வியாழன், 8 ஆகஸ்ட், 2013

இவளுங்க ஓடிடுவாளுங்க !!!

'தந்தை என்பவன், மகனை எப்படி வளர்க்கவேண்டும் என்பதை தன் அப்பனுக்கு, தன் மகனை வளர்ப்பதன் மூலமே காட்ட வேண்டுமென வைராக்கியம் கொண்டான் பக்ருதீன். எப்போது ?  தன்னுடைய பதினாறாவது வயதிலேயே !

அவனுடைய ஏழாவது வயதில் தாய் செத்துப்போயிருந்தாள்.  ஏற்கனவே அப்பாவுக்கு இரண்டாவதாய் வாக்கப்பட்டவள்(முதல் மனைவி இருக்கும்போதே) என்பதால், அப்பாவிற்கு வசதியாய் போனது, ஒன்றரை மாதத்தில் மூன்றாவது அம்மா வந்து சேர்ந்தாள்.  வந்த வேகத்தில் பக்ருதீனுக்கு அடுத்தடுத்து இரண்டு தங்கைகள் பிறந்ததால்......ஏற்கனவே இல்லாதிருந்த மதிப்பு, இன்னும் மருவி கொடுமையானது.

அப்பாவிற்கு பிரத்யோகமாக பாசத்தை கொட்டவெல்லாம் தெரியாது.  முதல் அம்மாவுக்கு பிறந்த இரண்டு அண்ணன்கள், ஒர் அக்கா, பக்ருதீன், புதுசா இரண்டு தங்கைகள், அதிலும் இப்ப கேக்க நாதியில்லாத பக்ருதீன்தான் அப்பாவின் கோபத்திற்கு சிறந்த வடிகால். 

திடுமென தாயின் அரவணைப்பு அறுபடவே, பக்ருதீன் தான் ஒரு வேலைக்காரனாய் நடத்தப்படும் விதத்தை, வெளியே விளையாடும்போது நண்பர்களிடையே அடிதடியாய் காட்ட, தினம் ஒரு பஞ்சாயத்து.  “ச்சினால்க்கே பச்சா, பாட்கவ், மேரே ல**கே பால்..........என எப்போதும் திட்டி, கையில் கிட்டும் சுள்ளி அல்லது விறகால், அப்பாவிடம் அடிபடுவது வாடிக்கை.

மாநகராட்சி பள்ளியில் செலவில்லாமல் படிக்க வைத்தும் பக்ருதீனுக்கு படிப்பும் ஏறவில்லை.  சிறு வயதிலேயே வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேர்த்துவிட்டார் அப்பா.  பேக்கரி எனில் கடை அல்ல, அது ஃபேக்டரி.  ஃபேக்டரி எனில் ஏதோ ஆயிரம் பேர் வேலை செய்யும் பெரியதுமல்ல, ஓனர் அவர் தம்பிகள் மற்றும் எடுபிடிக்கு பக்ருதீன்.  விறகு வைத்து எரிக்கப்படும் அடுப்பில், வெந்த பிஸ்கட்டுகளை சேகரிப்பது பக்ருதீனுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வேலை.

அந்த முரட்டுத்தனமான வேலை எப்படியோ பக்ருதீனுக்கு பிடித்துப்போனது.  பொதுவாக இஸ்லாமியர்களில் யாரையுமே நாத்திகராக பார்க்க முடியாது, பக்ருதீன் விதிவிலக்கு.  அல்லாவை அசிங்க அசிங்கமாக ஏசுவது அவனுக்கு மிக பிடிக்கும்.  அல்லாதான் அம்மாவை இவனிடமிருந்து பிரித்தாராம், இதுபோல ஒரு தந்தைக்கு மகனாக பிறக்க வைத்தாராம், பிஞ்சிலேயே, ஆடி ஓடி விளையாட வேண்டிய வயதில், நெருப்பில் வேக விட்டாராம் ! 

வாரக்கூலியை பக்ருதீன் கையில் முதலாளி பாய் கொடுப்பதில்லை.  அப்பா கையில் கொடுத்துவிடுவார்.  என்ன ஒரு லாபமென்றால், சோறு சாப்பிடும்போது அவ்வளவாய் வசவிருக்காது.  சித்தி ஒருமுறை ஏதோ நக்கல் செய்ய எத்தனிக்கும்போது, சாப்பாடுத்தட்டை ஓங்கி சுவத்தில் அடித்துவிட்டு வெளியேறிப்போய் அருகில் இருக்கும் மூலக்கொத்தளச் சுடுகாட்டில் உள்ள, ஒரு கல்லறையின் மேல் போய்ப் படுத்துக் கொண்டான்.

எப்படியோ சரியாய் அப்பா அங்கே தேடி வந்துவிட்டார்.  ’ச்சினால்க்கா’ என்று ஆரம்பித்தபடி லுங்கியில் கட்டியிருந்த பட்டை பெல்ட்டை கழற்றி, பக்ருதீன் மேல் வீச, அதை லாவகமாக பிடித்தான்.  அப்பாவிற்கு அந்தப் பிடியின் பலம் புரிந்தது.  சரி சரி என உடனடியாக சமாதானமாகி, “வாடா பக்ருதீன் வீட்டுக்கு” என்று அழைத்தார்.  வீட்டிற்குள் நுழைந்ததும் சித்திக்கு இடுப்பில் எத்து விழுந்தது, அவள் செத்துப்போன என் அம்மா பிறப்பையும், என் பிறப்பையும் ஏச, ஏச அடி விழுந்தது.  “அம்மாவ அடிக்காதப்பா” என்று பக்ருதீன் அப்பாவைத் தடுக்க, அதிலிருந்து அந்த வீட்டில் அவனைப் பற்றிய ஒரு பயம் தானே உருவானது.

எல்லோரும் ரஜினி, கமல் ரசிகர் மன்றத்தில் பிஸியாக இருக்க, பக்ருதீன் விஜய்காந்த் ரசிகனானான்.  புதிதாய் உருவாகியிருந்த வண்ணாரப்பேட்டை கிளை ரசிகர் மன்றத்தில் உறுப்பினராகி, அவர் படம் ரிலீஸ் ஆகும் நேரங்களில், கொடி, பேனர், பிட் நோட்டிஸ், பட்டாசு, காசு & பேப்பர் கட்டிங்குகளை விசிறுவது என்று ஏரியா பிரபலமானான்.  தொழிலில் நன்கு முன்னேறி, பட்டர் பிஸ்கட் கட்டிங், தேங்காய் பிஸ்கட் ஃபார்முலா மாஸ்டர் என உய்ர்ந்தான்.  பாயிடம் சம்பளத்தை தம்மிடம் தருமாறு கோர, அவர் தொடர்ந்து மறுக்க, ஒருநாள் விடியலில் அவருடைய போட்டி பேக்கரியில் போய் வேலைக்குச் சேர்ந்தான்.

அப்பா நேரடியாய் அந்த புது பாயிடம் பக்ருதீனுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என சண்டைக்கு வந்தார்.  பக்ருதீனை மீண்டும் ஒழுங்கு மரியாதையாக பழைய பாயிடம் வேலைக்கு போகுமாறு மிரட்டினார், மீறினால் சோறு கிடையாது, வீட்டிற்கு வரக்கூடாது என்றார். 

“ நீ, சோறு போட்டது, என் பூ* போட்டதெல்லாம் போதும், இனிமே ஒன் வீட்டுக்கு வர மாட்டேன், போடா பாடு” என்றான் பக்ருதீன்.  புது முதலாளி பாய் அவனை பேக்கரியிலேயே படுத்துக் கொள்ளலாம் என அனுமதித்தார்.  மாஸ்டர் ஆகிவிட்டதால் வாரக்கூலி அமோகமாக வர ஆரம்பித்தது.  அக்கம்பக்க ஹோட்டல்களில் விதவிதமாக நான்கு வேளையும் உண்டான்.  முதல் அம்மாவிற்கு பிறந்த அக்காவும், மூன்றாம் அம்மாவின் தங்கைகளும் பக்ருதீனிடம் உரிமையாகவே பழகினார்கள்.  அடிக்கடி பேக்கரி பக்கம் வந்து, அவர்களுக்கு தேவையானதை உரிமையாய்க் கோர, பக்ருதீனும் நன்கு செலவழிப்பான். 

அந்த ரம்ஜானுக்கு எல்லோருக்கும் புத்தாடைகள் எடுத்துக் கொடுத்தான்.  எல்லோருக்கும் என்றால், ஆமாம், முதல் அம்மா, மூன்றாம் அம்மா, அண்ணன்கள், தங்கைகள், அக்கா, ஏன் அப்பாவிற்குக் கூட.  அப்பா மட்டும் லுங்கியை அவன் மூஞ்சியிலேயே தூக்கி வீசினார்.

அப்போதுதான் ஆரம்பத்தில் சொன்ன அந்த  வைராக்கியம் உதித்தது.  சில வருடங்களில் பக்ருதீன் மிக அழகாக உருமாறினான்.  இவ்வளவு நாள் எங்கிருந்தார்கள் எனத் தெரியாத அம்மாவின் சொந்தங்கள் பெண் தருகிறேன் என மொய்க்க ஆரம்பித்தனர்.  அக்கா & தங்கைகள் நிக்காவிற்கு  நகைகள், மகர் பணம் என்று அள்ளிவிட்டான். 

அந்தத் தே மவனிடமிருந்து எனக்கு ஒரு பைசா தேவையில்லை என அப்பா சொன்னாலும், அம்மாக்கள் உஷாராயிருந்தனர்.  பக்ருதீனை அவர்கள் தவிர்க்காமல் நாசூக்காய் உபயோகித்துக் கொண்டனர்.  “எங்க பக்ருதீன் இருக்கானில்ல.....அவைன் மட்டுமில்லன்னா இந்த நிக்காஹ் இவ்ளவு ஜபர்தஸ்தாவா நடக்கும் ?” என்று சொன்ன சித்தி கையில் பத்தாயிரம் ரூபாய் கல்யாணச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று உபரியாய்க் கொடுத்தான். 

மாமா ஒருத்தர்தான் இவனுடைய சம்பாத்தியத்தையும், செலவையும் சரியாய் கணித்தார்.  “ஏமாளியா இருக்கியே பக்ருதீன், உன் கல்யாணத்த உன் அப்பனா நடத்தி வெப்பான்னு நெனைக்கிற ? நம்ம ஊரு பக்கம் உனக்கேத்த பொண்ணு ஒருத்தி இருக்கா, இரு இந்த தடவ ஊருக்குப் போறப்ப அவங்க சம்மதம் வாங்கி, நிக்காவ முடிச்சிப்பிடலாம்” என்றார்.  இப்படியாக ஆயிசாகனி, பக்ருதீன் வாழ்வில் நுழைந்தாள், அய்யோ பாவம் !

அய்சாகன்னு, அய்சாகன்னு என்றே அவளை அக்கம்பக்கத்தினர் அழைத்தனர்.  பக்ருதீன் அளவு இல்லை என்றாலும் கிராமத்துக்கே உரிய எளிமையான அழகு.  அம்மா அப்பாவை நினைவு தெரியுமுன்னரே இழந்து, சொந்தங்கள் வீட்டில் வளர்ந்தவள்.  ஏழைக்குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஏழாவது வரைக்கும் படிக்க வைத்திருந்தார்கள் அண்ணன்கள், ஆனாலும், தங்கைக்கு முன்னரே எல்லோருக்கும் மணமாகியிருந்ததால் தங்கையின் திருமணத்தை விமரிசையாக அவர்களால் செய்ய முடியவில்லை.

ஆயிசாவை நாத்தனார்மார்களுக்கு அவ்வளவாய் பிடிக்கவில்லை.  பக்ருதீன் அம்மாவை அவர்களுக்கு பிடிக்க வாய்ப்பேயில்லை அல்லவா......அவளுடைய சொந்தம் மீண்டும் அவர்களின் குடும்பத்தில் வந்து ஒட்டியதை சகித்துக்கொள்ள முடியவில்லை.  முஸ்லீம் கல்யாணத்தில் யாராவது சிக்கன் பிரியாணி போடுவார்களா என்ன ?  ஆயிசாவின் அண்ணன்கள் போட்டார்கள், அது சிக்கன் என்று யாருக்கும் சொல்லாமல்.  பக்ருதீன் அக்காவிற்கு மூக்கு வேர்த்தது.  சண்டை வெடித்தது.  பக்ருதீன் ஆடுதொட்டி நண்பன் மகபூப்பிற்கு போன் போட்டு, ஆடுகளைத் தருவித்தான்.  ஆயுள் முழுக்க ஆயிஸாவை குத்திக்காட்ட இதுவே பக்ருதீனுக்கு போதுமானதாக இருந்தது.

ஆயிசாவும் கிடைத்த புளியங்கொம்பை விட்டுவிடக்கூடாதென அவனுடைய இளக்காரங்களைச் சகித்துக் கொண்டாள்.  ஆயிசாவின் அதிக படிப்பு(!) வேறு பக்ருதீனை உறுத்தியபடி இருந்தது.  ’படிச்ச திமிர்ல பேசாதடி டோலி ச்சினால்’ என்று அடிக்கடி திட்டுவான்.  சரியாய் கல்யாணமான இரண்டாவது மாதத்திலேயே உண்டானாள் ஆயிசா.  பக்ருதீன் மகிழ்ச்சியில் அமைதியானான்.  அவளைத் தாங்க ஆரம்பித்தான்.  ஆயிசா தன் வாழ்வில் உச்சகட்ட சந்தோஷத்தை அனுபவித்த நாட்கள் அவை.  நம்பிக்கை கீற்று தொடர்ந்ததா என்றால் அங்குதான் அல்லா சிரித்தார் !  

பிறந்தது பெண்குழந்தை என்றதும் பக்ருதீனுக்கு சப்பென்றானது.  ’காசு கொடுத்தால்தான் குழந்தையை பார்க்கவிடுவோம்’ என்ற கார்ப்பரேஷன் மருத்துவமனை ஆயாவை, ’த்தா, நீயே வச்சிக்கோ பொட்டக்கழுதய’ என்று விருட்டென்று வீட்டுக்குத் திரும்பி நடந்தான்.  பிறகு இரண்டாம் நாள் ஆயிசா வீடு திரும்பியதும், வேண்டா வெறுப்பாய் அந்தப் பூக்குவியலைப் பார்த்த பக்ருதீன் மெய்மறந்தான்.  பனியில் நனைந்த ரோஜாவையொத்த அழகில் இருந்தது அந்தக் குழந்தை.  அப்படியே பக்ருதீனின் அம்மா ஜாடை.  ’எங்க அம்மா வந்து பொறந்துட்டா’ என்று துள்ளிக் குதித்தான். அன்று மசூதிக்கு போய் தொழுகை செய்தான்.

அடுத்தடுத்த மூன்று வருடங்களில் இன்னும் இரண்டு பெண்களை பெற்றெடுத்து பெருந்துன்பத்திற்கு ஆளானாள் ஆயிசா.  ’இரண்டாம் பெண்ணோடு வீட்டுக்கே வராதே’ என்ற பக்ருதீனை, மாமாதான் சமாதானப்படுத்தினார்.  மூன்றாவதும் பெண் என்றதும் அல்லாதான் பாவம், பக்ருதீன் வாயில் பெரிதும் வதைபட்டார்.  ’எங்கப்பன், சாவறுதுக்குள்ள எனக்கு பையன் ஏன் பொறக்கனும்னா.........என் மகன் அவன்(!) முன்னாடி ராஜா மாதிரி வளரணும், வளப்பேன், த்தா, அதுக்கு ஒரு பையன பெத்துக்குடுடின்னா, இவ வேற வெறுப்பேத்தி தொலையறா’  ஆயிசா, குற்ற உணர்வில் கூனிக்குறுகிப் போனாள், ’ஆம்புளப் புள்ள பொறக்காததுக்கு ஆம்பளதான் காரணம்’ என்பதை ஆயிஷாவுக்கு அவளுடைய பெரிய பெண் பிற்காலத்தில் சொன்னபோது, அதை அவளால் நம்பமுடியவில்லை.       

வீடு முழுக்க பெண்களால் ஆனதால், வீடே பக்ருதீனுக்கு நரகமாக தெரிந்தது.  வெளியில் ஏற்படும் ஏமாற்றங்களில் வரும் கோபத்தையெல்லாம் ஆயிசாவிடமும், மூத்தவளைத் தவிர மற்ற இரு பெண்ணிடமும் காட்டத் தொடங்கினான்.  அப்பா வருகிறார் என்றாலே குழந்தைகள் தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தனர்.  தூங்கும் குழந்தைகளை கூட  எட்டிவிட்டு எழுப்பி, திட்டுமளவு சிறுக, சிறுக மிருகமாக மாற ஆரம்பித்தான் பக்ருதீன்.  ஆயிசாவுக்கு அடிவிழுவது சகஜமாக இருந்தது.  பக்ருதீனின் அப்பாவைப் போல் இல்லாமல், பக்ருதீன் பெண்கள் விஷயத்தில் உத்தமனாய் இருந்ததால், ஆயிசா பொறுத்துக்கொண்டாள்.   கீற்று கைவிடவில்லை.  நான்காவதாய் பிறந்தது பையன்.

பக்ருதீன் குடும்ப வாரிசு உருவானதும் பெரிதாய் கொண்டாடினான்.  ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி விருந்து வைத்தான்.  சேலையும், லுங்கியும் ஏழைகளுக்கு கொடுத்தான்.  அப்போது ரிலீஸ் ஆன சின்னக் கவுண்டர் படத்துக்கு சென்னை முழுக்க போஸ்டர் ஒட்டும் செலவை ஏற்றுக்கொண்டான்.  பையனும் பக்ருதீன் ஜாடையில் இருந்தது அவனுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது.

வேலைக்காரனாக இருந்த பக்ருதீன், சொந்தமாக ஒரு பேக்கரியை நிறுவி முதலாளியானான்.  எம்.ஆர் நகரில் கால் கிரவுண்ட் இடம் வாங்கிப் போட்டான்.  எல்லாமே மகன் பிறந்த யோகம் என்று சொன்னான்.  சபதத்திற்கேற்ப மகன் ஓர் இளவரசனைப் போல வளர்த்தான்.  அத்தனை செல்லம் கொடுத்தும் மகன் ஏனோ அப்பாவைத் தவிர்ப்பதிலேயே குறியாய் இருந்தது பக்ருதீனுக்கு ஏமாற்றமாய் இருக்கும்.  அக்காள்கள் அடிவாங்குவது, கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டு வாங்குவது அவனை அப்பா ஒரு சாத்தான் என்றே நம்ப வைத்தது.  அடிக்கடி வீட்டுக்கு வரும் ஆயிசாவின் சித்தி ஒருவர் ’பெண்களை அடிப்பவனெல்லாம் ஒரு ஆம்புளையா ?’  என்ற தூபத்தால் குழந்தைகள், பக்ருதீன் வீட்டில் இருக்கும்போது அடக்க ஒடுக்கமாகவும், வீட்டில் இல்லாதபோது பெரு உற்சாகமாகவும் இருந்தனர்.

பக்ருதீனைப் பொறுத்தவரை அவன் மருத்துவர் ஐயாவை போல் பத்து மடங்கு முற்(!)போக்குவாதி.  பெண்கள் அன்னிய ஆண்களுடன் பேசுவதோ, பைக்கில் சுற்றுவதோ அறவே பிடிக்காது.  டெலிபோனும், செல்போனும், டிவியும்.....பெண்களையும், கலாச்சாரத்தையும் கெடுக்க வந்த ஆயுதங்கள் என்றே காலத்திற்கேற்றார் போல சொல்லிவந்தான்.  சினிமாவை பொறுத்தவரை கமல் நடித்த படங்கள், குடும்பத்தோடு பார்க்க லாயக்கானது அல்ல என்கிற கொள்கை முடிவில் இருந்தவன்.  பெண்கள் வளர்ச்சி அவானுக்கு பிரமிப்பைக் கொடுத்தது.  மூத்தவள் தாவணி போட ஆரம்பித்துவிட்டாள்.  புர்கா போடாமல் வெளியே போக அனுமதித்ததில்லை.  சுடிதார் போட்டு துப்பட்டாவை கழுத்தில் சுற்றிக் கொண்ட இரண்டாவது பெண்ணை வயது பாராமல் செருப்பால் அடித்தான் பக்ருதீன். 

பின்விளைவாய், பக்ருதீன் இல்லாத வேளைகளில் பெண்கள் துப்பட்டாவைத் தூர எறிந்தார்கள்.  மிடி அல்லது நைட்டியில்  பால்கனியில் நின்றபடி ரோட்டில் வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டனர்.  தோழிகளின் பெயர்களில் ஆண் நண்பர்களின் மெசேஜ்கள் தொடர்ந்து வந்தன.  ஒவ்வொரு மெசேஜ் டோன் கேட்கும்போதும் பச்சை பச்சையாக திட்ட ஆரம்பித்தான் பக்ருதீன்.  ’அப்பா என் ஃப்ரெண்ட் குட்மார்னிங் சொல்றா, அது ஒரு தப்பா ?’ என்ற மூன்றாம் பெண் கன்னத்தில் ஐந்து விரல்களும் அழுந்தப் பதிய அறைந்தான் பக்ருதீன்.

ஆசை ஆசையாய் ஈன்ற பையன் படிப்பிலும், விளையாட்டிலும் படு மந்தமாக இருந்தான்.  மாறாக சதா திட்டு வாங்கிக் கொண்டிருந்த பெண்கள் ஓரளவு படித்தனர்.  வாழ்க்கை வட்டமல்லவா அதற்கு மதமேது, சாதியேது ?  கீழிருந்து மேலே போகும் வாழ்க்கைத்தரம் உச்சிக்கு போனவுடன் சரியத்தான் ஆரம்பிக்கும்.  பக்ருதீனுக்கு பல போட்டியாளர்கள் உருவாகினர்.  பிஸ்கட் டிமாண்ட் சரிந்தது.  பக்ருதீன் தேமுதிகவில் வேறு ஆர்வம் காட்டத் தொடங்கிய நேரமாதலால் குவாலிடியில் கவனத்தைக் கோட்டை விட்டான்.  எம்.ஆர் நகர் இடத்தை விற்று மூத்த பெண் திருமணத்தை விமரிசையாய் முடித்துவிட்டான், ஆனாலும் கடன் பெருஞ்சுமையாய் தலையில் ஏறியிருந்தது.  ஆயிசாவின் எல்லா நகைகளும் அடமானத்துக்குப் போயின. 

சில மாதங்களிலேயே வீட்டு வாடகை கொடுக்கக் கூட காசு புரட்ட முடியாத அளவு நிலைமை மோசமடைந்தது.  வாரிசின் ட்யூசன் ஃபீஸ் கட்டாததில் அந்த வருடம் ஃபெயில் ஆனான்.  துணைத் தேர்வில் எப்படியோ பாஸ் ஆனாலும், இவன் ஸ்கூல் பெயரைக் கெடுத்தாலும் கெடுப்பான், காலாண்டுத் தேர்வில் ஆல் பாஸ் ஆகாவிடில் டிசி கொடுப்போம் என அந்த பிரபல பள்ளி பக்ருதீனை மிரட்டியது.  பையனை படிக்க வைத்து டாக்டாராக்கும் கனவு பொய்த்து க்ளார்க்காவது அவனை ஆக்காவிடில், வைராக்கியம் தோற்குமே எனப் பயந்தான். இந்த அழகில் கார்ப்பரெஷன் தேர்தலில் தேமுதிக சார்பில் கவுன்சிலர் போஸ்டில் நிற்க டிக்கெட் கேட்டான்.

தொகுதியில் நல்ல அறிமுகம் என்ற நம்பிக்கையில் முரட்டு வட்டிக்கு பணம் வாங்கி தேர்தலில் செலவழித்தான்.  அடமான நகைகள் சில்வற்றை மீட்டு விற்றான்.  ஆயிசா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள், இரண்டு பெண்களுக்கு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டதே என சதா பக்ருதீனை தூற்ற ஆரம்பித்தாள்.  பக்ருதீனுக்கு டெபாஸிட் தொகை கூட கிட்டவில்லை.  என்னதான் பக்ருதீன் நண்பர்களாக இருந்தாலும், இரட்டை இலையை மக்களால் புறக்கணிக்க முடியவில்லை.  அன்று இரவு புலம்பிய ஆயிசாவின் தலைக்கு குறிவைத்து வீசிய இரும்புபைப்பை அவள் கையால் தடுத்ததில் அவள் எலும்பு முறிந்து, வளையல்கள் நொறுங்கி...........பையன் முதன்முறையாக அப்பாவை எதிர்த்துப் பேசினான்.  ’எங்கம்மாவ நாங்க பாத்துக்குறோம், நீ வெளிய போ’ என்று பையனும், இரு மகள்களும் கத்தினார்கள்.  அன்று குடித்து ப்ளாக் அவுட் ஆனான் பக்ருதீன்.

அதென்னமோ, பக்ருதீனுக்கு மற்ற பெண்டிர் மீது எந்தப் பற்றும் ஏற்படவில்லை.  இந்த ஒரு குணமே மீண்டும் மீண்டும் ஆயிசா, அவனை மன்னித்து ஏற்க வைத்தது. ஆனால், இப்போது வீட்டில் அவனை யாரும் மதிப்பதில்லை.  பெண்களிருவரும் தம் பாய்ஃபிரெண்டுடன் செல்லில் தைரியமாக அப்பா முன்னால் உரையாடினர்.  வீட்டு நிலைமையில் வேலைக்கும் ஆயிசாவால் அனுப்பிவைக்கப்பட்டனர்.

பெண்கள் சம்பாதிக்க ஆரம்பித்ததும் இன்னும் துணிந்தனர்.  ஜீன்ஸ் & டி.ஷர்ட்டில் வேலைக்குப் போன அந்தப் பெண்கள், ஆண் நண்பர்களுடன், சமயங்களில் பைக்கில் உலா வருவது பக்ருதீன் காதுக்குப் போனது. ஆனால், அதைப் பற்றி பேச வாயெழுப்பினாலே ஆயிசா தடுத்தாள்.  அப்போதுதான் இந்தக் கதைக்கான தலைப்பை அக்கப் பக்கத்தினர் பேச ஆரம்பித்தனர்.  பெண்களின் அழகும், நவ நாகரீக உடைகளும், எந்த ஆண்களிடமும் துணிந்து அடிக்கும் கிண்டல் பாணி பேச்சும், அப்பன் இருக்கும் நிலையில், இவனை நம்பினால் ஆயுள் முழுக்க திருமணமாகாது, எனவே இவர்களாக எவனையாவது இழுத்துக் கொண்டு ஓடிவிடுவார்கள் என்றே பரிபூர்ணமாக நம்பினர்.

செல்லமகன், தட்டுத்தடுமாறி கல்லூரி வரை வந்துவிட்டான்.  ஆனால் கல்லூரி சகவாசம் அவனை  ஊதாரியாகவும், முரடனாகவும் மாற்றியது.  அப்பாவின் சொற்ப சம்பாத்தியம் பாக்கெட் மணிக்கு கூட பத்தாது, செலவு செய்வதெல்லாம் அக்காள்களின் வியர்வை என்பதை அவன் உணரவே இல்லை.  அப்பாவை மிரட்டி யமஹா பைக் ஒன்றை வாங்கி, ஏஞ்சலினாவுடன், ஈசிஆர் ரோட்டில் பறந்தான்.  ஏஞ்சலினா கேர்ள் ஃப்ரெண்ட்.  ஆயிசாவிடமிருந்த இருந்த ஒரே ஒரு கருகமணி சங்கிலி விற்றாயிற்று.  அதென்னமோ எத்தனை அடிவாங்கினாலும், வதைபட்டாலும், பெண்களுக்கு மட்டும் அப்பா மீது ஏதோ ஒரு பாசம் ஒட்டிக்கிடந்தது.  அடிவாங்கிய மறு நாளே அப்பா நல்ல மூடில் வாங்கிக் கொடுக்கும் தம்காரூட்டும், மொய்ங்கா அத்தோவும், பண்டிகை காலங்களில் கிடைக்கும் பரிசுகளாலும் இருக்கலாம் போல !

இப்போதெல்லாம் பக்ருதீனால் வேகமாக நடமாடவோ, அடுப்படியில் நின்று பிஸ்கட் சுடவோ முடிவதில்லை.  மூட்டுத் தளர்வும், ஆஸ்துமாவும் அவனை வெகுவாக முடக்கிப் போட்டது.  ஆனால், மகள்கள் அவனை அக்கறையாக கவனித்துக் கொண்டனர்.  தனியார் மருத்துவமனைகளில் தங்க வைத்து நல்ல சிகிச்சைகள் கொடுத்தனர்.  ஆயிசா தன் மகள்களின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கப் போவதில்லை என எத்தனையோ முறை  நாசூக்காக சொல்லியபோதும், பெண்கள், ’ஒருபோதும் உங்களை மீறி எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை’ என்றும், ’கல்யாணம் எனில் அது நீங்கள் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையைத்தான் கட்டுவோம், அதுவும் இப்ப திருமணத்திற்கு அவசரமே இல்லை, மீண்டும் நம் வாழ்வுத்தரம் உயரும்வரை உழைக்கப்போவதாகவும்’ சொல்லினர்.

”அம்மா, சாயங்காலம் ஆபிஸ்லருந்து வர்றப்ப, அப்பாக்கு தம்புச்செட்டித் தெரு போயி, சங்கு மார்க் லுங்கிங்க வாங்கிட்டு வருவேன், லேட்டாயிடுச்சுன்னு போன் போடப் போற” என்று கிளம்பினாள் வேலைக்கு இரண்டாம் மகள், ரம்ஜான் வந்துடுச்சுல்ல !!!
 
                                            == முற்றும் ==   

    

     


  


   
 


   


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக