ஏன் கசந்தார் சாரு, எனக்கேன் கசந்தாரோ ? (இறுதிப் பகுதிகள்)

ஏன் கசந்தார் சாரு, எனக்கேன் கசந்தாரோ ? # 4
=================================
விஸ்வரூபம் படம் தடைபட்ட நேரத்தில், எல்லாவிடத்திலும் கமல் நிலைக்கு ஆதரவாய் பலமான எழுத்துச் சண்டை புரிந்திருக்கிறேன். சாரு வாசகர் வட்டம் உட்பட !

விஸ்வரூபம் படத்தை பார்த்துவிட்டு சாரு, அதில் வரும் ஒரு காட்சியைப் பற்றி இப்படி விமர்சித்திருந்தார்.

//
வெந்த கறியை ருசிபார்க்குமாறு தன் மாணவியை, "பாப்பாத்தியம்மா, நீ டேஸ்ட் பண்ணிச் சொல்லுடி" என்கிறார் கமல்அதைப்பார்த்தவுடன் எனக்கு தியேட்டர் ஸ்க்ரீனை கிழித்துப் போட்டுவிட வேண்டுமென ஆத்திரத்தில், உச்சவெறி ஏற்பட்டது.
அமெரிக்காவில் நீக்ரோ எனச் சொல்வது எந்தளவு குற்றமோ, அதே அளவு குற்றம்தான் இங்கு பாப்பாத்தி எனச் சொல்வதும். ஓர் இனத்தை இதை விடக் கீழ்த்தரமாக விளிக்கவே முடியாது //
இதை வாசித்ததும் நமக்கு மயிர்காற்கள் குத்திட்டு நின்றுவிடும். ’ச்சே, என்னமா இன துவேஷத்தை எதிர்க்கிறார்என்று. (ஆனால் இந்த எழவு அறச்சீற்றமும் ஒரு குறியீடுதான்)

தன் சாதியைத்தான் இழிவுபடுத்திக் கொள்கிறார் எனச் சமாதானம் கொண்டாலும், கமலின் இந்தக் காட்சியை நானும் அவ்வளவாக விரும்பவில்லை.

அடுத்த சில தினங்களில் வட்டத்தில், ’நாளை மற்றுமொரு நாளேநாவல் பற்றி ஒரு விவாதம் நிகழ்ந்தது. ஜி. நாகராஜன் எழுதிய நாவல். எனக்கு, இந்த ஜி நாகராஜன், ஆதவன், நகுலன், .சிங்காரம், போன்றவர்களையெல்லாம் தெரியச் செய்ததே சாருதான் !


நாளை மற்றுமொரு நாளேநாவலை வாசிக்காதவர்களுக்கு, அதைப் பற்றிய சில குறிப்புகள்.
நாவலின் மையக்கரு ஒரு வேசியையும், அவளிற்கு ஏஜண்டாக இருக்கும் அவளின் கணவனைப் பற்றியும் சொல்லும்.

இதை எழுதிய காலகட்டம் துணிகரமானது. அதனாலேயே இது ஒரு தவிர்க்கமுடியாத இலக்கியமாக இருக்கிறது.

ஜி. நாகராஜனின் இந்தத் துணிகரப் படைப்பை கொஞ்சமாய் சாரு வட்டத்தில் வைத்துப் பாராட்டியது தலைவருக்குப் பிடிக்கவில்லை.
தலைவரின் எதிரிவினையை வாசியுங்கள்.

//
ஜி. நாகராஜன் பிராமண* வகுப்பைச் சேர்ந்தவர். பிரமாதமாக இங்க்லிஷ் பேசுபவர். பணக்காரர். இங்க்லீஷ் டியூஸன் எடுப்பதன் மூலம் நன்கு வருமானம் பார்த்தவர். அவர் இது போன்ற அடித்தட்டு மக்களின் வலியை அறவே அறியாதவர். அதனால் இந் நாவலில் அவர்களின் வலியை ஆழமாக அவருக்கு பதிய வைக்கத் தெரியவில்லை. மிகத் தட்டையாகத்தான் கதாபாத்திரங்களின் வலிகளை பதித்தார் //
எனக்குச் சுர்ர்ர்ர்ரென்று கோபம் தலைக்கேறியது. "இதென்ன சாரு, ஓர் எழுத்தாளரை சாதி காட்டி மட்டம் தட்டம் முயல்வது ? அப்போது இனி நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு எழுத்தாளரையும் அவர் என்ன சாதி என இனம் கண்டு வாசிக்க வேண்டுமா ?

இங்கு சரி, நீங்கள் வெளிநாட்டு எழுத்தாளர்களையெல்லாம் வேறு அறிமுகப்படுத்துவீர்களே, அவர்களை எப்படி இனம் கண்டு கொள்வது ?" என வினவியிருந்தேன்.

ஜென் அதற்கு எதையோ சொல்லிச் சமாளித்தார். அப்பவே மனதில் நினைத்திருந்திருப்பார். ’இதுவே நம் இடதுகரம் பிச்சையாய் இருந்திருந்தால், ‘ஆமாம் குருவே, ஜி. நாகராஜன் சாதி வெறியர், அதான் அல்பாயுஸில் போய்விட்டார்என குளிர்வித்திருந்திருப்பாரே, இவன ஏன் இன்னும் ப்ளாக் பண்ணாம இருக்கோம் ?’ என்று !


ஒரு புளியமரத்தின் கதையின் இங்க்லிஷ் மொழிபெயர்ப்பு மிகத் தட்டையாக இருந்தது, ஆனால் தமிழ் நடை அவ்வளவு உயிரோட்டமாக இருக்கும்இதைச் சொன்னது தலைவர்தான். இதை நம்பி தான் வாங்கவேண்டிய பட்டியலில் இந் நாவலைக் குறித்துக் கொண்ட ஓர் அப்பாவி சிஷ்யன்( நானில்லை) அடுத்த மாதத்திலேயே அதை வாங்கி, படிக்கப்போகுமுன் அதன் அட்டைப்படத்தை செல்போனில் போட்டோ எடுத்து, அதை வட்டத்தில் பதிவேற்றியிருந்தான்.
உடனே அதை வாசித்திருந்தவர்களில் என்னைப் போல ஒரு சிலர், அதைச் சிலாகித்து கமெண்ட் போட்டிருந்தனர்.

நான் சீனியர் என்பதால் எனக்கு கொஞ்சம் நெருடல், சாரு வட்டத்தில் சுந்தர ராமசாமியை புகழ்வதா ? இருந்தாலும் சமீபத்தில்தானே சாரு சு.ரா வின் எழுத்து நடை பற்றி சொல்லியிருந்தார் என்ற குருட்டுத் தைரியத்தில் கமெண்ட் போட்டுவிட்டேன்.

சுந்தர ராமசாமியை தான் பல வருடங்களாக *வெறுத்து வருவதாகவும், தமிழ் இலக்கியத்திற்கு அவர் மாபெரும் *துரோகம் செய்தவரென்றும், என்னுடைய ஜே.ஜே சில குறிப்புகள் விமர்சனக் கட்டுரை படிக்காத தற்குறிகள் எல்லாம் வாசக குஞ்சுகளாக இங்குத் திரிவது வருத்தமாய் இருப்பதாகவும் பொறிந்துத் தள்ளினார். உடனடியாக அந்தப் போட்டோ நீக்கப்பட்டது !

பாலாவின் பரதேசிக்கு சாரு எழுதியிருந்த விமர்சனங்களை நான் மிக ரசித்தேன் என உங்களுக்கேத் தெரியும். அப்போது அதற்காக இங்கு நீங்கள் என்னை வறுத்தீர்கள்

இந்தக் களேபரங்களை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாது ஒரு வாசகி, ’பாலாவின் பரதேசி தன்னை மிக மிக ஈர்த்துவிட்டதாகவும், பட முடிவைப் பார்த்தபின், அதை இயக்கிய பாலாவை கட்டிப் பிடித்து கைகளில் முத்தமிட விரும்புவதாகவும்வட்டத்தில் எழுதிவிட்டார்.

சாரு, நேரில் சந்திக்கும்போது அம்பியாகவும், பகல்களில் ரெமோவாகவும், நள்ளிரவு நெட்ட்டில் அன்னியனாகவும் மாறுவார் என்பதை அப்போதுதான் உலகம் உணர்ந்தது.

ரெமோவாக, ‘, இது பெண்ணாதிக்க உலகம், இது போல் ஓர் ஆண் இங்கு இவ்வளவு சுதந்திரமாக நான் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பேன்எனச் சொல்லமுடியுமா ?’ என்று வழிந்துவிட்டு, இரவு அன்னியனாக மாறினார்.

"
பாலா ஓர் அயோக்கியர்*, நாஞ்சில் நாடன் ஓர் ஒட்டுப்பொறுக்கி*, பரதேசி ஒரு தேசவிரோதப்படம்*, என்றெல்லாம் நிறுவத்தானே இத்தனை தொடர் விமர்சனம் எழுதி வருகிறேன். என்னுடைய வாசகி எனச் சொல்லிக்கொண்டு, இதையெல்லாம் வாசிக்காமல், கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் முத்தம் கொடுப்பேன் எனச் சொல்லும் உங்களுக்கு இந்த வட்டத்தில் என்ன வேலை ? வெளியேறுங்கள்"எப்படி இருந்திருக்கும் அந்த வாசகிக்கு ?

பெருமாள்முருகனைப் பற்றி புகழவா கெட்டவார்த்தை பேசுவோம்என்ற விமர்சனக் கட்டூரையை அங்கு பதித்தேன் ? கெட்டவார்த்தைகள் என அறியப்படும் அவையாவும் நம் இலக்கியங்களில் இயல்பாக பயன்படுத்தப்பட்டன, சாருவையோ, அராத்துவையோ அசிங்கமாக எழுதுகிறார்கள் என மட்டம் தட்டத் தேவையில்லை என்பதற்காகத்தான் மெனக்கெட்டு அங்கு போட்டேன்.

அடக் கருமமே, கட்டூரையின் உள்ளேயே போகாமல் பெருமாள் முருகன் என்னை மட்டம் தட்டியவர், எனக்கும் பெ.முக்கும் வாய்க்காச் சண்டை, அவருடைய எழுத்துகளைப் போய் புகழ்வதா ?’ என்றபடியே வந்தார் அல்டிமேட்.

ஆனால் அதற்கு சிவப்புக்கம்பளம் விரித்தது வா..அட்மின். அவரும் ஆரம்ப வரிகளைப் படித்துவிட்டு, நீங்கள் சாருவையும், அராத்துவையும் மட்டம் தட்டி விட்டீர்கள் என முன்பே தீர்ப்பு கூறியிருந்தார்.

உங்களுக்கொன்று தெரியுமா ? என்னதான் நாம் சாருவை விமர்சிக்கும் வட்டத்தில் இருந்தாலும், நம்மால் வெளியே ஜெயமோகனைப் புகழ்ந்தோ, இளையராஜாவைச் சிலாகித்தோ, கமலைத் தலையில் தூக்கி வைத்தோ யாராவது புகழ்ந்தால் தாமாக கோபம் வந்துவிடும். அந்தளவு எழுத்தில் வசிய மை கலந்து எழுதி, நம்மை ஆட்கொள்பவர் சாரு. அதையும் மீறி நீங்கள் அவர்களை ரசித்துவிட்டால், உங்களுக்கு கருடபுராணத்தில் குருவை மீறிய குற்றத்திற்கான சாபம் நிச்சயம்.

*சாரு உபயோகித்த வார்த்தைப் பிரயோகங்கள்

தொடரும்............
(
அடுத்த பகுதியில்- ரா.கண்ணனும் ராஜூ முருகனும், அசோகமித்ரனுக்கும் மட்டுமல்ல வாலிக்கும் சங்கரா சங்கரா தான்)



ஏன் கசந்தார் சாரு எனக்கேன் கசந்தாரோ ?   #  5
===============================
அசோகமித்ரன், ஜெயமோகனை புகழ்ந்துவிட்டார் என்பதற்காக சாரு எரிமலையாய் குமுறியது உங்கள் நினைவிலிருக்குமென நம்புகிறேன்.


உண்மையில் அந்தப் பதிவை வாசித்து கடும் அதிர்ச்சி மட்டுமல்லாது சினமும் கொண்டேன். ஏனெனில் அசோகமித்ரன்
சில மாதங்களுக்கு முன் விகடனில் எழுதி வெளியான சிறுகதையை பெரிதும் சிலாகித்து, ’நான் தமிழில் தற்போது வரும் எந்தக் கதைகளையும், கட்டூரைகளையும் வாசிக்கவே விரும்புவதில்லை, வருபவையெல்லாம் உயிரோட்டமே இல்லாத எழுத்துகள். ஆனால் அசோகமித்ரன், எஸ்.ரா போன்றோரின் எழுத்துகள் மட்டும் விதிவிலக்கு. எத்தனை வயதானாலும் அசோகமித்ரன் போன்றோர் எழுத்துகளில் ஜீவன் இருக்கும் இத்யாதி, இத்யாதி’........எனப் புகழ்ந்திருந்தார் திருவாளர் அல்டிமேட்.

நண்பர்களே, அசோகமித்ரன் சாருவின் சில நூல்களுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் என நீங்கள் அறிவீர்கள்தானே ?
சமூகத்தில் நிராகரிக்கப்பட வேண்டிய எழுத்தாளரென்று அசோகமித்ரன் நம்பியிருந்தால் அவ்வாறு முன்னுரை எழுதச் சம்மதித்திருந்திருப்பாரா ? அவர் சாரு போன்ற கலகக்காரர்களின் எழுத்துகள் தமிழ்ச் சமூகத்தை உய்விக்கக்கூடும் என நம்பித்தானே முன்னுரை எழுதிக் கொடுத்திருந்திருப்பார் ?


அப்பேற்பட்ட எழுத்தாளர் மத்தியில் தொடர்ந்து டெம்ப்ளேட் சம்பவங்களையே பின் நவீனுத்துவப் போர்வையில் சொல்லிக் கொண்டிருந்தால் சலிப்பு வரத்தானேச் செய்யும் ? பார்த்தார் அசோகமித்ரன், தனக்கு நம்பிக்கை தரும் எழுத்தாளராக ஜெயமோகன் தெரிவதாகச் சொல்லிவிட்டார் !


போச்சு, தலைவர் ஜெமோவையும், அமியையும் அர்ச்சிக்காத வார்த்
தைகள் இல்லை. அமியை எவ்வளவு கீழே போட்டு காலில் மிதிக்க வேண்டுமோ அவ்வளவு திட்டித் தீர்த்தார் எந் நன்றியையும் மறவாத அண்ணல் சாரு !// "ஜெயமோகன் ஒரு சொம்பு தூக்கி. சொம்பைத் தூக்கியபடி, சென்னையில் அசோகமித்ரனை நேரில் போய்ப்பார்த்தவுடனேயே அசோகமித்ரன் நெகிழ்ந்து இதுபோல ஜெமோவை புகழ்ந்ததாய் அந்தத் தாத்தாவை புரட்டி எடுத்தார். "சாகப் போகும் நேரத்தில் சங்கரா....சங்கரா எனச் சொல்லிக்கொண்டு புண்ணியம் தேடாமல் உத்தம வேஷம் போட்டு சொம்பு தூக்குபவர்களை தமிழின் சிறந்த எழுத்தாளர் என புகழ்ந்து விடுதுகள்" // என்றார்.

இதை மிகக் கடுமையாக நான் ஆட்சேபித்தேன். எங்கு ? வட்டத்தில் அல்ல. ஏனென்றால் அடிக்கடி எதிர்வாதம் புரிந்து உள்வட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தேன் (உள் வட்டம் என்றால் என்ன ? அடுத்த பதிவில் சொல்கிறேன்) சாரு வாசக வட்ட க்ரூப் சாட்டில்.


தோழர் பிச்சை, நீங்கள் நன்றி மறப்பவர்களுக்கு சாபம் வந்து சேரும், ரத்தம் கக்கிச் சாவுவீர்கள், பொண்டாட்டி ஓடிவிடுவாள் என்றெல்லாம் குறளி வித்தைகாரனைப் போல் பூச்சாண்டி காட்டுகிறீர்களே.........இதற்கு உங்கள் பதிலென்ன ? (கிணத்துல கல்லப் போட்டுட்டு மிதக்குமான்னு பாக்கிறியேடா கைப்புள்ள....ஹல்லோ நான் என்னைச் சொன்னேன்)


ராஜூ முருகன் விகடனில் ஒரு ஜம்போ தொடரை எழுதினார். ஆரம்பத்தில் அது என்னை ஈர்த்தாலும், பார்க்கப் பார்க்க அமலா பாலும் புளித்துவிடுவதைப் போல, வெகு சீக்கிரமே எனக்கு ராஜூமுருகன் சலித்துப்போனார். ஆனால் ரசனை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பது போல் இயற்கை வைக்கவில்லையே ? மிகப் பலருக்கும் அந்தத் தொடர் பிடித்துப் போனது. விளைவு விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் அந்தத் தொடருக்கு நீட்டிப்பு கொடுத்துக் கொண்டே போனார்.


மனங்கொத்தி பறவையால்தான் இவ்வளவு அக்கப்போரே என பலமுறை சொல்லிவிட்டேன். விகடனில் அந்தப் பறவை மட்டும் வராமலிருந்தால் நானும் கிஷோர் கே சாமியிடம் ஓர் அல்லக்கையாக இருந்து, என் ஃபேஸ்புக் வாழ்வை வெறும் லைக், அவ்சம் கமெண்ட் போட்டு நிம்மதியாய் கழித்திருந்திருப்பேன், ’விதி வலியதுஎன பிதாமகன் சூர்யா சொல்வது போல், காலம் இப்போது என்னை துரோகியாக அடையாளம் காட்ட
சாருவின் அந்தத் தொடர்தான் வித்திட்டு விட்டது :(

இதே மனங்கொத்திப் பறவை விகடனில் ஒரு குறுந் தொடராய் வந்தவேகத்தில் நிறைவுற்றது. சாருவை நீங்கள் தருண் தேஜ்பாலாகக் கொண்டால் ராஜூ முருகன் சாரு போல. தருண் தேஜ்பால் சாருவைத் திட்டினால் யாராவது அதைக் கண்டுகொள்வார்களா ? ஏனெனில் தருண் ஹிந்தியிலோ, இங்க்லீஷிலோ திட்டப் போகிறார், தமிழிலோ, மலையாளத்திலோ அல்ல. ஆக, அப்படி அவர் தனக்கு சமமில்லாத ஒருவரைத் திட்டுவது வீணல்லவா ?


ஆனால் சாரு, ராஜூமுருகனை சின்ன பையன், கத்துகுட்டி நிருபனுங்க இவனுங்கல்லாம் தொடர் எழுதுறானுங்க, எழுதி முன்ன பின்ன இந்தப் பிசாத்து பயகளுக்கு அனுபவமிருக்கா ? இன்னும் இதை விடக் கொச்சையாக வசை பாடினார்.
ராஜூ முருகன் இது போல ஒரு நெடுந்தொடர் எழுத அதன் ஆசிரியர் ரா.கண்ணனே காரணமென அவரையும் இகழ்ந்து தூற்றி சாபங்களை அள்ளிவிட்டார்.


யுஎஸ் தமிழன், சின்னதாதா, பாம்பாட்டிசித்தன் போன்ற நண்பர்கள் அப்போது அடிக்கடி, ’நான் மட்டுமே வட்டத்தில் ஓரிரண்டு எதிர் கேள்விகள் கேட்பவன்எனப் பாராட்டி இங்கு கொம்பு சீவிக் கொண்டே இருந்ததால் அந்த மொன்னைக் கொம்புகளோடு இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுத் தொலைத்தேன் !

"
சாரு, டொவெண்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் தன்னுடைய இந்தியக் கிளை நிறுவன அதிகாரியாக ஏ.ஆர்.முருகதாஸை நியமித்துள்ளது. படங்களை அவர் சுயமாகத் தயாரிக்கவும் அனுமதி கொடுத்துள்ளது. அதை அவர் புது இயக்குனர்களுக்கு வாய்பாய்க் கொடுக்கிறார். உடனே பாலச்சந்தரோ, பாரதிராஜாவோ போய், ‘எங்களைப் போன்ற அனுபவசாலிகளுக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் இதுவரை எந்தப் படத்தையுமே இயக்கியிராத புதுப் புது சின்ன பசங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்களே என ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட்டால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது ரா.கண்ணனிடம் நீங்கள் முன்வைத்திருக்கும் கேள்விகள்என்றேன்.

என்னையெல்லாம் சாரு எப்படி வெறும் ப்ளாக்கோடு விட்டுவைத்தார் என எனக்கே ஆச்சர்யமாய் உள்ளது.

தொடரும்..........
 
(
அடுத்த பகுதி அல்லது இறுதிப் பகுதியில் - இதில் சொல்வதாய்ச் சொல்லி, விடுபட்டுப்போன வாலிக்கும் சங்கரா சங்கரா, உள்வட்டம் என்றால் என்ன ? நெல்சன் ஷேவியர் சொன்ன சோகக் கதை)


ஏன் கசந்தார் சாரு எனக்கேன் கசந்தாரோ ? # 6 (இறுதிப் பகுதி)
================================
=========உள்வட்டத்தில் அங்கத்தினர்என்பது ஓர் உயரிய பதவி. அதாவது கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள், ஏட்டு, சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்,ஏசி, டிசி, ஜேசி, கமிஷனர் என்று படிப்படியாய் உயரிய நிலையை அடைவது போல், சாரு வட்டதிலிருந்து படிப்படியாய் மேலேறி உள்வட்டத்தில் மட்டும் இடம்பெற்றுவிட்டால் அவருக்கு உலகிலுள்ள எல்லாச் சிறப்பும் பெற்றவராகிவிடுவார். என்ன அதற்கென்று சில விதிமுறைகள் உண்டு, அவையாவன :-

1.)
இலக்கியம் அவசியமில்லை. மாறாக இதர உலக ஞானம் பற்றிய அறிவு அவசியம். கிசுகிசு சொல்பவர்களுக்கு உச்ச அந்தஸ்து கிட்டும்.

2.)
பெண்ணீய பெண் எழுத்தாளர்கள், ஈமெயில் அனுப்பும் வாசகிகள் இவர்களை கண்டமேனிக்கு விமர்சித்தால், சீற்றம் கொள்ளாது ரசிக்க வேண்டும்.

3.)
ஒவ்வொரு உள்வட்டச் சந்திப்பிலும், வாசக வட்டத்தில் சதா குற்றம் கண்டுபிடிக்கும் வாசகனுக்கு இருக்கும் வீக்னெஸ்களை கிண்டல் செய்து மட்டம் தட்டி தலைவரைக் குஷிபடுத்த வேண்டும்.

4.)
ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டவருடன் எந்தவித நட்பும் பாராட்டாமல், நீர், உணவு புழங்காமல், அவரை வெளிப்படையாக விமர்சிப்பவர்களுக்கு முன்னுரை, சார்ரி முன்னுரிமை உண்டு.

5.)
தலைவர் பரிந்துரைக்கும் இசை, புத்தகம், உணவு முறைகளை அப்படியே கடைபிடிப்பதோடு மட்டுமல்லாமல் அதை அவர் முன் நிருபித்துக்கொண்டே இருத்தல் அவசியம். உதாரணத்திற்கு அவர் முன் அமர்ந்து அவர் கவனிக்கிறாரா என உறுதிபடுத்திக்கொண்டு, "என்ன பாஸ், அந்த ம்யூஸிக் லிங்க டவுன்லோட் பண்ணியாச்சா, ஆவ்ஸம், ஆவ்ஸம், ச்ச்செ இவ்வ்ளவு நாளா மிஸ் பண்ணிட்டோமுல்ல ? அப்படியே கையோடு மனைவிக்கு போன் போட்டு, "இஞ்சிய வாங்கிட்டியாமா, மண்ணாருக்கும் நல்லா தேச்சி கழுவிவை, காலைல வெறும் வயித்துல சாப்பிடணும்ல, சுக்க சுக்குப்பொடியா ஆக்கனும், அப்புறம் அந்த கடுக்கா, என்னது கடுப்பாருக்கா, அது சரி, மூட் ஆஃப்ல இருக்க போல, அப்புறமா பேசுறேன் "

6.)
தலைவர் திடுமென உங்களை சந்திக்க ஆசை என்று நடுநிசியில் அழைத்தாலும், நீங்கள் எல்லா வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு ஓடிவருபவராயிருந்தால் உள் வட்ட உறுப்பினராக உங்களுக்கு பிரகாசமான வாய்ப்பு என அறியுங்கள் !

இது போன்ற வாசகர்களுக்கு மட்டுமே உள் வட்டத்தில் நிரந்தர இடம் கிட்டும்
. உங்களுக்கும் உள்வட்டப் பதவி ஆசையிருப்பின் முயற்சியுங்கள்.

சரி
, ’வாலிகிட்ட போவோம். விகடனில் நினைவு நாடாக்கள்என்று ஒரு தொடர் எழுதினார் அமரர் வாலி. அதில் தமக்கும் கண்ணதாசனுக்கும் மிக நெருங்கிய நட்பிருப்பினும் , தொழில் போட்டியும் இருந்தது, சமயங்களில் ஒருவருக்கொருவர் அவரவர் எழுதிய பாடலை பகடி செய்வதும் உண்டு எனவும் எழுதினார். ஆனால், அந்த தொழில் போட்டி என்றுமே வன்மமாக மாறியதே இல்லை என்று கூறி ஒரு நடந்த சம்பவத்தைச் சொல்லினார். இனி பேசுவது வாலி.......

"
எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹொட்டேலில் மாலைச் சந்திப்பு. மது, ஊன் என அமர்க்களப்பட்ட விருந்து. எதோ ஒரு தயாரிப்பாள புண்ணியவான் அருளியது. இது போன்ற விருந்துகளின் உச்சமாக அழகான இளம்பெண்களையும் அந்த விடுதி அறைகளில் வைத்து சுவைக்க ஏற்பாடு செய்வதுண்டு. அன்று மாலை நான், கண்ணதாசன் இன்னும் சிலர் இது போல பல கதைகள் பேசிவிட்டு, ஒருவருக்கொருவர் நக்கல் செய்துவிட்டு மது போதை உச்சத்தில் இருக்கும்போது, ‘அந்த ஏற்பாடும் இருப்பதாய் தயாரிப்பாளர் சொல்ல, நான் எழுந்து முதலாளாய் போக விரும்புவதாகச் சொல்லி, ‘எந்த அறை எண் ?" எனக் கேட்டு, போய்க் கதவைச் சாத்தும் வரை கண்ணதாசன் பார்த்துக் கொண்டிருந்ததார். அப்போது அவர் மிகப் பிரபலமானவர். அவருக்கு நேரடி அரசியல் பெருந்தலைவர்கள், போலிஸ் அதிகாரிகள் எனப் பழக்கமுண்டு. அவர் நினைத்திருந்தால், அன்று என்னை காவல்துறையில் மாட்டிவிட்டிருந்திருக்கலாம், ஆனால் அவர் சுத்தத் தங்கம், அது போல் செய்யவில்லை"

இப்படி வெளிப்படையாக தன் கேரக்டரைச் சொல்லி
, இந்தளவு வெளிப்படையாய் எதையும் சொல்லவதற்கு தூண்டுகோளாய் இருந்தது சாரு நிவேதிதாவின் எழுத்துதான் எனப் புகழ்ந்திருந்தார்.

இப்படியாக சாரு நிவேதிதா முதன்முறையாக ஒரு வெகுஜன ஊடகத்தில் மிகப் புகழ் பெற்ற ஒருவரால் புகழப்பட்டிருந்தார்
. அவ்வமயத்தில்தான் மாமல்லபுர வட்டச் சந்திப்பு நிகழ்ந்தது. அது எக்ஸைல் வெளியீட்டு விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது என ஆலோசிப்பதற்காக நடத்தப்பட்டச் சந்திப்பு.

வாலியெல்லாம் பாராட்டிவிட்டாரே என்ற பெருமகிழ்ச்சியில்
(அப்போது அந்த சாட் மேட்டரால் தலைவரின் புகழ் 99% டேமாஜாகி இருந்தது) நான் சாருவிடம், "சாரு, வாலி இது போல உங்களைப் பாராட்டியதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் ?""
ம்க்கும், சங்கரா, சங்கரான்னு சாகப்போற நேரத்துல புகழ்றாரு, இதனால என்ன பெருசா எனக்கு நல்லது நடந்துடப் போகுது ?"

எனக்கு பக்கென்று நெஞ்சடைத்தது
. அத்துடன் எல்லா அவயங்களையும் மூடிக் கொண்டு ஒரு பார்வையாளனாக மட்டும் அமர்ந்திருந்தேன். சரி எக்ஸைல் வெளியீடு விழாவுக்கு யாரையெல்லாம் அழைக்கலாம் என பேச்சு வந்தபோது, மதன், இந்திரா பார்த்தசாரதி, இன்ன சில விஐபிக்கள் எல்லாம் ஆலோசிக்கப்பட்டது. சில நாட்களுக்கு பின்னால் வாலிதான் தலைமைஎனச் சேதி வந்தது.இதிலருந்து என்ன தெரியுதுன்னா, சரி விடுங்க........

எனக்கெது ரொம்ப எரிச்சலாச்சுன்னா, வாலி இறந்துவிட்டார் எனச் சேதியறிந்தவுடன், ‘நம்ம சாருவை ரசித்த,மதித்த ஓர் ஆளுமை நம்மை விட்டு மறைந்தாலும், எக்ஸைல் வெளியீட்டு விழாவில் அவராற்றிய உரையை மறக்க முடியுமா ?’ என ஓர் அஞ்சலிப் பத்தியெழுதி வாசகர் வட்டத்தில் பதித்தேன். சரியாய் முப்பதாவது நிமிடத்தில் அந்தப் பதிவு தூக்கப்பட்டது. செல்வகுமார் கணேசனோ, பிரியமுடன் துரோகியோ அப்படி தூக்குவதாயின் முன்கூட்டியே ஓர் அறிவுப்பு செய்துவிட்டுத்தான் நீக்குவார்கள். ஆக, மூன்றாவது அட்மின் மட்டுமே அதை நீக்கியிருக்க வேண்டும். சரி வட்டத்தில் இறந்த அஞ்சலி போஸ்டரெல்லாம் ஒட்டக்கூடாது என எனக்கும் தெரியும்தான், சட்டத்தின் முன்னே வாலியாவது கோலியாவது ?


இது போன்ற சந்திப்பில் ஒருமுறை ஏ
.ஆர்.ரஹ்மான் பற்றி சாரு பேசினார். ".ஆர்.ரஹ்மானை எனக்கு இப்போது அறவே பிடிக்காமல் போகிறது. ரிப்பீட் ம்யூஸிக்கையே கொடுக்கிறார், காது ரணமாகிறது" உங்களாலும் அவந்திகா, எக்ஸ், உதஎ, வாசகி கடிதங்கள், தோழியின் குறுஞ்செய்தி, பப்பு ஸோரோ என ரிப்பீட் & ரிப்பீட் மட்டும்தானே செய்கிறீர்கள் என வாய்வரை வந்த கேள்வியை அப்படியே மென்று விழுங்கி, இப்ப கக்கிட்டேன் !

நெல்சன் ஷேவியர் அவர் சார்ந்திருக்கும் தொலைக்காட்சி நிறுவனம்
தலைவரை எப்படி பார்ப்பதாக நடந்த ஒன்றைச் சொன்னார், உண்மையிலே பரிதாபம்தான்.

நெல்சன் ஷேவியர்
, " நான் விவாதமேடை நிகழ்ச்சிக்காக ஓவ்வொரு முறையும் டாபிக்க ரெடி பண்ணிட்டு, ’இதுக்கு சாரு சார் பேசினா சரியாயிருக்கும்னு நிர்வாகத்துகிட்ட சொல்லும்போதெல்லாம், ’அவரா, வேணாமேன்னு தயங்கினவங்க, ஒருமுறை குடிய பத்தின டாபிக்குக்கு, குடிக்கு ஆதரவா பேச யாரைக் கூப்பிடலாம்னு யோசிச்சிகிட்டுருக்கிறப்ப மட்டும், ‘சாருவைக் கூப்பிடுங்க, சரியாப் பேசுவாருன்னாங்க" என்றார். (பாவிங்க அந்த விவாதத்துலதான் என் தலைய தமிழருவி மணியன வச்சு திட்டிப்புட்டாய்ங்க :( )

   
                                 (இப்போதைக்கு முற்றும்)

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!