புதன், 18 டிசம்பர், 2013

ஏன் கசந்தார் சாரு எனக்கேன் கசந்தாரோ ?

சாருவின் அதி தீவிர வாசக மற்றும் ரசிகர்களே.....
அழகாய் ஒரு காதல் வந்தவுடன், காதலி சொன்னாள் என சில நண்பர்களைத் துறப்பதில்லையா.........

மனைவி வந்தவுடன் அத்தனை நாள்
அன்பு காட்டிய அம்மா திடுமென வில்லியாகத் தோன்றுவதில்லையா..........
மக்களுக்கொரு கருத்தும், தனக்கொரு கருத்துமாய் வாழும் கொளுத்த அரசியல்வாதியை விட்டு வெளியேறி, எதிர்கட்சியால் கொஞ்சம்
செழிப்பான தொண்டன், முன்னாள் தலைமையை தூற்றுவதில்லையா.........

அதுபோலத்தான், கொஞ்சம் நல் இலக்கிய அறிவு எனக்கு கிட்டக் கிட்ட, உங்களின் பார்வைக்கு நிறைகளாய் தெரிவதே எனக்குக் குறைகளாய் தென்பட ஆரம்பித்தது. எனவேத்தான் என்னுடைய இந்த நிலை மாற்றம்.

இயன்றவரை சாருவின் எழுத்துகளில் இருந்துதான் விமர்சித்துள்ளேன். ஒரு சில இடங்களில் மட்டும் தனிப்பட்ட, ஆனால் சாட்சியங்கள் இருக்கும் சில சம்பவங்களைச் சொல்லியுள்ளேன்.

கண்ணதாசன், "எழுத்தாளனின் எழுத்துக்களைப் பின்பற்று, அந்த எழுத்தாளனை அல்ல" என்கிறார்எனவே எழுத்துகளை எழுத்தாளனுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், சாருவின் எழுத்துக்களை விமர்சிக்கும் என்னுடைய எழுத்துக்களில் குறையிருந்தால் தாராளமாக எடுத்துச் சொல்லுங்கள், திட்டுங்கள், வேண்டுமானால் அன் ப்ரெண்ட் செய்து தண்டனை கொடுங்கள்.

மாறாக, குருத்துரோகம், முதுகில் குத்தி விட்டாய், வளர்த்த கடா என்றெல்லாம் புளித்த பழமொழிகள் கூறாதீர்கள்.

ஒரு மனிதனுக்கு முதல் குரு என்பது அம்மா
& அப்பா மட்டுமே. அவர்களையே சுதந்திரத்திற்காக குறை கூறும் நமக்கு, தற்காலிகக் குருக்களின் குறை கூற சிறப்புத் தகுதி ஏதும் தேவையில்லை என உணருங்கள் !
நான் இந்தத் தொடர்களை சாரு விமர்சகர் வட்டத்தின் பதிந்ததால், ‘ நாம்என அவர்களைத்தான் விளித்துள்ளேன். மேலும் என் ஆரம்பக் கட்டூரைகள் யாவும், சாருவின், ’நானும் என் வாழ்வும்என்ற தொடர் கட்டூரைகளின் விமர்சங்னங்களாக அமைந்து போனதால், அதை வாசிக்காவிடில் உங்களுக்கு குழப்பம் வரலாம், எனவே அதை வாசித்து விடுங்கள்.
இனி
............

ஏன் கசந்தார் சாரு எனக்கேன் கசந்தாரோ ? #1 =============================================
நான் விஜய்பாஸ்கர் விஜய்க்கு என்ன சொன்னேனோ, அதை மையப்படுத்தியே சாரு இம் மூன்று கட்டூரையையும் வரைந்துள்ளார். ஆக, அவருடைய ஆன்லைனில், அவருடைய வாசகர்களுக்கு தன்னிலை விளக்கம்(பத்தாயிரத்து ஒன்பதாவது முறையாக) கொடுத்து, தன் மொழிபெயர்ப்பு தேவைகளுக்கென பணம் கேட்கிறார் !நாம் இப்போதும் அவரின் வாசகர்களாக இருப்பதாலேயே, இவைகளை வரிவிடாமல் வாசித்து, விமர்சிக்கத் தலைபடுகிறோம். ஆனால், இதில் விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்க, அவரை மேலும் நோகடிப்பதிலேயே கவனம் கொள்கிறோம் !

இங்கு கூட அவருடைய கட்டூரை படித்து காசு கொடுக்க விரும்புவர்கள் கொடுக்கட்டும், அதற்குமுன், அவர்கள் தன்னை கேட்க வேண்டிய கேள்விகள் சில உண்டு.

ஒரு படத்தில் வடிவேலு தன் அக்காவை சூப்பர் ஃபிகர் எனச் சொல்லி காறி துப்பப்படுவார். இதையே பொறுக்காதது நம் சமூகக்கலாச்சாரம் என்பது இதன் குறியீடு. அதை விடவும் அவலமாய், நான் தாய் எனப் போற்றும் அவந்திகா அம்மாவை," மார்வாடிப் பெண் போல அழகு, தமிழ் தெரியாதென ஊரார் ஹிந்தியில் பேசுவார்கள், மாதுரி தீக்‌ஷித் போல அழகு, ஜெயப்பிரதாவைப் போல் இருப்பார், பார்ப்பவரெல்லாம் படுக்க கூப்பிடுவார்கள்" என..................சீச்சீ, இதை எழுத எனக்கு கூசும் மனசு, ஏன் அவருக்கு இல்லாமல் போனது ? வாசிப்போர் மனத்தில் இவர் எதை விதைக்க விரும்புகிறார் ?

அவருடைய வளர்ப்புமகன் இதை வாசித்தால் துணுக்குறமாட்டாரா ? இங்கே எத்தனையோ பேர் முன்பு சாருவிற்கு நிறைய பண உதவி, பொருளுதவி செய்திருக்கிறீர்கள், அவர்கள் கூட இப்படிச் செய்ததைச் சொல்லிக்காட்டவில்லையே ?

சரி போய்த்தொலையட்டும். நான் என் மனைவி, மகன், பெற்றோர், உடன் பிறந்தோருக்கு என்னென்ன செய்துள்ளேன் எனப் பட்டியலிட்டால் அது ராஸலீலாவை விட பெரிதாய்ப் போகுமே ? அதை விட அதி பயங்கரம், என் அம்மாவும், என் மனைவியும் எனக்காக, என் குடும்பத்துக்காக என்ன செய்துள்ளார்கள் என அடுக்க ஆரம்பித்துவிட்டால், அது காவல்கோட்ட நாவலை விட அய்யா பெரிதாக போகும் ? நம் அனைவருக்குமே அப்படி ஒரு கதை இருக்காதா என்ன ?

சரி, இதெல்லாம் ரத்த சொந்தமாச்சே, அவர் அப்படி செய்யவில்லையே என்று கேட்டால், நம்ம பயக பிற பெண்களுக்கு செய்து அழிந்து போனதுதானய்யா அதிகம் ?

இதெல்லாமே ஏதோ அவர் புதியதாய்ச் சொல்லிவிட்டதாய் வாசக நண்பர்கள் சிலர்செருப்படி
, ஆஸ் கிக் என்றெல்லாம் அவரவர் சுவரில் பகிர்ந்திருக்கிறார்கள், அதெல்லாம் என்ன இழவு குறியீடோ ?
எனக்கிங்கிருக்கும் சின்ன தாதா, செந்தில்குமார் மீதெல்லாம் ஓரத்தில் இருக்கும் கரிசனத்தின் காரணம் அவர்களுடைய வாசிப்பும், நினைவுத்திறனுமே ! செந்திலைப்
பாருங்கள் ஸீரோ டிகிரியிலிருந்து சில மேற்கோள்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

சரி, இந்த அவந்திகா, கார்த்திக் கதைகளெல்லாம் ராஸலீலா, ஸீரோ டிகிரி, எக்ஸைல்( நான் இன்னும் தேகம், காமரூபக்கதைகள் வாசிக்கவில்லை) போன்ற நாவல்களில்தான் வாசித்துவிட்டோமே, பழைய வாசகர்களுக்காக ஓர் எழுத்தாளர் புதியதாக ஒரு கதையை கூடவா சொல்ல முடியவில்லை ?

அடுத்த பகுதியில், கமல், அனில் கும்ப்ளே, சாக்கடைப்புனல்(தொடரும்)

-------------------------------------------------------------------------------------------------------------------

ஏன் கசந்தார் சாரு, எனக்கேன் கசந்தாரோ ? # 2
================================
பொதுவில், நண்பர்கள் பலரும், நன்றி மறப்பது நன்றன்று, சாபம் தொற்றும் எனப் போட்ட பதிவைப் பார்த்து கைகள் நடுங்க ஆரம்பித்தன, இதெல்லாம் வேறு எனக்குத்தான் சொல்கிறார்கள் என நெருக்கமான நண்பர்கள் பலர் இன்பாக்ஸில் எச்சரித்தனர். கொஞ்சம் ஆழ்ந்து வாசித்தால், அது எனக்கல்ல என்று புரியும், அவர்கள் சேம் சைட் கோல் போடும் கோல்கீப்பர்ஸ், கீப் இட் அப் கீப்பர்ஸ் :)

// மகாநதியை புகழந்த அதே கையால்தான் குருதிபுனலை சாக்கடைப்புனல் என இகழ்ந்தேன், மகாநதியை புகழ்ந்ததால் அவ்வளவு நெருங்கி வந்த கமலை, என் நேர்மையான குருதிபுனல் விமர்சனத்தை சமரசம் செய்துகொள்ளாமல், கைகாசு போட்டு புத்தகமாய் அச்சடித்து, ஒவ்வொரு ஸ்டூடியோ வாசலிலும் நின்று கொடுத்து, என் திரையுலக வாய்ப்போடு சேர்த்து இழந்தேன், நாசர் உட்பட எல்லோரும் அதற்கப்புறம் என்னைக் கண்டாலே ஒதுங்க ஆரம்பித்தனர் //


அய்யா, நானும் இதைத்தானே செய்கிறேன், ’சாரு தவறாய் புனையப்படும் ஒரு பொக்கிஷம்என்றல்லவா எழுதினேன், இன்னும் என் வலைப்பூவில் அப்படியேத்தானே இருக்கிறது ? சாருவின் எழுத்துகளை தேர்ந்தெடுத்து வாசியுங்கள் என எப்போதும் சொல்லத்தானே செய்வேன், அதே என் கைகள், உணர்ச்சிவேகத்தில் அவர் கொட்டும் எல்லாவற்றையும் எப்படி பொறுத்துக்கொள்ளும் ? அதற்குத்தான் இத் தொடர் !!!

மனைவி என்று வந்தபின்னர் அவளின் பரிதாபமான ஃப்ளாஷ்பேக்கை சொல்லி, ’நான் தியாகியாக்கும்என நாமேவா சொல்வது ? மக்களல்லவா சொல்ல வேண்டும் ?

கமல் சரிகா ஜோடி பிரிந்தபின்பு, கவுதமி கமல் வாழ்க்கையில் நுழைகிறார். ஊரே கைகொட்டி சிரிக்கிறது.

"பொ.பொ. இதற்காகத்தான் மனைவியை விரட்டி விட்டிருக்காய்ன்"
கவுதமி தன் மகள் சுப்புலட்சுமியுடன் வருகிறார். சரிகா மும்பை போய்விட்டாலும் கமல் வீட்டில்தான் ஸ்ருதி, அக்‌ஷரா இருக்கின்றனர். அவர்கள் இன்முகத்தோடு கவுதமியையும், சுப்புலட்சுமியையும் வரவேற்கின்றனர்,

"என்ன மாதிரி குடும்பமடா ?" என கலாச்சாரக் காவலர்கள் குதித்தபோது, "என் வரவேற்பரை வர உங்களுக்கு அனுமதியுண்டு, என் படுக்கையறைக்குள் நுழைய வேண்டாம்" என்கிறார் கமல்.

"பாத்தியா நான் சொன்னேன்ல, இவனால பொம்பளயில்லாம தனியா தூங்க முடியாது, அதுக்குன்னு புருஷன்கிட்டருந்து பிரிச்சா ஒரு பசுவ, கன்னுகுட்டியோட கூட்டிட்டு வர்றது ?" என தூற்றுவோர் தூற்ற............. நிருபர்கள் துணிந்து கமலிடம் இதுபற்றி கேட்டபோது இம்முறை, "என் கழிவறைக்குள் எட்டிப்பார்க்காதீர்கள், அது மற்றவர்கள் கழிப்பறைக்கொப்பாகவே இருக்கும்" என்றார்.


மனைவியோ, துணைவியோ, காதலியோ, அவளுக்கு தற்காலிகமான தலைவலியோ, ஜூரமோ, வயிற்றுவலியோ இருந்தால், கல் நெஞ்சுக்காரன் கூட அவளை படுக்க கூப்பிடமாட்டான். மார்பக புற்று நோயோடு, நிராதரவாய் தவித்திருந்த ஒரு முன்னாள் கொலிக்கை, பரிவுடன் தன் வீட்டிற்கு அழைத்துவந்து, ஆதரவு கொடுத்தவருக்குத்தான் இத்துணை காறிஉமிழ்தல்கள் :(

தன் புகழுக்கு பங்கம் வந்துகூட, இந்த உண்மையை என்றுமே, எங்குமே யாரிடமுமே கமல் சொன்னதாய் நான் அறியவில்லை. நீண்ட நாள் கழித்து, மருத்துவமனை வழியே இந்த விஷயம் கசிந்தது. சில மாதங்களுக்கு முன்னர்தான் விஜய் டிவி கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் இதை கமல் சொன்னார், அதுகூட, ’வென்ற பணத்தை இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கான ட்ரஸ்டில் ஒப்படைக்கப் போகிறேன்எனச் சொன்னதன் மூலமே சொல்ல நேர்ந்ததை நீங்கள் அவதானிக்கலாம். 

விஸ்வரூப பிரச்சனையின் போது, "என் படத்தை முடக்கும் அற்பப் பதர்களே, நான் தியாகி" என இக்கதையை கமல் சொல்லவில்லை. "நான் மத சார்பற்றவன், என்னை ஒரு மதத்துக்குள் முடக்குவீர்களெனில், நான் மதசார்பற்ற நாடு நோக்கி போய்விடுவேன்" எனச் சொன்னார், "பாரம்பரிய வீடு மூழ்கினாலென்ன உங்கள் வீட்டில் எனக்கு இடம் தரமாட்டீர்களா ?" என்றார், அதற்கான பின்வினைகள் என்னென்ன நடந்ததென உங்களுக்குத் தெரியும்.

அனில் கும்ப்ளே ஆறடி அழகன்
. கட்டுமஸ்தான, அப்பாவித் தோற்றம். நேர்மையான, இனிமையான சுபாவி. சுழல்பந்து வீச்சில் உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவில் எங்கெங்கிருந்தும் அவருக்கு பெண் கொடுக்க பலரும் தயாராக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் ஏற்கனவே திருமணமாகி, கணவனை இழந்து, இரு குழந்தைகளோடு தவித்திருந்த பெண்ணைத்தான் மணந்தார்...............ஐயா, அவருக்கு அது முதல் கல்யாணம், புகழின் உச்சத்தில் எடுத்த முடிவு. ’ தான் ஒரு தியாகிடா லூசுக் கூக்களாஎன ஒருபோதும் அவர் சொல்லப்போவதில்லை !


நண்பர்களே, நான் சாருவின் இம் முக்கட்டுரைப் பதிவுகளிலுருந்துதான் விமர்சிக்கிறேன், இதிலிருந்து வெளியே போனால் என்னைத் தடுத்து நிறுத்தவும். சொல்லிக்காட்டுவது குற்றம் என நம் பண்பாடு நமக்குச் சொல்கிறது. என்னை அமெரிக்கத்தமிழரும், செந்தில்குமாரும் கடத்திக் கொண்டு போய், தேர்ட் டிகிரி டார்ச்சர் கொடுத்தாலும், நான் சாருக்கு என்னென்ன செய்தேன் எனச் சொல்லவே மாட்டேன், ஆனால் சாரு எனக்கென்னென்ன செய்தார் என அவரை, வாசக நண்பர்கள் தூண்டி, சொல்லவைத்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை !

சாருவின் குருதிப்புனல் விமர்சனத்தை நான் வாசிக்கவில்லை, இருப்பினும் அதை அவர் சாக்கடைப்புனல் எனச் சொல்ல ஒரு காட்சியை எடுத்துக் காட்டுகிறார், அதற்கு அவருடைய தேகம் நாவல் மூலமே பதிலளிக்க விரும்புகிறேன், காத்திருங்கள் !


அடுத்த பதிவில், எழுத்தாளர்களின் உப தொழில், நாதன் எனும் ஒரு பலியாடு, ஜி.நாகராஜன் ஓர் உயர்குடி பாப்பான்.................(தொடரும்)


ஏன் கசந்தார் சாரு, எனக்கேன் கசந்தாரோ ? # 3
=============================================

போன பதிவிற்கும், இப் பதிவிற்கும் இவ்வளவு பெரிய இடைவெளி ஏன் என உங்களுள் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழக்கூடும். ஒரு காமெடியன் வில்லனாக நடித்தால் நாம் அதை ஏற்பதேயில்லைதானே ?

கமலின் அபூர்வ சகோதர்கள் படத்தில் நாகேஷ் அற்புதமாகத்தான் வில்லன் வேடத்தைச் செய்திருப்பார், ஆனால் அதை ஜீரணிக்க முடியவில்லை என விகடன் அப்போது விமர்சனம் எழுதியது. சரத்குமாரின் ரசசியபோலிஸ் படத்தில் கூட கவுண்டமணி வில்லன் வேடம் செய்திருப்பார், பார்க்க காமெடியாக இருக்கும். ஆக, நான் திடீரென சாருவின் எதிர்ப்பாளனாக மாறுவதை என் ஆருயிர் நண்பர்களால் சிறிதும் ஏற்க முடியவில்லை.

பலரும் இன்பாக்ஸில், ’நீங்கள் எழுதுவதால்தான் சாரு மிகக் கோபமாய் பதிவுகள் எழுதுகிறார், அவர் சாபத்திற்கு ஆளாகவேண்டாம், ஒதுங்கி, பிற சீனியரைப் போல அமைதி காக்கவும், அட்லீஸ்ட் ஒரு வாரமாவது எதுவும் எழுத வேண்டாம்என்றனர்.

வசை
, எதிர்ப்பு, தூற்றல், அன்ஃப்ரண்ட் & ப்ளாக் செய்தல், இந்த ஆயுதங்களையெல்லாம் விட அன்பு வலிமையான ஆயுதமல்லவா ? எனவே சிறிதுகாலம் வெளியேறி அமைதி காத்தேன்.
நண்பர்களே, சாரு என்னை ஏசி எழுதி, என்னை பெரியாளாக்க விரும்பமாட்டார். சாரு ஆன்லைனை உலகம் முழுவதும் பல கோடி பேர் வாசிக்கிறார்கள். என்னைப் போன்ற குளுவானைத் திட்டி, நான் என்ன விமர்சித்தேன் எனப் பார்க்க அவர்களை ஏன் தூண்டவேண்டும் ? அப்புறம் இன்னொன்றை புரிந்து கொள்ளுங்கள். நான்தான் சாருவின் அக்மார்க் சீடன் !!!

சாரு எதை ஒன்றையும் புகழ்வார், ஆனால் அவருக்கு ஒவ்வாது என்று உணர்ந்த விநாடி அதைத் துக்கி எறிந்து, வசை பாடத் தயங்க மாட்டார். மதுரைப் பொண்ணு கவிதையை மிகச் சிலாகித்து அதை அவருடைய ஆன்லைனில் பகிர்ந்த அடுத்த சில நாட்களிலேயே, அந்தப் பெண் தஞ்சை பிரகாஷை மட்டம் தட்டிவிட்டார் என்று அந்த ஐடிக்கே புரியாத ஒரு குற்றச்சாட்டைக் கூறி, காச்மூச்சென கத்தி, வட்டத்தை விட்டு நீக்கினார்(காஞ்சனா கபர்தார்)

நித்யானந்தா தன் தலையில் கைவைத்து ஆசி செய்தபோது, ’அம்மா, அவ்வா, மேல் ஆணையாக என்னுள் ஏதோ ஒரு சக்தி இறங்கியதை உணர்ந்தேன்என எழுதிய கையாலேயேத்தான், சரஸம் சல்லாபம் சாமியார் என்று விமர்சன புத்தகமெழுதி அதை பல லட்சப் பிரதிகள் விற்று, சம்பாதித்தார் !

மனுஷ்ய புத்திரனின் ஊனத்தைப் பேசிய ஜெயமோகனை பார்த்தவிடத்தில் செருப்பால் அடியுங்கள்எனச் சொல்லிய கைதான், எத்தியோப்பிய மன்னர் பின் லேடனின் ஆதரவாளர் என்றார். மிஷ்கினை வானளவப் புகழந்து, பிறகு அவர் அதிகப்பிரசங்கியாய் பேசிவிட்டாரென, ’மிஷ்கின் இளையராஜா பற்றி அந்தரங்கமாக ஒன்று என்னிடம் சொன்னார், நான் அதைச் சொன்னால் கோலிவுட் தாங்காதுஎன விகடனில் ப்ளாக்மெயில் செய்தார்.

எனவே, நீங்கள் நா(ங்க)ன் சாருவின் நகலாக உருவாகுவதை ஆதரிக்க வேண்டுமேயன்றி அச்சம் கொள்ளக்கூடாது. ஒன்னு செய்யலாம், அவரை நிறுத்தச் சொல்லுங்க நா(ங்க)ன் நிறுத்திக்கிறேன்

சரி, இதெல்லாம் தெரிந்துகொண்டுதானே இவ்வளவு நாள் அங்கிருந்தாய் எனலாம். உண்மை. வாசகர் வட்டம் பிரபலாமாகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் சாருவின் சாட் ஸ்கேண்டல் விஸ்வரூபமெடுத்தது. அது ஒரு சதி எனச் சொல்லப்பட்டது. விமர்சக வட்டத்தினர் திட்டினாலும் பரவாயில்லை, இப்போதும் அதை சதியென்றே நான் நம்புவதால் அதை தொடரப்போவதில்லை. எனவே அவருக்காக ஒரு கேடயமாய் அப்போது அவரை யார் திட்டினாலும் போய்ச் சண்டை போட்டிருக்கிறேன்.

அவர் பணம் கேட்பதை, வட்டத்தை விட்டு வெளியேறிய பின்னரும் ஆதரிக்கவே செய்கிறேன். ஆனால், ’நிலை மாறி மாறி பேசிவிட்டு, நான் எப்படி செயல்படுகிறேனோ அப்படியே நீயும் மாறுஎன்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. இதில் மட்டும் நான் என்றுமே சமரசம் கொள்வதில்லை. நேரடியாய் கமெண்டில் கேள்வியாய், அல்லது மெயிலில் என் மனக்குறையை சொல்லிவிடுவேன்.

இது நீண்ட நாட்களாகவே நடக்கும் பனிப்போர். சிறுமலையில் நேரடியாகவே சாரு, ’நீ இனி வட்டத்தில் முன்னாள் அட்மின்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசக்கூடாதுஎன்றார். இதற்கு நேரடி சாட்சிகள் பல உண்டு, அதுவே போதாதா நான் உங்களை விடவும் பழைய விமர்சகன்தான் என நிறுவ

சரி, அது அவருடைய வட்டம், அவ் வட்டத்தை உருவாக்கி, பாடுபட்டு வளர்த்தவர்கள் எனக்கு வேண்டாம் என்கிறார். அவரிடம் நேரடியாய் போய் ஏன் இப்படி நன்றி மறக்கிறீர்கள்என கேட்க முடியாது, மாறாக வட்டத்தில் அவர்களை புகழாமல், ஆனால் வேறொரு குழுமத்தில் அதே நட்புடன் தொடர்ந்தோம். அதற்கும் வந்தது ஆப்பு

என் வட்டத்தில் இருப்பவர்கள் யாரேனும் முன்னாள் அட்மின்களுடன் வேறெங்கும் க்ரூப் நட்பில் இருந்தாலும் சரி, ஃபேஸ்புக் நட்பில் இருந்தாலும் சரி, அவர்கள் உடனடியாக லீவ் குரூப் அல்லது அன்ஃப்ரண்ட் செய்யவேண்டும் அல்லது என் வட்டத்தில் இருந்து விலக வேண்டும்" என்று ஆணையிட்டார் சந்திரகுப்த மெளரியர். (சாணக்கியருக்கு மட்டும் ஆயுட்கால விதிவிலக்கு உண்டு)

அவர் சொன்ன மாத்திரத்தில் பல நண்பர்கள் அதை உடனடியாகக் கேட்டு, செயல்பட்டதைப் பார்த்துதான் நான் பெரிதும் அதிர்ந்தேன். எக்ஸைல் வெளியீட்டின் போது, பாண்டியன் புயலிடமும், அமெரிக்கத் தமிழரின் இரு வேறு ஐடிக்களிடமும் நானும் இதைச் செய்தேன்தான் எனினும் அது சுய முடிவு. திணிக்கப்பட்ட முடிவல்ல.

யாரால் வட்டம் வளர்க்கப்பட்டதோ, அவரை எட்டி உதைத்துவிட்டு பல உயிர் நண்பர்கள் வெளியேறினர். அருண் இயக்குனர் மட்டும் சாருவின் இந்தக் கேள்விக்கு, ’சாரு, நான் வாசகர் வட்டத்தைவிட்டு வெளியேறுகிறேன், உங்களை சாரு ஆன்லைனில் கூட வாசித்துக் கொள்வேன், ஆனால் ஆருயிர் நண்பர்களை உங்களுக்காக விட்டுத் தர முடியாது" என்றார். இன்று வரை சாரு இதை பெருமையாகச் சொல்லி அருணைப் பாராட்டுவார்.

எனக்கும், ’ஞானப்பழத்தை வென்றவருக்கும்இப்படி அருண் போல் வெட்டொன்று துண்டிரண்டெனப் பேசத் துணிவில்லை. அவர், ’ப்ளீஸ் வற்புறுத்தாதீர்கள்என்றார், நான் யோசிக்கிறேன்என்றேன்.ஆனால், தான் ஏன் வெளியேறச் சொல்கிறேன் என அவர் சொன்ன ஒரு காரணம் என் முகத்தில் திராவகத்தை வீசியது போலிருந்தது(மிஷ்கின் இளையராஜா ப்ளாக்மெயில் மாதிரியே இல்ல ?) அங்கேயே என் மனதில் சாருவின் நூறடி கட் அவுட் ஒன்று சரிந்து வீழ்ந்தது.

அதன் பின் வட்டத்தில் என் வேகத்தை முழுவதுமாய் தணித்துக் கொண்டேன்இதனாலேயேத்தான் விமர்சகர் வட்டத்தில் என்னை இணைத்தபோதும், பிரியமுடன் துரோகி போலவோ, ஜ்யோவ் போலவோ எனக்கு கோபம் வரவில்லை. மாறாக அப்போது என்னை டேக் பண்ணி, கேள்வி கேட்கும் நண்பர்களுக்கு சாரு ஆதரவாளனாய் பதிலளித்தேன். விமர்சக வட்டத்தின் தரமற்ற சில வசைப் பேச்சுக்களைத் திசைதிருப்ப, ஒரு சாதிப்பற்றாளரிடம் சண்டையிட்டேன், அணு உலை பற்றி விவாதித்தேன். சாட் விளக்கத்தின் போது, என் உளறல்களைத் தவிர்க்க ஓடிப்போனேன் !

எதற்கு இவ்வளவு அக்கப்போர் விளக்கம் எனில்
, ஐயா, நான் ஒரு நீண்ட கால விமர்சகன்தான், திடுக்கென மாறவில்லை எனச் சொல்வதற்காக.
சரி, பகுதி இரண்டில் சாருவின் எழுத்தாளர்கள், ஜி. நா, நாதன் பற்றி எழுதுவேன் எனச் சொன்னேன் இல்லையா, அதில் நாதன் பற்றி எதுவும் எழுதப் போவதில்லை. அனுமதியில்லாமல் அவர் பெயரை எழுதியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். (பிற நண்பர்களும், உங்கள் அனுமதி இல்லாமல், நான் உங்கள் பெயரைப் பயன்படுத்தியதாய்க் கருதினால் இன்பாக்ஸில் சாபமிடலாம்) எழுத்தாளர்கள் பற்றி சாருவின் தேகம் நாவலில் வருவதைத்தான் சொல்லவிருந்தேன்.......... 

http://raja-rajendran.blogspot.in/2012/07/blog-post_16.html
மேலேயுள்ள இந்த லிங்க், இந்தப் பத்தி போனவருட ஜூலையில் எழுதியது, எதாவது புரியுதான்னு பாருங்க, புரிஞ்சா புலப்படும் நான்தான் உங்க சீனியர்னு !

(தொடரும்)

அடுத்த பகுதியில் :-  சுந்தர ராமசாமி, பாலா, நாஞ்சில் நாடன், ஜி. நா...............