செவ்வாய், 4 ஜூன், 2013

சுஜாதாவும் சி.சு.செல்லப்பாவும் !!!

ஃபேஸ்புக்கில் ஒருமுறை எனக்கும்,  நண்பர் விஜய்பாஸ்கர் விஜய்க்கும் ஒரு கருத்து முரண்பாடு ஏற்பட்டு, பிறகது பிணக்கில் முடிந்துபோனது. இந்தப் பிணக்கில் நிரந்தர பகை ஏதுமில்லை என்பதுதான் ஒரே ஆறுதல்.

ஆனால், அன்று, அவருடைய எந்தக் கருத்துக்கெதிராக பொங்கினேனோ, இன்று அதே கருத்தை ஆதரிக்கும் மாறுதல் என்னுள் ஏற்பட்டது !!! 

எனக்கும், அவருக்கும் ஏற்பட்ட மோதலுக்கான பதிவை கடைசியில் சொல்கிறேன், என்னுடைய மனமாற்றத்தை மட்டும் இப்போது படியுங்கள்.

போன ஞாயிறு தினகரன் வசந்தம் இதழில் வெளியான, திருமதி.சுஜாதா ரங்கராஜனின் பேட்டியை, கட்டூரையாளர் ’சமஸ்’ வாயிலாக, அவதானித்ததில், சுஜாதாவின் மனைவி கூற்றானது, ’எழுத்துக்காகவே அவர் தம்மை அர்ப்பணித்துக் கொண்டாலும், சிறிதும் குடும்பத்தின் பால் பற்று வைக்கவில்லை.  முற்போக்கு எழுத்தாளராய் அறியப்பட்டாலும், தன்னிடம் ’பெண், வீட்டில் அடங்கிக் கிடக்கவேண்டுமென்ற’ மனப்பான்மையிலேயே நடந்துக்கொண்டார்.   தம்முடைய உற்றார்-உறவினர்களுடன் ஒட்டி உறவாடவில்லை.............ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து செய்துவிடலாமா என்றெல்லாம் கூட எரிச்சல் உண்டானது.


முழுக்க, முழுக்க கட்டுப்பாடான ஆச்சார, அனுச்சாரங்களை முறைப்படி கடைபிடிக்கும் (அல்லது கடைபிடிக்க அவ்வாறு அழுத்தப்பட்ட)   குடும்பத்தலைவியாகவே எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி வாழ்ந்து வந்திருப்பது இதில் புலனாகிறது.  எல்லா ஆசைகளையும் மனதிலேயே புதைத்து, சமயங்களில் வாய் வரை கேட்க வந்துவிட்டு, திட்டுவாரோ எனப் பயந்து, வார்த்தைகளை விழுங்கி, வந்த இடத்துக்கே அனுப்பி வைக்கும் சராசரி தமிழ்க் குடும்ப பெண்ணாகவே, அவருடன் வாழ்க்கை நடத்தியிருந்திருக்கிறார். 


பெண்ணீயத்தைப் போற்றுமெனக்கு (’ம்க்கும்’......என் மனைவியின் மைண்ட் வாய்ஸ்) இது கொஞ்சம் அதிர்ச்சிதான் எனினும், இப்போதுதான் என் குரு மேல், எனக்கு இன்னும் பாசம் பொங்கி வழிகிறது.  ’எனக்காக, நமக்காக, தமிழர்களுக்காக, அவர் குடும்பத்தையும் பாராமல், சதா எழுத்தாகவே வாழ்ந்து, எழுத்தாகவே மறைந்திருக்கிறார்.......என்ற காரணத்தினால் !

1986 இலிருந்துதான் சுஜாதாவின் எழுத்துக்கள்,  நண்பனால் பரிச்சயப்பட்டு, விரும்பி வாசிக்க ஆரம்பித்தேன்.  அங்கிருந்து 2007 கடைசி வரை,  ஒரே ஒரு நாள் கூட தவறவிடாமல், அவருடைய எழுத்துக்களை ஏதோ ஒரு பத்திரிக்கையின் வாயிலாகவோ,  நாவல்களாகவோ, சினிமாவின் உரையாடல் வாயிலாகவோ சுடச்சுட ருசித்திருந்திருக்கிறேன்.  2008 இல் தான் அவரை நாம் இழந்தோமெனினும், கடைசி காலத்தில் அவருக்கிருந்த உடல்சோர்வு......அவரை 2007கடைசிவரை மட்டுமே எழுதவிட்டது.

சுஜாதா சிறந்த வாசிப்பாளர்.  ஒரே சமயத்தில் பல நூல்களை, கிடைக்கும் நேரங்களில் எல்லாம் வாசித்தபடி இருந்தவர்.  இளமையை முழுக்க...முழுக்க வாசித்தலிலும், எழுதுவதிலும், வாசகர் அல்லது சக எழுத்தாளர் அல்லது சினிமா நண்பர்களுடனேயே கழித்திருக்கிறார்.

ஆனால், அவர் மத்திய அரசு வேலையிலிருந்ததால் நிரந்தர வருமானத்துக்கு குறைவிருந்திருக்காது.  என்ன......சாரு புலம்புவதைப்போல..........தமிழில், தமிழருக்காக மட்டுமே எழுதி, பிழைக்கத் தெரியாதவராய் இருந்துவிட்டார்.  அப்படியும் ஒட்டுமொத்தமாய் சொல்வதற்கில்லை.  அவருடைய பல தீவிர விசிறிகள் அப்போது சினிமாத் துறையில் இருந்த காரணத்தினால், அவர் சாகும்வரை சினிமாவில் எழுதிக் கொண்டுதானிருந்தார்.  ஆக, அவர் எழுத்து யானை மாதிரி இருந்தும் கொடுத்தது, இல்லாமலும் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது.

ரசிகர்களிடையே, அவர்களுக்காக ஓயாமல் சுவைப்பட எழுதி, இமயமலையாய் உயர்ந்தவருக்கு, வெறும் பணம், புகழ், பிரபலங்களுடனான தொடர்பு மட்டுமே சிறந்த குடும்ப வாழ்க்கையென நினைத்து, கொஞ்சம் சறுக்கியுள்ளார்.  இது பிரபலங்களுக்காக மட்டுமல்லாது எல்லோருக்குமே பொருந்தும்.   பிரபலாமாகத் துடிப்பவர்களே எச்சரிக்கை !

சரி, ஆரம்பப் பத்திக்கு வருகிறேன்.  விஜய்பாஸ்கர்,  திரு.சுந்தர ராமசாமி, எழுத்தாளர் திரு.சி.சு.செல்லப்பாவைப் பற்றி சொல்லியிருந்த 'நனவோடைக் குறிப்பு'  என்று ஒரு பத்தியை பகிர்ந்திருந்தார்.  அதில் சி.சு.செல்லப்பாவைப் பற்றி வரும் வர்னணைகள் இவை :-


சி.சு.செல்லப்பா தமிழ் இலக்கியத்துக்காக கடுமையாக பாடுபட்ட ஒர்
எழுத்தாளர்.

சொந்த செலவில் தொடர் நஷ்டத்தில் சிறு இலக்கியப் பத்திரிக்கை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.


தாமெழுதிய புத்த்கத்தை சொந்த செலவிலேயே பதிப்புத்துள்ளார்.
புத்தகங்ளை தோளில் சுமந்து சென்று, ஒவ்வொரு கல்லூரி வாசல்களிலும் நின்று கூவி விற்றுள்ளார்.

அவர் எப்போதும், பரிசையோ, நன்கொடைகளையோ ஏற்றுக் கொண்டதேயில்லை.

சொத்துக்களையெல்லாம் விற்று, ஏன் மனைவி தாலி வரை விற்று, புத்தகங்களை அச்சடித்துள்ளார், தமிழ் இலக்கியப் பத்திரிக்கையை நடத்தியிருந்திருக்கிறார்.

ஒருமுறை சி.சு.செ. கஷ்டப்படுவதை அறிந்த சு.ரா அவருக்கு பண உதவி செய்ய முற்பட்டபோது தம் நூலை சு.ரா வின் சொந்தப் பதிப்பகத்தில், பதிப்பித்து வெளியிட வேண்டுமானால் செய்யுங்கள் என்று அந்த உதவியை மறுத்துள்ளார். 

இதைப் படிக்கும்போது நம் மயிர்க்கால்கள் குத்திட்டு, ’அடடா......என்னா ஒரு தியாகம்’ என்று கண்ணீர் அல்லவா உகுத்திருக்க வேண்டும் ? மாறாக எனக்கு சுர்ர்ர் ரென்று கோபம் வந்தது.  ’அதென்னடா........குடும்பத்த காவு கொடுத்துவிட்டு, இலக்கிய மசிறுத் தொண்டென்று ?’ அவ்வளவுதான் இப்படி நான் சொன்னதும், வெட்டுக்குத்து என்று ரணகளமாகி நாறிப்போனது. 

இதை எந்த ஒரு பிரபல எழுத்தாளருக்கும் ஆதரவாக நான் சொல்லவில்லை.  இப்போதும் இங்கு தன் எழுத்தை சிலர் உயிருக்குயிராய் நேசிக்கிறார்கள், அத்தைகய எழுத்துக் காதலர்கள் சி.சு.செவைப் போலவே எழுத்துக்காக, நேரத்தையும், படிப்பையும், வேலையையும், குடும்ப வாழ்வையும், நண்பர்களையும் இழக்கத் துணிகிறார்கள்.  இப்படிபட்ட எழுத்து வெறியர்களின் ஆசை விளக்கில் எண்ணையை ஊற்றுவது போல சி.சு.செவை பற்றிய சு.ராவின் புகழ்ச்சி ஆகிவிடுமோ எனப் பயந்ததே....... நான் பொங்கினதின் காரணம் !

சுஜாதா தன் குடும்பநலன் பாராது எழுத்துக்காக உழைத்தது இனித்தது, ஆனால் அதே சி.சு.செல்லப்பா செய்தபோது கசந்ததே........

தன் பரம்பரை இருக்கும்வரை அவர்களின் வாரிசுகளுக்கு நிரந்தர வருவாய்க்கு உத்திரவாதத்தைக் கொடுத்துச் சென்றவரே இந்த ஏச்சுக்கு ஆளாகிறார்..........சி.சு.செ.வோ இருக்கும் சொத்துக்களை விற்று, இலக்கியம் வளர்க்க முயன்றதுதான் எனக்கு முரணாகப்பட்டது. 

என் முரண் தவறு.  எழுத்துக்காக எதையும் இழக்கலாமென நீங்கள் கருதினால் என் பிழை பொறுக்கவும், நன்றி !!!


                                                                   ----the end----    

2 கருத்துகள்:

  1. அருமை நண்பா. எழுத்தாளனுக்கு வாசகனுக்கும் இடையே கூட சில நாஸ்டால்ஜிக் தன்மைகள் நிரைந்தே இருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. சுந்தராமசாமி எழுதிய நினைவோடைகளில் கிருக்ஷ்ணன் நம்பி, ஜி.நாகராஜன் கட்டாயம் படியுங்கள் ராஜேந்திரன்... பதிவு நன்று...

    பதிலளிநீக்கு