சனி, 22 ஜூன், 2013

முடக்காதே.....முடக்காதே !

நம் இயல்பை, இந்த ஊடகங்கள் எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்தி, முன்னேறவிடாமல் முடக்கி விட்டிருக்கின்றன என்பதற்கு கீழே தொடரும் பத்தியே சான்று.

// சீன குத்துச்சண்டை :
வெள்ளியை உறுதி செய்தார் மன்ஜீத் சிங்சீன ஓபன் குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் மன்ஜீத் சிங் 91 கிலோவுக்கு மேற்பட்டோர்க்கான எடைப்பிரிவு அரைஇறுதியில் சீனாவின் வாங் ஜீ பாவை வீழ்த்தி, இறுதிச் சுற்றை உறுதி செய்தார்.  சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில், சீனாவின் அகிப்பீர் யூசுப்பைச் சந்திக்கிறார் //

ஆம், நமக்கு வெள்ளி கிடைத்தால் கூடப் போதுமாம்.
வெள்ளி வாங்கிவிட்டாலே பெருமையாம்.
இரண்டாமிடம் ஒன்றுமில்லாததற்கு பரவாயில்லையாம்.அட, இதையே ’தங்கம் வெல்வாரா மன்ஜீத் சிங் ?’ 
அல்லது ’மன்ஜீத் சிங் தங்கம் வெல்ல வாய்ப்பு’ என்று எழுதினால் என்னவாம் ?


அப்படி எழுதி, அவர் தோற்றுவிட்டால் நாம் ஏமாந்து விடுவோமாம்.  ஏமாறாமல், மனம் துவண்டு போகாமல் இருக்க இப்படி ஒரு உத்தியாம்.

முதலிடம் கிட்டாமல் இரண்டாமிடம் கிட்டி அழுபவனை வேண்டுமானால் ’தங்கம் இல்லை என்றாலென்ன வெள்ளி மோசமில்லை’ என்று தேற்றலாம், அதை விடுத்து, தங்கம் வாங்க வாய்ப்புள்ள ஒருவரை, அவர் தங்கம் வாங்கிவிடுவார் என நம்பும் சிலரை,  நாங்கள்தான் முதலிடம் பெறப்போகிறோம் என குதூகலிக்கும் பலரை, எப்படியெல்லாம் மட்டுப் படுத்தி வைக்கிறார்கள் ?

ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தாலும், ஜெயித்தவனுக்குத்தானேயய்யா பெருமை ?  ஒரே ஒரு ஓட்டில் தோற்றார் என்பதற்காக, ஜெயித்தவருக்கு கிட்டும் பாதி சலுகையை இரண்டாமிடம் பெறுபவனுக்கு கொடுக்கிறார்களா என்ன ? 

வெள்ளி உறுதியானால்தான் என்ன ?  வெண்கலம் கூடை நிறைய கொட்டினால்தான் என்ன ?  ’ஆபரேஷன் சக்சஸ் ஆனால் பேஷண்ட் டெட்’ என்பதில், செத்தவனுக்கு என்னய்யா லாபம் ?

’அத்தனைக்கும் ஆசைப்படு’ என்பதும் தவறு,  ’கைக்கெட்டியதற்கு கூட  ஆசைப்படாதே’ என்பதும் தவறுதான் !!!

                                                 =====முற்றுகிறது====== 


சனி, 15 ஜூன், 2013

A RIGHT MAN RIGHT PLACE RIGHT TIME !!!

சமீபத்தில் இதுபோல ஒரு செண்டிமெண்டை பார்த்ததாய் நினைவே இல்லை.

நேற்று சாம்பியன் லீக்ஸ் மழையால் தடைபட்டதால், அனிச்சையாய் சேனல்கள் மாற்றிக்கொண்டே வந்தவன் அனிமல் ப்ளேனட் சேனலில் நிறுத்தினேன். ‘ UN TAMED UN CUT' எனும் நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது.

வனத்தை ஒட்டியிருந்த ஒரு பெரிய சாலையைக் கடக்க முயற்சித்த பெண் மான் ஒன்று மிக வேகமாய் வந்த ஒரு வாகனத்தில் அடிபட்டு, சாலையோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

’ட்ராபிஃக் குளறுபடி எதனால் ?’ என்பதை பார்க்க வந்த அந்த விலங்கு நல ஆர்வலர், சற்றும் தாமதியாது அடிபட்ட அந்த மானுக்கு முதலுதவி தர முயல்கிறார்.   நேராக மானின் வாயை பிளந்து அவர் வாயை அப்படியே வைத்து ஊதுகிறார்.  சுவாசத்தை அதிகரித்து, இறக்கும் நிலையிலிருந்த அம் மானை, உயிர் பிழைக்க வைக்க முயற்ச்சிக்கிறார், ம்ஹும்........அந்த மான் இறந்துவிடுகிறது.  பிறகுதான் கவனிக்கிறார், அது ஒரு நிறைமாத கர்ப்பிணி.

தாய் மான் இறந்துவிட்டதால் சுவாசம் கிட்டாது, அந்த பிஞ்சும் இறந்துவிடுமென கணிக்கிறார்.  சரி, அதையாவது காப்பாற்ற முடியுமா எனப் பார்க்க, இறந்த மானின் வயிற்றைக் கிழித்து, அந்தக் குட்டியை, ரத்தச் சேற்றிலிருந்து அப்படியே லாவகமாக எடுக்கிறார்.
கருப்பபையிலிருந்து எடுக்கப்பட்ட அக்குட்டியும் சலனமற்று இருக்கிறது. 

மனம் தளராமல் உடனடியாக அதற்கும் செயற்கை சுவாசம் தர, தன் வாயை அக் குட்டி மானின் வாயோடு வைத்து (மான் கன்று உடல் முழுக்க கொழ, கொழவென ஒரு சவ்வுப் படலமும், அவசர ஆபரேஷன் என்பதால் ரத்தப் பூச்சுமாய் இருந்தது)
தொடர்ந்து ஊதுகிறார்.  மீண்டும், மீண்டும் ஊதுகிறார்.  ஓரிருவர் அவருக்காக சாலையோரங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்தி, ஏதேனும் உதவி தேவைப்படுமா என விசாரிக்கின்றனர்.

அடடா........கிட்டத்தட்ட மரணத்தை தழுவியிருந்த அந்த மான் உடல் சிலிர்க்கிறது.  லேசே வால் ஆட, காது மடல் அசைய, கண் விழிக்கிறது அந்த மான் குட்டி.  இறந்த அதன் தாயிடமிருந்து கசியும் சீம் பாலை பாட்டில் மூடியில் சேகரித்து, குட்டிக்கு புகட்டுகிறார் 

சுற்றி பார்ப்பவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.  குட்டிக்கு உடனடியாக கதகதப்பு தேவைப்படுமென்பதால் அதை காரை மூட உதவும் ப்ளாஸ்டிக் கவர் கொண்டு மூடி, அப்படியே அள்ளி தன் நெஞ்சோடு அணைக்கிறார்.  தன் நெஞ்சுச் சூட்டை அக் குட்டிக்கு கொடுத்தவாறே காரில் ஏறி, கால்நடை மருத்துவமனை கொண்டுபோகிறார்.

அந்த இடத்தில் இருந்த சக பயணி சொன்ன வரிதான் இக் கட்டூரையின் தலைப்பு.  ஒரு நிஜ ஹீரோவைக் கண்ட திருப்தியுடன் உறங்கச் சென்றேன் !!!

                                        
                                                            --- முற்றும் ---


வியாழன், 6 ஜூன், 2013

காதலெனும் புனிதம் !!!

தர்மபுரி கலவரத்துக்கு காரணமான இளவரசன் & திவ்யா காதல் ஜோடி மனக்கசப்பில் பிரிந்தது - ஊடகச் செய்தி


இது ஒரு சாதாரண நிகழ்வு.  காதலித்து எல்லா எதிர்ப்புகளையும் மீறி கல்யாணம் பண்ணி விட்டோம் என்பதற்காக மனமொப்பாதவனோடு/ளோடு வாழ்ந்தாக வேண்டுமென்பதுதான் பெருந்தவறு.

இப்போது இது ஒரு விடுதலை.  கொடுமை என்னவென்றால் இதை வைத்து இழந்த உயிர்களும், உடைமைகளும்தான்.  காதல் தவறு அல்லது காதல் சரி என்று சொன்ன எல்லோர் முகத்திலும் கரி. 


இதைப் பெரிது படுத்துவதன் மூலம் ஊடகங்கள் மறைமுகமாக ஆதிக்கச் சாதிகளுக்கு வக்காலத்தும், காதலுக்கு எதிராகவும் நடந்துக் கொள்கின்றன, என்பதை உணரவில்லை. 

ஆனால் இதிலிருந்து இளைஞர்கள் அவசியம் பாடம் கற்கலாம்.  பள்ளிக்கல்வி/கல்லூரி படிக்க வேண்டிய காலகட்டத்தில் காதலை சீரியஸாக கல்யாணம் வரை கொண்டுசெல்லத் தேவையேயில்லை. 

காதலை மென்மையாக...... பேசி, கூட்டாய் பாடங்கள் படித்து, சினிமா, பீச், பார்க், கோயில் என ஊர் சுற்றி,  வரம்பு மீறாத தொடுகை என்று காதலை அற்புதமாக அனுபவிக்கலாம். 

நடுவிலேயே குழப்பம் ஏற்பட்டு காதலை கைவிட நேர்ந்தால் இரு மனமுமொத்து, கைகுலுக்கிவிட்டு கருணையின்றி அக்காதலை கொன்றுவிட்டு அடுத்த காதலைத் தேடிச் செல்லலாம். 


இதைவிட்டுவிட்டு, ’காதலின் வெற்றி என்றால் அது கல்யாணம்தான்’ என்று இந்த சின்னஞ்சிறுசுகளின் மனதில் காதலை பெரிய புனிதப் பிம்பமாக படியவைத்து, அவர்களின் இளமைக்கால வாழ்வியல் அழகையே குலைத்து விடுகிறோம்.

இந்த இழவெடுத்த காதலில் பொஸஸ்ஸிவ்னெஸ் இதனாலேயேத்தான் வந்து தொலைக்கிறது.  விளைவு, காதல் கல்யாணத்தில் முடியாது எனத் தெரியவரும்போது ஆசிட் அடிக்கிறான் அல்லது ஹனிமூனில் கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்.


காதலில் ’ஒத்துவாராது’ எனப் பிரிந்துவிட்டு, பிறகொரு சந்தர்ப்பத்தில் எங்காவது சந்திக்கும்போது, மிக மகிழ்ச்சியுடன் தம்முடைய இணைக்கு, ‘இன்னார்’ என அறிமுகப்படுத்தி, மலரும் இனிமையான நினைவுகளை அசைபோட்டு, அளவளாவி எந்த முகச் சுளிப்புமில்லாமல் விடைபெற்று கிளம்பினால்........அதுதானேய்யா உண்மையான காதல் வெற்றி !!!

ஆக, இது காதலின் தோல்வியல்ல.........காதலை தவறாகப் புரியவைத்த சினிமாவின்/இலக்கியத்தின்/ஊடகங்களின் தோல்வி :((


                                                                    ---  THE END  --- 

செவ்வாய், 4 ஜூன், 2013

சுஜாதாவும் சி.சு.செல்லப்பாவும் !!!

ஃபேஸ்புக்கில் ஒருமுறை எனக்கும்,  நண்பர் விஜய்பாஸ்கர் விஜய்க்கும் ஒரு கருத்து முரண்பாடு ஏற்பட்டு, பிறகது பிணக்கில் முடிந்துபோனது. இந்தப் பிணக்கில் நிரந்தர பகை ஏதுமில்லை என்பதுதான் ஒரே ஆறுதல்.

ஆனால், அன்று, அவருடைய எந்தக் கருத்துக்கெதிராக பொங்கினேனோ, இன்று அதே கருத்தை ஆதரிக்கும் மாறுதல் என்னுள் ஏற்பட்டது !!! 

எனக்கும், அவருக்கும் ஏற்பட்ட மோதலுக்கான பதிவை கடைசியில் சொல்கிறேன், என்னுடைய மனமாற்றத்தை மட்டும் இப்போது படியுங்கள்.

போன ஞாயிறு தினகரன் வசந்தம் இதழில் வெளியான, திருமதி.சுஜாதா ரங்கராஜனின் பேட்டியை, கட்டூரையாளர் ’சமஸ்’ வாயிலாக, அவதானித்ததில், சுஜாதாவின் மனைவி கூற்றானது, ’எழுத்துக்காகவே அவர் தம்மை அர்ப்பணித்துக் கொண்டாலும், சிறிதும் குடும்பத்தின் பால் பற்று வைக்கவில்லை.  முற்போக்கு எழுத்தாளராய் அறியப்பட்டாலும், தன்னிடம் ’பெண், வீட்டில் அடங்கிக் கிடக்கவேண்டுமென்ற’ மனப்பான்மையிலேயே நடந்துக்கொண்டார்.   தம்முடைய உற்றார்-உறவினர்களுடன் ஒட்டி உறவாடவில்லை.............ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து செய்துவிடலாமா என்றெல்லாம் கூட எரிச்சல் உண்டானது.


முழுக்க, முழுக்க கட்டுப்பாடான ஆச்சார, அனுச்சாரங்களை முறைப்படி கடைபிடிக்கும் (அல்லது கடைபிடிக்க அவ்வாறு அழுத்தப்பட்ட)   குடும்பத்தலைவியாகவே எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி வாழ்ந்து வந்திருப்பது இதில் புலனாகிறது.  எல்லா ஆசைகளையும் மனதிலேயே புதைத்து, சமயங்களில் வாய் வரை கேட்க வந்துவிட்டு, திட்டுவாரோ எனப் பயந்து, வார்த்தைகளை விழுங்கி, வந்த இடத்துக்கே அனுப்பி வைக்கும் சராசரி தமிழ்க் குடும்ப பெண்ணாகவே, அவருடன் வாழ்க்கை நடத்தியிருந்திருக்கிறார். 


பெண்ணீயத்தைப் போற்றுமெனக்கு (’ம்க்கும்’......என் மனைவியின் மைண்ட் வாய்ஸ்) இது கொஞ்சம் அதிர்ச்சிதான் எனினும், இப்போதுதான் என் குரு மேல், எனக்கு இன்னும் பாசம் பொங்கி வழிகிறது.  ’எனக்காக, நமக்காக, தமிழர்களுக்காக, அவர் குடும்பத்தையும் பாராமல், சதா எழுத்தாகவே வாழ்ந்து, எழுத்தாகவே மறைந்திருக்கிறார்.......என்ற காரணத்தினால் !

1986 இலிருந்துதான் சுஜாதாவின் எழுத்துக்கள்,  நண்பனால் பரிச்சயப்பட்டு, விரும்பி வாசிக்க ஆரம்பித்தேன்.  அங்கிருந்து 2007 கடைசி வரை,  ஒரே ஒரு நாள் கூட தவறவிடாமல், அவருடைய எழுத்துக்களை ஏதோ ஒரு பத்திரிக்கையின் வாயிலாகவோ,  நாவல்களாகவோ, சினிமாவின் உரையாடல் வாயிலாகவோ சுடச்சுட ருசித்திருந்திருக்கிறேன்.  2008 இல் தான் அவரை நாம் இழந்தோமெனினும், கடைசி காலத்தில் அவருக்கிருந்த உடல்சோர்வு......அவரை 2007கடைசிவரை மட்டுமே எழுதவிட்டது.

சுஜாதா சிறந்த வாசிப்பாளர்.  ஒரே சமயத்தில் பல நூல்களை, கிடைக்கும் நேரங்களில் எல்லாம் வாசித்தபடி இருந்தவர்.  இளமையை முழுக்க...முழுக்க வாசித்தலிலும், எழுதுவதிலும், வாசகர் அல்லது சக எழுத்தாளர் அல்லது சினிமா நண்பர்களுடனேயே கழித்திருக்கிறார்.

ஆனால், அவர் மத்திய அரசு வேலையிலிருந்ததால் நிரந்தர வருமானத்துக்கு குறைவிருந்திருக்காது.  என்ன......சாரு புலம்புவதைப்போல..........தமிழில், தமிழருக்காக மட்டுமே எழுதி, பிழைக்கத் தெரியாதவராய் இருந்துவிட்டார்.  அப்படியும் ஒட்டுமொத்தமாய் சொல்வதற்கில்லை.  அவருடைய பல தீவிர விசிறிகள் அப்போது சினிமாத் துறையில் இருந்த காரணத்தினால், அவர் சாகும்வரை சினிமாவில் எழுதிக் கொண்டுதானிருந்தார்.  ஆக, அவர் எழுத்து யானை மாதிரி இருந்தும் கொடுத்தது, இல்லாமலும் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது.

ரசிகர்களிடையே, அவர்களுக்காக ஓயாமல் சுவைப்பட எழுதி, இமயமலையாய் உயர்ந்தவருக்கு, வெறும் பணம், புகழ், பிரபலங்களுடனான தொடர்பு மட்டுமே சிறந்த குடும்ப வாழ்க்கையென நினைத்து, கொஞ்சம் சறுக்கியுள்ளார்.  இது பிரபலங்களுக்காக மட்டுமல்லாது எல்லோருக்குமே பொருந்தும்.   பிரபலாமாகத் துடிப்பவர்களே எச்சரிக்கை !

சரி, ஆரம்பப் பத்திக்கு வருகிறேன்.  விஜய்பாஸ்கர்,  திரு.சுந்தர ராமசாமி, எழுத்தாளர் திரு.சி.சு.செல்லப்பாவைப் பற்றி சொல்லியிருந்த 'நனவோடைக் குறிப்பு'  என்று ஒரு பத்தியை பகிர்ந்திருந்தார்.  அதில் சி.சு.செல்லப்பாவைப் பற்றி வரும் வர்னணைகள் இவை :-


சி.சு.செல்லப்பா தமிழ் இலக்கியத்துக்காக கடுமையாக பாடுபட்ட ஒர்
எழுத்தாளர்.

சொந்த செலவில் தொடர் நஷ்டத்தில் சிறு இலக்கியப் பத்திரிக்கை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.


தாமெழுதிய புத்த்கத்தை சொந்த செலவிலேயே பதிப்புத்துள்ளார்.
புத்தகங்ளை தோளில் சுமந்து சென்று, ஒவ்வொரு கல்லூரி வாசல்களிலும் நின்று கூவி விற்றுள்ளார்.

அவர் எப்போதும், பரிசையோ, நன்கொடைகளையோ ஏற்றுக் கொண்டதேயில்லை.

சொத்துக்களையெல்லாம் விற்று, ஏன் மனைவி தாலி வரை விற்று, புத்தகங்களை அச்சடித்துள்ளார், தமிழ் இலக்கியப் பத்திரிக்கையை நடத்தியிருந்திருக்கிறார்.

ஒருமுறை சி.சு.செ. கஷ்டப்படுவதை அறிந்த சு.ரா அவருக்கு பண உதவி செய்ய முற்பட்டபோது தம் நூலை சு.ரா வின் சொந்தப் பதிப்பகத்தில், பதிப்பித்து வெளியிட வேண்டுமானால் செய்யுங்கள் என்று அந்த உதவியை மறுத்துள்ளார். 

இதைப் படிக்கும்போது நம் மயிர்க்கால்கள் குத்திட்டு, ’அடடா......என்னா ஒரு தியாகம்’ என்று கண்ணீர் அல்லவா உகுத்திருக்க வேண்டும் ? மாறாக எனக்கு சுர்ர்ர் ரென்று கோபம் வந்தது.  ’அதென்னடா........குடும்பத்த காவு கொடுத்துவிட்டு, இலக்கிய மசிறுத் தொண்டென்று ?’ அவ்வளவுதான் இப்படி நான் சொன்னதும், வெட்டுக்குத்து என்று ரணகளமாகி நாறிப்போனது. 

இதை எந்த ஒரு பிரபல எழுத்தாளருக்கும் ஆதரவாக நான் சொல்லவில்லை.  இப்போதும் இங்கு தன் எழுத்தை சிலர் உயிருக்குயிராய் நேசிக்கிறார்கள், அத்தைகய எழுத்துக் காதலர்கள் சி.சு.செவைப் போலவே எழுத்துக்காக, நேரத்தையும், படிப்பையும், வேலையையும், குடும்ப வாழ்வையும், நண்பர்களையும் இழக்கத் துணிகிறார்கள்.  இப்படிபட்ட எழுத்து வெறியர்களின் ஆசை விளக்கில் எண்ணையை ஊற்றுவது போல சி.சு.செவை பற்றிய சு.ராவின் புகழ்ச்சி ஆகிவிடுமோ எனப் பயந்ததே....... நான் பொங்கினதின் காரணம் !

சுஜாதா தன் குடும்பநலன் பாராது எழுத்துக்காக உழைத்தது இனித்தது, ஆனால் அதே சி.சு.செல்லப்பா செய்தபோது கசந்ததே........

தன் பரம்பரை இருக்கும்வரை அவர்களின் வாரிசுகளுக்கு நிரந்தர வருவாய்க்கு உத்திரவாதத்தைக் கொடுத்துச் சென்றவரே இந்த ஏச்சுக்கு ஆளாகிறார்..........சி.சு.செ.வோ இருக்கும் சொத்துக்களை விற்று, இலக்கியம் வளர்க்க முயன்றதுதான் எனக்கு முரணாகப்பட்டது. 

என் முரண் தவறு.  எழுத்துக்காக எதையும் இழக்கலாமென நீங்கள் கருதினால் என் பிழை பொறுக்கவும், நன்றி !!!


                                                                   ----the end----