A RIGHT MAN RIGHT PLACE RIGHT TIME !!!

சமீபத்தில் இதுபோல ஒரு செண்டிமெண்டை பார்த்ததாய் நினைவே இல்லை.

நேற்று சாம்பியன் லீக்ஸ் மழையால் தடைபட்டதால், அனிச்சையாய் சேனல்கள் மாற்றிக்கொண்டே வந்தவன் அனிமல் ப்ளேனட் சேனலில் நிறுத்தினேன். ‘ UN TAMED UN CUT' எனும் நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது.

வனத்தை ஒட்டியிருந்த ஒரு பெரிய சாலையைக் கடக்க முயற்சித்த பெண் மான் ஒன்று மிக வேகமாய் வந்த ஒரு வாகனத்தில் அடிபட்டு, சாலையோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

’ட்ராபிஃக் குளறுபடி எதனால் ?’ என்பதை பார்க்க வந்த அந்த விலங்கு நல ஆர்வலர், சற்றும் தாமதியாது அடிபட்ட அந்த மானுக்கு முதலுதவி தர முயல்கிறார்.   நேராக மானின் வாயை பிளந்து அவர் வாயை அப்படியே வைத்து ஊதுகிறார்.  சுவாசத்தை அதிகரித்து, இறக்கும் நிலையிலிருந்த அம் மானை, உயிர் பிழைக்க வைக்க முயற்ச்சிக்கிறார், ம்ஹும்........அந்த மான் இறந்துவிடுகிறது.  பிறகுதான் கவனிக்கிறார், அது ஒரு நிறைமாத கர்ப்பிணி.

தாய் மான் இறந்துவிட்டதால் சுவாசம் கிட்டாது, அந்த பிஞ்சும் இறந்துவிடுமென கணிக்கிறார்.  சரி, அதையாவது காப்பாற்ற முடியுமா எனப் பார்க்க, இறந்த மானின் வயிற்றைக் கிழித்து, அந்தக் குட்டியை, ரத்தச் சேற்றிலிருந்து அப்படியே லாவகமாக எடுக்கிறார்.
கருப்பபையிலிருந்து எடுக்கப்பட்ட அக்குட்டியும் சலனமற்று இருக்கிறது. 

மனம் தளராமல் உடனடியாக அதற்கும் செயற்கை சுவாசம் தர, தன் வாயை அக் குட்டி மானின் வாயோடு வைத்து (மான் கன்று உடல் முழுக்க கொழ, கொழவென ஒரு சவ்வுப் படலமும், அவசர ஆபரேஷன் என்பதால் ரத்தப் பூச்சுமாய் இருந்தது)
தொடர்ந்து ஊதுகிறார்.  மீண்டும், மீண்டும் ஊதுகிறார்.  ஓரிருவர் அவருக்காக சாலையோரங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்தி, ஏதேனும் உதவி தேவைப்படுமா என விசாரிக்கின்றனர்.

அடடா........கிட்டத்தட்ட மரணத்தை தழுவியிருந்த அந்த மான் உடல் சிலிர்க்கிறது.  லேசே வால் ஆட, காது மடல் அசைய, கண் விழிக்கிறது அந்த மான் குட்டி.  இறந்த அதன் தாயிடமிருந்து கசியும் சீம் பாலை பாட்டில் மூடியில் சேகரித்து, குட்டிக்கு புகட்டுகிறார் 

சுற்றி பார்ப்பவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.  குட்டிக்கு உடனடியாக கதகதப்பு தேவைப்படுமென்பதால் அதை காரை மூட உதவும் ப்ளாஸ்டிக் கவர் கொண்டு மூடி, அப்படியே அள்ளி தன் நெஞ்சோடு அணைக்கிறார்.  தன் நெஞ்சுச் சூட்டை அக் குட்டிக்கு கொடுத்தவாறே காரில் ஏறி, கால்நடை மருத்துவமனை கொண்டுபோகிறார்.

அந்த இடத்தில் இருந்த சக பயணி சொன்ன வரிதான் இக் கட்டூரையின் தலைப்பு.  ஒரு நிஜ ஹீரோவைக் கண்ட திருப்தியுடன் உறங்கச் சென்றேன் !!!

                                        
                                                            --- முற்றும் ---






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!