செவ்வாய், 17 ஏப்ரல், 2012

காஞ்சிபுரத்திலும் ரத்தக் காட்டேரி அட்டூழியம் !


'காஞ்சிபுரத்திலும்' என்ற போதே புரிந்திருக்கும், அப்போ, இந்தக் ரத்தக் காட்டேரி நிறைய அக்கம்பக்கத்துல விளையாண்டுருக்கும்னுட்டு !
ஆமாம், வேலூர், வாலாஜா,  ராணிப்பேட்டை,  ஆற்காடுன்னு ஊர் சுத்திட்டு, அண்ணாத்த இப்போ காஞ்சிக்கு விஜயம் செஞ்சுருக்காராம் !


இச்செய்தியை, இன்று நாளிதழில் படித்தவுடன், ஏதோ நூறாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களைக் கோர்த்து, 'பொக்கிஷம்னு' போடுறாய்ங்க போலன்னு நினைச்சா, ங்கொக்கமக்கா...... 'ஹாட் நியூஸாம்ல' இது !சரி, அது என்ன என்ன சேட்டையெல்லாம் செஞ்சுருக்காம் தெரியுமா ?  இந்த ரத்தக் காட்டேரிக்கு ஒரு கொழந்த  பொறந்ததாமாம்,  எவனோ ஒரு போலி டாக்டர் 
அந்த பிஞ்சுக்  கொழந்தைக்கு விஷஊசி போட்டு கொன்னுட்டானாம்  !  அதனால பழி 
வாங்க அந்தக் காட்டேரி,   தாத்தா உருவத்துல வந்து ரத்தக் காவு கேக்குதாமாம் !  நள்ளிரவு பன்னிரெண்டு மணி ஆச்சுன்னா கெளம்பிடுமாம்
ரத்தம் ரத்தம்னுட்டு போயி ஒரு ஒரு கதவா
தட்டுமாம், வெளிய வந்தா ஓங்கி.......யெய்யா
போதும் கொல நடுங்குது !

இப்போ சமீபத்துல நிலநடுக்கம் வந்ததே.....அதுகூட இவுக சொல்லித்தான் வந்ததாமாம், இந்த வானிலை ஆராய்ச்சி கேனப்பயலுக, கடலுக்கடில கண்டத்தட்டு ஏதோ மோதிடுச்சுன்னு புருடா வுடுறாய்ங்க !

சரி, இந்த பயபுள்ளய பின்ன எப்படித்தான்  சமாளிக்குறதாம் ? அங்கதான் தமிழன் தன்னோட
மூளய யூஸ் செய்யுறான் பாருங்க, நீங்க
அப்படியே ஷாக் ஆயிடுவீங்க !  

வீட்டுத் தலவாசல் சுவருல  செவப்பு  பெயிண்டால ஒரு  திரிசூலத்த வரையுறான், சரி இது ஓல்ட்  டெக்னிக் ஆச்சே,  எல்லா பேய் படத்திலும் கிளைமாக்ஸ்ல   ஹீரோயின் இத வச்சித்தான தப்பிப்பான்னு  நீங்க கேக்குறது புரியுது, ஆனா
நம்மாளுக அதுக்கப்புறம் ஒன்னச் செய்யுறாக.
'இன்று போய் நாளை வா' ன்னு எழுதி அந்தக் காட்டேரி பயபுள்ளைக்கு மெசேஜ் சொல்றாங்க ! 

இதுமாதிரி ஒருத்தன் அவன் வீடுவாசல்ல
எழுதிக்கிட்டு இருக்கும்போது ஒரு லகுடபாண்டி அவன்கிட்ட போயி, 'ஏன்யா இப்படி சூதானமில்லாம இருக்க, பொறவு நாளைக்கு அது வந்துடிச்சின்னா ?' ன்னு
கேட்டுருக்கான்,  நம்ம ஆளுக சொல்லாடல் திறமயப் பாருங்க அதுக்கு அவன் சொன்னான்,
'அது படிச்சுட்டு, 'ஓஹோ...நாளைக்குன்னுதான
எழுதியிருக்காக'....ன்னுட்டு திரும்பி 
போயிடும்' !

அட வெண்ணகளா , இந்த  சூட்சுமம்  கூடப்புரியாத ஒரு  அப்பிராணி சீவனப்  பாத்து இப்படியா நடுங்கித் தொலைப்பது ? 
இந்தத்   தரித்திரமா  பூகம்பத்த  கொண்டுவரும் ?  

ஒருகாலத்தில் நம் சமுதாயம்,  புரளிகளை  அப்படியே நம்பும் ஏனென்றால்  நம்மிடையே  பரவலாக, அதாவது சீரான  படிப்பறிவெல்லாம் அப்போது 
இருந்திருக்காது.  இன்று எதில் வளர்ந்தோமோ
இல்லையோ, ஊடகத் துறையில் உலகிலுள்ள
எல்லா நாடுகளுக்கும் இணையாக, வலுவாக
இருக்கிறோம்.  செல்போன், கேமரா, டிவி
என்று கிராமந்தோறும் கூட தொய்வில்லை !

ஆனாலும், இது போன்ற காமெடிகளை
அப்படியே நம்பி பரிகாரமெல்லாம் செய்ய
கோயிலுக்குச் சென்று, அங்கு பணிபுரியும்
ஆசாமிகளிடம் ஆலோசனை கேட்டு, நடு
ரோட்டில் விளக்கேற்றுவது, எலுமிச்சையை
அறுத்து குங்குமத்தில் தோய்த்து,  வாசலில்  இடவலமாய் வாய் பிளந்து
வைப்பது, கத்தாழைத் தோட்டத்த வாசல்ல 
கட்டுறது, படிகாரக் கல்ல கறுப்புக் கயிறுல
தூக்கு போட்டு தொங்க விடுறது....என்று சிறு குழந்தைகளை இன்னமும் மிரள வைத்துக்
கொண்டிருக்கிறோம் !


கத்தாழை

இந்த ஒரு கூத்தக் கேளுங்க, என் பக்கத்து
வீட்டுக்காரன் ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி,  'சூனியம் யாரும் வச்சாலும்
உன்ன அது அண்டாம இருக்கணும்னா உன் வீட்டு
வாசல்ல ஒரு படிகாரக்கல்ல தொங்கவிடுன்னு'  ஒரு கருமாந்திரம் புடிச்சவன் யோசன சொல்லிட்டு
போயிட்டான், இவன்தான் விருஷம் பழமாச்சே
ஒரு செங்கல் சைசுல படிகாரத்த வாங்கி
தொங்கவிட்டான்.  ஒருநாள் பாருங்க அவன் 
வீட்டுக்கு வந்த ஒரு  பெரிய இடத்து  சொந்தக்காரன் தலைல, கயிறு நெகிழ்ந்து
அந்தப் படிகாரக் கல்லு விழுந்தது !  ஆனா...
ஆன்ட்டி கிளைமாக்ஸ் என்னன்னா 'அவைன்
சைத்தான் கி பச்சாப்பா, அதான் அவன் தலைல
விழுந்து, அவன் வீட்டுக்குள்ள நுழையாம  உன்னக் காப்பாத்திடுச்சு' ன்னு  அவன் மாமியாக் கிழவி சொன்னா !   கொஞ்சம் யார் வீட்டுக்கு போனாலும்
வாசலப் பாத்தே போங்க, அடி வாங்குறது
மட்டுமில்லாம இது போல வசவெல்லாம் 
கிடைக்கும் ! 


அஞ்சியஞ்சிச் சாவார்
இவரஞ்சாத பொருளில்லை அவனியிலே !
வஞ்சகப் பேய்களென்பார்
இந்த மரத்திலென்பார்
அந்தக் குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டிலென்பார்
மிகத் துயர்படுவார்
எண்ணிப் பயப்படுவார் !

இது என் பாரதி நூறாண்டுகளுக்கு முன்னரே
தன் மக்களைப் பற்றிப் பாடிய பாடல்,
வெட்கக்கேடு, நாம் இன்னமும் இதுபோல
பல புரளிகதைகளுக்கு பயந்து, அடிமைப்
பட்டுக்கிடக்கிறோம் ! 

பெரியார் பகுத்தறிவை புகுத்தியதில்
கடவுள் மறுப்பை மட்டும் வலியுறுத்தவில்லை
இதுபோன்ற மூட நம்பிக்கைகளையும்
அறுத்தெறியச் சொன்னார், கடவுள்பக்தி
கூடக்கூட இதுபோன்ற பேய்ப் பயங்களும்
புகுத்தத்தான் படும் !  'கடவுள் இருக்காருன்னு
நம்புறல்ல அப்போ பேயும் இருக்கத்தான்
செய்யும்' என்பார்கள் அறிவிலி மந்திர
வியாபாரிகள் !  இந்த எழவை ஒழிக்கத்தான்
ராமசாமி 'கடவுளே கிடையாதுடா வெங்காயங்களா' என்றார் !


ரத்தம் உறிஞ்சுவதில், ஆட்டம் போடுவதில்,
அட்டூழியம் பண்ணுவதில், காவு வாங்குவதில்
மனிதனை விட எதுவுமே இந்தப் புவியில்
பயம்காட்டும் விலங்கில்லை !  ஒருவாரம்
மட்டும் மானுடப் பதரிடம் பேய்களை வாழச்
சொல்லுங்கள், பிறகு அவைகள் அதுகள்
வீட்டில் எழுதிவைக்கும் 'மனிதா, இன்னிக்கில்ல என்னிக்குமே வராதே' ன்னு !

எனக்கு தெரிந்து ரத்தக் காட்டேரிகள் மூன்று,
அவை :-
1 . என் கட்டில் மூட்டைபூச்சி
2 . எங்கள் கூவம் கொசு
3 . என் பொண்டாட்டி 
(ஹிஹி......ச்சும்மா செல்லமாச் சொன்னேன்,
என் புஜ்ஜுக் காட்டேரிய்யா அவ)                                       THE  END   

      


  
  

4 கருத்துகள்:

  1. நல்ல விஷயத்தை எப்படிச் சொன்னாலும் அது சரியாக போய் சேர்ந்துவிடும்! ஆனால்,தாங்கள் அறியாமையில் இருக்கிறோம் என்பதையே நம்ப மறுக்கும் மனிதர்களை என்னவென்று சொல்வது? இயக்கமாக இருந்து செய்ய வேண்டிய மாபெரும் விஷயம் இந்த மூட நம்பிக்கை ஒழிப்பு! பார்க்கலாம்,எதிர்காலம் என்றும் நல்லதாகவே இருக்கும்......

    பதிலளிநீக்கு