இந்தக் கதை எழுதியதற்கு நான் வெட்கப்படுகிறேன். மன்னித்து விடுங்கள் :-((

ஆக்ரோஷத்துடன் இருந்த அந்த இளைஞர்கள் கூட்டத்தைப் பார்க்கும்போதே மனதுள் கொஞ்சம் கிலி பரவியது.  இத்தனை நாட்களுக்குப் பிறகும் இதெப்படி இந்த நெருப்பு இன்னும் அணையாமல் இருக்கிறது என அர்விந்த் ரதோர் ஆச்சர்யப்பட்டான்.  கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடியப் போகிறது, அக்கோரச் சம்பவம் நடந்து. 

நேர்மையான, துணிவான அதிகாரிதான் இந்தக் கொடூரத்தை விசாரிக்கவேண்டும், இதற்கு சரியான ஆள் இவர்தான் என்று பலரின் ஏகோபித்த ஆதரவுடன், கடைசியாய் அர்விந்த் தேர்ந்தெடுக்கப்பட்டான். 
அதன்படியே, அர்விந்த் மிகச் சரியான கோணத்தில், எந்த அரசியல் இடையூறுமின்றி, சாட்சிகளை சரியாகச் சேர்த்து, அந்தக் கொடுமைக்காரர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை அடுக்கி வைத்திருந்தான். 

நாடு முழுக்க பெருங்கோபத்தை கிளறி விட்ட இந்த பாலியல் வன்முறை வழக்கு, விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருவதால், இன்னும் ஓரிரு வாரத்தில் தீர்ப்பு வரும் நிலையை எய்தியுள்ளது.  நிச்சயம் ஒரு குற்றவாளி கூட தப்ப முடியாத அளவு, வலையைப் பின்னியிருந்தான் அர்விந்த்.  செண்டிமெண்ட் கேஸ் வேறு என்பதால் அதிகபட்ச தண்டனையை பெறுவார்கள் என அர்விந்த் உறுதிபட இருந்தான்.  ஆனால், ஊர்மிளாவின் கேள்வி மட்டும் உள்நெஞ்சைக் குடைந்துக் கொண்டே இருந்தது.

"ஜி, அவனுங்கள தூக்குல போடுவாங்கல்ல ?"

"இரண்டு ஆயுள், மூன்று ஆயள் வரை கூட கிடைக்கலாம், தூக்குக்கு வழியில்லம்மா"

"ம்க்கும், அதுக்கு அவனுங்கள வெளியவே
விட்டுடலாம்"

"ஹாஹா, காமன் இண்டியன் வுமன், ஒன்னு தெரியுமா ஊர்மி, என் விசாரணையில அவுங்க எவனையுமே ஒரு அடி கூட அடிக்கல, என் இதுவரை போலிஸ் லைப்ல இவ்வளவு ஒத்துழைச்ச கிரிமினல்ச பாத்ததே இல்ல !   "கதறி அழுவுறான், 'விட்டுலாம் அண்ணான்னு கெஞ்சினேன், என்னையே அடிச்சதுமட்டுமில்லாம, நீதாண்டா மொதல்ல செய்யனும், அப்பத்தான் காட்டிக் கொடுக்கமாட்டன்னு' சொல்லி, வாய்ல இன்னும் கொஞ்சம் ஊத்தி விட்டிருக்கானுங்க, அவன் சொல்றது உண்மையாடான்னு கேட்டா, 'ஆமா, சாப் போதைல என்ன காரியம் செய்யுறோம்னு புரியாமலேயே, இந்தப் பாவத்த செஞ்சிட்டோம், என்ன அடிச்சே கொல்லுங்க'ன்றான்."

"அவங்களுக்காக நாங்களே வக்கீல்கள ஏற்பாடு பண்ணோம், இந்த மாநகர்ல ஒரு வக்கீல் கூட அவுங்களுக்காக வாதாட விரும்பல, கொஞ்சம் சந்தோஷமா இருந்தாலும், இவனுங்களே பெரிய அரசியல் இல்ல பணபின்புலம் உள்ள ஆளுங்களா இருந்தா இது சாத்தியமான்னு தெரில"

"என்ன, நம்ம மதராஸ்ல இருந்தோமே, அப்ப  இதுமாதிரி அங்க நடந்திருந்தா மொத்த பேரையும் எதாவது ஒரு சாக்கு சொல்லி போட்டுத் தள்ளியிருப்போம்"

"பேங்க் லூட்டர வேளச்சேரில போட்டீங்களே, அது மாதிரியா......?"

"ஹஹா...ஊர்மி செம்ம ஞாபகசக்தி உனக்கு, ஆனா ஒன்னு தெரியுமா, ஆக்ச்வலா அன்னிக்கு அவுனுங்கள பொறி வச்சி, குண்டுகட்டா அமுக்கிட்டோம், அதுல ஒருத்தன் சமையக்காரன்,  ரொட்டி சுடுறத தவிர வேறெதுவும் தெரியாதவன், கொடுமை என்னன்னா அன்னிக்கு காலைலதான் கயால இருந்து வந்திருக்கான், வேன்ல கையக்கட்டி தூக்கீட்டு ஹெட்குவார்டர்ஸ் போயிட்டு இருந்தோம், 'அவ்வளவு பேரையும் போடாம, இங்க எதுக்குய்யா கூட்டிட்டு வரீங்கன்னு' திடீர்ன்னு ஒரு ஆண்டிக்ளைமேக்ஸ், திரும்ப அந்த பிளாட் போயி நாலுபேர இதோ இந்தக் கையால சுட்டேன், ரொட்டி சுடுறவன சுட மனம் ஒப்பல, வேற ஒருத்தர்தான் போட்டாரு, அப்பப்பா பாராட்டவிட 'கொலைகாரரே' ன்னு எவ்வளவு எதிர்ப்பு தெரியுமா ?  என்ன, இன்னிக்கு நிம்மதியா இருக்காங்க, இங்க அந்த வேலையெல்லாம் மிலிடரி மட்டும்தான் செய்ய முடியும், சரி தூங்கலாம்" 

ஒவ்வொருமுறையும் இந்தக் குற்றவாளிகளை விரைவுக் கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் போதெல்லாம், கோர்ட்டுக்கு வெளியில்
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பதாகைகளை ஏந்தி, அவர்களை 'தூக்கில் போடு', 'கல்லால் அடித்துக்கொல்' கோஷமிடுவது நாளுக்கு நாள் அதிகமானதே அன்றி குறையவே இல்லை.  நாளை குறுக்கு விசாரணைக்கு கொண்டுசெல்ல வேண்டும், சிரமமில்லாமல் அவர்களை கோர்ட்டுக்குள் அழைத்துச் செல்ல, அர்விந்த் ஒரு மாஸ்டர் ப்ளான் வைத்திருந்தான்.  அது சரியாய் செயல்பட வேண்டுமே என்ற கவலையுடன் தூங்கிப் போனான்.  

திகார் சிறையிலிருந்து வரும்வழியில், வழக்கமாக அவர்களைக் கொண்டு செல்லும் அந்தக் கவசவாகனத்தை தவிர்த்து, ஒரு டெம்போ டிராவல்லரில் குற்றவாளிகள் அனைவரையும் மாற்றி ஏற்றிவிடப்பட்டனர்.  பாதுகாவலர்களில் பெரும்பாலோர் அந்தக் கவசவாகனத்தில் அமர்ந்து பின்தொடர, அர்விந்த், மற்றும் அவனுடைய இரு
மெய்காப்பாளர்கள் மட்டும் அந்த வேனில் சென்றனர். 

நகருக்குள் நுழையும்போது, அந்தக் கவச வாகனுத்துக்கும், குற்றவாளிகளின் வேனுக்குமிடையேயான இடைவெளி அதிகரித்தது.  அர்விந்த் வாக்கிடாக்கியில் கவசவாகன ஓட்டுனரை திட்டப்படி,  கோர்ட் முன்வாசல் வழியாக வரச் சொன்னான். 

அந்தக் கவசவாகனத்தைச் சுற்றி, ராட்சத சங்கிலியாய் கைகோர்த்து பாதுகாப்பு வளையமாய் தில்லி மாநகரக்காவலர்கள் அரண் அமைத்தனர்.  கூட்டம் நெருக்கியடித்து அந்த வேனை முற்றுகையிடத் துடித்துக் கொண்டிருந்தது.  ஆனால், விரைவுக் கோர்ட் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே அமைதியாய் குறுக்கு விசாரணை நடந்துக் கொண்டிருந்ததை, அவர்கள் அறிந்திருக்கவில்லை. 

திகார் செல்ல, கோர்ட்டின் பின்புறமிருந்த ஒரு மறைவான சந்தில் இருந்து,  அந்த வேன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.  அர்விந்த் சிகரெட் கரைவதற்க்காக, வேன் ட்ரைவர் காத்திருந்தார்.   திடீரென ஒரு சலசலப்பு, கையிலிருந்த கறுப்புக் கோட்டை வைத்து மறைத்திருந்த ஆயுதங்களை கையிலேந்தி, இருபதுக்கும் மேற்பட்ட ஒரு கும்பல் அந்த வேனை நோக்கி ஒடி வந்தது.  அர்விந்த் சுதாரிப்பதற்குள், ஒருவன் அர்விந்த் கழுத்தில் கூரிய வாளை வைத்து, வேன் ட்ரைவரையும், பாதுகாவலர்களையும், முன்புறம் செல்லுமாறு எச்சரித்தது. 

அவர்களை நெட்டித் தள்ளிச் சென்ற அக்கும்பல், ஒரு கழிவறையில் தள்ளி அடைத்தது.  இவற்றையெல்லாம், உற்று நோக்கியவாறே இருந்த வாளைக் கையில் வைத்திருந்தவன்,  அர்விந்தைப் பார்த்து "முஜே மாப் கீஜியே சாப்" என்று பக்கத்தில் இருந்தவனுக்கு கண்ணைக் காட்ட, அவன் அர்விந்த் தலையில், தன் கையில் வைத்திருந்த பேஸ்பால் மட்டையால் அடித்தான்.  பிறகு, அந்தக்கும்பல் பீப்பாயில் வைத்திருந்த பெட்ரோலை  வேன் முழுக்கத் தெளித்து,  மிச்சமிருந்ததை வேனுக்கு அடியில் ஊற்றியது.  அதுவரைதான் அர்விந்த் பார்த்தது. 

அதற்குள் கழிவறையில் சிக்கியவர்கள் கொடுத்த தகவலால், உடனடியாக பாதுகாப்புப் படை பின்புறம் வந்து சேர்ந்தது.  தீ அணைப்பு வாகனமும் ஏற்கனவே அங்கிருந்ததால், நல்லவேளையாக அந்த வேன் முழுதாய் எரிந்து விடாமல் அணைக்கப்பட்டது.  ஆனால், வேனில் இருந்த குற்றவாளிகள் அனைவருக்குமே கடுமையான தீக்காயம் ஏற்பட்டிருந்தது.  அவர்களுடைய ஓலங்களை எல்லா டிவி சேனல்களும் பதிவு செய்தன. 

அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்றாலும் நாற்பது முதல் ஐம்பது சதவிகிதம் தீப்புண் ஏற்பட்டிருப்பதால், பாதிப்பு அதிகம்தான் என அரசு மருத்துவமனையின் டீன் எல்லோருக்கும் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.   

அதேநேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அர்விந்த் நெற்றியில் 'ஷுக்ரியாஜி' என்று புன்னகை ததும்பி வழிய, முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.

                                             --  முடிந்தது (முடிந்ததா ?)  --


  


         









          





  

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!