திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நான் உளறிக்கொண்டே இருப்பேன் !!!

சுடச்சுட மட்டன் பிரியாணியும், உடன் கத்தரிக்காய் மற்றும் வெங்காயப் பச்சடி, முடிவாய் சாப்பிட பிரட்ஹல்வா என்று, இன்றைய மதியத்தை சிறப்பாய் ஆக்கிய நண்பனைக் கட்டிபிடித்து வாழ்த்துக்களை பரிமாறிவிட்டு, அப்படியே குட்டித்தூக்கம் போட்டிருந்தால் நிச்சயம் நிம்மதியாய் இருந்திருப்பேன், ஆனால் நம்ம அரசியல்வாதி லகுடபாண்டிகள் எப்போது நம்மைச் சுகமாக உலவ விட்டிருக்கிறார்கள் ?

'கொஞ்சமாய்த் திருடிக் கொள்ளுங்கள் என்று இருக்கிற ஓரிரு நல்ல அதிகாரிகளையும் லஞ்சம் வாங்க ஊக்குவித்த ஒன்று.....

'தீர்ப்பை விலை கொடுத்து வாங்கலாம்' என்று பணக்காரத் திருடர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய மற்றொன்று.....

இதெல்லாம் ஓல்டு நியூசாச்சா,  இன்னிக்கு ஒன்னு ரம்ஜான் ஸ்பெஷலா உளறிருக்கு,  உளறின நாயகர் பெயர் 'பேனி பிரசாத் வர்மா' அவர் உதிர்த்த முத்துக்கள் 'விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து அதனால் அவர்கள் லாபம் அடைவார்கள் என்பதால் பணவீக்கம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது'

என்னங்க, இவர் விவசாயிங்க, நல்லாருக்கனும்னு ஆசப்படுறாரு, அவரப் போயி தப் சொல்றீங்களேன்னு யாராவது கேட்டீங்கன்னா, நீங்க, 'பணவீக்கம் என்றால், நிறைய பணம் வைத்திருத்தல் போல' என்று புரிந்துக் கொள்பவராய்த்தான் இருக்க வேண்டும். வேறவழியில்லாம, உங்களுக்கு இங்க பணவீக்கம் பத்தி சொல்லியாகனும் சிம்பிளா....
பணவீக்கம்( INFLATION ) பற்றித் தெரிந்தவர்கள். இந்தப் பத்தியை ஸ்கிப் பண்ணி, அடுத்த பத்திக்குப் போகலாம்.  உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு வளத்தையும் இந்த பணவீக்கம் வைத்தே நாம் எளிதாய் அறிய முடியும். பணவீக்கம் மைனசில் இருந்தால் நாடு அபரிமித உற்பத்தியில் இருக்கிறது, ஆனால் கொள்வாரில்லை என்றும் அர்த்தப் படுத்திக்கொள்ளலாம் (இதில் ஏழை, மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிக பாதிப்பிராது) மாறாக, பணவீக்கம் மிகவும் உயர்ந்து அபாய எல்லையைத் தொட்டால், நாட்டில் உற்பத்திக் குறைந்து, அதிக விலையில்தான் பொருள் கிடைக்கும், இது ஒருநாடு, பொருளாதார வீழ்ச்சியில் இருக்கிறது என்று அர்த்தம்.

 
அத்தியாவசிய ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும், மத்தியஅரசு மற்றும் ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்பட்ட விலைக்குறிப்புகள் இருக்கும், இது சந்தை நிலவரத்திற்கேற்ப, ஏறவோ, இறங்கவோ செய்யும். வாராவாரம் வியாழனன்று முந்தைய வாரச் சந்தை நிலவரங்களை வைத்து இந்த INFLATION பற்றி அறிவிப்பார்கள். இயற்கை ஏமாற்றினாலோ, அல்லது அரசியல்வாதிகளும், அரசதிகாரிகளும் சேர்ந்துக்கொண்டு, பதுக்கல்காரர்களை வளரவிட்டாலோ, நாட்டில் விலைவாசி தாறுமாறாய் உயரும், அம்மாதிரிக் கட்டங்களில் பணவீக்கம் மேலும், மேலும் வீங்கும். எனவே அளவுக்கு மேல் வீங்கும் பணம் நமக்கு பெரிதும் ஆபத்து.
 
இம்முறை, தென்மேற்குப் பருவமழை கொஞ்சம் சொத்தப்பத்தான் செய்திருக்கிறது, இதனால் விவசாயம் உற்பத்தி எல்லா இடங்களிலும் சரிசமமாக இருக்காது, அதாவது கர்நாடகத்தில் விளையாதது மராட்டியத்தில் விளையலாம், உ.பி யில் ஏமாற்றிய மழை, ராஜஸ்தானில் நன்கு பெய்து அங்கு மட்டும் கோதுமை விளையலாம். இதனால் பரவலாய் விளையாத சில விவசாய உணவுப் பொருட்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும், இதனால் விளைச்சலைக் கொடுத்த விவசாயிக்கு எப்போதும் கிடைக்காத விலை கிடைத்து அவன் வளமாவான், இதுதான் நம்ம பேதிவர்மா கூறிய கருத்துக்கு அடிப்படை.
 
அப்போது மழை ஏமாற்றியோ, அல்லது இதுவரை அவனுக்கு எந்த வசதியும் செய்துக் கொடுக்காத அரசு ஏமாற்றியோ, விளைச்சலைத் தரமுடியாத விவசாயியின் கதி ? அவனுடையத் தேவைக்கே அவனால் உணவை உற்பத்தி செய்ய முடியாத நிலையில், வீங்கிய பணவீக்கத்தில் அவனால் என்னத்தான் செய்ய முடியும் ?
 
 
முடியுதோ இல்லையோ, பொறுப்பில் இருக்கும் ஒருவன் தன்னுடைய வார்த்தையை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துத்தான் பேசவேண்டும். எங்களிடம் போதிய உணவுத் தானியங்கள் இருப்பு இருப்பதால் பணவீக்கமே இருக்காது என்றுதான் பேசவேண்டும், பதுக்கல்காரர்களைக் கட்டுப்படுத்த இதுபோன்ற பேச்சுக்கள் மட்டுமே உதவும், பணவீக்கம் வரும் என்று உளறினால் அவன் பதுக்கத்தான் தயாராவான். ஆனால் அப்படிச் சொல்கின்ற அரசியல்வாதிகள் எல்லாம் இப்போது கிடையாது, அவர்கள் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கையோடு மறைந்து போய் விட்டார்கள்.
 
ஆக, பணம் வீங்கினால் இழப்பு, பர்ஸ் வீங்கினால் மட்டுமே சிறப்பு (வீங்கின பர்ஸ பொண்டாட்டி/ காதலி கண்ணுல படாம வைக்கிற திறமையைப் பொறுத்து)
 
 
 
 
 
                                    THE END

1 கருத்து: