உருக்கமான வாசகி கடிதம்

அன்புள்ள சாரு,


நான் உங்களின் தீவிர வாசகி. 


தனியறையில் பலமுறை, ஸீரோ டிகிரியின் இறுதிப் பக்கங்களில் வரும் கவிதைகளை வாசித்து கதறியழுதிருக்கிறேன்.  

ஒருமுறை மறந்துபோய் ஹாலில் வைத்து வாசித்துவிட்டேன்.  ”ஏம்மா ரபியா அழுற ?” ன்னு ஒரு முரட்டு குரல்.  வாப்பா.  அப்போதுதான் எனக்கு நினைவே வந்தது, நான் ஹாலில் அமர்ந்து உங்கள் நாவலை வாசித்துவிட்டேன் என்று.  அந்தளவு என்னை உருக்கியெடுத்த நாவல் அது. 


’உங்களைப் போலவே இவரும் எனக்கு வாப்பாதாம்ப்பா’ என்று அந்த நாவலின் பின்னட்டையிலிருந்த உங்கள் போட்டோவைக் காட்டினேன் என் வாப்பாவிடம்.


ஸீரோ டிகிரி முடித்தபின், உங்களின் எல்லா நாவல்களையும் வாங்கி வாசித்தேன், அவ்வப்போது அந் நாவல்கள்  பற்றியெழுதி, உங்களுக்கு மெயில்களும் அனுப்பிவைத்திருக்கிறேன். 


உங்கள் ஆன்லைனை ஒருநாள் விடாமல் வாசிப்பேன்.  நீங்கள் ஆன்லைனில் எழுதாமல் விட்ட நாட்களெல்லாம் எனக்கு கிட்டிய தண்டனைகளாகவே கருதுவேன், அன்று முழுக்க என் முகத்தில் சோகம் வழிந்தோடும்.  உம்மா, ’என்னடி உங்க வாப்பா இன்னிக்கு ஏதும் எழுதல போல ?’ என்று எளிதாக கண்டுபிடிப்பது போலவே, என் முகம் இருக்கும்.


ஒரு மோசமான வியாழனன்று உங்கள் பதிவுக்காக, உங்கள் ஆன்லைன் தேடி வந்தபோதுதான் அந்த பேரதிர்ச்சி.  உங்களுக்கு நெஞ்சடைப்பு என்று.  என்னையும் மீறி, ’அல்லாஹ்ஹ்ஹ்’.........என்று நான் வீறிட்டுக் கதறிய சத்தம், எங்கள் அபார்ட்மெண்டையே கலக்கி விட்டது. 


அவ்வளவு உரக்கக் கத்தியது அல்லாஹ் மீது ஆணையாக எனக்கு நிச்சயமாகத் தெரியாது.  பக்கத்து அபார்ட்மெண்டில் இருந்தெல்லாம் என்னாச்சு எனக் கேட்டு வந்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அன்று முழுக்க நான் எதுவுமே சாப்பிடவில்லை.  உம்மா என்னைக் கெஞ்சி கெஞ்சி அலுத்துப்போனாள்.  இரவு வாப்பா வந்ததும் என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்.  நான் எதுவுமே பேசவில்லை.  கண்ணீர் மட்டும்  நிற்காமல் தன்னிச்சையாய் சுரந்துக் கொண்டே இருந்தது.  


வாப்பா கோபம் தணிந்து என் தலையைத் தடவி விட்டு, ”நாம நம்மூர்ல இருந்தாலாவது நேர்லயே போய் உன் எழுத்தாளர பாத்துருக்கலாம், வெளியூர்ல இருக்கோமே ?  அவரப் போல நல் மனசுக்காரருக்கு அல்லாஹ் எந்தக் குறையும் கொடுக்க மாட்டார்ம்மா, நீயே பாரு ரெண்டே நாள்ல க்ளியராகி வந்துருவாரு, அல்லாஹ் சமூகத்துக்கு தொண்டு செய்றவங்கள கைவிட்டதேயில்ல, சென்னை போறப்ப அவசியம் அவர் வீட்டுக்கு கூப்டுட்டுப் போறேன், நீ சாப்பிடும்மா” என்று உடைந்த குரலில் நா தழுக்க வேண்ட, எனக்கு அப்படியே ஸீரோ டிகிரியில் அம்மை போட்ட  உங்கள் மகளுக்கு நீங்கள் செய்யும் பணிவிடைகள் கண்முன் காட்சியாய் வந்தது.  கதறி வாப்பவை கட்டிப்பிடித்துக்கொண்டு நன்றி சொன்னேன்.


உங்களுக்காக நாங்கள் செய்த சிறப்புத் தொழுகை வீண் போகவில்லை.  அல்லாஹ் உங்களை மீட்டு எங்களுக்காக கொண்டு வந்து விட்டார்.   அதிரடியாக வந்தவுடனேயே பருவமழை போல எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்.  என் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைக் கண்டு உம்மாவுக்கு மகிழ்ச்சி. 


புதிய வெளியீடு பற்றியும், அந்த பொக்கிஷத்தைப் பாதி விலைக்குத் தரும் முன்பதிவு பற்றியும் வாசித்தேன்.
எங்கள் நலனுக்காக என்னதான் நீங்கள் பாதிவிலையில் கொடுத்தாலும், உலகமே கொண்டாடப்போகும் அந்தப் பொக்கிஷத்தின் அசல் விலையை குறைத்து வாங்குவது எனக்குச் சரியாகப் படவில்லை.  வாப்பாவிடமும் கேட்டு விட்டேன். 


எனக்கு, உம்மாவுக்கு, வாப்பாவுக்கு, தங்கை ஆயிஷாவுக்கு என எங்களுக்கு மட்டும் மொத்தம் நான்கு பிரதிகள் வேண்டும், ஆனால் அதற்கு நான் கொடுக்கப் போகும் தொகையை, நீங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.  


உங்கள் கையெழுத்து ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ளது என்று
சொன்னீர்கள்.  தவறு அது விலை மதிப்பே இல்லாதது.  உங்கள் கையெழுத்திட்ட பிரதிக்காக நான் மொத்தமாக 4000 ரூபாய் இல்லையில்லை குவைத் தினார் அனுப்பப் போகிறேன்.  அதன் இந்திய மதிப்பை பற்றிய கவலை எனக்கு இல்லை.  


அவ்வளவும் நான் சேர்த்துவைத்த பணம்.  கல்லூரிக்குப் போகும்போது வாப்பா, உம்மா தரும் பாக்கெட் மணியை, செலவு செய்யாமல் சேர்த்து வைத்தது. 


உங்கள் ஆசியால் இவ்வருடம் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்.  அடுத்த வருடம் கல்லூரி இறுதியாண்டு.  கல்லூரிப் படிப்பை முடித்ததும் இந்தியாவிலேயே ஒரு வேலை தேடிக்கொண்டு, உங்களருகிலேயே இருந்து உங்களை வாசிக்கும் பெருமை பெறுவேன். 


நன்றி
தங்களன்புள்ள
ரபியா இஸ்மாயில்
குவைத்.


அன்பு ரபியா,

எல்லையில்லா உன் அன்பைக் கண்டு நெக்குருகிப் போனேன்.  என்னுடைய பல லட்சக்கணக்கான வாசகர்கள் கல்லூரி மாணவர்கள்தான் எனினும், நான் என்றுமே மாணவர்கள் தரும் நிதியை ஏற்பதேயில்லை.  ஒரு சம்பவம். 


ஒரு விடியற்காலை என் வீட்டுக் கதவை யாரோ ஓங்கித்தட்டுகிறார்கள், போததற்கு வந்தவர் அழைப்புமணியில் வைத்த ஆட்காட்டி விரலை மறந்து எடுக்கவே வேறு இல்லை.


அதிகாலையில் என் வாசகர்கள் யாரும் வரமாட்டார்கள் என பப்பு ஸோராவுக்குத் தெரியும், எனவே அவைகள் ஆக்ரோஷமாக உறும ஆரம்பித்து விட்டன.  அவந்திகாவிற்கு ஏற்பட்ட எரிச்சலை வார்த்தையில் வடிக்கவே முடியாது.  பாவம் அவளுக்கு இரவு ஒரு மணிவரை ஆன்மீக வகுப்பு.  கேட்டைத் தட்டியவன் முகத்தில் குத்திவிடுவது என்கிற வெறியில்தான் வெளியே வந்தேன்.


ரபியா, நான் நாகூரில் பெரிய குத்துச் சண்டை வீரன்.  என் குத்துச் சண்டை வாத்தியார் ஒரு பயில்வான்.  ஒரு மண் மூட்டையை குத்தச் சொல்லித்தான் எனக்கு பயிற்சியை ஆரம்பித்தார்.  ”குத்துடா பாப்போம்’ என்றார்.  வலது முஷ்டியை காதுவரை கொண்டுச் சென்று, விட்டேன் பார் ஒரு குத்து.  அப்படியே உறைந்து போனார் அந்த பயில்வான்.  ஆமாம், அந்த மூட்டை அப்படியே கிழிந்து, அதிலிருந்து மண், தவிடு, பொடிக் கற்கள், இரும்புத்துண்டங்கள் எல்லாம்  நாலாபுறமும் சிதறிக் கிடந்தன.


கேட்டருகே சென்று பார்த்தவுடன் என் அத்தனைக் கோபமும் தலையிலிருந்து உருகியோடி என் பாதத்தை நனைத்தது(ஆமா நேத்துதான் அராத்து சிறுகதையை விகடனில் வாசித்தேன், இதுக்கு சாகித்ய அகடமி கொடுக்கலைன்னா அசிங்கமா திட்டப் போறேன்)  அங்கு நின்றிருந்தது ளவன்.  என் எழுத்தின் வெறியன்.


பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவன்.  அவனுடைய ஒருவேளைச் சாப்பாட்டை தியாகம் செய்து அதில் சேர்த்து வைத்திருந்த சிறு பணமுடிப்பை எடுத்து வந்திருந்தான், ”என் கலெக்‌ஷனில் இருக்கும் புத்தகங்கள் ஏதாவது இதுக்கு மாற்றாக கொடுங்கள்” என்கிறான்.


”ளவன் நைட்டு சாப்பிட்டீங்களா ?  இத்தனை காலைல வரணும்னா நீங்க நேத்து  நைட்டே இல்ல கிளம்பியிருக்கணும் ?” ன்னு கேட்டா அடுத்த குண்ட வீசுறான். 
நைட்டு சாப்பாட்டுச் செலவையும் மிச்சம் பண்ணி, நடந்தே செங்கல்பட்டுலருந்து வந்திருக்கான், பஸ் செலவையும் மிச்சம் பண்ணறதுக்காம் !


’முட்டாள் முட்டாள்’ என்று அவனைத் திட்டிக்கொண்டே ஒரு இளநீரைப் பறித்துக் கொடுத்தேன்.  வாழ்க்கையில் அது போலொரு இனிப்பான இளநீயை அருந்தியதேயில்லை என அதற்கொரு நன்றி சொன்னான்.  என் வாசகர்கள்தான் எப்பேற்பட்ட ஒழுக்க சீலர்கள், தியாகிகள் ? 


எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று உங்கள் ரஹ்மான் சொல்வார், இந்த என் எல்லாப் புகழும் என் எழுத்துக்கே !


இப்படிப்பட்ட வாசகர்களே, என் எழுத்து எனக்குத் தந்த கொடை.  இதற்கு கைம்மாறாக நான் எக்ஸைலை மட்டுமே 100 பாகங்கள் எழுதப் போகிறேன், மகிழ்ச்சிதானே ?  உன் சேமிப்பை என் எழுத்துக்காக நீ தருவது மட்டும் அவந்திகாவுக்குத் தெரிந்தால் என்னைப் பாவி என்று வசை பாடுவாள்.  போகட்டும் உன் அன்புக்காக அந்த வசையை ஏற்றுக் கொள்ள மாட்டேனா என்ன ? 


உன் வாப்பாவுடன் சென்னையில் பல்லாயிரம் பேர் குவியப்போகும் இலக்கியத் திருவிழாவான நம் எக்ஸைல் வெளியீடுக்கு நீ அவசியம் வர வேண்டும்.  முடிந்தால் உன் கல்லூரித் தோழிகளையும் அழைத்து வா.  இன்ஸாஹ் அல்லாஹ் !!!

குறிப்பு :- நீங்கள் வளரும் எழுத்தாளரா ?  உங்களுக்கும் இதுபோன்ற உருக்கமான, கோபமான, மகிழ்ச்சியான அட நவரசத்தில் எந்த ரசமானாலும் சரி.......உணர்ச்சிகள் கொப்பளிக்கும் வாசகர் கடிதம் வேண்டுமா ?  குறைந்த கட்டணத்தில் நிறைவான கடிதங்கள் இங்கு கிடைக்கும்.  வெளிநாட்டு வாசக கடிதங்களுக்கு டாலரில் மட்டுமே கட்டணம் ஏற்கப்படும்.  வருக, புக்கர் நோபல் பெறுக ;)  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!