தமிழகத் தேர்தல் 2016 முடிவுகள் கருத்துக்கள் !

இதை ஓர் ஆவணமாக பிற்காலங்களில் பயன்படுத்தப் போகிறேன். 




என்ன காமெடியாக இருக்கப் போகிறதென்றால், இன்னும் இருபது வருடங்கள் கழித்து, இந்த புள்ளிவிவரங்களை, தகவல்களை....... நானோ, அல்லது பிறரோ வாசிக்க நேர்கையில், ’அட இவங்கெல்லாமா தேர்தல்ல கலந்துக்கிட்டிருந்திருக்காங்க ?’ என்றோ.......... ‘பாரேன் அப்ப இவங்க இவ்வளவுதான் வாக்குகள் வாங்கியிருந்திருக்காகங்க’ என்றோ............ ‘ம்ம்ம்ம்ம் சராசரியா 40 விழுக்காடு வாக்க வாங்கி ஆண்டக் கட்சியா இருந்துட்டு, இப்ப ஒண்ணு ரெண்டு சீட்டக் கூடக் கொடுத்து யாராவது கூட்டணியில சேத்துக்க மாட்டாங்களான்னு ஏங்கிட்டு கெடக்கறது ?’ என்றோவெல்லாம் நிச்சயம் வியக்குமளவுதான் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.



கீழே பட்டியலிடப்போகும் கட்சி அல்லது தலைவர்கள் எல்லாம் இந்த 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தலில் கூட்டணியாகவோ, தனியாகவோ களம் காண்கிறார்கள். 



யார் யார் எந்தக் கூட்டணியில் இணைந்து எத்தனை விழுக்காடு வாக்கு மற்றும் தொகுதிகள் வென்றார்கள் என்றும், எத்தனை விழுக்காடு வாக்குகள் மட்டுமே வாங்கி தோற்றிருக்கிறார்கள் ? உத்திரவாதத் தொகைகளை இழந்தவர்களெல்லாம் யாரார் ? என்பதையெல்லாம் விவரமாகத் தொகுத்துள்ளேன்.



அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இம்முறை இங்கு போட்டியிடவில்லை. பத்து தொகுதிகளையாவது தேர்ந்தெடுத்து போட்டியிட்டிருக்க வேண்டும். அது வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பெரிதும் உதவியிருந்திருக்கும்.


இதைத் தவிர்த்து, பலப் பல லெட்டர்பேட் கட்சிகளெல்லாம் இத் தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றன.



DISCLAIMER :- என் கருத்துக்கள் நடு நிலைமையானது அல்ல. ஆனால் இன்றைய ( 20 / 05 / 2016)தமிழகத்தில் பெரும்பாலோர் கருத்துக்களுடன் ஒத்துப் போகக் கூடியவைகளே !




1.) அ இ அ தி மு க (ஜெயலலிதா)
Image result for jayalalitha
புதியதலைமுறை, தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளில் இவரே மீண்டும் ஆட்சி அமைப்பார் எனச் சொன்னது. ஆனால், நியூஸ் 7 தொலைக்காட்சி அப்படியே மாற்றி திமுக ஆட்சி அமைக்கும் என்று சொன்னது. 
ஆரம்பத்தில் தந்தி மிகப் பிரம்மாண்ட வெற்றி ஜெயலலிதாவுக்கு எனச் சொல்ல ஆசைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், நியூஸ் 7 இப்படி ஒரு குண்டைப் போட.......தடாலென்று தன் முடிவைச் சொல்லாமல் அது ஒத்தி வைத்தது. 



ஜூனியர் விகடன் இம்முறை மிக உஷாராய் இழுபறி என்று இரு கட்சிகளுக்கு கொடுத்த கூட்டுத் தொகையைக் காட்டிலும் அதிகமாக கொடுத்தது, ஆனாலும் திமுக பாசத்தில் இரு தொகுதி அதிமுகவை விட அதிகமாகவே கொடுத்திருந்தது. 



நக்கீரன் வழக்கம் போல திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும் எனச் சொன்னாலும் வெறுமனே 136 வரை மட்டுமே காட்டியிருந்தது. 300 - 400 எனக் காட்ட வேண்டிய நக்கீரரே இப்படி தடுமாறியது ஏதோ அபசகுன குறியீடு போல ;)



நியூஸ் 7 உடன் தினமலர் சேர்ந்தது கடும் அதிர்ச்சி. பஞ்சகச்சமும் குடுமியுமாய் திரியும் எலி திடுக்கென கழகக் கரை வேட்டியும், மஞ்சத் துண்டும் போட்டுக் கொண்டு ஓடுகிறதே...............என்று ;)



எக்ஸிட் போல் ரிசல்ட்கள்தான் கர்ண கொடூரம். தந்தி 111 அதிமுக எனச் சொல்லி திமுக 99 என்று சொன்னது. போக, ரங்கராஜ் பாண்டே திமுக 99க்கு மேல் போனாலும் போகலாமே அன்றி கீழே போகாது என்று தேர்தல் முடிந்த 16/05/2016 திங்கள் மாலை ஏழரைக்குச் சொன்னார். தந்தியே இப்படிச் சொன்னபின் உடன்பிறப்புகளுக்கு கேட்கவா வேண்டும் ?



வடக்கில் சி வோட்டர்ஸ் - டைம்ஸ் நவ் கணித்த எக்ஸிட் போல் அட்டகாசம். 135+ அதிமுக என்றது. ஆனால் அது 234 தொகுதிகளுக்கு கணித்திருந்தது. ’அடேய் டுபாக்கூர் தேர்தல் நடந்ததே 232 தாண்டா’ என்று திமுகவினர் அந்தக் கணிப்பே பொய் என்றனர்.


அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் திமுகவும், அதிமுகவும் வாக்களர்களுக்கு அதிகமாய் பணம் கொடுத்தார்கள் என்று தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன.


அதிமுக அன்புநாதன் வீட்டிலிருந்து பல கோடி பணமும், சில நூறு பணம் எண்ணும் பொறியும் கிட்டியதாகச் சொன்னார்கள். கே. சி. பழனிச்சாமி வீட்டில் சில கோடிகள் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. தஞ்சையில் ஒரு அதிமுக பிரமுகர் கையில் ஆளுக்கு 500 ரூபாய் மேனிக்கு விநியோகம் செய்ய ஒரு கோடியே சொச்சம் காசிருந்ததும்........அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல் தள்ளிப் போனதன் முக்கிய காரணிகள்.


ஆனால் பிற வட இந்திய ஊடகங்களின் எல்லாக் கருத்துக் கணிப்புகளுமே அம்மா அவுட், குயின் குயிட் என்றே எதுகை மோனையில் கமெண்ட் செய்திருந்தன.
பாவம் எம் ஜி ஆரின் ரத்தத்தின் ரத்தங்கள் தோல்வியைச் சகித்துக்கொள்ள தங்கள் மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்க, ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில், மணி தனுஷ்கொடி போன்ற முந்திரிக்கொட்டை உடன் பிறப்பபுகள் ஆடிய ஆட்டங்கள் உச்ச கொடூரமாய் இருந்தது ;)


19ம் தேதி காலை 08 : 00 மணி. திமுக பல தொகுதிகளில் முன்னிலை, பின்னால் துரத்தியபடி அதிமுக. போக பல இடங்களில் பாமக, பாஜக, கம்யூனிஸ்ட், திருமா எல்லாம் முன்னிலை என்றார்கள். ஆனால் அடுத்த அரை மணிக்குள்ளாக காட்சி மாறியது. அதிமுக 67, திமுக 48 என்றபோது சுருங்க ஆரம்பித்த என் முகம் இன்று வரை கூட இயல்பு நிலைக்கு வரவில்லை. 


என்ன கொடுமை என்றால் இதையெல்லாம் என் அருகிலிருந்து என் அரசியல் நிலைப்பாடுகளின் பிரதான மற்றும் நிரந்தர எதிரி ஜெய் ஸ்ரீ ராம் பார்த்துக் கொண்டே இருந்ததுதான் :( (ஸ்டாலினின் உடன்பிறவா உடன்பிறப்பு உமா மகேஷ்வரன் திருமணத்துக்காக நான், செழியன், மணி தனுஷ்கொடி, ஜெய் ஸ்ரீ ராம் சென்றிருந்தோம் அவர் காரில்.



இரவு சத்யபெருமாள் வீட்டில் தங்கி, சத்யா கையால் செய்த ருசிமிக்க பிரியாணி, வரகரசி தயிர்ச்சாதம் உண்டு, அவர் வீட்டிலேயே உறங்கி, காலை நால்வருமாய்ச் சேர்ந்து திருமணத்துக்குப் போனோம், நள்ளிரவிலேயே மணி தனுஷ்கொடி திமுக வெற்றியைச் சுடச் சுட ருசிக்க ஓடிப் போய்விட்டார் அரக்கோணத்துக்கு :( )




மன்னிக்கணும். தலைப்பைக் கொடுத்துட்டு ஏதேதோ புலம்பிட்டிருக்கேன்.




ஆக, ஜெயலலிதா 232 தொகுதிகளில் 134 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தன் ஆட்சியைத் தொடர்கிறார். இப்படி ஒரு வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு அமைந்தது எதிர்பாராத ஒன்றுதான். 




வேம்பை ருசிக்கத் தயாராகி, கண்களை இறுக்க மூடி, நாவை கசப்பைத் தாங்கிக்கொள்’ என் முன்னெச்சரித்து வாய் திறந்த ஆத்மாக்களுக்கெல்லாம் ’ரிசல்ட்’ பால் பாயாசத்தை புகட்டிவிட, அப்படியே உல்டாவானது திமுகவுக்கு :(




ஜெயலலிதாவின் கூட்டணி வாங்கிய வாக்கு விகிதம் 40.8 விழுக்காடு. வாங்கிய மொத்த வாக்குகள் ஒரு கோடியே எழுபத்தியாறு லட்சத்து பதினேழாயிரத்து அறுபது :- 17617060.




முக்கியத் தலைகளான நத்தம் விஸ்வநாதன், பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா தோற்றுருண்டு ஓடிப்போயின, பாவம் :(




ஜெயலலிதா கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்குகள் திமுக வேட்பாளரைக் காட்டிலும் அதிகம் வாங்கி வென்றார் ஆர் கே நகர் தொகுதியில்.
மேற்கு மண்டலங்களான கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் அடி பின்னியிருந்தது. 43 தொகுதிகளில் திமுகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தது. அதுவும் பெரியார் மண் ஈரோட்டில் ஃபுல் ஸ்வீப்.




தெற்கு மண்டலங்கள் மதுரை, ராமநாதபுரம், தேனியிலும் இதே நிலை. தேனியில் ஃபுல் ஸ்வீப்.




அதிமுகவுக்கு ஆதிக்கச் சாதி வாக்குகள் எப்போதுமே உண்டு. அது இத்தனை விமர்சனங்கள் கொண்ட ஆட்சியே நீடிக்கட்டுமென இப்போதும் கிட்டியதுதான் பேராச்சர்யம். 




இதை பல வருடங்கள் கழித்து வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள், இந் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்றும், யாருக்கு இது கை மாறியிருக்கிறது என்றும், அல்லது அப்படி ஒரு நிலை இப்போது இல்லவே இல்லை என்றும் எனக்கு சொன்னால் கட்டை எளிதாய் வேகும். சரி அடுத்து.............




2.) தி மு க (கருணாநிதி,  ஸ்டாலின்)

Image result for karunanidhi


கருணாநிதி இந்த 2016 லிருந்து 60 வருடங்களைக் கழித்துப் பார்த்தாலும் தமிழக அரசியலில் முக்கியச் சக்தியாக இருந்தார். அதன்பின் அந்த முக்கியம் என்பது மிக அழுத்தமாக அதிகரித்ததே அன்றி இன்றைய தேதி வரை சிறிதும் குறையவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் எதிரிகள் வாயில் கருணாநிதி எனும் அவல் இல்லாத நிலை இல்லவே இல்லை.



திணிக்கப்பட்ட பல பொய்களாலும், தீங்காய் நேர்ந்து விட்ட சில உண்மைகளாலும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.



சரி இம் முதியவரை(இன்னும் இரு வாரங்களில் 93 முடியப் போகிறது) தவிர்த்துவிட்டு தேர்தலை எதிர்கொள்ளலாம் என்றால் இவருக்கு மட்டும்ன்னா மட்டுமே வாக்களிப்போம் என்று திமுகவில் பாதி பேர் இன்றும் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்படாதவர்களே இருக்க முடியாது.  

எவ்வளவுக்கெவ்வளவு எதிரிகளால் வெறுக்கப்படுகிறாரோ..........அதே சம பலத்துடன் ஆதரவாளர்களால் போற்றப் படுபவராகவும் அவர் இருந்தார், இருக்கிறார், இருப்பார்.



இருப்பினும், சில வருடங்களாக மிக மிக கடுமையான உழைப்பை, இத் தேர்தலுக்காக கொடுத்தார் ஸ்டாலின். இப்படிப் பட்ட ஓர் உழைப்பை திமுகவில் அடி மட்டத் தொண்டன் கூட கொடுத்திருக்கவே முடியாது என ஆணித்தரமாகச் சொல்கிறேன். 

Image result for m.k.stalin


இத்தனைக்கும் 2014ல் அவர் இதே உழைப்பைக் கொடுத்தும் பூஜ்யம் இடம் மட்டுமே கிட்டியது. எவ்வளவு பெரியச் சோர்வைத் தந்திருக்கும் அது ? 




ம்ஹூம். 



சரி, இந்த அபார உழைப்பு இத் தேர்தலில் அவருக்குக் கொடுத்தது என்ன ?



திமுக தனித்து வென்ற தொகுதி 89. கூட்டணி கட்சிகள் பெற்றது காங்கிரஸ் 8, முஸ்லீம் லீக் 1, ஆக மொத்தம் 98. சட்டசபைத் தேர்தல் 2011 ல் ஆளுங்கட்சியாய் இருந்த திமுக வென்றது 23 மட்டுமே என்பதையும், 2014 மக்களவைத் தேர்தலில் 0 மட்டுமே பெற்றது என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.




திமுக கூட்டணி வாங்கிய மொத்த வாக்குகள் ஒரு கோடியே எழுபத்தியொன்று லட்சத்து எழுபத்தியைந்தாயிரத்து 374 வாக்குகள். :- 17175374 விழுக்காடு 39.7.



திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையேயான வாக்குகளின் வித்தியாசம் 441646 = நான்கு லட்சத்து நாற்பத்தியோராயிரத்து அறுநூற்றி நாற்பத்தியாறு மட்டுமே, அதாவது 1 . 1 விழுக்காடு.




ஜெயலலிதாவின் ஆணவ மேடையமைப்பு, கடும் வெயிலால் நிகழ்ந்த ஏழு பலிக்குக் காரணாமான அவரின் பரப்புரை நேரம், நாளுக்கு நாலு முறை மாற்றப்பட்ட வேட்பாளர்கள், மொண்ணைத்தனமான ஜெயாவின் ஒப்பிப்பு பிரச்சார பாணி, அதிமுக தேர்தல் அறிக்கை.................ம்ஹூம் இவைகள் எதுவுமே அதிமுகவின் ஆழமான ரசிகர்களை மாற்றவே முடியவில்லை.
Image result for jayalalitha stage setting

திமுக விளம்பரங்களுக்கு பணத்தை செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளமாய் செலவழித்தது. ஆளுங்கட்சி கூட அவ்வளவு செய்திருக்கவில்லை.

Image result for dmk advertising


அதிமுகவின் இரட்டை இலை மட்டுமே வாங்கிய வாக்குகள் 40.8 விழுக்காடு. மாறாக திமுகவின் உதயசூரியன் வாங்கிய வாக்குகள் 31.6 விழுக்காடுகள்தான்.



திமுக தனியாக என்ன முயன்றாலும் தன் வாக்கு வங்கியை சமீப பல வருடங்களாக அதை 35 முதல் 40 விழுக்காடுகளாக உயர்த்தவே முடியவில்லை. மாறாக என்ன எடுத்தேன் கவிழ்த்தேன் நிலையில் அதிமுக தலைமை இருந்தாலும் அதன் வாக்கு வங்கியை 40 விழுக்காடுகளுக்கு கீழாக இறக்கவும் முடியவில்லை.




முழுக்க முழுக்க எம்ஜிஆர், ஜெயலலிதாவையும், அதன் இரட்டை இலையையும் நம்பி இருக்கும் மக்களால்தான் இது சாத்தியம். பெரு வரமும் கூட !!!




திமுகவிற்கு பேராறுதலாக அமைந்தது, பிரம்மாண்ட எதிர்கட்சி அந்தஸ்து. 2011 ல் வீழ்ந்த அதன் பல ராட்சஸ தலைகள் இம்முறை வெற்றி வாய்ப்பு பெற்று, பெரு அரணாக ஸ்டாலினுடன் சட்டசபைக்குள் நுழையப் போவதுதான்.      




3.) ம தி மு க (வைகோ)




மக்கள் நலக் கூட்டணி எனும் ஒரு பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்கி, அதன் ஒருங்கிணைப்பாளராகத் திகழ்ந்தார் வைகோ எனப்படும் வையாபுரி கோபால்சாமி.



Image result for vaiko green cap

தேர்தல் தொடங்க இன்னும் ஆறு மாதங்கள் இருந்த நிலையிலேயே, இக் கூட்டணி, வைகோ தலைமையில் இரு கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் என நால்வரணியாய் உருப்பெற்று விட்டது. 


ஆனால், இது திமுக வாக்குகளைச் சிதறடிக்க உருவான ஒரு கூட்டணி என்றே உடன்பிறப்புகளால் பேசப்பட்டது.
இதில் விஜய்காந்த், பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் எல்லாம் இணையக்கூடும் என்றும் எதிர்பார்க்கவும்பட்டது.   


அன்புமணி கறாராக நான் முதல்வர் என்று என் தலைமையை ஏற்கிறீர்கள் என்றால் மட்டுமே கூட்டணிக்குத் தயார் என்று வெளிப்படையாய் அறிவித்தார். அதை ஏற்ற ஒரே கட்சி பாரதீய ஜனதா பார்ட்டி. ஆனால் சாதிக்கட்சியான பா.ம.க, பாஜாபா எனும் மதக் கட்சியைப் பார்த்து அசூயை கொண்டது.



மக்கள் நலக் கூட்டணி ஆரம்பத்தில் அப்படியெல்லாம் முடியாது என்று சொன்னாலும் தேர்தல் தேதி அறிவிப்புக்குச் சற்று முன்னால் சேர்ந்த விஜய்காந்த் தான் ம ந கூ வின் முதல்வர் வேட்பாளர் என வெளிப்படையாய் அறிவித்து பரப்புரை மேற்கொண்டது.




இங்கு முகநூல் அல்லது ட்வீட்டரில், வலைப்பூக்களில் வைகோவின் பிரதான ரசிகர்கள், மக்கள் நலக் கூட்டணி உருவானதும் வைகோதான் முதல்வர் என்றெண்ணி VAIKO4CM2016 என்று ஓயாமல் ஹேஷ்டேக் போட்டு எப் பதிவையும் முடித்தார்கள். சில வாரங்கள் கூட அந்த ஆசையை நீடிக்கவிடாமல், மண்ணை அள்ளிப் போட்டார் வைகோ.



ஆனால் தேர்தலுக்கு முன் இக் கூட்டணி துண்டு துண்டாய்ச் சிதறிப் போகும் என்று மிகத் தவறாய்க் கணித்தப் பலரில் நானும் ஒருவன். 



பஞ்ச பாண்டவர்களாய் இருந்த இந்த ஐவர் அணியில் பாஞ்சாலியாய் சேர்ந்தார் வாசன். அவரை போயஸ்கார்டன் ஜெயலலிதா அரண்மனையின் வெளியே, ப்ளாட்பாரத்திலிருந்து அழைத்து வந்தார்கள் ம ந கூவினர்.




உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு மாற்று ஆட்சியாளர்கள் கிடைத்தே விடுவார்கள் என்பது போல அபார பரப்புரை மேற்கொண்டனர் இந்த அறுவர் கூட்டணி.
இவர்களுக்காக பல நடுநிலைவாதிகள் வலைத்தளமெங்கும் பரப்புரை மேற்கொண்டனர். அவர்களில் ஒருவர் கூட முன்னாள் திமுகவினர் இல்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம். மாறாக மறைமுக அம்மா ஆதரவாளர்கள்தான் அதில் பலர். 



மறைமுகமான காரணி நூல். அதாவது தானாடாவிட்டாலும் தன்னூல் ஆடும் என்கிற பதத்திற்கேற்ப நடந்துக்கொண்டனர். இந்த நூலாதிக்கவாதிகள் அருக திராவிடம் எவ்வளவு உழைத்தும், இன்னமும் அவர்கள் கையிலேயே நூல் இருப்பது உண்மையில் அதிசயம்.




பல்லாண்டுகள் கழித்து இதை வாசித்துக் கொண்டிருப்பவராய் நீங்கள் இருந்தால்......... நூலாதிக்கமும், நூலாதிக்கவாதிகளும் இப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார்களா ? என எனக்குச் சொல்லவும்.




மதிமுக இத் தேர்தலில் மிக மிக மோசமான பின்னடைவைச் சந்தித்தது. Who Cares ? 1000 வருடங்கள் எம் எல் ஏவாய் இருந்து சம்பாதிக்க முடியாததை விடக் கூடுதலாய் வைகோவுக்கு பணம் கிட்டிவிட்டதாய் பரவலாக புரளி எழுந்தது. 




கொஞ்சம் நஞ்ச பேரிடம், ‘அரசியல் முடிவெடுப்பவராய்ச் சொதப்பினாலும் அவர் நல்லவர் ’ என்கிற பிம்பமும் சுக்கு நூறாய் நொறுங்கியது, அவர் மிகச் சப்பையான ஒரு காரணம் சொல்லி கோவில்பட்டி தொகுதியில் நிற்க மறுத்த பின் :(




இந்தக் கூட்டணி 10 முதல் 15 விழுக்காடு வாக்குகளை குறைந்தபட்சம் பெறக்கூடும் என நம்பிய பல நடு நிலையாளர்களையும் கூடத் திகைக்க வைத்துவிட்டது இத் தேர்தல் முடிவு.



இவரைப் பற்றிக் கிளம்பிய மிக மோசமான விமர்சனமே இக் கூட்டணியின் வாக்குகளை சிதறடித்தது எனலாம். 



ஆனால் இப்படியெல்லாம் ஆகும் எனத் தெரிந்தே செய்தார் வைகோ.


ஒரு சிறந்த உளவாளி போலவே செயல்பட்ட வைகோவை சில நாட்களுக்கு ம ந கூவினரால் மறக்கவே முடியாது. 


ஆனால் அவர் திமுகவுக்கு உளவாளியா.........அதிமுகவுக்கு உளவாளியா என்பதில் மர்மம் உண்டு. காரணம் இவரால் இந்த இரண்டு பேருக்குமே கொளுத்த லாபம்.  



அட அது போய்த் தொலையுது. தனித்து இவர் வாங்கிய வாக்குகள் என்ன என்கிறீர்கள் ? ஓக்கே.
மூன்று லட்சத்து எழுபத்தி மூன்றாயிரத்து எழு நூற்றி பதின்மூன்று வாக்குகள் :- 373713 = 0 . 9 % அதாவது ஒரே ஒரு விழுக்காடு வாக்குகளைக் கூட பெறவில்லை மதிமுக. 


ஆனால் ம ந கூ என கூட்டணியாய் பார்த்தால் இந்த அறுவர் பெற்ற கூட்டு வாக்குத் தொகை = 1890489 = 6 . 1 % = மூன்றாவது இடம்.




ஒரு தொகுதியைக் கூட இவ் வாக்குகளால் வெல்ல முடியவில்லை :(




இதை வாசிக்கும் வேளைகளில், இந்தப் பதிவுக்கு பின் வைகோ பெரு சக்தியாக உருவாகியிருந்திருந்தாலும் இச் சேதிகள் ஆச்சர்யத்தைக் கொடுக்கலாம், ஒருவேளை....... “வைகோ ? அது யார் ? இன்னா பேர் இது வை கோ.......வைக்கலன்னா வா” எனப் பகடி செய்யுமளவு மக்களால் அடியோடு மறக்கப்பட்ட ஒரு மனிதராகவும் மாறிப் போயிருக்கலாம் :(






4.) விடுதலை சிறுத்தைகள்  (திருமாவளவன்)




இத் தேர்தலில் மிகப் பண்பான, பக்குவமான ஒரு மக்கள் தலைவராக, ஒடுக்கப்பட்ட இனத்தின் பாதுகாவலராக மிளிர்ந்தார் திருமா.



ஏனோ மிக மோசமாக இவரைத் தவிர்த்தது திமுக, அதிமுக எனப் பலரும் பேசிக் கொண்டனர். உண்மை அப்படி இருக்காது என்றே நான் நம்புகிறேன். ஊடகங்களில் பார்க்கும் திருமா முகம் வேறு, நிஜம் வேறு என்பதை அவருடன் வரும் ஆர்ப்பரிப்பான கூட்டங்களை நேரில் பார்த்தவர்கள் முகம் சுளித்துச் சொல்வதைக் கேட்டிருக்கலாம் நீங்கள்.




ஜெயலலிதா, ராம்தாஸ், விஜய்காந்த்களுக்குத் தரும் வரவேற்பில் சற்றும் குறையாத களேபரங்கள் அவருக்கும் உண்டு.



திருமா காரில் வருகிறார் என்றால் முன்னும் பின்னும் அவர் கொடியை கைகளிலும், தலையிலும் கட்டிக் கொண்டு பாதசாரிகளை மிரள வைக்கும் ஆர்ப்பரிப்பும், கத்தல்களுக்கும் எந்தக் கட்சிகளுக்கும் குறையில்லாத ஒன்று.




சென்னையின் புற நகர் காலி மனைகளை ஆக்கிரமித்து, இவர்கள் மிரட்டி நடத்திய கட்டப்பஞ்சாயத்துக்கள் பல்லாயிரம். ஆனால் இதெல்லாம் பொதுமக்கள் அனுபவித்துச் சொன்னதா......செவி வழிச்சேதிகளை அப்படியே பரிமாறிக்கொள்கிறார்களா என்பதில் சம்சயம் உண்டு.


ஆக, இவை எவையுமே தன் பேச்சில், தோற்றத்தில் காட்டாது மிகவும் பண்பட்ட தலைவராகவெ காட்சி அளித்தார் திருமாவளவன்.



இவர் வென்று சட்டசபை செல்ல வேண்டும் என்று சொல்லாத மாற்றுக் கட்சியினர் குறைவு(அதிமுக, பாஜபா, பா ம க..... ஆட்களெல்லாம் அப்படிச் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார்கள்)



ஆனால் தான் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தோற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி. 25 தொகுதிகளில் போட்டியிட்டு 24 இடங்களில் அக் கட்சி மூன்றாவது, அல்லது நான்காவது, அல்லது ஐந்தாவது, அல்லது ஆறாவது இடத்தையெல்லாம் பெற்றது :(




கட்சித் தலைவர் திருமா மட்டும் தான் போட்டியிட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இரண்டாமிடம் பெற்றார். டெப்பாஸிட்டும் பெற்றார், மிகக் கொடுமையாக வெறுமனே 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோற்றார். மீதி 24 வி சி கவுக்கும் டெப்பாஸிட் கிட்டவில்லை.



ஆளூர் ஷாநாவாஸ் என்கிற இலக்கியப் படைப்பாளி பெற்ற வாக்குகள் திமுகவைத் தோற்கடித்தது.  


உச்ச கொடுமை முனைவர் முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவியை ஆர் கே நகரில் ஜெயலலிதாவுக்கு எதிரே நிறுத்தியதுதான். 



“இப்படி இழுத்து வந்து நடு ரோட்டுல விட்டுட்டீங்களேய்யா ?” என்கிற ரீதியாக அவர் பொதுவெளியில் நடந்துக் கொண்டதுதான் அக் கொடுமை.  



”நான் ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை” என்று அவர் ம ந கூ கொள்கைகளை பொதுவில் போட்டு உடைத்து ’வைகோவுக்கு தேள் கொட்டியது’ போல் பேசியபடி இத் தேர்தலில் அவர் போட்டியிட்டது விந்தையிலும் விந்தை :(




சரி. வி சி க இத் தேர்தலில் வாங்கிய வாக்குகள் = 331849 = 0 . 8 % மட்டுமே. இதில் திருமாவளவன் வாங்கிய வாக்குகள் மட்டுமே 48363. பெற்ற இடங்கள் = 0






5.) இந்தியக் கம்யூனிஸ்ட் (முத்தரசன், தா.பாண்டியன்)



ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின் மீண்டும் முதல்வராகி, சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட ஆர் கே நகர் எனப்படும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட முயன்றபோது, அந்த இடைத்தேர்தல் மிகக் கேவலமான முறையில்தான் நடக்குமென எல்லா எதிர்க்கட்சிகளும் அத் தேர்தலைப் புறக்கணிக்க............ ‘சுயேச்சைகளை வென்று செல்வதோ ?’ வென ஜெயலலிதா மனம் நோகி விடக்கூடாது என்று, திடுக்கென தன் வேட்பாளரை அறிவித்தக் கட்சிதான் இந்திய கம்யூனிஸ்ட்.




ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்த சி. மகேந்திரனை ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, தன் முகத்தில் சிறு கரும்புள்ளி கூடப் படாதவாறு பார்த்துக்கொண்டார் ஜெயலலிதா, அல்லது அவர் முகத்தைல் படாதவாறு பார்த்துக்கொண்டது இந்தியக் கம்யூனிஸ்ட்.


இப்படி முழுக்க முழுக்க அம்மா அடிமையாய் ஒரு வருடம் முன்னால் வரை கூட இருந்த ஒரு கட்சி திடுமென மாற்றம், புரட்சி என்று எப்படி உருமாற முடியும் ? என உருண்டு புரண்டு சிரிக்காத சக சகாக்களே இல்லை.



கதிர் அரிவாள் சின்னத்துக்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் தோழர்கள் நிற்க முடியுமா ? என அம்மா கேட்க...............ஆர் கே நகர்லல்லாம் ஒங்களுக்காகத்தானே தாயீ நின்னோம், இப்படி மானத்த வாங்கினா எப்படி ? என்று கெஞ்சியும், கார்டன் கதவு படீரென்று முகத்தின் முன் சாத்தப்பட, மாற்றம், கழகக் கட்சிகள் ஒழிக வென்று ம ந கூவில் இணைந்த கட்சி.




ஆனால், எளிமையான அந்தக் கட்சி நாட்டுக்குத் தேவையான ஒன்று. என்ன எளிமையான மனிதர்கள் என்றாலும் தா.பாண்டியன், தளி ராமச்சந்திரன்களால் மிகவும் தடுமாறி...... அவை வென்ற வாக்குகள் = 257780 = 0 . 8 % பெற்ற இடங்கள் = 0



இதில் தளி ராமச்சந்திரன் வாங்கிய வாக்குகள் மட்டுமே 68184. அநேகமாய் இவரைத் தவிர பிற யாவருக்கும் டெப்பாஸிட் போயிருக்கலாம் :(
   


6.) மார்க்சிஸ்ட் (நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன்)



நல்லக் கண்ணு போன்ற அரிய தலைவர்களைக் கொண்ட கட்சி. என்ன அறுபது வருடங்களாக ஒவ்வொரு பலமான முதுகிலுமாய் பயணம் செய்துவிட்டு............புது முதுகில் பயணம் செய்ய முயன்று, நழுவி வீழ்ந்து நாசமாய்ப் போன கதையாய் ஆனது இத் தேர்தல் முடிவு.



வாங்கிய வாக்குகள் = 232448 = 0. 7 % பெற்ற இடங்கள் = 0




7.) தமிழ் மாநில காங்கிரஸ் (வாசன்)



ஏற்கனவே மேலே இவரைச் சொல்லிவிட்டோம். கருப்பைய்யா மூப்பனாரின் மகன், பண்ணையார், பெரும் பணக்காரர் இத் தகுதிகள் மட்டுமே ஒரு கட்சித் தலைவருக்குப் போதுமென்றால் இவரும் தலைவர்தான்.
மற்றபடி இவர் ஆற்றும் உரையை அத்துணை கொடூரமான இழுவை ராகத்தில் கேட்பவரை, பார்ப்பவரை, உடனே தற்கொலைக்குத் தூண்டும்.




”மூப்பனார் அண்ணாச்சி என்னைச் செல்லமாக நாயுடு என்றே அழைப்பார்” எனப் பெருமையாக கூறிக்கொண்ட ம ந கூ ஒருங்கிணைப்பாளர்தான், ஒரு நாள் ”சாதி பாக்குறாங்க” என்று மனம் வெந்தார்.  




வாசனுக்கென்று வேறெந்த வாக்கு வங்கியும் இல்லை என்பதையே பின் தொடரும் வாக்கெண்ணிக்கைகள் காட்டுகிறது.



தமிழ் மாநில காங்கிரஸ் பெற்ற வாக்குகள் = 173994 =0 . 6 % = கிட்டிய தொகுதிகள் = 0 



8.) காங்கிரஸ் (குஷ்பூ, ஈ வி கே எஸ் இளங்கோவன்)




காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகி இருக்கும் ? திமுக இன்னும் பத்து இடங்களை பறிகொடுத்திருக்கும், அவ்வளவுதான்.



மற்றபடி திமுக காங்கிரஸை கழற்றி விட்டது என்பதற்காக எந்த ஈழ ஆதரவாளர்களும், ஊழல் எதிர்ப்பாளர்களும் திமுக வை ஆதரித்து விடப்போவதில்லை. இதைத் திமுக தலைமை தெளிவாக உணர்ந்திருந்திருந்தது.



சிறு இழுபறிக்குப் பின் 41 தொகுதிகள் காங்கிரஸ்க்கு விட்டுக் கொடுத்தது திமுக. உண்மையில் மிக அதிகமான தொகுதிகள்தான். விஜய்காந்த் இனி கூட்டணிக்குள் வர வாய்ப்பில்லை என்கிற நிலையில் எடுக்கப்பட்ட முடிவாய் இருந்திருக்கும் போல.



ஆனால் போட்டியிட்ட 41 இடங்களில் 8 இடங்களை வென்றுள்ளது காங்கிரஸ். போனமுறை ஐந்து இடங்களைப் பெற்ற கட்சி. இம்முறை மூன்று கூடி விட்டது. வாங்கிய வாக்குகள் = 2774075 = 6 . 6 %




கூட்டணிக் கணக்கில் ம ந கூ மூன்றாவது இடம் வகித்தாலும் விகிதாச்சார அடிப்படையில் காங்கிரஸ்க்குத்தான் மூன்றாவது இடம். ஆனால் அதில் திமுக வாக்குகள் இருப்பதால் இது போங்காட்டமாக ஆகிறது. 


உண்மையிலேயே மூன்றாவது இடத்தைப் பெற்றவர் யார் தெரியுமா ? 


பின்னால் வருகிறார், பின்னால்ன்னா..... அடுத்து வருபவர் அல்ல ;)


9.) தே மு தி க (விஜய்காந்த், பிரேமலதா, சுதீஷ்)



மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி என்று தன் பாட்டை தானே திரும்பத் திரும்பக் கேட்டால் எப்படி இருக்கும் ???


விஜய்காந்த் முழுக்க முழுக்க திமுக பக்கமோ, அரை மனத்துடன் பாஜாபா பக்கமோ போகத்தான் தயாராய் இருந்தார்.


ஆனால் ஆட்சி, அதிகாரம், எதிர்க்கட்சி, எம் எல் ஏ இவைகளையெல்லாம் விட.............வீட்டிலேயே இருக்கணும், சினிமாவும் நடிக்கணும், அரசியல்ல ஒரு முக்கிய ஆளாகவும் இருக்கணும், ஆனா நோகாம பல கோடி பாக்கணும்ங்கிற ஃபார்முலாவ விஜய்காந்த் குடும்பம்தான் முதன்முதலாக தமிழக அரசியலில் ஆரம்பித்து வைத்தது எனலாம்.




கிங்கா ? கிங் மேக்கரா ? எனத் தன் கட்சியினரைக் குழப்பி......கிங் கிங் என புலம்ப வைத்து, சாத்தியமில்லாத கோரிக்களை முன்வைத்து, அது நிறைவேறாது எனச் சாக்குச் சொல்லி ம ந கூவிடம் அடைக்கலமாகி பெயரை கே ந கூ என மாற்றி, முடிவில் அது ஜெ ந கூ ஆனதுதான் மிச்சம் :(


அய்யோ பரிதாபம். தள்ளாட்டத்துடன் அவர் செய்த பரப்புரையே சொல்லும் இத் தோல்விகளை :(



அதிலும் அவருடைய கடைசி நாள் பரப்புரையை கேப்டன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துத் தொலைத்தேன்.  



ஒரு வரி பேசுவதற்குள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு போய் விடுகிறார். மிரட்டுகிறார். கேமராமேன் உடனடியாக விஜய்காந்திடமிருந்து கோணத்தை எடுத்துவிட்டு, வேறெங்கோ செல்கிறார். விஜய்காந்த் குரல் கேட்காதபடி தேமுதிக கட்சிப் பாடலை ஒலிபரப்புகிறது டிவி. 


அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் விஜய்காந்த் பேச வருகிறார்.



அடுத்து ஒரு வரியைப் பேசுவதற்குள் திரும்பவும் கேமரா கோணம் மாறுகிறது, பாடல் ஒலிபரப்பாகிறது, காரணம் கேப்டன் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போய் விட்டார் போல.



இப்படியே பத்துமுறை அன்று நடந்து.......கடைசியில் அவருடைய பேச்சை ஒளிபரப்பாமல் அவருடைய சொந்த டிவியே கை கழுவியது. இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம்.




முடிவு ? விஜய்காந்த் அவர்களே உளுந்தூர்பேட்டையில் மூன்றாவது இடத்துக்குப் போய்................டெப்பாஸிட் இழந்திருக்கிறார். 




இதைவிட வேறார் இவரை இப்படி குழியில் தள்ளி விட்டிருக்க முடியும் ? எல்லாப் புகழும் வைகோவுக்கே ;)



29 எம் எல் ஏக்களுடன் சட்டசபைக்குள் நுழைந்து, எதிர்கட்சி தலைவராகியும், அவர் கண் முன்னே பத்துக்கும் மேற்பட்ட எம் எல் ஏக்கள் அப்படியே அதிமுகவுக்கு போனபோதே தேமுதிகவின் பாதி உயிர் போய்விட்டது. 




போதாத குறையாக வலது கையாக இருந்த சந்திரகுமாரை திமுகவும் இழுக்க............மீதி உயிரும் போய் விட்டது. கழகங்கள் கரம் வைத்து கேப்டனை வீழ்த்தியதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 



கண்டிப்பாக இருபது வருடங்கள் கழித்து விஜய்காந்த் என்று வாசிப்பதே சுவையாக இருக்கும், ஆச்சர்யமாகவும் இருக்கும்.
நல்ல வாக்கு வங்கி கொண்டிருந்த தேமுதிக, இம்முறை செல்லாக் காசாகிப் போனது. வாங்கிய வாக்குகள் கூட்டணியிலேயே அதிகம். எப்படி ? 110 தொகுதிகள் நின்றதால் வந்தது என்பதே உண்மை.




வாங்கிய வாக்குகள் = 716189 = 2 . 3 % தனியாய் இருக்கும்போதே 5 முதல் 10 விழுக்காடு வாக்கு வங்கி எனப் புகழப்பட்ட மனிதர்............தேமுதிக தவிர பிற ஐந்து பழைய கட்சிகள் வாக்களித்தும் இந்தக் கதி :(




10.) நாம் தமிழர் கட்சி (சீமான்)



இப்படி ஒரு கட்சி பிற்காலத்தில் வளர்ந்திருந்தால்.........எங்களை நீங்கள் மன்னியுங்கள். இயன்றவரை இந்த இனவாதக் கட்சி வளர்ந்து விடாமலிருக்கவே பெரும்பாடு பட்டோம்.



ஒருவேளை அவர்களுடைய கொள்கைகளெல்லாம் பக்குவப்பட்டு இந் நிலை என்றால் பரவாயில்லை.


ஆனால் அதே கொள்கைகளுடன் வளர்ந்திருந்தால் அது தமிழர்களுக்கு பெருங்கேடு. எனவே நிச்சயம் தமிழர்கள் நிச்சயம் இப்படி ஒரு கட்சியை வளர்த்திருக்க வாய்ப்பே இல்லை.


கண்களை இறுகக் கட்டிக் கொண்டு கம்பெடுத்து சுற்றினார் இக் கட்சித் தலைவர். இளைஞர்கள், புது வாக்காளர்களுக்கு இந்த மேஜிக் மிக அபூர்வாமகத் தெரிந்தது உண்மை.

கண்ணக் கட்டிக்கிட்டே இம்புட்டு வேகமா கம்பு சுத்துறாரே...........கண் கட்ட மட்டும் அவுத்திருந்தா எத்தன பேர காலி பண்ணுவாரு ? என்று வியந்தனர் அவர்கள்.



இயற்கை உரம், நாட்டுப் பசு, கார் தொழிற்சாலை உபயோகப்படுத்தும் நீர், ஈழ வீழ்ச்சி, ஈழ ரத்தம், நீர் தகராறுகள் என்பதெல்லாம் தமிழகத்தை தமிழன் ஆளாமல் இருந்ததால் பெற்ற சாபங்கள் என்று தொடர்ந்து பரப்புரை செய்தார்.



2011 தேர்தலில் ஈழ வீழ்ச்சி பலர் மத்தியில் உச்ச அவலச் சோகப் பேச்சாய் இருந்தது கண்டு அதை எவ்வாறு தம் வாக்குகளாக மாற்ற முடியும் எனக் கணித்த தில்லாலங்கடி சீமான்.


ஆனால் அப்போது இவர் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக திமுகவும், காங்கிரசும் வீழ வேண்டும் என அரும்பாடு பட்டார். ’இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று ஈழத்திலிருந்து அன்னிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பல அப்பாவிகள் கனவில் பிரபாகரனின் தம்பியாய் வந்தார்.


இத் தேர்தலில் போட்டியிட கடந்த இரண்டு மூன்று வருடங்களாக எல்லாத் திட்டங்களையும் சரியாகத் திட்டமிட்டுச் செய்தார். உண்மையிலே இத் தேர்தலில் அவருக்கு கிட்டிய வாக்குகள் மிக அதிகம். எவ்வளவுக்கெவ்வளவு அதிகமோ.......அவ்வளவுக்கவ்வளவு இந்திய தேசியத்துக்கு கேடான ஒன்று. 



தாக்கரேக்கள் மராட்டியத்தில் அறுபது வருட அரசியல் புரிந்தும் அவர்களால் தனித்து ஆட்சிக்கு வர முடிந்ததே இல்லை. யாரைக் கைகாட்டி புறக்கணிக்கச் சொன்னார்களோ..........அவர்களுடனேயே இறுதியில் கைகோர்த்து ஆட்சி புரிந்தார்களே அன்றி........அவர்களின் நோக்கம் ஆட்சியே தவிர மக்கள் நலன் என்றெல்லாம் ஏதுமே இல்லை. இவர் கதையும் அதேதான். சிறு அங்கீகாரம் கிட்டும் வரை நடத்தப்படும் இந் நாடகம், கிட்டிவிட்டால் அதே 
அரசியல்...................கிட்டாவிட்டால் கோர அரசியல் என உருப்பெறும்.



மறைமுகமாக அம்மா பாசக்காரர் என அறியப்படுவதால்...................இப்போது உமிழாத எரிமலையாய் அமைதி காட்டுவார். ஆட்சி மாறினால் காட்சி மாறலாம்.



இவர் வாங்கிய வாக்குகள் = 319930 = 1 % தொகுதிக்கு சராசரியாக 500 - 2000 வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள். இதில் சீமான் கடலூரில் போட்டியிட்டு வெற்றிகரமாக ஐந்தாவது இடத்தைப் பெற்றிருக்கிறார். வாங்கிய வாக்குகள் 12467 , டெப்பாஸிட் தொகை போய்விட்டது.



11.) சமத்துவ மக்கள் கட்சி (சரத்குமார் )



இவரைப் போல கண்ணுக்குத் தெரிந்து அசிங்கப்பட்டு தோற்றுப்போன ஒரு நபரை காண்பதரிது.


நாடார் இன மக்கள், தான் கட்சி ஆரம்பித்ததும் அப்படியே செம்மறி ஆடுகள் போல பின்னால் வருவார்கள் என தந்தி குழுமத்தினர் இவருக்கு ஆருடம் சொன்னார்களோ..............என்னமோ ?


திமுக, அதிமுக என்று தாவித் தாவி...........போனமுறை அதிமுக தயவால் இரு சீட்டுகள் பெற்று இரண்டிலும் வென்று சட்டசபைக்குள் நுழைந்து ஐந்து வருடங்கள், அம்மாவுக்கு பிரச்சாரம் செய்வதைத் தவிர வேறொன்றும் செய்யாதவர்கள்.



பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோலேச்சிக் கொண்டிருந்த நடிகர் சங்கத் தலைவர் பதவியும் பறிபோனது, போதாததற்கு அம்மாவின் கருணைப் பார்வையும் இறுதியில் இல்லாமல் ஆனது.



இனி அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என வெந்து வெளியேறிய வேளையில் கட்சியும் சிதறிப் போனது. தனியாக பாஜபாவுடன் கூட்டணி வைத்த, இரண்டே நாளில் போயஸ் தோட்டம் அழைக்க............ஒரே ஒரு சீட் அதுவும் திருச்செந்தூர் தொகுதி என்பதை..........சிறிதும் எதிர்ப்பு காட்டாமல் ஏற்றுக்கொண்டார். 



காரணம் திருச்செந்தூரில் கணிசமாக கிட்டிவிடுமென நம்பிய நாடார் வாக்குகள். தந்தி ரெக்கமண்டாகத்தான் இருக்க வேண்டும், அந்தக் குழுமங்களின் சொந்த ஊர்.



ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன் திமுக வேட்பாளர் எனச் சொன்ன நாளிலிருந்தே சரத்குமார் அவுட் என்று சொல்லாத வாயில்லை. 


இவ்வளவு அப்பட்டமாக தோல்வியைத் தழுவிய முதல் அதிமுக காரர் இவராகத்தான் இருந்திருக்கக் கூடும்.



கிட்டத்தட்ட 26000 வாக்குகள் குறைவாக வாங்கித் தோற்றுப் போனார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.
சம்முவம், கெத்தா படத்துல நடிச்சா மட்டும் போதாது, செயல்லயும் காட்டோணும் ;)    



12.) நா ம க (நடிகர் கார்த்திக்)


நாடாளும் மக்கள் கட்சி. இவரும் சாதியை நம்பி சரியாய் சீசன் பறவை போல தேர்தலப்ப மட்டும் ஆஜராவார்.



இவரையெல்லாம் இந்த எழவெடுத்த மீடியாக்கள் ஏன் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே தெரியவில்லை.


தெளிவான உச்சரிப்புடன் நாலு வார்த்தை கோர்வையாகப் பேசவோ, விளக்கவோ தெரியாத மனிதர்.


விடியல் கூட்டணி என்கிற பெயரில் இவர்கள் ஒரு புல்லைக் கூட பிடுங்கவில்லை. தொகுதிக்கு 100 வாக்குகள் கூட வாங்கியிருப்பார்களா எனத் தெரியவில்லை.



தயைகூர்ந்து, அடுத்த தேர்தல்களில் இவரைத் தொலைக்காட்சிகளில், செய்தித்தாள்களில் காட்ட வேண்டாம், ப்ளீஸ் (கடுங்கோப குறியீடு)


13.) கா ம இ(தமிழருவி மணியன்)


காந்தீய மக்கள் கட்சி என்று ஒரு காந்தியவாதியாகவும், தெளிவான வரலாற்றறிவு கொண்டவராகவும், அருவியாய்த் தமிழைக் கொட்டுபவராகவும் அறியப்பட்ட இவர், இப்போது பலர் நடுவில், ’முன்னாள் தரகர்’ நிலையில் காட்சியளிக்கிறார்.




இவரிடமிருந்துக் கற்ற வித்தையைத்தான் தன் குருவுக்கே காட்டி, குருவை மிஞ்சிய சீடராகிப் போய்விட்டார் வைகோ எனப் பலர் சொல்லக் கேள்வி.



25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாகச் சொன்னாலும், மீண்டும் திமுக வந்துவிடக்கூடாது என வெளிப்படையாக அம்மாவுக்கு தொழில் அங்கீகாரம் கேட்டு தூது விட்டவர்.




டாப் 10 ல் ஒரே ஒரு தொகுதியில் கூட இவர்களின் வேட்பாளர்கள் வாக்குகள் வாங்கியதாகச் சேதி இல்லை. முதலில் இவர்கள் தேர்தலில் நின்றார்களா என்பதே எனக்குச் சந்தேகம் உள்ளது ! தவிர்க்கப்பட வேண்டிய ஒரு தலைவர் இவர்.



14.) பண்ருட்டி வேல்முருகன்


போயஸ் கார்டன் வாசலில், அம்மா தரிசனம் கிட்டுமா என பல மாதங்கள் காத்துக் கிடந்தார். கடந்த ஐந்து வருடங்களில் அம்மாவென்று அழைக்காத நாளில்லையே என்று பாடியபடியே வளையவந்தவர்.



இவரைப் பற்றி என்ன சேதி போனதோ...........அம்மா ஒத்தச் சீட்டுக் கொடுக்கலையே ?



மானஸ்தர் வேறு சில இடங்களிலும் நூல் விட்டுப் பார்த்தார். திடுமென தனித்துப் போட்டி என்றார். நெய்வேலி என அவருக்கு மிகப் பலமான தொகுதியில் போட்டியிட்டார்.


பா ம கவிலிருந்து வெளிவந்தவர். பாமகவினர் மட்டும் நம்மாளுதானே என வாக்குகளை அவருக்குப் போட்டிருந்தால் ஒருவேளை வெற்றி பெற்றிருந்திருக்கலாம். என்ன...... இவர் அம்மாவை பழி வாங்கிக் கொண்டார். இவர் வாங்கிய வாக்குகள் 30528. திமுக வாங்கிய வாக்குகள் 54299. அதிமுக வாங்கிய வாக்குகள் 36508.


நிச்சயம் ஜெயலலிதா இதை மன்னித்து, இவரை மீண்டும் ஆதரிப்பார் என நம்புகிறேன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சார்.



15.) பா ம க (ராமதாஸ், அன்புமணி, கா வெ குரு)



வாவ்வ்வ்வ்வ்................போட்டியிட்ட 230 ( ? ) (இரண்டு தொகுதிகளில் தேர்தல் நடக்கவில்லை. இரண்டில் இவர்கள் வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்துவிட்டது) தொகுதியிலும் தோற்றாலும், மனதைக் கவர்ந்த ஒரு கட்சி.




”யோவ்..........அப்பட்டமான சாதி அபிமானக் கட்சி. ஒடுக்கப்பட்டோரை மேலும் ஒடுக்க நினைக்கும் கட்சி. இது உம் மனதைக் கவருமா ?” என நீங்கள் பல்லை நெறிக்கும் சத்தம் கேட்கிறது. நான் சொல்ல வந்தது அவர்களின் அபாரத் துணிவை.



உண்மையில் இப்படி இருக்கவே இருக்காதுதான் எனினும் நிஜமான ஆ .)அதிமுக போல நடந்துக் கொண்டது இவர்கள்தான்.



இவர்களுக்கு இருந்த கெட்டபெயர் ஒவ்வொரு தேர்தலிலும் மாமரக் குரங்கு போல மாம்பழம் எங்கு கிடைக்குமோ அங்கு தாவிவிடுவார்கள். அக் கறை நீக்க, இவர்கள் தைலாபுரத் தோட்டத்தில் வைத்து ஒரு சபதம் எடுத்தார்கள். இனி எக்காலத்திலும் அதிமுக, திமுகவினருடன் கூட்டணி இல்லை.



ஆனால் மதவாதக் கட்சி பாஜபாவுடன் கூட்டணி வைத்து 2014ல் தர்மபுரி தொகுதியை வென்றபோது இவர்களுக்கு எந்த உறுத்தலுமில்லை. இத் தேர்தலில் தனித்து போட்டி என்று யாரையுமே சேர்க்கவில்லை.


அன்புமணியாகிய நான் என்று பதவிப்பிரமாணம் எடுப்பதைப் போன்ற விளம்பர உத்தி, 200 தொகுதிகளுக்கு மேல் பா ம க வெல்லும் என்று உறுதிப்படப் பேசிய தொனி.....உண்மையிலேயே பலம்.
மருத்துவர் ராமதாஸ் ஒருபடி மேலே போய் 200 ன்னு அவர் கொஞ்சம் பெருந்தன்மையாச் சொல்றாரு, நெசத்தச் சொல்லணும்ன்னா அது 210 என்று கிடுகிடுக்க வைத்தார்.



35 வருடங்களாக நான் போராடி வாய்க்காத மதுவிலக்கை என் மகன் முதல் கையெழுத்து போட்டு முடிக்க என் பேனாவை அவனிடம் கொடுத்துவிட்டேன் எனப் பிழிந்தார்.



உண்மயிலேயே வன்னிய வாக்காளரிடையே இப் பேச்சுக்கு அதிகப் பலமிருந்தது என்பதைக் கண்கூடாக தேர்தல் முடிவுகளில் பார்க்க முடிந்தது.



பாவம் இவர்களால் ஒரு தொகுதியைக் கூட பெற முடியாவிடினும், மாம்பழச் சின்னமே மூன்றாவது இடத்தைத் தட்டிச் சென்றது. 



அதாவது தனித்துப் போட்டியிட்ட வகையில் திமுகவுக்கு அடுத்து பாமக பெற்ற வாக்குகள் 5 . 1 % பெற்ற மொத்த வாக்குகள் = 1591527.


பென்னாகரத்தில் போட்டியிட்ட அன்புமணி ராம்தாஸ் வாங்கிய வாக்குகள் = 58402. இவரும் திமுகவிடமே வீழ்ந்துள்ளார். திமுக வாங்கிய வாக்கு 76848, வித்தியாசம் 18446. நல்லவேளையாக டெப்பாசிட் கிட்டிவிட்டது. இங்கு மூன்றாமிடம் பெற்றது அதிமுக.




வடக்கு மண்டலங்களில் கிட்டத்தட்ட 50 தொகுதிகள் வரை பா ம க ஐந்து இலக்க எண்களில் வாக்குகளைப் பெற்றிருந்தைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.

ராமதாஸ் மற்றும் அன்புமணி யின் நடிப்பு மிக அற்புதமாக அவர்களை ஈர்த்திருந்திருக்கிறது. அப்பட்டமாக அவர்கள் சொன்னதை நம்பி, நம்மாளு முதல்வராயிடுவாரு போல என்று வாக்களிந்திருக்கிறார்கள்.


இந்தத் தோராயமான 50 தொகுதிகளில் இவர்கள் வாங்கிப் பிரித்த வாக்கால் 35 தொகுதிகள் வரை அதிமுகவுக்கு லாபமாகவும், 15 தொகுதிகள் வரை திமுகவுக்கு லாபமாகவும் போனது வரலாறு.


பர்கூரில் அதிமுக வெறும் 982 வாக்குகள் அதிகம் பெற்று திமுகவை வென்றுள்ளது. அங்கு பாமக வாங்கிய வாக்குகள் 18407. இது ஓர் உதாரணத்துக்கு. அவ்வளவுதான். ஆனால் 225 தொகுதிகளில் பா ம கவுக்கு டெபாஸிட் பறிபோன அவலமும் உண்டு.



தேர்தல் தோல்விக்குப் பின்னும் நாங்கள் திமுக அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே மாட்டோம் என பிரசவ வைராக்கியம் போல பேட்டி கொடுத்துவிட்டாலும்...................இந்த புள்ளிவிவரக் கணக்குகள் அவர்களை பெரிதும் குழப்பும்.



சாதியீயத்தை பாமக கைவிட்டால் அதற்கு பிற்காலத்தில் வாய்ப்பு கூடும் எனப் பொதுவாய்ப் பேசலாம். ஆனால் அப்படிச் செய்தால், ‘ உள்ளதும் போச்சேடா குரு’ என்று ராம்தாஸ் புலம்ப வைத்தாலும் வைத்துவிடலாம்.



16.) பா ஜ பா (தமிழிசை, ஹெச்.ராஜா, இல.கணேசன்)



பா ஜ பாவை எல்லோருமே கூட்டணி ஆட்டத்தில் புறக்கணித்தது ஓர் அவலம் என்றாலும், அக் கட்சி ஓரளவு தமிழகத்தில் வளர்ந்துக் கொண்டுதானிருக்கிறது. காரணம் செழிப்பாய் வளர ஆரம்பித்துவிட்ட ஆதிக்க, இடைச்சாதியினரின் சாதிப்பாசம். இந்தச் சாதிப்பாசம் வளர உதவுவது இந்து மதத்தின் நிறப்பிரிவுக் கோட்பாடுகள்.



இருந்தும் எளிமையான, ஊழலற்ற பாஜபாவின் பிற மாநில செயல்பாடுகளும் சில காரணங்களில் ஒன்று.
இவர்கள் நாங்கள் தமிழகத்தை 2016ல் ஆள்வோம் என்றெல்லாம் ராம்தாஸ் போல, வைகோ போல, சீமான் போலவெல்லாம் உளறிக் கொட்டவேயில்லை.



அவர்களின் நோக்கம் பத்து தொகுதிகள் லட்சியம் ஐந்து நிச்சயம் என்கிற இலக்கை நோக்கித்தான் இருந்தது. இவர்களுக்கு இரண்டிலிருந்து மூன்று சீட்கள் வரை கிடைக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டது. ம்ஹூம்.



ஐந்து முறை மோடியைக் கூட்டி வந்தும் மோடி அலை இங்கு எடுபடவேயில்லை. சில இடங்களில் இரண்டாமிடம் வந்தாலும் போட்டியிட்ட பல தொகுதிகளில் டெப்பாஸிட் பறிபோனது. ஒரு தொகுதி கூட கிட்டவில்லை.



தமிழிசை, வானதி போன்ற நல்ல வேட்பாளர்களும் மூன்றாமிடம், நான்காமிடம் பெற்றது பரிதாபமான ஒன்று. 



ஹெச். ராஜா தியாகராய நகரில் பெற்ற வாக்குகள் கிட்டத்தட்ட 20000.



பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன வாய்க்கு, திராவிடக் கட்சியின் பிதாமகன் தியாகராயர் பெயரில் அமைந்த நகரில் வாய்க்கரிசி போட்டதுதான் செம டைமிங்.



இவர் பிரித்த வாக்கால் அதிமுகவுக்கு இந்தத் தொகுதி சாத்தியமானது. திமுகவை விட வெறும் 3155 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று அதிமுக இங்கு வென்றுள்ளது.



இந்தியாவில் இப்போதைக்கு நன்கு ஆழ ஊன்றி விட்ட கட்சி இது. லேசில் அழிந்துவிடாது. இங்கு பருப்பு வேகவில்லை என்றாலும் இந்து என்றாவது வேகவைக்கும் என்று காத்திருக்கிறார்கள். 



17.) பாரிவேந்தர் பச்சமுத்து


பணமும், ஊடகமும், வேலை ஆட்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சாதிக்கட்சிதான் இந்திய ஜனநாயக கட்சி.
இவர்கள் வாங்கிய வாக்குகளெல்லாம் 500 சொச்சத்தில் பார்த்தேன். சில இடங்களில் கூடக்குறைய வாங்கியிருக்கலாம். போக பாஜபா கூட்டணியில் வேறு போட்டியிட்டிருக்கிறார்கள்.


பணத்துக்குப் பிடிச்ச கேடு. பணத்துக்கும் இவர்களைப் பிடித்திருப்பதால் அது நமக்குப் பிடிச்ச கேடு. வேறென்னத்தச் சொல்ல ?




இன்னும் பத்துவருடங்கள் கழித்து, எனக்கே இந்தப் பெயர் மறந்துவிடக் கூடும் என்பதால்.............இவர் எஸ் ஆர் எம் நிறுவனங்களின் முதலாளி. வேந்தர், புதிய தலைமுறை டிவி & பத்திரிக்கைகளின் சேர்மென்.



18.) புதிய தமிழகம் (கிருஷ்ணசாமி)



ஒடுக்கப்பட்ட மக்களின் காவலராக தூத்துகுடி, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, திரு நெல்வேலி, மாங்குளம் பகுதிகளில் அறியப்படுபவர். மருத்துவர்.
போனமுறை அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு வென்றார். இம்முறை திமுகவுக்கு வந்தார். நல்ல மரியாதை. ஆனால்..............



இவர் வென்றுவிட்டார் என்று தொலைக்காட்சியில் போட்டுவிட்டு அதை மாற்றிவிட்டனர். இறுதியில் இவர் மிகப் பரிதாபமாக 493 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோற்றுப் போய்விட்டதாகச் சொல்லினர்.


இக் கட்சிக்கு நான்கு இடங்களை அள்ளிக் கொடுத்து..........ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை.



19.) பச்சைத் தமிழகம் (எஸ்.பி. உதயகுமார்)


கூடங்குளத்தின் நாயகன். அணு உலைக்கு எதிரான களப்போராளி. 


2014 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்டு 20000 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
எந்தத் துணிவில் இம்முறை சட்டசபைத் தொகுதிக்கு நின்றார் எனத் தெரியவில்லை ?


இருந்தாலும் படித்த இளைஞர்கள் மத்தியில், இவர் போட்டியிட்ட ராதாபுரத் தொகுதியில் பரிச்சயமான நபர் என்பதால் நல்ல வாக்குகள் வாங்குவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. 



ம்ம்ம்ம்ம்............ 4891 வாக்குகள் மட்டுமே கொடுத்து, டெபாஸிட் இழக்க வைத்துள்ளனர். 




இவர் பிரித்த வாக்கு அதிமுகவுக்கு சாதகமாகப் போனது என்ற ஒன்று மட்டும் இவருக்கு ஆறுதல். திமுக வேட்பாளர் அப்பாவு இத் தொகுதியில் வெறுமனே 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்.




என் கேள்வி. கூடங்குள எதிர்ப்பு போராட்டத்தில் இவர் வெற்றி பெறவில்லை, ஆனால் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தினார். என்ன லாபம் ?




இந்தியா அணு உலைகளை அமைப்பதை நிறுத்திவிட்டதா ? கிட்டத்தட்ட 20 உலைகள் அமெரிக்காவும், 10 உலைகள் ரஷ்யாவும், சில உலைகளை ஃப்ரான்சும் இங்கு அமைக்கவிருக்கின்றன.



கூடங்குளத்தில் ஒரு அணு உலை செயல்பாட்டில் இருக்க, இன்னொரு அணு உலையில் எரிபொருளை நிரப்பி இயக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.




போராட்டத்தில் தோற்ற பின்னரும், இலக்கில் தோற்கப் போகும் நிலையில் இருந்தாலும் அவர் ஒரு போராளி என்று எப்படி இந்த இளைஞர்கள் நம்பி விடுகிறார்கள் ? காலம் பதில் சொல்லட்டும் !



20.) ஆம் ஆத்மி (போட்டியிடவில்லை)




21.) பகுஜன் சமாஜ் கட்சி(ஆம்ஸ்ட்ராங், மாயாவதி)



இந்தக் கட்சி ஒடுக்கப்பட்டோருக்காக இங்கு பாடுபடுவதாக தன்னைச் சொல்லிக் கொள்ளும் கட்சி, ஆனால் இந்திய அளவில் பிரம்மாண்டமான கட்சி. இருந்தும் 2014 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட இந்திய அளவில் எங்கும் பெற முடியாமல் போய்விட்ட கட்சி.


இவர்கள் எதற்காக இங்கு தேர்தலில் நிற்கிறார்கள் என்பதே பெரு மர்மமான ஒன்று. யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்கள். தெருத்தெருவாய் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். 



ஒரு நாள் பெஹன்ஜியை கூட்டிட்டு வந்து மீட்டிங் போடுவார்கள். ஆங்காங்கே சுவர்களில் யானை படம் தெரியும். திருவள்ளூர், பெரம்பூர், அயனாவரம், அம்பத்தூர், செங்குன்றம் சுற்று வட்டாரங்களில் பார்க்கலாம். வெளியூர்களில் என்ன நிலை எனத் தெரியாது. ஒரு முறை கூட டெப்பாசிட் பெற்றதாய் வரலாறு இல்லை.



இவர்கள் வலுவாய் இருப்பார்கள் எனச் சொன்ன திருவள்ளூரில் 2171 வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள். பிற தொகுதிகளில் இரண்டிலக்கம் கூட பெற்றிருக்கக் கூடும். இவர்கள் கட்சி நடத்துவது வேறு சில நோக்கங்களுக்காகப் போல.



22.) கொங்கு ஈஸ்வரன், தனியரசு, யுவராஜ் வகையறா




கொங்கு பகுதி மக்கள் நல் வாழ்வுக்காக தொப்பி சின்னத்தில் போட்டியிடப் போவதாக கொங்கு தேச மக்கள் கட்சி அறிவித்தது.



அவர்களின் பிரதான நோக்கம் திமுக வந்துவிடக் கூடாது என்பதுதான் என்பதை அவர்கள் பிரித்த வாக்கு உணர்த்திவிட்டிருக்கிறது இத் தேர்தல்.




பத்து தொகுதிகள் வரை இவர்கள் பிரித்த 5000 - 10000 வாக்குகளால் முழுக்க முழுக்க அதிமுகவே மேற்கு மண்டலங்களில் வென்றிருக்கிறது.



இதில் தனியரசு மட்டும் தனியாகப் பிரிந்து போய் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஒரு சீட் வாங்கி வென்றும் விட்டார்.



அப்பட்டமான சாதிக் கட்சி. ஆதிக்கச் சாதிக் கட்சி. பணக்காரர்கள் நிரம்பியிருக்கும் கட்சி. சீக்கிரத்தில் அழிந்து விடாது.


இப்போதைக்கு எல்லாத் தொகுதிகளிலும் டெப்பாசிட் போனாலும், கூட்டணி இல்லாமல் இவைகள் வளராது, எனவே கூட்டணிக்குள் நுழைந்து, வளர்ந்துக் கொண்டேதான் இருப்பார்கள்.


23.) எஸ் டி பி ஐ




மதவாதக் கட்சி. ஆனால் நாங்கள் அப்படி அல்ல என்று மறுப்பார்கள். சிறிதும் அதற்கு வாய்ப்பில்லை. முழுக்க முழுக்க தங்கள் தொகுதியில் இருக்கும் முஸ்லீம் வாக்காளர்கள்தான் மொத்த வாக்காளர்கள் என நம்பும் ஒரு கட்சி.




அற்புதமான தொண்டர் படை உள்ள ஒரு புதுக்கட்சி. தொண்டுள்ளம் நிறைந்தக் கட்சியும் கூட. திமுகவில் சீட் பேரம் படிந்துவிடுமென எதிர்பார்த்து, கேட்ட தொகுதிகள் கிட்டாததில் தனியாக களம் கண்டனர்.




இவர்கள் கோரியத் தொகுதிகளில் சென்னை ராயபுரம் மற்றும் துறைமுகம் முக்கியமானவை. ஆனால் ராயபுரம் மனோ திமுக காங்கிரஸ் கூட்டணி வைக்குமா, இல்லையா எனத் தெரியாத காலத்திலேயே ராயபுரத்தை ராயல்புரமாக மாத்துவேன் என்று போஸ்டர் ஒட்டிவிட்டார். துறைமுகத்தில் ஸ்டாலினின் வலதுகை சேகர்பாபு என்றும் எப்போதோ முடிவான ஒன்று என்றார்கள்.




ராயபுரத்தில் இக் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர் என் நண்பர். வாரா வாரம் கிரிக்கெட் மேட்சில் எதிர் அணியில் இருப்பவர். நிச்சயம் நல்ல வேட்பாளர். ஆனால் முதலில் இவர்கள் மாமன்ற உறுப்பினருக்குத்தான் முயன்றிருக்க வேண்டும். சரி போகட்டும். ராயபுரத்தில் இவர்கள் வாங்கிய வாக்குகள் 4345. நம்ப மாட்டீர்கள் இவர்தான் மூன்றாம் இடம். துறைமுகத்தில் இவர்கள் வாங்கிய வாக்குகள் 4161 நான்காம் இடம். 




இறுதிக்கட்டத்தில் இத் தொகுதியில் ஸ்மிருதி இராணி நடத்திய பரப்புரையில் கவரப்பட்டு பாஜாபா வேட்பாளர் 13357 வாக்குகள் வாங்கி சேகர்பாபுவை கிட்டத்தட்ட 5000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்திருக்கிறார்.


இக்கட்சியும் எத் தொகுதியிலும் 
டெப்பாஸிட் பெறவில்லை. ஆனால் உழைப்புக்கஞ்சாத இம்மாதிரியான கட்சிகள்தான் நாட்டுக்குத் தேவை.




ஆனால் ஒரு மதவாதக் கட்சி, சாதீயக் கட்சிகளெல்லாம் இங்கு பெரிதாக காலூன்ற முடியவே முடியாது என்பதை இவர்களெல்லாம் என்றுதான் அறியப் போகிறார்கள் ?




சரி, அப்படி சிறுபான்மையினர் நலம் காக்க களமிறங்கியிருக்கிறோம் என்றால் உங்களுக்குள் ஏன் இத்தனை இத்தனைக் கட்சிகள் ?




ஒருவேளை நீங்களே பத்து பேர் தனித்தனியாக நின்றாலும் உங்கள் மக்கள் உங்களுக்கு மட்டுமே என்று வாக்களிக்க மாட்டேன் என்கிறார்களே அது ஏன் ?




அங்கதான் பெரியார் சிரிப்பார். 



அவரை தமிழர் மனத்திலிருந்து முற்றிலுமாய் நீக்கும் வரை இங்கு சாதி மதம் முழுமையாக வென்று விட முடியாது !   


24.) மனித நேய மக்கள் கட்சி & முஸ்லீம் கழகம்


இவர்கள் உஷார். மதவாதக் கட்சிகள் என அப்பட்டமான முத்திரை இருந்தும் சிறுபான்மையினர் கேடயம் இவர்கள் எங்கும் தாவ உதவுகிறது.



திமுக அதிமுக என இரு தோள்களிலும் எம்ஜிஆர் - கருணாநிதி காலத்திலிருந்தே அப்துல் சமது - அப்துல் லத்தீப் என வலம் வந்தவர்கள்தான்.



அதிமுக ஒன்று, இரண்டு என கிள்ளிக் கொடுக்க, திமுக 10 தொகுதிகளை இரு கட்சிகளுக்கு அளித்தது. அதில் ஒரு தொகுதியை ம ம க திருப்பியளித்தது, பல ஆச்சர்யக்குறிகள்.



ஒரே ஒரு தொகுதியில் திமுக சார்பாக 
போட்டியிட்ட முஸ்லீம் லீகும், ஒரே ஒரு தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டவரும் வென்றிருக்கிறார்கள். கிட்டியதே 11 தொகுதி, இதில் இரண்டு மட்டுமே வெற்றி.




பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகும் மதக் கட்சிகள் இவை. ஒற்றுமையாய் எக் காலத்திலும் சேரப் போவதுமில்லாததால்................இப்போதைக்கு இவர்களால் இந்த இரு கழகங்களுக்கும் லாபம். 




25.) வீரலட்சுமி, கலாம் கட்சி, கருணாஸ் படை


கருணாஸ் தேவர் புலிப்படை என்று சாதிக்கட்சி அடிப்படைவாதி. இவருக்கு தோட்டத்திலிருந்து கூப்பிட்டு சீட் கொடுக்கிறார்களே.......என வியப்பெல்லாம் இல்லை. தோட்டமே புலிக்காடுதான். 



ஆனால் இம் மனிதர் வெல்லவே கூடாது என வேண்டினேன். கணிப்புகளும் எனக்கு ஒத்துழைத்தது. ஆனால் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் இவர் வென்றார்.
அடுத்தமுறை வேறு கட்சிக்குத் தாவி இரண்டு சீட் பெறுவார். பிறகு அன்புமணி போல முன்னேறுவார், நாம் வாங்கி வந்த சாபம்.



கலாம் பெயரை உங்க சுய நலத்துக்கெல்லாம் பயன்படுத்தாதீங்க என்று பொன் ராஜ்க்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் கோர்ட் மூலம் சம்மட்டியால் அடிக்க.................இம்முறை அது சைலண்ட் மோட்.



வீர லட்சுமி. 


ஒரு
காமெடி பீஸே
இன்னொரு
காமெடி பீஸ்க்கு
சீட் கொடுக்கிறதே
ஆச்சர்யக்குறி



இப்படியாக இங்கு பலர் பகடி செய்ய வசதியாக, இவருக்கு ஒரு சீட்டை அள்ளிக் கொடுத்தார் வைகோ. ’கொடுக்காமல் அல்ல கொடுத்தும் குதறிப்போடலாம்’ ஃபார்முலா இது.




ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் இவர் தோற்றாலும் மூன்றாமிடம் பெற்றிருக்கிறார். 14083 வாக்குகள். பாஜபா வை விட, பாமகவை விட அதிகம்.




எப்படி இவ்வளவு வாங்கினார் ?


யோவ்............ ஜெ ந கூ சார்பா யார் நின்னிருந்தாலும் இவ்வளவு வாங்கியிருப்பாங்கய்யா என்று நண்பர் ஒருவர் என்னை ஆற்றுப்படுத்தினார்.


இன்னும் எத்தனை கோடி துன்பம்தான் வைப்பாய் என் இறைவா ?


முற்றும் _/\_

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!