என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ?

நெல்சன் ஷேவியர் என்னை விட வேகமிக்கவர்.  நேற்றே எழுத ஆரம்பித்த இக் கட்டூரையை சாவகாசமாக இன்றைய வெள்ளிக்கு உபயோகிக்கலாம் என்றிருந்த என் சோம்பலுக்கு சம்மட்டி அடி.  அழகாக இன்றைய சன் செய்தி விவாததிற்கு பயன்படுத்திக் கொண்டார் !!!


சுதேசி விதேசி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும்.   இருந்தாலும் சுதேசி எனில்  உள் நாட்டு ரசிகர் என்றும் விதேசி வெளி நாட்டு(பொருட்களின்) ரசிகர் என்றும் எளிதில் அவதானிக்கலாம்.

நம் நாடு, இருபதாம்  நூற்றாண்டின் தொடக்கங்களில், பெருமளவு அன்னியப் பொருட்களின் மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.  வெளிநாட்டு உடைகள், வெளிநாட்டு தின்பண்டங்கள், அலங்கார ஆபரண ஆடம்பர அணிகலன்கள், என மக்கள் ஃபாரின் பொருள் எனில் அதை உசத்தியாகவும், தரமாகவும் கருதிக் கொண்டிருந்தார்கள்.

உள் நாட்டுப் பொருள்களை ஏளனம் செய்தும், அதை உதாசீனப்படுத்தியும் அறவே புறக்கணித்தனர்.  விளைவு, வெள்ளைக்காரன் ஏற்கனவே சுரண்டிய இந்தியப் பொதுச் சொத்துக்கள் போதாதென, எல்லா இந்தியர்களிடமிருந்தும் மறைமுகமாக கொள்ளையடித்தான்.

 நெல் & கோதுமை விளைந்த மண்ணெல்லாம் பருத்தி விதைக்க மிரட்டி, அப் பருத்தியை விவசாயிகளிடமிருந்து சல்லிசாய் வாங்கி, மும்பை, கோயம்புத்தூர் மில்களில் நூலாக்கி, அந் நூலை இங்கிலாந்து மான்செஸ்டர் கொண்டு சென்று ஆடைகளாக்கி, இந்தியாவில் கொள்ளை லாபத்திற்கு விற்றான். 

மக்களோ பாரம்பரிய கதராடையை மறந்தனர்.  பாரம்பரிய கம்பு, ராகியை மறந்தனர், பாரம்பரிய மோர், கூழ் மறந்தனர்.   இதை உள்வாங்கிய சுதந்திரப் போராளிகள், வெள்ளையன் பொருட்களை வாங்காமல் புறக்கணித்தாலே, அவன் போண்டியாவான் எனக் கணித்தனர்.  மோகன்தாஸ் 1921 ல் தன் புகழ்மிக்க சுதேசிக் கொள்கையை அறிவித்தார்.  உண்மையிலேயே நாட்டில் ஒரு புரட்சி உருவானது.  மக்கள் வெள்ளையனின் சூழ்ச்சியறிந்து கொஞ்சமாய் சுதேசி பக்கம் சாய்ந்தனர்.  

இது எத்தனை வருடம் தொடர்ந்தது என சரியாய் கணிக்க முடியவில்லை.  சுதந்திரத்தை விரும்பாத சில பணக்கார/ஆதிக்கச் சாதிச் ஜென்மங்கள் எல்லாம், காலம் முழுக்க விதேசியாய் இருப்பதே பெருமையாய்க் கருதினர், அவர்களின் பாரம்பரிய விதைகள் அப்படியே சுதந்திரத்திற்கு பிறகும் பரவின, தொடர்கின்றன என  நினைக்கிறேன்.

சரி, இப்ப இந்தப் பழைய கதைகளெல்லாம் எதற்கு ?

நம்ம நடுவண் அரசு நிதியமைச்சர், மக்களைப் பார்த்து தங்கம் வாங்காதீர்கள் என்று மட்டமான ஒரு யோசனையைச் சொன்னார்.  ஆனால், அவர் மக்க்ளை எச்சரிக்க வேண்டிய ஒரு பெரிய பட்டியலை  நேற்று தினமணி கட்டுரையில் இயற்கை விஞ்ஞானி திரு.ஆர்.எஸ். நாராயணன், ‘அன்னிய உணவுக்கு அடிமையாகலாமா ?’ என்ற தலைப்பில் கொடுத்திருந்தார். 


ஆனால், இதையெல்லாம் அப்புச்சி சொல்ல மாட்டார்.  சொன்னால் அவருடைய அமெரிக்க/ஐரோப்பிய/அரபு முதலாளிகள் ஆப்பை சொருகுவார்கள்.  நாம் எப்படி சீரழிந்து பழைய குருடி கதவைத் திறடி கதை போல மாறியிருக்கிறோம் என உணருங்கள்.  இனி கட்டூரைப் பகுதிகள் சில :-


1.) வெளிநாடுகளில் இருந்து பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி,
மீன், பன்றிக் கறி டின்களில் அடைக்கப்பட்டு வருகிறது.  (மக்கள் என்ன  நினைக்கிறார்கள் என்றால் வெளிநாட்டில் வளர்க்கப்படும் இவைகள், மிக ஊட்டமாக வளர்க்கப்படும், எனவே கறி மிகச் சத்துடனும், சுகாதாரமாகவும் இருக்கும்.  ஆனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எந்தப் பொருளுக்கும் உயரிய தரச் சோதனைகளை பின்பற்றுவதில்லையாம்:((  இது உண்மையென நீங்கள் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும், ஏனெனில் KFC க்களில் காணப்படும் கூட்டமே இதற்குச் சான்று)


2) கிவி பழம்.  (இதைக் கட்டூரையாளர் கேடுகெட்ட கிவி பழம் என்றே ஒவ்வொருமுறையும் குறிப்பிடுகிறார்) நியூசிலாந்தில் கிவி பறவைகள் மட்டுமே சாப்பிடும் இப்பழத்தை எதோ உயரிய பழமென்றெண்ணி, மக்கள் கிலோ ரூ.200/- கொடுத்து வாங்குகிறார்கள்.  இதைவிட நம் சீத்தாப்பழம் உசத்தி மட்டுமல்லாது உடலுக்கு ஆரோக்கியம்.  அட, நம்ம ஊரு கோழிய விட , ஆஸ்த்ரேலிய ஈமு கோழி உசத்தி, அது முட்டை செம சத்து, ஆரோக்கியம் என்றெல்லாம் ஏமாற்றித்தானே கிலோ 300/- விற்றார்கள், இன்று அதை சீந்துவாரில்லை, கிலோ 50/- என்றாலும் கூட !


3) டன் டன்னாக பாஸ்தாக்கள், பாலாடைக்கட்டிகள், இதர காய்கறிகள், பழங்கள், சமையல் எண்ணெய்கள் என இப்போது 40 பில்லியன் டாலர்களாக உள்ள இறக்குமதியை, விதேசி முதலைகள் 900 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு வைத்திருக்கிறார்களாம், எல்லாம் நம்ம ஆர்வம்தான், ஃபாரின் மோகம்தான் !

4)  ஆலிவ் எண்ணெய் உடலில் பூசத்தான் ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்டது.  திடீரென வெளி நாட்டு ஆராய்ச்சியில் அதில் கொலஸ்ட்ரால் இல்லை என்று சொன்னவுடன், வெறும் 10 டன்னாக இருந்த ஆலிவ் எண்ணெய் இறக்குமதி இப்போது 42000 டன்னாக அதிகரித்துள்ளதாம் (ஒரு டன் = ஆயிரம் கிலோ)  இதை விட நம் தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிக நல்லதாம், ஆனால் அதில் கொழுப்பு இருப்பதாய் பொய்ப்பரப்புரை செய்யப்பட்டு, அதை புறக்கணித்தோம் (சேரர்கள் இப்போதும் தேங்காய் எண்ணெய்தான் உபயோகிக்கிறார்கள்)


இன்னும் கொடுமையாக, புற்று நோய் ஆபத்துள்ளது என்று சொல்லியும் பாமாயிலை கப்பல் கப்பலாக இறக்குமதி செய்கிறோம்.  நாட்டின் தேவைக்கு 50 % பாமாயிலை நம்பியுள்ளோம்.  மிக மிக மோசமான எல்.டி.எல் என்று சொல்லப்படும் கெட்ட கொழுப்பு மிகுந்துள்ள இந்தப் பாமாயில்தான் ரோட்டோர எல்லாக் கடைகளிலும் பலகாரம் செய்ய பயன்படுத்துகின்றனர்.  விளைவு அதை ருசித்துண்ணும் நமக்கு இடுப்பில், டயர் போடுகிறது.  ரூ.60000 கோடிக்கு பாமாயிலை இறக்குமதி செய்ய அன்னியச் செலவானியை அமெரிக்க டாலர்களாக இறைக்கிறோம், பருப்பு இறக்குமதிக்காக 12000 கோடியை இறைக்கிறோம்.  இங்கில்லாத விளை நிலமா, இங்கு விளையாத பருப்புகளா ?  இப்படி வெளி நாடுகளில் இருந்து எல்லவற்றையும் வாங்கினால் எவனோ நாலு பேர் நல்லாருப்பான், நாலு பேர் நல்லாருக்க நூறு கோடி பேர் கொஞ்ச கொஞ்சமா அழியணும் ?

இப்படி தங்க ஆசையில் மட்டும் நம் அன்னியச் செலவாணி வீணாகவில்லை.  நம் ஒருவேளை அன்னிய உணவு மோகத்திலும் கூட டாலர்கள் ரூபாயை விழுங்கிக் கொண்டே இருக்கின்றன.  நம் நாடு பல்லாயிரம் வருடங்களாய் விவசாய நாடு.  இங்கு விளையாத சத்துள்ள காய் கனிகளோ, அல்லது அதில் தயாராகும் உணவுப் பொருட்களோ வேறெங்கும் கிடையாது. 

வெளிநாடு என்றால் அது தரமாகத்தான் இருக்கும் என்ற மயக்கத்தில், பீஸா, பர்கர், ஃப்ரைடு சிக்கன், கோக், ஃபெப்ஸி, ஆலிவ் எண்ணெய், வாஷிங்க்டன் ஆப்பிள், டாஸ்மேனியா ஆரஞ்சு, ஆக்லாந்து பேரிக்காய், ரஷ்யன் ஓட்ஸ், அமெரிக்க சோயா என்று அடிமையாகினால்...................இன்னும் வெள்ளையன் நம்மை ஒரேயடியாக விட்டுவிடவில்லை, அவன் பிடியில் சிக்கி சிறிது சிறிதாக வீணாகிப் போவோம் என உணருங்கள் !!!


























கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!