உங்க ஷாருக்கான் என்ன அவ்ளோவ் பெரிய அப்பாடக்கரா ?

அவரவர்தம் விருப்பங்களும், தேர்ந்தெடுத்தலுமே
அவர்களின் சந்தோஷத்தை/துக்கத்தை 
நிர்ணயிக்கின்றன !

இது ஏதோ சாமியார் கூறிய நல்ல அறிவுரை போல, என்று நீங்கள்
பாராட்டினால் அவை அப்படியே என்னை வந்துச் சேரும் !  ஆம், இது
என்னால் எப்போதோ ட்வீ ட் செய்யப்பட்ட ஒரு கருத்துத்தான் என்றாலும்
இதை எப்போதோ, யாராவதோ கூட சொல்லியிருக்கக் கூடும் !
எதைக் கொண்டு வந்தோம் அதை நம்முடையது என்று சொல்வதற்கு ?

சரி, இப்போ எதுக்காக இவ்ளோவ் பில்டப் என்றால், நான் சரியான
ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன் என்பதை உங்களிடம்
பகிர்வதற்க்காகத்தான் !

என்னுடைய மழலைப் பருவத்தில் என் வீட்டில் 'தினத்தந்தி' 
வாங்குவார்கள், கன்னித்தீவு தொடரை விரும்பி வாசிப்பார்கள் !
விவரம் தெரியும் வரை ரசித்தே வந்த நான், டீனேஜ் தொடங்கும் போதே
அந்த நாளிதழின் அதிகப்பிரசங்கித்தனங்களை வெறுக்க ஆரம்பித்தேன் !
ஒரு பாலியல் வன்முறையை அவர்களுடைய நிருபர் நேரில் சென்று
வீடியோ எடுத்ததைப் போல வர்ணித்து எழுதுவார்கள் !  இவர்களால்
ஒரு தலைமுறையே சீரழிந்தது என்றாலும் கூட அது மிகையில்லை !

பள்ளிப்படிப்பின்  இறுதிகட்டத்தின் போதே நாளிதழை மாற்ற விரும்பி,
'தினமணி' யைத் தேர்ந்தெடுத்தேன், இதற்குத்தான் இத்தனை குதியாட்டம் !
இவர்களும் சொற்ப சமயங்களில் சொதப்பத்தான் செய்தார்கள். 
அதாவது ஒருமுறை ராஜீவ் கொலையாளிகள் சிவராசன், சுபா,
ஜெயலலிதாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் என்று
தவறான ஒரு புகைப்படத்தைப் பிரசுரித்து அசிங்கப்பட்டார்கள் !
சமீபத்தில் கோட்டூர்புர அண்ணா நூலகம் கட்டியதில் கருணாநிதி அரசு
ஊழல் செய்தது என்று கிளப்பி, தலைகுப்புற கவிழ்ந்து, அவர்கள்
மீசையில் மண் ஒட்டி........சரி விடுங்க, அரசியல்ல இதெல்லாம் 
சாதாரணமப்பா !  

மற்றபடி, அவர்களின் பல நடுநிலையான கட்டுரைகளும்,
பண்பு சார்ந்த அறநெறி நடைமுறைகளும், தலையங்கங்களும், 
காழ்ப்புணர்ச்சி காட்டாத செய்திகளும், என்னை
மிக மிக கவர்ந்தவை !  அதன்படிதான் நேற்று வெளியான அதன் 
தலையங்கமொன்றும்   என் மனதில் அடிக்கடி தோன்றி வந்த
ஓர் எண்ணத்தை பிரதிபலிப்பதாய் அமைந்தது !
அதைத்தான்   இங்கு சொல்ல ஆசைப்பட்டேன், இனி தொடர்வது
தினமணியில் வந்திருந்த தலையங்கத் துளிகள் !



// அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் நடிகர் ஷாருக்கான்  இடப்பெயர்வு சான்றளிப்புக்காக (விசா)இரண்டுமணி நேரம் நிறுத்தி வைக்கப் பட்டதற்கு, இந்தியத்
தொலைக்காட்சிகளும், வெளியுறவுத்துறை அமைச்சரும்
காட்டிய எதிர்ப்புகள் அசாதாரணமானது !  எஸ்.எம்.கிருஷ்ணா
ஒருபடி மேலே சென்று,  "அமெரிக்கா செய்வதை செய்துவிட்டு
மன்னிப்பு கேட்பதை தன்னுடைய வாடிக்கையாகவே
வைத்திருக்கிறது" என்று பொறிந்தார் !



'மை நேம் இஸ் கான்' என்ற ஷாருக் படத்தில், இரட்டைக் கோபுரத்
தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவில், அமெரிக்க
முஸ்லிம் மக்கள், சந்தேகக் கண்ணோடே  பார்க்கப்படுவதாய் 
கதை நகரும் !  அதை  உறுதி 
செய்வது போலவே  இந்தச் சம்பவமும் நடைபெற்று விட்டது
வேதனைதான் !  ஆனால் இதன் மூலம் அமெரிக்கா நமக்கு
ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லித் தருகிறது என்பதையும்
நாம் புரிந்து கொள்ள வேண்டும் !

இதே சம்பவம் ஓர்  அமெரிக்க நடிகருக்கு இந்தியாவில்
நேர்ந்திருக்குமெனில் அதை அமெரிக்கா எப்படி எடுத்துக்
கொண்டிருக்கும் ?  நடிகை ஏஞ்சலினா ஜூலி, மும்பை விமான
நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுகிறார் என வைத்துக் கொள்வோம்,
உடனடியாக பாலிவுட், கோலிவுட் நடிகர்கள், திரைக் கலைஞரை
அவமானப்படுத்தி விட்டார்கள் எனக் குதித்திருப்பார்கள் !  உடனே
இந்திய அரசு என்ன செய்யும் ?  நம்முடைய அந்த இடப்பெயர்வு
அதிகாரிகளை தற்காலிகமாக நீக்கி, நம் நடிகர்களையும், அமெரிக்காவையும்
சமாதானம்  செய்திருக்கும்  !

அதுதான் அமெரிக்காவில் நடக்கவில்லை. அங்கும் அறிவுஜீவிகள் உண்டு.
எதிர்ப்பு  தெரிவிக்கும் கூட்டம் உண்டு, ஆனால் இதற்காக
அதிகாரிகளை தண்டிப்பது அங்கே காணப்படாதவை !  இன்னும்
சொல்லப் போனால், ஷாருக் அங்கு எதற்க்காக தடுத்து
நிறுத்தப்பட்டார்  என்பதைக் கூட, அமெரிக்க அரசு, அந்த
அதிகாரிகளிடம் கேட்கவே இல்லை, கேட்கவும் செய்யாது !
அந்த அளவு அரசியல் தலையீடு இல்லாமல் தம்முடைய
அதிகாரிகளை முழுச் சுதந்திரத்துடன் பணி செய்ய அமெரிக்கா
ஒத்துழைக்கிறது, எனவேதான் அந்தக் கோரமான இரட்டைக் கோபுரத்
தாக்குதலுக்குப் பிறகு அங்கு வேறெந்தப் பெரிய
அசம்பாவிதங்களும் நடை பெறவில்லை !  இதைத்தான்
இந்தியா கற்க வேண்டிய பாடமாகக் கொள்ள வேண்டும் !




நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில், உங்கள் காரில் ஆளும்கட்சி
கொடியிருந்து, நீங்கள் முக்கியப் புள்ளியாகவும் இருந்துவிட்டால்,
சுங்கக் கட்டணமின்றி கூட உங்களால் செல்ல முடியும் !
அரசியல்வாதிகளின் குடும்பத்தினரை யாரும் இந்தியாவில்
சோதனை செய்துவிட முடியாது.  ஆட்சியையும், பதவியும்
இருந்துவிட்டால், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்
கூட ஏவலாளிகளாக மாற்றி விடமுடியும் இங்கு !  இதை
மக்களாட்சியின் மகத்துவம் என்று வேறு பெருமைப்
பட்டுக் கொள்வோம் !


அமெரிக்கா சொல்லித்தரும் பாடமென்ன ?
" நீங்கள் எங்களை மட்டுமல்ல, இந்தியாவில் நுழையும்
அயல்நாட்டவர் அனைவரையும் சோதனை செய்யுங்கள்.  
அது ஹிலாரி கிளிண்டனாகவும்
இருக்கட்டும், நீங்கள் உங்கள் அதிகாரிகளை
அவர்கள் கடமையை வழுவாமல் செய்ய விடுங்கள்"
குட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள், நமக்குத்தான்
மண்டையில் ஏறமாட்டேன் என்கிறது ! //

வாசித்தீர்களா, ஊடகங்களின் தலையாய கடமை என்பது
இந்தப் பண்புதான் !  நானும் இதையேத்தான் மனதில்
சிந்தித்து வந்தவன், நாம் விரும்பும் ஒன்றை நமக்கு
பிடித்தவர்கள் வழியாக வெளிப்படும்போது
நமக்கு சந்தோஷம் பொத்துக் கொண்டுதான் பொங்கும் !



                                         -நன்றி-

























   

























   

கருத்துகள்

  1. உங்களுக்கு பொங்கிய சந்தோஷத்தில் எங்களுக்கும் பங்கு தாருங்கள் தலைவா! இந்த கட்டுரையை படிக்கும் சிலர் இது ஒரு வித்தியாசமான கோணத்தில் அணுகப்பட்டு எழுதியது என்று நினைக்கலாம்.அவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்,"அய்யா சாமிகளா! இதுதான் எதார்த்தம்! இதைக் கற்றுக்கொடுக்கத்தான் இங்கே யாரும் இல்லை. கற்றுக் கொள்ள நம்மவர்களுக்கு ஆசையும் இல்லை!"......

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!