செவ்வாய், 22 ஏப்ரல், 2014

என் வாக்கு யாருக்கு ?

பொது எச்சரிக்கை :- இப்பதிவு உங்களில் பலருக்கு எரிச்சலை அதிகரித்து, அதன் விளைவாய் முகஞ்சுளிக்க வைக்கலாம், மேலும் இது அரசியல் பதிவு.  அரசியல் அலர்ஜி எனில் ஆரம்பகட்டத்திலேயே தாவி விடவும்.


இதோ நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் முடிந்து தேர்தல் ஆணையம் அமைதியாக வாக்குப்பதிவிற்கான தன் நிர்வாக வேலைகளை வேகவேகமாக செய்துக் கொண்டிருக்கிறது.


நாளை மறுநாள் விடிந்ததும் பரபரப்பாக வாக்குப் பதிவு தொடங்கிவிடும்.  யாருக்கு வாக்களிக்கலாம் என பலரும் இந்நேரம் முடிவெடுத்திருப்பீர்கள், பலர் வாக்களிக்கும் தினமன்று பார்த்துக் கொள்ளலாம் என்றோ, ’வாக்களிக்கப் போறோமான்னே தெரியல போனா பார்ப்போம்’ என்றோ கூட இருப்பீர்கள். 

ஆனால் நான் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று சில வருடங்களுக்கு முன்னரே கச்சிதமாக முடிவெடுத்துவிட்டேன், அப்படியிருந்தும் பாருங்கள் இப்போது அதில் ஒரு சிக்கல்.

எனக்கு மத்தியசென்னை தொகுதியில் வாக்கு இருக்கிறது.  நான் காங்கிரஸின் அப்பட்டமான ’முதலாளித்துவ போற்றல்’ ஆட்சியை வெறுத்து வந்ததால், நிச்சயம் இம்முறை பாரதீய ஜனதா கட்சிக்கே என் வாக்கை செலுத்துவது என்பதே அம் முடிவு(இருங்க, இருங்க....)

ஆனால் பா.ஜ.க தன் கூட்டணியில் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியையும்,  விஜய்காந்தின் தே.மு.தி.க வையும் இணைத்தது கொஞ்சமும் ஒவ்வவேவில்லை.  ’அதுசரி, இந்திய அரசியலில் இதெல்லாம் பார்த்தா ?’ என்று சகித்துக் கொண்டேன். 

இங்கு மத்தியசென்னையில் மார்வாடி, குஜராத்தி போன்ற வட இந்தியர்கள் அதிகமென்பதால் இங்கு பா.ஜ.க சார்பில் எவரேனும் போட்டியிடுவார்கள், அவருக்கு வாக்களிப்போம் எனக் காத்திருந்தால்........இங்கு தேமுதிகவிற்கு இத் தொகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். 

குறைந்தபட்சம் வைகோவின் மதிமுக விற்கு ஒதுக்கியிருந்தால் கூட, கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு பம்பரத்தை அமுக்கியிருந்திருக்கலாம், முரசை கொட்டுமளவா சிரசில் ஒன்றுமில்லாமல் இருக்கிறது ?(கட்சியைப் பார்க்காமல் வேட்பாளர்களைப் பார்க்கலாமென்றால் தேமுதிக வேட்பாளர்களைப் பார்த்தாலேயே பயம் வருகிறது, பயபுள்ளைக உள்ளூர்ல இருக்கும்போதே கட்சி மாறுவாய்ங்க, இவுகள டெல்லிக்கு அனுப்பினோம்னா நாடே மாறிட்டா ?)


தொப்பி போட்டுக்கொண்டு வரும் துடைப்பக்கட்டைக்கு போடலாமென்றால்........அவர்களின் தலைவர் அடிக்கும் கூத்துக்களில் சற்றும் உவப்பில்லை, போனமுறை வாக்களித்த தயாநிதி மாறனுக்கு போட மனமொப்பவேயில்லை, கடைசி வரை, அவர் வீட்டிலிருந்து அவர்கள் குடும்ப தொலைக்காட்சிக்கு விலையில்லாமல் கொடுக்கப்பட்ட பல்முனை தொலைபேசி இணைப்புச் சர்ச்சை என்னவானது என்று யார் நினைவிலும் இல்லாமல் புதைக்கப்பட்டே விட்டது.  பலப்பல கோடி அரசு தொலைபேசி நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்திய அநீதி இது.


என் தலைவன் 15000 கடன்வாங்கி விட்டு, அதை ஓரிரு மாதங்கள் கட்ட மறந்தால், அந்த அற்ப காரணத்துக்காக பேரழகிகளை வைத்து, அவரை வண்டை வண்டையாக திட்டும்  அரசு நிறுவனங்கள், இது போல கோடி கோடியாய் கொள்ளையடிப்பவர்களுக்கு கூழைக் கும்பிடு போடுகிறதுகள் :(  :( :) :)

ம்ம்ம்ம்ம்.........தென் சென்னையில் வசிக்குமளவு வசதியானவனாய் இருந்திருந்தால், இல.கணேசனுக்கு வாக்கை கொடுத்திருப்பேன், எனக்கு மிக பிடித்த ஒரு வேட்பாளர்.  சரி விடுங்க, தாமரைக்கு போடணும், தாமரை இல்லாட்டி என்ன, ரோஜா, சாமந்தின்னு எதையாவது அமுக்கி நம்ம மக்களாட்சி மகத்துவத்தை போற்றிவிடுவோம்.  ஆனால் ’போயும் போயும் நான் ஒரு பாஜக அனுதாபியா ?’ என்கிற உங்களின் அதிர்ச்சியை சற்றேவாவது போக்க முயல்கிறேன்.

எனக்கு 1999 - 2004 வாஜ்பாய் ஆட்சி மிகவும் பிடித்திருந்தது.  அவர்கள் அப்போதைய நாட்டின் நிலை பற்றி துல்லியமாகக் கணித்து, உலகின் எந்த நாடுகளின் எதிர்ப்பையும் துச்சமெனக் கருதி அணுகுண்டு சோதனையை, வல்லரசுகள் ஒரே ஒரு சதவிகிதம் கூட துப்பறிய முடியாமல் சாதித்துக் காட்டினர். 


அதுவரை இந்தியா எனில் எள்ளலாய் இளித்துக் கொண்டிருந்தக பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் சற்றே இந்தியாவை வியப்புடன் நோக்க ஆரம்பித்தார்கள், கார்கிலில் வாலாட்டி சோதித்துப்பார்த்த முஷாரப் ராணுவத்தின்(ஆமாங்க, முஷாரப்தான் அப்ப தலைமைத் தளபதி) அந்த வால் மீண்டும் முளைக்காத அளவு நறுக்கப்பட்டது.


அதற்கு முன்னதாக இஸ்லாமியர்கள் என்றால் பாஜக எனும் ஹிந்து மதவாதக் காட்சி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வன்மம் காட்டும் என பொய் கூறி வந்தவர்களின் முகத்தில் கரியைப் பூசுவதைப் போல், இந்தியா - பாகிஸ்தான் இடையே ரயில், பஸ் போக்குவரத்தை மிக விமரிசையாகத் தொடங்கி, எதிரிக்கும் நட்பைப் பற்றி தெரியவைத்தனர்.(வழக்கம்போல காங்கிரஸ் வந்தவுடன் ரயிலில் குண்டு வெடித்ததை சாக்காக வைத்து அதற்கு ஆப்பைச் செருகினர்)

காஷ்மீருக்கு இருக்கும் சிறப்புச் சலுகைகளை நீக்கிவிடுவார்கள், பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்துவிடுவார்கள் என்று ’போலி மதசார்பற்ற முதலைகள்’ கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த வேளையில் நாட்டிலுள்ள சிறு பெரு நகரங்களையெல்லாம் இணைத்து தங்க நாற்கரச் சாலைகளை பிரம்மாண்டமாக போட்டுக் கொண்டிருந்தார்கள்.

பிரமோத் மகாஜன் தொலைத்தொடர்பு அமைச்சராய் இருந்தபோதுதான் அலைபேசித் துறையில் புரட்சி உருவாகியது. 

ஆட்சி செய்யும் அரசுகள் கடுமை காட்டி அத்தகைய புரட்சித் திட்டங்களை பரவ விடாமல் தடுத்து விடக்கூடாது என்றுதான் 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்கிற ஏலமுறையை அத் திட்டத்தில் நுழைத்தது பாஜக அரசு.  சாமர்த்தியமாய் இதையே காரணாமாக காட்டி பல லட்சம் கோடிகள் இழப்பைக் கொடுத்தது காங்கிரஸ் கூட்டாட்சி.  கூட்டுக்கொள்ளை அடித்தார்கள்.(பிரமோத் கூட ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாய் செயல்பட்டார் எனச் சொல்வோர் உண்டு)


அந்த ஐந்து வருடங்களில் உணவுப்பொருட்களின் உற்பத்தி அபரிமிதமாக இருந்தது.  இதன் விளைவாய் அப்போது விலைவாசி அரசுகளை மீறி கட்டுக்குள் இருந்தது, ஒரே பெருங்குறை என்னவெனில் இது பெரும்பாலான மக்களுக்கு லாபமென்றாலும், விவசாயிகளின் நலனை அறவே குலைத்துவிட்டது. 


விவசாயிகளின் விளைச்சல் பொருட்களுக்கு அடிப்படை உத்திரவாத விலையை நிர்ணயிப்பதில்.......அவர்களுக்கு நட்டமேற்படும் காலங்களில் கடன்சுமையைக் குறைப்பதில்...... தீர்க்கதரிசனப் பார்வை வாஜ்பாயின் புதிய பா.ஜ.க அரசுக்கு இல்லாமல் போய்விட்டது உண்மை.  

இதனால் அப்போது விதர்பா, ஆந்திராவின் சில மாவட்டங்களில், உரிய விலை கிடைக்காத நட்டத்தின் விளைவில் அழுத்திய கடன் சுமையால், விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டார்கள்.   அதற்கான முழுப் பொறுப்பையும் நடுவண் அரசு மீதே செலுத்தமுடியாதுதான் என்றாலும் இதுவே பெருங்காரணமாகி, காங்கிரஸை தொடர்ந்து இருமுறை வெல்ல வைத்துவிட்டது, இனி பா.ஜ.க நிச்சயம் இத் தவறைச் செய்யாது என நம்புகிறேன்.

’சரி, அப்போ காங்கிரஸ் நல்லதுதான் பண்ணிச்சோ ?’ என வெகுளியாய் நீங்கள் விசாரித்தால் அங்குதான் ஒரு நெல்மணியைக் கொடுத்து கிளியை ஏமாற்றும் வித்தையை  உங்களுக்குச் சொல்ல நேர்கிறது.

விவசாயிகளுக்கு உரிய உத்திரவாத விலையை நிர்ணயித்துவிட்டு, அவ் விவசாயப் பொருட்களை ஆன்லைனில் சூதாட அனுமதித்தது காங்கிரஸ் அரசு.  இந்தச் சூதாட்டத்தால் அரசுக்கு கொள்ளை லாபம்தான்......’பிறகென்னய்யா அரசுக்கு லாபம், விவசாயிக்கு லாபம், வேறென்ன வேண்டும் ?’ 

அடக்கடவுளே, இந்தச் சூழ்ச்சியில்தான் சாதா கோடீஸ்வர்கள், சூப்பர் ஸ்பெஷல் கோடீஸ்வரர்களாகி தினத்தந்தி அளவில் தெரிந்தவர்கள் போர்ஃப்ஸ் பத்திரிக்கைக்கு தெரியுமளவு வளர்ந்தார்கள்.  அதாவது விவசாயிக்கு அடிப்படை விலை கிலோ வெங்காயத்திற்கு 15 ரூபாய் கொடுத்துவிட்டு, அதை ஆன்லைனில் பதுக்கி 75 ரூபாய் விற்றார்கள்.  100 ரூபாய் கொடுத்தெல்லாம் உங்களை வாங்கவும் வைத்தார்கள்.  இதை காங்கிரஸ் கண்டுக்கொள்ளவேயில்லை.  இதுவே ’முதலாளித்துவ போற்றல் கோட்பாடு’


காங்கிரஸ் ஆட்சியில் பல இந்தியக் கோடீஸ்வரர்கள் உருவானதுதான் பெருஞ்சாதனை, அதெல்லாம் இதுபோல் ஆன்லைனில் சூதாடியோ, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைக்கு ஆயிரம் தலைமுறைக்கு முந்தைய விலைக்கு கொடுத்தோ, ஒரு விசிலுக்கு நானூறு ரூபாய் என காமன் வெல்த் விளையாட்டுக்கு விலை கொடுத்தோ,   நம் வரிப்பணத்தை கொள்ளையடித்துச் சேர்த்த பணக்காரர்கள். இதுபோல பலப்பல மெகா மெகா ஊழல்களை சற்றும் கண்டுகொள்ளாது விட்ட அரசே காங்கிரஸ் அரசு.

சரி, வெளியுறவு விவகாரத்தில் இவர்கள் என்ன லட்சணத்தில் இருந்தனர் என்றுதான் உங்களுக்கேத் தெரியுமே ? இலங்கை ராணுவ வெறியாட்டம், சீன ஆக்கிரமிப்பு,   பாகிஸ்தான் உறவு, அமெரிக்க அடிமை என எல்லாவற்றிலுமே பூஜ்யம் மதிப்பெண்.

மோடியின் ரத்தம் படிந்த கைகளை பார்க்கச் சொல்லும் எந்தக் கண்களுக்குமே, சமகாலத்தில் சமாஜ்வாடி அகிலேஷ் ஆட்சியில், சொந்த நாட்டில் அம் மண்ணின் மக்களை, அகதி முகாம்களில் வாட வைக்கும் அவல நிலை தெரியவில்லை.  அகிலேஷ் பிரதம் வேட்பாளர் என்றால் இதைப்பற்றி பேசுவார்கள் போல :(  (இதற்கும் பிஜேபிதான் காரணம் என்பீர்களேயானால், ஐயா தர்மபுரி, மரக்காணம் கலவரத்திற்கு போனவருடம் இதே வெயில் சமயத்தில் உள்ளே யார் யாரையெல்லாம் அனுப்பினோமோ, அதற்கப்புறம் காயடித்த ஆடாய் அவர்கள் அடங்கிப் போனார்களா இல்லையா ?)


1999 ல் முதன்முறையாக ஆட்சியில் புதுப்பெண்ணாய் வந்த பாஜகவை காந்தஹார் விமானக்கடத்தல், வைஷ்ணவி தேவிக் கோயில், அக்‌ஷர்தாம், பாராளுமன்றம், கார்கில், சியாச்சின் முற்றுகை என தீவிரவாதிகள் நேரடியாய் மோதத் துணிந்தனர்.  புது அனுபவம் என்பதால் காந்தஹாரில் ஏமாந்தாலும் பிற ஆக்கிரமிப்புகளில் சவாலை வென்றனர்.  இனி அடியோடு அழிந்தே விடுவார்கள். 


சரி, அறிவுஜீவிகள் என்ன சொல்வார்கள், மதசார்புள்ள, சிறுபான்மையினரைக் கொன்ற, ஆர்.எஸ்.எஸ் பின்புலமுள்ள பா.ஜ.க அல்லது மோடியை எக்காலத்திலும் ஆதரிக்கக் கூடாது என்பார்கள், சோனியாவும் அவர்களுக்கு பிடிக்காது, ராகுலை இன்னும் குழந்தை, அவர் வயதுக்கு வரட்டும் என்பார்கள், கம்யூனிஸ்டுகளுக்கு நாட்டை ஆளுமளவு பலம் இனி நாம் உயிருடன் இருக்கும்வரை வரப்போவதில்லை, பிறகு யாருக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்றால், அதற்கு பதிலும் தரமாட்டார்கள், அப்படியே பதில் தந்தாலும் அது விளங்காது, ஏனென்றால் அழிக்கத் தெரியும் அவர்களுக்கு என்றுமே ஆக்கத் தெரியாது.

முக்கியமான ஒன்று, பா.ஜ.க அல்லது மோடியை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களின் தலையாய நிலைப்பாடு, அவர்கள் மிருகபலத்தோடு ஆட்சியில் அமர்ந்தால், ’சிறுபான்மையினரை வதைப்பர்’

ஐயா பெரியோர்களே, தாய்மார்களே, நம் பாரத நாடு, அம்பேத்காரின் சட்ட புத்தகங்களின் வழியே மட்டுமே செயல்படும் மக்களாட்சி நாடு. இந் நாட்டில் திடுக்கென ஒரு சர்வாதிகாரி முளைத்து எந்த ஒரு இன ஒழிப்பையும், இன வீழ்ச்சியையும் மேற்கொண்டுவிட முடியாது, அப்படியே முயலுவார்களேயானால் தொடங்கிய வேகத்தில் சூன்யாமாகி மறைந்தும் விடுவார்கள், அவ்வளவு வலுவான மக்கள் ஆட்சி தத்துவங்கள் கொண்டது நம் சட்டதிட்டங்கள்.

இது இஸ்லாமிய நண்பர்களுக்கு, “தோழர்களே, உங்களை தங்களின் கட்டுக்குள் ஆயுள் முழுக்க வைத்திருந்து, உங்களை தங்களின் கைப்பொம்மைகளாக்கி, அவர்கள் சொல்லுவதே சரி என உங்களின் தலைகளை என்றென்றும் ஆட வைக்கவே, உங்கள் மூளையை சலவை செய்துக்கொண்டே பலர் இருக்கிறார்கள்.  “எங்களுக்கு போதிக்க நீ யார் ?’ என நீங்களாக வெகுண்டு கேட்கும்வரை உங்களுக்கு பல கட்டுக்கதைகளை சொல்லி உங்களை ஒரு கொதி நிலையிலேயே வைத்திருப்பர், அதற்காக உங்களை பொங்கவிடவும் மாட்டார்கள், பொங்கி வரும் வேளையில் தண்ணீர் தெளித்து, அடக்கிக் கொண்டே, கீழே நெருப்பின் வேகத்தைக் கூட்டுவர்.  நீங்களாகத்தான் உங்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பவர்கள் யார் என உணர வேண்டும்.  


ஆக, என்னால் இம்முறை தாமரைக்கு வாக்களிக்க முடியாவிடினும்,  ”அப் கீ பார் மோடிஜி கா சர்க்கார்தான், பாரத் மாதா கீ ஜே, ஜெய்ஹிந்த் !!!  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக