மழையின் குரல் தனிமை

தற்கொலை என்றவுடனே எனக்கு பத்திக்கொண்டு கோபம் கிளம்பும்.  தற்கொலை செய்துக்கொண்டோரை வடிகட்டிய மா கோழைகள் என மனதுள் திட்டுவேன்.  ஆனால் பல தற்கொலைகளின் வரலாற்றை ஆய்ந்தபோது, செய்துகொண்டவர்களின் கையறு நிலையிலேயே அவைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதுதான் கொடுஞ்சோகம். 


அதுவும் அப்படி நமக்கு நெருக்கமானவர்களுக்கிடையே அவைகள் நிகழும்போதுதான்.......’அய்யோ இப்படி ஆகுமெனத் தெரிந்திருந்தால் இயன்றவரை உதவியிருக்கலாமே ?’ எனக் கண்ணீர் முட்டும்.  


என்ன முட்டி என்ன.....போனது அவ்வளவுதான். ஆனால் அந்த உயிரை நம்பி, நேசித்திருந்து, அவர்களில்லாமல்........ஜீவிக்கப் போகிறவர்களின் நிலை  ? அட அது கூடப் போகட்டும்.  இப்படி ஓர் உயிரின் அகால மரணத்திற்கு துர்விதியால் அல்லது தெரிந்தே..... காரணமாய் இருப்பவரின் கதி ???



ஆம், அதுதான் கீழே தொடரப்போகும் கதை(மதிப்புரை அல்லது தெளிவுரை)யின் மையக்கரு.  ’மழையின் குரல் தனிமை’  ஆசிரியர் பா.வெங்கடேசன்.  சிறுகதையாக காலச்சுவடு சிற்றிதழில் வெளியானது.  சிறுகதைன்னா இதுவும் ராஜன் மகள் போலவே  நீளமானச் சிறுகதைதான்(40 பக்கங்கள்)



Image result for பா.வெங்கடேசன்
விருமாண்டி படத்தில், ”என்னடா ஏற்கனவே பாத்த சீனே திரும்பத் திரும்ப வருது ?”ன்னு ஆரம்பத்துல சில பிஞ்சு ரசிகர்களுக்கு எரிச்சல் எரிச்சலா வந்திருக்கும்.  பசுபதி அவருடைய கோணத்தில் ஒரு கதை சொல்வார்.  பிறகு அதேக் கதையைத்தான் கமலும் சொல்வார், ஆனால் இங்கு கதை கமல் கோணத்தில் சிற்சில திருப்பங்களோடு இருக்குமில்லையா........அத்தகைய கதை சொல்லும் பாணியைத்தான் பா.வெங்கடேசன் பின்பற்றுகிறார், ஆனா இந்த எழுத்தெல்லாம் விருமாண்டிகளுக்கு பல வருடங்கள் முந்தையவை என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.


அந்த ஓசூர் ஜமீன்தார் கொஞ்சம் அடக்கி வாசித்திருந்திருக்கலாம், எழுந்து நிக்கவே வக்கில்லாத உடல்மொழி இருக்கும்போது அவருக்கு அந்தச் சின்னப் பெண்ணை பார்த்தவுடன் வாய்க்குள் ஜொள்ளூறியிருந்திருக்கக் கூடாது :(


ஏற்கனவே இருந்து, இறந்துப்போயிருந்த நோயாளி மனைவியால் கிட்டாத சுகமும், புத்திர பாக்கியமும், இந்த இளமை பொங்கி நிற்கும் இளையராணியால் கிட்டிவிடும் எனக் குமாரசாமி கணக்குப் போட்டு.............மணம் முடித்து தன் ஜமீனுக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்.


ஊரேத் திரண்டு வந்து ஜமீனை வாழ்த்தினாலும், அவர்கள் அரண்மனையைத் தாண்டி வெளியே போவதற்க்குள், ”பெர்சுக்கு இது தேவையாக்கும்.....கைத்தடி கீழ விழுந்தாலே தானா குனிஞ்சி இதால எடுக்க முடியாதுன்றப்ப...........” என்கிற ரீதியில் பலர் கேலிப்பேச்சுக்களை உதிர்த்தபடி போனது, அரண்மனை  காற்றில் கலந்து,  ஜமீனுக்கும் புதியதாய் வந்த இளமை கொப்பளிக்கும் இளையராணியின் காதுகளுக்கும் எளிதாய் எட்டிவிட்டது !


ம்ம்ம்ம்ம்.....என்னத்தச் சொல்ல ? ஊரார் உளறியதையெல்லாம் பொய்யாக்க வேண்டும் என்று எவ்வளவு  நிற்க முயற்சித்தும் ஜமீனால் அந்த இளமையை ஒரே ஒரு நாளேனும் முழுதாய் வெற்றி கொள்ளவே இயலவில்லை, அவர் துவளும்போதெல்லாம் அந்த இளையராணி இருட்டில் எள்ளலாய் உதடு சுழிப்பது ஜமீன் கண்ணுக்கு அப்பட்டமாய்த் தெரியும்.


சரி இருக்கும் பணத்தாலாவது அவளைத் திருப்திப்படுத்தலாம் என்று நம்மில் பல பேர் எடுக்கும் அந்தப் பிரம்மாஸ்திரத்தை எடுத்து எய்கிறார்.  ஊருக்கே பெரிய ஜமீன் என்றவுடன் ஊரில் இருக்கும் எல்லா நிலமும் தன்னுடைய வீட்டுக்காரருக்கேச் சொந்தம் என்று அந்த பாதகத்தி புரிந்துகொண்டாள் போல.......ராமநாயக்கன் ஏரிக்கு அருகே இருக்கும் ஒரு வளமான பசுஞ்ச்சோலையைப் பார்த்தவுடன், அந்தப் பச்சையில் மயங்கி, “எனக்கு அந்த இடத்தில் ஒரு மாளிகையைக் கட்டித்தா” என்று விடுகிறாள், அது பசவண்ணாவின் இடம்.  குடியானவன்.


ஜமீன் கேட்கிறார் என்றால் பெரிய வணக்கம் வைத்து மரியாதையுடன் இடத்தைக் கொடுத்துவிடலாம்தான், அது ஒரு சாதாரண விளைநிலம்தான் என்றால்........ஆனால் இந்த இடம் பசவண்ணாவின் முப்பாட்டனார் காலத்தில் திப்பு சுல்தான் தன்னுடைய குதிரைப் படையை அங்கு நிற்க வைத்து, குதிரை லாயமாய் உபயோகித்துப் பெருமை கொண்ட நிலம்.  போக குதிரை சாணம் சிறந்த எருவாகி சாகாவரம் பெற்ற மண்ணாக வேறு ஆகிப்போனதால், பசவண்ணாவின் பரம்பரைக்கு அந் நிலத்தால் வயிற்றுப்பசி என்னவென்று தெரியாமல் போனதும்.......செண்டிமென்டாய் அந் நிலம் ஒரு மிருத்யுஞ்ஜெயத் தாயாகவும், போற்றப்பட்டு வர............ 


”நீ ஜமீனாயிருந்தா எனக்கென்ன,  மைசூர் மகாராஜா வந்துக் கேட்டாலும் சரி, விக்டோரியா மகாராணியே வந்துக் கெஞ்சினாலும் சரி, இடத்தை என்ன விலைக்கும் கொடுக்க முடியாது” என்றுவிடுகிறார்.


பசவண்ணாவின் அந்த நிலத்துக்கு கைம்மாறாக சில கிராமங்களையேத்  தர ஜமீன் முன்வந்தும், முடிவென்னமோ தோல்வி, தோல்வி.  பழைய திடகாத்திரமிருந்தாலாவாவது அந்த ஆகிருதியைக் கண்டு பசவண்ணா அஞ்சியிருக்கக் கூடும், இந்த தள்ளா வயதில், அதுவும் ரெண்டாம் தாரத்தின் பேராசைக்காக பசவண்ணாவிடம் சண்டையிட்டெல்லாம் அந்த இடத்தைப் பறிக்க ஜமீனுக்கு சிறு எண்ணம் கூட உதிக்கவில்லை, மாறாக பெரும்பணக்காரர்கள் எல்லோரும் செய்யும் ஓர் உபாயத்தை  நாடினார்.


ஊரின் வெள்ளைக்காரக் கலெக்டரிடம் தன்னாசையை ஒரு கோரிக்கையாக வைக்கிறார்.  தங்களுக்காக என்றென்றும் விசுவாசமாக இருக்கும் சில இனங்களின் மீது எப்போதும் பரங்கியருக்கு தனிப் பாசம் உண்டு அல்லவா ?  


’இடத்துக்கு உண்டான எல்லா டாக்குமெண்ட்களையும் எடுத்துக்கிட்டு உடனே வந்து கலெக்டரைப் பார்க்கவும்’ அப்படின்னு ராஜ முத்திரையோட அரசுகிட்ட இருந்து வந்த ஓர் ஆணையைப் பார்த்த மாத்திரத்தில் பசவண்ணாவின் பேஸ்மெண்ட் தள்ளாட ஆரம்பித்துவிட்டது.


”இந்த வெள்ளைக்காரப் பயக வந்ததுக்கப்புறமாத்தான் டாக்குமெண்ட், பேப்பர், கிரயப்பத்திரம்ன்னு ஆக்கிட்டானுக.........என் கிட்ட எங்க இருக்கு ஆதாரம் ? 


இந்த இடம் திப்பு கொடுத்ததுன்னு அப்பாரு சொன்னாரு, அவருக்கு என் பாட்டனாரு சொல்லியிருப்பாரு, பாட்டனாருக்கு முப்பாட்டனாரு சொல்லியிருப்பாரு, அதுதான் இந்த ஊருக்கேத் தெரியுமே ?  ஆனா, அதக் கலெக்டர்கிட்ட வந்து இவங்க சொல்வாங்களா என்ன ?  துரைமார்ங்க முன்னால பேசுறதுக்கு அவ்வளவு துணிவா ? 


அடேய் கெழப்பய ஜமீன், இதெல்லாம் நீ செய்யுற சித்து விளையாட்டுன்னு எனக்குத் தெரியாதா என்ன ?  நீ ஒம் புதுப் பொண்டாட்டி கூடத் துள்ளி வெளையாடறதுக்கு என் தாய்தான் உனக்குப் பலியா ?  இனி  நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த இடம் உனக்கு உபயோகப்படாம செய்யறனா இல்லையா பார்”


பசவண்ணா தன் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் விஷத்தைச் சோற்றில் கலந்து கொடுத்துவிட்டு, ஒரு புங்கை மரத்தில் தூக்கில் தொங்கிச் செத்துப் போனான்.


Image result for தூக்கு


ஜில்லா கலெக்டர் மிக எளிதாக அந்த இடத்தை அரசுடமையாக்கி, பின் அதை முறைப்படி ஜமீன்தாருக்கு கிரையம் செய்துக் கொடுத்துவிடுகிறார்.



ஜமீனுக்கு மனசாட்சி பெரிதும் உறுத்தினாலும் தன் இளம் மனைவியைத் திருப்திப்படுத்த அங்கு ஓர் அழகிய மாளிகையை எழுப்ப, தர்மபுரியிலிருந்து கட்டிட நிபுணத்துவப் பெற்ற  பரமசிவப் பிள்ளையை அழைக்கிறார்.



மிகவும் டிமாண்டான, ஹோசூர், ஹொக்கெனக்கல், தர்மபுரி, ஏலகிரி ஊர்களில் அழகான மாளிகைகள் கட்டிய, பாரம்பரீய முறையில் கட்டிடங்கள் கட்டித்தரும் பரமசிவப் பிள்ளைக்கு இந்த இடத்துக்கு உண்டான எல்லா வரலாறு தெரியுமென்றாலும் சிறிதும் மனக்கிலேசம் கொள்ளாது, அந்த இட அழகில் மயங்கி, இங்கு ஜமீனுக்கு இந்த இடத்தைக் காட்டிலும் ஓர் அழகான மாளிகையைக் கட்டித்தருவது என்று  நம்ம தள்ளா ஜமீனைக் காட்டிலும் அதிக உத்வேகம் கொள்கிறார்.  


Good.  கதை இங்குதான் தொடங்குகிறது ;)


அது அடுத்த பத்திகளில்..........






’கதை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது’ என்று நான் முடித்தவுடன், ’முனி’ அல்லது ’சந்திரமுகி’ கதைகள் போல்தானே இனி இக்கதையும் போகப்போகிறது ?’ என்று பலரும் கேட்டனர், கிட்டத்தட்ட அது மாதிரிதான் எனினும் இங்கு பேய் பித்தலாட்டம் என்றெல்லாம் எதுவுமில்லை.  



ஆனால்........மனமிருக்கும் மனிதர்களின் ’மனசாட்சி’ இருக்குமல்லவா.........அது உறுத்த ஆரம்பித்த பின், எதேச்சையாய் நடக்கும் பிழைகளென்றாலும் மூலகாரணம் ’அதனால்தானோ ?’ என்று ஓர் எண்ணம் கிளர்ந்தெழும். அப்படி அந்த எண்ணம் நம்மை ஆக்கிரமிக்க முயலும்பட்சத்தில் அதை தொடர்ந்து ஆள விட்டோமானால்.............ஆமாம், அந்த எண்ணங்களே பேயாய், பிசாசாய், ஆவியாய்........ நம்மைப் பயமுறுத்த ஆரம்பிக்கும்.



பயம் ஏற ஏற........நாம் செய்யும் செயல்களில் பிழைகள் நமக்குத் தெரியாமல் புகுந்து சிறுகச் சிறுக காரியத்தைச் சிதைக்கும்.   சிதையும் காரியங்களால் நற்பெயருக்கு இழுக்கு, குடும்பத்திற்கு கேடு, துன்பம் மேல் துன்பம் என எல்லாமும் தொடர்ந்து வந்து..........விரைவில் மனசாட்சியே நம்மைத் துடிதுடிக்கக் கொன்றும் பழி தீர்க்கும், அதுதான் நடக்கிறது ஜமீனுக்கும், அவர் மனைவிக்கும்,   பிடிவாதமாய் அங்கு கட்டிடத்தை எழுப்பிக் கொண்டிருக்கும் பரமசிவப் பிள்ளைக்கும், அவர் மனைவிக்கும். ஆனால் ஒரு ட்விஸ்ட்.  மிஷ்கினின் பிசாசு தன்னைக் கொன்றவருக்கு நல்லது செய்யுமில்லையா ?  அது போல ஒரு நல்லதும் நடக்கிறது பரமசிவப் பிள்ளைக்கு ;)



கைராசிக்காரரும், கட்டிடக்கலையில் மிகத் திறமையானவருமான(இவர் சுவருக்கு அடிக்கும் சுண்ணாம்புப் பூச்சில் குடும்பத் தொழில் ரகசியமான ஒரு கலவையைச் சேர்ந்து கலந்து அடிப்பாராம், அது செண்பகப் பூ மணத்தை மட்டும் அள்ளித் தருமாம், கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆனபின்னரும் அந்தச் செண்பகப் பூ வாசம் மட்டும் போனதில்லையாம்) பரமசிவப் பிள்ளைக்கு ஆரம்பத்தில் பெரிய சுணக்கங்கள் வரவில்லை.



ஆனால் கட்டிடம் அடுத்த மாடிக்குப் போகும் போது தொடர்ந்து சிக்கல்கள் உருவாக ஆரம்பிக்கின்றன.  முதல் சிக்கல்....... ஜமீனின் இளம்மனைவிக்கு குழந்தை இறந்து பிறக்கிறது(!)  



தன் இளம்மனைவி கர்ப்பமானதில், அவளுடைய இடைவிடா தொணத் தொண நச்சரிப்புகளில் இருந்து தற்காலிகமான விடுதலை கிட்டுமென்கிற மகிழ்ச்சி ஜமீனுக்கு ஒருபுறம் இருப்பினும், வயிறைத் தள்ளிகொண்டு அவளைக் காணும்போதெல்லாம் கடும் எரிச்சலும் வரும்.  அதேபோல, ’குழந்தை இறந்து பிறக்கும் வழக்கம் ஜமீன் பரம்பரையில் யாருக்குமே இருந்ததில்லை’ என்கிற ஊராரின் பேச்சு சற்றே ஜமீனை ஆறுதல் கொள்ளச் செய்தாலும், அது இரட்டை அர்த்தமான வார்த்தைகள் என்பதால்.........இதெல்லாமே பசவண்ணா ஆவியின் செய்கைகள்தான் என்று அவர் ஆழமாக நம்பினார்.



”இவ்வளவு நாள் ஒரு பிணத்தையா  நான் சுமந்தேன் ?” என்று திரும்பத் திரும்பக் கேட்டபடி அந்த இளையராணி கிறுக்குப் பிடித்துப் போய் அதன்பின் அந்த அறையை விட்டு அவள் சாகும்வரை வெளியேறவேயில்லை, மேலும் அடுத்த சில வருடங்களில் அவளின் அந்த பொங்கும் இளமை அவ்வளவும் வற்றி, வதனத்தை நோக்குகையில் அந்தக் கிழச் ஜமீனைக் காட்டிலும் முதுமையாய் மாறிப்போனாள்.



பரமசிவப்பிள்ளை வரலாற்றில் இதுவரை நிகழாத...... உத்திரங்கள் தாங்காமல் மேல்தளம் சரிந்து அதில் சிலர் இறந்த நிகழ்வு இரண்டாவது சிக்கலாய்.........வருகிறது, அந்த ஜமீன் குழந்தை பிறந்திறந்த சில நாட்களிலேயே.   



ஜமீன் நேராய் வந்து, பரமசிவப்பிள்ளையின் கைகளைப் பற்றிக்கொண்டு, “போதும், எல்லாத்தையும் நிறுத்திடுவோம், இனி ஒரு வேலையைச் செய்ய பசவண்ணாவின் ஆத்மா நம்மை விடாது, நான் பேசியபடி முழுத் தொகையையும் கொடுத்திடறேன், இடத்த விட்டு எல்லோரும் கிளம்புங்க, இந்த இடம் இப்படியே இருந்து, எக்கேடாவது கெட்டுப் போகட்டும்” என்று கெஞ்சினார்.  



ஊருக்குள்ளேயும்,  ”பசவண்ணா தன் வேலையை ஆரம்பித்துவிட்டார், இனி எல்லாவற்றையும் ஜமீன் இழப்பார் பாருங்கள்” என புதுப்புது கதையாய் சொல்ல ஆரம்பித்தது.



ஆனால் பரமசிவப்பிள்ளைக்கு இது ஒரு Prestige Issue.  தன் கையால் கட்டப்பட்ட கட்டிடம் சரியுமா ?  ஜமீன், மிராசுதார், குட்டி ராஜாக்கள், துரைமார்கள் போன்றோர்களுக்கு சிறப்பான கட்டிடங்கள் கட்டியதன் மூலம் பல பதக்கங்கள், சிறப்புப் பரிசுகள் கட்டிய தமக்கா இந் நிலை ? பொதுவாக பரமசிவப் பிள்ளை கட்டிடங்கள் கட்டித்தரும் முன்னர் ஓர் ஒப்பந்தம் போடுவாராம்.  அதன்படி, கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் வரை அக் கட்டுமானத்துக்கு உத்திரவாதம் உண்டு.  



மேற்கூறிய வருடங்களில் கட்டிடச் சிதைவு, விரிசல் அல்லது கட்டிடப் பூச்சில் குறைபாடுகள் வந்தால்...... விலையில்லாமல் அதைத் தீர்த்துக் கொடுப்பது என்றும், அந்த வருடங்களில் மட்டும் ஒரு சிறப்புத் தொகையை பரமசிவப்பிள்ளைக்கு கட்டிடச் சொந்தக்காரர் கொடுத்துவர வேண்டுமென்றும் அந்த ஒப்பந்தத்தில் ஷரத்துகள் இருக்கும்.  இன்றைய தேதி வரை கட்டிடக்காரர்கள் அந்தச் சிறப்புத்தொகையை பரமசிவப்பிள்ளை வசிக்கும் தர்மபுரியைத் தேடிவந்து கொடுத்திருக்கிறார்களே ஒழிய.........ஒருபோதும் அவர் கட்டித் தந்த கட்டிடங்களில் மரமாத்து பண்ணச் சொல்லிக் கோரியதேயில்லை.  பரமசிவப் பிள்ளையின் பிடிவாதம் இங்கு கூடிப் போகிறது.  ஜமீனிடம், ”இனி ஒரு நயா பைசா கூட உங்களிடம் இக் கட்டிடச் செலவுக்காக வாங்க மாட்டேன்” எனச் சபதம் எடுக்கிறார்.  ’முழு கட்டிட வேலைகளை தம் செலவில் முடித்துக் கொடுத்துவிட்டு அதற்குரியச் செலவுகளைப் பெற்றுக் கொள்வேன், என்னைத் தடுக்க வேண்டாம்’ என்றும் சொல்லி விடுகிறார்.   



”அடக்கெரகமே உனக்கு பசவண்ணாவே தேவல போலயே ?” என்று தலையில் அடித்துகொண்டு ஜமீன் அகன்று விடுகிறார்.  ஆக்சுவலாக ஜமீன் இத்துடன் இனி சீனில் இல்லை.  பித்துபிடித்து குரூபியாகிப் போன தன் மனைவியுடன் அரண்மைனைக்குள் தன் தள்ளாத வயதைக் கழிப்பதே தாம் செய்த பாவத்துக்கு தண்டனை என இருந்துவிடுகிறார்.    ஆனால் அந்த பசவண்ணாவிடம் பறித்த இடத்தை மட்டும் பரமசிவப்பிள்ளை பெயருக்கு எழுதி வைத்துவிடுகிறார்.



ஒருமுறை செண்பகப் பூக்கள் மணத்தைப் பரப்பும் அந்தப் பூச்சுக்கலவையில் கொத்து கொத்தாக பல்லிகள் எவ்வாறோ விழுந்து இறந்துப் போயிருக்க, அதை அறியாமல் சுவர்களில் பூசிவிட்டு.........அதிலிந்து கசிந்த கசப்பு வாசத்தால் பலருக்கும் ஆளைக்கொல்லும் சுரம் வந்து, பல நாட்கள் வேலை தடைப்பட்டுப் போகிறது.  உள்ளூர் ஆட்கள் யாருமே வேலைக்கு கிடைக்காமல், இந்த இட வரலாறு அறியாத ஊர்களில் இருந்து கொத்தனார்களை அழைத்து வருகிறார் பரமசிவப் பிள்ளை.  அந்தப் பல்லி கலந்த பூச்சுக்கள் யாவும் சுரண்டப்பட்டு நீக்கப்படுகின்றன.



Image result for மாளிகை
தினமும் வேலைமுடிந்து அந்தி சாயும்பொழுதில், ராமநாயக்கன் ஏரிக்கரையிலிருந்து தர்மபுரி அருகிலிருக்கும் தன் வீடு செல்ல பரமசிவப்பிள்ளைக்கு  மாட்டு வண்டியொன்றை ஜமீன் அனுப்பி வைப்பார்.  அது அந்தக் கட்டிட வேலைகளில் பரமசிவப்பிள்ளை இருக்கும்வரை தொடர்ந்தது.  ஆனால் தொடர்ந்து வேலையில் குளறுபடிகள் நடந்து, கட்டிடம் சரியாக எழும்பாத வெறியில்.......ஒரு கட்டத்தில் இரவும் அந்தக் கட்டிடத்திலேயே தங்க ஆரம்பிக்கிறார் பரமசிவப் பிள்ளை.



’வென்றே தீர்வேன்’ என்கிற பரமசிவப் பிள்ளையின் வெறியில் அவருடைய அழகு குலைகிறது.  ’நீண்ட நாட்களாக வரவில்லையே கணவருக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டு நாளாயிற்றே, இந்த பாழாய்ப்போன கிழத்தால் என் புருஷன் கதி என்ன ஆகுமோ ?’ என்று கணவனுக்குப் பிடித்ததை சமைத்து எடுத்துக்கொண்டு அவரைப் பார்க்க வரும் அவருடைய மனைவி, பரமசிவப்பிள்ளையின் தோற்றத்தைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைகிறார்.  பார்க்க அப்படியே பசவண்ணாவைப் போல் மாறியிருந்ததாக கத்திக்கொண்டே தலைதெறிக்க அவள் தர்மபுரியை நோக்கி ஓடியதாக ஊர்மக்கள் பேசிக்கொண்டனர்.   பசவண்ணாதான் பரமசிவப்பிள்ளை உடலில் முழுதாக இறங்கி அந்தக் கட்டிடத்தை பிடிவாதமாக எழுப்பிக்கொண்டிருப்பதாக ஊர்ப்பேச்சு காற்றில் பரவியது.  இங்குதான் கதையின் தலைப்பு நிகழ ஆரம்பிக்கிறது.



ஆமாம், இதுவரை அதாவது கடந்த 100 ஆண்டுகளில் கேள்விப்படாத ஆழி மழை அந்தப் பகுதியில் பெய்யத் தொடங்குகிறது.  ’உள்ளதும் போச்சு’ என்று எழும்பியச் சிலத் தளங்களையும் பூச்சு காய்வதற்குள் மழை வந்து கொண்டுபோனது.  அந்த ராட்சத மழையிலும் பிள்ளை அந்தக் கட்டிடத்துற்குள்ளேயே தங்கினார், இருந்தும் அந்த மழையேதான் ஒரு நாள் பசவண்ணாவின் பசுஞ்சோலையை விட்டுத் துரத்தியது, கையில் ஒரு குழந்தையுடன் !



அக்குழந்தையை மழை வெள்ளம் அடித்துக் கொண்டு வந்திருந்ததாய் பரமசிவப்பிள்ளை அவர் மனைவியிடம் சொன்னார்.  கையில் ஒரு குழந்தையுடன் பல மாதங்கள் கழித்து தன் கணவன் வெளியே மழையில்  நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததுமே அவள் ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.  தன் கணவனை மீட்டுக் கொடுத்த ஒரே காரணத்துக்காக அக் குழந்தையை சீராட்டி பாராட்டி தன் மும்மக்களோடு சேர்த்து வளர்க்கிறார்.  அம் மும்மக்களும் தங்களுக்கு கிட்டிய தம்பியை மாற்றுப் பிள்ளையாகக் கருதாமல், சரி சம மரியாதையுடன் போற்றுகிறார்கள்.  பிள்ளையின் மனைவி அப்போதுதான் ஓர் அதிசயத்தைக் காண்கிறாள்.  



மழையில் ஊறிப்போய் மண் சகதியில் இருந்த குழந்தை ஒரு சொட்டு கூட அழவில்லை, அதுகூடப் பரவாயில்லை அதற்கு சிறு காய்ச்சலோ, சளியோ கூடப் பிடிக்கவில்லை. அது வளர வளரத்தான் மழைக்கும், அவனுக்குமான பிணைப்பே புரிபடுகிறது.  அவன் மழையின் குழந்தை அல்லது மழையின் காதலன் என ஊராரால் போற்றப்படுகிறான். சாரங்கள் என்ற அந்த மழையின் மைந்தனை ஒருபோதும் நீரால் வரும் எந்த நோயும் தீண்டியதேயில்லை என்பதுதான் பெருஞ்சிறப்பு.



குழந்தையோடு வந்த பரமசிவப்பிள்ளை அதன்பின் தன்னிலை மறந்து நோயில் விழ, பின் குணமான பின்னரும் அவருக்கு அந்தக் கட்டிடம் பற்றிய நினைவே இல்லாமல் போய்விட்டது, போக அவர் அதன்பின் எந்த பில்டிங் ஆர்டர்களையும் ஏற்கவில்லை.  அவருடைய இரு மகன்களும் தங்கள் குலத் தொழில் வேண்டாம் என வேறு வேறு ஊர்களில் வேறு வேலைகள் தேடிப் போய்விட்டனர்.



Image result for மழை
சாரங்கள் மிகத் துணிவான பையனாக வளர ஆரம்பிக்கிறான்.  பெருமழைக் காலங்களில் அவனுடன் விளையாடும் சிறுவர்களெல்லாம் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க, இவன் மட்டும் அந்த மழைக்காலங்களில் காடுகள், மேடுகள் எனத் தனியே துணிந்துச் சென்று, விளையாட்டுகளின் போது மறைந்து கொள்ள அல்லது விளையாட புதுப் புது இடங்களைக் கண்டுபிடித்து........அதை தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்கிடையே பெரிய நாயகன் அந்தஸ்தைப் பெறுகிறான். பரமசிவப்பிள்ளையும், அவர் மனைவியும் கூட சாரங்கனின் இச்செயல்களைத் தடுக்கவில்லை. மழையும், நீரும் அவனை எந்தத் துன்பமும் தீண்டாது காப்பாற்றும் எனத் திடமாக நம்பினார்கள்.  



இப்படியாக ஒரு கடுமையான மழைநாளில் அலைந்து திரியும் சாரங்கன், காட்டின் நடுவிலிருந்த அந்த பாழடைந்த மாளிகைச் சிசிலங்களை  கண்டடைகிறான்.  அதன் நேர்த்தியான கட்டுமான அழகில் மயங்கி, ஓய்வுவேளைகளில் விளையாட இதைவிடச் சிறப்பான களம் உலகிலேயே இல்லை என நண்பர்களிடம் பெருமை பேசி அவர்களை அங்கு அழைத்துப் போகிறான், அந்தப் பசங்க எல்லோருக்குமே அங்கு போனவுடன் அதன் வரலாறு தெரிந்துவிடுகிறது.......சாரங்கனுக்கு மட்டும் இது தெரியாமல் போனதை கேலி பேசி, உடனடியாக இந்த இடத்தை விட்டு போய்விடலாம் என்று அகல்கின்றனர்.  ஆம், பசவண்ணா நிலத்தில் எழுப்பப்பட்டு, பாதியிலேயே நின்ற ஜமீன் மாளிகைதான் !



இம் மதிப்புரைக்கு இங்கு முற்றும் போடலாம். ஏனென்றால் அதன் பின் அந்த மாளிகையை சாரங்கனே அவனுடைய அப்பாவின் மேற்பார்வையின் நவீன பாணியில் மிகச் சிறப்பாக கட்டுகிறான்.  பரமசிவப்பிள்ளைக்கு ஒரு நல்லது நடந்தது என்று இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் சொன்னேனில்லையா.......அது சாரங்கன் இவருக்கு கிட்டியதுதான்.  ரத்த வாரிசுகளெல்லாம் குலத் தொழில் வேண்டாம் என்று சென்றுவிட, வளர்ப்புமகன் பரமசிவப் பிள்ளையின் பரம்பரைப் புகழை தக்கவைத்ததோடு மட்டுமல்லாமல் கட்டிடக் கலையில் பலப் பல நவீனப் புதுமைகளைப் புகுத்தி, உச்சப் புகழ் பெறுகிறான்.  பரமசிவப் பிள்ளையின் எஞ்சிய காலமும் சாரங்கனோடே கழிகிறது !



அவன் அப்பாவிற்கு அத்தனை சிக்கல்களைக் கொடுத்த அம் மாளிகை சாரங்கன் வளைவுக்கெல்லாம் ஒத்துழைக்கிறது.  ஊரே வியந்து போற்றுமளவு புதுமனை புகுவிழா நடத்துகிறான் சாரங்கன்.  அதில் கலந்து கொள்ள வரும் ஊரின் பிரபல பணக்காரப் பரத்தை கமலத்தின் அழகில் மயங்கினாலும், அவளுடன் அவன் இணைவதை மழை வெறுக்கிறது.



ஒரு பெருமழை  அம் மாளிகை மீது பொழியும்போது, பிரவாகமாய் அவ்வீட்டின் மேலிருந்து ஓடிவரும் நீர், அந்த மழை வீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் எல்லாச் சிலைகள் புழைகளின் வழியாகவும் பாய்ந்து, நேர்த்தியாக அந்த வீட்டை விட்டு வெளியேறிக் கால்வாய்களில் செல்லும் அழகைத்தான் ஒரே சமயத்தில் கமலத்தின் மகள் சிந்தாமணியும், பரமசிவப்பிள்ளையின் ஆவியும் பார்க்கிறார்கள்.  இந்தக் கதையை இந்தப் பத்தியிலிருந்துதான் ஆரம்பிக்கிறார் ஆசிரியர் ;)



நன்றி,  முற்றும் !!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!