காந்தஹாரும் சில உண்மைகளும் !!!


கி.பி.1999 ல், கண்டிப்பாக நீங்கள் பிறந்திருப்பீர்கள்.  டெல்லியை ஜெயலலிதா பாஷையில் சொன்னோமானால் மைனாரிட்டி வாஜ்பேயி அரசு ஆண்டுக் கொண்டிருந்தது.  நேபாளத்தில் இருந்து டெல்லியை நோக்கி கிளம்ப ஏர்-இந்தியா இல்லையில்லை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பத் தயாராகிறது.   பயணிகளில் பெரும்பாலோர்  நன்கு சுற்றிக் களைத்து இன்னும் சில மணி நேரங்களில் ஊர் சென்று குழந்தைகளை/மனைவியை/அம்மாவை/யாரையோ பார்த்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் குபுக் என்று விமானம் விண்ணில் தாவுகிறது. 


அதன்பின், கந்தசாமி தலைமையில், ராமசாமி, டேவிட்பில்லா,  சித்தார்த்தன், மகாவீர்ஜெயின், ஹர்பஜன்சிங் போன்ற பயங்கரவாதிகளால் அந்த விமானம் கடத்தப்படப் போவதாகவும், இனி எங்கள் கட்டுப்பாட்டில் அமைதியாக இருந்தால் உயிர் அல்லது சாவு என்று எச்சரிக்கை பிறப்பிக்கப் படுகிறது.  பயணிகள் முகத்தில் சவக்களை அப்பியது. 
பைலட்டுகளிடம் விமானத்தை துபாய் நோக்கி செலுத்துமாறு கந்தசாமி மிகத் தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறார்.  பைலட் மிகத் திமிராக, 'அவ்ளோவ் தூரம் போறதுக்கு பெட்ரோல் இல்ல' என்கிறார்.  பயங்கரவாதிகள் ஆலோசனை செய்தபின், 'அகமதாபாத் வரைக்குமாவது ஓட்டிட்டு போங்க சார்' என்று கெஞ்சினர்.


விமானம் கடத்தப்பட்டதை அறிந்தவுடன் டெல்லியில் மைனாரிட்டி அரசு அவசரக் கூட்டம் கூடுகிறது.  பேசுகிறார்கள், பேசுகிறார்கள்......அதற்குள் அந்த விமானம் அகமதாபாத் தரையிறங்கி, பயணிகளுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் உணவு, விமானத்துக்கு புல் டேங் பெட்ரோல் என எல்லாம் வழங்கி விடுகின்றனர்.  உணவில் தரமில்லை எனக் கொதித்த ஒரு பயணி, பயங்கரவாதிகள் எவ்வளவு தடுத்தும் அவர்கள் கையில் இருந்த பிஸ்டலை வாங்கி சுட்டுக் கொண்டு அதன் பின்னும் உயிர் போகாததால், படிக்கட்டு வைக்காத வாசல் வழியே குதித்து உயிர் துறக்கிறார்.  அவருக்கு முப்பது வினாடி கண்ணீர் அஞ்சலி செலுத்திய பயங்கரவாதிகள், 'சரி வண்டிய இஸ்லாமாபாத் விடுங்க' என்று பைலட்டிடம் அன்பு ததும்ப சொல்கிறார்கள்.

இஸ்லாமாபாத் மேலே பறக்கும் விமானத்தைக் கண்ட பாகிஸ்தான் அஞ்சுகிறது.  விமானம் தம் மண்ணில் இறங்கினால் எல்லாப் பொறுப்பும் தம் தலையில் விடியுமே என்ற நல்லெண்ண அடிப்படையில் 'இங்கு இறக்காதே' என்று பைலட்டுக்கு உத்தரவிடுகிறது.
சரி துபாய் போய்விடுவோம் என்று விமானியே பயங்கரவாதிகளுக்கு உதவ முன்வருகிறார்.  ஏனெனில் அவர் இதுவரை துபாயைப் பார்க்கவில்லை.  பயணிகளும் துபாய் போகப்போகிறோம் என்றவுடன் குஷி ஆகிறார்கள். 

ஆனால், துபாய் அரசு, இங்கு நீ இறங்கினால்  பெண்கள், சிறுவர்களை விடுவிக்கவேண்டும், மாறாக,  உனக்கு பெட்ரோலும், சைட்டிஷ்சும் தருவேன் என உத்திரவாதம் தருகிறது.  பெண்கள், குழந்தைகள் கதறக் கதற விமானத்தை விட்டு இறக்கி விடப்படுகிறார்கள்.  ஏன் ?  ஏனெனில் அந்தளவு பயங்கரவாதிகள் அவர்களை இம்ப்ரெஸ் செய்திருந்தார்கள்.  அவர்களைப் பிரிய பயணிகளுக்கு மனம் வரவில்லை. 


'அடுத்து எங்கே போகப்போகிறோம் ?' என மற்ற ஆண் பணயக்கைதிகளில் ஒருவர் உற்சாகமாக கேட்டார்.  'உங்க ஆர்வம் எங்கள புல்லரிக்க வைக்கிறது' என்று சொன்ன கந்தசாமி 'அடுத்து காபூல் போகலாம்' என்றார்.  பெட்ரோல் நிரப்பிய வகைக்கும், அக்கமடேஷன் செலவுக்கும் கவனிச்சிடுங்க என்று துபாய் அரசு பில்லை அத்வானிக்கு அனுப்பியது.  காபூல் நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே, பயங்கரவாதிகளான ஹர்பஜனும், சித்தார்த்தும் 'எங்க பாட்டியோட பாட்டிக்கு பாட்டியான காந்தாரி சொந்த ஊரு ஆப்கன்ல இருக்கிற காந்தகாரு அங்கனதான் போவோணும்' என்று உருண்டு புரண்டு அடம் பிடிக்கவே, பைலட் அங்கேயே போயிடலாம் என்றார்.

பூலோக சொர்க்கபுரியான காந்தஹார் வந்துவிட்டது என்று பைலட் அறிவித்ததும் பணயக் கைதிகள் ஹோவென உற்சாக குரல் கொடுத்தனர்.  அப்போது ஆப்கனை ஆண்டுக் கொண்டிருந்த தலிபான் அதிபதி முல்லா உமர் (இயற்பெயர் நரேந்தர் ஜோஷி)  அவர்களை வரவேற்க விமான நிலையம் ஒடோடி வந்தார்.  அதற்குள்  அவருடைய மருமகன் உத்தவ்ராஜிவ்பால் (புனைப்பெயர் பின்லேடன்)  'மாமா, கொஞ்சம் பொறுங்க" என்று இந்துகுஷ் மலையில் இருந்து செய்தி அனுப்பினார்.


என்ன கொடுமை எனில் நம்ம மத்திய அரசு கூட்டிய அவசரக்கூட்டம் ஒருவழியாய் முடிவடைந்து சிறையில் இருக்கும் அதி பயங்கர ஜிகாத்தியான மசூத்அஸார் எனும் சுடலைமாடசாமி மற்றும் மேலும் இரண்டு விடுதைலப் போர் வீரர்களை விட்டுவிடுவது மேலும் அவர்களின் நியாயமான போராட்ட உதவிக்கு பணமுடிப்பு நன்கொடை தரவும் ஏகமனதாக முடிவெடுக்கப்படுகிறது.  ஜஸ்வந்த்சிங் தலைமையில் விடுதலை வீரர்களும், பல கோடி ரூபாய் கொண்ட சூட்கேஸ்களும் காந்தஹார் நோக்கி பயணப்படுகின்றனர். 


ஷரியத் சட்டப்படி அன்பளிப்பு பெறுவது தவறு என்பதால் நரேந்தரும், உத்தவ்வும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தனர்.  ஆனால் பணயக்கைதிகள் மற்றும் ஜஸ்வந்த்சிங் பெரிதும் வற்புறுத்தவே ஜிகாத்துக்காக  மட்டுமே அந்தப் பணத்தை ஏற்க அரைமனதாக ஒத்துக்கொள்கின்றனர்.  சுடலைமாடசாமி ஜஸ்வந்துக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு, நண்பர்களுடன் ஜீப்பில் ஆப்கன் மண்ணுள் நுழைந்தார்.  நன்றிக்கடனாக டெல்லி எம்பிக்களுக்கு ட்ரைப்ரூட்ஸ்சை நேரிடையாக பார்லிமெண்டில் எப்படி கொடுத்தனுப்புவது என்று சிந்தித்தவாறே பணயக்கைதிகளைப் பார்த்து கையசைத்தார்.                                        
 

இப்படிப்பட்ட ஒரு நட்பு நாடான ஆப்கனை, இந்திய உளவுத்துறை ஒற்றனை அனுப்பி, சண்டையிடுவதாகக் காட்ட கமல்ஹாசனுக்கு எப்படி மனம் ஒப்பியது ?  ஜிகாத்திகள் அதாவது விடுதலைவீரர்களை பயங்கரவாதிகள் எனக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய நிஜப் பெயரை விடுத்து, முல்லா ஒமர், பின்லேடன், அஸார்மசூத், கெமிக்கல்அலி என வைத்திருக்கிறாரே உங்களுக்கு ஈவிரக்கம் இல்லையா ? ஒரு முஸ்லீம் நண்பரின் நினைவாகத்தானே உங்களுக்கு கமல்ஹாசன் என்று உங்கள் தந்தை பெயர் வைத்தார் ?  நீங்கள் இஸ்லாமியரை மட்டும் அவமதிக்கவில்லை.  உங்கள் தந்தையையே அவமதித்துள்ளீர்.


எங்களுக்கு தாய்நாடு இந்தியாதான் எனினும், முஸ்லீம் என்று வந்துவிட்டால், பாகிஸ்தானி, பங்களாதேசி, ஆப்கானி, இரானி, இராக்கி, அரேபியாக்காரன் என்ற பாகுபாடு எம்மிடமில்லை என்று உமக்குத் தெரியாதா ? 


இந்தக் கட்டுரையை அன்புத்தோழர், புரட்சிப் போராளி  ஜைனுல் ஆப்தீனுக்கு சமர்ப்பணமாக்குகிறேன்.  இந்த நிஜத்தை கல்வெட்டில் பொறித்து வைத்துக் கொள்ளுமாறும் அவரைத் தாழ்ம்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  வரலாறை பிழையாகப் பதிக்க வேண்டாமென இந்திய அரசையும் எச்சரிக்கிறேன்.


                                                                  -முற்றாது-        




   

    

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!