தமிழ்நாடு சட்டசபை தேர்தல் & முடிவுகள் 2021

 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

================================ எழுதியது : ராஜா ராஜேந்திரன் எழுத ஆரம்பித்த தேதி - 13/05/2021 எழுதி முடித்த தேதி - 18/09/2021 என்னுரை : 2016 தேர்தல் முடிவுக்குப் பின் இப்படி ஒவ்வொரு தேர்தலையும் பதிவது என்று முடிவெடுத்தேன். ஆனால் தோல்வி தரும் உத்வேகத்தை வெற்றி தருவதில்லை என உணர்ந்தேன் ! ஆமாம். எனக்குப் பிடித்த கட்சி தோற்கும் போது அது ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து எழுத அது மிகவும் அவசியப்பட்டது. அதே வெல்லும்போது அதற்கான அவசியங்கள் ஏதுமில்லாது போகின்றது. அதனால்தான் 2019 நாடாளுமன்ற தேர்தல் & முடிவுகளைப் பதியவில்லை ! அதுசரி, அது முழுவெற்றியா என்ன ? பாதி வெற்றி. ஆனால் முரட்டுத்தனமான வெற்றி. 97/100 மதிப்பெண் வாங்கிப் பெற்ற அசுர வெற்றி. புதுவையோடு சேர்த்து மொத்தம் 40 இடங்களில் 39 தொகுதிகளை வென்ற மகா வெற்றி. ஒவ்வொரு தொகுதியின் வெற்றியும் பிரம்மாண்ட அளவில் இருந்தது. நான் சார்ந்த வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தன்னுடன் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெப்பாசிட் இழக்கச் செய்தார். ஆனால், தேசிய அளவில், 2014 ஐக் காட்டிலும் அதிகத் தொகுதிகள் வென்று, மோடியே மீண்டும் பிரதமரானார் ! அது நாட்டுக்கு பெரும் பின்னடைவைத் தந்தது. அந்த ஆட்சி தொடங்கிய நாட்களிலிருந்து இன்றுவரை நாட்டில் இடைவிடா பிரச்சினைகள். பங்குச்சந்தையைத் தவிர மீதி யாவும் பள்ளத்தை நோக்கி போய்க்கொண்டே இருக்கின்றன. அவ்வளவு ஆஆஆஆஆழமான பள்ளம். எளிதில் மேலே வர முடியும் என்கிற நம்பிக்கையை 100 கோடி மக்கள் இழந்து விட்டார்கள். அது தந்த அயர்ச்சி என்னை எழுதவிடவில்லை ! அதன்பின் ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்கிற பெயரில் ஒரு கூத்தை நான்கு வருடங்கள் தாமதமாய் நிகழ்த்தினார் எடப்பாடி பழனிச்சாமி. அதிலும் திமுகவே அதிகம் வென்றது. கலைஞர் அறிய என்று கலைஞரையே கடவுளாக்கி, பெண் சேர்மன் பதவி ஏற்ற அற்புதங்களெல்லாம் நிகழ்ந்தன ! அதில் மிக மிகக் கேவலமாக, வென்றவர் பெயரை மாற்றி, தோற்றவர் பெயரையெல்லாம் அறிவித்து, நீ வேணா கோர்ட்ல போய் பார்த்துக்கம்மா என்கிறளவு ஆளுங்கட்சி அழிச்சாட்டியம் செய்தது. அப்பாவு வழக்கு கொடுத்த துணிவு. எனவே அதையும் எழுத வெறுப்பே மிஞ்சியது ! இதோ இரண்டு வருடங்களாக காத்திருந்து எதிர்பார்த்த வெற்றி 02/05/2021 ஞாயிறன்று கனிந்துவிட்டது. 06/04/2021 அன்று காத்திருந்து அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று, முதலாளாய் வாக்கைப் பதிவு செய்யுமளவு வெறியேறிக் கிடந்து, பின் நெடுநாள் முடிவுகளுக்காகக் காத்திருந்து கிட்டிய வெற்றி. அந்த வெற்றியையே ஒரு வாரம் கொண்டாடிக் கிடந்தோம் ! வெற்றியைப் பறித்து, அமைதியாக ஐந்து நாட்கள் காத்திருந்து, 07/05/2021 வெள்ளி காலை 09 : 45 க்கு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்றுவிட்டு, ஒரு விநாடி அவையை கெத்தாக நிமிர்ந்து பார்த்து, அனைவரின் கண்களும் ஆனந்தக் கண்ணீர் சொரிய, அவர் முதல்வர் பதவியை ஏற்றதும் எழுதலாம் எனப் பார்த்தால் ;


அவர்பாட்டுக்கு ஒரே நாளில் ஐந்து கையெழுத்து, அதிரடித் திட்டங்கள் எனச் சிலிர்க்க வைத்துக்கொண்டே இருக்க, இப்பத்தான் கொஞ்சம் ஆசுவாசமாகி எழுதத் துவங்கினேன் ! முதல்வர் தலைக்குப் பின் பெரியார், அண்ணா, கலைஞர் படங்கள் சகிதம், அவர் மக்களுக்கு கொடுக்கும் சேதிகளைப் பார்ப்பதே அவ்வளவு அலாதியாக இருக்கும். அந்த மூன்று படங்களும் ஒரு சிறுகூட்டத்தை என்ன பாடுபடுத்தும், எவ்வளவு மன உளைச்சலுக்குள்ளாக்கும் என்பதை எண்ணும் போதே, அவ்வளவு பரிதாபமும், ஆனந்தமும் ஒருசேரக் கிளர்ந்தெழும். போதும், மேட்டருக்கு போ என்கிறீர்கள். ஓகே !




2021 தமிழகச் சட்டசபைத் தேர்தல்களில் இருந்த பிரதானக் கட்சிகள் எவை எவை, அதில் கூட்டணிகள் யார் யார், தனித்து நின்றவர்கள் யார் யார் ? பார்ப்போம். திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக (EPS & OPS ) இரு கம்யூனிஸ்ட்கள், பாமக, மதிமுக(வைகோ), தேமுதிக(விஜய்காந்த்), அமமுக (தினகரன்), தமாகா(வாசன்), விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி(ஜவாஹிருல்லாஹ்) புதிய தமிழகக் கட்சி (கிருஷ்ணசாமி), மக்கள் நீதி மய்யம் (கமல்ஹாசன்), நாம் தமிழர் கட்சி (சீமான்) இது போக, சமத்துவ மக்கள் கட்சி (சரத்குமார்) எஸ்டிபிஐ, உவைசி, முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி, புரட்சி பாரதம் பூவையார், வேல்முருகனின் தமிழ் வாழ்வுரிமை கட்சி, இவையெல்லாம் போததென திடுதிப்பெனக் குதித்த ஐஏஎஸ் சகாயம் ......


திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் பிரம்மாண்டமாக இருந்தது. நேரடி போட்டி எனப் பார்த்தால் இந்த இரு கூட்டணிகளுக்கிடையேதான். ஆனால், ஊடகங்கள் ஐந்து முனை போட்டி என வர்ணித்தன. அதாவது மூன்றாவதாக கமல், நான்காவதாக சீமான், ஐந்தாவதாக தினகரன் என்பது அவர்களுடையப் பார்வை. கேட்ட நம் காதுகளில்தான் குருதிப்புனல் !


கட்சிகளின் வளர்ச்சி, வரலாறு பற்றியெல்லாம் இவர்களுக்குத் தெரியுமா - தெரியாதா என்பதே வியப்பு மற்றும் கடுப்புகளைக் கிளப்பியது. துளி அனுபவம் கூட இல்லாமல் எப்படி இவர்கள் நேரடியாக முதல்வர் பதவிக்கு போட்டியிட துணிகிறார்கள் என்பதே பலத்த சந்தேகத்தை எழுப்பும் !


தினகரனாவது முப்பது வருட கள அனுபவம் கொண்டவர். செலவழிக்க வக்கு இருக்கும் ஆள். அவருக்குப் பின் பலமான சாதிப் பின்புலமும் இருந்தது. சீமான் ? பத்து வருடங்களாக கட்டுத்தொகையை மீட்பதற்கே பெரும்பாடு படுகிறவர். இருந்தாலும் அவரையும் நம்பிக் கொட்டிக் கொடுக்க ஒரு பெருங்கூட்டம் அயல் நாடுகளில் இருக்கிறது. ஏமாறுவதற்கென்றே உழைக்கும் வர்க்கம். தாய்நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாய் இழிவுபட்டு, எங்கோ போய், எவனெவனுக்கோ உழைத்து, ஈட்டிய பொருளை, சீமான் என்றாவது ஒரு நாள் நமக்காக தேசமொன்றைக் கட்டமைப்பார், அங்கு போய் முதல்தர குடிமகனாய் வாழ்வோம் என்கிற நப்பாசையில் வளைய வரும் அப்பாவிப் பிறவிகள். இவர்களுக்காகவே இவர் எல்லாத் தேர்தல்களிலும் போட்டியிடுகிறார். எவருடனும் கூட்டணி கிடையாது என்பதையெல்லாம் ஒரு மக்களாட்சி நாட்டில் பெருமையாகப் பேச இவரொருவரால்தான் முடியும். அதைவிடக் கொடுமை, அதை தன்னிடமிருக்கும் ஏமாளிகளுக்கும் கடத்தி வைத்திருப்பது !


இறுதியாக வருகிறார் ஸ்தாபகர். மய்ய்ங்கார் என்றும் விளித்தார்கள். ஏன் ? 2017 பிக்பாஸ் முதல் நிகழ்ச்சி துவக்கத்தில் அரசியல் என்றாலே மூக்கைப் பொத்தி அரசியலை அசிங்கப்படுத்தியவர், அந்த வருட இறுதியிலேயே அரசியலுக்குள் குதித்தார். அது ஒன்றும் பிழையில்லை. கட்சியின் லெட்டர் பேடில், முதல் அறிவிப்பில் ஸ்தாபகர் என எழுதி கையெழுத்திட்டிருந்தார், அடடா ! தமிழை சமஸ்கிருதப்படுத்தியதில்தான் அவர் மய்யங்காராய் அறியப்பட்டார் !


2019 தேர்தலில், இந்த மூவருமே மிக மோசமாகத் தோற்றிருந்தார்கள். அதாவது தோராயமாக அவர்கள் பெற்றிருந்த வாக்குகள் மொத்தத்துக்கு 40 லட்சம் கூட வரவில்லை. ஆனாலும் முதல்வர் போட்டிக்கான வரிசையில் இவர்களுக்கு ஊடகங்கள் இடமளித்திருந்தன ! 2020 ஜனவரியிலிருந்தே நாட்டில் கோவிட் பெருந்தொற்று பரவ ஆரம்பித்திருந்தது. மார்ச்சில் அது உச்சம் போகத் துவங்கியது. முதன்முறையாக மார்ச் 22, 2020 அன்று, தேசியளவில் சோதனைமுறையாக முழு ஊரடங்கு ஒன்று நிகழ்த்தப்பட்டது. அதை ஒரு ஜாலியாக, புத்தனுபவமாக எடுத்துக் கொண்ட குடிமக்கள் அந்த நாளைக் கொண்டாடினார்கள். இவர்கள் கொண்டாடியதை மிகவும் ரசித்தார் ஒன்றியத் தலைமை அமைச்சர் திருவாளர் மோடி. 2020 மார்ச் 24 அன்று ஒட்டுமொத்தமாக 21 நாட்களுக்கு அதேரக முழுமையான ஊரடங்கு என்றார். அன்றுதான் நாடு முதன்முதலாக திகைத்தது. அதன்பின் நடந்ததெல்லாம் வரலாற்று பயங்கரவாதங்கள் !


கோடிக்கணக்கான சாமானிய மக்களை பல்லாயிரம் கிலோ மீட்டர் நடக்க வைத்து வேடிக்கை பார்த்தது அரசு. அதில் பல்லாயிரம் மக்கள் போகும் வழியிலேயே துடிதுடித்து இறந்தனர். வெய்யில், தாகம், பசி, வயோதிகம், நோய், குழந்தைகள், விபத்து என மரணத்திற்கு பல காரணங்கள் இருந்தன !


அந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. பொருளாதாரம் அடியோடு வீழ்ந்தது. அப்ப அதற்கு முன் பொருளாதாரம் பலமாக இருந்ததோ ? எனக் கேட்பீர்களெனில் ஹிஹி. குற்றுயிராய் இருந்தது முற்றிலும் குலைந்தது.




இவர்கள் மூடிவைக்க மூடிவைக்க நோய்த் தொற்றோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகப் பெருகியது. ஜூன், ஜூலை 2020 வரை தொடர் ஊரடங்கிற்குப் பின்னும், ஆயிரக் கணக்கில் இருந்த நோய்த் தொற்று பல லட்சங்களாக அதிகரித்தது. பல பிரபங்கள் இதனால் இறந்தனர். கொரோனோ வறுமைக்கெதிராக களப் பணிகள் ஆற்றிய திமுகவின் சேப்பாக்க சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன், இந்தியளவில் கொரோனோவுக்கு பலியான முதல் எம் எல் ஏ. எஸ்.பி.பாலசுப்ரமணியம், வசந்தகுமார் எம்.பி, ராம்விலாஸ் பாஸ்வான், பிரணாப் முகர்ஜி போன்றோரையெல்லாம் பலிகொண்டது கொரோனா !


தீபாவளி, புது வருடம், பொங்கல், ஹோலி, கும்பமேளா, ஐந்து மாநிலங்களில் தேர்தல் இதையெல்லாம் கணக்கில் வைத்தோ அல்லது உண்மையாகவோ, அக்டோபரலிருந்து நோய்த் தொற்று எண்ணிக்கையை படிப்படியாக குறைத்துக் காட்டினார்கள். ஆகஸ்ட் 15 2020 அன்றே தடுப்பூசி எனச் சீன் போட்டாலும் 2021 ஜனவரியில்தான் கோவிஷீல்ட் என்கிற தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது !


இவர்கள் தொற்றாளர்கள் & பலிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டினார்கள். அதைச் சாக்காக வைத்தே நம் தேவைக்கு கொஞ்சமாக தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு, இங்கு தயாரான பல கோடி டோஸ் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு விற்று ஏற்றுமதி செய்தார்கள். வெட்டி பந்தாவுக்கு பல நாடுகளுக்கு இலவசமாகவும் தந்தார்கள். ஆச்சா ?


இங்கு ஜனவரி 2021 லிருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. மாஸ்க் கலாச்சாரம் அகலவில்லை. ஆனால் தனி நபர் இடைவெளி என்கிற கூற்றையெல்லாம் எவருமே கவனத்தில் கொள்ளவில்லை. அதனால் கட்சி சார்பான கூட்டங்கள், அணிவகுப்புகள், பரப்புரை கூடுதல்கள் என அனைத்துக் கட்சியினர் சார்பாகவும் திரளாக நடந்துக் கொண்டிருந்தன !


பிப்ரவரி 2021 இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. இது வெளியாகப் போவதை ஊகித்த அதிமுக அரசு, பல அதிரடித் திட்டங்களை அறிவித்தது. அதில் பிரம்மாஸ்திரம் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ! தமிழகம், கேரளா, புதுவைக்கெல்லாம் ஒரே கட்டத்தில் ஒரே நாளில் தேர்தல். ஆனால் மேற்கு வங்கத்திலும், அஸ்ஸாமிலும் பல கட்டத் தேர்தல். குறிப்பாக வங்காளத்தில் எட்டு கட்டத் தேர்தல். மம்தா திகைத்துப் போனார். எதற்காக அப்படிச் செய்தார்கள் என்பது பிறக்கப் போகும் பிள்ளைக்கே தெரியும். அவ்வளவு வெளிப்படையாக தேர்தல் ஆணையம் மோடி, அமித்ஷா ஆணைக்கு ஆடியது !


இதனால் ஏப்ரல் 6 அன்று முடிந்த தமிழகத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 வரைக்கும் தள்ளிப் போனது. அய்யோ அய்யோ அந்த வாக்கு இயந்திரத்தைப் பாதுகாக்க காவலிருந்த கட்சிக்காரர்கள் பட்ட பாடு இருக்கிறதே ? அதை வார்த்தையால் வர்ணித்து விட முடியுமா ? கேவலமான ஆட்கள் நாட்டை ஆண்டுக் கொண்டிருந்ததால், அரண்டதெல்லாம் அவர்களுக்கு இருண்ட ஹேக்கிங் மெஷின்களாகவே தெரிந்தன !


அவர்களைத் தாண்டி ஒரு கண்டெய்னர் லாரி செல்ல முடியவில்லை. அக்கம்பக்க கட்டிடங்களில் ஒரு ட்யூப்லைட் எரிய முடியவில்லை. ஒரு ட்ரோன் பறக்க முடியவில்லை. ஆனால் அந்தளவு அவர்கள் பாதுகாத்ததிலும் ஓர் அர்த்தம் இருந்தது ! தேர்தல் தேதி அறிவித்ததும் அதுவரை இணக்கமாக இருந்த கூட்டணிக் கட்சிகளில் பல விரிசல்கள் ஏற்பட்டன ! ஒன்றிரண்டு நாளைடைவில் சேர்ந்துவிட்டன. ஒரு சில பிரிந்து போயின ! திமுக தன் கூட்டணியின் பிரதானக் கட்சியான காங்கிரஸ்கு 20 சீட்டுக்களை மட்டுமே கொடுப்பதில் பிடிவாதம் காட்டியது. பீகாரில் லாலு கட்சி தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ்கு அதிக இடங்கள் விட்டுக்கொடுத்ததே காரணம் என்கிற பொதுப்பேச்சு இருந்தது ! அவர்கள் 30 என்று ஆரம்பித்து 25 க்கு கீழ் இறங்கவில்லை. திமுக ஒத்துக் கொண்டது. மற்றபடி மதிமுகவுக்கு 6, விசிகவுக்கு 6 என்பதில் திமுக உறுதியாக இருந்தது. அதுவும் இவர்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்றும் நிர்ப்பந்தித்தது ! விசிக தயங்கியதால் அவர்களுக்கு மட்டும், அவர்கள் விருப்பத்திற்கு திமுக சம்மதித்ததால், ஆறு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் நின்றது திருமாவளவனின் விசிக. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் 2. அதில் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் நிற்க, ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்றார் !


ரவிகுமார் அனைத்துச் சுற்றிலும் முன்னிலை வகித்து லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் எளிதாக வெல்ல, திருமாவோ, ஒவ்வொரு சுற்றிலும் முன்னே - பின்னே போய், இறுதியாக நள்ளிரவு சமயத்தில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டார் ! இதனால்தான் திமுக தன் சின்னத்தில் நிற்க வற்புறுத்தியது. ஆனால் சமூக வலைத்தளங்களில் நீலச்சங்கிகள் இதை வன்மையாகக் கண்டித்தார்கள். திமுகவை ஆதிக்கச் சக்தியாகக் கட்டமைத்தார்கள். இதனாலாயே திமுக இதில் பிடிவாதம் பிடிக்கவில்லை. மாறாக, வைகோ உதயசூரியன் சின்னத்திலேயே நிற்பதுதான் தனக்குச் சாதகம் என்பதை உள்வாங்கி ஏற்றுக்கொண்டார் !


இரண்டு கம்யூனிஸ்ட்களுக்கும் தலா ஆறு, பண்ருட்டி வேல்முருகனுக்கு ஒன்று, இதர முஸ்லீம் கட்சிகளுக்கு என்று பிரித்துக் கொடுத்துவிட்டு 173 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது ! அப்படியே அங்கு அதிமுகவிடம் போனால் முதல் ஆளாக தங்களுக்கு கொடுத்த 23 தொகுதிகளுடன் திருப்திபட்டுக் கொண்டது பாட்டாளி மக்கள் கட்சி. போனமுறை முதல்வர், முதல் கையெழுத்து என்று சீன் போட்டவர்கள். இறுதியாகப் போடப்பட்ட அந்த 10.5% வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு சட்ட நாடகம், தங்களை 100% தொகுதிகளையும் பெற்றுத் தரும் என ஆழமாக நம்பினார்கள் !





பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளுடன் ஒதுங்கியது. தமிழ் மாநில காங்கிரஸ் வாசனுக்கு 6 தொகுதிகள். இங்குதான் ஒரு ட்விஸ்ட். தேமுதிக கட்சியான விஜய்காந்த் கட்சி, விஜய்காந்த் அவர்களுடைய உடல்நிலை காரணமாக இப்போது பிரேமலதா-சுதிஷ் கட்சியாக இருந்தது. கூட்டணி பேரத்தில் மிக மிக மலிவான எண்ணங்கள் கொண்ட ஆட்கள் என்கிற கெட்ட பெயரைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர்களுடைய நடத்தை கேவலமாக விமர்சிக்கப்பட்டது. 2019-ல் ஒரே சமயத்தில் அதிமுகவோடும், திமுகவோடும் கூட்டணி பேசினார்கள். இம்முறையும் அப்படி பேசுவோம் என வெளிப்படையாக பேசிக் கொண்டிருந்தார்கள். விளைவு அதிமுக அவர்களை திடுக்கென ஒரு நாள் கழற்றிவிட்டது. திமுகவோ கடைசி வரை கண்டுகொள்ளவே இல்லை.


கமல்ஹாசன், அவர்களை கூட்டணிக்கு அழைத்தார். எங்கப்பாதான் சி எம்ன்னு ஒத்துக்கோ, ஏன்னா நாங்கதான் உன்னைவிட சீனியர், டீலா நோ டீலா என்று விஜய்காந்தின் மகன் விஜய் பிரபாகர் கொக்கரிக்க, ஸ்தாபகர் சைலண்ட் மோட்க்கு போனார் !


கடைசியாக தினகரன் அழைத்து அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கினார். தொகுதிகள் மட்டுமல்ல என்பதுதான் உண்மை ! மக்கள் நீதி மய்யம் 10% வாக்குகள் வரை பெறக்கூடும் என்கிற நம்பிக்கை பலமாக இருந்தது. நகரமக்கள் குறிப்பாக நகர்புற இளைஞர்கள், குடும்பப் பெண்கள் இடையே கமல்ஹாசனுக்கு செல்வாக்கு இருந்தது. அவரும் இறுதிவரை காங்கிரஸ்க்கு வலை வீசியவண்ணம்தான் இருந்தார். தேமுதிகவை இழுக்க எண்ணினார். சிக்கியதென்னமோ சரத்குமார் கட்சியான சமக தான்.


சரத்குமார் தொகுதிகள் கேட்டார். இரண்டு தருவார். நாம நாலு கேட்டு சீன் போடுவோம். மூன்றோடு சமாதானமாவோம் எனப் போனால், ஸ்தாபகர் 40 தொகுதிகளை அவருக்கு அள்ளிக் கொடுத்தார். மைல்ட் அட்டாக் வந்தது சுப்ரீம் ஸ்டாருக்கு. வீட்டுக்குப் போனவர் ராதிகாவுடன் ஆலோசிக்க, இதுல ஏதோ சூது இருக்கு நாட்டாமை, நாம ரெண்டு பேரும் நிக்க வேணாம், அதைச் சாக்காச் சொல்லி, இரண்டு சீட்டையாவது ரிட்டன் பண்ணிருவோம் என 38 ல் பலியானார்கள். சார்ரி, 38 க்கு ஒத்துக்கொண்டார்கள் ! பாரிவேந்தர் என்பவர் எஸ் ஆர் எம் குழும ஆள். திமுக சின்னத்தில் நின்று மக்களவை உறுப்பினராக இருக்கிறார். என்ன ஆச்சோ எனத் தெரியவில்லை, திடுதிப்பென ம நீ மவுக்கு தொகுதி கேட்டுப் போனார். இந்தா நீ புடி நாப்பது, சரத்குமார் மிச்சம் கொடுத்த அந்த ரெண்டும் சேர்த்து வேணுமா என டரியல் காட்டினார் கமல் ! நடுவில் ஒரு நாள் கூத்தாக எஸ்டிபிஐ கட்சிக்கு 18 தொகுதிகளை கமல் ஒதுக்கியிருப்பதாகவும், ஆனால் அவர்கள் அதை வேண்டாமென கூறிவிட்டு தெறித்து ஓடிவந்ததாகவும் சேதி ஓடியது ! இங்கே ஃபேஸ்புக், ட்விட்டரில் ம நீ ம அலுவகத்திற்கு தண்ணீர் கேன் போட்டுவிட்டு அதுக்கு காசு கொடுங்க எனக் கேட்ட டெலிவரி பையனுக்கு ரெண்டு தொகுதிகளை கொடுத்துவிட்டார் என்று பகடிகள் புரண்டோடிக் கொண்டிருந்தன ! இந்த லட்சணத்தில் ஆகஸ்ட் 15 2020 இங்க கொடி ஏத்துறோம், 2021ல் கோட்டையில் ஏத்துவோம் என்றெல்லாம் ஆத்திக்கொண்டிருந்தார் மய்யங்கார் ! தினகரன், தேமுதிக, எஸ்டிபிஐ கட்சிகளோடு ஐக்கியமாக, வழக்கம்போல சீமான் தனித்து 234 தொகுதிகளிலும் களம் கண்டார் ! முதல்கட்டக் கருத்துக் கணிப்புகளின்படி, அடுத்த ஆட்சி நிச்சயம் அதிமுக அல்ல என்றே வந்துக் கொண்டிருந்தன. திமுக 150 – 160 வரை பெறக்கூடும். அதிமுகவுக்கு 60 முதல் 70. தினகரன் 5, கமல் 5, சீமான் சில இடங்கள் என்று பல கணிப்புகள் ! திமுக எளிதாக 200+ தொகுதிகள் பெறும் என்று சொன்னவர்களெல்லாம் இவ்வளவு தொகுதிகளைக் குறைத்துக் கொண்டதில் என்னளவில் பெருத்த ஏமாற்றமே ! ஆனால் அதற்கேற்ப, கடைசி கட்ட நடவடிக்கைகளில் அதிமுக பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொண்டதென்னமோ உண்மைதான். பொங்கல் பரிசாக 2500 ரூபாயை வழங்கியது. ஆன்லைனில் பாடங்களப் படித்த மாணவர்களை, தேர்வுகளின்றி தேர்ச்சி பெறச் செய்தது, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு….. இதெல்லாம் அவர்கள் அதிகத் தொகுதிகளைப் பெற உதவும் என்று கணித்தார்கள் ! ஆனால் இவர்களுடன் கூட்டணியில் இருக்கும் பாரதிய ஜனதாக் கட்சியினர் 20 தொகுதிகளிலும் தோற்பார்கள் என்றே பலரும் கணித்தார்கள். அது வியப்பையும், மகிழ்ச்சியையும் ஒருசேரத் தந்தது ! இந்தக் கூட்டணிகளெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நவம்பர் & டிசம்பர் 2020 ல் நடந்த ஒரு முக்கியக் கூத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் ! இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை என்கிற கோஷத்தோடு ரஜினிகாந்தை இந்தத் தேர்தலில் எப்படியும் கொண்டுவந்துவிட வேண்டுமென ஒரு சக்தி, பெரிய மெனக்கிடல்களோடு அவரை தரதரவென இழுத்துவந்து அரசியலில் தள்ளத் துடித்தது. ஒரு நாள் இதற்காகவே தன் கட்சி ஆளை அவருடைய வலதுகையாக இருக்க அனுப்பி வைத்தது பாரதிய ஜனதா கட்சி !


அர்ஜூனமூர்த்தி என்கிற அந்த நபர் வலதுபுறமும், தமிழருவிமணியன் என்கிற அரசியல்தரகர் இடதுபுறமும் நிற்க, ரஜினிகாந்த் தன் கட்சி அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக ஒருநாள் சொன்னார் ! பிறகு அப்போது அவ்வளவாக இல்லாதிருந்த கொரோனாவையே காரணம் காட்டி எங்கோ பொந்தொன்றில் போய் மறைந்தும் கொண்டார் ! தன் பிறந்தநாளில் இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை என்கிற வாசகம் பொறித்த கேக்கையும் வெட்டினார். அந்த கேக்கில் இல்லை என்கிற இடத்தில் அவர் கத்தி இருக்க, அதுதான்டா குறியீடு என்றார்கள். அப்படியே ஆனது க்ளைமேக்ஸ். 2020ன் இறுதியில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், உறுப்புமாற்று சிகிச்சையை மேற்கொண்ட தமக்கு தேர்தல் பரப்புரை உயிருக்கே ஆபத்தைத் தரலாம் என மருத்துவர் அறிவுறுத்தியிருப்பதால் தமிழக மக்கள் தன்னை மன்னிக்க வேண்டுமென்றும் கடிதம் தீட்டினார். இப்படியாக தர்பார் டர்புர் ஆனது !


ஆனால் இதில் ஒரு தொழில் ரகசியமும் இருக்கு. ஒருவேளை திமுக வென்றால், அது எங்க தலைவரால்தான் என அவருடைய வயோதிக டயாபடிஸ் பிபி ரசிகர்கள் சொறிந்துக் கொள்ள அது உதவும். 1996-ல் திமுக வெல்லவே அவர்தான் காரணமென இன்றுவரை உளறும் அரைப்பைத்தியங்கள் உண்டு அல்லவா ? மொத்தம் ஆறு கோடி வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள். 80 முதல் 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகலாம் என்று எண்ணியிருந்த வேளையில், வடக்கு இந்தியாவில் திபுதிபுவென கோவிட் பெருந்தொற்று பரவி, பல அசம்பாவிதங்கள் நிகழ ஆரம்பிக்க, 72.78 % வாக்குகளே பதிவாகின. இப்படி குறைந்தது, திமுக & அதிமுக இரண்டு கட்சிகளையுமே குழப்பி விட்டது. ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இல்லை என்றும், திமுகவுக்கு ஆதரவான அலையும் இல்லை என்றும் ஒரே தோசையை திரும்ப திரும்ப புரட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள் ! மிக அமைதியாக, ஒரு சில இடங்களில் மட்டும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினைத் தூக்கிக் கொண்டு போன சம்பவங்களைத் தவிர, நல்லபடியாகவே தேர்தல் முடிந்தது !


ஒருகட்டத்தில் தேர்தல் நடக்குமோ, நடக்காதோ என்கிற பீதியையெல்லாம் கிளப்பி விட்டார்கள். போதாததற்கு அதிமுகவினர் சகட்டுமேனிக்கு பணத்தை வாக்காளர்களுக்கு இறைத்துவிட்டு, அட, என் தொகுதி வேட்பாளர் ஜெயக்குமார் வாக்கொன்றுக்கு 500 ரூபாயை பலருக்கும் தந்துவிட்டு, திமுக பணமளிப்பதாய் போய்ப் புகார் அளித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதிலும் அவர் நாசூக்காக, கொளத்தூர் ஸ்டாலின் தொகுதி, சேப்பாக்கம் உதயநிதி தொகுதி, காட்பாடி துரைமுருகன் தொகுதி, திருச்சி நேரு தொகுதி, திருவண்ணாமலை எ.வ.வேலு தொகுதி என்று திமுக விஐபிகளையாகக் குறிவைத்து, ஏழு தொகுதிகளுக்கான தேர்தலை மட்டுமாவது ஒத்திவைக்க வேண்டுமென தேர்தல் ஆணையர் சத்யப்ரதா சாகுவிடம் மனு அளித்தார். ஊரே கைகொட்டிச் சிரித்தது !


02/05/2021 ஞாயிறு காலை எட்டு மணி. தபால்வாக்குகள் எண்ணப்பட ஆரம்பித்தன. கமல் முன்னிலை, ஸ்ரீபிரியா முன்னிலை, தினகரன் முன்னிலை, பாஜக தலைவர் முருகன் முன்னிலை, அரவக்குறிச்சியில் அண்ணாமலை முன்னிலை என்றெல்லாம் ஆரம்பித்து, என்னை திகைக்கச் செய்தார்கள் ! சிறிது நேரத்தில் துரைமுருகன் பின்னடைவு, சேகர்பாபு பின்னடைவு, மொடக்குறிச்சியில் பாஜக முன்னிலை, எடப்பாடி பழனிச்சாமி பிரம்மாண்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை என்றே களநிலவரம் காலை ஒன்பது மணி வரை கலவரமாக இருந்தது !


ஒன்பது மணிக்கு மேல்தான், 100 க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை என்றே சேதிகள் வந்தன. ஆனால் பின்னாலேயே 90 தொகுதிகள் வரை அதிமுக கூட்டணியும் முன்னிலை என்கிறச் சேதி, என்னை 2016 க்கு தரதரவென இழுத்துக் கொண்டு போனது !


மாறாக, மேற்குவங்கத்தில் அசுர அடியாக அடித்து எடுத்தவுடன் 150 தொகுதிகளில் மம்தா முன்னிலை என்றுவிட்டார்கள். அதுவே பெரும்பான்மைக்கு போதிய இடம். அதேதான் கேரளாவிலும் நிகழ்ந்தது. பினரயிக்கு எடுத்தவுடன் பெரும்பான்மை கிட்டியிருந்தது ! இங்கோ திமுகவுக்கு அந்த நிலை வர கிட்டத்தட்ட 11 மணி ஆனது. போனமுறை பத்தரைக்கெல்லாம் வடையர் ஜெயாவுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டார். எனவே உடன்பிறப்புகளைப் பொறுத்தவரை அந்த விடியல், நண்பகல் வரை பெரிதாகச் சோதித்துவிட்ட்து என்பதுதான் உண்மை ! ஆனால், 11 மணிக்குப் பின்னால் சமிக்ஞைகள் அப்படியே திமுகவுக்குச் சாதகமாக மாறின. கொண்டாட்டம் மெல்லத் துவங்கியது !


90+ வரை தொகுதிகளில் முன்னிலை எனப் போய்க்கொண்டிருந்த அதிமுக கூட்டணி எண்ணிக்கையில் சரேலென சரிவு கண்டு அது ஒரு கட்டத்தில் அறுபதுக்கும் கீழே போனது. திமுக கூட்டணி அதிகபட்சமாக 174 வரை காட்டியது. திமுக தனித்தே 125 க்கும் மேலே முன்னிலை எனச் சொன்ன பின்னர்தான், அறிவாலயத்தில் பத்தாயிரம் வாலாக்கள் வெடிக்கப்பட்டன ! ஆனாலும் ஏற்ற இறக்கங்களுக்கு எந்தக் குறைவுமில்லை. பாமக ஒன்பது தொகுதிகள் வரையும், பாஜக ஆறு தொகுதிகள் வரையும் முன்னனியில் இருந்தன. துறைமுகம் தொகுதியில் பாஜகவின் புதுமுக இளைஞர் சவுகார்பேட் ஏரியா பெட்டியை எண்ணும் போது முன்னிலை வகித்தாலும், மண்ணடி, காக்கா தோப்பு பெட்டிகளைத் திறந்தவுடன் சேகர்பாபு சிறுத்தை போலத் தாவிப் பாய்ந்து பல்லாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைக்குப் போனார் ! ஆனால், துரைமுருகனை காட்பாடியில் வச்சிச் செய்துவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். எங்கே தோற்றுவிடுவாரோ என்றெல்லாம் பலர் அஞ்சினர். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஒருவழியாக வென்றார் ! எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின், உதயநிதி, ஆத்தூர் பெரியசாமி, கே.என். நேரு, போன்றோரெல்லாம் துவக்கத்திலிருந்தே அதிரடியாகப் பல படிகள் முன்னேறிக்கொண்டே போயினர் !


எங்கள் தொகுதி ராயபுரம். ஒருமுறை கூட ஜெயக்குமார் முன்னிலை பெறவில்லை. என்னுடன் ஸ்டாலின் மோதத் தயாரா என அவர் சவால் விட்ட போது, திமுகவின் எளிய தொண்டன் உங்களை வீழ்த்துவான் எனச் சொல்லியிருந்தார் ஸ்டாலின். ஐட்ரீம்ஸ் மூர்த்தி எளிய தொண்டர் இல்லை. வலிய தொண்டர். ஆனாலும் தொகுதி உடன்பிறப்புகளுக்கு புதியவர். இருப்பினும் சாதித்துக் காட்டினார். 27000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமாரை, ஸ்டாலின் வாக்குக்கேற்பச் சரித்தார் ! எனக்கு வியப்பு தந்தது ஆர்.கே. நகர் தொகுதி. திடுக் விஐபி தொகுதியாகி, அதிமுகவின் கோட்டை போலிருந்ததை, முற்றிலும் புதுமுக திமுககாரர் புரட்டி எடுத்தார். அங்கு அதிமுகவின் வேட்பாளர் ராஜேஷ், ஒரு வாக்குக்கு 1000 ரூபாய் வரை வாரி வழங்கியிருந்தார். இருந்தாலும் மக்கள் இம்முறை திமுகவுக்குத்தான் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஆமாம். சென்னையின் ஒட்டுமொத்த 16க்கு 16ம் திமுகவே வென்றது ! எம்ஜிஆர் காலத்தில் திமுக எங்கு தோற்றாலும் சென்னையில் மட்டும் பெருவாரியான தொகுதிகளை அள்ளிவிடும். எம்ஜிஆருக்கு அந்தக் கடுப்பு என்றுமுண்டு. எம்ஜிஆரால் கூடச் சாதிக்க இயலாததை, ராஜிவ் படுகொலை சாதித்தது. அல்லது அதன்மூலம் ஜெயலலிதா சாதித்தார். அவர் இறக்கும்வரை பலமுறை அதைத் தக்கவைத்தும் கொண்டார். 2015-ல் வரலாறு காணாத வெள்ளத்தில் சென்னை சின்னாபின்னமான பின்பும் கூட, நான்கு தொகுதிகளை ஜெயலலிதா வென்றார். அதில் ராயபுரம், ஆர்.கே.நகர், மயிலாப்பூர் அடக்கம் ! தபால் வாக்குகளில் மக்கள் நீதி மய்யக் கட்சியின் பல வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தாலும், சில மணி நேரங்களில், கமலைத் தவிர அனைவரும் மாயமாகினர். கமல்ஹாசனை சமயங்களில் வானதி முந்தினார். சில நேரம் மயூரா முந்தினார். மற்றபடி கமல் சார்தான் பலவேளைகளில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். ஆக, அவர் ஒருவராவது வெல்வார் என்றே நம்பினேன் !


தினகரன் விஷயத்திலும் அதேதான். கடம்பூர் ராஜூ அடிக்கடி முந்தினார். இவர்கள் நடுவில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அம்போவாகினார் ! சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். ஒரு ரவுண்டில் கூட முன்னிலை வகிக்கவில்லை. ஆனால், தன் வரலாற்றில் முதன்முறையாக நாம் தமிழர் கட்சி, கட்டுத்தொகை எனப்படும் டெப்பாசிட்டை திரும்ப வாங்கியது ! மொடக்குறிச்சி சுப்புலட்சுமி, பூங்கோதை ஆலடிஅருணா, மல்லை சத்யா, சிவசேனாதிபதி போன்றோர் பின் தங்கியது சகிக்கவியலாமல் இருந்தன !


பாரதிய ஜனதாவின் திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மற்றும் நாகர்கோவிலின் காந்தியின் வெற்றி உறுதி என்றார்கள். கட்சித் தலைவர் எல்.முருகன், வானதி, மொடக்குறிச்சி வேட்பாளர்களும் வெல்ல வாய்ப்பதிகம் என்றார்கள். இதில் முருகன் தோற்றுவிட, மயிரிழையில் வானதி, கமல்ஹாசனை வென்றார். வெறும் சில நூறு வாக்கு வித்தியாசத்தில் மொடக்குறிச்சி சுப்புலட்சுமி பாரதிய ஜனதாக் கட்சியிடம் தோற்றார். தாமரை எந்த வழியிலும் மலரவே மலராது என்கிற வார்த்தை பொய்த்துப் போனது பின்னடைவு. நான்கு தொகுதிகளை அது தட்டிப் பறித்திருந்தது. இருபது வருடங்களுக்கு பின்பு நடந்த அதிசயம் !


ஒரே ஓர் ஆறுதல், சாதி, மத வாக்குகளால்தான் அவர்கள் இந்தளவு முன்னேற முடிந்தது. மலரும் திமுக ஆட்சியினால் அதை பெருமளவு மட்டுப்படுத்திவிட முடியும் என்பதுதான் ! பாட்டாளி மக்கள் கட்சியும் ஐந்து தொகுதிகளை வென்றது ! புரட்சி பாரதம் பூவையாரும் வென்றிருந்தார். எஞ்சிய 65 தொகுதிகளை வென்று அதிமுக, பிரம்மாண்ட எதிர்கட்சியாக உருவாகியிருந்தது ! இப்படியாக இரவு ஒன்பது மணி அளவில், அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 75 தொகுதிகளை வென்றிருந்தது ! திமுக கூட்டணி எஞ்சிய 159 தொகுதிகளை வாரியிருந்தது. ஆமாம். இந்த இரு கூட்டணிக் கட்சிகளைத் தவிர, வேறு எவருமே வெல்லவில்லை ! சீமான் ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக வர்ணிக்கப்பட்டது. அதாவது 30 லட்சம் வாக்குகளை அது கவர்ந்திருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அது பெற்றிருந்தது 16 லட்சம் வாக்குகளே. அதெப்படி இரட்டையானது ? ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில், சற்றேறக்குறைய 7% வாக்குகள் வரை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் இது அபரிமிதமான வளர்ச்சி. இந்த எண்ணிக்கை இன்னும் சில லட்சங்களில் பெருகினால், அவர்கள் கணிசமானத் தொகுதிகளை பெற வாய்ப்புள்ளது. 2016 தேர்தல் முடிவுகளை அலசியபோதே, இவர்கள் வளர்ந்தால் அது நாட்டுக்கு பெருங்கேடு என எழுதியிருந்தேன். ஆனால், போனமுறைக்கு இம்முறை வாக்கெண்ணிக்கை விழுக்காடு இரட்டையாக அதிகரித்திருக்கிறது. நுணுக்கமாக ஆராய்ந்தால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஜெயலலிதா, கலைஞர் இல்லாத சூழ்நிலை. ஸ்டாலின் & திமுக மீது அடுக்கப்பட்ட அவதூறு மூட்டைகளை நிரந்தரமாக சுமப்பவர்கள். எப்படியோ, இவர்களுக்கெல்லாம் மாற்றுத் தலைவர் சீமான் என அந்த 30 லட்சம் மக்களையும் ஏமாற்றிவிட்டனர் ! ஆனால், தேர்தல் காலங்களைத் தவிர, பொது அரசியல் நடவடிக்கைகளில் இவர்கள் படு மந்தமான செயல்பாடுகளைக் கொண்டவர்கள். படிப்படியாக அரசியலில் முன்னேறிச் சாதிக்க வேண்டும் என்கிற எந்த அக்கறையுமில்லாதவர்கள். இப்படி இருந்துமே இளைஞர்களை இவர்கள் வசப்படுத்துகிறார்கள் எனில், அதிலும் படித்த இளைஞர்களை ? ஆக, ஏட்டுச்சுரைக்காய் கல்வியால் அறிவு பெருகாது. பகுத்தறிவுச் சிந்தனைகளை தங்களுக்குள் வளர்த்துக்கொள்ள விரும்பாத தலைமுறைகள் இருக்கும்வரை சீமான்கள் காட்டில் மழையும் இருக்கும் ! கமல்ஹாசன், ரஜினிகாந்த், தினகரன், சகாயம்களைப் பொறுத்தவரை, இது ஒரு பொம்மலாட்ட நிகழ்வு. இவர்களை பொம்மைகளாக்கி எவரோ ஆட்டுவித்தார்கள். அவர்களும் ஆடினார்கள். ஆட்டம் முடிந்துவிட்டது. இனி அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள். நாடகக் கம்பெனிகாரர்கள் விரும்பினால் மீண்டும் நூல் கட்டி ஆட வந்துவிடுவார்கள் ! திமுக தனியாக 125 தொகுதிகள். காங்கிரஸ் 18 தொகுதிகள். போனமுறைக்கு இம்முறை டபுள். விடுதலைச் சிறுத்தை கட்சி ஆறுக்கு நாலு. மதிமுகவும் ஆறுக்கு நாலு. கம்யூனிஸ்ட்கள் தலா 2. போனமுறை இவர்கள், அதாவது கம்யூனிஸ்ட்கள் சட்டசபையில் இல்லாமற் போனதுக்கு வருந்தியவர் யார் தெரியுமா ? கலைஞர். விடுதலைக்குப் பிறகு, தமிழகச் சட்டசபை வரலாற்றில் அவர்கள் இடம்பெறாத சட்டசபை அதுதானாம். இவர்களுடைய மக்கள் நலக் கூட்டணிக் காரணங்களினால்தான் நூலிழையில் கலைஞரால் ஆட்சியமைக்க இயலாமற் போயிருந்தது. அப்படியிருந்தும் அவர்களுக்காக வருந்தியவர் கலைஞர். அதுதான் கலைஞர் ! திமுக கூட்டணி சார்பாக நின்ற பண்ருட்டி வேல்முருகன் போராடி வென்றார். இவருடைய வெற்றி தேவையான ஒன்று. பாட்டாளி மக்கள் கட்சியை மட்டுப்படுத்த இவருடைத் தேவை திமுகவுக்கு என்றும் அவசியம். இம்முறை திமுக அணியிலிருந்த முஸ்லீம் லீக் ஒரு தொகுதியைக் கூட பெறவியலாதது வருத்தம். ஆனால் மனிதநேய மக்கள் கட்சி வென்றது, கொங்குமக்கள் தேசிய கட்சி வென்றது !


வெறுக்க வைத்த வெற்றிகள், மனம் நொறுங்கச் செய்த தோல்விகள் பற்றியும் அவசியம் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். அதன்பின் கட்சிகள் வாங்கிய ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கை, விழுக்காடு, குறை நிறைக்கான காரணங்களை அலசி, இந்தக் கட்டுரையை இனிதே முடித்து வைப்போம் ! எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, போன்றோர் பெற்ற வெற்றிகள் கூட யாருக்கும் உறுத்தாது. ஆனால், பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ போன்றோர்களையெல்லாம், தன் சாதி ஆட்கள் என்கிற ஒரே அடிப்படையில் அந்தப் பகுதி மக்கள் வெல்ல வைத்தது பெரிதும் மனதை நொறுங்கச் செய்தது !


பொள்ளாச்சி பாலியல் வன்முறைச் சம்பவம் அனைவரையும் ஒருசேர கொதிக்க வைத்த ஒன்று. பெண்களை பெல்ட்டால் அடித்து ஆடைகளை அவிழ்க்கச் சொல்லும் கொடூர வீடியோக்களைக் கண்டு பலர் வெடித்தழுதனர். பொள்ளாச்சி ஜெயராமனுடைய மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருந்ததாக, புலனாய்வு பத்திரிக்கைகள் துப்பு துலக்கி எழுதின. ஆனால், ஆட்சி அவர்கள் வசமிருந்ததால் பல பேரங்கள், மிரட்டல்கள், சமாதானங்கள் மூலம், வழக்கு நகர முடியாமல் முடக்கப்பட்டது. இருந்தாலும் மக்கள் அவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என நம்பியிருந்த வேளையில் சாதிப்பாசம், ஜெயராமனுக்கு 2000 வாக்குகள் அதிகம் போட்டு வெல்ல வைத்துவிட்டது ! அதேபோல், முழுக்க மதவெறியையும், மதக் காழ்ப்பு பேச்சுக்களையும், வெளிப்படையான சாதி ஆதரவையும் கொண்ட கட்சியான, பாரதிய ஜனதா கட்சி, நான்கு சட்டமன்றத் தொகுதிகளை வென்றதும் சகிக்க மாட்டாத ஒன்றுதான். அதில் திருநெல்வேலி தொகுதியை வென்ற நயினார் நாகேந்திரன் கணிசமான வாக்குகளைப் பெற்று, நல்ல வெற்றியைப் பெற்றிருந்தார் ! வசந்தகுமார் எம்.பி கொரோனோ தொற்றால் மறைந்ததையடுத்து, குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில், அவருடைய மகன் விஜய், மிக எளிதாக வலுமிக்க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை வீழ்த்தியிருந்தாலும், நாகர்கோயில் சட்டமன்றத் தொகுதியில், பாரதிய ஜனதாவின் காந்தி பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் !


இதெல்லாம் திமுகவினருக்கு வியப்பையும், விரக்தியையும் ஒருசேரத் தந்தன. அவர்களுடைய இன்னொரு வெற்றி மொடக்குறிச்சியில் கிட்டியது. திமுகவின் அதி முக்கிய வேட்பாளராக சுப்புலட்சுமி அவர்கள் போட்டியிட்ட தொகுதி. அவர் வென்றிருந்தால் அமைச்சராகவோ, சபாநாயகராகவோ ஆகியிருக்க வாய்ப்பதிகம் எனப் பேசப்பட்டது. வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார். வென்றவர் பாரதிய ஜனதாக் கட்சியைச் சார்ந்த சரஸ்வதி. இங்கு சகிக்க மாட்டாத வெற்றியும், தோல்வியும் ஒருசேரச் சந்தித்தன ! மகிழ்ச்சியான வெற்றி, தோல்விகள் எது எனப் பார்த்தால், ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் பெற்ற தோல்விகளும், உதயநிதி ஸ்டாலின், ஆளூர் ஷாநவாஸ் போன்ற இளைஞர்கள் பெற்ற வெற்றியும் மிக்க மகிழ்ச்சியைத் தந்தன !


திமுக தனியாக வாங்கிய வாக்கு விழுக்காடு 37.7% அதிமுக தனியாக வாங்கிய வாக்கு விழுக்காடு 36% 2016-ல், இதைவிட குறைவான விழுக்காட்டில்தான் ஜெயலலிதா மயிரிழையில் ஆட்சியைத் தக்க வைத்திருந்தார். ஆனால், இந்தக் கணக்கு தப்பு ! திமுக கூட்டணி பெற்ற வாக்கு விழுக்காடு 45% அதிமுக கூட்டணி பெற்ற வாக்கு விழுக்காடு 39% மூன்றாவது கட்சி என ஓடிவந்த சீமான் பெற்ற வாக்கு விழுக்காடு 7% தினகரனும், மய்யங்காரும் சேர்ந்து பெற்ற வாக்குகளின் விழுக்காடு 6% இதர கட்சிகள், சுயேச்சைகள், நோட்டா போன்றோர் பெற்ற வாக்குகள் 3% பகுஜன்சமாஜ் என்கிற ஒரு கட்சி அனைத்து தேர்தல்களிலும், பெரும்பாலான தொகுதிகளிலும் நிற்கிறது. சீமானைத்தானே தனித்து நிற்கிறார் என்பீர்கள் ? இவர்கள் அவருக்கெல்லாம் முன்னோடிகள். ஏன் நிற்கிறார்கள், எதற்கு நிற்கிறார்கள், என்ன வாக்குகளைப் பெறுகிறார்கள் என்பது மக்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கே புரியாது. அதிகபட்சமாக 2000 – 3000 வாக்குகளயும், ஒரு சில தொகுதிகளில் சிங்கிள் டிஜிட் வாக்குகளையும் பெறுவார்கள். அது கூட எப்படியெனில் இவர்கள் சீனியர் கட்சி என்பதால் இவர்களுடைய யானை சின்னம், வாக்கு இயந்திரத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் பெரும்பாலும் இருக்கும். தமக்குப் பிடிச்ச மிருகமா இருக்கே என்று விழும் வாக்கெல்லாம் உண்டு ! மாயாவதிக்கு வரும் பணத்திற்கு செலவு கணக்கு காட்ட, இத்தகையத் தேர்தல்கள் அவர்களுக்கு உதவும். அதைத்தாண்டி அவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை ! முடிவுரை – 1970 களிலேயே ஸ்டாலின், தீவிர அரசியலுக்குள் நுழைந்து விட்டாலும், 1989 ல் தான் அவருக்குச் சட்டசபையில் போட்டியிட வாய்ப்பும், வெற்றியும் வாய்த்தன. அது கூட இரண்டு வருடங்களிலேயே பிடுங்கப்பட்டது. அடுத்து கிட்டியதென்னமோ தோல்வி. 1996 லிருந்துதான் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பே கிட்டியது. ஆனால் அவைகள் யாவுமே அவருடையத் தந்தை கலைஞரால் அவருக்கு வாய்த்தவைகள் !


பிறகு அவருடைய அயரா உழைப்பு தந்ததுதான் என்ன என்பீர்கள். 2014 –ல்தான், கலைஞருக்கு ஸ்டாலின் மீது முழுமையான நம்பிக்கை பிறந்தது. அதுவரை ரங்கன் வாத்தியாருக்கு வெற்றிச்செல்வன் மீது தீராச் சந்தேகம். 2014 –ல் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கான முழுப் பொறுப்பையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் கலைஞர். பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் நடந்து பரப்புரை செய்தார் ஸ்டாலின். அந்தக் கடும் உழைப்பைக் கண்டு வியந்து பாராட்டினார் கலைஞர். தொகுதி உடன்பாடுகள் கூட முழுக்க ஸ்டாலின் முடிவுகளாகவே இருந்தன. ஆனால் ரிசல்ட் ? பூஜ்யம். மாறாக தனித்து நின்று 37 தொகுதிகளை வென்று அசாத்திய பலத்தை நிருபித்திருந்தார் ஜெயலலிதா ! அந்த நிலையில் எவராக இருந்தாலும் நெஞ்சுறுதி குலைந்து துவண்டு போயிருப்பார்கள் அல்லவா ? அன்புமணி பார்க்காத தோல்வியா என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வராதீர்கள். ஆட்சி, அதிகாரத்திலிருந்த, பிரம்மாண்டக் கட்டுக்கோப்பான கட்சி பெறும் பெருந்தோல்விகளென்பது ட்வின் டவர் நொறுங்கிவிழுந்ததைப் போன்று சகிக்க மாட்டாதவை ! ஆனால் கலைஞர் ஸ்டாலின் பின் நின்றதால், ஸ்டாலின் உடனடியாகத் துள்ளி எழுந்தார். இரண்டே வருடங்களில் சட்டமன்றத் தேர்தல். ஜெயலலிதா மீது படிந்திருந்த ஊழலுக்கான சிறைத்தண்டனை, சென்னை மீது நிகழ்த்தப்பட்ட செயற்கை வெள்ளப் பேரிடர் போன்றவைகள், மீண்டும் திமுக ஆட்சிதான் என அனைவரையும் நம்பச் செய்தது ! மக்கள் நலக் கூட்டணி என்கிற ஆயுதம்தான் அன்று திமுக முதுகில் பாய்ச்சப்பட்ட வாள். மயிரிழையில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை தவறவிட்டது திமுக. ஸ்டாலின் பெற்ற இரண்டாம் தோல்வி. முன்பைப் போல மாபெரும் தோல்வி இல்லைதான். ஆனால் அதைக்காட்டிலும் மோசமாக, அடுத்து ஐந்து வருடங்கள் அமைதியாக காத்திருக்கச் செய்த தோல்வி ! எவ்வளவு எள்ளல் பேச்சுகள் ? தத்தி, சுடலை, துண்டுச் சீட்டைப் பார்த்து கூட தப்பாக வாசிக்கும் தற்குறி, அதிர்ஷ்டமில்லாதவர், இவருக்குப் பின் அரசியலுக்கு வந்த உத்தவ், ஜெகன்மோகன், ஹேமந்த் சோரன், குமாரசுவாமி போன்ற வாரிசுகளே முதலமைச்சர்கள் ஆகிவிட்டார்கள், இவர் இந்தப் பிறவியில் ஆகப் போவதில்லை, மாறாக இப்படி ஒவ்வொரு பதவியேற்புக்கும் போய் திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான் என தினமும், நண்டு சிண்டுகளெல்லாம் நக்கல் செய்துக் கொண்டிருந்தன. எதையும் மறக்கவில்லை. காத்திருந்தனர் அந்த டு ஹண்ட்ரட் ருப்பீஸ் உ.பிக்கள். பழிதீர்க்கும் வெறி கொழுந்து விட்டெரிந்துக் கொண்டிருந்தது ஒவ்வொருவரின் ஆழ்மனத்திலும் ! திடுக் மழையில் முளைத்த குபீர் காளான்களான எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், எல்.முருகன், சீமான், கமல், தினகரன், அன்புமணிக்களையெல்லாம் கூட ஆளுமைகள், மாறாக ஸ்டாலின் அவர்களுக்கு நிகராக உயர்வாரா என்பது சந்தேகமே என வாட்ஸ்அப்களில், யு ட்யூப்களில் ஓயாமல் விதைத்தனர். அது உலகளாவ பரப்பப்பட்டன ! 2019 நாடாளுமன்றத் தேர்தல் இதற்கெல்லாம் பதிலளித்துவிட்டாலும், அதை எளிதாக மோடியின் மீதான வெறுப்பு மட்டுமே என அதிகார வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டது. அதுதான் அதிமுக இத்தனை பிரம்மாண்ட வெற்றியைப் பெறவும் உதவியது. இல்லையாயின் திமுக இம்முறை நாங்கள் எதிர்பார்த்தபடியே 200+ தொகுதிகளை நிச்சயம் வென்றிருக்கும் ! மே 2 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு தாமே என் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் மிதக்க ஆரம்பித்தது ! ஸ்டாலின் தந்த உழைப்பைக் காட்டிலும், அவர் பெற்ற விழுப்புண்களே அவருக்கு இந்தப் பிரம்மாண்ட வெற்றியைப் பரிசளித்தன என்பேன். ஆனால், இந்த வெற்றியைக் காட்டிலும், அவர் தரப்போகும் ஆட்சி தரும் வெற்றி இருக்கிறதல்லவா, அது தமிழ்நாட்டில் இதுவரை எவரும் பெறாதளவு உச்சமாக அமையும் ! நெடுகப் பயணித்த தோழமைகளே, மிக்க நன்றி. அடுத்த தேர்தலின் போது சந்திப்போம், வணக்கம் 🙏


#தமிழ்நாடுசட்டசபைத்தேர்தல்2021 தொகுத்து எழுதியது : ராஜா ராஜேந்திரன் இடம் – ராயபுரம், சென்னை – 600 013. மின்னஞ்சல் : rashraja1969@gmail.com தேதி : 18/09/2021, சனிக்கிழமை, அந்திமாலை 6 மணி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!