புதன், 5 செப்டம்பர், 2012

கப்பலோட்டிய தமிழன்


இன்று கப்பலோட்டிய தமிழன் பிறந்தநாள்.  இவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.  எனினும், இவரைப் போன்ற நிஜக் கதாநாயகர்களைப் பற்றி, பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.  ஒன்றிரண்டு தெரியாதவர்கள் கூட அறிந்துதான்  ஆக வேண்டும் என்பதற்காக இந்த மிகச் சுருக்கமான பதிவு.  (பிறந்தநாள் அன்றாவது நினைக்கிறார்களே என்று அந்த ஆத்மா நிம்மதியாய் உலவட்டும்)

பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிகளிலும், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பங்களிலும்தான், நம் நாட்டில் சுதந்திர வேட்கை வீறு கொண்டது.  விடுதலைப் போரில், கோபாலகிருஷ்ண கோகுலே, பாலகங்காதர திலக், போன்ற முன்னோடி வீரர்களின் போட்ட,  பலமான அஸ்திவாரத்தில், மோகன்தாஸ், ஜவஹர்லால், பாரதியார், நேதாஜி போன்றோர் வீரமான கட்டிடத்தை எழுப்பினார்கள்.

மகாத்மா, வெள்ளையனுக்கு எதிரான போரில்,  தன்னுடைய புதுப் புது அஸ்திரங்களை எய்துக் கொண்டே இருந்தார்.  அதில் ஒரு சிறந்த 
அஸ்திரம்தான் சுதேசிக் கொள்கை.  அது சரி, சுதேசி என்றால் என்ன ? 
சுதேசி = சுய தேஷ் = சொந்தநாடு அவ்வளவுதான்.

வெள்ளையன், நம்முடைய பாரம்பரிய பயிர் முறைகளை பயிரிட, விவசாயிகளிடம் தவிர்க்கச் சொன்னான்.  மறுத்தவர்களை மிரட்டினான், சமயங்களில் அழித்தான்.  மாறாக, பருத்திகளை விதைக்கச் சொன்னான்.  ஏக செலவு செய்து விளைவித்த விவசாயிக்கு, குறைந்த பணத்தைக் கொடுத்துவிட்டு, அந்தப் பருத்தியை வாங்கிச் சுத்தம் செய்தான், அதை நூலாக்கினான்.  (இப்படித்தான் குஜராத்திலும், மும்பையிலும், கோயம்புத்தூரிலும் நிறைய ஸ்பின்னிங் மில் உருவாகின)

பிறகதை, லண்டனுக்கு கப்பல் கப்பலாய் ஏற்றி, அங்கிருந்து அதை நவீன ஆடைகளாக மாற்றி, இங்கு கொண்டுவந்து, அதிக விலைக்கு விற்று,  கொள்ளை கொள்ளையாய் சுரண்டினான்.  அவனிடம்,  மெஷின் தொழில்நுட்பம் இருந்தது,  நாமோ அப்போது கைகளால் ராட்டையைச் சுற்றி நூல் தயாரித்தோம்.  இது கைத்தறி.  இந்த ஆடைகள் பார்க்க அவ்வளவு பொலிவாய் இருக்காது. 

ஆனால், மோகன்தாஸ் வெள்ளையன் நாட்டு ஆடைகளை உடுத்தாது,
இந்த கைத்தறி ஆடைகளை மட்டுமே இந்தியர் உடுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.  இது சுதேசிக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.  வெள்ளையன் நம்மிடமிருந்து சம்பாதிப்பான் என்றால், அதை எல்லாவற்றையுமே புறக்கணிக்குமாறு விடுதலைப் போர் தலைவர்கள் அறிவுறித்தினார்கள்.  

சிதம்பரனார் தூத்துக்குடியில் மிகப் பெரும் பணக்காரர் வீட்டில் பிறந்த சீமான்.  "இந்த எழவெடுத்த விடுதலைப் போரெல்லாம் நமக்கெதற்கு" ?  என்று மற்ற பணக்காரர்கள் மற்றும் அவரைப் போன்ற பிற உயர் சாதியினர் வெறுக்க,  இவர் மட்டும் மோகன்தாஸ், திலகர், பாரதி போன்றோரின் தாய்நாட்டுப் பற்று பேச்சுக்கு மயங்கினார்.  விளைவு, முழுமூச்சாய் விடுதலைப் போரில் ஈடுபட்டார்.
 
சுதேசிக் கொள்கை பெரிதும் வெற்றி பெற வேண்டுமானால், எல்லாத் துறைகளிலும் இருந்து, வெள்ளையனை இந்தியாவில் இருந்து நீக்க வேண்டுமென சிதம்பரனார் விரும்பினார்.  இந்தியாவில் இருந்து, ஏகபோக ஏற்றுமதி கப்பல் மூலமே நடைபெறும்.  ஆனால், உலகம் சுற்றும் பெரும் கப்பல்கள் எல்லாமே, வெள்ளையனுக்குச் சொந்தமாக இருந்தது.  அதிலும், தூத்துக்குடியில் இருந்து கொழும்பு செல்வது என்பது ஒரு பேச்சுக்கு, சென்னை பாரிமுனையில் இருந்து தாம்பரம் செல்ல,  நடந்தால் எவ்வளவு நேரம் ஆகுமோ, அவ்வளேவே ஆன ஒரு குறைந்த தொலைவு போல.  ஆனால்,  இதற்கும் வெள்ளையன் கம்பனி கப்பல்தான் சென்று வந்துக் கொண்டிருந்தது.  

பார்த்தார் சிதம்பரனார்,  'சுதேசி கப்பல் கழகம்'  என்று ஒரு நிறுவனத்தை பார்ட்னர்ஷிப் உதவியின் மூலம் தொடங்கி,   கப்பல்களை வாங்கி, இதே தடத்தில் இயக்கினார்.  அப்போது மக்களிடத்தில் விடுதலைத் தீ பற்றி எரிந்ததால், இவருடைய கப்பலில் செம வியாபாரம்.  வெள்ளையன் கம்பனி அந்தத் தடத்தில் போணியாகாமல், போண்டியாகும் நிலை ஏற்பட்டது.  சரி, நம்மாட்களை எப்படி வீழ்த்துவது என்று தெரியாமாலா அவனால் நம்மை இருநூறு வருஷங்களுக்கும் மேல் ஆள முடிந்தது ?  இவ்வளவு நாள் சம்பாதித்ததை முற்றிலுமாய் இழக்க விரும்பாமல், கொஞ்சமாய் இழக்கத் துணிந்தான்.  சிதம்பரனார் கம்பனி கப்பலை விட எங்கள் கப்பலில் வாடகை பாதிதான் என்று கட்டணத்தை அதிரடியாய்க் குறைத்தான்.
 

ஹிஹி, அப்போ நம்மாளுக காசுன்னா (வேணாம் விடுங்க, இப்ப மட்டும் என்ன வாழுதாம் ?) பேயாப் பறப்பாக.  அதனால  மறுபடியும்  எல்லோரும் வெள்ளைக்காரன்  கப்பலுக்கே போய் விட்டனர்.  சிறிது, சிறிதாக நட்டம் வர,  சுதேசி கப்பல் கழக பார்ட்னர்ஸ், தங்கள்  பங்கை  பிரித்து  தந்து  விடுமாறு, சிதம்பரனாரை மிகவும் நெருக்கினர்.  வெள்ளையன் சூழ்ச்சி ஜெயித்தது.  கப்பல் மற்றும் நில புலன்களை விற்று, சிதம்பரனார் பெரும் நட்டத்தை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், சக இந்தியர்களால் அவமானமும் அடைந்தார். 

பிறகு, தேசத்துரோகம்(!) சுமத்தப்பட்டு, சிறையில் செக்கிழுத்தார்,
கல்லுடைத்தார் என்பதெல்லாம் நீங்கள் அறிவீர்கள்.  சரி, எத்தனையோ
விடுதலைப் போராளிகள், சிறையில் துன்பம் அனுபவித்துதானே
இருப்பார்கள் ?  இவரை மட்டும் ஏன் இத்தனை நினைவு
கூறுகிறோமே ?  என்ற கேள்விக்கான விடை. 

ஒரு செல்வந்தர்,  சுதந்திரம் தேவையே படாத ஓர் உயர்சாதிக்காரர், தன்னுடைய நாட்டுக்காக  சகலத்தையும்  இழந்து  அவதிப்பட்டாரே,  இந்த  ஒரே காரணம்தான் !    ஆனால், வெள்ளைக்காரன் கண்ணுக்கு குற்றவாளி என்றால்  அவன்  அக்கியுஸ்ட்  மட்டுமே, அவன்  பணக்காரன், உயர்சாதி, படித்தவன் எதுவானாலும் இருக்கட்டும் எல்லோருக்கும் ஒரே தண்டனை முறைகள்தான்.  வெள்ளைகாரனிடமிருந்து எதைக்
கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதை விட்டுவிட்டு, எதைக்
கற்றிருக்கக் கூடாதோ அதை மட்டும் இன்னும் தொடர்கிறோம். 

சரி, போதும் இப்ப எதுக்கு இதெல்லாம், இதப் படிக்காமலா, இவ்வளவு
மேல வந்திருப்போம் எனப் ப்ராக்டிகல் சிந்தனையாளர்களுக்கு மட்டும்
முடிவாக சில வேண்டுகோள்கள் (நானும் இதில் அடக்கம்) :-

1 ) நீங்கள் தாராளமாக KFC சிக்கன் சாப்பிடுங்கள், ஆனால் அவன்
முனியாண்டி விலாசை மூடச் சொன்னால், அதை ஆதரிக்காதீர்கள் !

2 )  கோக், பெப்சி தாராளமாக குடியுங்கள், அதற்காக மோர், ரஸ்னா, கூழ்,
குடிப்பவனை இழிவாக கருதாதீர்கள் !

3 )  நெல், கோதுமை, பயிர் வகைகள் விவசாயம் நம்முடைய
மண்ணுக்கு ஏற்ற பயிர் வகைகள்.  அவன் சோயா எண்ணை  சாப்பிடுவதற்காக, நம்மை சோயா வை, விதைக்கச் சொன்னால்,
காசுக்கு ஆசைப்பட்டு, மண்ணை சத்திழக்கச் செய்யாமல், சுழற்ச்சி
முறையில் பயிரிடுங்கள்.

4 )  ஆடி கார் அழகு, அம்பாசிடர் கார் அவமானம் இல்லை !

5 ) PIZZA , BURGER பகட்டுதான், ஆனால்  இட்லி, புட்டு, இழிவில்லை.

இன்னும் கம்ப்யூட்டர், செல்போன், இன்டர்நெட், ஐபாட் பத்தியெல்லாம்
ஏம்பா சொல்லல ன்னு கேக்காதீங்க, சுதேசியை அழிக்க நினைக்கிற
விதேசி (வெளிநாடு) க்கு எதிராத்தான் போராடனும், எல்லாத்துக்குமே
இல்ல.
                                                      


                                                      --- THE END ---

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக