நான் ரசித்த ஹாலிவுட்(பழைய) படம் !!!

போன சனி இரவன்று விஜய் டிவியில் ஓர் அனிமேஷன் படம்.  அடடா......ஒரே ஒரு வினாடி கூட கண்களை திரையில் இருந்து அகற்றவே முடியவில்லை. படப்பெயர்  'RATATOUILLE' 
என்ன  அற்புதமான உழைப்பு ?  ஒரு புத்திசாலி மூஞ்சூறு எலி, தன்னுடைய அதிசிறந்த மோப்பத் திறமையால் எலிகள் கூட்டத்தின் மத்தியில் பெரும் புகழ் பெறுகிறது.   ஆனால், அந்த எலிக்கு தன்னுடைய கூட்டம் பரம்பரை பரம்பரையாக மனிதனிடம் திருடியே பிழைப்பு நடத்துகிறதே என்ற ஒரு வருத்தமுண்டு.  எனவே உழைத்துச் சாப்பிட வேண்டும் என ஓர் ஆவல் அதன் மனதில் உருவாகிறது.
இருந்தாலும் வயிறு இருக்கிறதே......எனவே வழக்கமாய்த் திருடும் வீட்டுக்குச் செல்கிறது.  டிவியில் வரும் ஒரு சமையல் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டே உணவுகளைத் திருடித் தின்கிறது.   அந்த சமையல் நிகழ்ச்சியில் வரும் 'Mr.குட்ஸ்வ்'  எனும் சமையல் கலைஞரின் பேச்சில் மயங்குகிறது.  அவர் சொல்கிறார், 'எவர் வேண்டுமானாலும் சுவையாகச் சமைக்கலாம்' , இதுபோக அருகில் அவருடைய சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பார்க்கிறது.    

தினமும் சரியாய் அவர் நிகழ்ச்சி டிவியில் வரும் பார்த்து அந்த வீடு செல்கிறது.  அவருடைய பல டிப்ஸ்களை உள்வாங்குகிறது.   அந்த புத்தகத்தைப் படித்தும் (!) எப்படி சுவையாக, அனுபவித்துச் சாப்பிடுவது என்பது போன்ற நாகரீகங்களைக் கற்றுக் கொள்கிறது.  அழுகிய பண்டங்களைத் குப்பையில் தேடித் தின்னும் தன் அண்ணனுக்கு, சீஸ் தடவிய காளானை சூட்டில் வேகவைத்து தின்னக் கொடுக்கிறது.  அவுதி அவுதி என்று சாப்பிடாமல்,  ஆற, அமர ருசித்துச் சாப்பிட கற்றுக்கொடுத்து அந்த நாளை பொன்னாளாக்குகிறது.

அழகாகச் செல்லும் அந்த எலியின் வாழ்வில் வந்து விழுகிறது இடி.  'ஒரு பிரபல விமர்சகர் தம் உணவைப் பற்றி குறை சொல்லி நாளிதழில் கட்டூரை எழுதிவிட்டாரே' என்று அந்த சமையல் கலைஞர், நெஞ்சு வெடித்து இறந்து போகிறார் என செய்தி வருகிறது டிவியில்.  பட்ட காலிலேயே படும் என்பது போல இது திருடித் தின்னுவதை அந்த வீட்டு கிழவியும் பார்த்து விடுகிறாள்.  இனி இந்த வீடு வரமுடியாது என யூகித்த அந்த எலி, 'குட்ஸ்வ்வின்' புத்தகத்தை தலையில் தூக்கிக் கொண்டு ஓடுகிறது. 

கிழவியோ விடாமல் அந்த மொத்த எலிக் கும்பலையே துரத்துகிறாள்.  இந்தக் கசமுசாவில் நம்ம எலி தம் குடும்பத்தை விட்டு பிரிகிறது.  பொங்கி ஓடும் ஓர் ஆறில், அதன் போக்கில் அடித்துச் செல்லப்படுகிறது.  கண்விழித்துப் பார்த்தால் அது பாரீஸ் நகரம்,  நம்ம குட்ஸ்வ்வின் ரெஸ்டாரன்ட் வாசல்.  நம்ம எலியாருக்கு பழம் நழுவி பாலில் வீழ்ந்தது போலக் குஷியாகிறார்.  அந்நேரம் பார்த்து 'குடியின்' ஆவி அங்கு பிரசன்னமாகிறது (உண்மையில் நம்ம எலியின் மனசாட்சி) தான் திடீரென இறந்துபோனதால் வாரிசில்லாத தம்முடைய ரெஸ்டாரென்ட் பாழ்படுகிறதே என ஆவி வருந்துகிறது,  'நீதான் என் சிஷ்யன் ஆயிற்றே, என் பெயரைக் காப்பாற்று' என்று கோரிக்கை வைக்கிறது (இதுவும் நம்ம எலியாரின் கற்பனையே)

அந்த நேரம் பார்த்து அந்த ஹோட்டலின் ஒரு துப்புரவுத் தொழிலாளி, கொதித்துக் கொண்டிருக்கும் ஒரு சூப்பில் தன்னுடைய கனவான 'சமையல் கலைஞன்' ஆசையை நிறைவேற்றிக் கொள்ள யாரும் அறியா வண்ணம் ஏதேதோ மசாலாப் பொடிகளைக் கொட்டுகிறான்.  இதைக் காணும் நம்ம எலியாரும், ஆவியாரும் பதறுகிறார்கள்.  ஏனென்றால் அவையெல்லாம் தப்பான பார்முலா.      

இதுதான் சரியான சமயம், அவனுக்கு உதவி உன் திறமையைக் காட்டு என்று 'குட்ஸ்வ்' ஆவி சொல்கிறது.  இடையில் அந்த சூப்பைச் சுவைக்கும் அந்தப்பையன் உடனடியாக வாந்தி எடுக்கிறான்.  அவ்வளவு கேவலச்சுவையாம்.  துடப்பத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போகிறான்.   நம்மாளு களத்தில் குதித்து தாம் கேட்ட, படித்த உத்திகளைப் பயன்படுத்தி, சேர்க்க வேண்டிய மசாலா, புதினா, பனீர், சீஸ்களைச் சேர்த்து ஒரு புதிய சூப்பை அறிமுகப்படுத்தி, சுவையைக் கூட்டி வைத்துவிடுகிறது.

ஓடிப்போனவன் மனசு கேட்காமல், மீண்டும் தான் கெடுத்த சூப்பை பார்க்க ஹோட்டல் கிச்சனுக்குள் நுழைகிறான்.  அங்கு எலி சூப் பானை மேல் நின்று சமையல் செய்வதை கண்டுபிடித்து அதிர்ச்சியுறும் வேளையில், வில்லன் அதாவது அந்த ஹோட்டலின் தற்காலிக மேலதிகாரி, அல்லது தலைமை சமையல்காரர் உள்ளே வருகிறார்.  'கிளின் பண்றவனுக்கு சமயக்கட்டுல என்னவே வேல' ?  சூப் பான கிட்ட நின்னு என்ன பண்ணுற ?' என்று எகிறுகிறார்.  அவன் தான் செய்த குளறுபடியைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த சூப்பை கஸ்டமர்களுக்கு சர்வ் செய்து விடுகிறார்கள்.

'செத்தான்டா குட்ஸ்வ்' என அனைவரும் தலையில் கைவைத்து உட்கார,   'சூப் பிரமாதம்' என ஆர்டர் மேல் ஆர்டராக  வந்து குவிகிறது.  அதன் பிறகே சமையல்கட்டில் பிறரும் அந்த சூப்பைச் சுவைக்கின்றனர்.  செத்துப்போன குட்ஸ்வ் பண்ணும் சூப்பை விடவும் சுவையாக உள்ளதே என வியக்கின்றனர். 
தலைவருக்கு மட்டும் நம்பிக்கை வரவில்லை.  பையன் ஏதோ  தில்லுமுல்லு செய்கிறான் என நம்புகிறார்.  'நீ நாளை, என் முன்னே தனியாக இதை செய்து காட்டு' எனக் கட்டளை இடுகிறார்.  அவருக்கு ஒரு பயம், இவன் குட்ஸ்வ்வின் வாரிசாக இருப்பானோ என்று.  ஏனெனில் குட்ஸ்வ்வின் திடீர் மரணத்தால் எப்போதோ தொலைந்துப் போன அவர் வாரிசு குறிப்பிட்ட காலத்துக்குள் வராவிட்டால், இந்த ஹோட்டல் அந்த வில்லருக்குச் சொந்தமாகிவிடும்.  இது உயில் சாசன அறிவிப்பு. 

ஆனால், அது நடந்துவிடுகிறது.... எது எலி எல்லோர் முன்னாலும் சொடேர் என்று தரையில் விழுகிறது.  அலறுகிறார்கள். ஏன் ? பாரிஸ் உணவகத்தில் எலியைக் கண்டதாக புகார் செய்தாலே போதும், அங்கு உணவகத்தை சீல் வைத்து விடுவார்கள்.  ஆனால், அந்தப் பையன் சாதுர்யமாக அந்த எலியைப் பிடித்து விடுகிறான்.  அதை வெளியே எடுத்துச் சென்று கொல்லுமாறு வில்லர் கட்டளை இடுகிறார்.

எலியைக் கொல்ல எடுத்துச் செல்லும் அந்தப் பணியாள் பையன், அந்த எலியின் சாமர்த்தியத்தால்தான் தான் பிழைத்ததாக, நம்பாமல் ஆனால்  நம்புகிறான்.  அதனிடமே வேறு பேசுகிறான்.  அவன் பேசுவதைப் புரிந்த அது தலை வேறு ஆட்டுகிறது.  அவனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, ‘என்ன நான் பேசுவது உனக்குப் புரிகிறதா ?’  பிறகு அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது.  மறுநாள் நம் வில்லர் முன்னால் செய்யப்போகும் சூப்புக்கு எலியார் நம்ம பையனுக்கு உதவுவதாய் வாக்கு கொடுக்கிறார்.

எலி, அவன் தொப்பிக்குள் ஒளிந்துக் கொண்டு, அவன் தலை முடியை பிடித்துக் கொண்டு, மோப்பசக்தி திறனுடன், அவனை இயக்குவதன் மூலம் அவன் சரியான கலவைகளைத் தேர்ந்தெடுத்து, இம்முறையும் வெற்றிகரமாக சூப் செய்து விடுகிறான்.  வில்லனுக்கு பெருத்த ஏமாற்றம்,  இதில் ஏதோ சதியுள்ளது என உணர்கிறார், ஆனால் யார் அந்த சதிக்கு உடந்தை என்பது தெரியவில்லை.  கிச்சனில் அவனுக்கு சமையல் மாஸ்டராய் பதவி உயர்வு கிட்டுகிறது.  அவனுக்கு பயிற்சிகள் கொடுக்க அந்த ஹோட்டலின் பிரபல் சமையல் பெண் மாஸ்டர் நியமிக்கப் படுகிறார்.  அந்தம்மா ரொம்போ ஸ்ட்ரிக்ட்.  வழிய எல்லாம் கூடாது.  சுத்தமாகவும், பெர்பெக்ட் ஆகவும் இருக்க வேண்டும். 

இவன்தான் ஒரு வெத்துவேட்டாயிற்றே, ஒருகட்டத்தில் அந்தப் பெண் வெறுத்தேப் போகிறாள்.  இருந்தும் மறைவாய் இருந்து எலி செய்யும் உதவிகளால் சிறிது சிறிதாக அவள் மனத்தைக் கவர்கிறான்.  திடீரென கொள்ளைக் கூட்ட பாஸ் போல ஒருவரைக் காட்டுகிறார்கள்.  அவர்,  உதவியாளரிடம், “அதெப்படி இன்னும் இந்த குட்ஸ்வ் ரெஸ்டாரென்ட் விளம்பம் வருகிறது ?  இன்னுமா அந்த ஹோட்டலுக்கு மக்கள் சாப்பிட வருகிறார்கள் ?  நான் விமர்சித்து எழுதி கிழித்து தோரணம் கட்டிய பின் ஒரு நிறுவனம் இதுபோல் எழுந்ததே இல்லையே, என்ன கோல்மால்  ?” என்று வினவுகிறார்.  பணியாள் ஒருவனின் மாயஜால ருசி அந்த ஹோட்டலின் புகழைக் கூட்டி விட்டதைச் சொல்கிறார் உதவியாளர்.  ‘வைக்கிறேண்டா ஒனக்கு டெஸ்ட்டு’ என்று களத்தில் குதிக்கிறார் அந்த விமர்சக எழுத்தாளர்.  இவர்தான் முன்பு கட்டூரை எழுதி, குட்ஸ்வ் சாவுக்குக் காரணமானவர். 

இப்போது அந்த எலி சுதந்திரமாக வாழுகிறது.  பணியாள் பையனிடம் (இனி ஹீரோ) மறைமுக உதவியாளர் அல்லது ஆலோசகர் பதவியில் இருப்பதால் அவனுடைய வீட்டில் மற்றும் யாருமறியா வண்ணம் ஹோட்டலில் சொகுசு வாழ்க்கை கிட்டுகிறது.  இது உழைப்பால் வரும் பலன் என்பதில் அந்த எலிக்கு பூரணத் திருப்தி.  தன்னுடைய இனத்தின் பழிக் கறையை தாம் அழித்துவிட்டதாக பெருமிதம் கொள்கிறது.  அதற்க்கும் வருகிறது ஆப்பு.

தற்செயலாக நம்ம எலியாரின் அண்ணன் பாரிஸ் நகர குப்பைத் தொட்டியில் மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்துவிடுகிறது.  பிரிந்த அண்ணனைச் சந்தித்த சந்தோஷத்தில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தோடுகிறது.  எப்போதும் போலவே தம் அண்ணன் குப்பைத் தொட்டி பொறுக்குகிறானே எனக் கடிந்து அண்ணனுக்கு சுவை மிகுந்த பலகாரங்களை ஹோட்டலில் இருந்து எடுத்துக் கொடுக்கிறது. பிரசன்னமாகும் ‘குட்ஸ்வ் ஆவி’  'என்ன மீண்டும் திருடுகிறாய் ?  நீ திருடினால் இனி நான் வரமாட்டேன்' எனப் பயம்காட்டுகிறது. எலியார் 'ஒருமுறைதானே'......என்று அந்த ஆவியிடம் (மனசாட்சி) சமாளிக்கிறது.

பிறகு, அண்ணன்காரன் தம் தம்பியை பிரிந்த குடும்பத்தாரிடம் அழைத்துச் செல்கிறது.  ‘ஹே, மூளக்காரன் திரும்ப வந்துட்டான்’ என்று அந்தக் கும்பல் உற்சாகமாகிறது.  தந்தை தம்முடனேயே தங்கிவிடுமாறு பையனைக் கேட்கிறது.  தாம் திருடி வாழ விரும்பவில்லை என்றும் ஒரு நல்ல வேலையில் இருப்பதாகவும், சம்பாதாதித்துதான் இனி வாழப் போவதாகவும் கூறிவிடுகிறது.  நம்மை விதம்விதமாய்க் கொன்று குவிக்க தொடர்ந்து ஆயுதங்கள் கண்டுபிடிக்கும் மனிதப் பதர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், அவர்களை முழுதாய் நம்பிவிட வேண்டாமென்றும் தந்தையார் எலி மகனுக்கு அறிவுரை கூறுகிறது.  அதை புறக்கணித்து எலியார் மீண்டும் வேலைக்குத் திரும்புகிறார்.

சில காலங்களுக்குப் பின், எலி தம்மை முழுமையாக ஆள்கிறதே என்று பல சுவைகளுக்குப் பிரபலமான நம் ஹீரோவுக்கு சலிப்பு வருகிறது. இருக்காதே பின்னே ?  சமையலில் உதவ பிரபலமான காதலி வேறு வந்துவிட்டாள்.  பழையதை அல்லது நன்றியை மறப்பதுதானே மனிதப் பயலுவள் காலம்காலமாய் செய்து வருவது ?  இங்கும் அவ்வாறே சிற்சில பூசல்கள், மனக்கசப்புகள்.  நம்ம தலைமை சமையல் வில்லரை மறந்தேப் போனோம், சரியாய் இப்போது உள்ளே வருகிறார்.  எலியுடன் ஹீரோ பேசுவதை பார்த்துவிடுகிறார்.  ஆஹா, எல்லாவற்றுக்கும் காரணம் இந்த எலியா ?  நம்ம கனவில் மண் போட்டது இந்த மூஞ்சூரா ?  இது இல்லையென்றால் இவன் செல்லாக்காசா ?  என்று பல உண்மைகளை கிரகிக்கிறார். 
நம்ம விமர்சக எழுத்தாளர் வில்லரும் வந்து, எனக்கு பிடித்தமான ஒரு புது டிஷ்ஷை செய்துக் காட்டி உன் சாமர்த்தியத்தை நிருபி என 'குட்ஸ்வ் ரெஸ்டாரென்ட்' வந்து நிற்கிறார்.  இந்தக் களேபரத்தில் குட்ஸ்வ்வின் குடும்ப வக்கீல் DNA டெஸ்ட்டில் நம்ம ஹீரோதான் குட்ஸ்வ்வின் காணாமல் போன வாரிசு என கண்டறிந்து ஹோட்டல் நிர்வாகி அதான் நம்ம சமையல் வில்லரிடம் உயிலைக் கொடுக்கிறார்.  இதை மறைத்து வைக்கும் வில்லர், ஒருவேளை, விமர்சகரின் டெஸ்டில் இவன் தோற்று விட்டால், ஹீரோவை வெளியேற்றி விட்டு, குட்ஸ்வ்வின் சொத்துக்களை முழுதாக ஆட்டையை போட்டுவிடலாம் என்று சதி புரிகிறார். 
எலியாரின் அண்ணன்காரனுக்கு ஹோட்டல் பண்டத்தைக் கொடுத்து ருசி காட்டிவிட்டாரல்லவா நம்ம ஆளு, அந்த லகுடபாண்டி அதை தன் நபர்களுக்கும், உறவினர்களுக்கும் பெருமையாய்ச் சொல்லித் தொலைக்க, தமக்கும் அதுபோல ‘உன் தம்பியை கொடுக்கச் சொல்லு’ என்று ஒரு பெரிய எலிக்கும்பல் ஹோட்டல் வாசலின் ரகசியமான இடத்திற்கு வந்து நின்றுக் கொண்டு கோரிக்கை விடுக்கின்றன.  தலையில் அடித்துக் கொள்ளும் நம்மாளு ‘இதென்ன அசிங்கம்’ என்று அண்ணனைக் கடிந்துக் கொள்கிறது.  ‘நான் வாக்குக் கொடுத்திட்டேம்பா’ என்று நாயக்கர் போல அண்ணன் சொல்ல, வேறு வழியின்றி மீண்டும் ஹோட்டல் பண்டங்களை எடுக்கிறது.  இம்முறை தோன்றும் ஆவி 'உங்கள் இனத்தை திருத்தவே முடியாது என்று இழிவு படுத்திவிட்டு, இனி எப்போதும் உன் முகத்தில் முழிக்க மாட்டேன்' என கூறிவிட்டு மறைந்து விடுகிறது.

என்ன கொடுமை என்றால் ஒவ்வொரு எலியும் இந்த ஹோட்டல் ருசியில் மயங்கி தினமும் ஒரு கூட்டத்தைத் கூட்டிக்கொண்டு வந்து வாசலில் நிற்பது வழக்கமாகிப் போனது.  இது ஒருநாள் நம்ம ஹீரோவுக்கும் தெரியவருகிறது.  அசிங்கப்படுத்தி நம்மாளை  வெளியேற்றிவிடுகிறான் அந்த நன்றி கெட்ட ஹீரோ.  வெந்து, நொந்து வெளியேறிய சமயம் பார்த்து குட்டி வில்லர், அந்த எலியை பொறி வைத்து பிடித்து விடுகிறார். 

பெரிய வில்லர் குறித்த நாள் வருகிறது.  இன்று ஒரு வித்தியாசமான டிஷ்ஷை ஹீரோ செய்து காட்ட வேண்டும்.  அதை ருசி பார்த்துவிட்டு அவர் எழுதும் கட்டுரையை வாசிக்க பல லட்சம் மக்கள் காத்திருக்கிறார்கள்.  தவறாக அவர் எழுதிவிட்டால் போச்சு, அது லீ மெரிடியன் ஆனாலும் சரி, பார்க் ஷரட்டன் ஆனாலும் சரி இழுத்து மூட வேண்டியதுதான், அவ்ளோவ் பெரிய அப்பாடக்கராம் அவர்.  எலி வேறு இல்லை.  அதாவது தாம் காட்டிய கோபத்தில் அது எங்கோ போய்விட்டதாய் ஹீரோ கருதுகிறான்.  ஆனால் அதுவோ வில்லன் வைத்த கூண்டில் இருந்தது.  

அண்ணன் கண் முன்னர்தான் தம்பி பிடிபட்டிருந்தான், எனவே குடும்பமே தம்பிக்கு உதவ ஓடி வருகிறது.  தந்தையின் அனுபவ உதவியில் விடுதலையும் கிட்டுகிறது. மீண்டும் யாருமறியா வண்ணம் ஹோட்டலுக்குத் திரும்புகிறது.  தற்செயலாக ஹோட்டல் அலுவலக அறையிலுள்ள வில்லர் மேஜை ட்ராயரில் ஒளிந்து கொள்ள நேர்கிறது. அந்த ட்ராயரில்தான் வக்கீல் கொடுத்த ஹீரோதான் வாரிசுஎன்ற உயில் உள்ளது.  இதைப் படித்து புரிந்து கொண்ட நம்ம எலியார் அதைத் தூக்கிக் கொண்டு ஹீரோவிடம் ஒப்படைக்கிறது.

ஒருவழியாய் குட்டி வில்லர் தொந்தரவு இத்துடன் முடிகிறது.  பெரிய வில்லர் ?  ஹீரோ மனம் திருந்துகிறார்.  தன்னுடைய வெற்றிக்கு இந்த எலிதான் காரணம் என ஹீரோயினடமும், பிற ஊழியர்களிடமும் சொல்லி தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்கிறார்.  எலி என்றாலே வெறுக்கும் ஹோட்டல்காரர்கள் ‘இவன் லூசுப்பய போல’ என்று மைண்ட் வாய்சில் சொல்லிவிட்டு வெளியேறுகிறார்கள்.   இதெல்லாம் சமையல்கட்டுக்குள் நடக்கிறது.  வெளியே சாப்பிட ஆர்டர் மேல் ஆர்டர் பண்ணிக்கொண்டு ஒரு கூட்டமே காத்துக் கிடக்கிறது.  கூட்டத்தை குப்பையில் தள்ளுங்கள், நம்ம எழுத்தாளர் வேறு ‘என்னய்யா ஆச்சு ?’ என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாயகிக்கே புரியவில்லை.  ஏன் இப்படி அவன் உளறுகிறான் ?  எலியாவது சமையலுக்கு உதவுவாவது என்று குழம்புகிறாள்.  ஆயிரம்தான் கேனப்பயலா இருந்தாலும் அவன் நம்ம காதலன் ஆயிற்றே என்று மனம் மாறி பைக்கை திருப்ப ஆரம்பிக்கிறாள்.  இதற்கிடையே நிராயுதபாணியாய் தவிக்கும் தம் நண்பனைக் காப்பாற்ற எலியார் உதவிக்கு தம் கும்பலை அழைக்கிறார்.  ஆயிரக்கணக்கில் குவியும் எலிகளுக்கு சூடான ஷவர் பாத் கொடுத்து சுத்தமாக்கிவிட்டு, நம்மாள் மேற்பார்வையில் சமையல் நடைபெற ஆரம்பிக்கிறது.  ஒவ்வொரு ஐட்டமாய் காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு ஹீரோவே எல்லோருக்கும் சப்ளை செய்கிறான்.  எழுத்தாளரும் சுவைக்கிறார்.  'அய்யய்யோ.........என்ன ஒரு சுவை, என்ன ஒரு சுவை ?  கொசுவத்தி சுழல்கிறது அவருடைய அம்மா கையால் சாப்பிட்ட ருசி.

நாயகியும் வந்து சேர்கிறாள்.  அவளுடைய கண்களை அவளால் நம்பவே முடியவில்லை.  நாயகன் கண்களால் பேசுகிறான் ‘பாத்தேல்ல’ அவனும், அவளும் மட்டும் அறிந்த உண்மை எழுத்தாளருக்கு மட்டும்  சொல்லப்படுகிறது.  அவரும் சமையல்கட்டு வருகிறார்.  இந்த உண்மைகளைப் பார்க்கிறார்.  ஆப்டரால் ஒரு எலி, குட்ஸ்வ்வை மானசீக குருவாய் ஏற்றுக்கொண்டு தம்மை வீழ்த்த முடியுமெனில் விமர்சனம் எனும் சாக்கில் எத்தனை மனங்களைப் புண்படுத்திவிட்டோம் என வருந்துகிறார்.  மறுநாள் இப்படி கட்டூரை எழுதுகிறார்.  தாம் ஓர் அதிசயத்தை குட்ஸ்வ் ஹோட்டலில் கண்டதாக, அவர் எலியை எழுதவில்லை, சுவையைச் சொல்கிறார் !!!
எப்பவோ கொடுத்த புகாருக்கு தற்செயலாக வரும் உணவு இன்ஸ்பெக்டர் இந்த எலிக்கூட்டத்தை பார்த்து ஹோட்டலுக்கு சீல் வைக்கிறார்.  ஸோ வாட் ?  ஹீரோ வேறு ஒரு ஹோட்டல் திறக்கிறார்.  நம்ம எலியாரின் பெயரையே அதற்க்கு சூட்டி, எலிக் குடும்பத்துக்கு யார் கண்ணும் படாமல் உயரத்தில் பாதுகாப்பாக தங்குமிடம் அமைத்து கொடுக்கிறார்.  ஹீரோ ஹோட்டலுக்கு நிரந்தர வாடிக்கையாளராக அந்த எழுத்தாளர் மாறிப் போகிறார்.  ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்களில் அவர் மட்டுமே அறிவார்....... சுவைக்கு யார் காரணமென.  எனவே அவருக்கு மட்டும் பிரத்யோகமாக நம்ம எலியார் மட்டுமே சமைத்துக் கொடுப்பார்.  இப்பல்லாம் நம்ம எழுத்தாளர் விமர்சனமே எழுதறத விட்டுட்டு, நாலுவேளையும் மூக்கு புடைக்கச் சாப்பிட மட்டும்தான் செய்றாரு :)))   
    
                               ------------------       THE END   --------------------    
                


     
   
   
   
 
  
             


















































  

கருத்துகள்

  1. எனக்கும் பிடித்த படம். படத்தின் தமிழாக்கம் அருமையாக செய்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அபாரமான மொழிப்பெயர்ப்பு, இதைவிட, இந்தப்படத்தை ஊமைப்படமாக பார்த்தாலும், அந்த பாடி லேங்க்வேஜ் படு அற்புதமாக இருந்ததால் நன்கு புரியும் என்பதில் ஐயம் இருக்காது என நம்புகிறேன் !

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!