும்.  இதனால் செலவு அதிகரித்து அவர்கள்
பொருட்களை சகாய விலைக்கு விற்க முடியாத நிலை வரலாம்.
வால்மார்ட்டோ சில வருடங்களுக்கு நட்டப்பட்டாவது
தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட குறைந்த விலையில் பொருட்களை விற்க முயலும்.  நம்முடைய ஊர்
கடை முதலாளிகள் தொடர்ந்து நட்டப்பட விரும்பாமல் அல்லது முடியாமல் கடைகளை இழுத்து மூடுவர் !!!

விவசாயிகளும் துன்புறுவார்களா என்ன ?  இல்லை ஆனால் ஆமாம் .
என்னய்யா சொல்ல வர்ற ?  அதாவது ஆரம்பத்தில் தான் விற்கப் போகும்
காய், கனி, தானியங்களுக்கு சிறப்பு விலைகள் கொடுத்து
விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்யும் வால்மார்ட்.
உதாரணத்திற்கு நாசிக்கில் விளையும் வெங்காயம் கிலோ பத்து
ரூபாய் கொடுத்து உள்ளூர் வியாபாரி விவசாயிடமிருந்து
வாங்குவான் என்றால் வால்மார்ட் கிலோ பதினைந்து கொடுத்து வாங்கும்.  ஆனால், வணிகத்தை தன்வசமாக்க அதை பனிரெண்டு ரூபாய்க்கு விற்கும்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.  நாசிக் வியாபாரியும் காலி,  அவனிடம் வாங்கி விற்கும் சென்னை வியாபாரியும் காலி.

 
முதலில் கொஞ்சம் பணக்கார வணிகர்கள் வாழ்வில் நெருப்பு வைத்த
வால்மார்ட், இப்போது அவர்களை விட குறைந்த வணிகம் செய்பவர்களையும் சிதைக்கிறது.  இப்படியே கொஞ்சக் காலம்
போனபின்னர், அந்த நாசிக் விவசாயிகளிடம் வெங்காயம் கொள்முதல் செய்யும் ஒரே நிறுவனமாக வால்மார்ட் இருக்கும்.  பருவமழைக் குளறுபடியால் வெங்காயம் உற்பத்தி குறைந்து விட்டது என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், அப்போது மார்க்கட்டில் விலை கூட
வேண்டுமல்லவா ?  வால்மார்ட் சர்வாதிகார நிலை எய்துவிட்டால்
அதே பதினைந்துதான் கொடுக்கும், ஆனால் தட்டுபாட்டை பயன்படுத்தி
போட்டியற்ற வணிகத்தில் கிலோ நூறு ரூபாய்க்கு நம்மிடம் விற்கும்.

படிப்படியாய் ஆப்புகள் விவசாயிக்கும் மக்களுக்கும் வைக்கப்பட்டவுடன், அடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கும் வைக்கும்.  வரிச்சலுகை கேட்கும்,  பதுக்கல்களைத் தடுக்கவே முடியாது, செயற்கைத் தட்டுப்பாடா, இயற்கைத் தட்டுப்பாடா என்பதை கண்டுகொள்ளவே முடியாது.  லாபங்கள் டாலர்களாய் மாற்றப்பட்டு அவர்கள் தாய்நாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.  

ஒருவேளை  எதிர்காலத்தில் காங்கிரஸ் அல்லாது வேறு ஆட்சி 
ஏற்பட்டு வால்மார்ட்டுக்கு நெருக்கடி கொடுக்க முனைந்தால் அது
அவர்களுடைய பார்லிமென்ட் எம்பிக்களிடம் தெரிவிக்கப்பட்டு, இந்தியா 'காட்' ஒப்பந்தத்தை மீறுகிறது என்று அமெரிக்க அதிபரால் எச்சரிக்கப்படும்.  அதையும் தாண்டி அவர்களை வெளியேற்றத் துணிந்தால், 'பழைய குருடி கதவத் திறடி' என்று முழுமூச்சாய், அமெரிக்கா, பாகிஸ்தானை ஆதரிக்கச் சென்றுவிடும்.  அங்குள்ள ஐ.எஸ் ஐ யைத் தூண்டி, இங்கு அப்பாவிகள் மத்தியில் குண்டுகளை வெடிக்கச் செய்யும்.

இதனால்தான் நம் முன்னோர் 'துஷ்டனைக் கண்டால் தூர விலகு' 
என்றனர்.  ஆனால் இப்போது நாம் புலி வாலை பிடித்தாயிற்று, 
இனி சாமர்த்தியமாய்த்தான் அதைக் கொல்ல  வேண்டும், அசந்தால் அது நம்மை  அடித்துத் தின்றுவிடும்.  

நமக்கு இப்போதிருக்கும் ஒரே ஆயுதம் 'தேசப்பற்று'
நம்முடைய உள்ளூர் உணவுகள், ஆடைகள் அணிகலன்கள், அலங்காரப்
பொருட்கள், காய், கனிகள், என்று தேடி தேடி நுகர வேண்டும்.  
நம்மை சுரண்ட விடாமல், நம்முடைய சுதந்திரத்திற்கு கேடு வர விடாமல்
கண்காணிக்க வேண்டும்.  கிழக்கிந்தியக் கம்பனி வந்தபோது 
டெல்லியை ஆண்டுக் கொண்டிருந்த முகலாய அரசும், விஜயநகரப்
பேரரசும், கேரளா அரசரும், அப்போது எதற்கோ மயங்கி, இதுபோல
வியாபாரத்துக்கு இந்தியாவை அவர்களுக்குத் திறந்து விட்டனர்.
விளைவு, கடைசி முகலாயப் பேரரசர் ஒரு பிச்சைக்காரக் கோலத்தில்
அவர்களாலேயே நாடு கடத்தப்பட்டார்.  


அப்போது நாம் இது போன்று ஐக்கியமாய் இருந்தது இல்லை.
அப்போது தமிழர் இந்தியர் என்று எந்த ஒற்றுமையுமில்லை.  
இப்போதும் சில ஒருமைப்பாடு தெரியாத ஜந்துக்களால் கொஞ்சம்
மனக்கசப்பு இருப்பினும் இந்தியாவுக்கு ஒரு கேடு என்றால் உயிர்
கொடுத்துப் போராட ஐம்பது கோடி இளைஞர்கள் உள்ளோம்.
வரட்டும் வால்மார்ட், நம்முடைய ஒற்றுமையை சோதிக்க விரும்பினால், வாலாட்டிப் பார்க்கட்டும்,  வா வா வால்மார்ட் !!!


                                                   *** WAR BEGIN HERE ***
    

புதன், 5 செப்டம்பர், 2012

கப்பலோட்டிய தமிழன்


இன்று கப்பலோட்டிய தமிழன் பிறந்தநாள்.  இவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.  எனினும், இவரைப் போன்ற நிஜக் கதாநாயகர்களைப் பற்றி, பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.  ஒன்றிரண்டு தெரியாதவர்கள் கூட அறிந்துதான்  ஆக வேண்டும் என்பதற்காக இந்த மிகச் சுருக்கமான பதிவு.  (பிறந்தநாள் அன்றாவது நினைக்கிறார்களே என்று அந்த ஆத்மா நிம்மதியாய் உலவட்டும்)

பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிகளிலும், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பங்களிலும்தான், நம் நாட்டில் சுதந்திர வேட்கை வீறு கொண்டது.  விடுதலைப் போரில், கோபாலகிருஷ்ண கோகுலே, பாலகங்காதர திலக், போன்ற முன்னோடி வீரர்களின் போட்ட,  பலமான அஸ்திவாரத்தில், மோகன்தாஸ், ஜவஹர்லால், பாரதியார், நேதாஜி போன்றோர் வீரமான கட்டிடத்தை எழுப்பினார்கள்.

மகாத்மா, வெள்ளையனுக்கு எதிரான போரில்,  தன்னுடைய புதுப் புது அஸ்திரங்களை எய்துக் கொண்டே இருந்தார்.  அதில் ஒரு சிறந்த 
அஸ்திரம்தான் சுதேசிக் கொள்கை.  அது சரி, சுதேசி என்றால் என்ன ? 
சுதேசி = சுய தேஷ் = சொந்தநாடு அவ்வளவுதான்.

வெள்ளையன், நம்முடைய பாரம்பரிய பயிர் முறைகளை பயிரிட, விவசாயிகளிடம் தவிர்க்கச் சொன்னான்.  மறுத்தவர்களை மிரட்டினான், சமயங்களில் அழித்தான்.  மாறாக, பருத்திகளை விதைக்கச் சொன்னான்.  ஏக செலவு செய்து விளைவித்த விவசாயிக்கு, குறைந்த பணத்தைக் கொடுத்துவிட்டு, அந்தப் பருத்தியை வாங்கிச் சுத்தம் செய்தான், அதை நூலாக்கினான்.  (இப்படித்தான் குஜராத்திலும், மும்பையிலும், கோயம்புத்தூரிலும் நிறைய ஸ்பின்னிங் மில் உருவாகின)

பிறகதை, லண்டனுக்கு கப்பல் கப்பலாய் ஏற்றி, அங்கிருந்து அதை நவீன ஆடைகளாக மாற்றி, இங்கு கொண்டுவந்து, அதிக விலைக்கு விற்று,  கொள்ளை கொள்ளையாய் சுரண்டினான்.  அவனிடம்,  மெஷின் தொழில்நுட்பம் இருந்தது,  நாமோ அப்போது கைகளால் ராட்டையைச் சுற்றி நூல் தயாரித்தோம்.  இது கைத்தறி.  இந்த ஆடைகள் பார்க்க அவ்வளவு பொலிவாய் இருக்காது. 

ஆனால், மோகன்தாஸ் வெள்ளையன் நாட்டு ஆடைகளை உடுத்தாது,
இந்த கைத்தறி ஆடைகளை மட்டுமே இந்தியர் உடுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.  இது சுதேசிக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.  வெள்ளையன் நம்மிடமிருந்து சம்பாதிப்பான் என்றால், அதை எல்லாவற்றையுமே புறக்கணிக்குமாறு விடுதலைப் போர் தலைவர்கள் அறிவுறித்தினார்கள்.  

சிதம்பரனார் தூத்துக்குடியில் மிகப் பெரும் பணக்காரர் வீட்டில் பிறந்த சீமான்.  "இந்த எழவெடுத்த விடுதலைப் போரெல்லாம் நமக்கெதற்கு" ?  என்று மற்ற பணக்காரர்கள் மற்றும் அவரைப் போன்ற பிற உயர் சாதியினர் வெறுக்க,  இவர் மட்டும் மோகன்தாஸ், திலகர், பாரதி போன்றோரின் தாய்நாட்டுப் பற்று பேச்சுக்கு மயங்கினார்.  விளைவு, முழுமூச்சாய் விடுதலைப் போரில் ஈடுபட்டார்.
 
சுதேசிக் கொள்கை பெரிதும் வெற்றி பெற வேண்டுமானால், எல்லாத் துறைகளிலும் இருந்து, வெள்ளையனை இந்தியாவில் இருந்து நீக்க வேண்டுமென சிதம்பரனார் விரும்பினார்.  இந்தியாவில் இருந்து, ஏகபோக ஏற்றுமதி கப்பல் மூலமே நடைபெறும்.  ஆனால், உலகம் சுற்றும் பெரும் கப்பல்கள் எல்லாமே, வெள்ளையனுக்குச் சொந்தமாக இருந்தது.  அதிலும், தூத்துக்குடியில் இருந்து கொழும்பு செல்வது என்பது ஒரு பேச்சுக்கு, சென்னை பாரிமுனையில் இருந்து தாம்பரம் செல்ல,  நடந்தால் எவ்வளவு நேரம் ஆகுமோ, அவ்வளேவே ஆன ஒரு குறைந்த தொலைவு போல.  ஆனால்,  இதற்கும் வெள்ளையன் கம்பனி கப்பல்தான் சென்று வந்துக் கொண்டிருந்தது.  

பார்த்தார் சிதம்பரனார்,  'சுதேசி கப்பல் கழகம்'  என்று ஒரு நிறுவனத்தை பார்ட்னர்ஷிப் உதவியின் மூலம் தொடங்கி,   கப்பல்களை வாங்கி, இதே தடத்தில் இயக்கினார்.  அப்போது மக்களிடத்தில் விடுதலைத் தீ பற்றி எரிந்ததால், இவருடைய கப்பலில் செம வியாபாரம்.  வெள்ளையன் கம்பனி அந்தத் தடத்தில் போணியாகாமல், போண்டியாகும் நிலை ஏற்பட்டது.  சரி, நம்மாட்களை எப்படி வீழ்த்துவது என்று தெரியாமாலா அவனால் நம்மை இருநூறு வருஷங்களுக்கும் மேல் ஆள முடிந்தது ?  இவ்வளவு நாள் சம்பாதித்ததை முற்றிலுமாய் இழக்க விரும்பாமல், கொஞ்சமாய் இழக்கத் துணிந்தான்.  சிதம்பரனார் கம்பனி கப்பலை விட எங்கள் கப்பலில் வாடகை பாதிதான் என்று கட்டணத்தை அதிரடியாய்க் குறைத்தான்.
 

ஹிஹி, அப்போ நம்மாளுக காசுன்னா (வேணாம் விடுங்க, இப்ப மட்டும் என்ன வாழுதாம் ?) பேயாப் பறப்பாக.  அதனால  மறுபடியும்  எல்லோரும் வெள்ளைக்காரன்  கப்பலுக்கே போய் விட்டனர்.  சிறிது, சிறிதாக நட்டம் வர,  சுதேசி கப்பல் கழக பார்ட்னர்ஸ், தங்கள்  பங்கை  பிரித்து  தந்து  விடுமாறு, சிதம்பரனாரை மிகவும் நெருக்கினர்.  வெள்ளையன் சூழ்ச்சி ஜெயித்தது.  கப்பல் மற்றும் நில புலன்களை விற்று, சிதம்பரனார் பெரும் நட்டத்தை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், சக இந்தியர்களால் அவமானமும் அடைந்தார். 

பிறகு, தேசத்துரோகம்(!) சுமத்தப்பட்டு, சிறையில் செக்கிழுத்தார்,
கல்லுடைத்தார் என்பதெல்லாம் நீங்கள் அறிவீர்கள்.  சரி, எத்தனையோ
விடுதலைப் போராளிகள், சிறையில் துன்பம் அனுபவித்துதானே
இருப்பார்கள் ?  இவரை மட்டும் ஏன் இத்தனை நினைவு
கூறுகிறோமே ?  என்ற கேள்விக்கான விடை. 

ஒரு செல்வந்தர்,  சுதந்திரம் தேவையே படாத ஓர் உயர்சாதிக்காரர், தன்னுடைய நாட்டுக்காக  சகலத்தையும்  இழந்து  அவதிப்பட்டாரே,  இந்த  ஒரே காரணம்தான் !    ஆனால், வெள்ளைக்காரன் கண்ணுக்கு குற்றவாளி என்றால்  அவன்  அக்கியுஸ்ட்  மட்டுமே, அவன்  பணக்காரன், உயர்சாதி, படித்தவன் எதுவானாலும் இருக்கட்டும் எல்லோருக்கும் ஒரே தண்டனை முறைகள்தான்.  வெள்ளைகாரனிடமிருந்து எதைக்
கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதை விட்டுவிட்டு, எதைக்
கற்றிருக்கக் கூடாதோ அதை மட்டும் இன்னும் தொடர்கிறோம். 

சரி, போதும் இப்ப எதுக்கு இதெல்லாம், இதப் படிக்காமலா, இவ்வளவு
மேல வந்திருப்போம் எனப் ப்ராக்டிகல் சிந்தனையாளர்களுக்கு மட்டும்
முடிவாக சில வேண்டுகோள்கள் (நானும் இதில் அடக்கம்) :-

1 ) நீங்கள் தாராளமாக KFC சிக்கன் சாப்பிடுங்கள், ஆனால் அவன்
முனியாண்டி விலாசை மூடச் சொன்னால், அதை ஆதரிக்காதீர்கள் !

2 )  கோக், பெப்சி தாராளமாக குடியுங்கள், அதற்காக மோர், ரஸ்னா, கூழ்,
குடிப்பவனை இழிவாக கருதாதீர்கள் !

3 )  நெல், கோதுமை, பயிர் வகைகள் விவசாயம் நம்முடைய
மண்ணுக்கு ஏற்ற பயிர் வகைகள்.  அவன் சோயா எண்ணை  சாப்பிடுவதற்காக, நம்மை சோயா வை, விதைக்கச் சொன்னால்,
காசுக்கு ஆசைப்பட்டு, மண்ணை சத்திழக்கச் செய்யாமல், சுழற்ச்சி
முறையில் பயிரிடுங்கள்.

4 )  ஆடி கார் அழகு, அம்பாசிடர் கார் அவமானம் இல்லை !

5 ) PIZZA , BURGER பகட்டுதான், ஆனால்  இட்லி, புட்டு, இழிவில்லை.

இன்னும் கம்ப்யூட்டர், செல்போன், இன்டர்நெட், ஐபாட் பத்தியெல்லாம்
ஏம்பா சொல்லல ன்னு கேக்காதீங்க, சுதேசியை அழிக்க நினைக்கிற
விதேசி (வெளிநாடு) க்கு எதிராத்தான் போராடனும், எல்லாத்துக்குமே
இல்ல.
                                                      


                                                      --- THE END ---

       

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நான் உளறிக்கொண்டே இருப்பேன் !!!

சுடச்சுட மட்டன் பிரியாணியும், உடன் கத்தரிக்காய் மற்றும் வெங்காயப் பச்சடி, முடிவாய் சாப்பிட பிரட்ஹல்வா என்று, இன்றைய மதியத்தை சிறப்பாய் ஆக்கிய நண்பனைக் கட்டிபிடித்து வாழ்த்துக்களை பரிமாறிவிட்டு, அப்படியே குட்டித்தூக்கம் போட்டிருந்தால் நிச்சயம் நிம்மதியாய் இருந்திருப்பேன், ஆனால் நம்ம அரசியல்வாதி லகுடபாண்டிகள் எப்போது நம்மைச் சுகமாக உலவ விட்டிருக்கிறார்கள் ?

'கொஞ்சமாய்த் திருடிக் கொள்ளுங்கள் என்று இருக்கிற ஓரிரு நல்ல அதிகாரிகளையும் லஞ்சம் வாங்க ஊக்குவித்த ஒன்று.....

'தீர்ப்பை விலை கொடுத்து வாங்கலாம்' என்று பணக்காரத் திருடர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய மற்றொன்று.....

இதெல்லாம் ஓல்டு நியூசாச்சா,  இன்னிக்கு ஒன்னு ரம்ஜான் ஸ்பெஷலா உளறிருக்கு,  உளறின நாயகர் பெயர் 'பேனி பிரசாத் வர்மா' அவர் உதிர்த்த முத்துக்கள் 'விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து அதனால் அவர்கள் லாபம் அடைவார்கள் என்பதால் பணவீக்கம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது'

என்னங்க, இவர் விவசாயிங்க, நல்லாருக்கனும்னு ஆசப்படுறாரு, அவரப் போயி தப் சொல்றீங்களேன்னு யாராவது கேட்டீங்கன்னா, நீங்க, 'பணவீக்கம் என்றால், நிறைய பணம் வைத்திருத்தல் போல' என்று புரிந்துக் கொள்பவராய்த்தான் இருக்க வேண்டும். வேறவழியில்லாம, உங்களுக்கு இங்க பணவீக்கம் பத்தி சொல்லியாகனும் சிம்பிளா....
பணவீக்கம்( INFLATION ) பற்றித் தெரிந்தவர்கள். இந்தப் பத்தியை ஸ்கிப் பண்ணி, அடுத்த பத்திக்குப் போகலாம்.  உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு வளத்தையும் இந்த பணவீக்கம் வைத்தே நாம் எளிதாய் அறிய முடியும். பணவீக்கம் மைனசில் இருந்தால் நாடு அபரிமித உற்பத்தியில் இருக்கிறது, ஆனால் கொள்வாரில்லை என்றும் அர்த்தப் படுத்திக்கொள்ளலாம் (இதில் ஏழை, மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிக பாதிப்பிராது) மாறாக, பணவீக்கம் மிகவும் உயர்ந்து அபாய எல்லையைத் தொட்டால், நாட்டில் உற்பத்திக் குறைந்து, அதிக விலையில்தான் பொருள் கிடைக்கும், இது ஒருநாடு, பொருளாதார வீழ்ச்சியில் இருக்கிறது என்று அர்த்தம்.

 
அத்தியாவசிய ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும், மத்தியஅரசு மற்றும் ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்பட்ட விலைக்குறிப்புகள் இருக்கும், இது சந்தை நிலவரத்திற்கேற்ப, ஏறவோ, இறங்கவோ செய்யும். வாராவாரம் வியாழனன்று முந்தைய வாரச் சந்தை நிலவரங்களை வைத்து இந்த INFLATION பற்றி அறிவிப்பார்கள். இயற்கை ஏமாற்றினாலோ, அல்லது அரசியல்வாதிகளும், அரசதிகாரிகளும் சேர்ந்துக்கொண்டு, பதுக்கல்காரர்களை வளரவிட்டாலோ, நாட்டில் விலைவாசி தாறுமாறாய் உயரும், அம்மாதிரிக் கட்டங்களில் பணவீக்கம் மேலும், மேலும் வீங்கும். எனவே அளவுக்கு மேல் வீங்கும் பணம் நமக்கு பெரிதும் ஆபத்து.
 
இம்முறை, தென்மேற்குப் பருவமழை கொஞ்சம் சொத்தப்பத்தான் செய்திருக்கிறது, இதனால் விவசாயம் உற்பத்தி எல்லா இடங்களிலும் சரிசமமாக இருக்காது, அதாவது கர்நாடகத்தில் விளையாதது மராட்டியத்தில் விளையலாம், உ.பி யில் ஏமாற்றிய மழை, ராஜஸ்தானில் நன்கு பெய்து அங்கு மட்டும் கோதுமை விளையலாம். இதனால் பரவலாய் விளையாத சில விவசாய உணவுப் பொருட்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும், இதனால் விளைச்சலைக் கொடுத்த விவசாயிக்கு எப்போதும் கிடைக்காத விலை கிடைத்து அவன் வளமாவான், இதுதான் நம்ம பேதிவர்மா கூறிய கருத்துக்கு அடிப்படை.
 
அப்போது மழை ஏமாற்றியோ, அல்லது இதுவரை அவனுக்கு எந்த வசதியும் செய்துக் கொடுக்காத அரசு ஏமாற்றியோ, விளைச்சலைத் தரமுடியாத விவசாயியின் கதி ? அவனுடையத் தேவைக்கே அவனால் உணவை உற்பத்தி செய்ய முடியாத நிலையில், வீங்கிய பணவீக்கத்தில் அவனால் என்னத்தான் செய்ய முடியும் ?
 
 
முடியுதோ இல்லையோ, பொறுப்பில் இருக்கும் ஒருவன் தன்னுடைய வார்த்தையை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துத்தான் பேசவேண்டும். எங்களிடம் போதிய உணவுத் தானியங்கள் இருப்பு இருப்பதால் பணவீக்கமே இருக்காது என்றுதான் பேசவேண்டும், பதுக்கல்காரர்களைக் கட்டுப்படுத்த இதுபோன்ற பேச்சுக்கள் மட்டுமே உதவும், பணவீக்கம் வரும் என்று உளறினால் அவன் பதுக்கத்தான் தயாராவான். ஆனால் அப்படிச் சொல்கின்ற அரசியல்வாதிகள் எல்லாம் இப்போது கிடையாது, அவர்கள் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கையோடு மறைந்து போய் விட்டார்கள்.
 
ஆக, பணம் வீங்கினால் இழப்பு, பர்ஸ் வீங்கினால் மட்டுமே சிறப்பு (வீங்கின பர்ஸ பொண்டாட்டி/ காதலி கண்ணுல படாம வைக்கிற திறமையைப் பொறுத்து)
 
 
 
 
 
                                    THE END

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

இந்தியச் சுதந்திரதினத்தை நான் ஏன் கொண்டாட வேண்டும் ?நீங்கள் ஒரு இந்தியப் பெண்ணாயிருந்தால்....

நீங்கள் தாழ்த்தப்பட்டவராயிருந்தும், பிற்படுத்தப்பட்டவராயிருந்தும்,
ஆதிவாசியிருந்தும், ஏழையாயிருந்தும் படித்திருந்தால் ....

ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தால்....

இந்துவாயிருந்தால்.....

இந்து அல்லாத வேற்று மதத்தினராய் இருந்தால்.....

தமிழ் நாட்டில் வாழும் வேறு மாநிலத்தவராய்  இருந்தால்....

இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழனாய் இருந்தால்....

நாத்திகராய் இருந்தால்....

அரசியல்வாதியாய் இருந்தால்....

ஊழலை வெறுக்கும் கருத்துச்சுதந்திர வீரனாய் இருந்தால்....

ரொம்ப இழுத்தாச்சு, நீங்க இந்தியனா இருந்தா, ஏன் இந்தியாவுல இருக்கிற அன்னியனா இருந்தாலும் சரி, இந்தியச்  சுதந்திர தினத்தை  நீங்கள் மிகு உற்சாகமாக  கொண்டாடியே ஆகவேண்டும்.  முடியாது, இந்தக் கொண்டாட்டத்தை மறுக்கும் சுதந்திரம் எனக்குள்ளது என்று நீங்கள் கொதித்தால் அது, கொண்டாடும் நாங்களோ, அல்லது என் தாய்நாடோ உங்களுக்குப் போட்ட பிச்சை.  பிச்சைக்காரர்களையும் வெறுக்காத தேசம் எங்களுடையது. அதனால்தான் தொழுமிட வாசல்கள் எங்கும் அவர்களை விட்டுவைத்துள்ளோம்.   ஆனால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தானே........

இந்தியா பல தாதாக்களால் அல்லது ரவுடிகளால் ஆளப்பட்ட தேசம்.
இப்போதும் அப்படித்தான், என்றாலும் நம்மால் நாம் நினைத்த  தாதாக்களை  ஆள  விட முடியும்.   இதற்கு குடியரசு  உதவியது,  குடியரசு வர,  நாட்டு விடுதலை உதவியது.

சிந்துசமவெளி நாகரிகமும், திராவிட நாகரிகமும் மிகத் தொன்மையானது என்றால் அது ஆகப் பழைய செய்தி.  மனிதன் காட்டுவாசியாய் இருந்து நாட்டுவாசியாய்  மாறியபோதே  நம் இந்தியா உருவாகிவிட்டது.  மிருகங்களில் எப்படி தலைவன் அவசியமோ, நாமும் அது போலவே நம் தலைவனை தேர்ந்தெடுத்தோம்.  இந்தியாவில் மட்டுமே ஒரு காலத்தில் ஐயாயிரம் குழுக்கள் ஆண்டிருக்கலாம்.  ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவன், ஒவ்வொரு குழுவுக்கும் அவன் ஆக்கிரமித்திருந்த இடமே.....நாடு.

 உதாரணத்திற்கு சோழ நாடு, சேரநாடு, பாண்டியநாடு, பல்லவ நாடு, சாளுக்கிய நாடு,  கலிங்க நாடு, மகத நாடு, இன்னும் பிற நாடுகள்.  ஆண்டவர்கள் எல்லோருமே தாதாக்கள், அவரவர் ஆள், ஆயுத  மற்றும்  திறமைக்கேற்ப பிற  நாட்டு  தாதாக்களை  அழித்தும்,  கொள்ளையிட்டும்  தம் எல்லைகளை விரித்தனர், தோற்கும் போது இழந்தனர்.  கொள்ளையடித்ததில் கொஞ்சம் அவர்களின் மக்களுக்கும் ஈந்தனர்.  சிலர் கொடுக்காமல் அவர்களே வைத்தும் கொண்டனர், ஒருசிலர் அவர்கள் மக்களையேக்  கூடச் சுரண்டினர்.

 ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதவிதமாய்ச் சட்டங்கள்.  அடிப்படை வேலைகள் பரம்பரை பரம்பரையாய் குறிப்பிட்ட பல சாதிகளுக்கு
அவர்கள் மட்டுமே செய்யுமாறு ஆக்கப்பட்டது.  ஓரிரு இடங்களில்
இவர்கள் வளமாகவும், பல்வேறு இடங்களில் வாழையடி வாழையாய்
உழைப்பிற்கேற்ப பலனின்றி வாடியும் கிடந்தனர்.  கல்வி பணக்காரர்களுக்கு மட்டுமே கிட்டியது.  பணக்காரர்கள் எல்லோருமே உயர்சாதியினர் ஆனார்கள். 

 இந்தியா முழுக்கவே, ரவுடிகள் முரட்டுத்தனமாகவும், பலசாலிகளாகவும் இருந்தும் அவர்கள் மூட நம்பிக்கைகளை அப்பட்டமாய் நம்பினர்.  கல்வி கற்றுக் கொடுக்கவே இருந்த ஓரிரு சாதி, இந்தப்  பலவீனத்தை   லாவகமாய்  கையாண்டது.   ஜோசியம், ஜாதகம், நட்சத்திரம், மச்ச சாஸ்திரம், கைரேகை பலன் என்று வித விதமாய்  பொய்கள் பரப்பி  அதை  ஒரு கணிதம்  என்றும் அறிவியல் என்றும் அவர்கள் கை நூலாய் அதை வைத்து, தாதா பொம்மைகளை தன்னிஷ்டம் போல்  ஆட்டுவித்தது. 

அவர்கள் தலைவர்கள் வீழ்ந்தபோது சலனமின்றி மற்ற ரவுடிகளை தம் தலைவனாய் ஏற்றுக் கொண்டது, அவர்களையும் தம் மாயவலையில் வீழ்த்தி, தலைவனுக்கே தலைவனாய் நாடாண்டது.  
(மன்மோகன் பொம்மை என்றால் சோனியா வசம் நூல் போல)

 பெண்கள், போகம் கொள்ளும் நேரங்களில் மட்டுமே ஆண்களால் மதிக்கப்பட்டனர்.  அடிமையாய் வாழ்ந்த பெண்ணினம், தாம்
பெற்ற துன்பத்தை தவறாமல் தம் சந்ததியினரும் பெறுமாறு செய்தது, அல்லது செய்ய வைக்கப் பட்டது.  தாதாக்களில் ஒரு சில நல்லவர்கள் இருந்துவிட்டால் அப்போது அங்கு கலை வளர்ந்தது.  இலக்கியம் செழித்தது  ஆனாலும் தொழிலாளிகள் விலங்குகளை விடவும் மோசமாகவே எல்லோர் ஆட்சியிலும் நடத்தப்பட்டனர்.   எந்த தாதாக்கள் கண்ணுக்குமே விளிம்பு நிலை மக்கள்  தென்படவேயில்லை.

 இராசேந்திரச் சோழனைத் தவிர எந்த இந்திய மன்னனும், பிற மண்ணில்
தம் ஆட்சியை, குடியிருப்பை நிறுவ ஆசை கூடப் பட்டதில்லை  அவனுக்கு
அவன் ஆயுளில் இந்தியாவை பாதி ஆண்டாலே இன்பம் என்றான்,
முழுமையாய் ஆண்டால்  பேரின்பம் என்றான்.  ஏனெனில் உலகில்
அப்போது இந்தியாதான் பணக்கார நாடு,  இந்தியா மட்டுமே.

 ஆதிக்கச் சாதிகள் யாருக்குமே பகையாயிருக்க விரும்பவில்லை.
பிறவி எடுத்தது வாழ்வதற்கே,  சுகமாய் வாழ வேண்டும், பாதுகாப்பாய் இருக்க வேண்டும்,  அவ்வளவுதான். யார் ஆண்டால்  என்ன ?  அவன் ராஜா ஆனாலும் நம் கை பொம்மைதானே,
என்ற  ஒரு நம்பிக்கையும் அதன்  காரணி.   பலமான மற்றொரு தாதா,
இவன் தேசம் புகும்போது இவன், அவன் பக்கமாய் போய்விடுவான்.
இவனுக்குத்தான் பழைய தாதாவின் எல்லாப் பலவீனமும் தெரியுமே ?  பலமிக்க புது தாதா அமோகமாய் வெற்றி பெற்று வாழ்வான்.

 சுயநலமாய் இருக்கவே ஆசைப்பட்ட அவ்வகை சாதிக் குழுக்கள்,
பிற இந்தியர்கள் புரட்சி செய்யாமல் பார்த்துக் கொண்டது.  எங்கெங்கு
அவ்வாறு எழுச்சி ஏற்பட்டதோ அங்கெல்லாம் தம் பொம்மைகளை வைத்து அழித்தொழித்தது.   இது முகலாய தாதாக்களை தாண்டி வெள்ளையன் தாதா வரை நீண்டு, சுதந்திர இந்தியாவிலும் எதிரொலித்தது.

 நல்ல வேளையாக, 19 ம் நூற்றாண்டுகளில்  இம்மாதிரி குழுக்களில் இருந்தே நல்லவர்களும் தோன்றினர்.  அது ராஜாராம் மோகன்ராயாய் இருக்கலாம், பாரதியாய் இருக்கலாம் பெரியாராய் இருக்கலாம், மோகன்தாசாய் இருக்கலாம், முத்துலட்சுமியாய் இருக்கலாம்,
நேதாஜியாய் இருக்கலாம், ஜவஹர்லாலாய் இருக்கலாம், வல்லப்பாய் இருக்கலாம். 

 இவர்கள் ஒருங்கிணைந்து, 'எல்லோரும் சமமே' வாருங்கள்
சேர்ந்து போருக்கு என்றனர்.  போரில் வெற்றியும் பெற்றனர்.   வல்லப் என்ற இரும்பு மனிதன்  எல்லாத் தாதாக்களுக்கும்
நடு விரல் உயர்த்தி வீழ்த்தினார்.   இல்லை என்றால் இப்போதும் நம்மை
ஆர்க்காடு நவாப்தான் ஆண்டுக் கொண்டிருப்பார்.  கொஞ்சம் கொஞ்சமாய்
பிற மறுக்கப்பட்ட சாதியினரும் மேலே வந்தனர்.  காமராஜரும்,
அம்பேத்கரும், இந்திய மக்களை ஆளவோ, சட்டம் போட்டு ஒரு கட்டுக்குள் வைக்கவோ முடிந்தது.  பெண்கள்  சமமாய்  மதிக்கப் பட  வேண்டும் என்று, பெண்கள் நம்மை ஆள  முடிந்தது, ஆள  முடிகிறது. 

 கல்வி ஏழைகள் வசம் தன் காதலைத் தெரிவித்தது.  பழங்குடியினரும், பல்லாயிரம் வருஷங்களாய் கண்ணுக்குத் தெரியாதிருந்த, தாழ்த்தப்
பட்டோருக்கும் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னுரிமை
கொடுக்கப்பட்டது.   ஒரு குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியினர் பரம்பரைப்
பணக்காராராய் இருந்தனர், ஆனாலும் வேற்று சாதியினரும் புதுப்
பணக்காரராக உலா வர சுதந்திரம் அனுமதித்தது.

 நாம் இன்புற பொறுக்குமோ  அந்த நூல் பிடித்த கைகள் ?
தாழ்ந்திருந்தவனை தூண்டி, அந்தக் கைகளுக்கு  எதிராகவே குரல் கொடுக்க வற்புறுத்தி  அவன்  சிந்தனையை  ஒரு கட்டுக்குள்  வைக்கப் பார்க்கிறது.  ஊழல் செய்யவும் கற்றுக் கொடுக்கிறது, ஊழல் செய்தவனை காட்டியும் கொடுக்கிறது, ஊழலுக்கு எதிராய் போராடவும் சொல்கிறது, அதே போராளிகளை
கோமாளிகள் என்று பின்னாலிருந்தும் குரல் கொடுக்கிறது.

 அந்தக் கைகளுக்கு வேண்டியது, முன்பு போலவே நாம் சிதறிப் பிரிய
வேண்டும், நம் சிந்தனைகள் விரிபடக் கூடாது, நமக்குள் பிணக்குகள்
வளர்ந்து நாம் அடித்துக் கொள்ள வேண்டும்.  அதற்கு முதலில் நம்மைக்
குழப்ப வேண்டும்.   ஒருசில சாம்பிள் குழப்பங்களை பாருங்கள்.

அந்தக் கைகள் கர்நாடகாவில் உட்கார்ந்து 'நீர் கொடுக்காதே' எனும்.
தமிழ்நாட்டுக்கு வந்தவுடன், 'ங்கோத்தா தண்ணி தாடா' எனும்.
கேரளாவில் 'ஆம் அணை பலவீனம்' எனும்,
இங்கு, 'அது ஆயிரம் வருஷம் மேலும் தாங்கும்' எனும்.
அணு உலையால் நன்மை எனும்
அணு உலையால் தீமை எனும்
சென்னை விமான நிலையத்தில் 'ஈழம் கொடு' எனும்
தில்லி விமான நிலையத்தில் 'ஆள விடு' எனும்
மோடி ஒரு கொலைகாரன் எனும்
மோடி சிறந்த நிர்வாகி எனும்

அதன் வேலை நம்மைக் குழப்ப வேண்டும், நமக்குள் பிரிவு வேண்டும்,
எல்லோருக்கும் அவரவர் கருத்துப்படி வேற்றுமை உணர்வில்
வளர வேண்டும்.  இவைகள்தான்  நிதி நிறுவனங்கள்  தொடங்க  அனுமதி அளித்தது, அதிக வட்டி கொடுப்பதை ஆதரித்தது, உங்களை பணம் போடச் சொன்னது, அவர்கள் எடுத்து ஓடச் சொன்னது,  பிறகு அவர்களையே ஈமு கோழி வளர்க்கச் சொன்னது, உங்களை அதன் ஒரு கிலோ கறி பல்லாயிரம் போகும்  என்று ஆசை விதைத்தது, இப்போது அதன் சுவை மோசம் அதை வாங்க  ஆளே இல்லை என்றும் அவையே சொன்னது.

 இவர்கள்தான் தலைமைச் செயலகம் வசதி இல்லை போக்குவரத்து நெருக்கடி இருந்தாலும் பரவாயில்லை  'அண்ணா சாலையில்'  புதிதாய் கட்டுங்கள் என்று ஒரு தாதாவுக்குச் சொல்வார்கள், அவர்களே வேறொரு தாதாவிடம் அதை
'உலகிலேயே சிறந்த மருத்துவமனையாக்கிவிடலாம்' என்று மாற்றுச் சிந்தனையையும் விதைப்பார்கள்.  'நூலகம் இருந்தால்தானே அறிவு' என்பார்கள்,  'நூலகமா,  குழந்தைகள்  மருத்துவமனையா'  என்ற கேள்விக்கு,  'ஹிஹி  குழந்தைகள்தானே வருங்காலத்தூண்கள்'  என்பார்கள்.

 நாடென்ன செய்தது எனக்கு என்று நீங்கள் ஒவ்வொருவரும் கேட்க
வேண்டும் என்பது அவர்கள் ஆசை.  நீங்கள் இந்தியாவை வெறுத்தபின், எங்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்று என்று குரலிடு என்று அடுத்த ஆச்சர்ய ஆலோசனை ஒன்றை அவர்களே கொடுப்பார்கள், ஈழத்தை தமிழ்நாட்டுடன்  ஏன்  இணைக்கக்  கூடாது ?   என்றும் கூட   உசுப்புவார்கள்.

சரி, இவர்களை வீழ்த்தவே முடியாதா ? 
ம்ஹும் முடியவே முடியாது.
ஆனால் அவர்களை கட்டுப் படுத்த முடியும்.  அதற்கு மோகன்தாஸ் சொன்ன அதேவழிதான்,  ஒரே வழிதான். 
ஜாதி, மதம் பாராத நம் ஒற்றுமை.  நமக்கிருக்கும் பொதுவான ஒரே பண்டிகை இந்த சுதந்திரம்தான் என நாம் உணர வேண்டும்.  மற்ற எந்த பண்டிகையை விடவும் இந்தச் சுதந்திர தினத்தை நாம் மிகச் சிறப்பாக,  புத்தாடை புனைந்து,  இனிப்புகள் பரிமாறி, கொடியேற்றி,  விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடவேண்டும்.  புறக்கணிப்பவர்களை அரவணைத்து அவர்கள் புறக்கணிப்பின் காரணம் ஆராய வேண்டும்.  நம்முடைய நெருக்கம், நம்முடைய பாசம், நம்முடைய ஒருமித்தச் செயல்கள்,  அவர்களை சிறுக, சிறுக அழிக்க முயலும். வாருங்கள் கைகோர்த்து உற்சாகமாக கொண்டாடுவோம் நம் பண்டிகையை.


எச்சரிக்கை :- இது போன்ற கட்டுரை எழுதுபவர்களை பொதுவாக,
ஆளும்கட்சியின், அல்லது இந்திய உளவுத்துறையின் கையாள் என்று புரளி பரப்புவார்கள், நம்பாதீர்கள், அந்தளவு வொர்த் இல்லாத பீஸ் நான். 
                                                             --   ஜெய்ஹிந்த்  --
   
புதன், 8 ஆகஸ்ட், 2012

உத்தம எழுத்தாளனாக ஆவது எப்படி ?

தனிக் குடித்தன மனைவி பேறுகாலத்தில் பிரியும் போதுதான், சில விரும்பக்கூடிய, பலர் வெறுக்கக் கூடிய, விபத்துகள் நடந்து விடுகின்றன,  எனக்கு நிகழ்ந்ததா இல்லையா என்பது,  என்னை விட உங்களுக்குத்தான் முதலில் தெரியப்போகிறது.  இருங்கள், மிருதுளா உள்ளே நுழைகிறாள், நீங்கள் கொஞ்சம் அப்புறமாய் வாருங்கள்.

"இந்தாங்க டின்னர், நீங்க கேட்டா மாதிரி சிம்பிளா எடுத்துட்டு வந்திருக்கேன்" மிருதுளாவின் குரல் பெயருக்கு ஏற்றார் போல மிருதுவாகவெல்லாம் இல்லை, லேசாய் நம்ம அங்காடித் தெரு அஞ்சலி போலத்தான் இருக்கும், ஆனால் என்னுடன் பேசும்போது மட்டும் அவள் குரலில் கொஞ்சம் தேனைக் குழைத்துப் பேசுவாளா......அடடா அந்த கிக் எந்த சரக்கிலுமே கிடைக்காது.  மரபுப்படி இங்க மிருதுளாவை வர்ணிக்கணும், ஆனா குரலிலேயே இவ்வளவு போதை இருக்கிறப்போ, அதெதுக்கு வெட்டியா ?  உங்களுக்குப் புடிச்ச செம கட்டைய கற்பனை பண்ணிக்குங்க, அதுசரி, உங்களைத்தான் அப்பவே போகச் சொல்லிட்டேனே ?

"யேய், நான் வேணாம்னுதாம்பா சொன்னேன், சாப்டுட்டேனே" என்றேன்.  இப்படி சீண்டினால்தான்  அவள் முறைக்கும் சாக்கில் தலையை சாய்த்து ஒரு பார்வை பார்ப்பாள், அந்த அழகை ரசிக்க, அடிக்கடி இதுபோல் செய்வேன்.  ஆனால் இன்று கொஞ்சம் உற்சாக மூடில் தெரிந்தாள்.  எனக்கு ஓரளவு பெண்ணின் உடல்மொழியைப் படிக்கும் திறனை ஆண்டவன் கொடையாய் அளித்துள்ளான் என்று புருடா விட விரும்பவில்லை.  இன்னும் ஆயிரமென்ன பத்தாயிரம் வருடமானாலும் பெண்ணின் உள்ளத்தையெல்லாம், ஆண்களால் கணிக்கவே முடியாது.  கணித்துவிட்டதாய் ஏமாறலாம், அல்லது ஏமாற்றலாம். 
இருந்தாலும் என் கணிப்பு இன்று என்னை ஏமாற்றாது என்று நான் நம்பினேன். 

மிருதுளா அலங்காரம் செய்துதான் அழகாத் தெரியவேண்டும் என்ற அவசியமில்லாத பிறவி, என்ன....அலங்காரம் செய்தால் சபலர்கள் பெருமூச்சு விட்டே சாவார்கள்.  ஆனால், தூங்கப்போகும் இவ்வேளையில் சன்னமாய் பவுடர் பூசி, லிப்ஸ்டிக் தீற்றல்களுடன், கூந்தல் உலரவைக்கும் உத்தியுடன் விரிந்து, மல்லிகைப் பூக்கள் அணிந்து,
ஃப்ரில் இல்லாத நைட்டியில் பொங்கிய நெஞ்சோடு, என்னது டமால்னு சத்தம்.......ச்சே, இதுக்கேவா கிறங்கி விழுவீங்க ?

"அல்லோவ், இந்த மாதிரில்லாம் சீன் போட்டீங்க, அப்புறம் ஒங்க கூட பேசவே மாட்டேன், என் ஃபிரன்ட் உங்கள ஸ்பெஷலா கவனிக்கச் சொல்லிருக்காங்க, அதனாலத்தான் கொண்டாந்தேன்" லேசாய் கோபமும், உனக்காக இல்லை என்று கண்ணில் பொய்யும் தெரிந்தது.

" ஓ, ஸ்பெஷலா கவனிக்கச் சொல்லிருக்காளோ ?"  என்று குறுகுறுப்புடன் அவளை கண்களால் மேய்ந்தேன்.  கையாலாகாத நிலையில் அவள் இருந்ததால் தவிக்க ஆரம்பித்தாள்.  (பொதுவாக நைட்டி மேல் டவல் போர்த்தி வருவாள்) 

"சாப்டறேன், ச்சும்மா சொன்னாக் கூட கோச்சுப்பாப்பா இவ" என்றவாறே அவள் கொடுத்த ஹாட்பேக்குகளை  வாங்கி டைனிங் டேபிளில் வைத்தேன். 

"சாப்பிட்டு அப்படியே வைங்க, கழுவில்லாம் கொடுக்கக் கூடாது, நான் அப்புறமா வர்றேன்" என்றாள்.

"சரி, சரி, இன்னிக்கு செம விருந்துதான், பொறுத்தார் மிருதுளா ஆள்வார்" என்று உற்சாக மிகுதியில் சொல்லிவிட்டேன்.  ஆனால், அதன் பின்னர்,  மிரண்டேன்.  பார்வையில் பலமுறை இவளிடம் எல்லை மீறியிருக்கிறேன், ஆனால் பேச்சில் இன்றுதான்.  என்ன ஆகுமோ என்று பயந்தேன். 

ஆகா, பயந்தபடியேதான் நடந்தது, லேசே கலங்கிய விழிகளோடு அவள் விருட்டென்று திரும்பி, என் வீட்டு வாசற்கதவை ஓங்கி அறைந்து வெளியேறினாள்.  'ஷிட், இன்னும் கொஞ்சம் பேசவிட்டு, வலய விரிச்சிருக்கலாம், இத்தனை வருஷம் கழிச்சு கிடச்ச வாய்ப்ப, இப்படியா பேசிக் கெடுப்பேன் ?' என்று நொந்தபடியே அடுத்து என்ன செய்வது ? என்று விழித்தேன். 

அவளின் கணவனிடமும், என்னுடைய மனைவியிடமும் சொல்லி விடுவாளோ என்ற சிந்தனை லேசே வயிற்று வலியைக் கொடுத்தது.   மனைவி  கைக்குழந்தையுடன் தாரைத் தாரையாய்க் கண்ணீர் வழிய, "நாங்க எங்கங்க போவோம் ?" என்று ஒரு காட்சி ஓடியது.  மிருதுளாவை கைபேசியில் அழைத்தேன்.  'கலக்கப் போவது யாரு....? நீதான்'.......எனக்கு மிகப்பிடித்த பாடல்.  திரும்ப, திரும்ப அழைத்தும் அதே பாட்டு, நோ ரிப்ளே....... கைகள் லேசே நடுங்க 'SORRY ' என்று மெசேஜ் அனுப்பினேன்.

ஓகே இனி நீங்க வரலாம், ஒரு சமூக அக்கறையுள்ள எழுத்தாளன் என்றால் இங்கே END போட்டுவிட்டு அடுத்த கதை எழுதப் போனால், அவனுக்கு நிறைய பெண் வாசகிகள் கிடைப்பர். 'உத்தம எழுத்தாளன்' என்ற பட்டமும் கிட்டும்.  நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லது.  Best Of Luck.  நன்றி போய் வருக !!!    

உங்களை அனுப்பிவிட்டு கொஞ்சமாய் கண்ணசந்தேன்,  'டுக் டுக் டுக்' கென்று ஒரு சத்தம்  அது என்  மொபைல் மெசேஜ்  டோன்.
' Y Sorryppa, Swapna thoonga, cel silent mode il vaiththu vitten, ippathaan unga missed call & msg parthen, saaptavunna call pannunga :) '


                                                            - -  MY END - -
            

    

வெள்ளி, 20 ஜூலை, 2012

ஒரு டைமிங் ஸ்டோரி :)'ஏன் இவ இப்படி வற்புறுத்துரா ?  என்னாலதான் ஒழுங்கா எல்லா நாளும் இருக்க முடியாதே ?  நடு ராத்திரில மொதல்ல எழுந்திரிக்கவே முடியாது.  அப்புறம் சாயங்காலம் முடிக்கப் போகணும், என் ஆபிஸ் பக்கத்துல அதுக்கு எங்க போகணும்ன்னு இதுவரை தெரிஞ்சிகிட்டதில்ல. ஒரு மணி நேரத்துக்கொரு முறை டீ குடிக்கலன்னா தலைவலி வரும்.  அப்புறம் நைட்டு தூங்க அது வேணும், அதுவும் வேணும், புரிஞ்சி தொலைய மாட்டாளே லூசு,  நீதான் இருக்கல்ல, விடேன், நானும் வைக்கணுமாம், பசங்களும் வைக்கணுமாம்.......ஸ்பென்சரைத் தாண்டியவன், பச்சை மஞ்சளாகி சிவப்பானவுடன், தலைக்கு மேல் கையைத் தூக்கி சைகை காட்டியவாறு வண்டியை நிறுத்தினான் இம்தியாஸ்.

பச்சை ஒளிர்ந்தவுடன் வேகமாக வண்டியை முடுக்கினான்.  புது வண்டி, முப்பதாவது வினாடியிலேயே எண்பதைத் தாண்டியது.  மெட்ரோ வேலைகளில் ட்ராபிக் நெருக்கடி இல்லை, ஆனால் டைவர்ஷன்  தெரியாமல் புதிதாய் நுழைபவர்களுக்கு நிறைய குழப்பங்கள் உண்டு, பாவம் அவர்களுக்கு விளக்க ஆட்களும் இல்லை.  ஒழுங்கற்ற முறையில் யாராவது சிலர் ஓட்டியபடியேதான் இருந்தனர்.  தூரத்தில் தாராபோர் டவர் சிக்னலிலும் பச்சை, ஆனால் வினாடிகள் உதிர்ந்தபடியே, உயிரை இழக்க இருந்தது.  இன்னும் ஆக்சிலேட்டரை முறுக்கினான்.  

முன்னே வேகமாக சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று, எதிர்பாராமல் நின்றது.  நின்ற வேகத்தில் அப்படியே வலது புறமாய் வழியே இல்லாத பாதை நோக்கி அதை திருப்ப முற்பட்டான் அதன் ஓட்டுனன்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த அறியாமையை சிறிதும் உள்வாங்க கூட நேரமின்றி,  இம்தியாஸ் தன்னிச்சையாய் அதிவேகமாக கால் பிரேக்கையும், கை முன்சக்கர பிரேக்கையும் அழுத்தினான்.  அழுத்தின வேகத்தில் கை பிரேக் அறுந்துத் தெறித்தது.  வண்டி குடிகார பாம்பு போல வளைந்து, நெளிந்து பிரீச்ச்ச்ச்........என்ற சத்தத்துடன் வழுக்கியது. 

எல்லாம் முடிந்தது என்பதை ஒருகணம் இம்தியாஸ் உணர்ந்தான்.  கண் முன்னே, "ஏங்க, இந்த வாட்டியாவது" என்று கெஞ்சியபடி ஜரினாவும், பப்பா என்றபடி ஃபாமிதாவும், இர்பானும் ஒடி வந்தது போன்ற பிரமை வேறு ஏற்பட்டது.  அய்யய்யோ புதுவீடு கட்டின லோன் டியு இன்னும் பதினெட்டு வருஷத்துக்கு........

"த்தா, டாபரு வண்டியா ஓட்டுற, ஒன்னால எப்டி உளுந்தாரு பார்ரா"  பஸ் ஓட்டுனர் குரல் கொடுத்தார்.  "எழுந்திருங்க சார் ஒன்னும் ஆகல" என்று இளைஞன் ஒருவன் இம்தியாஸ்க்கு   கைகொடுத்தான்.     

"ஜரினா"

"ஆ, ஆபிஸ்லருந்தல்லாம் போன் போடறீங்க ?"

"சரி, ஒனக்காக இந்த வாட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன், ஆனா முடிஞ்சவரைதான் வைப்பேன், பரவால்லல்ல ?"

"அல்லா தேங்க்ஸ், போதும்பா, நாளைக்கு காலைல எழுப்பிர்றேன், மொதல்ல பரிதாக்காக்கு போன் போட்டு சொல்லணும், இந்த சந்தோஷமான சேதிய" அவன் பதிலைக் கூட எதிர்பாராது உற்சாகத்துடன் கட் செய்தாள் ஜரினா.      

"இங்க எங்கடா பக்கத்துல மசூதி இருக்கு, நானும் ரம்ஜான் நோம்பு இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்"  இம்தியாஸ் அவனுடைய கொலிக்கை விசாரித்துக் கொண்டிருந்தான் !!!                                                


                                                              --   THE END  --
 
   

திங்கள், 16 ஜூலை, 2012

மன்னிக்கவும் இது ஒரு சுயதம்பட்டம் :(

அம்மா சென்டிமென்ட்டை விட உலகில் வேறேதும் பெரிய பாசப்பிணைப்பு இருந்துவிட முடியுமா என்ன ?
என் தாய் என்னை மிகச் செல்லமாக, எல்லாச் சுதந்திரமும் கொடுத்து, அந்தச் செய்கையின் விளைவால் நிகழும் சங்கடங்களைச் சகித்து, தியாகத்தை உணர்த்தியவள்.

அப்பேற்பட்ட தாயே, மாமியார் எனும் ஒரு பதவி உயர்வு கிடைத்தவுடன், அதிகார போதையில், சற்றேத் தடுமாறி, என் மனைவியைக் கட்டுப்படுத்துவதாய் எண்ணி, என் உரிமையில் தலையிட ஆரம்பித்தாள்.  (வாரம் வாரம் அதென்ன சினிமா, நீதான் அவனுக்கு எடுத்துச் சொல்லணும், ஒரு பொண்ணு தலையில இத்தனை பூவ வச்சிட்டு, நக நட்ட போட்டுட்டு நைட்டு பன்னெண்டு மணிக்கு வந்தா என்ன அர்த்தம்,  வெளில சாப்டுட்டு வரணும்னு காலைலயே முடிவு பண்ணிருப்பீங்க,  அதச் சொல்லித் தொலச்சிருக்கலாம்ல்ல, ஏன் ஞாயித்துக் கிழம இப்படித் தூங்குறான், முன்னெல்லாம் இப்படியில்லையே....?

நான் இன்றும் என் தாயை உயிராய் நேசிக்கிறேன், அம்மா பெயர் பொறித்த பலகையைத் தாங்கிய வீட்டைக் கட்டி, அங்கு அம்மாவின் கையால் பால் காய்ச்சி, வசிக்கவைத்து மகிழ்ந்தேன்.  ஆனால், என் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்காக, தாயைப் பிரிந்து வாடகை வீட்டில் வசிக்கிறேன் மனைவியுடன்.  பார்ப்பதற்கு மனைவி சொல் கேட்டு தாயைப் பிரிந்தேன் என்பது போல் காட்சிபிழை ஆனது.

கஷ்டமான ஜீவனத்திலுமே, என்னைச் சிறிதும் வாட விடாது காப்பாற்றிய ஓர் உயிரையே என் சுதந்திரத்திற்காக நான் பிரிய முடிகிறது.  'அவர்' நிச்சயம் என் சிந்தனையைக் கிளறியவர்தான், கொஞ்சம் மொண்ணையாய் இருந்த என் மூளையை சீர் படுத்தியவர்தான், பாசத்தையும், நேசத்தையும் காட்டி, கொஞ்சம் வெளிச்சப்படுத்தியவர்தான், அதற்காக என் கூட்டில் மட்டும் இரு என்றால், 'நான் என்ன பறவையா ?'

நான் காற்று (அதான் சுய தம்பட்டம் ன்னு தலைப்பிலேயே சொல்லிட்டேன்ல்ல)  தென்னகத்தைச் சேர்ந்தவன், எனவே தென்றல் காற்று, எங்கும் சென்று வர எனக்கு உரிமம் தாருங்கள், வேண்டாமென ஜன்னலை பூட்டினால், என்னை வரவேற்ப்பவர்களுக்கு மட்டும் பயன்படுகிறேன்.  இங்குதான் வீசவேண்டுமேன்றால்..........மன்னிக்கவும், விடைபெறுகிறேன் !
     

சனி, 7 ஜூலை, 2012

பிற்பகல் செய்யின் (தம்மாத்துண்டு கதை)

சட்டென்று அவளைப் பிரிந்தேன், திடீரென ஒலித்த அழைப்புமணியின் கிர்ர்ர்ர் ஓசைதான் அதன் காரணி.  அவள் ஆடையை அவசர அவசரமாக திருத்திக் கொண்டாள், நான் என் சிகையை. 

"என்ன பண்ணிட்டு இருக்கீங்க உள்ள, எதுக்கு கதவு தொறக்க இவ்ளோ நேரம் ?"  வினாவுடன் உள்ளே நுழைந்த விமலா, அவளைப் பார்த்ததும் உக்கிரமானாள்.   "ஓஹோ, வெறும் பேச்சா இருந்தத ப்ரூவ் பண்ணுறீங்களோ, ஆள் இல்லாத சமயமா பாத்து என் பெட்ரூமுக்குள்ளேயே......?  சரி நான் இருக்கறதுதான உங்களுக்கு எடஞ்சல், என் பொண்ண மட்டும் முடிஞ்சா பாத்துக்கோங்க, அதும் கஷ்டம்னா அவள ஏதாது அனாத விடுதில சேத்துட்டு ஆடுங்க" என்று சொல்லிவிட்டு கெரசின் கேனையும், தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு, பாத்ரூமுக்குள் நுழைந்து ஆத்திரத்துடன் கதவைச் சாத்தினாள். 

"அய்யய்யோ.....விமலா, நாங்க ஆபிஸ் அக்கவுண்ட்ஸ்தான் டேலி பண்ணிட்ருந்தோம், உனக்குத் துரோகம் பண்ணவே மாட்டேன், கதவத் தொறடி, நீ இல்லன்னா, நாங்க அனாதையா நிப்போம்" என்று நான் கதவைத் தட்டி கையாலாகாமல் அலறிக் கொண்டிருந்தேன். அப்போது என் தலையில் யாரோ ஓங்கி அடித்தார்கள்.

மலங்க மலங்க விழித்தேன்.  நீல இரவுவிளக்கின் ரம்மியமான ஒளி, ஏசி குளிர்காற்றை வீசியடித்துக் கொண்டிருந்தது, என் தலை மேல் காலைத் தூக்கிப் போட்டபடி கனிஷ்கா அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள், கைக்கெட்டிய தூரத்தில் விமலா தன் முதுகைக் காட்டியபடி படுத்திருந்தாள்.  என் நெற்றியில் கைவைத்துப் பார்க்கிறேன், குளிரிலும் வேர்த்திருந்தது.  'அடச்சீ, இதென்ன இப்படி ஒரு துர்கனவு, எவ அது, கூட இருந்தவ ?' என்று முனகிக் கொண்டே எழுந்து பாத்ரூம் லைட்டைப் போட்டேன். 

"மே ஐ கம்மின் சார்" என்றபடி கொஞ்சல் குரலில் இனிய சங்கீதமாய் ஓர் ஒலி.

" எஸ் " என்ற என் குரலுக்கு அப்புறம் நுழைந்தவளைப் பார்த்து அப்படியே பிரமித்துப் போனேன்.  வாவ் என்ன அழகு, என்ன கலர், எப்பேற்பட்ட ஸ்ட்ரக்ச்சர், இவ்வளவு அலை அலையாய் கூடக் கூந்தல் இருக்குமோ ?  வாய் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்த என்னிடம், "ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பேங்க்லருந்து வர்றேன் சார், உங்க பெர்சனல் லோன் சம்பந்தமா ஒரு ஸ்மால் வெரிபிகேசன்...........

'இவள எங்கயோ பாத்திருக்கேனே ?' என்ற என் சிந்தனை, எங்கிருந்தோ வந்த தீய்ந்து கருகிய ஒரு வாடையில் முற்றுப் பெற்றது !!!      

                                     THE END
      

வியாழன், 5 ஜூலை, 2012

பொஸஸ்ஸிவ் பொண்டாட்டி 

நான் நேசிக்கும்
எந்தப் பெண்ணையும்  
அவளுக்கு பிடிக்காது
அது அம்மாவானாலும்(என்).......சரி
மகளேயானாலும் சரி.......!


புதன், 4 ஜூலை, 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்தப் பிரம்மனைக் கண்டு :(இந்தச் செய்தி கண்ணீரை வரவழைப்பதோடு மட்டுமல்லாமல், கொஞ்சம் சிந்திக்கவும் சொல்கிறது.  மத்திய மாநில அரசுகள் இதைக் கருணையோடு அணுக வேண்டும்.  ஓர் உயிரைக் கொல்லும் அதிகாரம், சட்டத்திற்குட்பட்டு அரசால் மட்டுமே முடியும், இது குற்றவாளிகளுக்கு மட்டுமே என்கிறது சட்டம், ஆனால் வயதுக்கு வந்த இந்தப்பெண் படும் பாட்டைப் படித்தபோது, சட்டத்தைக் கொஞ்சம் திருத்திக் கொள்ளலாம் !

தினமணியில் நேற்று(03/07/2012) வெளியான செய்தி இது.  மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த அழகர், ஜெயாவுக்கு 1999 ல் மனவளமும், உடல்வளமும்(மாற்றுத் திறனாளி) அறவே குறைந்த பெண்குழந்தை பிறக்கிறது.  தாய்க்குத் தன்னுடைய குழந்தை பொன் தானே ?  எனவே கண்ணும் கருத்துமாய் வளர்த்தார் அந்தத் தாய்.  அந்தக் குழந்தை பகலெல்லாம் தூங்கும், இரவானாலோ பெருங்குரலுடன் அழுவும், பெற்றோரில் யாராவது ஒருவன் கொட்ட கொட்ட இரவு முழித்திருந்து அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.  மல ஜலமல்லாம் இருக்கும்  இடத்திலேயேதான் !  கொடுமையைப் பாருங்கள், இப்போது இவள் பருவமும் அடைந்துவிட்டாள்.  இதுமட்டும் சரியான வயதில் நிகழ்ந்துவிட்டது, என்ன எழவு லாஜிக்கோ ?

இப்போது ஓர் ஆணால் (தந்தையால்) கூட இவளுக்குத் துணையாய் இருக்க முடியாத சூழ்நிலை.  ஒரு பெண்ணால் மட்டுமே இந்தக் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியும்.  எந்த சிகிச்சையும்தான் பயன்தரவில்லை, ஏதாவதொரு தொண்டு நிறுவனமாவது இந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ளுமா என்று அலைந்தால், நடக்கும் நிலையில் உள்ள மாற்றுதிறனாளியை ஏற்றுக் கொள்வோம், ஆனால் படுத்த படுக்கையாய் இருக்கும் இவளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கை விரித்து விட்டனர்.
     
பயங்கரமாக கத்தியபடி இவள் தினம் இரவு அழுவதால் அக்கம்பக்கத்தினருடன் தினமும் சண்டை,  இதனால் தம்பதியிரடையே பிணக்கு.  இதற்காகவே ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த அந்தத் தாய், "நானிருக்கும் வரை இந்தப் பெண்ணை எப்பாடுபட்டாவது பார்த்துக் கொள்வேன், ஆனால் அதற்குப் பின் ?  எனவே, இந்தக் குழந்தையை 'கருணைக் கொலை' செய்துவிடுங்கள்" என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.   ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்க்கு இடமில்லை என்று ஆட்சியர் மறுத்துவிட்டார்.
 

இதுபோன்ற துடிக்கும் ஜீவன்களை 'கருணைக் கொலை' செய்வதால் யாதொரு பாதகமும் இல்லை என்பதே என் கருத்து.  இதில் நான் ஜெமோவின் வழியையே ('நான் கடவுள்' க்ளைமாக்ஸ்)  சரி என்பேன்.

 மாநிலம்தோறும் தலைசிறந்த மருத்துவர்கள், தொண்டுஆர்வலர்கள், மனிதநேயர்கள், பெண்ணீயவாதிகள், அறிவுஜீவிகள், சட்டநிபுணர்கள், நிறைந்த ஓர் ஆணையத்தை நியமித்து, தகுதியான ஒரு நீதிபதியைக் கொண்டு இது போன்ற கொலைகளை நிறைவேற்றும் சட்டம் வேண்டும்.


சொல்லொண்ணா வேதனையில் துடித்த கன்றுக் குட்டியைக் கொல்ல மோகன்தாஸ் வேண்டினார் என்பது கேட்டு அலுத்துப் போனதுதான், அதிலும் அவர் கூறிய எதையுமே நிறைவேற்றப் போவதில்லை எனும் 'கங்கணம்'  பூண்டுள்ள அரசைக் கொண்டுள்ள நாம், இதைத் தொடர்ந்து வலியுறுத்தினால், எறும்பு ஊறி கல் ஒரு நாள் தேயலாம் !!!     
     

செவ்வாய், 3 ஜூலை, 2012

இவன் அவன் (சிறுகதை)

நாங்க இந்த அபார்ட்மென்ட்ல குடியேறி சில மாதங்கள்தான் ஆகின்றன !  எங்களுக்கு கல்யாணமும் மூன்று வருடங்களுக்கு முன்புதான் நடந்தது, காதல் கல்யாணம் !   கருப்பாயிருந்தாலும்  களையாகவும், சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரத்தில் பால் வடியும் முகம் இவனுக்கு, இலகுவாக என்னைக் கவர்ந்து விட்டான் !  நாங்கள் நாயுடு, இவன் கண்டிப்பா எங்க ஜாதி இல்ல, அம்மா கடுமையாக எதிர்த்தார், ஆச்சர்யமாக அப்பாதான் அம்மாவை ஆறுதல் படுத்தி, எங்கள் மணம் நடைபெற உதவி புரிந்தார் !  அவுங்க வீட்டில சுத்தம், இதுவரை ஒரு காக்கா கூடத்  தேடி வந்ததே இல்ல.  ஒரே வருடத்தில் என்னை அம்மாவாக்கி விட்டான், அழகான பெண் குழந்தை !

அப்புறமென்ன வழக்கம்போல அதுதான், இவன் இப்பல்லாம், எரிஞ்சு எரிஞ்சு விழுறான் !  அழுகிற குழந்தைய 'கொஞ்சம் தூக்கி தட்டுங்களேன்னு' சொன்னாக்கூட கொஞ்சமும் கருணையில்லாம 'அந்த சனியன நீயே கொஞ்சு' என்பான் ! பால் வடிஞ்ச மூஞ்சா அது ? ஆசிட்டாத்தான் வழியுது இப்ப !
கல்யாணமான புதுசுல நான் வேலைக்கு போயிட்டுரந்தப்போ, இவ்வளவு ஏமாற்றமெல்லாம் தெரியவேயில்லை !  கடுமையான அலுவலக வேலைகள் எனக்கு நல்ல வடிகாலாய்த்தான் இருந்தது, இதோ மடியில கெடக்குறாளே  இவளாலத்தான் மொதல்ல வேலைக்கு வேட்டு வந்தது !
இவளுக்கு ஒரு  வயசு ஆனதுக்கப்புறமா, ஒரு நாள் இவன் நல்ல மூடுல இருக்கிறப்போ, மேலேறியிருந்த நைட்டியை கீழிறக்கியவாறே,  'திருப்பி நான் வேணா வேலைக்கு போவட்டுமாப்பா ?' என்றதற்கு, 'பொத்திக்கிட்டு எங்களுக்கு பொங்கிப் போட்டா போதும்' என்று பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை ஓங்கி சாத்தினான் ! நா ஒரு லூசு, மொதல்லயே கேட்டிருக்கணும்.
'ஏன் எக்ஸ் ஓனருக்கு உன் ஞாபகம் வந்துடுச்சாமா ?' என்று  உள்ளிருந்தபடியே கேட்டான் !  நான் பதில் சொல்லாமல் திரும்பி படுத்தேன் குழந்தையை அணைத்தவாறு !  வெளியே வந்தவன் என் மொபைலை நோண்டிப் பார்த்தான் ! 
இப்பல்லாம் கரண்ட்டு அடிக்கடி கட்டாகுதா, காத்து வாங்க வெளிய வர்றப்பதான், அப்பார்ட்மென்ட்ல என்ன போல மத்தவங்களும் மூடுன கதவத் தொறந்து வெளிய வருவாங்க, அப்படித்தான் நிறைய சிநேகம் கெடச்சுது, பரவால்ல சீனியர் அக்காங்கதான்,  ஆனா ரொம்ப ஜாலியா பேசுறாங்க, என் பொண்ண செல்லம் கொஞ்சுறாங்க, அப்ப மட்டும் மனசு லேசான மாதிரி ஒரு ஃபீலிங், அடிக்கடி கட்டாவாதா கரண்ட்டு ? ன்னுல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்ன்னா பாருங்களேன் !
மொதல்ல காலைல எட்டு டு பத்து கட்டாச்சு, அப்போ இவர் இருப்பாரா, ஒம்போதரைக்கு மேலத்தான் கிளம்புவாரு, அப்பல்லாம் சொற்பமாத்தான் பேச முடியும், ஆனா இந்த ஒருமாசமா ரெண்டு டு நாலு கட்டாச்சு பாருங்க, அடடா சொர்க்கம் !

மத்தியானம் சாப்பிட்டு, குழந்தைய தாலாட்டி தூங்கச் செஞ்சுட்டு அரட்டைய ஆரம்பிப்போம் !  ருக்கக்காதான் செம டைம் பாஸ், செக்ஸியா  பேசுவாங்க, அவங்க கொஞ்சம் அழகாத்தான் இருப்பாங்க, ஆளப் பார்த்தா நாப்பதுன்னு யாரும் நம்பவே முடியாது, லோ-ஹிப் சேலைல, இடுப்பு மடிப்ப மறைக்கவே மாட்டாங்க, ஜாக்கெட் பின்னாடி முக்காவாசி முதுகு தெரியும் !
அண்ணாச்சி வழிஞ்ச கத, ஹவுஸ்ஓனர் ஜொள்ளு, சின்ன மாமனார் பண்ண லொள்ளுன்னு வாயத் தொறந்தாலே கவுச்சிதான் ! ஆனாலும் அவுங்கதான் சூப்பர்ஸ்டார், இவங்க சொல்ற கதைய கேட்டு தேவசேனா ஆன்டியும், விஜயா அக்காவும்  விழுந்து விழுந்து சிரிப்பாங்க !
அப்பத்தான், சரியா என் லைப்புக்குள்ள அவன் என்ட்டர் ஆனான் உயரமாய், வசீகரமாய் இருந்தான் !  வயது கண்டிப்பாய் முப்பதைத் தாண்டியிருப்பான் ! ரெண்டாவது மாடியில் அவனுடைய ஃபிளாட், கரண்ட் இல்லாததால் நாங்கள் படிக்கட்டில் அமர்ந்தபடிதான் அரட்டை அடிப்போமா, அவனுக்காகவே தினமும் வழிவிட வேண்டி வந்தது !  யாராவது இருவர் எழுந்து, ஒதுங்கி நிற்ப்போம், எங்களை உரசாமல் செல்கிறேன் என்று பம்மி, ஓரக்கண்ணால் பார்த்தவாறு தாவி மேலேறி மறைவான், அதே போல் ஒருமணி நேரம் கழித்து இறங்கிப் போவான் !  சாப்பிட்டு விட்டு போகிறான் போலும் ! 
அவன் மனைவி பயங்கர அல்டாப்பு அலமேலு, ஒரு தடவை அறிமுகம் செஞ்சுக்கலாமேன்னு பேசினேன், 'நாங்கெல்லாம் அப்படி,இப்படி, எங்களுக்கு ரெண்டு சொந்த வீடிருக்கு, அத வாடகைக்கு விட்டுட்டு இங்க அல்லாடுறோம்'  என்னால சகிக்க முடியல !  அதுவுமில்லாம அடிக்கடி அம்மா வீடு, கோயில் டூருன்னு, புருஷன விட்டுட்டு கெளம்பி போகுற மகாராணி !
போன வாரம் இதே நேரம், கீழே மேல்நோக்கி யாரோ வருவது போல காலடி ஓசை, நாங்க எங்க பேச்சு வால்யூமைக் குறைத்தோம் !  அவன்தான் வருகிறான் என நான் யூகித்து விட்டேன், தலையை ஒழுங்கு செய்தேன், மாராப்பைச் சரி செய்தேன், அவனை நன்கு வசதியாக பார்க்கும் ஒரு கோணத்தில் அமர்ந்தேன் !
அவனேதான்......நீல ஜீன்ஸ், வெள்ளை முழுக்கை சட்டையை இன் செய்து, சட்டைக் கையை கொஞ்சம் சுருட்டி விட்டிருந்தான். அடடா எவ்வளவு பாந்தம் ?  என்று வியந்து நான் பார்த்துக் கொண்டிருந்தபோதே, "பூன, பால் குடிக்காதுன்னு சட்டிய, கிட்டிய தொறந்து வச்சிராதீங்கடி"  என்று கண்ணால், அவனை நோக்கி  ஜாடை காட்டியவாறு ருக்கக்கா ஹஸ்கி வாய்சில் சொன்னார். 
அவன அவ்வளவா யாரும் வம்பிழுத்தது கிடையாதே, ருக்கக்கா என்ன சொல்ல வர்றாங்கன்னு குழம்பினேன்.  என் சந்தேகத்தை சுஜாதாக்கா சரியாய் புரித்துக் கொண்டைதைப் போல் அந்தக் கேள்வியைக் கேட்டார்
'ஏங்க்கா பூன என்ன பண்ணுச்சு ?'
'பூனையோட பொண்டாட்டி கோச்சுட்டு அம்மா வீடு போயி பத்து நாளாச்சு, இன்னும் திரும்பி வரல, அன்னிக்கு பால்கனில  துணி காயப் போட்டிட்டு இருக்கேன், மேலருந்து யாரோ பாக்குறாப்பல  இருக்கேன்னு பாத்தா பூன உர்ர்ர் ன்னு என்னையே பாக்குது, சனியன் மூஞ்சக் கூட பாக்காம இங்கயே உத்துப் பாக்குதுன்னு' தன் நெஞ்சைத் தொட்டார் ருக்கக்கா  !
'அக்கா இந்தக் கத தான வேணான்றது......ரீல் விட வேண்டியதுதான் ஆனா இது கொஞ்சம் ஜாஸ்தி' என்றார் விஜயாக்கா, எனக்கோ அவனைப் பற்றி பேசுகிறார்கள் என்றதுமே ஆர்வம் அதிகமாகி விட்டது !  முதலில் ருக்கக்கா இப்படி சொன்னவுடன் அவனை பொறுக்கி என்று மனதில் திட்டி விட்டேன் !  இப்போ விஜயாக்கா இடை புகுந்தவுடன் கொஞ்சம் மகிழ்ச்சியானது !
"ஆமாடி போயி காட்டிப்பாரு கண்ணை முடிப்பான்" ருக்கக்கா.
"காட்டுனா பாக்காதவன் ஆம்பளயாக்கா" சுஜாதா அக்கா.
விவாதம் ருக்கக்காவின் மீதுதான் தவறு என்பது போல திரும்பியவுடன் ருக்கக்காவின் முகம் சிவந்து, கொஞ்சம் சுருங்கியும் போனது, 'ஐயோ, ஒரு முக்கியமான வேல இருக்கு, மறந்துட்டேன்' என்றவாறே அவசரமாக இடத்தைக் காலி செய்தார் ருக்கக்கா !
அவர் கோபித்துக் கொண்டு போகிறார் என நான் சொன்னேன்,
"விடுடி....யோக்கியம் இந்தம்மா, என்னிக்குமே ஒழுங்கா மூடுனதில்ல,பத்தினி வேஷம் போடுறா" என்றார் விஜயாக்கா !  ருக்கக்காவின் குன்றாத இளமை மீதான கோபத்தை சமயம் பார்த்து, இந்த இரண்டு அக்காக்களும் காட்டிவிட்டதாக நான் உணர்ந்தேன் !  இந்தக் குழப்பத்தால் அன்றைய மீட்டிங் முன்னதாகவே நிறைவு பெற்றது !
கரண்ட் வராத வீட்டிற்குள் எனக்கு இருக்கவே பிடிக்கவில்லை, மேலும் அவன் கீழிறங்கி வரும் நேரமும் நெருங்கி விட்டதை உணர்ந்தேன்.
 'ச்சீ என்ன இது ?  ஏன் இது மாதிரி ஓர் எண்ணம் ? அவனும் மணமானவன் நானும் மணமானவள் '.....என்று மனதில் பேசிக் கொண்டிருக்கும்  போதே காலடிச் சத்தம் கேட்டது !  மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளியே வந்து நின்றேன் !  ஆனால், யாரோ ஒரு கூரியர் ஆசாமி இறங்கி வந்துக் கொண்டிருந்தான்.  எனக்கு எரிச்சலானது.  'இதென்ன புதுக் குழப்பம் ?  அவன் எப்படி என்னுள் நுழைந்தான் ? ஏன் இதயம் படபடவென்று துடிக்கிறது ?'  என்றபடி, மறுபடியும் வீட்டிற்குள் நுழைய எத்தனித்த சமயம், அவனேதான் இறங்கி வந்துக் கொண்டிருந்தான் !  இப்போ எக்ஸ்ட்ராவாய்  கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான் ! இன்னும் அவனை அது கம்பீரமாய்க் காட்டியது !  அவன் என்னைப் பார்த்தது போல் தெரிந்தது,

ஆனால் அவன் கறுப்புக் கண்ணாடிக்குள் கண்கள் தெரியாதலால், உறுதியாகச் சொல்ல முடியவில்லை !  குபுக்கென்று அடிவயிற்றில் ஓர் உற்சாகம் கொப்பளித்து பொங்கியது.  புன்னகை அரும்பிய முகத்துடன் வீட்டிற்குள்நுழைந்து, பீரோ கண்ணாடி முன் போய் நின்றேன்.  கல்லூரி சென்றுக் கொண்டிருந்தபோதும், காதல் மயக்கத்தின் ஆரம்பக் காலங்களிலும், சதா கண்ணாடி முன் நின்றபடி தலையைக் கோதிக்கொண்டும், வித வித வண்ண லிப்ஸ்டிக்  மீதிருந்த தீராத மோகமும் நினைவிற்கு வந்தது.  வயிற்றைத் தடவி, மடிப்பை பற்றி இழுத்துப் பார்த்தேன், லேசாய் தொப்பை, மற்றபடி சிக்கென்றுதான் இருந்தேன், மேடேறிய நெற்றி, கூந்தலை அவிழ்த்து வாரி எடுத்து மார்பில் தவழ விட்டேன்,  முன்பெல்லாம் அடிவயிறுவரை தொங்கி வழியும், இப்போ கொஞ்சம் மேல இருக்கு, அலையலையான இந்தக் கூந்தலில்தான் மயங்கியதாக இவன் அடிக்கடி சொல்வதுண்டு,    ம்ம்ம்ம்.....இப்பல்லாம் ஒன்னும் சொல்றதுமில்ல, முகம் கொடுத்து பேசுறதுமில்ல, வந்தவுன்ன கம்ப்யூட்டர கையில எடுத்தான்னா, இவனுக்கு உலகமே அது மட்டும்தான்னு ஆயிடுவான் !
ஒருநாள் மொட்டைமாடியில் துணி காயப்போட, கொடியைத் தேடினேன் அது அறுந்து போயிருந்தது, ஸ்டூல் இருந்தால் மட்டுமே மேலேறி அறுந்த கொடியைக் கட்ட முடியும், இவனைக் கூப்பிடலாம், ஆனா, அதுக்கு நானே முயற்சி பண்ணுறதுதான் பெட்டர் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அதே பரிச்சயமான காலடி ஓசை !  அவனேதான், கையில் ஒரு பிளாஸ்டிக் வாளி வழிய வழிய துணிகள், காயப்போட மேலேறி வந்துக் கொண்டிருந்தான் ! ஷார்ட்ஸ்ம் பனியனும் அணிந்திருந்தான், விரிந்த நெஞ்சும், புடைத்த புஜமுமாய்க் காலைப் பொழுதை காமமூட்டிவிட்டான் !
என்னைக் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளாமல் அவனுடைய கொடியில் துணிகள் உலர்த்திக் கொண்டிருந்தான் !  இது ஈர விறகு போல என்று மனதில் சொல்லிக் கொண்டே,  'எக்ஸ்கியுஸ்மி' என்று நானே போய் அவனிடம் முதன்முறையாக பேசினேன் !
'சொல்லுங்க'
எங்க  கொடி அறுந்துருச்சுங்க, உங்ககிட்ட ஸ்டூல் இருக்கா ?
ஸ்டூல் இல்லையே, எங்க கொடி ? காமிங்க
நான் எங்கள் கொடியான அந்த நைலான் வயரைச் சுட்டிக் காட்டியதும், அதைக் கையில் அள்ளியவன் ஒருமுறை மேலே சுற்றுமுற்றும் பார்த்தான், பிறகு ஏதோ இரையைப் பிடிக்கப் பாயும் புலியைப் போல பாய்ந்து எகிறி ஒரு திண்டைப் பிடித்து, கைகளால் உடலை வாகாய் எக்கி, டேங் மேலேயே ஏறிவிட்டான் !
'அந்தக் கொடிய கொஞ்சம் தூக்கி எங்கிட்ட வீசும்மா' என்றான் 
நான்  கொடியின் ஒரு நுனியை எடுத்து அவனை நோக்கி வீச அதை லாவகமாக பற்றி,  உச்சியில்  இருந்த  அந்தக்  கொக்கியில்  முடிச்சிட்டான் !  அப்படியே தொம்மென்று அங்கிருந்தே குதித்தான் !
'தேங்க்ஸ்ண்ணா' என்று சொல்லி, பிறகு அந்த அண்ணாவுக்காக நாக்கைக் கடித்தேன் !
'வெல்கம்' என்று சொல்லிவிட்டு தபதபவென கீழிறங்கிப் போனான் !
மஞ்சளாய் வெயில் காய்ந்துக் கொண்டிருக்கிறது !  மரம்மரமாய்த் தாவி, மலை மேல் பாய்கிறான் அவன், மலை உச்சியில் கூண்டில் இருந்த பூட்டைக் கைகளால் உடைத்து என்னை மீட்கிறான், அப்போதுதான் பார்க்கிறேன் அவன் இடக்கையில் என் பெண், மூவரும் ஒரு விழுதின் உதவியால் பறக்கிறோம், பறந்துக் கொண்டிருக்கும்போதே அவன் என்னை காமத்தோடு பார்க்கிறான், நான் நன்றியுடன் அவனை நோக்குகிறேன், மெல்ல குனிந்து என் செவ்விதழைப் பற்....
அப்போதுதான் அந்தப் பயங்கரம், அவன் கையிலிருந்து என் குழந்தை நழுவுகிறது, வீலென்று ஒரு சத்தம்......'தேஜா' எனக் கத்திக் கொண்டே  திடுக்கிட்டு எழுகிறேன், குழந்தை எழுந்து உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தாள்,
'ப்ச்ச்....ஏய்...ச்சி...வெளிய தூக்கிட்டு போடி' என்றான் இவன் புரண்டபடி !
வெள்ளிக்கிழமை, இன்று விளக்கு துலக்கி, பூஜை செய்யவேண்டும், தலைக்கு சீயக்காய் போட்டு குளித்தேன், மிருதுவான சேலையாய் தேர்ந்தெடுத்து உடுத்தினேன், தலையை கவிழ்த்து கூந்தலை உலர்த்தி கொண்டிருந்த வேளையில், பின்பக்கமாய் வந்து அப்படியே என் இடை பற்றி தூக்கி, இவன் மார்போடு என்னை அழுத்தினான், "லாவ்....ஏய் இந்த சேலைல கும்முன்னு இருக்கடி' என்றான் காதைக் கடித்தபடி !
"பாப்பா முழிச்சுக்கப் போறாங்க, என்ன ஐயாவுக்கு ரொம்பநாள் கழிச்சு பாசம் பொங்குது ?"  ஆனால், அதற்குள் தேஜா எழுந்து, "ம்மா" என்றாள் ! 
"இன்னிக்கு மத்தியானம் லீவுடி, சாயங்காலம் கோயிலுக்கு போயிட்டு பீச் போறோம்" என்று சொல்லிவிட்டு குளியறைக்குள் புகுந்தான் !  எனக்கு கண்ணில் நீர் திரையிட்டது, காதலித்தவனை எப்படி  வெறுக்க முற்பட்டேன் என்று என் மேல் கோபம் வந்தது !  மதியவேளைக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்,
"லாவண்யா" என்று ருக்கக்கா குரல் வெளியே கேட்டது.
"வாங்கக்கா"
"விஜயா, சுஜாதா, தேவசேனா எல்லாம் சிறுவாபுரி கோயில் போயிருக்காங்க உன்னக் கூப்பிடலையா ?"
"இவர் எங்கக்கா அனுப்புவாரு, அதும் குழந்தைய தூக்கிட்டு அவ்வளவு தூரம் எப்படி போறதுன்னுட்டுதான், நேத்தே முடியாதுன்னு விஜயாக்கா கிட்ட சொல்லிட்டேன், ஆமா நீங்களும் வரீங்கன்னு சொன்னாங்களே, நீங்க போகலையா"
"ப்ச்ச்...ஆமாடி போலாம்னுதான் நினைச்சேன், நேத்து நைட்டு........" என்று கட்டைவிரலை தலைக்கு நேராய் உயர்த்தி இறக்கிக் காட்டினார் ருக்கக்கா !
 அப்போது அந்தப் பரிச்சயமான காலடிச்சத்தம் !
அவன்தான் கீழிறங்கி வந்துக் கொண்டிருந்தான், அவனை பார்ப்பதை எப்படியாகிலும் இன்று தவிர்க்க வேண்டுமென அந்த விபரீதக்கனவிற்கு பின்னரே முடிவு செய்து விட்டேன், இருத்தும் அனிச்சையாய் கண்கள் அவனை நோக்கிப் போனது.  என் கண்களை ஊடுருவிப் பார்த்தவன், லேசாய் அவன் இதழ்களில் கசிந்த புன்னகையை என் மேல் வீசிச் சென்றான் !  எனக்கு சுரீரென்று கோபம் தலைக்கேறியது !
"நீங்க சொன்னது சரிதான்க்கா.....இதுகிட்ட ஒரு ஹெல்ப்புக்கு ஸ்டூல் இருக்கான்னு கேட்டா, என்னமா சீன போட்டு, பாடி பவர காமிச்சு.....நம்மள கவுத்த ட்ரை பண்ணுராராமா" என்றேன் ருக்கக்காவிடம் !
"அய்ய எனக்கு தெரியாதா இவனுங்க பவுசு, வயசுல மூத்த என்கிட்டயே வழியுதுன்னா, சின்ன பொண்ணு உன்ன விட்ருவானா ? உனக்கு எதும்னா என்னயக் கேளுடி, இத நான் அன்னிக்குச் சொன்னா......என்னமா சிலுத்துக்கிட்டாளுங்க அவளுங்க……அவனப் பாத்து ஏங்குற கேசு அவ , என்னய ரீல் விடுறன்னுட்டா நாரிப்பாட"  ருக்கக்கா கண்ணில்,  தான் சொன்ன பொய்யை மெய்ப்பிக்க ஒரு சாட்சி கிட்டிய திருப்தி
தென்பட்டது  !

                                                          ----    முற்றும்    ----இவன் அவன் (சிறுகதை)
எழுதியது - ராஜா ராஜேந்திரன் சென்னை.