ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா ( நாவல் மதிப்புரை)

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

 
Image result for sujatha rangarajan

வாத்தியாரின் எழுத்துக்கள் என்றுமே சலிப்பூட்டாதில்லையா..........ஆனால், மற்ற சில ஆளுமைகளின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்த பின், சுஜாதாவின் வெகு எளிய நடையை மீண்டும் வாசிக்க நேர்கையில், அவர் மேலிருந்த பிரமிப்பு கொஞ்சம் சரிய ஆரம்பிக்கும், ஆனால் அதுதான் சுஜாதாவின் பலம். அவர் என்றுமே அறிவுஜீவி(!)களைத் திருப்திப் படுத்த நினைத்ததேயில்லை :)
 

சுஜாதாவின் ’ரத்தம் ஒரே நிறம்’ எனும் இந்த நாவல், அவருடைய ’க்ளாஸிக்’ வகையைச் சார்ந்தது எனலாம். 1857ல் நம் இந்தியாவின் ’முதல் விடுதலைப் போர்’ என அழைக்கபடும் ’சிப்பாய்க் கலகம்’ பின்னணியில், தனக்குக் கிட்டிய ஆதாரங்கள் மூலம், ஓர் அருமையான வரலாற்றுப் புதினத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்.
 

குமுதத்தில் 1982 - 1983களில் தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல் இது. இந்தத் தொடர்கதைகளை இப்படி நாவலாக வாசிக்கும்போது ஒரு சில நெருடல்கள் இருக்கத்தான் செய்யும். அப்பேற்பட்ட பொன்னியின் செல்வனே இறுதிப் பாகங்களில் என்னை வதைக்க ஆரம்பித்தது என்றால் நம்ப முடியுமா உங்களால் ?

அதாவது வாரா வாரம் முடிக்கும்போது, வாசகர்களுக்கு ஏதாவது ஒரு சஸ்பென்ஸ், அதிர்ச்சி, எதிர்பார்ப்பு என்பதை கொடுத்தேதான் ஆகவேண்டுமென்கிற நிர்பந்தம் தொடர்கதைகளுக்கு உண்டு. சரி இதை நாவலாக பதிக்கும்போது, எடிட் பண்ணி, நாவலை இன்னும் மெருகேற்றிச் செதுக்கலாம்தான், ஆனால் அதை எழுதியவர்க்கு வேறு வேலைகள் இல்லாமல் ஃப்ரீயாக இருந்திருக்க வேண்டும்.

சுஜாதாவுக்கு இறுதிவரை அப்படி ஓர் ஓய்வு கிட்டியிருக்கச் சாத்தியமேயில்லை என்பதால், இந் நாவலிலும், ஒவ்வோர் அத்தியாயத்தின் முடிவிலும், இப்படித் தேவையேயில்லாத சஸ்பென்ஸெல்லாம் வந்து கொஞ்சம் நம்மைச் சிரமப்படுத்தப் பார்க்கிறது, அவ்வளவுதானேயொழிய, சுஜாதாவை ’இலக்கியவாதி இல்லை’ என மறுதலிக்கும் ’மேதை’களைக் கூட , கவரும் விதத்தில்தான், இந்த வரலாற்றுப் புனைவைக் கொண்டு சென்றிருக்கிறார் !

(குமுதத்தில் முதலில் ’கருப்பு சிவப்பு வெளுப்பு’ எனும் பெயரில் வந்து, நாடார் சங்கங்களின் அதி பயங்கர மிரட்டலால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டு, ஆறு மாதங்களுக்குப் பின்னர் வேறு பெயரில் வந்த அதே தொடர்தானாம் இது, அந்தக் காமெடிக் கதையை இறுதியில் சொல்கிறேன்)

நாவலில் வரும் பல சம்பவங்கள் அற்புதமாக இருக்கிறது, இதை எப்படி படமாக்காமல் விட்டார்கள் என விளங்கவில்லை, ஏனென்றால் சுஜாதா இதை ஒரு திரைக்கதை வடிவத்தில் மிக எளிதில் எழுதிக் கொடுத்திருக்க முடியும், காரணம் சுஜாதாவின் எழுத்து நடை ’ஒரு பீரியட் படமாய்’ நம் கண் முன்னே அழகாய் விரிகிறது. ஆனால் பெரும்பொருட்செலவு, சினிமாவுக்காக சிலப் பல பொய்களை சேர்த்திருக்க வேண்டும், என்ன சேர்த்தாலும் படம் ’ஹேராம்’ போல, ’சிறைச்சாலை’ போலவே அட்டர் ப்ளாப் ஆகும் :(

ஆனாலும் குறும்படங்களை தயாரிக்கும், இயக்கும், நடிக்கும் ஆர்வலர்களுக்கு இதில் கருக்கள் பொக்கிஷங்களாய்க் கொட்டிக் கிடக்கிறதென்பேன் :)

சரி, இதை யாராரெல்லாம் அவசியம் வாசிக்க வேண்டுமெனக் கேட்டால், நான் பரிந்துரைப்பது, காந்தி & அவருடைய அஹிம்சைக் கொள்கையை வெறுப்பவர்கள், நேதாஜி, பகத் சிங், வாஞ்சிநாதன் தேர்ந்தெடுத்த பாதைதான் சரி என நம்புவர்கள்..............(ஏனென்றால், அப்போது சிறிதும் ஒருங்கிணைப்போ, ஒற்றுமையோயில்லாதிருந்த நம் இந்தியச் சமூகத்தை நம்பி, ’வெள்ளையனுக்கு எதிராக ஆயுதங்கள் மட்டுமே சரி’ என நாம் நம்பியிருந்திருந்தோமேயானால், வெள்ளையன் போய் நம்மை ஜெர்மானியனோ, ஜப்பானியனோத்தான் ஆண்டிருப்பானேயன்றி, நம்மால் விடுதலை மட்டும் ஒருபோதும் அடைந்திருக்கவே முடியாது என்பது திண்ணம், என் எண்ணம்)

சுருக்கமாகச் சொல்லத்தான் ஆசை, இருந்தாலும் நம் வாழ்க்கையில் அறிந்தே ஆக வேண்டிய மிக முக்கியமான வரலாறு இதுவென்பதால் என் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கொஞ்சம் தெளிவாகவே சொல்லிவிடுகிறேன் !

முத்துக்குமரன் கதாநாயகன். இப்போதைய சென்னையின் புற நகர் அல்லது அப்போதைய சென்னைக்குத் தொலைவிலிருந்த ஒரு கிராமத்தில்(ஆலப்பாக்கம்) வாழும் எளிமையான விவசாயி. சிலம்பத்தில் தேர்ச்சி பெற்ற குடும்பம் முத்துக் குமரனுடையது. ஊர்க் கோயில் திருவிழாக்களில் முத்துக்குமரன் சுற்றும் சிலம்பாட்டத்தை ரசிக்காத ஊரார் கிடையாது. அதே போல், சிலம்புச் சண்டையில் முத்துக்குமரனை வென்றாரும் இதுவரை சுத்துப்பட்டி கிராமத்தில் யாருமில்லை.
 

ஒரு மோசமான நாளது :( திருவிழாவில் சிலம்பாட்டம் முடியும் வேளை. ராணுவப் பயிற்சியை முடித்துவிட்டு, தன் குழுவுடன் அந்த ஆலப்பாக்கம் கிராமம் வழியே சென்னைக்குச் சென்றுக் கொண்டிருக்கிறான் வெள்ளைக்காரன் எட்வர்ட் மக்கின்ஸி(வில்லன்)

பொதுவாகவே கருப்பர்கள்(இந்தியர்கள் அல்லது தமிழர்கள்) என்றால் அவனுக்கு பெரும் இளக்காரம் உண்டு. ’அடிமைகள், தங்களுக்குள்ளேயே பெரிய ஏற்றத் தாழ்வு பார்ப்பவர்கள், பழஞ் சடங்குககளை எந்த எதிர்ப்பும் காட்டாமல் அப்படியே நம்புவர்கள், மிக மிக பிற்போக்குத்தனம் கொண்டவர்கள், சுய நலத்துக்காக தன் சொந்தங்கள் அழியக்கூடக் காட்டிக் கொடுப்பவர்கள், பெண்களை விலங்குகளைப் போல் நடத்துபவர்கள்’..................இப்படியாக !

அப்படிப்பட்ட ஓர் இனத்தில், கம்பு சுத்துவதில் ஒரு கருப்பன் ’அப்பாடக்கர்’ என்று சொன்னால் மக்கின்ஸிக்கு பொறுக்கவா செய்யும் ?

"யாரும் வெற்றி பெற முடியாது என்று சொல்கிறீர்களே, நான் ஒரு நிமிடத்தில் இவனை வீழ்த்திக் காட்டுகிறேன்" என தன் குழுவினரிடம் சவால் விட்டுவிட்டு, முத்துக்குமரனோடு, கம்பெடுத்து களமாட குதிக்கிறான் மக்கின்ஸி, செம போதை !

தாறுமாறாக, முறையில்லாமல் கம்பைச் சுற்றி, முத்துக்குமரனை மக்கின்ஸி தாக்க முற்படும் போதும், அதை லாவகமாகத் தடுத்து, மக்கின்ஸியின் கம்பைத் தட்டி விடுவதோடு மட்டுமல்லாமல், அவனை மண் கவ்வவும் வைக்கிறான் நாயகன்.

தன் தலைமையின் கீழுள்ள ஒரு சிறுபடை முன் அவமானப்பட்ட மக்கின்ஸிக்கு போதை சரேலென இறங்கி, வன்மம் ஊற்றெடுக்கிறது. எழுந்து, மண்ணைத் தட்டிக்கொண்டு, தன் உடைவாளை உருவி, முத்துக்குமரன் மேல் பாய்கிறான் மக்கி.

ஆரம்பத்தில் விளையாடுகிறான் என அவதானிக்கும் முத்துக்குமரன், மக்கின்ஸியின் கண்ணிலிருந்த வெறி கண்டு அஞ்சுகிறான். வாளை தன் கம்பால் தடுக்க, அறுபடுகிறது கம்பு. நிராயுதபாணியான முத்துக்குமரன் மேல் பாயப் போன வாளை, சரியாய் குறுக்கே பாய்ந்து தன் மேல் வாங்கிக் கொள்கிறார் முத்துக்குமரனின் தந்தை, முதியவர்.

தன் கத்திக்கு இப்போதைக்கு ’ஓருயிர்’ போதுமென நினைத்து, மக்கின்ஸி தன் பரிவாரங்களோடு, பரியேறிப் பாய்ந்தோடுகிறான்.

தன் அப்பனுக்கு ’அழையா எமனாய் வந்த மக்கின்ஸி’யை அதே போல் துடி துடிக்கக் கொன்று பழிவாங்க வேண்டுமென சபதம் எடுக்கிறான் முத்துக்குமரன். மக்கின்ஸியைத் தேடி சென்னைப் பட்டணம் வருகிறான்.

இது கரு.

இந்தக்கதைக்கு, ஹீரோயின், காமெடியன், நண்பன், நண்பனின் காதலி, ’வெள்ளைக்காரன் என்ன செய்தாலும் தப்பில்லை’ என நம்பும் வெறிகொண்ட ஆளுநர், அதிகார ருசியை வெள்ளைக்காரனால் இழந்து, அதற்காக ’விடுதலைப் போராளி’யாக அவதாரமெடுக்கும் சிற்றரசர், மதப் பாசமிக்க அவருடைய தளபதி, ஈவிரக்கமில்லாமல் அப்பாவி இந்தியர்களைக் கொல்லும் வெள்ளையர்கள், அவர்களுக்கு சிறிதும் குறையாமல் அப்பாவி வெள்ளையர்களை கொல்லும் இந்தியர்கள் ......... என மேலும் பலருண்டு.

மக்கின்ஸி, அப்போதைய சென்னை கவர்னர் நீல் எனக் ஈவிரக்கமில்லா கொடியவர்களுக்கு மத்தியில் ஆஷ்லி எனும் நல்ல வெள்ளைக்காரர்களைப் பற்றியும் சுஜாதா சொல்லத் தவறவில்லை. இன்னிக்கு ஈ வி கே எஸ் இ, தமிழ்நாட்டுத் தலைவரா இருக்கிற காங்கிரஸ்ச ஆரம்பிச்சது, ஆஷ்லி போன்ற கொஞ்சம் நெஞ்சில ஈரமிருந்த வெள்ளைக்காரங்கதானே ?

இந்த ஆஷ்லி பார்வையில், அப்போதைய நம் இந்தியாவில் இருந்த வறுமை, பஞ்சம், கொடூரமான பழஞ் சடங்குகள் பற்றியெல்லாம் அங்கலாய்க்கிறார் ஆசிரியர். வெள்ளைக்காரர்கள் தரும் கூலிக்காக நம்மாட்கள் அவர்களுக்கு ‘எந்த’ வேலையையும் செய்து கொடுக்க தயாராக இருந்திருக்கின்றனர். வெள்ளைக்கார அதிகாரிகள் மாலை வேளை உல்லாசத்திற்காக இப்போதைய சென்னை பூக்கடை பகுதியில் நிறைந்திருந்த விபச்சார விடுதிகளுக்கு அழைத்துச் செல்ல பல்லக்குகளும், ஏஜண்ட்களும் உண்டு.

அதிலும் சேரி ஆங்கிலோ இந்திய வம்சம் பற்றிச் சொல்லப்படும் கதைகள் அதிர்ச்சி ரகம். ஊராரால் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்படும் பெண்களுக்கு பொன்னிற கேசமும், நீலக்கண்களும் கொண்ட வெள்ளை வெளேர் குழந்தைகள், வெள்ளைக்காரர்களின் மாளிகையின் ஒதுக்குப்புறங்களில் பிறக்கின்றன, ஆனால் அக்குழந்தைகளும் தீண்டத்தகாதவர்களாகவே ஒதுக்கப்பட்டு எந்த வித பராமரிப்பில்லாமலேயே வளர்கின்றன :(


வெள்ளையர்கள் குற்றவாளிகளுக்கு கொடுக்கும் தண்டனைகள், அப்போதுவரை இந்திய நடைமுறையில் இருந்தவைகள்தான், ஆனால் மனித நேயம் என்றெல்லாம் சீன் போடும் அவர்கள், தங்கள் காரியத்துக்காக அவைகளை அப்படியேத் தொடர்ந்திருக்கிறார்கள். யானையின் முன்னங்காலை உயர்த்தி, அப்படியே சொத்தென கல்மேடையில் வைக்கப்படும் குற்றவாளிகள் தலைகளின் மேல் இறக்க வைத்து நசுக்கியிருக்கிறார்கள், மாட்டு வண்டி அல்லது யானை (கிட்டினால்) & மரத்தில் கயிறு கட்டி, இன்ஸ்டண்ட் தூக்கு மேடைகளாக உபயோகித்து, பலரைக் கொன்றழித்திருக்கிறார்கள், பீரங்கி வாயில் பலர் உடல் கட்டப்ப்பட்டு, சுட்டு பீஸ் பீஸாய் சிதறடித்திருக்கிறார்கள் :(


 

( ’வந்தார்கள் வென்றார்கள்’  மதன் எழுதிய நூலில், முஸ்லீம் அரசர்கள் தன் எதிரிகளுக்கு கொடுத்த தண்டனைகளை வாசித்தால் நிச்சயம் இரண்டு நாட்கள் உங்களுக்குச் சோறு இறங்காது. ச்சும்மா சாம்பிளுக்கு ஒன்று ;) -

குல்பர்கா சுல்தான், தன்னைக் கொல்ல முயன்ற ஒருவரின் உடலிலிருந்து ’தோல்’ உயிரோடு பப்ளிக்காய் உரிக்கப்படுகிறது, பிறகு அந்த தோலுரித்த உடலின் மேல் மசாலா பூசப்படுகிறது. அவன் தலையை மட்டும் வெட்டி, கோட்டையின் உச்சியில் ஒரு குத்திட்டியில் செருகி பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. அதன்பின் உடலை துண்டு துண்டுகளாக வெட்டி, எண்ணெய்ச் சட்டியில் பொறிக்கப்பட்டு, அவனுடைய குடும்பத்தார்கள் வாயில் திணித்து உண்ணச் செய்யப்படுகிறது)

கல்கத்தா கரையோரமாக ஒரு ’சதி’ (உடன்கட்டை) நிகழ்வை பார்ப்பதாக ஒரு காட்சியைச் சொல்கிறார் சுஜாதா. தீவிர ஹிந்து மத ஆதரவாளர்களையும் சற்றே வெட்கப்படச் செய்துவிடும் அந்தப் பத்திகள் :(


ஓர் இளம் விதவை, இறந்த கணவன் உடல் அடியில் இறுக்கக் கட்டப்பட்டு, அதன் மேல் விறகுக் கட்டைகள் கொண்டு மூடி எரியூட்டப்படுகிறாள். ஆஷ்லி அதை தடுக்க முற்படுகையில், மக்கின்ஸி அவனை அடக்குகிறான்.
" நாம இதுபோல அவங்க மதச் சடங்குகள்லல்லாம் தலையிடுறதாலத்தான், ’வேற்று மதக்காரன் ஏன் நம்ம மத நம்பிக்கைகள்ல தலையிடுறான் ?’ ன்னு இன்னிக்கு நமக்கு எதிராகவே துணிந்து ஆயுதத்த தூக்கிகிட்டு நிக்குறாங்க, உன்னைப் போன்ற அதிகப்பிரசங்கிங்க இங்க வந்தமா, வந்த வேலையப் பாத்தமான்னு இல்லாம இப்படி ஊரத் திருத்தறேன்னு கிளம்பறதால நம்ம ராணிக்கு எவ்வளவு வீண் செலவு, உயிரிழப்புன்னு யோசிச்சிருக்கியா நீ ?

அவனுங்களே இத உற்சாகமா கைதட்டி ரசிச்சி பாக்குறப்ப, நாமளும் அப்படியே ரசிச்சிகிட்டு போக வேண்டியதுதான ? இதுல என்ன மனித நேயம், மயிரு நேயம் ?"   இப்படி மக்கின்ஸி தனக்குச் சற்றே கீழ் நிலை அதிகாரியான ஆஷ்லியிடம் பொங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ’டப்’ என்று ஏதோ ஒரு வெடிக்கும் சத்தம். உடனே அந்த உடன்கட்டையை சதி மாதா வழிபாடாய் உற்சாகம் பொங்க வழிபாடு செய்துக் கொண்டிருந்த பொது மக்கள் உற்சாகத்தோடு ஓங்கிக் கத்துகிறார்கள், நாடு சுபிட்சமாகும், மழை பொழியும், காடு கரை நன்கு விளையுமென்று !


’ என்ன சத்தம் அது ?’ என விசாரித்த ஆஷ்லிக்கு கிட்டத்தட்ட வாந்தி வருகிறது. சிதையில் இருந்த யாரோ ஒருவரின் ’மண்டை’ நெருப்பால் வெடித்த சத்தம்தானாம் அது :( மிரண்டு அந்தக் காட்டு மிராண்டிக் கும்பலை கடக்க முற்படுகையில் அந்த இரண்டாம் ’டப்’ சத்தமும் கேட்டுவிடுகிறது, மக்கள் இன்னும் ஓங்கி ஆர்ப்பரிக்கிறார்கள், ’இது போல் இரண்டு தலைகளும் வெடித்துச் சத்தம் கேட்பதென்பது அரிதிலும் அரிது, நற்சகுணம், நற்சகுணம்’ :( :( :(

சரி, இந்த சிப்பாய்க் கலகம் என்றால் என்ன ?  நிச்சயம்

நமக்கு இது தெரியும்தான் என்றாலும் மறந்திருப்போம், அல்லது மூளையில் ஓர் ஓரத்தில் எங்கோ உறைந்திருக்கும். கொஞ்சம் கிளறிவிடுகிறேன் :)


வெள்ளையர்கள் இந்தியாவிற்குள் கிழக்கிந்தியக் கம்பெனியாக( டைமிங்க்கா சொல்லணும்னா ’கொக்கோ கோலா’ கம்பனி இப்போ இந்தியாவில் வந்தது போல) வாங்க, விற்க வந்தவர்கள்.முதலில் இங்கு ஆண்டுக் கொண்டிருந்தவர்களிடம் அனுமதி கேட்டு பொருட்கள் விற்றார்கள், பண்ட மாற்று முறையில் பொருட்களை வாங்கி கப்பல்கள் மூலம் தங்கள் நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். பிறகு ஆண்ட ராஜாக்காளுக்கு ஃபாரின் பொருட்களைப் பரிசளித்து, குத்தகைக்கு நிலம் வாங்கினர்.

அங்கு பொருட்களை ஸ்டாக் வைத்தனர். ஸ்டாக்குகளை காவல் காக்க கொஞ்சம் படைகளை இங்கிலாந்திலிருந்து வாடகைக்கு தருவித்தனர். செலவு கட்டாது போக, அந்தப் படையினரைக் கொண்டே, இங்கு இந்தியாவில் ஆட்களைத் தேர்ந்தெடுத்து ராணுவப் பயிற்சி கொடுத்தனர். பிறகு இந்திய ராஜாக்களுக்கு அந்தப் படையை வாடகைக்கு விட்டு போர்களில் பங்கு கொண்டனர்.

வென்ற ராஜாக்கள் கொடுத்த பரிசாக பல ஊர்களை நிர்வகிக்க அனுமதி பெற்றனர். சிறுகச் சிறுக ராணுவ பலம் பெற்றபின், இங்கிலாந்து ராணியில் கருணையின் பேரில், ஆரம்பத்தில் நேரடி வாரிசில்லாத இந்திய அரசர்களை(ஜான்ஸி ராணி, இந் நாவலில் வரும் நானா சாஹேப்......)பிறகு ஒத்துவராத பல இந்திய அரசுகளை(கட்டபொம்மன், திப்புசுல்தான், மருது ப்ரோஸ்..........)அழித்தொழித்து, இங்கிலாந்து அரசி நேரடியாய் இந்தியாவை நிர்வகிக்க வைக்குமளவு வளர்ந்தனர். இங்க நிற்க !


1857 ல் இங்கிலாந்தின் என்ஃபீல்டு நிறுவனம், தன்னுடைய புது வெர்ஷன் போர்த் துப்பாக்கி ஒன்றை வெளியிடுகிறது. அது ஐரோப்பாவில் மிகப் பிரபலமான பின்னர், இந்தியாவிலிருக்கும் வெள்ளையர் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறது. அதுவரை துப்பாக்கியின் காட்ரிட்ஜ்களை திறக்க(அப்போதெல்லாம் காட்ரிட்ஜ்களை வாயால் கவ்வி பிடித்திழுத்து, அதன்பின்னர் ஒவ்வொரு குண்டுகளாய் உள்ளே நுழைத்து சுட வேண்டுமாம்) குண்டுகளை நுழைத்து, அது வழுக்கி உள்ளே செல்ல, வெஜ் எண்ணெய்யை தடவி வைத்திருப்பார்களாம்.

 

இந்தப் புது வெர்ஷனில் குண்டுகள் இன்னும் சுலபமாய் வழுக்கிக் கொண்டுச் செல்ல, பன்றிகளின் கொழுப்பைத் தடவி வைத்தார்களாம், உண்மையில் இதன் ரிசல்ட் அபாரம். ஆனால் இது வேண்டுமென்றே இந்துக்கள்(குறிப்பாக பிராமணர்கள்) & முஸ்லீம் சிப்பாய்களின் மனத்தை நோகடிக்க கிருத்துவ வெள்ளையர்கள் செய்யும் சதி என சேதி பரப்பப்படுகிறது. அதே போல் வடக்கில் பல ரெஜிமெண்ட்களில் வெள்ளையரில்லாத பல பிராமண, முஸ்லீம் சிப்பாய்கள் இந்த என்ஃபீல்டு துப்பாக்கிகளை தூக்கிப் போட்டுவிட்டு, வேலை நிறுத்தம் செய்யப் போவதாக எச்சரிக்கிறார்கள். அகப்பட்ட ஒன்றிரண்டு ஏமாளிச் சிப்பாய்களை பொதுவில் தூக்கிலிட்டுக் கொன்று, வெள்ளை ராணுவம் முளையிலேயே இதைக் கிள்ளப் பார்க்கிறது. ஆனால் அது பிள்ளையார் பிடிக்க இயேசு நாதரை சிலுவையில் வைத்து அறைந்த கதையாகிறது :)


1857 ல் இந்தியாவில் இருந்த வெள்ளைக்காரர் ராணுவத்தில் பல லட்சம் பேர் இருந்தனர். கல்கத்தா படையில் மட்டுமே ஒரு லட்சம் பேருக்கு மேல் இருந்தனர். படையில் வெறும் பதினாலாயிரம் பேர் மட்டுமே வெள்ளையர், மீதி அனைவரும் ஹிந்துக்கள், பிராமணர்கள், முஸ்லீம்கள், எல்லோருமே ஆயுதப் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள். வெகு வேக வேகமாக கிருத்துவ மதம் இந்தியாவில் பரவிக்கொண்டிருந்த தருணமது.

 

( இங்கு அந்த ’மங்கள் பாண்டே’ வருகிறார், அவர்தான் முதல் பலியாடு. இந்தப் பிராமண சிப்பாய், தன் பின்னால் மொத்த இந்திய சிப்பாய்க் கூட்டமே அணிவகுக்கும் என கனவு கண்டு சில வெள்ளை ராணுவ அதிகாரிகளைச் சுட்டுக் கொன்று விடுகிறார், ஆனால் வழக்கம் போல நம்மாட்கள் பயந்து அவனுக்கு பின்னால் போகாமல் வெள்ளையருக்கு பயந்து அமைதி காக்கிறார்கள்)

அப்போதைய (உ.பி. மாநிலம்) கான்பூர் அரசை ஆண்டுக்கொண்டிருந்தது 'நானா சாஹேப்'. வெள்ளையர்களுக்கு சொம்படிப்பவர். அவருடைய தளபதி 'தாத்யா தோப்பே'. பெரு வீரர்.


"ஹிந்து ராஜ்யம் இப்படி வீழ்வதை சகிக்கப் போமோ ? நீங்கள் ராஜாவாய் இருந்து என்ன பயன் ?  நாட்டைச் சுரண்டி வளமாய் வாழ்பவன் வெள்ளையன்தானே , அவன் வைத்திருக்கும் ராணுவத்தில் இருப்பவர்கள் எல்லோருமே நம்மாட்கள், பிறகென்ன அவர்களை அடித்துத் துரத்தவா முடியாது ? அப்படி வெள்ளைக்காரன் தோற்றோடினால் அவன் இங்கு கொள்ளையடித்து வைத்திருக்கும் அத்தனை சொத்துக்களும் உங்களுடையது" என நானாவை சில ரகசியப் புரட்சியாளர்கள் சந்தித்து உசுப்பேத்த, அகண்ட கான்பூரை ஆளப்போகும் கனவில் ’நானா சாஹேப்’ தன் ஆங்கிலேய விசுவாசத்தை மறந்து அல்லது ஒதுக்கி, ’ திடீர் ’விடுதலை வீரர் ஆகிறார் ;)

 

வட இந்தியவில் மிக முக்கியமாக கல்கத்தாவிலிருந்து, காசி, கான்பூர், லக்னோ போன்ற ஊர்களில், நானாவின் தலைமையில் மிக மிக ரகசியமாக, வெள்ளையர் ராணுவத்தில் இருக்கும் வெள்ளையரல்லாத எல்லாச் சிப்பாய்களுக்கும் புரட்சிக்காக ரகசிய தகவல்கள்கள் பரப்பப்படுகின்றன. இதில் வெள்ளையர்கள் மிக மோசமான நிலையை முதலில் அடைவது கான்பூரில்தான்.  


நானா சாஹேப் அதுவரை கான்பூரின் ஜெனரல் ’வீலர்’ அவர்களுக்கு நண்பர் என்றே அறியப்பட்டு வந்ததால், வீலர், ’நானாவை மீறித்தான் சிப்பாய்கள் வெள்ளையர்களுக்கு எதிராக அணிவகுத்திருக்கிறார்கள், எனவே நண்பர் நானா எப்படியாகிலும் தம்மைக் காப்பார்’ என்று நம்பினாலும், ’கலவரம் வெடிக்கப்போகிறது’ என்ற உளவாளிகள் கூற்றை ஏற்று, கான்பூர் நகரின் ஓர் ஓரத்தில் இருக்கும் ராணுவக் கட்டிடத்திற்குள், கான்பூரிலிருந்த மொத்த வெள்ளையரையும் அழைத்து வந்து பாதுகாக்கிறார்.  


குட்டிக் கோட்டை போன்ற ஓர் இடம் அது. சிவில் வெள்ளையர்கள், பெண்கள், குழந்தைகள், அரசு அதிகாரிகள், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதியவர்கள், கொஞ்சமே கொஞ்சம் வெள்ளை ராணுவ வீரர்கள், இரண்டு பழைய பீரங்கிகள், ரேஷனில் உணவு.............என வெளிமாநிலங்களில் இருந்து பெரிய (வெள்ளையர்) ராணுவம் வந்து மீட்கும்வரை அக் கோட்டையை விட்டு வெளி வருவதில்லை என (உத்தேசமாக ஆயிரம் பேருக்குள்) உறுதி பூண்டு அதற்குள் காத்துக் கிடக்கின்றனர்.வீலர் கனவில் முதலில் மண்ணைப் போட்டது அவரின் வெள்ளைச் சகாக்களே.  

வெள்ளையர்களின் இந்திய கவர்னர் ஜெனரலான ’லார்ட் கானிங்’ (கல்கத்தா) வடக்கு கலவரங்களை அடக்க சென்னையிலிருந்தெல்லாம் (கவர்னர் நீல் தலைமையில்) படைகளை கப்பல்களில் வரவழைக்கிறார், ஆனால் கான்பூருக்கு முன்பாக வாரணாசி, லக்னோ கலவரங்களை அடக்குவதில்தான் முனைப்பு காட்டுகிறார். 


ஓரிரு நாட்களில் ராணுவம் வந்து தம்மை மீட்கும் எனக் காத்துக் கிடக்கும் வீலர் & கோவுக்கு தெரியாது, அவர்கள் ராணுவம் 25 நாட்கள் கழித்துதான் வரப்போகிறதென்று :( விளைவு நீல் தலைமையிலான படை கான்பூர் வருவதற்குள் என்னென்னவெல்லாம் நிகழ்கிறது ? குருதிப் புனலய்யா அது குருதிப்புனல் :(


தங்களை காப்பாற்ற வந்துவிடுவார்கள் என்றிருந்த வீலர் & கோவிற்கு நடந்த இன்னுமொரு கொடுமை என்னவென்றால், ராணுவம் சென்னையிலுந்து கல்கத்தா போக ஒன்பது நாட்கள், கல்கத்தாவிலிருந்து வாரணாசி போக 12 நாட்கள் என்றுதான் அப்போதைய போக்குவரத்து வசதி இருந்திருக்கிறது :( 

வீலர் கனவில் இறுதி மண்ணையள்ளிப் போடுவது அவருடைய நண்பர் நானா சாஹேப். கடைசியில் ஒரு மனதாக வீலர் படைகளையும், அவர் காக்கும் வெள்ளை அகதிகளையும் தாக்குவது என முடிவு செய்கிறார் நானா !  

அதுவரை வெள்ளை ராணுவத்தில் இருந்த சிப்பாய்கள் கான்பூரையே கொள்ளையடிக்க ஆரம்பிக்கிறார்கள், வெள்ளையர்கள் இருந்த வீடுகள், ஆலயங்களை தீக்கிரையாக்குகிறார்கள், கண்களில் படும் ஓரிரு முதிய வெள்ளைக்காரர்களையும் ஈவிரக்கமின்றிக் கொல்கிறார்கள். பீரங்கிகள் மூலம் தொடர்ந்து வீலரின் ராணுவக் கோட்டைக்குள் குண்டு மழை பொழிகிறார்கள்.  

கோட்டைக்குள் சிக்கிக் கொண்டு, ஒவ்வொருவராய் வரிசையாக இறந்து கொண்டே போகிறார்கள் அந்த சிவிலியன்கள்.  சவப்பெட்டி கொண்டு அவர்களை அடக்கம் செய்ய வசதியும் அங்கு கிடையாது, வாய்ப்பும் கிடையாதென்பதால், இருக்கும் ஒரு தூர்ந்த கிணற்றில் இறந்தவர்களை அப்படியே தூக்கிப் போட்டு விடுகிறார்கள், அதற்குப் பரிசாக ’காலரா’ வேறு கிடைக்கிறது. அப்போது கான்பூரில் ஜூலை மாத சராசரி வெயில் 110 டிகிரி பாரன்ஹீட் :( 

’ நானா சாஹேப்’ நம் சினிமாவில் காட்டப்படும் ராஜாக்கள் போல கவச உடையணிந்து குதிரையிலோ, யானை மீதமர்ந்தோ களத்தில் போராடும் போராளியெல்லாம் கிடையாது, அவர் பல்லாயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் கோட்டைக்குள் அமர்ந்துக் கொண்டு செய்தது ஜஸ்ட் ஒப்புதல், பணம் தருவது, இடம் தருவது, பரிவாரங்கள் தருவது, சூறையாடி வந்த தம் வீரர்களுக்கு ஐட்டம் டான்ஸ், மது, பரிசளிப்பது..............இப்படி தத்தக்கா பித்தக்காக்கள் பங்கேற்ற முதல் விடுதலைப் போரென அழைக்கப்பட்ட சிப்பாய்க் கலகம் சொதப்பலோ சொதப்பல்.  

ஆஃப்ட்ரால் வீலரின் படைகளைக் கூட பல நாட்கள் முயன்றும் நானா படைகளால் வெல்ல முடியவேயில்லை. வேறுவழியில்லாமல் வீலரை சமாதானம் பேச அழைக்கிறார் நானா. 

" மொத்த வெள்ளையர்களும் கான்பூரைக் காலி செய்துவிட்டு அலகாபாத் சென்று விட வேண்டும், அவர்களின் எல்லா கான்பூர் சொத்துக்களும் நானவுக்கேச் சொந்தம், எந்த ஒரு ஆயுதத்தையும் கையோடு எடுத்து வரக்க்கூடாது" இதெல்லாம் நானா, வீலருக்கு போடும் கண்டிஷன்கள். வீலர் அப்படி செய்தால் சிறந்த படகுகள் மூலம் எல்லா வெள்ளையர்களும் பாதுகாப்பாக அலகாபாத் சென்றுவிடலாம் என நானா உறுதியளித்திருந்ததால், வீலர் ’வரும் ஆனா வராது’ என வாட்டும் தம் படையை நம்பாமல், நானாவை நம்பி விடுகிறார். 

மறு நாள் அந்த ’புறப்பாடு’ நடக்கிறது. கான்பூர் ஊர் ஒதுக்குப்புறமாய் இருந்த அக் கோட்டையிலிருந்து ஆற்றுக்கு, எஞ்சியிருந்த ’வீலர் குழுமம்’ அணி வகுத்துச் செல்கிறது. கனமான எல்லாப் பொருட்களையும் விட்டுவிட்டு, இதுவரை ஆடிய ஆட்டமெல்லாம் ஒடுங்கி, கனவிலும் காணாத நரகத்தை விட்டு சென்றால் போதுமென அச் சிவிலியன் வெள்ளை அகதிப்படை நகர்கிறது. அதோ ஆறு, ஆம் நானா உண்மையானவர். பத்துக்கும் மேற்பட்ட பெரிய படகுகள், ’நன்றி நானா’ என்கிறார் வீலர்,  ஜீசஸ் அங்கு சிரிக்கிறார் :( 

ஜூன் 27 1857, ’சதி செளரா’ எனும் அந்த ஆற்றுத்துறையில், இந்தியர்களால் வெள்ளை அகதிகளுக்கு என்ன அநீதி, அல்லது என்ன துரோகம் நிகழ்ந்தது ? இதை அறிய கூகுள் செய்யுங்கள், அல்லது வரும் புத்தக கண்காட்சியில் இந் நூலை தவறாது வாங்கி வாசியுங்கள், இதை விட உச்ச கொடுமை, மிஞ்சிப்போன அதே வெள்ளையர்களுக்கு பீபிகரில், இதே நானாவால் நிகழ்த்தப்படுகிறது. அந்த பத்தி இதோ இப்படி வருகிறது. 

" கான்பூரை வெற்றிகரமாக தன் வசமாக்கிய நீல், அந்த பீபிகரில் வெள்ளை அகதிகள் தங்கியிருந்த கட்டிடத்திற்குள் நுழைகிறார். உள்ளே தரையெங்கும் ரத்தக் கீறல்கள். உடல்களை தலை மயிறைப் பிடித்திழுத்து வந்திருக்கிறார்கள். ரத்தம் வழிந்து ஒரு வழித்தடம் போல அவ்வுடலை தொடர்ந்து வந்திருக்கிறது.........அப்படியே வெளியே தள்ளியிருந்த ஒரு கிணறு வரை அந்த ரத்தப் பாதை தொடர்கிறது. கிணற்றருகில் நெருங்க முடியாமல் துர் வாடை.

மூக்கைப் பொத்திக்கொண்டு, அந்தக் கிணற்றை எட்டிப் பார்க்கும் நீலின் நெஞ்சு கிட்டத்தட்ட வெடிக்கிறது. இத்தனைக்கும் நீல் கல் நெஞ்சக்காரர், இருந்தும் அவர் வாழ்வில் காணாத பேரதர்ச்சி. ஆம் அந்தக் கிணறு முழுக்க, கிட்டத்தட்ட அதன் விளிம்பு வரை...... ஆம், நம்புங்கள் அதன் விளிம்பு வரை உடல்கள் :( வெள்ளைக்கார அல்லது ஐரோப்பிய பெண்கள், குழந்தைகள், முதியோர்களின் உடல்கள் :( 

" இதென்னடா வெள்ளைக்காரச் சப்போர்ட் ? "என நாட்டுப்பற்றாளர்கள் கொதிக்கக் கூடும். நிற்க. இதற்குப் பழிவாங்க நீல் தலைமையிலான ராணுவம் போடும் கோரத் தாண்டவம் இதைவிட அதி பயங்கரமாக இருக்கிறது. நானா ஊரை விட்டு ஓடியே போகிறார். தாத்யா தோப்பே அங்கிருந்து ஓடி, ஜான்ஸி ராணி படையில் சேர்ந்து, அங்கு அதே வெள்ளையரால் போரில் கொல்லப்படுகிறார். நீதி என்னவென்றால் ’அதிகார ஆயுத பலமிக்கவர்களுக்கு என்றுமே அப்பாவிகள்தான் இலக்கு’ என்பதே :(


இது வெள்ளையர் FIR ல் சிப்பாய் கலகமாகவும், இந்தியர் வரலாறில் விடுதலைப் போரின் முதல் விதையாகவும் எழுதப்படுகிறது, இரண்டுமே உண்மைதான்.

அதுவரை வெள்ளையனைக் கண்டு அஞ்சிக் கிடந்தவர்கள் முதன் முறையாக அவர்களைக் கொல்லுமளவு துணிந்திருக்கிறார்கள். இந்து முஸ்லீம் எனும் அப்போதைய பரஸ்பர பரம வைரிகள், பொது எதிரிக்காக கை கோர்த்திருக்கிறார்கள். இந்த அக்கினிக் குஞ்சே........அடுத்த 90 ஆண்டுகளில் காட்டுத் தீயாய் பரவி வெந்து தணிந்திருக்கிறது !

ஒரு சொதப்பலான, அநீதியான விடுதலைப் போர்தான் எனினும், கொஞ்சமே கொஞ்சம் வெள்ளையனை அசைத்துப் பார்த்தோம், அதன் பின் சாரை சாரையாக அவன் ராணுவத்தை இங்கு அழைத்து வந்து, நாட்டை இன்னும் சுரண்டினான். இருந்தாலும் மக்களை அப்படியே வைத்திருக்காமல் அவர்களுக்கு இன்னும் வசதிகள் (?) செய்துக் கொடுத்தால், நமக்கு விசுவாசமாக இருப்பார்கள் என அவர்கள் நம்பியிருக்கக் கூடும், அதனால்தான் அதன் பின் ஆரம்பித்த அஹிம்சைப் போராட்டத்தை, அவன் மிருகத்தனமாய் நசுக்கத் தயங்கியிருக்கக் கூடும், நான் சொலவது தவறாகவும் இருக்கலாம் என்றாலும், வரலாற்றை ஊன்றிப் படிக்கையில், நான் சொன்னதே பேரளவு சரியாயிருக்கும் என்கிற நம்பிக்கை எனக்குள்ளது !

இந்த நாவலை வெறுமனே கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, தன்னிஷ்டத்துக்கு புனையாமல் நிறைய நூல்களை வாசித்து, அதிலிருக்கும் சம்பவங்களையே சாமர்த்தியாமாய் சரியான இடங்களில் பொருத்திக் கொண்டே செல்கிறார் சுஜாதா.
 


இதில் வரும் முத்துக்குமரன், பூஞ்சோலை( நாயகி), மக்கின்ஸி, ஆஷ்லி, எமிலி, பைராகி கதாபாத்திரங்களும் நிஜம் என்பதற்கான ஆதாரங்களை காட்டுகிறார் ஆசிரியர்.

உதாரணத்திற்கு தமிழ் அறவே தெரியாத ஒரு வட இந்திய இளைஞன் பெயர் முத்துக் குமரன். அதெப்படி அவனுக்கு அந்தப் பெயர் எனத் துழாவியதில், அவன் கொள்ளுத் தாத்தா தமிழகத்திலிருந்து எப்போதோ வட இந்தியா போயிருக்கிறார். இந்த முடிச்சை சுஜாதா அவிழ்த்த வேளையில்தான் நம் நாயகன் முத்துக்குமரன் கரு ஆசிரியருக்கு உதயமாகியிருக்கிறது. 

சரி, முத்துக்குமரன் vs மக்கின்ஸி கதை என்னாகிறது ? இதற்கு நடுவே மக்கின்ஸி மனைவியை ஒருதலையாய் காதலிக்கும் உத்தம வெள்ளையன் ஆஷ்லி என இறுதியில் அனைவருமே வெல்கின்றனர்(!!!)

நீண்ட நாள் கழித்து, சுஜாதாவின் பொக்கிஷத்தை, வாசித்தக் களிப்பில், இன்னும் சில நாட்களுக்கு எதையும் வாசிக்காமல் இருக்கப் போகிறேன். ஒரு வாரமேனும் 1857 இந்தியாவில் உழல வேண்டும் எனக்கு ;)

சுஜாதா இந் நாவலுக்கான முன்னுரையில், இந்தத் தொடர்கதை முதன் முதலாக எழுதப்பட்ட போது வந்த எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.  அந்த முன்னுரைக்கே நாவலுக்கு கொடுத்த(ரூ.260/-) விலை சரியாகிப் போய்விடுகிறது, அத்துணை நையாண்டி. ஃபேஸ்புக்கில் நாமடிக்கும் ரைமிங் கமெண்டையெல்லாம் சுஜாதா 30 - 40 வருடங்களுக்கு முன்னரே அடித்துவிட்டார், பின்னே அதுதான்ய்யா சுஜாதா !

குமுதத்தில் ’கருப்பு வெளுப்பு சிவப்பு’ என்கிற பெயரில் தொடராக வெளிவந்த மூன்றாவது வாரத்தில் அது நிறுத்தப்படுகிறது.   ‘நாடார்’ சங்கத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பு அந்தத் தொடருக்கு கிளம்பியிருக்கிறது. மீறி எழுதினால் சுஜாதாவின் வலது கை துண்டிக்கப்படும், குமுதம் அலுவலகம் அடித்து நொறுக்கப்படும் என்று மிரட்டல் கடிதங்கள் போயிருக்கிறது.
 


" திடுக்கென என்னால் இடது கையில் எழுதவெல்லாம் பழக முடியாது, அதுவுமில்லாமல் ஓர் இனத்தின் மனதைப் புண்படுத்தி எழுத இதுவொன்றும் பிரஞ்சுப் புரட்சி இல்லை, எனவே தொடரை நிறுத்திவிடுங்கள்" இப்படி சுஜாதா எஸ்ஏபியிடம் சொல்லியிருக்கிறார்.


" நிச்சயம் நாடார் இனத்தை அவப்படுத்தும் எந்த அவசியமும் எனக்கில்லை, தொடர் இன்னும் சில வாரங்கள் போனால் அவர்களுக்கே இது தெரிந்துவிடுமென்றாலும், இந்தச் சூழ்நிலையில் என்ன சமாதானம் சொன்னாலும் அவர்கள் ஏற்கப்போவதில்லை, ஆனால் ஆறுமாதம் கழித்து இதே தொடர் "ரத்தம் ஒரே நிறம்" எனும் வேறு பெயரில் வெளிவந்த போது, அந்த எதிர்ப்பு எங்கே போனதென்று தெரியவில்லை.

இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், ஓர் இனத்தைப் பற்றி வேறொரு இனத்தைச் சேர்ந்தவர் ஆதரவாகக் கூட கருத்து சொல்ல முடியாது என்கிற எழுதப்படாத விதி இங்குள்ளது. மேலும் நான் எழுதியதுதான் சரி, என்னாவானாலும் அதை எழுதத்தான் செய்வேன் என்பதெல்லாம் விஞ்ஞானச் சூழ்நிலையில் வளர்ந்த எனக்குச் சிறுபிள்ளைத்தனம், இன்று இதை வாசிக்கும் உங்களுக்கு எதற்காக அப்படி ஓர் எதிர்ப்பு கிளம்பியது என பெருவியப்பு வரும், போகட்டும், அதை மீண்டும் கிளற எனக்கு விருப்பமில்லை"

எவருக்கேனும் எதற்காக ’நாடார்கள் ’ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்’ என்கிற நினைவிருந்து அதை எனக்குச் சொன்னால் மகிழ்ச்சி.

சுஜாதா இந்த எதிர்ப்பை 1982களில் சந்தித்திருக்கிறார், கமல் இதே போல எதிர்ப்பை 2005 & அதற்குப் பின் சந்தித்தார்.

’ சண்டியர் ‘ எனும் தலைப்பை நீக்க வேண்டுமென கிருஷ்ணசாமி தலைமியிலான புதிய தமிழகக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். படப்பிடிப்பு செட் முழுவதும் நாசம் செய்யப்படுகிறது.

கமல், ’நான் சண்டியர் என ஏன் தலைப்பை வைத்தேன் ? என படம் பார்த்து விட்டுச் சொல்லுங்கள், இப்போது நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்’ என பொருளிழப்பிற்கு பின்னும் பிடிவாதம் பிடிக்கிறார். தொடர் மிரட்டல் வர, அப்போதைய முதல்வர் ’மக்கள் முதல்வரிடம்’ செல்கிறார்(ம்க்கும்)

அதுவரை நமக்கு சண்டியர் என்றால் சதா சண்டைக்கு அலைபவர் என்றே அறிகிறோம், ஆனால் யதார்த்தம் ’சண்டியர்’ என்பது தாழ்த்தப்பட்ட ஓர் இனம். காலம் காலமாக அந்த இனத்தை ’சண்டைக்காரர்கள்’ என இழிவுபடுத்துகிறார்கள் ஆதிக்கச் சாதிகள் எனவே அதை தவிர்ப்பதில் தவறில்லை என கமலுக்கு அறிவுரை கிட்டியபின் படம் ’விருமாண்டி’ என பெயர் மாற்றப்படுகிறது.

அதே போல சண்டாளர், சண்டாளி, நாதாரி இவையெல்லாம் கூட தாழ்த்தப்பட்ட இனத்தினர்தான் என அறிக !

ஆனால், மும்பை எக்ஸ்ப்ரஸ் எனும் பெயரை தமிழில் வைக்கவேண்டுமென ’திருமா’ பொங்கினார் பாருங்க, சான்ஸேயில்ல, கமலெல்லாம் தாராளமா இந்த மண்ணை விட்டு வெளியேறலாம் :(

பாருங்க ஐயங்காருக்கு சப்போர்ட் பண்ண இன்னொரு ஐயங்கார இழுத்துட்டேன், ’சாதிகள் இல்லையடி பாப்பா’ (ஐயர வச்சு முடிச்சிட்டேன்) ;) ;)
                                                      


                                                            === நன்றி === 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள்

  1. பெயரில்லா12 மே, 2021 அன்று PM 4:18

    அந்த தொடர் குமுதம் இதழில் வெளிவந்த போது என் மாமா தொடர்ந்து வாசித்து வந்ததாகக் கூறினார். எதிர்ப்புக்கான காரணமாக அவர் கூறியது பெண் கதாபாத்திரம் குறித்த ஆபாசமான மற்றும் இழிவான வர்ணனைகள்தான். ஒரு பெண் கதாபாத்திரத்தை நாடார் என அடையாளப் படுத்திவிட்டு, ஓரிடத்தில் "அவள் முலைகள் சாக்கில் அடைபட்ட முயல்கள் போல் துள்ளின" என்று எழுதியிருந்தாராம் சுஜாதா. இதுகுறித்து மேலும் அறிய சு.சமுத்திரம் எழுதிய "என் கதைகளின் கதை" நூலை வாசியுங்கள.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நானும் ஆவலோடு அந்த தொடரை வாசித்து வந்தேன். இந்த அத்தியாயத்தில் இடம்பெற்ற இந்த வரிகளால் பிரச்சனை பெரிதாகி, தொடரே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 'ரத்தம் நிறம் சிவப்பு ' என்ற தொடரை தொடங்கினார். மிகவும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய தொடர்...

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!