புதன், 28 டிசம்பர், 2016

நான் கள்வனோ ? சிறுகதை

நான் கள்வனோ ?
================
 
சிறுகதை - ராஜா ராஜேந்திரன்
 
 
மிகவும் பிஸியாக இருந்த அந்த ஆந்திர வங்கி ஊழியர், என் செக்கை வாங்கி, தன் முன்னிருந்த கணினியில் ஏதோ தட்டிப் பார்த்துவிட்டு, "ஒனக்கு இனி அடுத்த மாசம்தான் பணம்" என்று செக்கை வேண்டாத விருந்தாளி போல விருட்டென்று என் பக்கம் தள்ளி விட்டார்.
 
"ஏன் சார், பத்து நாளா பணம் எதுவுமே ட்ரா பண்ணலையே ?’
 
"அதெல்லாம் மேனேஜரப் பாத்து பேசிக்க"
 
அடே கொல்** கூ மவனே ஒனக்கு தமிழ் அரைகுறைன்றதால இந்த மரியாதைக் குறைவ எல்லாம் தாங்கிக்க வேண்டிக் கிடக்கேன்னு மனசுக்குள்ள அவனத் திட்டிக்கிட்டே மேலாளர் அறை நோக்கிப் போனேன்.
 
மேலாளர் கேஷியரைக் காட்டிலும் பிஸியாக இருந்தார். அவரைச் சுற்றி ஏழெட்டு பேர் நின்றுக் கொண்டிருந்தார்கள்.
 
அரைமணி நேரம் கழித்து என்னைப் பார்த்தவர், ’யெஸ்’ என்றார்.
 
"சார், பணம் அடுத்த மாசம்ங்கிறாங்க சார், நான் பணம் எடுத்து பத்து நாளுக்கு மேல ஆச்சு, பாஸ் புக்க பாருங்க" என்று பாஸ் புக் & செக்கை அவரிடம் நீட்டினேன்.
 
அவர் என் பாஸ் புக் மேலிருந்த கணக்கு எண்ணை மட்டும் பார்த்து கணினையைத் தட்ட ஆரம்பித்தார்.
 
இவரும், கேஷியரைப் போலவே இரண்டையும் தள்ளிவிட்டு, "அல்ரெடி நீங்க இந்த மாசம் 10000/- ரூபா ட்ரா பண்ணிட்டீங்க, இனி அடுத்த மாசம்தான்"
 
கடும் அதிர்ச்சியடைந்த நான், "ஏன் சார் ? வாரத்துக்கு எஸ் பி அக்கவுண்ட்லருந்து 24000/- கேஷ் எடுக்க எலிஜிபிள் இருக்கே சார் ? நீங்கதான் நான் போனவாட்டி 24000 எடுக்க வந்தப்ப பணமில்ல 10000 ரூபாதான் தருவேன்னீங்க, போதும்னு வாங்கிக்கிட்டுதான சார் போனேன்"
 
"இங்க கொஞ்சம் வாங்க"
என்னை டேபிளைத் தாண்டி அவர் பக்கமாக வரச் சொன்னார். நல்லவேளை இவர் கொஞ்சம் தெலுகு வாடை இல்லாத தமிழ் பேசியதால் வார்த்தையில் மரியாதை மிச்சமிருந்தது. போனேன்.
 
"உங்க ட்ரான்ஸ்சேக்சனப் பாருங்க, 2015 ல அதிகபட்சமா 15000/- போட்டிருக்கீங்க. ஆனா இப்ப இந்த நவம்பர்ல திடுப்புன்னு 82000/- போட்டிருக்கீங்க. அல்ரெடி போட்ட வேகத்துல 24000 ட்ரா பண்ணிருக்கீங்க, பண்ணிருக்கீங்களா இல்லையா ?"
 
"ஆமா சார், நவம்பர்ல பண்ணேன்"
 
"இதோ டிசம்பர்ல 10000 பண்ணிருக்கீங்க"
 
"கரெக்ட்தான் சார், ஆக்ச்சுவலா 24000 கேட்டதுக்கு நீங்கதான் 10000 தான் அலவ்ட்ன்னீங்க"
 
"அதையே உங்களுக்கு கொடுத்திருக்கக் கூடாது தெரியுமா ?"
 
"ஏன் சார் ?"
 
" ஏனா ? நீங்க கமிஷனுக்கு பணத்த மாத்தறதுக்கு நாங்க வேலை செய்யணுமா ?"
சுர்ர்ர்ர்ர்ரென்று ஓர் உஷ்ணம் உச்சந்தலைக்கு ஏறியது.
 
ங்கோ பீப் தேவ் பீப் பீப் மவனேன்னு உதடு வரை வந்துவிட்ட வார்த்தையை விழுங்கினேன். ஆனால் என் முகம் அதிவேகமாக மாறியதை அவர் சரியாக கவனித்திருக்க வேண்டும். மீண்டும் அந்தச் செக்கை வாங்கி இழுத்து கணினியைத் தட்ட ஆரம்பித்தார்.
 
"சார் மைண்ட் யுவர் வேர்ட்ஸ், என் அக்கவுண்ட் இங்க பதினஞ்சு வருஷமா இருக்கு, நான் ஒண்ணும் செல்லாத பணத்தப் போட அக்கவுண்ட் ஆரம்பிக்கல..................."
 
ஒரு சாதாரணன் பேசுவது அவர் தகுதிக்கு அதிகமாகப் பட்டிருக்க வேண்டும், கை அமர்த்தி என்னைப் பொத்தச் சொன்னார்.
 
மயிரேப் போச்சு, இந்த கேஷ் இல்லாட்டா கூட எப்படியாவது சமாளிக்கலாம், மவனே இவன இன்னிக்கு விட்டுடவே கூடாது என்ற வெறியை அந்த வார்த்தை நன்கு தூண்டி விட்டிருந்தது.
 
"2005 ல இருந்து நீங்க எனக்கு காமிச்ச 2015 வரை எல்லா மாசமும் என்னோட ட்ரான்சேக்‌ஷன பாருங்க, என் வண்டி ஈ எம் ஐ, என் ஹவுஸ் லோன் ஈ எம் ஐ எல்லாமே போயிருக்கா இல்லையான்னு பாருங்க"
 
"இருங்க சார், உங்களுக்கு கேஷ் கொடுக்க முடியாது, ரொம்ப அவசரம்னு ஒரு லெட்டர் எழுதி எடுத்துட்டு வாங்க, அப்புறம் பாக்கலாம், இப்ப போங்க" மீண்டும் அந்தச் செக்கை விட்டெறிந்தார்.
 
"ஒங்க கேஷே வேணாம் சார், எனக்கு கேஷ் கொடுக்க முடியாதுன்னு அந்த செக்ல எழுதிக் கொடுங்க, நான் மெயின் ப்ராஞ்ச்க்கு போய் பேசிக்கிறேன் "
 
"ஹல்லோ என்ன மிரட்டுறீங்களா ? நான்தான் லெட்டர் எடுத்துட்டு வாங்க பாக்கலாம்ன்னுதான சொல்றேன் ?"
"நான் எங்க மிரட்டுறேன் ? நான் புதுப் பணத்த வச்சி கொள்ளையடிக்கறதா நீங்கதான் என்னை மிரட்டுறீங்க, என்னோட இந்த அக்கவுண்ட்லதான் இன்கம்டாக்ஸ் டிடிஎஸ் அமவுண்ட் க்ரெடிட் ஆகும், தெரியுமா உங்களுக்கு ? இந்த பாஸ் புக்ல ப்ரூஃப் பண்ணட்டுமா ?"
படபடப்பு அதிகரித்து வார்த்தைகள் துடிக்க ஆரம்பித்தது. மூச்சு சற்று வேகமாக மூக்கிலிருந்து குரல் கொடுக்க ஆரம்பித்த தருணமது. நல்லவேளையாக சார் என்கிற வார்த்தையை அந்தாளுக்கு கட் பண்ணியிருந்திருக்கிறேன். என் சுயமரியாதை மீது கொஞ்சம் மரியாதையும் உண்டானது.
பாஸ்புக்கை வேக வேகமாகத் திருப்பி இன்கம்டாக்ஸ் ரிஃபண்ட் அமவ்ண்டைத் தேட ஆரம்பித்தேன். கெரகம் ஒரு ஆத்திர அவசரத்துக்கு சட்டுன்னு கண்ணுக்குத் தெரிதா ?
எது தேடுகிறோமோ, அதுவும் ரத்தம் கொதித்துக் கொண்டிருக்கும் வேளையின் போது, அது கிட்டவே கிட்டாது. மாறாக நிறைய டிவிடெண்ட்கள் கண்ணில் பட்டன. 17 ரூபாய், ஏழு ரூபாய் ஐம்பது காசுகள், 24 ரூபாய், 126 ரூபாய் கேஸ் சப்சிடி............
”பாருங்க, என்னுடைய டீமேட் அக்கவுண்ட், கேஸ் சப்சிடி எல்லாத்துக்கும் உங்க பேங்க் நம்பரத்தான் கொடுத்திருக்கேன், என்னை எப்படி நீங்க அவ்வளவு கேவலமா கேப்பீங்க ?"
"டோண்ட் ஸ்பாய்ல் மை டைம், ரெக்கொஸ்ட் லெட்டர் எடுத்துட்டு வாங்க"
அதற்குள் என்னைப் போல பல பலியாடுகள் என் பின்னே திரள ஆரம்பித்தது. பரிச்சயமான பியூன் ஒருவர், " லெட்டர் எடுத்துனு வந்துட்டு வாங்கினு போ சார், ஆர்க்யூ பண்ணிக்கினு ?"
"அஞ்சு நிமிஷத்துல இங்கயே எழுதித் தரேன், வெளியல்லாம் போய்ட்டு திரும்பவும் லைன்ல நிக்க முடியாது" என்றுவிட்டு, வெள்ளை தாளை என் தோள்பையில் தேடினேன்.
நோட்புக் ஒன்றை அந்தத் தோள்பையில் வைத்திருப்பதால், எளிதாக அங்கேயே விறுவிறுவென்று ஒரு கடிதத்தை எழுதினேன்.
நான் பதினைந்து வருடங்களுக்கு மேலாக உங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கை வைத்துள்ளேன். தொடர்ந்து பல வருடங்களாக பல தேவைகளுக்கு இந்தக் கணக்கைப் பராமரித்து வருகிறேன்.
என் கணக்குகள் முறையானவை. என் கணக்குகளை எத் தணிக்கைக்கும் அனுப்பலாம். வருமான வரியின் நிரந்தரக் கணக்கு எண் இது. என்னுடைய இந்தக் வங்கிக் கணக்கு என்ணும் சரி, எல்லாப் பரிவர்த்தனைகளும் சரி, வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப் படுபவையே.
என் அவசரத் தேவைக்காக 24000 பணம் தேவை. அதை உடனடியாக எனக்கு வழங்கவும்.
இங்க்லீஷில் எழுதி ஒப்பம் செய்து, அதை எடுத்துக்கொண்டு மீண்டும் மேலாளர் அறைக்குப் போனேன்.
 
இப்போதும் சில நிமிடங்கள் வீணாய்த்தான் போனது. அந்தாளை புழு போலப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். லெட்டர் & செக்கைச் சேர்த்துக் கொடுத்தேன்.
எந்தக் கணினியையும் தட்டாமல் செக் பின் கையெழுத்திட்டார்.
"நீங்க வாரம் வாரம் ட்ரா பண்ணிக்கலாம் சார் போங்க, கேஷ் வாங்கிக்கங்க"
போடா பு பீப் பீப் என்று செக்கை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போனேன்.
"பீப் பீப் பீப் இவனுங்க இவனுங்களுக்கு வேண்டப்பட்ட அக்கவுண்ட் ஆளுங்களுக்கு கூப்ட்டு கூப்ட்டு பணம் ட்ரா பண்ண விடுவானுங்களாம், எவ்வளவு பணம் கட்டினாலும் கும்பிடு போட்டு வாங்கிப்பானுங்களாம், நாய்ங்க நம்ம பணத்த நாம எடுத்தா திருட்டு பட்டம் கொடுப்பானுங்க. பார் நமக்கு கேஷ் ரெண்டாயிரம் நோட்ட மட்டும் நொட்டிட்டு 500 ரூபா கட்ட கொடுக்கிறான் பாருங்க
(கேஷியர் ஐநூறு ரூபாய் கட்டு ஒன்றை ஒருவருக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார்)
போனவருஷம் வரைக்கும் 20000 ரூபாக்கு மேல கட்டலைன்னா எனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதாண்டா கட்ட முடியும் ?
ங்கோ பீப் பீப் நீ நட்ட நடு ராத்ரி நோட்டு செல்லாதுன்ற, நான் மொத்தமா செல்லாத நோட்ட ஒட்டுக்காத்தான கட்ட முடியும் ? எப்படி கட்டப் போச்சுங்கிறான் ?
என் முன்னால் பின்னால் நின்றுக் கொண்டிருந்த ஆட்கள் கேட்டார்களோ இல்லையோ.............. நான் உரக்கக் கத்திப் பேசி, என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தேன்.
கேஷியர் பன்னிரெண்டு ரெண்டாயிரம் நோட்டுகளாக நீட்டினார்.
"ஸ்மால் டினாமினேசன் கொடு, எல்லாத்தையும் பெரிய நோட்டா கொடுத்தா சில்லறை செலவுக்கு என்ன பண்றது ?"
இரண்டு நோட்டுகளை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு நூறும் ஐம்பதுமாய் நாலாயிரத்துக்கு எண்ணிக் கொடுத்தார் கேஷியர்.
ஆனால், என் கண் முன்னே, பலருக்கும் உனக்கு இம் மாதம் இனி கேஷே கிடையாது என்று மேலாளர் தொடர்ந்து பலரை அனுப்பிக் கொண்டிருந்தார்.
வாடிய முகத்தோடு அரசுதான் புதுசா ரூல் போட்டுடுச்சி போலன்னு போகிறவரும் அதில் இருந்தார்கள், என்னைப் போல் எகிறிக் கொண்டும், ரெக்கொஸ்ட் லெட்டர்ன்னா எப்படி எழுதணும் ? எழுதறத கெவர்மெண்ட்க்கு அனுப்புவாங்களா ? என்று விசாரித்தபடியும் ஒரு கும்பல் சேர்ந்துக் கொண்டிருந்தது.
இறுதிவரை எனக்கு வெற்றிக் களிப்பு வரவே இல்லை. தொடையிடுக்கில் எவனோ ஓங்கி எட்டி உதைத்தாற்போலத்தான் வலித்தது :(
முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக