சனி, 6 ஜூன், 2015

மானியம் துறப்பீர் :(

நமக்குச் சமையல் வாயு கொள்கலன்களைத் தூக்கிச் சுமந்து வந்து தரும் தொழிலாளர்களெல்லாம் சேர்ந்து சென்னையில் ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்களாம், அதாவது GAS க்காக நாம் இந்திய அரசிடம் இருந்து பெறும் மானியத்தை, விட்டுத் தர வேண்டுமென வலியுறுத்துவதே அந்த விழிப்புணர்வின் நோக்கமென செய்தித்தாள்களில் வாசித்தேன்.  


Image result for gas cylinder agency workers
பேரணியின் உச்சகட்டமாய் அந்த ஊர்வலத்தில் பங்குபெற்றிருந்தவர்களில் சில( 50 - 60) தொழிலாளர்கள் தங்களுக்கு இந்த மானியம் இனி வேண்டாம் என்று அதற்கான விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட்டும் கொடுத்தார்களாம்.இதை வாசித்ததில் இருந்து என்னை பெருங் குற்றவுணர்ச்சி ஒன்று ஆட்கொள்ள ஆரம்பித்தது.  நான் மொத்தமே என் குடும்பத்திற்காக வருடத்தில் ஐந்து அல்லது ஆறு சிலிண்டர்கள் உபயோகிப்பேன், ஆக அதிக பட்சம் எனக்குக் கிட்டப்போகும் ஆயிரம் அல்லது ஆயிரத்து இருநூறு ரூபாய்கள் கிட்டும் மானியத்தை நாட்டுக்காகத் துறப்பதில் என்ன தவறு ?  கடுமையாக வெயிலிலும், மழையிலும், பனியிலும் உழைக்கும் வர்க்கமே நாட்டுக்காக இப்படி தியாகம் செய்யும்போது, சொகுசாக ஏசி, குஷன் நாற்காலி, ஆப்பிள் கம்ப்யூட்டர், மாதம் சில ஆயிரங்கள் தின்னும் டேட்டா கார்ட் இணைப்பு என வாழும் நம்மால் இச் சிறுதொகையை புறக்கணித்து வாழ முடியாதா என்ன ?  இதையெல்லாம் மோடிஜி, அம்பானிஜி துறந்த போதே உதித்த சிந்தனைகள்தான் எனினும், இப்போது இந்த விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்த வாயு உற்பத்தி நிறுவனங்களான Indian Oil, Hindustan Petrolium, Bharath Gas.........போன்ற ராட்சஷ நிறுவனங்களின் செய்கையை எண்ணிப் பார்க்கும்போதுதான், இந்த உணர்ச்சி இன்னும் பெரிதாய் என்னை குத்த ஆரம்பித்தது.  இருந்தாலும்.......

Image result for chennai gas cylinder suppliers rally

உண்மையில் வாயு உற்பத்தி விலை(அல்லது பெட்ரோல் உற்பத்தி விலை) போக்குவரத்து, நிர்வாகம், தொழிலாளர் செலவுகளெல்லாம் சேர்த்து வரும் தொகை எனப் பார்த்தால் அதன் கூட்டுத்தொகை, இப்போது மானியம் போக நாம் கொடுக்கும் நிகரத்தொகைக்கு பாதிகூட வராது.  இவர்கள் அந்த வரி, இந்த வரி, நொந்த வரி, கார்பன் வரி, சுங்க வரி, சேவை வரி, உயர்கல்வி, இடைக்கல்வி உபரி வரி என பட்டியலை பெரிதும் இழுத்துத்தான்..........பிறகு அதிலிருந்து மானியம் என்ற ஒரு பிச்சைப் பங்கை, காய்ந்த ரொட்டித் துண்டாய் நமக்குத் தூக்கியெறிகிறார்கள்.  சரி போய்த் தொலையட்டும் அவைகளெல்லாம், நம் நாடு முன்னேற நாம் கொடுக்கும் விலை என சமாதானம் செய்யக்கூட விடாமல், ’இப்படி மானியத்தைத் துற’ என்று குற்றவுணர்ச்சியைத் தூண்டுகிறார்கள்.

Image result for karunanidhi black cats

எனக்குத் தெரிந்த ஓர் எழுத்தாளர் இருக்கிறார், இப்படியாகவெல்லாம் கூட இப்போது அவர் எழுதுவதில்லை ஆனால் இதுபோலெல்லாம் தன் இளமையில் ஒரு நூறு அல்லது இருநூறு ஜிப்பா பைஜாமா, சோடாபுட்டி கண்ணாடி, தோள் துணிப்பை ஆசாமிகள் அரைகுறையாக வாசிப்பதற்கு எழுதினாராமாம்....... ”நான் இந்தக் கேடு கெட்ட, மதிக்கத் தெரியாத, சுரணையற்ற தமிழ்ச் சமூகத்துக்காக எவ்வளவு எழுதியிருப்பேன், எவ்வளவு இச் சமூகம் சீர்பட உழைத்திருப்பேன், எனக்கு என்ன மயிரு செய்தது இந்த தமிழ்ச் சமூகம் ? இதுவே கேரளவாயிருந்தால் என் எழுத்துக்காக மாதம் சில லட்சங்களை அந்த நல்ல வாசகர்கள் என் நூல்களை வாங்குவதன் மூலம் ராயல்டியாக எனக்குக் கிட்டியிருக்கும், அட்லீஸ்ட் யூரோப்பில் பிறந்திருந்தால் மேன் புக்கர், நோபல் என என் எழுத்துக்கு கிட்டி கைச்செலவுக்காகவது சில கோடிகள் கிட்டியிருக்கும்,  என் நூல்கள் இங்கு 80க்கு மேல்(வருடத்திற்கு)விற்கப்போவதில்லை, அப்படியே அது 800 வித்தாலும் 80தான் விற்றதாக பதிப்பாளர் காண்பித்து கோடிகளில் புரள்வார், வளர்வார், நானோ அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இங்கு நெட்டில் இப்படியாக உங்களுடன் புலம்பிக் கொண்டிருப்பேன், என் நாய்கள் பசி தாங்க முடியாமல் பக்கத்து வீட்டிற்கு யாசகம் வேண்டி சென்றிருக்கின்றன, ஓர் எழுத்தாளனை இப்படி அழ விடும் இனம் வீழுமா வாழுமா ?  வாழ வேண்டுமெனில் இந்த அக்கவுண்ட் நம்பருக்கு பணம் போடுங்கள், போடாவிடினும் பரவாயில்லை பொத்திக்கொண்டுச் செல்லுங்கள், எக்காளம் செய்தீர்களெனில் இயற்கை அல்லது நான் வணங்கும் அம்மன் உங்களை நிச்சயம் தண்டிக்கும்”  என்றெல்லாம் கிட்டத்தட்ட செப்படி வித்தைக்காரர்கள் ரோட்டில் கும்பல் கலைந்துவிடாமலிருக்க மிரட்டுவது போலெல்லாம் பயமுறுத்தி, நம்முள் குற்றவுணர்ச்சியை விதைப்பார்.  நானும் சரி நம்மாலாவது இந்த தமிழ்ச்சமூகம் வீழாமல் நீடுழி வாழ வேண்டுமென அவர் ஆன்லைனில் அவ்வப்போது பணம் போட்டிருக்கிறேன்(ஒருமுறை என் போனுக்கு ரீசார்ஜ் செய்யவும்ன்னு அவர் பதிவு போட 100 ரூபாய்க்கு செய்தேன், த்தூவென காறி உமிழ்ந்தார், ’ரீசார்ஜ் என்றால் 1500 ரூபாய் அல்லது அதற்கும் மேலான தொகைக்கு செய்வதாம், டாப் அப் எல்லாம் செய்து இந்தத் தமிழ்ச் சமூகம் ஏன் இப்படி எழுத்தாளர்கள குதத்தில் புணர்கிறது ?’ என்று எனக்கு நன்றி காட்டினார்.  இங்கு வடிவேலு தன் ஆள்காட்டி விரலை தன் முகத்துக்கு எதிராக நீட்டி.........உனக்கு இது தேவையா ? என ஒரு மிமியை போட்டுக்கொள்ள வேண்டியதுதான்)

Image result for vadivelu

Sorry, சொல்ல வேண்டிய விஷயத்துக்குள் வராமல் அரைத்த மாவை அரைத்து விட்டேனே :(நேற்று ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் சொத்தாக 117 கோடி எனக் காட்டியிருந்தாராம்.  2001 அல்லது 2006 தேர்தல்.  ஜெயலலிதா தன் சொத்தாக 24 கோடி எனச் சொல்ல, கருணாநிதி 25 கோடி எனக் குறிப்பிட்டிருந்தார்(கலைஞர் டிவியில் ஜெயலலிதா 54 கோடி எனச் சொன்னதாகச் சொல்லினர், ஒருவேளை நான் சொன்னது 2001 தேர்தலோ, என்னமோ ?)  கோடிகள் கோடி கோடியாக முட்டையிடுபவைகள் என்பதால் இதில் எந்த சர்ச்சைகளுக்குள்ளும் நாம் போக வேண்டாம்.  ஆனால் இவர்கள் செய்யும் செலவுகள் ???

Tamil Nadu Chief Minister Jayalalithaa files her nomination for the RK Nagar bypoll to be held on June 27, in Chennai on Friday.

ஒரு முதல்வர் தெருவுக்கு வர சில கோடிகளை நம் வரிப்பணத்திலிருந்து எடுத்து இந்த அரசு செலவு செய்கிறது ?  100 அரசு வாகனங்கள், அதன் தேய்மானங்கள், எரி பொருள் செலவு, ஓட்டுனர்கள், 40 கருப்பு பூனைகள், அவர்களது சம்பளம் அந்தப்படி, இந்தப்படி, 400 உயர் காவல்துறை அதிகாரிகள், அவர்களுக்கு 100 வாகனங்கள், அவர்களுக்கு 1200 உதவியாளர்கள், 4000 காவல்துறையினர் அவர்களது செலவு, இதுபோக அந்த வாரியத் தலைவர்கள், இந்தத் துறைத் தலைவர்கள் என சில நூறு பேர்கள்.............இதே பிரதமரெனில் அப்படியே மேலே குறிப்பிட்டவர்கள் பக்கத்தில்  ஒரு பூஜ்யத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள் :(

Image result for chief minister security

அட எழவு இந்த சி எம், பி எம், மினிஸ்டர்ஸ் செலவுகளையெல்லாம் கூடப் பொறுக்கலாம், அதற்கடுத்த நிலைகளில் இருக்கும் அரசு பதவியிலிருக்கும் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் கூட தங்கள் பதவியினால் கிட்டும் அரசுச் செலவுகளை தண்ணீராக செலவளிப்பார்கள்.  கவர்னர் பதவி என்பது ஆட்டுக்கு இருக்கும் தாடி போல..........ஒரு டேஷுக்கும் உபயோகமில்லாத பதவி என்று அண்ணா சொன்னார் எனக் கேள்விப் பட்டுள்ளேன்.  இன்று அப்படியாக ஒரு கவர்னர் செய்தச் செலவுகளைப் படித்தவுடன்தான் ரத்தம் உச்சந்தலையை உடைத்து பீச்சியடிக்குமளவு வெறி ஏறியது.

Image result for chief minister security

மக்களின் வரிப்பணத்தில் சொகுசை அனுபவிக்கும் அரசியல்வாதிகளே, அரசு அதிகாரிகளே, ஊழியர்களைத் தூண்டி நாடு முன்னேற அயராதுழைக்கும் பொதுத்துறை நிறுவன உயர் அதிகாரிகளே.........உங்களை நோக்கி ஒரு கேள்வி.  


‘எனக்கு உதவிக்காக நியமிக்கப்படும் ஆட்களின் சம்பளைத்தை, என் அரசு காருக்கு ஆகும் பெட்ரோலை, என் பயணச் செலவின் ஒரு பங்கை, பயணங்களில் ஒருவேளை சாப்பாட்டிற்காகும் மாதச் செலவை...........இனி நானே ஏற்றுக் கொள்கிறேன்,  என் சம்பளத்திலிருந்து அதைப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று நீங்கள் எழுதிக் கொடுக்கத் தயாரா ?  உங்களில் பலபேருக்கு வெறும் சம்பளம் மட்டும் இல்லைதானே ? துணிந்து நாடு முன்னேறச் செய்யலாமே ?எங்கள் ரத்தங்களை சிறுகச் சிறுக உறிஞ்சிக் குடித்துக்கொண்டே தொடந்து, ’ரத்த தானம் நாட்டுக்கு நல்லது’ எனச் சொல்லும் உங்கள் முகமூடியை கொஞ்சம் கழற்றி, தியாகம் செய்ய முன் வாருங்கள்.  எங்கள் ரத்தம் குடித்துச் செழிப்பாகவிருக்கும் உங்கள் தேகம் இந் நாட்டுக்காக கொஞ்சம் வளைந்து கொடுக்கட்டும்.  எங்கள் வரிப்பணத்தில் கிஞ்சித்தும் கருணையில்லாது கொழிக்கும் உங்கள் வாழ்க்கைமுறையைக் கொஞ்சம் உற்றுப்பார்த்து வெட்கப்பட்டுவிட்டு..........பிறகு மானியப் பிச்சை பெறும் எங்களை நேர்ப்படுத்த வாருங்கள்.  இதோ கீழே கர்நாடக கவர்னர் ஒன்பது மாதங்களில் செய்த செலவுத் தொகை. இதை தகவலறியும் சட்டம் மூலம் கோரிப் பெற்றார்கள் என இன்றைய தமிழ் ஹிந்துவில் வாசித்தேன் :(

Image result for police security for prime minister of india

கர்நாடக கவர்னர் திரு.லஜூபாய் லாலா, தன் மனைவி, இரு மகன்கள் & மகள்கள்,  ஆறு பேரக் குழந்தைகளுடன்(பேரக் குழந்தைகள் என்றிருப்பதால் மருமகன்கள் & மருமகள்களும் உடன்தான் இருக்க வேண்டும்) 17 ஏக்கர் பரப்பளவுள்ள ராஜ்பவனில் வசித்து வருகிறார்.  இதிலுள்ள சில கட்டிடங்களைப் புதுப்பிக்கவும், சமையலறையை மாடுலர் கிச்சனாக மாற்றவும், குளியறைகளில் உயர்தர டைல்ஸ்களை ஒட்டி சீரமைக்கவும் அவர் கர்நாடக அரசிடம் கோரிப் பெற்ற தொகை 600 லட்சங்கள்(ஆறு கோடின்னா நமக்கு அலட்சியமாத் தெரியும்)

Image result for karnataka governor 2015

இந்த அறுநூறு லட்சங்களில் கணிணிகளை அப்க்ரேட் செய்ய 30 லட்சங்களும், தொலைபேசிகளை மேம்படுத்த 25 லட்சங்களும் செலவானதாகக் கணக்கு காண்பித்திருக்கிறார்கள்.  சுரேஷ் கல்மாதியே தேவல போலயேய்யா ;)இதெல்லாம் இவர் 9 மாதங்களில் செய்த செலவுகள் மட்டுமே அதாவது மாதத்திற்கு 65 - 70 லட்சங்கள்.  போக, இந்தக் குடும்பத்திற்கு பணிவிடைகள் செய்யவும், ராஜ்பவன் உள்ளே இருக்கும் தோட்டங்களை பராமரிக்கவும்............. 300 ஊழியர்கள் உள்ளனராம்.

Image result for president house of india

ம்க்கும், இதவிட நம்ம கிண்டி ராஜ்பவன் பெர்சு. அங்க இருக்கிற ரோசய்யா செலவையும், அத விட பெரிசா வச்சிருக்க பிரணாப் முகர்ஜி செய்யுற செலவையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சா, நாம எல்லோருமே மாவோயிஸ்டாவோ, நக்ஸல்சாவோ நிச்சயம் மாறிடுவோம், அதனால கொஞ்சம் ஜில்லுன்னு தண்ணியக் குடிச்சிட்டு, மொபைல்ல ட்ப்ஸ்மாஸ் ஆப்க்கு போய்...............”ஏ  நான் ஓங்கியடிச்சா ஒன்ட்ற டன் வெயிட்ரா, பாக்குறியா, பாக்குறியா” ன்னு ஒரு பர்ஃபார்மன்ஸ் பண்ணி என்னை டேக் பண்ணி விடுங்க  ;)நன்றி !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக