துன்பியல் சம்பவம் :(


இந்த நாளை அவ்வளவு எளிதில் எப்படி மறந்து போனேன் எனத் தெரியவில்லை.  இன்று காலை அலுவலகத்திற்கு வரும்வழியில், சாலை நெடுக வைத்திருந்த ராஜீவ்காந்தியின் நினைவஞ்சலி பதாகைகளைப் பார்த்தவுடன் நினைவு 22 வருடங்களுக்கு முன்னோக்கிச் சென்றது.

1991 மே 21 செவ்வாய், இதே மாலை வேளையில், கருணாநிதி வடசென்னை மிண்ட் அருகே, தன்னுடைய இறுதிப் பிரச்சாரத்தை, ஒரு கை ரிக்சாவில் நின்றவாறே, சவுகார்பேட்டை மார்வாடி வாக்குகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.  அவர் அப்போது துறைமுகத் தொகுதியில் போட்டியிட்டார்.  அப்போது எப்போதுமே தேர்தல் நிறைவுநாள்  கூட்டத்தை மின்ட் பகுதியில்தான் நடத்துவார்.  இம்முறை கூட்டம் போடாமல், வாக்கு மட்டும் சேகரித்தார்.  

மிக மிக எளிமையான பிரச்சாரமது.  அப்போது கருணாநிதியின் ஆட்சியை சந்திரசேகர் டிஸ்மிஸ் செய்திருந்தார்.  பரிதாப வாக்குகள் சராமாரியாக விழுந்து, மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என வெகுவாக நம்பினார்.  அப்போது சென்னை திமுகவின் கோட்டையல்லவா ?  ஊரெங்கும் உதயசூரியன் கட்- அவுட்கள், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மங்கிய மாலையை வண்ணமயமாக்கி இருந்தது.

அன்றைய தூர்தர்ஷனில் மாலை வேளைகளில் போடப்படும் மொக்கை நிகழ்ச்சிகளைச் சகித்துக் கொள்ள முடியாது.  ரேடியோவிலும் பண்பலைகள் கிடையாது.   கம்யூட்டர்கள் எல்லாம் சுஜாதா கதைகளிலும், ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்ததுண்டு.  செல்ஃபோன் இல்லை, இன்டர்நெட் இல்லை, சாடிலைட் டிவிக்கள் இல்லை, எனவே இரவு ஒன்பது மணிக்கெல்லாம் இனிமையான தூக்கம் கண்ணைத் தழுவிவிடும். 

மாடிவீட்டின் வெளியே, வெறும் சிமெண்ட் தரையில் எந்த விரிப்புமில்லாது படுப்பது வழக்கம்.  உடனடியாக தூக்கம் வரும்.  அடிக்கும் காற்றில் கொசுக்கள் கடிப்பதல்லாம் தெரியவே தெரியாது.  இப்போது ஒருமுறை அப்படி படுக்க முயன்றேன்.  ஒரு லட்சம் கொசுக்கள் ஒன்றாய் சேர்ந்து என்னை அள்ளிச் செல்ல முயன்றன.  சுற்றிலும் வளர்ந்துபோன கான்க்ரீட் காடுகளால் காற்று அந்த இடத்தை எப்போதோ காலி செய்துவிட்டது.

உடல் உழைப்பு அதிகமிருந்த காலகட்டம் என்பதால் ஆழ்ந்த தூக்கம் ஆட்கொண்டிருந்தது.  திடீரென, கண்ணாடிச் சில்லுகள் சிதறும் ஓசைகள் கேட்டு, திடுக்கிட்டு முழிப்பு வந்தது.  என்ன ஏதுவெனப் புரியவில்லை.  மணி பார்த்தால்  நள்ளிரவு 12.  டிவியைப் போட்டால், கர்ர்ர்ர்ர் ரெனச் சத்தம் மட்டுமே வந்தது.  ரெண்டாவது சேனலே கூட இல்லை, ரிமோட் கண்ட்ரோல் என்றால் என்னவென்றும் தெரியாது.  அப்பா ரேடியோவை டியூன் செய்துக் கொண்டிருந்தார். 

அதற்குள், முன்னாள் பிரதமர் ராஜீவை, ஒரு திமுக காரன், துப்பாக்கியால் சுட்டு விட்டதாகவும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு போயிருப்பதாகவும் மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.  ஆனால், அவர்கள் கண் முன்னாலேயே, திமுகவின் சின்னங்களை அடித்து   நொறுக்கிக் கொண்டிருந்த கூட்டத்தை யாருமே தடுத்து நிறுத்த முற்படவில்லை. 


இத்தனைக்கும் எங்கள் காலனியே திமுகவினர் நிறைந்த பகுதி.  ஆனாலும்,  ’திமுககாரந்தான் சுட்டான்’ என்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு, கருணாநிதியையும், ஸ்டாலினையும் கரித்துக் கொட்ட ஆரம்பித்தனர்.  ஊரெங்கும் திமுகவினருக்கு எதிரான வெறியாட்டம் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது.

’நியூஸ் போடுறான்.....நியூஸ் போடுறான்’ன்னு, எதிர் வீட்டு அக்கா கொடுத்த குரலைக் கேட்டு வீட்டுக்குள்ள ஓடினோம்.   இறுதிகட்ட பிரச்சாரத்துக்காக, ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரத்துக்கு வந்ததாகவும், அங்கு மாலை போட வந்த ஒரு பெண், அவர் மீது குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும், அவர் காயமடைந்ததாகவும், முதல் செய்தி இங்க்லிஷில் சொன்னார்கள்.  வாசித்தவருக்கு சிரித்த முகம்.  இதுபோன்ற செய்தியை வாசிக்கும்போது பொதுவாக முகத்தை வாசிப்பாளர்கள் சோகமாக வைத்துக் கொள்வார்கள்.  ஆனால், இது அவசர செய்தியல்லவா......கிடைத்தவரை வைத்து வாசிக்க வைத்துவிட்டார்கள் போல, மனிதர் செய்தியை முடிக்கும்போது வழக்கம்போல சிரித்து வேறு தொலைத்தார்.

இப்போது டாபிஃக் இன்னும் சுவையாக மாறிப்போனது.  குண்டை எறிந்தாளா, மாலைக்குள் குண்டை வைத்தாளா, ராஜிவ் செத்தாரா, பிழைத்தாரா, உடன் யாரார் இறந்தார்கள், ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு ? என பலர் பல்வேறு விதமாக அவரவர் இஷ்டத்துக்கு  கதையளக்க  ஆரம்பித்தனர்.

 அதே அக்கா மீண்டும், ‘ நியூஸ்.... நியூஸ்’ எனக் குரல் கொடுக்க, எல்லோரும் தபதபவென டிவி இருக்கும் வீட்டிற்க்குள் எல்லாம் நுழைந்தோம்.  இம்முறை செய்தியை வாசிக்க வந்த பெண்மணி மிகச் சோகமாய்க் காணப்பட்டார்.  ‘ராஜீவ்காந்தி, பெண் மனித வெடிகுண்டால்
கொல்லப்பட்டார்’ என்று அந்த பேரிடியை மக்களுக்குள் இறக்கினார் :((

 
நாங்கள் இருந்த பகுதி திமுகவினரால் சூழப்பட்ட பகுதி என்று சொல்லியிருந்தேனல்லவா.........அந்தக் காட்சி அப்படியே நிறம் மாறிப் போனதை கண்ணாரக் கண்டேன்.  கருணாநிதி அரசு, ‘ராணுவ ரகசியத்தை’ புலிகளுக்கு கசிய விட்டதாகக் கூறி, அது ரகசியகாப்புப் பிரமாணத்தை மீறியச் செயல் என ராஜீவ்காந்தியால் அழுத்தம் கொடுக்கப்பட்டு, டம்மிபீஸ் சந்திரசேகரால் ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டிருந்தது.  இதனால் ராஜீவ் மேல் அவ்வளவு நல்லபிப்பிராயம் இல்லாமல் இருந்தது.


ஆனால், அந்த தொலைக்காட்சி செய்தி, பெண்களை அப்படியே புரட்டிப்போட்டது.  ராஜீவ் காந்தியின் வயது, அவரின் சிவந்த நிறம், அவருடைய தாயார், தாத்தா, வெள்ளைக்கார மனைவி, இரண்டு மணமாகாத குழந்தைகள், விமான பைலட்......என எல்லாப் பெண்களுமே மாய்ந்து, மாய்ந்து உச்சுக் கொட்டிக் கொண்டதோடு, கருணாநிதிதான் பழி வாங்க, இதுபோன்று ஆளை வைத்து கொன்றுவிட்டதாக நம்பினர். 

முதலில் திமுகவின் தேர்தல் சின்னங்களை மட்டும் நொறுக்கிக் கொண்டிருந்த கும்பல், இப்போது வெறியேறி கைக்கு வாகாக இருந்த கடைகளையெல்லாம் உடைக்க ஆரம்பித்தது.  டங்..டங்...டமார்...படார்....போன்ற சத்தங்கள் தொடர்ந்து அந்த இரவு முழுவதும் நீடித்தது.

அடுத்ததடுத்த நாட்களில் செய்தித்தாள்கள் அமோக விற்பனையைத் தொட்டன.  இந்தப் படுகொலைக்கு விடுதலைப்புலிகள்தான் காரணமென்றும், தணு எனும் பெண் விடுதலைப்புலி தற்கொலைப்படையைச் சேர்ந்தவளால் ராஜீவ் கொல்லப்பட்டதும் உறுதியானது.  இதை, விடுதலைப்புலிகள் ஏற்பாடு செய்திருந்த கேமராமேன்  ‘ஹரிபாபு’ எடுத்த போட்டோக்காளாலேயே விரைவில் துப்புதுலங்கியதும் தெரியவந்தது.


ராஜீவ், இறுதிகட்டப் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு மீனம்பாக்கத்தில் இருந்து காரைத் தானே மிக வேகமாக ஓட்டிக் கொண்டு வந்ததாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சை மீறி, மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்து, அங்கு கவிதை வாசித்த ஒரு சிறு பெண்ணை பாராட்டியதாகவும், அந்தக் குண்டுவெடிப்பில் தன் தந்தையுடன் அந்தச் சிறுமி பலியானதாகவும், பெண் விடுதலைப்புலி தணுவை லோக்கல் காங்கிரஸ் பிரமுகர் மகள் என ராஜீவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அவள் அணிவித்த சந்தனமாலையை ஏற்றுக்கொண்டு, ராஜீவ் அவளிடம் ஏதோ சிரித்து விசாரித்துக் கொண்டிருந்த வேளையில் யாரும் எதிர்பாராவண்ணம் அவள், ராஜீவ் காலில் விழுந்து ஆசி வாங்க குனிய, ராஜீவ் அதைத் தடுக்க அவள் தோளைத் தொட்டு எழுப்ப முயற்சித்த வேளையில், அவள் தன் இடுப்பில் அணிந்திருந்த பெல்ட் பிளாஸ்டிக் ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டை வெடிக்கச் செய்தாள் என்றும், இதுபோக இருபது அப்பாவிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரே ஒரு வி.ஐ.பி. கூட எவ்வாறு சாகவில்லையென்றும்..............அந்த வாரமுழுக்க செய்தி மழைதான்.


காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு யோசனை :-
-------------------------------------------------------------
அவர்கள் பாலகன் பாலசந்திரன் படம் போட்டு பரிதாபத்தை சம்பாதிக்கிறார்கள் அல்லவா, நீங்கள் ஏன் உங்கள் தலைவருக்காக கவிதை வாசித்ததை தவிர வேறெந்தப் பாவமும் செய்யாமல் கருகிப்போன அந்தச் சிறுமியின் புகைப்படத்தைக் காண்பித்து ஓட்டு கேட்கக்கூடாது ?  சரி, அவ்வளவு ஒற்றுமையா சிந்திச்சா, உங்கள யாராவது இவ்வளவு எளிதா பகடி செய்யமுடியுமா என்ன ?

டெயில் பீஸ் :-
--------------------
சிறிதுகாலம் ஒத்திவைக்கப்பட்டு, அதற்கப்புறம் நடந்த தேர்தலில், திமுக 
ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.  வென்றவர் கருணாநிதி.  வாக்கு வித்தியாசம் 635.  அதையும் அவர் ராஜினாமாதான் செய்தார் !!!
(சரி, இப்ப எம்.எல்.ஏ வா இருந்து மட்டும் என்ன தினமும் சட்டசபையா போறாரு ?) 


                                                         -------the end-------













































       





   

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!