குஜராத் திரைக்குப் பின்னால்

 ’ குஜராத் திரைக்குப் பின்னால் ’ 

நூல் மதிப்புரை

எழுதியது : ராஜா ராஜேந்திரன்


அறமெனும் ஆயுதம்


' குஜராத் திரைக்குப் பின்னால் '  ஆசிரியர் -ஆர். பி. ஸ்ரீகுமார், I. P. S. Retd. 


கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீகுமார், இந்தக் கட்டுரைத் தொகுப்பை ஆங்கிலத்தில் எழுதி, அதை 2015- டிசம்பரில் வெளியிட்டிருக்கிறார்.   2017 -நவம்பரில் இதை அழகுத் தமிழில் மிக நேர்த்தியாக மொழி பெயர்த்திருப்பவர்கள் தஞ்சை திரு. ரமேஷ் மற்றும் திரு. ச.வீரமணி அவர்கள்.

ஸ்ரீகுமார், இந்தியக் காவல் துறைப் பணிக்குத் தேர்வாகி குஜராத்திற்குப் பணிபுரியப் போனவர் (டெல்லியில் பணிபுரிந்த சில மாதங்களைத் தவிர்த்துப் பார்த்தால்) இறுதிவரை குஜராத்திலேயே பல உயர் பதவிகளை வகித்து ஓய்வும் பெற்றிருக்கிறார் !

அனைத்துப் பதவிகளிலும் தன் நேர்மைக்காக  நற்பெயரெடுத்தவர் ஆர்.பி.ஸ்ரீகுமார்.  ஆனால் காவல்துறையில் தலைமைப் பதவி நோக்கி, சிகரம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், கண்ணெதிரே ஒரு பேரவலத்தை கைக்கட்டி நின்று பார்க்க நேரிடுகிறது.  இயன்றவரை அதைத் தடுக்கப் போராடியும், சக அதிகாரிகளின் ஒத்துழைப்பில்லாது, எது நடக்கக்கூடும் என அஞ்சினாரோ, அதுவே நடந்து, அது அவருடைய மனத்தை அறுத்தும் போடுகிறது.  துவண்டு விடவில்லை !

வீறுகொண்டு அந்த அவலத்திற்கு துணை நின்றவர்களையெதிர்த்து சட்டரீதியிலான அறப் போராட்டங்கள் நிகழ்த்துகிறார்.  எதிர்வினை அவருடைய பதவி உயர்வையும், வாழ்க்கையையும் குலைத்துப் போடுகிறது.  எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, பெருந்தியாகத்துடன் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.   

நம்மைச் சுற்றி ஆயிரம் சுயநலக்காரர்கள் இருப்பினும், இவரைப் போன்ற அரிய சிலர்களால்தான் நம் வாழ்க்கை இந்தளவாவது பாதுகாப்புடன் போய்க்கொண்டிருக்கிறது என்பதை உறுதிபடச் சொல்ல முடியும் ! 

ஒரு மாபெரும் வகுப்புக் கலவரம், அதன் பின்னணி, அதைத் தடுத்திருந்திருக்க முடியாதா ?  முடியுமெனில் யார் அதைத் தடுக்காமல் பரவ விட்டது ?  ஏன் எதற்கு எப்படி என்று விலாவாரியாக இக்கட்டுரைத் தொகுப்பில் அலசியிருக்கிறார் ஸ்ரீ குமார். 

ஒவ்வோர் அத்தியாயம் தொடங்கும் போதும், நம் திருக்குறள் உட்பட பல நன்னெறி நூல்களிலுமிருந்து மேற்கோள் காட்டுகிறார்.  மிகத் தேர்ந்த ஒரு வாசிப்பாளரால் எழுதப்பட்ட ஆக்கம் என்பதை இதிலிருந்தே எளிதாக உணரமுடிகிறது ! 

திரு. ஸ்ரீகுமார், கூடுதல் மாநிலக் காவல்துறைத் தலைவராகப் (உளவுத்துறை) பதவி வகித்தபோதுதான், அந்த மாபெரும் அநீதியான குஜராத் கலவரம் நடைபெற்றிருந்திருக்கிறது.  மிக எளிதாக அதை நேர்கொண்டு, அடக்கி விடக்கூடியச் சூழலில்  ’குஜராத் காவல்துறை’ இருந்தும், வன்மம் பீடித்த அதிகாரமையத்தால் /  ஆளுபவர்களால், அவர்கள் தடுக்கப்பட்டதோடு மட்டுமன்றி, முறைகேடாகவும் பயன்படுத்தப்பட்டு கலவரத்தை ஊக்குவித்து, கலவரம் செய்தவர்களுக்கு பாதுகாப்புமளித்ததைக் கண்ணுற்று மிகவும் வேதனைப்பட்டிருக்கிறார் !

மக்களைக் காக்கும் பணியில் இருந்துக்கொண்டு இப்படி செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு கேடானது என்று தனியொருவனாக நின்று எதிர்த்து வாதிட்டிருக்கிறார்.  

அவரைச் சுற்றிலும், அதிகார ஆளுமைகளுக்கு அடிபணிந்து அட்டூழியம் புரிந்த பல உயர் காவலதிகாரிகளிடையே வேறுபட்டு, கலவரத்தால் பாதிக்கப்படவிருந்த / பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவகைகளில் உதவியிருந்திருக்கிறார் !

அந்தக் கொடூரங்களுக்குப் பின்னால் அமைக்கப்பட்ட பல நீதி விசாரணை அமைப்புகளிலும் மிகத் துணிவாக பதவியில் இருந்தபோதும், ஓய்வுபெற்ற பின்னும் ஆளுங்கட்சி ஆட்களின் அட்டூழியங்களை ஆதாரத்துடன் தோலுரித்துச் சாட்சியங்கள் உரைத்திருக்கிறார்.  

குஜராத கலவர விசாரணை ஆணையத்திடம் ஒன்பது பிரமாண வாக்குமூலங்களைச் சமர்ப்பித்திருக்கிறார்.  இதில் நான்கு அவர் பதவியில் இருந்தபோதே சமர்ப்பித்ததாகும்.  அந்த வாக்குமூலங்களில் தேதிவாரியான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்.  இந்த தளத்திற்குப் போய் வாசித்துப் பாருங்கள் www.harmonynotes.in   

அந்த ஆவணங்களை நேர்மையான மனத்துடன் சரிபார்த்திருந்தாலே மோடிக்கும், அவருடைய இன்ன பிற அல்லக்கைகளுக்கும் தூக்குத் தண்டனை கொடுத்திருக்கலாம்.  ஆனால் நாம் அவரை இத்தகைய ஈனச்செயலுக்காக மாவீரரெனப் போற்றி பிரதமராக்கியும், அல்லக்கைகளை அமைச்சர்களாக்கியும் அழகு பார்த்தோம்.  இதோ இப்போது அந்தப் பாவத்திற்காக பலன்களை அனுபவித்துக் கொண்டுமிருக்கிறோம் !


துயரத்தின் தோற்றுவாய்


பிப்ரவரி 27 2002 புதன்கிழமை காலை.  வெற்றிகரமாக அயோத்தி புண்ணியாத்திரையை முடித்துவிட்டு, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த சிறு குழுவொன்று, குஜராத் கோத்ரா ரயிலடி வந்தடைகிறது.  இவர்கள் ஒட்டுமொத்தமாய் இருந்த, அந்த சபர்மதி துரிதவண்டிப் பெட்டியை  மட்டும் குறிவைத்து கொடூரமாய் ஒரு கும்பல் தாக்குதல் நிகழ்த்துகிறது.  அதாவது அந்தப் பெட்டிகளை இறுக மூடி, அவர்கள் யாவருமே தப்பிக்காதளவு தீ வைத்து, எரித்தேக் கொன்றது அந்த வெறி பிடித்தக் கும்பல் :(

இப்படி எரித்தது கோத்ரா நகரைச் சேர்ந்த முஸ்லீம்கள் என்று குஜராத் முழுக்க புரளி பரவி, இந்துக்கள் மத்தியில் பெருங்கொந்தளிப்பு கிளம்புகிறது.

செய்தது முஸ்லீம்களாகவே இருக்கட்டும்.  அது ஒரு சிறு குழு.  அவர்கள் எப்படி ஒட்டுமொத்த கோத்ரா முஸ்லீம்களுக்கு பொறுப்பாவார்கள் ?  

கோத்ரா வாழ் முஸ்லீம்களுக்கே பொறுப்பில்லை எனும்போது, அந்த ஊரிலிருந்து பல நூறு கிலோமீட்டர்கள் தள்ளியிருந்த பிற ஊர் வாழ் முஸ்லீம்கள் ?  

ஆனால் சம்பவம் நிகழ்ந்த உடனேவெல்லாம் இனவெறிக் கலவரம் தொடங்கவில்லை.  எப்போது தொடங்குகிறது தெரியுமா ?

இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்த கோத்ரா ரயிலடிக்கு உடனுக்குடன் நேரடியாகச் சென்று, எரிக்கப்பட்டவர்களைப் பார்த்துவிட்டு பின்னிரவில் தலைநகர் திரும்புகிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.  

பின், ஊடகங்களில் தோன்றி இந்த துன்பியல் சம்பவத்தைப் பற்றிப் பேசுகிறார்.  எப்படி ?


விதைத்தவன் இன்னும் அறுக்கவில்லை


“இத்தகையை நிகழ்வை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.  இக்குற்றத்தைப் புரிந்தவர்களுக்கு, அவர்கள் செய்த பாவத்திற்கு நிச்சயம் முழு தண்டனை உண்டு.  அதுமட்டுமல்ல, இதுபோன்ற வெறுக்கத்தக்க குற்றங்களைப் புரிவோர் இனிவரும் காலங்களில் தங்கள் கனவிலும் நினைக்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு முழுமையான தண்டனை அளிக்கப்படும்“  

போதாதற்கு இதேபாணியில் அடுத்து, சட்டமன்றத்திலும் உறுதி அளிக்கிறார் திருவாளர் மோடி.  

“அப்பாவி பக்தர்கள் மீது மிகக் கொடூரமாகவும், மனிதாபிமானமின்றியும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் குற்றத்தின் மீது, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு  மீண்டும் நடைபெறாத அளவிற்கு  ‘அடையாளப்பூர்வமான’ விதத்தில் கடும் நடவடிக்கைகளை எடுத்திட மாநில அரசு உறுதி பூண்டுள்ளது“

தாம் செய்யவிருக்கும் எவ்வித பழிவாங்கல்களுக்கும், அதிகார மையத்தின் உச்சத்திலிருப்பவரே தங்களுக்கு அங்கீகாரத்தை கொடுத்துவிட்டதாக, முதல்வர் கொடுத்த உறுதிமொழியை மக்கள் கருதினர் என்றால் அது மிகையில்லை !

சினிமாவில் வேண்டுமானால், முதல்வரோ, அமைச்சர்களோ, கவுன்சிலர்களோ, சட்டத்தைத் தங்கள் கையிலெடுத்துக்கொண்டு,  குற்றவாளிகளை நேரடியாகத் தண்டிப்பது போலெல்லாம் காட்ட முடியும். யதார்த்தத்தில் முதல்வரால் குற்றவாளிகளைக் கண்டறிய காவல்துறைத் தலைவர்களுக்கு, அதிகார மையங்களுக்கு, உத்தரவு மட்டுமே இட முடியும்.  அப்படி உத்தரவிடக் கூடிய ஒரு கூட்டத்தில் மோடி கீழ்க்கண்டவாறு பேசுகிறார்.

“வகுப்புக் கலவரங்களின் போது, போலிசார் பொதுவாக முஸ்லீம்களில் ஒருவரைக் கைது செய்தால் இந்துக்களிலும் ஒருவரைக் கைது செய்வார்கள்.  ஆனால் இப்போது அப்படிச் செய்யாதீர்கள்(அதாவது இந்துக்கள் யாரையும் கைது செய்யாதீர்கள்)  

இந்துக்கள், தங்கள் கோபத்தைக் காட்டுவதற்கு அனுமதியுங்கள் “


தங்களாட்கள் இப்படி கொடூரமாகக் கொல்லப்பட்டதற்காக, பிப்ரவரி 28 வியாழன் 2002 அன்று குஜராத் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது விஷ்வஹிந்து பரிஷத்.  அந்த முழு அடைப்பு வெற்றிகரமாக நடக்க காவல்துறை உதவ வேண்டும்.  அவர்களின் கொதிப்பிற்கு அர்த்தம் உண்டு என்பதற்குத்தான் முதல்வர் தலைமையில் அந்த ஆலோசனைக் கூட்டம் !

அன்று (28/02/2002 வியாழன்) நடைபெற்ற முழு அடைப்பில், குஜராத் முழுக்க பல பேரணிகள் நடைபெற்றிருக்கின்றன.  இஸ்லாமியர்களுக்கெதிராக மிக மோசமான கோஷங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.  ஊர்வலத்தில் வந்தவர்கள் அப்படியே இஸ்லாமிய வணிக நிறுவனங்களாகப் பார்த்து சூறையாட ஆரம்பிக்கிறார்கள்.  கடையுடைப்பு, தீ வைப்பு மாநிலமெங்கும் பரவுகிறது.  காவலர்கள் எங்கும் ஒரு சிறு தடுப்பு கூடச் செய்யவில்லை என்பதை கலகக்காரர்கள் உணர ஆரம்பித்த அடுத்தகணம்..... 

ஆள் வேட்டையும், பெண் வேட்டையும் ஆரம்பமாகிறது :(

எப்போது நின்றிருக்கிறது தெரியுமா ?  03/03/2002 ஞாயிறு மாலை.  டெல்லியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படைகள் ஒவ்வொரு ஊரிலும் கொடி அணிவகுப்பு நிகழ்த்தும் வரை !

அதற்குள்தான் எத்தனை ஆயிரம் உயிரிழப்புகள் ?  எத்தனை ஆயிரம் கோடி பொருட்சேதம் ?  எத்தனை நூறு வன்கலவிகள் ?  


உருவாக்கப்பட்ட அழிவாயுதம்


26/01/2001.  இந்தியக் குடியரசு தினம்.  கொண்டாட்டங்களோடு அனைவரும் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்த சமயம் நிகழ்ந்தது உலகின் மிக மோசமான பூகம்பம்.  குஜராத்தின் புஜ் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நிகழ்ந்த இந்த கொடூர இயற்கைச் சீற்றத்தால் பல்லாயிரக் கணக்கான மக்கள் மாண்டனர்.  புஜ் நகரத்தின் பெரும்பாலான கட்டிடங்களை பூமி அப்படியே விழுங்கியிருந்தது.  சடலங்களையும்,  இடிபாடுகளிடையே காயப்பட்டுக் கிடந்தவர்களையும் மீட்பது, வீடிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது, நகரை மறுகட்டமைப்பு செய்து சீராக்குவது போன்ற, பெரும் நிர்வாகத் திறமை தேவைப்பட்டது.  அந்த நிர்வாகத் திறமை போதாமல் பெரிதும் சிரமப்பட்டார் அப்போதைய குஜராத்தின் முதல்வர் திரு.கேசுபாய் படேல்.  மக்களிடையே பெரிதும் அதிருப்திக்குள்ளான முதல்வராய் கேசுபாய் படேல் இருந்ததால், அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை முதல்வராக்க நியமிக்க விரும்பியது மத்தியில் ஆண்டுக்கொண்டிருந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு !

அதன்படி, அதே வருடம் அக்டோபரில், ஆர் எஸ் எஸ்சால் பரிந்துரைக்கப்பட்டு, முதல்வர் பதவிக்கு கொண்டுவந்து முன்னிறுத்தப்பட்டவர் இந்த மோடி.  அந்த நன்றிக்கடனுக்குத்தான் இந்த நரபலிகள்.  இந்த நரபலிகளுக்கு கிட்டிய பரிசே பிரதமர் பதவி !


ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை !  

பொருள் : குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.

- திருவள்ளுவர் , திருக்குறள் (541)

மக்கள் உணர்ச்சிவசப்படுவார்கள்தான்.  கேடுமனம் படைத்தவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி, மூளையில் வெறியேறி, கும்பல் மனோபாவத்தில் பல அட்டூழியங்கள் செய்து அறம் மீறத் துணிவார்கள்தான்.  ஆனால் அவர்களுக்கு நன்னெறிகள் கூறி ஆற்றுப்படுத்துவதும், குற்றங்கள் புரிந்தவன் தன் மக்களாகவே இருந்தாலும் அவனுக்கு உரிய தண்டனைகளை அனுபவிக்கச் செய்வதும்தான் ஓர் அரசனின் கடமை !

மாறாக அந்த அரசனே தனக்கு ஒவ்வாத மக்களை, ஆயுத, அதிகார பலம் கொண்டு அழிக்க முயல்வதும், அதையும் தனக்குப் பிடித்த மக்களை வைத்தேச் செய்வதும் அரசனுக்குரிய அறமே ஆகாது.  அவன் அரசப் பதவிக்கு முற்றிலும் தகுதியற்ற ஓர் ஆள் !

அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, எந்த ஒரு காரியம் வேண்டி, தங்களுக்காக முழுக்க ஒத்துழைப்பார் என நம்பி மோடியை முதல்வராக்கி அழகு பார்த்ததோ, அந்தக் காரியத்தை தான் பதவிக்கு வந்த மூன்றே மாதங்களில் அரங்கேற்றி, அதற்கு அனைத்து அரசு அதிகார மையங்களையும் உடந்தையாக்கி, நம் அரசியலமைப்பையே ஓர் ஆட்டு ஆட்டி, ருத்ரதாண்டவத்தை ஆடிக்காட்டியவர் திரு.மோடி.  இதற்கான ஆதாரங்களைத்தான் அடுக்கடுக்காக கொட்டிக் கொண்டே போகிறார் ஆசிரியர் ! 

வெறுமனே மோடி வெறுப்பு அல்லது ஆர் எஸ் எஸ் வெறுப்பு அல்லது காவிக் காலிகள் வெறுப்பு என்று மட்டுமே பேசாமல், குஜராத்தின் வகுப்புக் கலவர வரலாறு பற்றியும், அதற்கு எவரெல்லாம் காரணம் என்பது பற்றியும் கட்சிப் பேதமின்றி விமர்சிக்கிறார்.

தேர்தல் மூலம் ஆட்சி செய்திட மக்கள் தங்களுக்கு அளித்த கட்டளைக்கு இரண்டகம் செய்திடும் விதத்தில் ராஜிவ்காந்தியின் காங்கிரஸ் அரசு, முஸ்லீம் மதக் குருமார்களை முகஸ்துதி செய்திடும் கொள்கைகளைப் பின்பற்றியது.  ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திட்ட முற்போக்கான தீர்ப்பை மறுதலித்திடும் விதத்தில் சட்டம் இயற்றியது.   சல்மான் ருஷ்டியின் சாத்தானியப் பாடல்களைத் தடைசெய்து உத்தரவிட்டது.  இதையெல்லாம் இந்து அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாகத் திரித்து, வாக்குகளுக்காக எந்த ஒன்றுக்கும் காங்கிரஸ் சமரசம் செய்துக் கொள்ளக் கூடியதுதான் என்று பரப்பின.

குஜராத்தில் 1984-க்குப் பின் சங் பரிவாரங்கள் எண்ணத்திற்கேற்ப பல மாற்றங்கள் அவைகளுக்குச் சாதகமாகவே நிகழ்ந்தன.  படேல் வகுப்பினர் பெரும்பாலோர் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த நிலையில், முஸ்லீம்களுக்கு குஜராத்தின் அப்போதைய காங்கிரஸ் அரசு இடஒதுக்கீடு அளிக்க, அதையெதிர்த்து பெரிய கலவரம் மூண்டது !

படேல் வகுப்பினரில் பெரும்பாலோர் இந்தக் கலவரத்திற்குப் பின் தங்களுடைய காங்கிரஸ் ஆதரவு மனோநிலையிலிருந்து மாறி சங் பரிவாரக் கட்சிக்கு ஆதரவு தருபவர்களாக மாற ஆரம்பித்தனர்.  அதற்கு மேலும் ஒருவர் முக்கிய காரணகர்த்தா ஆகிறார்.  அவர் ஸ்வாமிநாராயண்.  படேல் வகுப்பாரின் பெருஞ்சாமியார்.  

இவருடைய போதனைகள் இந்து மதம்தான் உலகின் மிகப் பழமையான புனிதமான மதம். பிற மதங்களெல்லாம் அதற்கு கீழானவைகள்.  அதிலும் இஸ்லாத் ?  இப்படியாக பல எள்ளல்கள் தெறிக்கும் தத்துவங்களை உதிர்த்துக் கொண்டிருந்தார் ஸ்வாமி நாராயண்.  அவர்தான், வல்லப்பாய் படேல் எனும் பேராளுமையை, ’தகுதியற்ற நேரு உதாசீனப்படுத்தினார், காங்கிரஸார் புறக்கணித்தனர்’ என்றெல்லாம் படேல் புகழ்பாடி, காங்கிரஸை இன்னும் அவர்களிடமிருந்து தூர விலகச் செய்தார் !

இப்படியாக சங்கி கூட்டங்களின் பேராதரவைப் பெற்று, அவைகளின் அரசியலமைப்பான பாரதிய ஜனதா பார்ட்டி 1995-ல் குஜராத்தில் ஆட்சியைப் பிடித்தது.   அதன்பின், அந்தச் சங்பரிவாரங்கள் சிறுகச் சிறுக தங்களின் மத வளர்ச்சிக்காக, தங்களாட்களை எவ்வாறெல்லாம் உருமாற்றி, சகோதர மத ஆட்களிடமிருந்து பிரித்தது என்பதையும் ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.  அவர் காவல்துறையில் இருந்ததாலும், அவருடைய வரலாற்று ஆய்வறிவாலும் அவரால் இதை எளிதாக அவதானிக்க முடிந்திருக்கிறது !


மதத்திற்கும் மதம் பிடிக்கும்


பாழடைந்த கோவில்களைக் கட்டுதல், பண்டிகைகளைப் புதுப்பித்தல், கூட்டு வழிபாட்டு நடவடிக்கைகளை அதிகரித்தல், இந்து யாத்திரைத் தலங்களை மேம்படுத்த அரசு கூடுதல் நிதியை ஒதுக்கச் செய்தல், பூகோள / வரலாறு அடிப்படையிலான அமைந்த பெயர்களையெல்லாம், இந்துமதப் புராணப் பெயர்களாக மாற்றுதல், அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்பதில் தவறில்லை எனச் சட்டத்தை நெகிழச் செய்தல்..... 

இப்படியாக குஜராத்தை, இந்துத்துவாவின் கவுரவமிக்க ஆய்வுக்கூடமாக மாற்றினர்.  இந்த ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பரிசோதனையாகத்தான் கோத்ரா ரயிலெரிப்புச் சம்பவத்தையும், அதையொட்டி நிகழ்ந்த கோரக் கலவரங்களையும் நாம் நோக்க நேரிடுகிறது !

இதே வழிமுறைகளில் பிற மதத்தினவர்களைத் தனிமைப்படுத்தவும், அவர்களின் இருப்பிடங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவும், பல்வேறு வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டன.  இந்துக்கள் தங்களின் வீடுகள், வர்த்தக நிலையக் கட்டிடங்களில், ஓம் அல்லது ஸ்வஸ்திக் சின்னங்கள் வரைவதும், கடவுள் சிலைகளைப் பொறிப்பதும் அவசியம் என்பது மறைமுகக் கட்டளையாகவே இருந்தன.   அப்போதுதான் கலவரங்கள் நிகழும் போது ‘ குறி ‘ பார்த்து தாக்க ஏதுவாகவிருக்கும் !

1992-ன் இறுதியில் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம், அதனால் பின் நாடு முழுவதும் பரவிய பெருங்கலவரங்கள், குண்டுவெடிப்புகள், இந்து - முஸ்லீம் மதத்தினரடையே, ‘அவர்கள்‘  எதிர்பார்த்தபடி பிளவை அதிகரித்தது.  இந்து மற்றும் முஸ்லீம் மதக் குருமார்கள் பரஸ்பரம் தங்களாட்களை மத அடையாளங்களுடன் இருக்குமாறு நிர்ப்பந்தித்தனர்.  இதுகாறும் வெகு சொற்ப வேறுபாடுகளிருப்பினும் ஒரே கலாச்சாரம், உடை, மொழி, பண்பாடு, சகோதரத்துவமென இருந்த மக்களிடையே மாறுபட்டக் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் வேற்றுமைகள் தோன்றி, பகை அதிகரிக்க ஆரம்பித்தன !

குஜராத்தின் வகுப்புவாத வன்முறை வரலாறு பழமையான ஒன்று.  அது கி.பி.1714- லிலேயே தொடங்கிய ஒன்றுதான்.  அதன்பின் அங்கு மிகப் பெரிய வகுப்புக் கலவரங்கள் முறையே 1969, 1985, 1992 களில் நிகழ்ந்திருக்கின்றன.  ஆனால் நீண்ட கலவர நாட்களாக இருந்தது 2002 -ல்தான்.  1969 கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 600.  அதன்பின் நிகழ்ந்த மிக மோசமான பலி எண்ணிக்கையோடு (அரசுப் பதிவின்படியே 1500 க்கும் மேல்) கொடூரமான கலவரமாக பதிவுசெய்யப்பட்டிருப்பது 2002 தான்.  சரி எதற்கு இந்த அட்டவணைகள் எனப் பார்ப்போம்.  

வகுப்புவாத ஒற்றுமையில் மோசமான வரலாற்றுப் பக்கங்களை குஜராத் கொண்டிருந்தாலும், இத்தகைய கலவரங்களால், அரசுக்கு அந்தக் காலத்திலிருந்தே எங்கு வகுப்பு கலவரம் தோன்றும் ?  அதனால் பாதிக்கப்படுபவர்கள் எங்கு அதிகம் இருப்பார்கள் ?  கலவரக்காரர்கள் எந்தப் பகுதியிலிருந்து கிளம்புவார்கள் ?  அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் என்ன ?  அதை எங்கு பதுக்கி வைத்திருப்பார்கள் ?  அவர்களுடைய தலைவர்கள் எங்கிருப்பார்கள் ? எந்தத் தலையைத் தட்டினால் கலவரம் உடனே நிற்கும் ?  என்கிற தகவல்கள், ஆவணங்களாக காவல் நிலையங்களிலும், அரசுவசமும் தயாராக எப்போதும் கையிலிருக்கும்.  இதனால்தான் பெரிய கலவரங்கள் திடீரென உருவானால் அவை உடனுக்குடன் கட்டுப்படுத்தப் பட்டன.  நீண்ட காலத்திற்கு மீண்டும் அங்கு கலவரங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும்பட்டன !

ஆக, கடுமையான அசம்பவம் கோத்ரா ரயில் நிலையத்தில் நிகழ்ந்தபின், பெரும் வகுப்புக் கலவரம் உருவாகக்கூடியச் சூழலை உடனடியாக குஜராத் உளவுத்துறையும், காவல்துறையும் அனுமானித்திருக்கும்.  எங்கெங்கெல்லாம் மதவெறியர்கள் பேயாட்டம் போடுவார்கள் என அவர்களுக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கும்.  யார் யாரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டியிருக்கும் என்கிற பட்டியல் சில நிமிடங்களுக்குள் அந்தந்த மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளின் கைகளில் வந்திருக்கும் !  

இந்த நிலையில்தான் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு, முழு அடைப்பிற்கு அழைப்பு விடுவிக்கிறது.  அகமதாபாத்தில் பேரணிக்கு அனுமதியும் கோருகிறது.  இந்தச் சூழ்நிலையில் எந்த அரசாவது பேரணிக்கு அனுமதி தருமா ?  மோடி அரசு தந்தது.  காரணம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்.  அவர்கள் கோபத்திற்கான வடிகாலை நாம் அடைக்கக் கூடாதென்பது முதல்வரின் கட்டளை.  

கோத்ரா ரயிலெரிப்பில் எரிந்தவர்களில் பலர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள்.  எவரென்று அடையாளமே காணமுடியாதபடி மிகக் கோரமாய் சிதைந்து போயிருந்தது எரிந்த உடல்கள்.  கரிக்கட்டையாய் உருகிக் கிடந்த உடற்கூடுகளை கோத்ராவிலிருந்து அள்ளி எடுத்துக் கொண்டு, நீதி வேண்டும் என அகமதாபாத்தில் பேரணியை பிரம்மாண்டமாக நிகழ்த்தியது விஸ்வஹிந்து பரிஷத்.   நம்மை, ஒரு தீவிர இந்துத்துவராக வரித்துக் கொண்டு இந்த வரியைக் கடந்துப் பார்த்தால் கை ரோமங்களெல்லாம் சிலிர்த்து கொன்றவர்களை பழிதீர்க்கவல்லவா மனம் உணர்ச்சிப் பெருக்கில் கொதித்தெழும் ?  எண்ணியதே ஈடேறியது !


குருதிப்புனல்


நேரடி சாட்சியாக தான் பார்த்த கோரங்களை பக்கத்திற்கு பக்கம் விவரித்துச் செல்கிறார் ஆசிரியர்.  கலவரம் பரவிய அந்த 28/02/2002 வியாழன் காலை தன் மெய்க்காவலர்களுடன் அலுவலகத்திற்கு ஜீப்பில் சென்றுக் கொண்டிருக்கும் போது, பேரணியிலிருந்து விலகி வந்திருந்த சிலர், சாலையோர வியாபாரிகளையெல்லாம் கலைந்து செல்லும்படி மிரட்டிக் கொண்டிருந்ததையும், கத்தி, கடப்பாரை, கோடாரி, சூலாயுதம், தடிகள், உருட்டுக் கட்டைகளோடு உரக்கக் கோஷமிட்டுக் கொண்டும்,  பலர், சாலையில் டயர்களைப் போட்டு எரித்துக் கொண்டிருந்ததையும், மூடப்பட்டிருந்த கடைகளை குறிபார்த்து உடைத்துக் கொண்டிருந்ததையும் காண்கிறார்.  இவர்களுக்கு அருகிலேயே காவலர்கள் இருந்தும் அவர்கள், கலவரக்காரர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையுமெடுக்காமல் சம்பவங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததையும் பார்க்கிறார்.  மனம் பொறுக்காமல் ஒரு காவலதிகாரி அருகே தன் வண்டியை நிறுத்தி, ஏன் கலவரக்காரர்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்.  

அவரோ, காவல்துறை ஆணையர் உத்தரவு வரும்வரை தாம் அமைதியாக இருக்குமாறு பணிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் !

காவலர்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறினால், இந்தக் கலவரக்காரர்களின் மனம் அடுத்து என்ன நிலைக்குத் தாவும் என்பதை ஓர் அனுபவசாலியாக ஆசிரியர் மிகச் சரியாக அனுமானித்திருந்தார்.  ஆமாம், அதுவே நிகழத் தொடங்கியது ! 

அதாவது முதலில் இஸ்லாமியர் கடைகளாகப் பார்த்துக் கொள்ளையடிப்பது திட்டம்.  

அதன்படி பாட்டா, பேண்டலூன், மெட்ரோ ஷூஸ் போன்ற பிரபல கடைகளைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.  பிறகு கொலைகள், அதன் பின் வன்கலவிகள் !

ஆர்.பி. ஸ்ரீகுமார் அன்று அலுவலகத்தை அடைந்ததும் அவருக்கு ஒரு போன் வருகிறது.  நரோடா பாட்டியா எனும் பகுதியிலிருக்கும் மாநில ரிசர்வ் போலிஸ் முகாமருகே, சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள், தாங்கள் தாக்கப்படக்கூடும் என அஞ்சி, தஞ்சம் கேட்டு வந்திருக்கிறார்கள் என்றும், உரிய அனுமதியின்றி அப்படி முகாமில் தங்கவைக்க முடியாதென்றும், என்ன செய்வது என, ரிசர்வ் படையின் கமாண்டென்ட் குர்ஷித் அகமது யோசனை கேட்கிறார்.  

பெரிய மதில் சுவர்களோடு ஆயுதப்படை பாதுகாப்பில் இருக்கும் பிரம்மாண்டமான முகாம் அது.  

உடனடியாக அவர்களை அங்கு பாதுகாப்பாக தங்க வைக்குமாறு ஃபாக்ஸ் மூலம் ஆணையிட்டு, உரிய அனுமதியைத் தருகிறார் ஸ்ரீகுமார்.  

ஆனால் அவருக்கு அத்தகைய அதிகாரமில்லை என எவரோ, அந்த முகாம் அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தியிருந்திருக்கிறார்கள்.  இத்தனைக்கும் அப்போது அந்த முகாம் பொறுப்பிலிருந்தவர்களும் முஸ்லீம் அதிகாரிகளே !  

அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு அனுமதி கிட்டாததால், குழம்பி எங்கு பாதுகாப்பாக இருப்பது என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், அவர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ, அதேப்போல பெரிய வன்முறை மதவெறிக் கும்பலொன்று கோர தாண்டவம் ஆடி, பல உயிர்களைப் பறித்துச் சென்றது.  அந்த ரிசர்வ் போலிஸ் முகாமிற்கு வெளியே ரத்தச் சகதிக்கிடையே இறந்தோர் எண்ணிக்கை அரசுப் பதிவேட்டின்படியே 96 பேர்.  கண்களுக்கெதிராக நிகழ்ந்த ஒரு கோரப்படுகொலை.  

இதில் மிகக் கேவலமான ஒரு திருப்புமுனை என்னவெனில், ஸ்ரீகுமாரின் இந்த ஃபேக்ஸ் நகலை நீதிமன்றங்களில் காட்டி, அரசு பாதிக்கப்பட்டவர்களை கையெல்லாம் விடவில்லை, இதுபோல பாதுகாப்பளிக்க உத்தரவுதான் இட்டது, ஆனால் அதையும் மீறி கலவரக்காரர்கள் உணர்ச்சிப்பெருக்கில் இப்படி செய்துவிட்டார்கள் என்று பொய் சொன்னதுதான் என்று சொல்லி வருந்துகிறார் ஆசிரியர் !

அன்று மாலை, குஜராத்தின் அப்போதைய டிஜிபி திரு.சக்கரவர்த்தி அவர்களைப் போய்ச் சந்தித்திருக்கிறார் ஸ்ரீகுமார்.  அப்போதுதான் தங்களிடம் முதல்வர் இவ்வாறு வாளாவிருக்கும்படி வாய்மொழி உத்தரவிட்டதை விளக்கி, வருந்தியிருக்கிறார்.  அன்று மோடியின் கட்டளைக்கு பணிந்து  ‘அமைதி காத்த‘ அகமதாபாத் காவல் ஆணையர் திரு. பி. சி. பாண்டே, கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக் நாராயண், தலைமைச் செயலாளர் (பொறுப்பு) திரு.ஸ்ரீஸ்வரகாந்த் வர்மா, முதல்வரின் கூடுதல் செயலாளர் திரு. பி.கே.மிஸ்ரா போன்றோர்க்கு பிற்காலங்களில் மிகப் பெரிய பதவி உயர்வுகள் தேடி வந்தன.  அதிலும் பி.கே.மிஸ்ரா இப்ப, நம்ம பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளர் !

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கெதிராக வீதிக்கு வந்து போராடியவர்களில், 13 அப்பாவிகளைச் சுட்டு சாகடித்தார்களில்லையா ?  இந்தக் கொலைகாரர்களுக்கும் இதுபோன்ற சிறப்பான எதிர்காலத்தைக் கண்ணில் காட்டித்தான் சுடச் சொல்லியிருப்பார்கள்.  பேய்களுக்கு ரத்தச்ச்கதியில் மிதக்கும் பிணங்களேறி உயரேச் செல்வதைக் காட்டிலும் ஈடு இணையற்ற இன்பம் வேறென்ன இருக்கப் போகிறது ?

சரி, அப்போது ஸ்ரீகுமாரைத் தவிர வேறெந்த உயர் அதிகாரிகளுமா மக்கள் சார்பாக நிற்கவில்லை ? என்கிற கேள்விகள் நம் மனத்திலே கிளறலாம்.  ஸ்ரீகுமார் போல இறையாண்மையை மதித்த பல அதிகாரிகளும் அப்போது இருந்துள்ளனர்.  அவர்களும் ஸ்ரீகுமார் போலவே உண்மையான பிரமாண வாக்குமூலங்களை கோத்ரா கலவரத்தை விசாரித்த ஆணையத்திற்கு கொடுத்துள்ளனர் !

ராகுல் சர்மா, சஞ்சீவ் பட், விவேக் ஸ்ரீ வத்ஸ்வா, சதீஷ் சந்திரா, ரஜ்னீஷ் ராய், எம்.டி.ஆண்டனி, இவர்கள் எல்லோருமே ஐ பி எஸ்கள்.  இன்னும் பலரும் இந்தப் பட்டியலில் உண்டு.

ராகுல் சர்மா ஐ பி எஸ், பாவ்நகர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக அப்போது இருந்தார்.  எந்த அரசியல்வாதி அல்லது மேலதிகாரிகளின் தவறான உத்தரவுகளுக்குச் செவிமடுக்காமல் சட்டத்தைக் கட்டிக்காத்தார்.  400 இஸ்லாமிய மாணவர்களைத் தாக்க வந்த ஒரு கொலைவெறிக் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்களைக் காப்பாற்றினார்.  சங் பரிவார ஆட்களில் மிக முக்கியமான 21 நபர்களைத் துணிச்சலாக கைது செய்தவர், எந்தப் பரிந்துரைக்கும் அவர்களை விட மறுத்தார்.  இதற்குப் பலனாக பல இடங்களுக்கு இவரை மட்டமான பதவிகளுக்கு தூக்கி அடித்தனர்.  அப்படி ஒருமுறை இவரை அகமதாபாத் காவல் தொலைதொடர்பு கட்டுப்பாடு பிரிவுக்கு மாற்றினார்கள்.  மனிதர் என்ன செய்தார் தெரியுமா ?  கலவரத்தின் போது ஆட்சியாளர்களுக்கும், காவல்துறைக்குமிடையே நிகழ்ந்த, பதிவுசெய்யப்பட்ட தொலைபேசித் தொடர்புகளை ஆராய்ந்து, அதில் குற்றச் சம்பந்தப்பட்ட பேச்சுக்களின் டேப்புகளை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைத்தாராம் !.

சஞ்சீவ் பட்.  நேர்மையான இந்த அதிகாரி இப்போதும் சமூக வலைத்தளங்களில் காவிகளுக்கெதிராக ஆழமான பதிவுகளை பதிப்பவர்.  மோடியின் அந்த வாய்மொழி உத்தரவுக்கு நேரடி சாட்சி சொன்ன ஒரே அதிகாரி சஞ்சீவ் பட்தான்.  ஆனால் அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவே இல்லை என்று அவருடைய கீழதிகாரியால் பொய் சாட்சி சொல்ல வைக்கப்பட்டு, அரசிற்க்கெதிராக பொய் பேசி குழப்பமேற்படுத்த முயன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கைதுமாகியிருக்கிறார் !

என்னை உண்மை அறியும் சோதனைக் கருவிகள் பொருத்திக் கூடச் சோதித்துக் கொள்ளுங்கள் என்று இவர் கதறியும், இவர் வாக்குமூலத்தை ஏற்க மறுத்ததாம் விசாரணை ஆணையம் !

சதிஷ்சந்திரா ஐபிஎஸ், இந்தக் கலவரச் சமயங்களின் போது ஜாம்நகர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்திருக்கிறார்.  இவர் இருந்த மாவட்டத்தில் கலவரக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு ஆரம்பத்திலேயே ஒடுக்கி, சின்ன சலசலப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டு கெட்ட பெயரை ஆட்சியாளர்களிடம் வாங்கியிருந்திருக்கிறார்.  பல பதவிகளுக்குத் தூக்கியடிக்கப்பட்டும், நீதிமன்றத்தால் சொராபுதின் போலி என்கவுண்டர் வழக்கில் சிறப்பு விசாரணை அதிகாரியாக சி பி ஐக்கு உதவ டெல்லி அனுப்பப்பட்டார்.  விளைவு, மோடி ஜங் என்றவுடன் ஜக் என்று ஜக்மாரிக் கொண்டிருந்த பல காவல்துறை உயரதிகாரிகள் போலி என்கவுன்டருக்காக கைதுசெய்யப்பட முக்கியக் காரணகர்த்தாவாக விளங்கினார் !

அப்போதைய முதல்வர் மோடி நேரடியாக இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணகர்த்தா என நிறுவவிடாமல் ஒத்துழைத்த பலரும், இப்போதைய பிரதமர் மோடியைச் சுற்றி இருக்கிறார்கள் எனப் பார்த்தோமா ?  இப்படி உயர்பதவியிலிருந்த காவல்துறை அதிகாரியான ஓ.பி.மாத்தூர் என்பவருக்கு அவர் ஓய்வுபெற்றபின் துணை வேந்தர் பதவியை மோடி அரசு வழந்தியிருந்திருக்கிறது.  துணைவேந்தருக்கென்று நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை தகுதிகள் கூட இல்லாத ஒரு நிலையில்தான் அவருக்கு இந்தப் பதவி.  இப்ப உங்களுக்கு சூரப்பா நினைவுக்கு வந்தால் அது என் பிழை அல்ல.  இதைக்காட்டிலும் அமைச்சரவைச் செயலாளர்களைக் கூட தம்மிஷ்டத்துக்கு இப்படி தகுதியற்றவர்களை நியமித்துக் கொள்ள முடியும் என மோடி அரசு முன்வந்திருக்கிறதே ?

நரோடா பாட்டியா மட்டுமல்லாது குல்பர்க் சொஸைட்டி, பெஸ்ட் பேக்கரி என்று மாநிலம் முழுவதும் அன்று நிகழ்ந்த கொடூரச் செயல்களுக்கு அளவேயில்லை.  இந்த குல்பர்க் சொஸைட்டியில் காங்கிரஸின் முன்னால் மக்களவை உறுப்பினர் இஸான் ஜாப்ரி கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.  இன்றுவரை அவருடைய மனைவி, அதற்கு நியாயம் வேண்டி போராடுகிறார்.  மோடி, மாயாகோட்னி என்பவர்கள்தான் தன் கணவர் சாவுக்கு காரணம் என நீதிமன்றப் படிகளேறினார்.  மாயாகோட்னி விடுதலைச் சேதியை வாசித்திருப்பீர்களே ?

போதும்

தங்களுக்கெதிராக செயல்படும் மனிதர் என்று கலவரங்கள் முடிந்த சில நாட்களிலேயே மோடி அரசால் குறிவைக்கப்பட்ட ஸ்ரீகுமார் அவர்களைப் பணியவைத்து, தங்களுக்குச் சாதகமான ஆளாக மாற்றிக்கொள்ள, மோடி பலமுறை தனியாகவே அவரைச் சந்தித்து ஆலோசனைகள், கட்டளைகள், யோசனைகள் என பல கேட்டிருக்கிறார், சொல்லியிருக்கிறார். மோடி அல்லது அவருடைய தனிச் செயலர்களும்.  அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள்.  

1.) அப்போதைய காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலாதான் அகமதாபாத் நகரக் கலவரங்களுக்குக் காரணமானவர் என்று கூறி, அவருடைய தொலைபேசியை ஒட்டுக் கேட்கச் சொன்னது.  அதேபோல் நடிகர் நஸ்ருதீன்ஷா அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் மேஜர்  ஜெனரல் ஜக்ருதீன் ஷா.  குஜராத் கலவரங்களை ஒடுக்க, காவல்துறைக்கு உதவ குஜராத்திற்கு அனுப்பப்பட்ட ராணுவப்பிரிவின் தலைவர்.  இவருக்கு ஒரு பெண்ணுடன் தவறானத் தொடர்பிருப்பதாக, உளவுத்துறைச் சார்பாக ரகசிய அறிக்கை ஒன்றைத் தரச் சொல்லி நிர்பந்தித்தது ;

2.) கோத்ரா ரயிலெரிப்பு நிகழ்ந்தவுடனேயே(கவனிக்க வேண்டும்) நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே..... உளவுத்துறையின் ஓர் அதிகாரியை வைத்து, இந்த ரயிலெரிப்பின் பின் பாகிஸ்தானின் லக்ஸர் இ தொய்பா அமைப்பு இருக்கும் எனச் சந்தேகிப்பதாகச் சொல்லச் சொல்லி, இதைப்பின்பற்றி முதல்வரும், நடுவண் அரசின் உள்துறை அமைச்சர் அத்வானியையும், அப்படியேச் சொல்லவைத்த சாமர்த்தியம்.  எனவே சந்தேகப்படும் இஸ்லாமியத் தலைவர்களின் போன்களை ஒட்டுக்கேட்டு அதைக்கொண்டே அவர்களை என்கவுன்டர்கள் செய்து கொல்ல ஒத்துழைப்பது ;

இந்த இரண்டு செயல்களையும் அடியோடு செய்யமுடியாது என நிராகரித்திருந்திருக்கிறார் ஸ்ரீகுமார்.  போக அவர் தொடர்ந்து மிக நேர்மையாக ஆளுங்கட்சியின் அட்டூழியங்களை மேலிடங்களில் சொல்லிக்கொண்டே போக, அவர் மீது ஒன்பது குற்றங்களைச் சொல்லி, டம்மி பதவிகளுக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.  இவரைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்திற்குப் போனது மோடி அரசு.  இதனால் டி ஜி பி ஆக ஆகியிருக்க வேண்டியவருக்கு வழக்கைக் காரணமாகக் காட்டி வழங்காமல் அநீதி புரிந்தது.  

உச்சநீதிமன்றத்திற்குப் போயிருக்கிறார் ஆசிரியர்.  இறுதியில் நீதி வென்றிருக்கிறது.  அதாவது அவருடைய பதவி மூப்படைந்த இறுதி நாளன்று அவரை டி ஜி பி என அறிவித்தது உச்சநீதிமன்றம்.  

டி ஜி பி ஆன சில மணி நேரங்களிலேயே ரிட்டையர்டும் ஆகியிருந்திருக்கிறார் ஸ்ரீகுமார்.

புத்தக அட்டையே நமக்குத் தெரியாத பல கதைகளைச் சொல்லி விடுகிறது.  காவி நிற முகப்பு அட்டையில் பெரிதாக திரியெறியும் ஓம் பொறிக்கப்பட்ட ஒரு கருப்பு வெடிகுண்டு.  திரிசூலமொன்று கதறும் பெண் ஒருத்தியின் யோனி நீக்கி பாயத் தயாராக இருக்கிறது.  அவள் காலருகே அவளுடைய கைக்குழந்தை :(


தமிழில் - பாரதி புத்தகாலய வெளியீடு.

நன்றி.

முற்றும் !


ராஜா ராஜேந்திரன்.

சென்னை -1.

மின்னஞ்சல் : rashraja1969@gmail.com                                                                                                                                                                                  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!