குயிலினிது குழலினிதென்பார்.......

பெருந்திடுக்கிடலோடு
விழித்தெழுந்தமர்ந்தேன்......
தீங்கனவுமில்லை
எவரும் எழுப்பியிருக்கவுமில்லை.......
க்ரிக் க்ரிக் க்ரிக் க்ரிக்
ரீங்காரமட்டும் எங்கோரத்திலிருந்து
கசிந்தோடிக் கொண்டிருந்தது !


நா வறண்டு
குளிர்ந்த நீர்க் கோர.......
அடுக்களை சென்று
ஸ்விட்சைப் போட்டேன்......
வெள்ளமென வெளிச்சம் பாய
பாய்ந்து பதுங்கின
கரப்பான்கள் ஏழெட்டு !



தேகம் கூசி
அருவெறுப்பில் சிலிர்த்தேன்......
இவ்வுலகில் வெறுக்கப்படும்
தலையாய ஜந்தல்லவா அது......
தாகத்தை தவிக்க விட்டுவிட்டு
பூச்சிக்கொல்லி திரவத்தை
பார்வையால் துழாவினேன் !


மழலைப்பருவத்தில் பாடப்புத்தகத்தில்
பெரிதாய் வரைந்திருந்ததை தவறாய் ஊகித்து.......
தேனீக்கள் எங்கிருக்கும் என்ற கேள்விக்கு
'கக்கூஸில்' என்று பதிலளித்த.....
மீரான்தான் கற்றுக்கொடுத்தான்
எப்படியெல்லாம் துன்புறுத்திக் கொல்லலாம்
கரப்பான்களை என்று !



என்னை ஓர் அறையில்
பூட்டிவைத்து......
ஒரு பறக்கும் கரப்பானை விட்டுவிட்டால்
பயத்தில் மரணித்தே விடுவேன்......
அதன் எண்ணற்ற கால்களும்
கால்கள் முழுக்க முடிகளும்
அரையடி மீசையும் ச்சீ ச்சீ !


ஆத்திரம் தீருமட்டும்
தெளித்தவாறே இருந்தேன்......
சிக்கிய ஒன்றிரண்டு
கரப்பான்களின் மேல் விஷத்தை......
மல்லாக்க புரண்டு
அதுகள் துடித்ததை பார்த்தபின்னே
கிட்டியது ஆனந்தமல்ல பேரானந்தம் !



படுக்கையில் துயில
முயல்கையில் கவனித்தேன்......
அந்தச்சத்தம் நின்று போயிருந்தது
நிசப்த இரவின் அடையாளச்சின்னமல்லவா அது.....
அதையுமா கொன்றேனென்று
மனம் வலித்து
நித்திரை மறந்தது !


பெருந்திடுக்கிடலோடு
விழித்தெழுந்தமர்ந்தேன்......
க்ரிக் க்ரிக் க்ரிக் க்ரிக்
காதில் தேனாய் பாய்ந்த........
அந்த ஓசைக்குப் பின்
இனி நிம்மதியாய்
கண்ணயர்வேன் !



                                                                - நன்றி - 

  









 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!