ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வா வா வால்மார்ட் ........!

வால்மார்ட் வருகையால் திவாலாகப் போவது ரிலையன்ஸ் 'ப்ரஷ்' , நீல்கிரிஸ், மோர், பிக்பஜார், இன்னபிற பெரிய 'டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்'  போன்ற ஜாம்பவான்களின் கடைகள் மட்டுமே.    பிறகெதற்கு சில்லறைக்கடை வியாபாரிகள் வாழ்வு  நாசமாகும், விவசாயிகள் அழிவார்கள்,  மக்கள் துயருருவார்கள் என்ற கூக்குரல்கள் ?   அது உண்மையா...........பார்ப்போமா ?


வால்மார்ட் என்பது உலகத்தின் பெரிய டிபார்ட்மெண்டல் கடைகள்
அமைக்கும் ஒரு நிறுவனம்.  கூகுள் சர்ச்சில் நீங்கள் தேடிய எல்லாமே
ஏறக்குறைய கிட்டிவிடுமல்லவா ?  அதுபோல, இந்தக் கடையில்
உங்களுக்கு வேண்டுவன உலகில் எந்த மூலையில் இருந்தும்
கொண்டுவந்து கொடுக்கப்படும். 

எத்தனை கார்கள், எத்தனை பைக்குகள்
வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ள பார்க்கிங் வசதி இந்தக் கடையில் இருக்கும்.  பொருட்களை நீங்கள் கிஞ்சித்தும் சுமக்காமல், கேட்டதை உங்கள் காலடியில் வந்து கொட்ட பணியாட்கள் டை கோட்டுடன் வலம் வருவர்.  எல்லாக் கார்டுகளும் ஏற்கப்படும்.  வங்கி உத்திரவாதம் கொடுத்தால் உங்களுக்கு கடனும் கொடுக்கப்படும்.  டோர் டெலிவரி கிட்டும்.  ஆரம்பக் கால சலுகை பண்டிகைகாலச் சலுகை, ரெகுலர் கஸ்டமர், கோல்டன் கஸ்டமர் என்று பல டிஸ்கவுண்ட் ஆப்ஃபர் கிட்டும்
அடடா இதில் எதுவும் புதிதாய் இல்லையே, ஏற்கனவே இதுபோல நிறைய பார்த்துவிட்டோமே  என்கிறீர்களா ?  எஸ், இந்த வால்மார்ட் பத்து வருடங்களாக இந்தியாவுக்குள் நுழைய விரும்புகிறது.  எதிர்கட்சிகள் அல்லது கூட்டணிக் கட்சிகள், எதிர்ப்பால்  அதன் ஆசை உடனடியாக நிறைவேறவில்லை.  கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தில், இங்கிருந்த நம்முடைய  நிறுவனங்கள் வால்மார்ட் உத்திகளை கையாண்டு நம்மை ஏற்கனவே அந்தப் பழக்கங்களை நகரங்களுக்குள் புழங்க விட்டுவிட்டன.

ஆனால், வால்மார்ட் உள்ளேவந்தவுடன் கிடைக்கும் முதல் ஆப்பு
இவர்களுக்கு என்று சொன்னேன் இல்லையா ?  அது தவறு (!)
வால்மார்ட் என்பது கடல் போல் பரந்து விரிந்து கிடக்கும் ஒரு கடை.
அது நகரத்தின் முக்கியமான அல்லது மையப் பகுதியில் அமையப்
பெற்றால்தான் வணிகம் சிறக்கும்.  திடீரென அவ்வளவு பெரிய இடம்
எங்கிருந்து உருவாகும் ? 

அம்பானி மூளை அங்கே சிந்திக்கும்.
அம்பானி சுதேசி ஆயிற்றே, நாம் ஏன் வால்மார்ட்டுடன்
போராடக் கூடாது என்று சிந்திக்க அவர் ஒன்றும் வ.உ.சி இல்லையே ?  பேரம் படிந்துவரின் எல்லா ரிலையன்ஸ் கடைகளும் வால்மார்ட்டின் ஒரு பகுதியாய் மாறிவிடும்.  அம்பானி போட்ட  கணக்கு  தப்பாமல்  துட்டு கொட்டும்.   அந்தக் கடை ஊழியர்கள் எல்லோருமே வால்மார்ட் ஊழியராகவும் ஆகலாம், அல்லது இதர கடைகளில் இருந்தும் பேராசை காட்டி அழைத்து வரப்படலாம்.   ஆக, தமிழகத்திலே காலம்காலமாய் வணிகம் செய்துவரும் உள்ளூர் ஒரளவு பெரிய வணிகர்கள் முதலில் பாதிக்கப் படுவர். 

அவர்களுக்கு திடீரென வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும்.
அல்லது வால்மார்ட்டுக்கு நிகராக சம்பளம் கொடுத்து ஆட்களைத்
தக்க வைக்க நேரிடும்.  இதனால் செலவு அதிகரித்து அவர்கள்
பொருட்களை சகாய விலைக்கு விற்க முடியாத நிலை வரலாம்.
வால்மார்ட்டோ சில வருடங்களுக்கு நட்டப்பட்டாவது
தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட குறைந்த விலையில் பொருட்களை விற்க முயலும்.  நம்முடைய ஊர்
கடை முதலாளிகள் தொடர்ந்து நட்டப்பட விரும்பாமல் அல்லது முடியாமல் கடைகளை இழுத்து மூடுவர் !!!

விவசாயிகளும் துன்புறுவார்களா என்ன ?  இல்லை ஆனால் ஆமாம் .
என்னய்யா சொல்ல வர்ற ?  அதாவது ஆரம்பத்தில் தான் விற்கப் போகும்
காய், கனி, தானியங்களுக்கு சிறப்பு விலைகள் கொடுத்து
விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்யும் வால்மார்ட்.
உதாரணத்திற்கு நாசிக்கில் விளையும் வெங்காயம் கிலோ பத்து
ரூபாய் கொடுத்து உள்ளூர் வியாபாரி விவசாயிடமிருந்து
வாங்குவான் என்றால் வால்மார்ட் கிலோ பதினைந்து கொடுத்து வாங்கும்.  ஆனால், வணிகத்தை தன்வசமாக்க அதை பனிரெண்டு ரூபாய்க்கு விற்கும்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.  நாசிக் வியாபாரியும் காலி,  அவனிடம் வாங்கி விற்கும் சென்னை வியாபாரியும் காலி.

 
முதலில் கொஞ்சம் பணக்கார வணிகர்கள் வாழ்வில் நெருப்பு வைத்த
வால்மார்ட், இப்போது அவர்களை விட குறைந்த வணிகம் செய்பவர்களையும் சிதைக்கிறது.  இப்படியே கொஞ்சக் காலம்
போனபின்னர், அந்த நாசிக் விவசாயிகளிடம் வெங்காயம் கொள்முதல் செய்யும் ஒரே நிறுவனமாக வால்மார்ட் இருக்கும்.  பருவமழைக் குளறுபடியால் வெங்காயம் உற்பத்தி குறைந்து விட்டது என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், அப்போது மார்க்கட்டில் விலை கூட
வேண்டுமல்லவா ?  வால்மார்ட் சர்வாதிகார நிலை எய்துவிட்டால்
அதே பதினைந்துதான் கொடுக்கும், ஆனால் தட்டுபாட்டை பயன்படுத்தி
போட்டியற்ற வணிகத்தில் கிலோ நூறு ரூபாய்க்கு நம்மிடம் விற்கும்.

படிப்படியாய் ஆப்புகள் விவசாயிக்கும் மக்களுக்கும் வைக்கப்பட்டவுடன், அடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கும் வைக்கும்.  வரிச்சலுகை கேட்கும்,  பதுக்கல்களைத் தடுக்கவே முடியாது, செயற்கைத் தட்டுப்பாடா, இயற்கைத் தட்டுப்பாடா என்பதை கண்டுகொள்ளவே முடியாது.  லாபங்கள் டாலர்களாய் மாற்றப்பட்டு அவர்கள் தாய்நாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.  

ஒருவேளை  எதிர்காலத்தில் காங்கிரஸ் அல்லாது வேறு ஆட்சி 
ஏற்பட்டு வால்மார்ட்டுக்கு நெருக்கடி கொடுக்க முனைந்தால் அது
அவர்களுடைய பார்லிமென்ட் எம்பிக்களிடம் தெரிவிக்கப்பட்டு, இந்தியா 'காட்' ஒப்பந்தத்தை மீறுகிறது என்று அமெரிக்க அதிபரால் எச்சரிக்கப்படும்.  அதையும் தாண்டி அவர்களை வெளியேற்றத் துணிந்தால், 'பழைய குருடி கதவத் திறடி' என்று முழுமூச்சாய், அமெரிக்கா, பாகிஸ்தானை ஆதரிக்கச் சென்றுவிடும்.  அங்குள்ள ஐ.எஸ் ஐ யைத் தூண்டி, இங்கு அப்பாவிகள் மத்தியில் குண்டுகளை வெடிக்கச் செய்யும்.

இதனால்தான் நம் முன்னோர் 'துஷ்டனைக் கண்டால் தூர விலகு' 
என்றனர்.  ஆனால் இப்போது நாம் புலி வாலை பிடித்தாயிற்று, 
இனி சாமர்த்தியமாய்த்தான் அதைக் கொல்ல  வேண்டும், அசந்தால் அது நம்மை  அடித்துத் தின்றுவிடும்.  

நமக்கு இப்போதிருக்கும் ஒரே ஆயுதம் 'தேசப்பற்று'
நம்முடைய உள்ளூர் உணவுகள், ஆடைகள் அணிகலன்கள், அலங்காரப்
பொருட்கள், காய், கனிகள், என்று தேடி தேடி நுகர வேண்டும்.  
நம்மை சுரண்ட விடாமல், நம்முடைய சுதந்திரத்திற்கு கேடு வர விடாமல்
கண்காணிக்க வேண்டும்.  கிழக்கிந்தியக் கம்பனி வந்தபோது 
டெல்லியை ஆண்டுக் கொண்டிருந்த முகலாய அரசும், விஜயநகரப்
பேரரசும், கேரளா அரசரும், அப்போது எதற்கோ மயங்கி, இதுபோல
வியாபாரத்துக்கு இந்தியாவை அவர்களுக்குத் திறந்து விட்டனர்.
விளைவு, கடைசி முகலாயப் பேரரசர் ஒரு பிச்சைக்காரக் கோலத்தில்
அவர்களாலேயே நாடு கடத்தப்பட்டார்.  


அப்போது நாம் இது போன்று ஐக்கியமாய் இருந்தது இல்லை.
அப்போது தமிழர் இந்தியர் என்று எந்த ஒற்றுமையுமில்லை.  
இப்போதும் சில ஒருமைப்பாடு தெரியாத ஜந்துக்களால் கொஞ்சம்
மனக்கசப்பு இருப்பினும் இந்தியாவுக்கு ஒரு கேடு என்றால் உயிர்
கொடுத்துப் போராட ஐம்பது கோடி இளைஞர்கள் உள்ளோம்.
வரட்டும் வால்மார்ட், நம்முடைய ஒற்றுமையை சோதிக்க விரும்பினால், வாலாட்டிப் பார்க்கட்டும்,  வா வா வால்மார்ட் !!!


                                                   *** WAR BEGIN HERE ***
    

12 கருத்துகள்:

 1. 6-7 வருடங்கள் முன்பு என்பது Broad Band Internet conenction சந்தைக்கு புதியது. Airtel மற்றும் Reliance, Broad Band'ஐ மிக பெரிய அளவில் சந்தை படுத்தினர். ஒவ்வொரு ஊரிலும் பல Branch Office,, ஏகப்பட்ட Offer, சாதாரண மக்கள் பார்த்திராத Customer Service, புதிய வசதியின் மேல் வந்த மோகம், என்று பல விஷயங்களையும் திணித்தார்கள்.

  இப்போது? அது எல்லாமமே தலை கீழ! மேலும் Broadband பயன்படுத்தி பழகியவர்கள் யாரும அதனை Surrender செய்யமாட்டார்கள்.. பயன்பாடு குறைவாக இருந்தாலும் கூட ...

  இதே விஷயத்தை மொபைல்# போனிலும் பார்த்தோம்..மொபைல் போன் எவ்வளவு வசதியாக இருக்கிறது என்பது வேறு விஷயம்..10 வருடங்களுக்கு முன்பு எல்லாரும் கையில் மொபைல் வைத்துகொண்டு அலையவில்லை.. இருந்தாலும் 'Communication' சாதியமாகதான் இருந்தது.. இப்போது? மொபைல் போன் நம்மில் பலருக்கு கை, கால் போன்றது.. நாளையிலிருந்து Outgoing கால் எல்லாம் Rs.5.00 என்று ஏற்றினால், மொபைல் பயன்பாட்டை விடுவிட முடியுமா? சான்ஸ் சே இல்லை!

  இன்னும் சிலகாலம் பின்னோக்கி சென்றால்... Cable T.V. Connection வாங்கி விட்டு, சில நாட்கள் கழித்து அதனை Disconenct செய்ய வேண்டும் என்று சொன்னபோது அவர் சிறிது கொண்டே சொன்னது.. இன்னும் ஒரு வாரத்தில் திரும்ப வாங்க போகிறீர்கள்..அப்போது அதற்கு Reconnection Charges Rs.150 என்று.

  இவர்கள் செய்வது 'ஜஸ்ட்' புதிய விஷயத்தை அறிமுகபடுத்துவது அல்ல. நமது நுகர்வு கலாச்சாரத்தையே மாற்றுவது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா, முத்துகிருஷ்ணன் மிக அருமையாக அல்லவா விவரித்திருக்கிறீர்கள். தயவு செய்து உங்கள் சுவரில் இதை நீங்கள் கட்டாயம் பதிகக் வேண்டும்.

   நீக்கு
 2. வென்று விடுவோம் வால் மார்ட்டை....வெட்டி விடுவோம் அதன் வாலை..!

  பதிலளிநீக்கு

 3. இதுல இன்னொரு விஷயம் வேறு சொல்கிறார்கள்..மாநில அரசு அந்தந்த மாநிலத்தில் வேண்டுமா அல்லவா என்று தீர்மானிக்கும் என்று... வேண்டாதவர்கள் வேண்டும் என்று நினைபவர்களை தடுக்கவேண்டாம் என்று மீடியா பிரசாரம் வேறு !

  நம்ப முடியும்படியாகவாக இருக்கிறது???? சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடால் இருவகை பாதிப்பு பற்றி தான் பரவலாக பேச்சு.. (1) விவசாயி (மற்றும்) தயாரிப்பாளர் (2) நுகர்வோர். எனக்கு உதித்த ஒரு விஷயத்தை மட்டும் பார்ப்போம்!


  விவசாயிகள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு முதலில் சற்று அதிகமாக விலை கொடுத்து சில வருடங்களில் இவர்களை தவிர வேறு யாரிடமும் விற்பது கடினம் என்ற நிலையை உருவாக்கலாம். இப்பொழுது மத்திய அரசு சொல்கிற படி தமிழக அரசு அந்நிய முதலீடை அனுமதிக்காவிட்டால், சட்டப்படி, அவர்கள் தமிழ் நாட்டில் கடை முடியாது. சரி..ஆனால், ஆந்திர அரசு எ) பாண்டிச்சேரி அனுமதிக்கும், பட்சத்தில் தமிழக விவசாயிகளிடமிருந்து இவர்கள் கொள்முதல் செய்வதை தடுக்க முடியமா? அப்படியே இவர்கள் நேரடியாக கொள்முதல் செய்வதை தடுக்கும்படி சட்டம் கொண்டுவந்தாலும்(!), தமிழ் நாட்டில் உள்ள ஒருவர் வால்மர்ட் உடன் ஒப்பந்தம் போட்டுகொண்டு இங்கே வாங்கி அங்கே விற்கலாம்! இது நேரடி..வணிகம்.. மறைமுகமாக தகிடுதத்தம் செய்வது முடியவே முடியாதா என்ன? எனவே, தமிழ்நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் அன்னியமுதலீட்டை அனுமதிக்காவிட்டாலும் தமிழக விவசாயிகள் ( அல்லது ) தயாரிப்பாளர்கள் பாதிக்ககூடும்

  சரி.. இதை தவிர்த்து, அரசுக்கு உண்மையாகவே சாய்ஸ் உள்ளதா? இன்று ஒரிஸ்ஸா போல ஒரு மாநிலத்தில் ஒரு அரசு கொள்கை முடிவு எடுத்து அனுமதிக்காவிட்டால், அடுத்து 1-2 ஆண்டில் அங்கு காங்கிரஸ் வந்து வந்தால் உடனே அதை அனுமதிக்கலாமே!

  அல்லது, டில்லியில் இப்போது அனுமதித்து விட்டால், அடுத்த வருடம் அங்கு பா.ஜா.கா. வந்தால் கூட , உடனே அனுமதியை தவிர்க்க சட்டத்தில் இடமிருக்குமா? அப்படியே இடமிருந்தாலும், உடனே அவர்கள் நீதிமன்றத்துக்கும் சென்று நாங்கள் ஏற்கனவே 'Establish' செய்து விட்டோம் இப்போது நிர்ருதினால் எங்களுக்கு 100 கோடி நஷ்டம் என்று சொல்லி சுலபமாக Stay வாங்கலாமே!

  இது மிகவும் அடிப்படை, இன்னும் பார்த்தல் என்ன என்ன இருக்கோ!

  பதிலளிநீக்கு

 4. Retail என்றால் உப்பு, புளி, மிளகாய் மட்டும் அல்ல.. பற்பசை,, பற்பொடி,ஷாம்பூ, சோப்பு,சீப்பு, Toiletries என்று ஆரம்பித்து நூற்று கணக்கான பொருட்கள் அடங்கும்.

  இந்தியாவில் இது போன்ற பொருட்களை பெரும்பலாலும் வர்த்தகம் செய்வது இரண்டு நிறுவனங்கள். Procter and Gamble மற்றும் Hindustan Unilever Ltd. இரண்டுமே அமெரிக்க நிறுவனங்கள். இவர்கள் Walmart,Tesco,Carrefour போன்ற நிறுவனங்களுக்கும் மட்டும் 20-30% தள்ளுபடி கொடுத்தால் என்ன செய்வார்கள்?

  பதிலளிநீக்கு
 5. ராஜா ராஜேந்திரனிடம் இப்படி ஒரு அருமையான பதிவு வர காரணமாயிருந்த மக்கு மமோ சிங் + வால்மார்ட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு