வியாழன், 28 நவம்பர், 2013

காடு -ஜெயமோகன்

’காடு’ விமர்சனமல்ல.....அனுபவம் !!!
****************************************

இது கொஞ்சம் பழைய உவமைதான், ப்ச்சுன்னு அலுத்துக்காதீங்க சீனியர்ஸ் :)  மெல்லிய மழைச்சாரல் பிசிறும் மாலைவேளையில் தவித்துக்கிடக்கும் நாக்கிற்குச் சூடான தேநீர் கிட்டி, அது சுவையாகவும் அமைந்து வாழ்நாள் முழுக்க நினைவிலும் தங்கிவிட்டால், என்ன ஓர் இன்பம் கிட்டுமோ, அப்படி ஒரு கிறக்கத்தைக் கொடுத்தது ’காடு’

நமக்குப் பிடித்த ஒரு கதைக்களமிருந்து, நாம் எதிர்பார்க்குமெல்லாமே அதிலிருந்தும் விட்டால், பிறகென்ன, அணு அணுவாய் ருசித்திட வேண்டுமல்லவா ?  அப்படித்தான் ஜெயமோகனின் காட்டையும் ருசித்தேனென்பேன்.  உடனே நீங்கள் உங்கள் பட்டியலில் காட்டைச் சேர்க்குமுன்பு ஓர் எச்சரிக்கை.  இதில் மொழியாடலில் சிறிதும் சமரசம் செய்துகொள்ளாது, நாகர்கோயில் மலையாளமும் + கேரளத் தமிழும் கலந்த மிகக் கடினமான வட்டாரவழக்கை அப்படியே கொடுத்துள்ளார் ஜெமோ.

உதாரணத்திற்கு எசமான் எனில் ஏமான், வருடம் எனில் வரியம், ஏறாத = கேறாத, இதையெல்லாம் ஒருவர் விளக்கி புரிந்து கொள்ளாமல் வாசிக்க வாசிக்க நாமே புரிந்து கொண்டால்தான், இன்னும் சுவைக்கும்.  காடு, கடல், ஆறு, பச்சைபசேலென இருக்கும் நிலம் இதெல்லாம் பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கும்தான் எனினும் ஒரு சிலருக்கு ஆழமாக பிடிக்கும்.  அந்த ஆழமான ரசிகனில் அடியேனும் ஒருவன்.  இதில் காடும், மலையும், மழையும், வருவதால் இந்த நாவலுக்கு அடிமையாகவே மாறிப்போனேன்.

நான் விமர்சனம் செய்யப்போகிறேன் எனப் பயந்து ஸ்கிப் செய்துவிடப்போகிறீர்கள், என் அனுபவத்தை மட்டுமே சொல்லப்போகிறேன்.  ஏற்கனவே இதிலிருந்து ஒரு வன நீலிக் கதையை முன்பே இங்கு பகிர்ந்துள்ளேன்.  அதை கீழே இந்த லிங்கில் போய் வாசிக்கலாம்.  ஓர் அத்தியாயத்தில் வரும் சில பக்கங்கள்தான் அவை.  ஆம், அதுதான் ஜெயமோகன்.

சச்சின் எப்படி கிரிக்கெட் அடிமையோ, அதுபோல ஜெமோ எழுத்தின் அடிமை.  எழுத்து ’வா வா என்னை ஆளு’ என்று அவரை வாட்டிக்கொண்டே இருக்கும் போல.  முற்றுப்புள்ளியை மறந்து ஒரு சில பத்திகள் பக்கம் பக்கமாய் கூட நீளும். ஆனாலும் ஏனோ, இதில் அவருடைய எந்த ஓர் எழுத்தையும் கூட என்னால் தவிர்க்க முடியவில்லை.


மலை, காற்று, மழை, காடு, காட்டு மிருகங்கள், காட்டு அழகி, காடு பற்றிய புனைவுகள்(நீலி), காட்டின் பலம், பலவீனம், காட்டு பழங்கள், காடு தரும் உணவுகள், காடு தரும் பயங்கள், மலை மேல் இருக்கும் இக்காடுகளின் ஊடாக கீழிருந்து மலைக்கு பாதை போடும் கூலி மற்றும் ஒப்பந்தக்காரர்கள், அணை நிறுவும் பொறியாளர்கள், அவர்களுக்கு இயைந்து எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்கும் சில பெண்கள், பண்பாடு போற்றும் நில மனிதர்கள் என களமும்,  கதாப்பாத்திரங்களும் இருக்கிறார்கள்.

’இந்த நாவலில் சாதி துவேஷத்தை குறியீடாக நிறுவியிருப்பார் ஜெயமோகன்’ என நண்பர் பிச்சைக்காரன் ஒருமுறை சொல்லியிருந்தார்.    ’ம்ஹூம், என் கண்ணிற்கு அப்படி ஏதும் புலப்படவில்லையே, எப்போது படித்தீர்கள் ?” என அண்ணனிடம் வினவினேன்.  ’ஒருமுறை என்னை மஞ்சக்காமாலை தொற்றியிருந்த ஓய்வுவேளையின் போது’ என்றார். (மஞ்சக்காமாலை என்பது இங்கு குறியீடா என்றெல்லாம் கேட்கக்கூடாது) 

நடுத்தர வயது கதாநாயகன் கிரிதரன், தற்செயலாக தன் இளமையில் வேலைபார்த்த களத்தைக் கடக்க நேர்கிறது.  உடனடியாக பஸ்ஸை விட்டுக் கீழிறங்குபவன், தான் செய்த பணிக்களம் அதுதானா என நிறுவ, படிமங்களைத் (விழுமியங்கள்னு சொல்லனுமோ ?) தேடுகிறான். அது கிட்டி விடுகிறது.  மிளா(காட்டு மான்) கால்தடம் பதிந்த ஒரு சிமெண்ட் கல்வெர்ட்.  அப்படியே நினைவுகள் பின்னோக்கிச் சுழல, இளம்பிராய ராஜா அங்கே குட்டையில்...............ஆம், அப்போதே கதாநாயகனாக அங்கே என்னை நான் மாற்றிக் கொண்டேன்.

அடர்ந்த மலைக்காடுதான் கதைக்களம்.  மலை மேல் காட்டினிடையே சிறு, சிறு தடுப்பணைகள் கட்ட ஓர் ஒப்பந்தக்காரர் பணிகளை மேற்கொள்ளுகிறார்.  அவருடைய மருமகன்தான் கிரிதரன்.  அவருடைய தலைமை மேஸ்திரி குட்டப்பன்.  மேஸ்திரியின் உதவியாளர்கள் குருசு, ராசப்பன், சினேகம்மை, ரெசாலம், ரெஜினாள், இதுபோக, பொறியாளர் ஐயர் & மேனன், மேனனின் செழிப்பான ஆளுமைமிக்க மனைவி, கிரியின் மலையாள மாமி, அழகான மாமிக்கு பிறந்த கோரமான மகள்(கிரியின் மனைவி) மாமியுடன் தொடர்பிருக்கலாம் எனக் கருதப்படும் புலையன், ரெசாலம் வளர்க்கும் தேவாங்கு, அப்புறம் கிரியின் காதலியாக வரும் மலையத்தி, இன்னும் சில கதாபாத்திரங்கள்.  ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் தொடர்புள்ள அருமையான பாத்திரங்கள்.

நாவல் எழுத விரும்புபவர்கள் நிச்சயம் இந்தக் காடை வாசிக்க வேண்டும்.  ஒரு புனைவு நாவல் எப்படி அமையவேண்டும் என்பதற்கு காடு ஒரு சிறந்த கையேடு.  நாவலில் ஜெயமோகன் மீது கடும் விமர்சனமாய் வைக்கப்படும் இந்துத்துவ கருத்துகள் இதில் குட்டப்பன் மூலமும், சினேகம்மை மூலமும் சொல்லப்படுகின்றனதான் என்றாலும் அதில் சிறிதும் மிகையில்லை, அவ்வளவு யதார்த்தமாய் கடந்து செல்லும்.

இதுவரை இதை வாசிக்காதவர்களுக்கும் புரியும்படி எழுதிவிட்டேன், இனி வாசித்தவர்களுக்கு மட்டுமே புரியுமென நினைக்கிறேன்.

கிரி, காட்டுமழையில் நனைந்துக் கொண்டு, அடர்ந்த இருளில், வனங்களில் உலவுவதைப் போலவே உணர்வுப்பூர்வமாய் நானும் அலைந்து திரிந்துக் கிடந்தேன் !

கரு நீலியின் பரிசுத்தக் காதலில் கிறங்கி மகிழ்ந்தேன் !

குட்டப்பனின் கைமணத்தில் பச்சைப்பயிறு போட்ட கஞ்சியை சுடச்சுடப் பருகினேன் !

சினேகம்மையின் புறங்கழுத்தை என் பற்களால் மெல்ல கடித்து பின் அய்யர் போல் பார்த்து ரசித்தேன் !

ரெசாலத்தின் தேவாங்கை, சிறுத்தை கவ்விக் கொண்டு போனபோது, நானும் கூட, ‘மக்களே,மக்களே’ எனக் கதறியழுதேன் !

மாமியின் வெண்ணிறமும், மேனன் மனைவியின் கைகொள்ள்ளா மார்புகளும் கண்முன்னே காட்சியாய் ரசித்திருந்தேன் !

அய்யரின் கபிலர் என்னையும் வந்தென்னை வாசிடா என அழைக்கக் கண்டேன் !

தனியே காப்பாற்ற மன்றாடிய கீரிக்காதனின் மருண்ட பரிதாப விழிகளில் என் கண்ணீர்தான் வழிந்துக் கொண்டிருந்தது.

காட்டுராஜா புலியோ, சிங்கமோ அல்ல, அது யானைதான் என குட்டப்பன் யானையை வர்ணிக்கும்போது, யானையின் கம்பீரம் உச்சம் தொடுகிறது.    காட்டை ரசிக்குமெனக்கு அந்தக் காட்டுராஜா யானையால் மிதிபட்டு இறந்தால் சொர்க்கம் புகுவேன் என குட்டப்பன் மெய்சிலிர்க்கிறான்.  ஹாஹா, அடுத்த வருடமே அவனுக்கு மோட்சம் கிட்டிவிடுகிறது.  கிட்டியச் சாவு எல்லோருக்கும் கிட்டுமாயென்ன ?  குட்டப்பன் பேரதிர்ஷ்டசாலி :)
நடிகர் மணிவண்ணனை குக்கிராமத்தில் அறவே படிப்பறிவற்றவராக காட்டும்போதும், ’யு நோ மென், ஸ்டுப்பிட் கைஸ், இண்டீசண்ட் ஃபெல்லொஸ், ப்ளடி கண்ட்ரிஃப்ரூட்’ என்றெல்லாம் பேசி ஓவர்ஆக்டிங் செய்து கடுப்புகளை கிளப்புவாரல்லவா, அது போல ஒரே ஒரு பத்தியை கூட இதில் என்னால் அதீத புனைவாய்ப் பார்க்க முடியவில்லை(மணிவண்ணனின் லேட்டஸ்ட் வெர்ஷன் தம்பி ராமய்யா-கும்கி)

இந்த 474 பக்க நாவலில், சிறு பிழையைக் கூட என்னால் கண்டறிய முடியவில்லை.  ஆனால் மாமல்லன் போன்ற விமர்சகர்கள் முதல் பத்தியிலேயே நிச்சயம் பத்துபிழை கண்டுபிடிக்கக் கூடும்.  அந்த நிலையை அடைவதற்குள் இலக்கியத்தை விட்டு விலகிவிட வேண்டும்.  அந் நிலை ஒரு வதை :)

நன்றி !!!

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக