தகிக்கும் நெஞ்சம் !

ச்சே......இந்த பொறுப்பில்லாத அரசியல்வாதிகளையும், அவர்களின் அல்லக்கைகளின் செய்கைகளையும் கண்டு வெதும்பி நிற்கிறேன் :(


நகரத்தில் வைக்கும் ஒரு மேடைக் கூட்டத்திற்கு எதற்கு சாலை ஓரங்களிலும், சாலையின் நடுவிலும் குழல் விளக்குகள் ? அதற்கு மேல் அவர்களின் சின்னத்தை வெளிக்காட்ட அலங்கார சீரியல் விளக்குகள்,  மினுமினுக்கும் வண்ண விளக்குகளின் வரிசைகள், சந்து பொந்துகளை மறைத்து பெரும் பதாகைகள், ராட்சத பேட்ஜ்கள், வாழை மரங்கள், தோரணங்கள், கொடிக் கம்பங்கள்.   இவைகளின் நீளமெல்லாம், சில கிலோமீட்டர்கள் தூரம் வரை கூட, வரும் தலைவர்களின் தகுதி பொறுத்து வளர்கிறது. 

இதற்கான மின்சாரம் திருடப்படுகிறது என்று பொதுவான குற்றச்சாட்டு உண்டு.  என் கேள்வி, அது திருடப்படாத மின்சாரமேயாகக் கூட இருக்கட்டுமே...........அருகிலிருக்கும் எளிமையானவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய மின்சாராமாக அல்லவா அது இருக்கும் ?  இது போன்று உறிஞ்சப்படும் மின்சாரத்திற்காக அக்கம்பக்கத் தெருக்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது, வேறு சில இடங்களில் அழுத்தம் குறைவாக விநியோகிக்கப்படுகிறது.

இத்துணைக்கும் இன்று எங்கள் பகுதிக்கு வரும் தலைவர் எதிர்க்கட்சி கூட இல்லை.  எம்.எல்.ஏ வாகி இதுவரை சட்டசபை சென்று அவருக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசியதேயில்லை.  ஆனால், வேலையே செய்யாத அவருக்கு மாத சம்பளம் மிகச் சரியாய் அக்கவுண்டில் கிரெடிட் ஆகிவிடும் !

முன்காலத்தில் நாட்டில் எல்லா இடத்தில் எல்லாம் மின்சாரமிருக்காது.  அதிலும் கிராமப்புறங்களில் அறவே மின்சாரமிருந்திருக்காது.  அப்போது இதுபோல சாலையோரங்களில் தற்காலிகமாக நிறுவப்படும் விளக்குகளின் வாயிலாக வெளிச்சம் கிட்டி, அதனால் அக் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அது உதவியாய் கூட இருந்திருக்கலாம்.  அப்போது சினிமாவை விட்டால் இது போன்ற பேச்சு வியாபாரிகள் கூட்டம்தானே பொழுதுபோக்கு ?

இப்போதும் அதே பாணியை கடைபிடிப்பேன் எனில் இந்த அகங்காரத்தை நாமல்லவா தட்டிக்கேட்க வேண்டும் ?  இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் இந்த அட்டூழியத்தில் மட்டும் எல்லாக் கட்சிக்காரர்களும் ஒன்றுசேர்ந்துக் கொண்டு நம்மை எதிர்ப்பதில் ஒற்றுமையடைகிறார்கள்.  அட, நீங்கள் நடத்தும் கூட்டத்துடைய மேடையைச் சுற்றி மட்டும் அலங்காரம் பண்ணிக்கொள்ளுங்களேன் ! 

பாகிஸ்தான் பற்றிய ஒரு சேதி படித்தேன்.  அங்கு நம் வீட்டு விசேஷத்திற்காக அலங்கார விளக்குகளை வீடு முழுக்க தொங்கவிட ஆசைப்படுகிறோம் என வைத்துக் கொள்வோம்.  உங்கள் வீடு, உபயோகிக்கும் மின்சாரத்திற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டுமோ அதை செலுத்தப் போகிறீர்கள் என்பதற்காகவெல்லாம் உங்கள் இஷ்டப்படி ஆடம்பரம் காட்ட முடியாது.  முன்னரே இத்துணை விளக்குகள், இன்ன மாதிரி விளக்குகள் என நீங்கள், உங்கள் பகுதி மின்வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.  சொல்லாமல் செய்தால் அது கிரிமினல் குற்றம். கைது வரை கூட போகலாமாம். 

ஆனால், நமக்கு கட்டற்ற சுதந்திரம் இருப்பதாலேயே, எல்லா விதிகளையும் மீறுகிறோம், அடங்க மறுக்கிறோம், ஆடத் துணிகிறோம்.  குடி மீற கோனும் மீறுகிறான்.

நம் அரசயல்வாதிகளின் இந்த டாம்பீக, ஆடம்பர ஆட்டங்களை எப்படி அடக்குவது ?  திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற உண்மைக்கேற்ப, ’இச்செயல் ஒரு பாவம்’ என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருப்போம்.  அல்லது நீதிமன்றங்களை நாடி இதுபோல வெட்டிச் செலவு செய்பவர்கள், அதிக கட்டணம் அரசுக்கு வரியாய் செலுத்த நேரிடும் என்ற ஒரு சட்டத்தையாவது கொண்டுவரச் செய்வோம் !!!


                                           --- இப்போதைக்கு முற்றுகிறது ---

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!