வெள்ளி, 29 ஜூன், 2012

கயாஸ் தியரியும், நானும், உடன் கொஞ்சம் மழையும் !

பட்டாம்பூச்சி விளைவை அனுபவித்திருக்கிறீர்களா ?

தலையில் கொம்புகள் முளைத்த கிங்கரன் ஒருவன், சாட்டையால் இருவரைக் கண்டபடி விளாசிக் கொண்டிருந்தான்.  அருகில் சென்ற என்னை நோக்கி, "கொஞ்சமாய் மாரி பொழிந்தால் போதும், ஒருவன் கவி புனைய தொடங்கிவிடுகிறான், மற்றவனோ கட்டுரையை ஆரம்பித்துவிடுகிறான், அதனால்தான் இந்தக் கசையடி,   நீ.....?" 

"நான் கதை எழுதப்போகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தலைதெறிக்க ஓடுகிறேன், "பிடி, பிடி"...என்றவாறு பல கிங்கரர்கள் துரத்த, அதை டிவியில் பார்த்து, பாலகணேசனும், விஜய்யும், ப்ரவீணும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.  திடுக்கிட்டு கண்விழித்தேன், 'இதென்ன கோரமான ஒரு கனவு ?'  மதியத் தூக்கத்தில் வந்த இந்தக் கனவு பலித்து கிலித்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டு, வண்டியை எடுத்து கலெக்சன் வேலையைப் பார்க்கக் கிளம்பினேன்.

சில கிலோமீட்டர் சென்றிருப்பேன், திடீரென ரோட்டில் கருமை அப்பியது.  என்னடா இது என்று தலை உயர்த்தி பார்க்கிறேன், ஒரு ராட்சஷ கார்மேகம் வானத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தது.  குளிர் காற்று லேசே வீச ஆரம்பித்ததும் உடன் சாரலாய்ச் சிறுதூறல் விழுந்தது.  தலைக்கவசம் இருந்ததால் இதை மதிக்காது தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தேன்.  ஆனால் சில நொடிகளில், தூறல் பெருமழையாய் மாறி என்னைப் பார்த்து கெக்கலித்தது.  

பயணத்தின்போது, மழை என்றாலே நனைந்து அதை  அனுபவிப்பது என் வழக்கம்,  ஆனால் விக்கிரமாதித்தன் வேதாளத்தை  சுமப்பது போல் எப்போது லேப்டாப்பையும், செல்போனையும் சுமக்க ஆரம்பித்தேனோ, போச்சு இயற்கையோடு குலாவ முடியாமல், கூரை தேடி ஒதுங்க முற்பட்டேன்.   நனைய, நனைய பயமேறி, ஒருகட்டத்தில் வண்டியை ஓரம்கட்டி ஒதுங்கினேன் அங்காடி வாசலில். 

ஓர் அழகான பெண்ணுடன், சில பேரிளம்பெண்களும் முன்னரே அங்கு தஞ்சம் பெற்றிருந்தனர். அந்த அழகி, ஆஸ் யூசுவல் கையை நீட்டி மழைத்துளிகளை கையால் தட்டி அதை மேலே அனுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தாள்.  'இவளுங்க சினிமா பாத்துதான் இது மாதிரி செய்கிறார்களா, இல்ல இவளுங்களப் பாத்து அவனுங்க எடுக்கிரானுகளா ?'  என்று மைன்ட் வாய்சில் என்னிடமே கேட்டுக் கொண்டேன்.  அவள், மழை வேகம் பிடிக்க பிடிக்க இன்னும் உன்மத்தம் ஏறி என்னை நெருக்கி நின்றாள்.  சரி கொஞ்சூண்டு அழகாருந்தா இப்படித்தான் ஆகும் என்று என்னை வஞ்சிப்புகழ்ந்தவாறு, நானும் ரசித்தேன், மழையை !

அப்போதுதான் அது நடந்தது, தூரத்தில் ஒருவன் முக்கால் பேன்டுடன், அழுக்கேறிய சட்டையுடன், பரட்டைத் தலையில் ஒரு பேப்பரை பிடித்தவாறு, கணுக்கால் அளவு நிறைந்த நீரில், தத்தக்கா பித்தக்கா என்று வந்துக் கொண்டிருந்தான்.  'கள்ளுண்ட மிலேச்சன்' போல என்று நினைத்தேன், அருகில் வரவும்தான் தெரிந்தது அவன் கொஞ்சம் பிறழ்ந்தவன் என்று.  அந்தப் பெண் அவனைக் கண்டதும் தன் ஆட்டத்தை மிதப்படுத்தினாள்.  எங்கிருந்தோ வந்தவன் எங்கோ பார்த்துப் போய்க் கொண்டே இருந்தவன் அந்த மழையிலும் என் நெற்றியை உற்றுப் பார்த்து அதில் எழுதியிருந்ததைப் படித்தது போல, என்னை நோக்கி வந்து 'சலாம் பாய்' என்றான்.  

அவ்வளவுதான், புறாக்கூட்டத்துள் வேகமாக ஓடினால் அந்தப் புறாக்கள் என்ன செய்யுமோ, அதை அந்தப் பெண் கூட்டமும் செய்தது.  பொதுவாய் நான் பிச்சையிடுவதில்லை, திடமான சோம்பேறிகளுக்கு பிச்சையிடுவதையும் கண்டிப்பவன், இவனோ, "பாய்... சாய்" என்று கையேந்தினான்.   சில நொடிகள் அவனை உற்றுப் பார்த்தேன், அனிச்சையாய் கைகள் பேன்ட் பைகளை துழாவிக் கொண்டிருந்தது.  கொத்தாய் சில்லறைக் காசுகளை அள்ளி அவன் கையில் திணித்தேன்.   மீண்டும் 'சலாம் பாய்' என்று சொல்லிவிட்டு தண்ணியில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.  

மழைவேகம் குறைந்தாற்போல் தோன்றவே, ஹெல்மெட்டை போட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணி கிளம்புகிறேன், மழை அறவே இல்லை.  கொஞ்ச தூரத்தில் தெரிந்த ஒரு டீக்கடையில், அவன் ஒரு கையில் வாழைக்காய் பஜ்ஜியும், மறு கையில் டீயுமாய்த் தெரிந்தான் !!!

அடடா கதை எழுதாம கட்டுரை எழுதிட்டனே ?  இருங்க கதையோட வரேன், அல்லோ, அன்பிரண்ட்லாம் பண்ணக் கூடாது, இனிமதான் வேட்ட ஆரம்பம், பொறுங்க :)              ..............(1 / 2 )(2 / 2)

ஏதோ ஒரு தைரியத்தில் சொல்லிவிட்டானே ஒழிய, அவனால் ஒரு ரூபாயைக் கூட புரட்டவோ, சம்பாதிக்கவோ, கடன் பெறவோக் கூட முடியாது.  அவன் போன் என்றாலே, ஷெனாய் இசையில் சோககீதம் ஒலிப்பது போல ரிங்டோனை ஒரு
நண்பனும், 'மம்மீ...டாடி ன்னு சொல்லி இனி பிச்சை எடுங்க' ன்னு கவுண்டமணி குரல் ஒலிப்பது போல டோனை வைத்திருப்பவனையும் அவன் அறிவான் !  ஆனாலும் மதிவாணனுக்கு அவசரமாக
ஒன்பதாயிரத்து ஐநூறு ரூபாய் தேவை.  
கஜேந்திரனிடம் ஸ்பீட் வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பதில், சொதப்பிய காரணத்தால் ஏற்கனவே அவனுடைய 'ஆக்டிவா' பறிபோயிருந்தது.  அதிலும் ட்யு பாக்கி இருந்ததால் எல்லாம் போக, கொடுக்க வேண்டியிருந்த ஆறாயிரத்து ஐநூறே இப்போது மூன்றாயிரம் குட்டி போட்டு வளர்ந்திருந்தது.

'நீ இந்தப் பணத்த தருவியா தரமாட்டியாடா தேவ** *** என்ற கஜேந்திரனின் பெருங்குரலுக்கு  அதிர்ந்து 'கொஞ்சம் பொறுங்க தல' என்றான்.

"*** தல, இந்த கூழக் கும்புடுல்லாம் வேற எங்கயாவது வச்சுக்கோ......த்தா எப்ப தருவன்னு சொல்லுடா பாடு" என்றான் கஜா.

"சனிக்கிழம முப்பதாம் தேதி தரலன்னா என்ன இங்கயே வெட்டிப் போடு தல" என்றான் மதிவாணன்.    

"உன்ன வெட்டிப்போட்டுட்டு நாங்க கொடுத்த பணத்துக்கு **** போணும்ல்ல ?  சரி மதி, போதும் முப்பதாம் தேதி வருவேன், கொடுக்கலன்னா நான் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது"  கஜேந்திரன் சொல்லிப் போய்விட்டாலும். அவன் என்ன செய்வான் என்று சுஜாதாவிற்குப் புரிந்துப் போனது.

"ஏங்க, சங்கர் தரேன்னு சொல்லிருக்காரா என்ன ?"

"ஏற்கனவே அவன்கிட்ட எக்கச்சக்கமா வாங்கியாச்சு, எங்க அடுத்தும் கேட்டுருவேனோன்னு நினச்சு, என் நிலம தெரிஞ்சும், வேணும்னே போன் போட்டு, அந்த பாக்கிய கொடேன் மச்சான்ன்னு சாவடிக்கிறான்"

"அப்புறம் எந்த நம்பிக்கைல இப்படி உறுதி சொல்றீங்க ?'

"ஏண்டி, அவன் பேச்சும், பார்வையும், கேட்டுட்டே இருக்கச் சொல்றியா ?" விசுக்கென்று அவள் அழத் தொடங்கினாள்.  "பொறுடி, ட்ரை பண்ணுறேன், அழாத" என்று அவள் தலை நீவி அணைத்தான்.
 
பத்தாயிரத்தைக் கூடவா புரட்ட முடியாது, அத்தோடு அவன் தரித்திரம் தீர்ந்து விடுமென்றால்தான் யாராவது உதவுவார்களே ?   கோடி ரூபாய் கொடுத்தாலும் அவன் கடன் தீராது, கடனை
அடைக்காமலே கூட அதை ஷேர் மார்க்கட்டிலோ, அனுபவமில்லாத வியாபாரத்திலோ போட்டு, சில நாட்களுக்குள் தொலைத்து, மீண்டும் யாரிடமாவது கடனுக்கு கையேந்துவதில் வல்லவன் அவன். சுஜாதாதான் பாவம், அவனில்லாத சமயங்களில் வரும் கடன்காரர்களிடமெல்லாம் வசவையும், கீழ்த்தர பார்வைகளையும் பெறுபவள்.

நூறுமுறையாவது ராஜகோபாலுக்கு போன் போட்டிருப்பான், ம்ஹ்ம் எடுக்கனுமே அவன்,  ஆனால் அவனே அழைத்தான்.

"மதி ஒரு மீட்டிங் மச்சி, என்னடா பிரச்சினையா ?"

"ஆமாம் ராஜூ கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா, இல்லன்ன நானும் சுஜாவும் மருந்து குடிச்சு...." அதற்க்கு மேல் கேவல் மட்டுமே வெளியானது.

"டே, மாசக்கடைசிடா......, சரி இன்னிக்கு திங்கள், நீ புதன் கிழம போன் பண்ணு, மச்சான் என்னால முடிஞ்ச வரைக்கும் பாப்பேன், முடியலன்னா டார்ச்சர் பண்ணக் கூடாது, ஓகே வா,  பை டா"

புதன்கிழமை காலை, செல்போன் எடுத்துப் பார்த்தான் மதிவாணன். பத்து மிஸ்டு கால்ஸ், எல்லாம் கஜேந்திரனின் போன்களில் இருந்து.  போனில் சத்தத்தை மியுட் பண்ணியிருந்ததால் தெரியவில்லை. பார்த்துக் கொண்டிருந்த போதே மீண்டும் அழைப்பு, போனை எடுத்து 'தல' என்றான் மதி.

"த்தா போன எடுக்க மாட்டல்ல நீ ?"

"இல்ல தல, போன் கொஞ்சம் ரிப்பேர்"

"ம்மாள, இன்னிக்கு வுட்டா இன்னும் ரெண்டே நாளு, பணத்த ஏற்பாடு பண்ணிடு, இல்ல தூக்குப் போட்டு செத்துப் போய்டு, வாய்தா மட்டும் கேட்ட ?" போன் கட்டானது.    

ராஜகோபாலுக்கு போன் போட்டால் நிச்சயம் சாக்கு போக்கு சொல்லி கழட்டிவிடவே செய்வான், அவன் ஆபிஸ்க்கு நேர்ல போயி கொஞ்சம் சீன போட்டுப் பார்ப்போம் என்று மனதில் நினைத்தவாறே, ரகு போனுக்கு டயல் செய்தான்.

"மச்சி, மச்சி கொஞ்சம் சேகர் எம்போரியம்கிட்ட  என்ன டிராப் பண்ணிடேன்"

"யே...லூசு நான் கொச்சின்ல இருக்கேன், வை, இது யார் நம்பரு, நம்பர மாத்திட்டே இரு, நான் ஏதோ என் பாஸ் கூப்பிடுறாருன்னு அடிச்சி, புடிச்சி எழுந்தா, என்ன துணி எடுக்கப் போறியா ?"

"ராஜூ ஆபிஸ்க்கு போலாம்னு பாத்தேன்"  எதிர் பக்கத்தில் சத்தம் வாராததில் சந்தேகித்து பார்த்ததில், அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டு, செல்போன்  ஸ்க்ரீன்சேவரில் லட்சுமி கைநிறைய பொற்காசுகளைக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

கோடம்பாக்கம் பஸ்சில்தான் போகவேண்டும் போலிருக்கிறது, ஒரு பத்து ரூபாவ மிச்சம் பண்ணி 'மானக்சந்த்' வாங்கிருக்கலாம்.  வந்ததெல்லாம் மிதவை பேரூந்தாகவும், குளிர்சாதனப்....ஆ, வெள்ள போர்டு இந்தப் பஸ் கோடம்பாக்கம் போகுமே ? என்று தாவி ஏறினான் மதிவாணன்.
 
மதிவாணனுக்குத் தெரியாத இரண்டு விஷயங்கள் எனக்குத் தெரியும்.

1 .)  ராஜகோபால் சென்னையில் இன்று இல்லை, அவன் அலுவல் நிமித்தமாய் கௌஹாத்தி சென்றிருக்கிறான், திரும்ப பத்து நாட்களுக்கும் மேல் ஆகலாம்.

2 .)  அவன் ஏறிய பதினேழு எம் பஸ் இன்னும் சில நிமிடங்களில், ஜெமினி மேம்ப்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கப் போகிறது. 
அந்தப் பேரூந்துப் பின்னால் பட்டாம்பூச்சி ஓன்று அதைத் துரத்தியவாறு பறந்துச் சென்றது !!!  (2 /2 )

                                                                - END -
     
       
        

     
     

    
    

    

  
 

3 கருத்துகள்:

  1. அந்த பொண்ணு மழையில விளையாடியதை விட நீங்க வார்த்தைகைளில் அதிகம் விளையாடி இருக்கிறீர்கள்! என் பெயரும் உங்கள் கதையில் வர என்ன தவம் செய்தனை? இரண்டாம் பாகத்தின் வேட்டைக்கான நீண்ட அடித்தளத்தை இதில் காண முடிகிறது! சீக்கிரம் பாஸ்........

    பதிலளிநீக்கு
  2. நன்றி கணேசன் & பெயரில்லா நண்பரே :-)

    கயாஸ் தியரிப்படி அவனுக்கு பத்தாயிரம் கிடைத்து விடுகிறது. அதைத்தான் தொடர்ந்து செல்லும் அந்தப் பட்டாம்பூச்சி பார்த்தது !!!

    பதிலளிநீக்கு