இந்தியச் சுதந்திரதினத்தை நான் ஏன் கொண்டாட வேண்டும் ?



நீங்கள் ஒரு இந்தியப் பெண்ணாயிருந்தால்....

நீங்கள் தாழ்த்தப்பட்டவராயிருந்தும், பிற்படுத்தப்பட்டவராயிருந்தும்,
ஆதிவாசியிருந்தும், ஏழையாயிருந்தும் படித்திருந்தால் ....

ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தால்....

இந்துவாயிருந்தால்.....

இந்து அல்லாத வேற்று மதத்தினராய் இருந்தால்.....

தமிழ் நாட்டில் வாழும் வேறு மாநிலத்தவராய்  இருந்தால்....

இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழனாய் இருந்தால்....

நாத்திகராய் இருந்தால்....

அரசியல்வாதியாய் இருந்தால்....

ஊழலை வெறுக்கும் கருத்துச்சுதந்திர வீரனாய் இருந்தால்....

ரொம்ப இழுத்தாச்சு, நீங்க இந்தியனா இருந்தா, ஏன் இந்தியாவுல இருக்கிற அன்னியனா இருந்தாலும் சரி, இந்தியச்  சுதந்திர தினத்தை  நீங்கள் மிகு உற்சாகமாக  கொண்டாடியே ஆகவேண்டும்.  முடியாது, இந்தக் கொண்டாட்டத்தை மறுக்கும் சுதந்திரம் எனக்குள்ளது என்று நீங்கள் கொதித்தால் அது, கொண்டாடும் நாங்களோ, அல்லது என் தாய்நாடோ உங்களுக்குப் போட்ட பிச்சை.  பிச்சைக்காரர்களையும் வெறுக்காத தேசம் எங்களுடையது. அதனால்தான் தொழுமிட வாசல்கள் எங்கும் அவர்களை விட்டுவைத்துள்ளோம்.   ஆனால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தானே........

இந்தியா பல தாதாக்களால் அல்லது ரவுடிகளால் ஆளப்பட்ட தேசம்.
இப்போதும் அப்படித்தான், என்றாலும் நம்மால் நாம் நினைத்த  தாதாக்களை  ஆள  விட முடியும்.   இதற்கு குடியரசு  உதவியது,  குடியரசு வர,  நாட்டு விடுதலை உதவியது.

சிந்துசமவெளி நாகரிகமும், திராவிட நாகரிகமும் மிகத் தொன்மையானது என்றால் அது ஆகப் பழைய செய்தி.  மனிதன் காட்டுவாசியாய் இருந்து நாட்டுவாசியாய்  மாறியபோதே  நம் இந்தியா உருவாகிவிட்டது.  மிருகங்களில் எப்படி தலைவன் அவசியமோ, நாமும் அது போலவே நம் தலைவனை தேர்ந்தெடுத்தோம்.  இந்தியாவில் மட்டுமே ஒரு காலத்தில் ஐயாயிரம் குழுக்கள் ஆண்டிருக்கலாம்.  ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவன், ஒவ்வொரு குழுவுக்கும் அவன் ஆக்கிரமித்திருந்த இடமே.....நாடு.

 உதாரணத்திற்கு சோழ நாடு, சேரநாடு, பாண்டியநாடு, பல்லவ நாடு, சாளுக்கிய நாடு,  கலிங்க நாடு, மகத நாடு, இன்னும் பிற நாடுகள்.  ஆண்டவர்கள் எல்லோருமே தாதாக்கள், அவரவர் ஆள், ஆயுத  மற்றும்  திறமைக்கேற்ப பிற  நாட்டு  தாதாக்களை  அழித்தும்,  கொள்ளையிட்டும்  தம் எல்லைகளை விரித்தனர், தோற்கும் போது இழந்தனர்.  கொள்ளையடித்ததில் கொஞ்சம் அவர்களின் மக்களுக்கும் ஈந்தனர்.  சிலர் கொடுக்காமல் அவர்களே வைத்தும் கொண்டனர், ஒருசிலர் அவர்கள் மக்களையேக்  கூடச் சுரண்டினர்.

 ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதவிதமாய்ச் சட்டங்கள்.  அடிப்படை வேலைகள் பரம்பரை பரம்பரையாய் குறிப்பிட்ட பல சாதிகளுக்கு
அவர்கள் மட்டுமே செய்யுமாறு ஆக்கப்பட்டது.  ஓரிரு இடங்களில்
இவர்கள் வளமாகவும், பல்வேறு இடங்களில் வாழையடி வாழையாய்
உழைப்பிற்கேற்ப பலனின்றி வாடியும் கிடந்தனர்.  கல்வி பணக்காரர்களுக்கு மட்டுமே கிட்டியது.  பணக்காரர்கள் எல்லோருமே உயர்சாதியினர் ஆனார்கள். 

 இந்தியா முழுக்கவே, ரவுடிகள் முரட்டுத்தனமாகவும், பலசாலிகளாகவும் இருந்தும் அவர்கள் மூட நம்பிக்கைகளை அப்பட்டமாய் நம்பினர்.  கல்வி கற்றுக் கொடுக்கவே இருந்த ஓரிரு சாதி, இந்தப்  பலவீனத்தை   லாவகமாய்  கையாண்டது.   ஜோசியம், ஜாதகம், நட்சத்திரம், மச்ச சாஸ்திரம், கைரேகை பலன் என்று வித விதமாய்  பொய்கள் பரப்பி  அதை  ஒரு கணிதம்  என்றும் அறிவியல் என்றும் அவர்கள் கை நூலாய் அதை வைத்து, தாதா பொம்மைகளை தன்னிஷ்டம் போல்  ஆட்டுவித்தது. 

அவர்கள் தலைவர்கள் வீழ்ந்தபோது சலனமின்றி மற்ற ரவுடிகளை தம் தலைவனாய் ஏற்றுக் கொண்டது, அவர்களையும் தம் மாயவலையில் வீழ்த்தி, தலைவனுக்கே தலைவனாய் நாடாண்டது.  
(மன்மோகன் பொம்மை என்றால் சோனியா வசம் நூல் போல)

 பெண்கள், போகம் கொள்ளும் நேரங்களில் மட்டுமே ஆண்களால் மதிக்கப்பட்டனர்.  அடிமையாய் வாழ்ந்த பெண்ணினம், தாம்
பெற்ற துன்பத்தை தவறாமல் தம் சந்ததியினரும் பெறுமாறு செய்தது, அல்லது செய்ய வைக்கப் பட்டது.  தாதாக்களில் ஒரு சில நல்லவர்கள் இருந்துவிட்டால் அப்போது அங்கு கலை வளர்ந்தது.  இலக்கியம் செழித்தது  ஆனாலும் தொழிலாளிகள் விலங்குகளை விடவும் மோசமாகவே எல்லோர் ஆட்சியிலும் நடத்தப்பட்டனர்.   எந்த தாதாக்கள் கண்ணுக்குமே விளிம்பு நிலை மக்கள்  தென்படவேயில்லை.

 இராசேந்திரச் சோழனைத் தவிர எந்த இந்திய மன்னனும், பிற மண்ணில்
தம் ஆட்சியை, குடியிருப்பை நிறுவ ஆசை கூடப் பட்டதில்லை  அவனுக்கு
அவன் ஆயுளில் இந்தியாவை பாதி ஆண்டாலே இன்பம் என்றான்,
முழுமையாய் ஆண்டால்  பேரின்பம் என்றான்.  ஏனெனில் உலகில்
அப்போது இந்தியாதான் பணக்கார நாடு,  இந்தியா மட்டுமே.

 ஆதிக்கச் சாதிகள் யாருக்குமே பகையாயிருக்க விரும்பவில்லை.
பிறவி எடுத்தது வாழ்வதற்கே,  சுகமாய் வாழ வேண்டும், பாதுகாப்பாய் இருக்க வேண்டும்,  அவ்வளவுதான். யார் ஆண்டால்  என்ன ?  அவன் ராஜா ஆனாலும் நம் கை பொம்மைதானே,
என்ற  ஒரு நம்பிக்கையும் அதன்  காரணி.   பலமான மற்றொரு தாதா,
இவன் தேசம் புகும்போது இவன், அவன் பக்கமாய் போய்விடுவான்.
இவனுக்குத்தான் பழைய தாதாவின் எல்லாப் பலவீனமும் தெரியுமே ?  பலமிக்க புது தாதா அமோகமாய் வெற்றி பெற்று வாழ்வான்.

 சுயநலமாய் இருக்கவே ஆசைப்பட்ட அவ்வகை சாதிக் குழுக்கள்,
பிற இந்தியர்கள் புரட்சி செய்யாமல் பார்த்துக் கொண்டது.  எங்கெங்கு
அவ்வாறு எழுச்சி ஏற்பட்டதோ அங்கெல்லாம் தம் பொம்மைகளை வைத்து அழித்தொழித்தது.   இது முகலாய தாதாக்களை தாண்டி வெள்ளையன் தாதா வரை நீண்டு, சுதந்திர இந்தியாவிலும் எதிரொலித்தது.

 நல்ல வேளையாக, 19 ம் நூற்றாண்டுகளில்  இம்மாதிரி குழுக்களில் இருந்தே நல்லவர்களும் தோன்றினர்.  அது ராஜாராம் மோகன்ராயாய் இருக்கலாம், பாரதியாய் இருக்கலாம் பெரியாராய் இருக்கலாம், மோகன்தாசாய் இருக்கலாம், முத்துலட்சுமியாய் இருக்கலாம்,
நேதாஜியாய் இருக்கலாம், ஜவஹர்லாலாய் இருக்கலாம், வல்லப்பாய் இருக்கலாம். 

 இவர்கள் ஒருங்கிணைந்து, 'எல்லோரும் சமமே' வாருங்கள்
சேர்ந்து போருக்கு என்றனர்.  போரில் வெற்றியும் பெற்றனர்.   வல்லப் என்ற இரும்பு மனிதன்  எல்லாத் தாதாக்களுக்கும்
நடு விரல் உயர்த்தி வீழ்த்தினார்.   இல்லை என்றால் இப்போதும் நம்மை
ஆர்க்காடு நவாப்தான் ஆண்டுக் கொண்டிருப்பார்.  கொஞ்சம் கொஞ்சமாய்
பிற மறுக்கப்பட்ட சாதியினரும் மேலே வந்தனர்.  காமராஜரும்,
அம்பேத்கரும், இந்திய மக்களை ஆளவோ, சட்டம் போட்டு ஒரு கட்டுக்குள் வைக்கவோ முடிந்தது.  பெண்கள்  சமமாய்  மதிக்கப் பட  வேண்டும் என்று, பெண்கள் நம்மை ஆள  முடிந்தது, ஆள  முடிகிறது. 

 கல்வி ஏழைகள் வசம் தன் காதலைத் தெரிவித்தது.  பழங்குடியினரும், பல்லாயிரம் வருஷங்களாய் கண்ணுக்குத் தெரியாதிருந்த, தாழ்த்தப்
பட்டோருக்கும் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னுரிமை
கொடுக்கப்பட்டது.   ஒரு குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியினர் பரம்பரைப்
பணக்காராராய் இருந்தனர், ஆனாலும் வேற்று சாதியினரும் புதுப்
பணக்காரராக உலா வர சுதந்திரம் அனுமதித்தது.

 நாம் இன்புற பொறுக்குமோ  அந்த நூல் பிடித்த கைகள் ?
தாழ்ந்திருந்தவனை தூண்டி, அந்தக் கைகளுக்கு  எதிராகவே குரல் கொடுக்க வற்புறுத்தி  அவன்  சிந்தனையை  ஒரு கட்டுக்குள்  வைக்கப் பார்க்கிறது.  ஊழல் செய்யவும் கற்றுக் கொடுக்கிறது, ஊழல் செய்தவனை காட்டியும் கொடுக்கிறது, ஊழலுக்கு எதிராய் போராடவும் சொல்கிறது, அதே போராளிகளை
கோமாளிகள் என்று பின்னாலிருந்தும் குரல் கொடுக்கிறது.

 அந்தக் கைகளுக்கு வேண்டியது, முன்பு போலவே நாம் சிதறிப் பிரிய
வேண்டும், நம் சிந்தனைகள் விரிபடக் கூடாது, நமக்குள் பிணக்குகள்
வளர்ந்து நாம் அடித்துக் கொள்ள வேண்டும்.  அதற்கு முதலில் நம்மைக்
குழப்ப வேண்டும்.   ஒருசில சாம்பிள் குழப்பங்களை பாருங்கள்.

அந்தக் கைகள் கர்நாடகாவில் உட்கார்ந்து 'நீர் கொடுக்காதே' எனும்.
தமிழ்நாட்டுக்கு வந்தவுடன், 'ங்கோத்தா தண்ணி தாடா' எனும்.
கேரளாவில் 'ஆம் அணை பலவீனம்' எனும்,
இங்கு, 'அது ஆயிரம் வருஷம் மேலும் தாங்கும்' எனும்.
அணு உலையால் நன்மை எனும்
அணு உலையால் தீமை எனும்
சென்னை விமான நிலையத்தில் 'ஈழம் கொடு' எனும்
தில்லி விமான நிலையத்தில் 'ஆள விடு' எனும்
மோடி ஒரு கொலைகாரன் எனும்
மோடி சிறந்த நிர்வாகி எனும்

அதன் வேலை நம்மைக் குழப்ப வேண்டும், நமக்குள் பிரிவு வேண்டும்,
எல்லோருக்கும் அவரவர் கருத்துப்படி வேற்றுமை உணர்வில்
வளர வேண்டும்.  இவைகள்தான்  நிதி நிறுவனங்கள்  தொடங்க  அனுமதி அளித்தது, அதிக வட்டி கொடுப்பதை ஆதரித்தது, உங்களை பணம் போடச் சொன்னது, அவர்கள் எடுத்து ஓடச் சொன்னது,  பிறகு அவர்களையே ஈமு கோழி வளர்க்கச் சொன்னது, உங்களை அதன் ஒரு கிலோ கறி பல்லாயிரம் போகும்  என்று ஆசை விதைத்தது, இப்போது அதன் சுவை மோசம் அதை வாங்க  ஆளே இல்லை என்றும் அவையே சொன்னது.

 இவர்கள்தான் தலைமைச் செயலகம் வசதி இல்லை போக்குவரத்து நெருக்கடி இருந்தாலும் பரவாயில்லை  'அண்ணா சாலையில்'  புதிதாய் கட்டுங்கள் என்று ஒரு தாதாவுக்குச் சொல்வார்கள், அவர்களே வேறொரு தாதாவிடம் அதை
'உலகிலேயே சிறந்த மருத்துவமனையாக்கிவிடலாம்' என்று மாற்றுச் சிந்தனையையும் விதைப்பார்கள்.  'நூலகம் இருந்தால்தானே அறிவு' என்பார்கள்,  'நூலகமா,  குழந்தைகள்  மருத்துவமனையா'  என்ற கேள்விக்கு,  'ஹிஹி  குழந்தைகள்தானே வருங்காலத்தூண்கள்'  என்பார்கள்.

 நாடென்ன செய்தது எனக்கு என்று நீங்கள் ஒவ்வொருவரும் கேட்க
வேண்டும் என்பது அவர்கள் ஆசை.  நீங்கள் இந்தியாவை வெறுத்தபின், எங்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்று என்று குரலிடு என்று அடுத்த ஆச்சர்ய ஆலோசனை ஒன்றை அவர்களே கொடுப்பார்கள், ஈழத்தை தமிழ்நாட்டுடன்  ஏன்  இணைக்கக்  கூடாது ?   என்றும் கூட   உசுப்புவார்கள்.

சரி, இவர்களை வீழ்த்தவே முடியாதா ? 
ம்ஹும் முடியவே முடியாது.
ஆனால் அவர்களை கட்டுப் படுத்த முடியும்.  அதற்கு மோகன்தாஸ் சொன்ன அதேவழிதான்,  ஒரே வழிதான். 
ஜாதி, மதம் பாராத நம் ஒற்றுமை.  நமக்கிருக்கும் பொதுவான ஒரே பண்டிகை இந்த சுதந்திரம்தான் என நாம் உணர வேண்டும்.  மற்ற எந்த பண்டிகையை விடவும் இந்தச் சுதந்திர தினத்தை நாம் மிகச் சிறப்பாக,  புத்தாடை புனைந்து,  இனிப்புகள் பரிமாறி, கொடியேற்றி,  விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடவேண்டும்.  புறக்கணிப்பவர்களை அரவணைத்து அவர்கள் புறக்கணிப்பின் காரணம் ஆராய வேண்டும்.  நம்முடைய நெருக்கம், நம்முடைய பாசம், நம்முடைய ஒருமித்தச் செயல்கள்,  அவர்களை சிறுக, சிறுக அழிக்க முயலும். வாருங்கள் கைகோர்த்து உற்சாகமாக கொண்டாடுவோம் நம் பண்டிகையை.


எச்சரிக்கை :- இது போன்ற கட்டுரை எழுதுபவர்களை பொதுவாக,
ஆளும்கட்சியின், அல்லது இந்திய உளவுத்துறையின் கையாள் என்று புரளி பரப்புவார்கள், நம்பாதீர்கள், அந்தளவு வொர்த் இல்லாத பீஸ் நான். 




                                                             --   ஜெய்ஹிந்த்  --




























































































































































































































   




















































கருத்துகள்

  1. கருத்தும் நடையும் அருமையாக இருக்கிறது. இப்போது மறுவாசிப்பு. . .

    பதிலளிநீக்கு
  2. முரண்படுகிறேன். ஆனாலும் தெளிவான கட்டுரை. நல்லதோ, கெட்டதோ சொல்வதை ஆணித்தரமாக சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி செல்வகுமார், உங்களின் முரண்பாடுகளை சொன்னால் நான் என்னைத் திருத்திக் கொள்ள வாய்ப்பாக அமையக் கூடும். விளக்குங்கள்.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!