வியாழன், 23 மே, 2013

இறைவனிடம் கையேந்துங்கள் !!!

ஊடக நடுநிலைவாதிகள், அறிவுஜீவிகள், மாமேதைகள்.......எப்போதுமே சினிமாக்காரர்களை நோக்கி கேட்கும்/கேட்ட சில கேள்விகள் :-

// இப்படியெல்லாம் இவர்களை மோசமாக சித்தரிக்கிறார்களே.........’பாமர ரசிகன்’ இவர்களைப் பற்றி என்ன நினைப்பான் ? //

// எங்களை கட்டி வைத்து அடித்ததைப் போல் வலிக்கிறதே, இப்படி அராஜகமாய்ப் படமெடுப்பவர்களின் படத்தை கூட்டம் கூட்டமாய் பார்க்கும் ’முட்டாள்களே’ திருந்தமாட்டீர்களா ? //

// சினிமாவில் பயங்கரவாதிகளாக எங்களையே காட்டுவதால், எங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை, வேலை கிடைப்பதில்லை, சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்படுகிறோம்,   ’இரக்கமேயில்லையா’ உங்களுக்கு ? //


உண்மையில், சமீபத்தில் பெங்களூருவில் வெடித்த குண்டுவெடிப்பை ஒரு நாடகமாகத்தான் நினைத்தேன்.  வீழ்ச்சி நிலையில் இருந்த பா.ஜ.க தான், பச்சாதாப அலைகளை உருவாக்கி, சட்டசபையைக் கைப்பற்ற இந்த ‘வெடிகுண்டு’ விளையாட்டை நடத்தியிருக்கக் கூடும் என நம்பினேன்.


ஆனால், இந்த வெடிகுண்டு வழக்கில், கர்நாடக போலீஸ் எடுக்கும் தொடர் நடவடிக்கைகளை பார்க்கும்போது மிகவும் மனம் வலிக்கிறது. 

ஒருவரைக் கைது செய்வதாலேயே அவர் குற்றவாளி அல்ல என்பதெல்லாம் மனசுக்கு புரியத்தான் செய்கிறது, வாய்க்கும், கைக்கும் புரியவில்லையே ? 

இதோ கீழே செய்தித்தாள்களில் வந்திருந்த செய்திக் குறிப்புகளைப் பாருங்கள் :-


1.) பெங்களூரு மல்லேஸ்வரம் பா.ஜ.க அலுவலகம் அருகே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி, மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து 17 பேர் படுகாயமடைந்தனர்.  விசாரணையில் இந்த குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், தமிழகத்தைச் சேர்ந்தது.  இது வேலூரில் வாங்கப்பட்டு, கோயம்புத்தூர் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டது, எனத் தெரிய வந்துள்ளது. 


2.) இந்த மோட்டார்  சைக்கிளை ஓட்டி, இந்தச் சதியை நிறைவேற்றியவர், திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த ‘பண்ணா இஸ்மாயில்’  (இவர் இந்த பைக்கை நிறுத்திவைத்துச் செல்லும் காட்சி, அருகிலுள்ள ஒரு வணிக கட்டிடத்தில் அமைந்துள்ள சிசி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளதாம்)


3.) இந்த சிசி கேமராவின் உதவியால், வலுவடைந்த கர்நாடக போலீசின் நடவடிக்கையின் மூலம், அதே மேலப்பாளையத்தைச் சேர்ந்த, ‘கிச்சான் புஹாரி, பஷீர், சதாம் உசேன், பீர் முகைதீன், இது தவிர, கோயம்புத்தூரைச் சேர்ந்த இருவர், சென்னை மண்ணடியைச் சேர்ந்த சில........................


4.) இவர்களை விசாரித்ததில், இந்த வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்டதாகவும், இதை பெங்களூருக்கு கொண்டு சேர்த்தவர், தமிழக போலீஸாரால் இரு வருடங்களாக(!) தேடப்பட்டுவரும் அல்-உம்மாவைச் சேர்ந்த, ’பக்ருதீன்’  இவர் கேரளாவில் பதுங்கியிருக்கக் கூடும் என நம்பப்படுவதால், இப்போது இவரை மூன்று மாநில போலீஸ் தேடிவருகிறது. (வீரப்பருக்கு அப்புறம் இந்தப்பெருமை பக்ருதீனுக்குப் போகிறது)

5.) குண்டுவெடிப்பை நிகழ்த்திய ‘பண்ணா இஸ்மாயிலும்’ தலைமறைவாகத்தான் உள்ளார்.


‘துப்பாக்கி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், தீவிரவாதிகள் அனைவரையும் முஸ்லீம்களாக காட்டியிருப்பதை எரிச்சலுடன்தான் பார்த்தேன்.  ஆனால், யதார்த்தம் ? 

ஒரு சில முஸ்லீமகள் செய்யும் தவறுகளுக்காக முஸ்லீம்கள் அனைவரின் மீதும் சந்தேகப்பட்டு விட முடியுமா ?

கண்டிப்பாக முடியாது. ஆனால், உங்கள் எதிரிகள், உங்களுக்கெதிரான ஆயுதமாக அல்லவா இந்தச் செய்தியை பயன்படுத்துவார்கள் ? 
உங்களுக்காக பரிந்து பேசும் மேதைகள்(!!) எடுத்துக்காட்டும் அதே ’பாமர மனத்தில்’ நீங்கள் ’அனைவருமே அப்படித்தான்’ என்றல்லவா விஷத்தை விதைப்பார்கள்.  சினிமாவைக் கூட ’புனைவு’ என புரிந்துகொள்ளும் உங்களின் அந்த ‘முட்டாள்கள்’ இதை, நீங்கள் என்னதான் ’ஜோடிக்கப்பட்டது’ எனச் சொன்னாலும் நம்ப மறுப்பார்களே ?

எங்களைப்பற்றி கெட்டதுதான் உங்கள் கண்ணுக்குத் தெரியுமா ?


இல்லை. பொதுத்தேர்வுகளில் முதன்மை மதிப்பெண் பெறும் முஸ்லீம் மாணவர்களை பற்றி படிக்கும்போது நிம்மதி பெருமூச்சு வருகிறது.  ஆனால் குண்டுவெடிப்புகளில் உங்களின் யார் பெயருமே வராத நிலை வேண்டுமென்றே எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.  அக்க்காலமும் வரும் என நம்புகிறேன்.  இன்ஷாஹ் அல்லாஹ் !!!
                                                       ---  முற்றாதா ? --- 

2 கருத்துகள்:

 1. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_3791.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன். தாமதமானதற்கு மன்னிக்கவும்.

   நீக்கு