ஆடு ஜீவிதம் - நாவல் விமர்சனம்

'ஆடு ஜீவிதம்' இது பற்றிய ஏராளமான விமர்சனங்களை நீங்கள் வாசித்திருந்தால் இந்தப் பதிவு உங்களுக்குச் சலிப்பூட்டும்.  வாசிக்காமல் இருந்திருந்தால் களி(கிலி)ப்பூட்டலாம் !

இலக்கியப் பித்து பிடித்த, நண்பர்களின் பரிந்துரையின் பேரில்தான் வாங்கினேன்.  ஆனால் எளிய நடையில் இருக்கும், பெருஞ்சோகமாக இருக்கும், வேகமாக வாசித்துவிடலாம் என்றெல்லாம் சொல்லிவிட்டதால், சரி பொறுமையாக எப்போது வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம் என, நண்பரிடம் படித்துப் பார்க்குமாறு கொடுத்துவிட்டேன் !

அவரோ, இரண்டு நாள் கழித்து, ஆஹா, ஓஹோ வென, புகழ்ந்து தள்ள, வேறு வழியேயில்லாமல் வாசிக்க வேண்டியதாயிற்று !

இப்போதைய சூழ்நிலை போலல்லாமல், ஓர் இருபது வருடங்களுக்கு முன்னால் அரபு நாடுகளில் வேலை கிட்டுவதென்பது ஏறக்குறைய சொர்க்கம்தான்.  அப்போது இங்கிருந்த வரும்படியையும், சம்பளத்தையும், அரபு நாடுகளுடன் ஒப்பிட்டால் அது கொத்தவரங்காயை புடலங்காயோடு ஒப்பிடுவது போலாகும் !

இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேலைகள் கிட்டியதால், அப்போது நான் வசித்த பகுதியில், சராசரி இரண்டு இஸ்லாமிய குடும்பங்களில் ஒருவராவது அரபு நாடுகளில் வேலைபார்த்தனர்.  அவர்கள் தாயகம் திரும்பி வரும்போது, கருப்பு அம்பாஸிடர் டிக்கி இடம் பத்தாமல், காரின் தலையில் பெரிய பெட்டியுடன் வருவதை ஏரியாவே பொறாமையுடன் நோக்கும் !

இங்கேயே இப்படி எனில், கேரளாவைக் கேட்கவும் வேண்டுமோ ?  கேரள இஸ்லாமியர்களில் பலருக்கும் அப்போது அரபு நாடுகளில் வேலை பார்த்தே தீருவது வாழ்நாள் லட்சியமாக இருந்திருக்கும் போல.  எப்படியோ ஏதோ ஒரு சொந்தக்காரர் அங்கு நிச்சயம் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால், இயன்றவரை தம் உறவினர்கள் பலருக்கும் வேலை விசா வாங்கிக் கொடுத்து அழைத்துச் செல்வார்கள்.  அப்படி வந்த ஒரு வேலையை நம்பி ஃப்ளைட் ஏறுகிறான் கதாநாயகன்  நஜீப் !

இருக்கும் உறவினர் ஏதோ கட்டிட வேலைக்கு என அழைக்க, அப்போதைய கம்யூனிகேஷன் குளறுபடியில், அந்த பிரம்மாண்ட ரியாத் ஏர்போர்ட்டில் ‘யார் தன்னை அழைத்து போக வரும் முதலாளி ?’ என நஜீப்பும், அவனுடன் சேர்ந்து வேலைக்கு வரும் ஹக்கீம் எனும் ஒரு டீனேஜ் சிறுவனும் வெள்ளை அரேபிய உடைகளில் உலவுபவர்களை பார்க்க ஆரம்பிக்கின்றனர், நேரம் அதுபாட்டுக்கு கடந்து கொண்டே இருக்கிறது !

அர்பாபு எனும் சொல் அரபியில் முதலாளி என்பதாயிருக்க வேண்டும்.  படிப்பறிவு குறைவு, பாஷை மலையாளமும், குறச்சு இங்க்லீஷும் தவிர நஜீப்பிற்கு வேறொன்றும் தெரியாது.  ரியாத்தில் நண்பர்கள், உறவினர்கள் யாரார் எங்கெங்கு வேலை செய்கிறார்கள் எனத் தெரியாது, போன் நம்பர் தெரியாது, இதை விளக்கி யாரிடமும் உதவியும் கூட கோரத்தெரியாது.  கையிலிருக்கும் வேலைக்கான விஸாவை ஒவ்வொரு அரபியிடமும் காட்டி, மலையாளத்தில் ’நீங்கள்தான் என் முதலாளியா ?’ என வினவுகிறான்.  எல்லோருமே அவனை ஒரு புழு போல் கண்டு ஒதுங்குகிறார்கள்.  முதல் கோணலே முற்றும் கோணலாகப் போகிறது என்பது அல்லாவுக்கு மட்டுமே தெரிகிறது !

நறுமணம் கமழ உலவும் வெள்ளுடை அரபிகளுக்கு மத்தியில், ஓர் அழுக்குமிக்க ஓங்குதாங்கான முரட்டு அரபி வந்து அவர்களின் விஸா & பாஸ்போர்ட்டை பிடுங்கிப் பார்க்கிறான்.  அதை அவன் கையிலிருந்த ஒரு நகல் பேப்பரோடு ஒப்பிடுகிறான், அவர்கள் முகத்தைப் பார்க்கிறான்.  மீண்டும் அவர்கள் கைகளிலேயே கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து விலகிப் போகிறான்.  நம்ம முதலாளி வந்துவிட்டார் என அகமகிழ்ந்த நஜீப் & ஹக்கீம் ஏமாந்து போகிறார்கள்.

எங்கெங்கோ சுற்றிவிட்டு, மீண்டும் அவர்களுகருகே வரும் அந்த அழுக்கு அரபி, திரும்பவும் ஒருமுறை அவர்கள் கைகளிலிருந்த பேப்பர்களை வெடுக்கென பிடுங்கி, முன்பு செய்தது போலவே ஒப்பிடுகிறான்.  கோபமாக, ’என்னைத் தொடர்ந்து வா’ என அரபியில் சொல்லிவிட்டு, அந்த பேப்பர்களுடன் விமான நிலையத்தை விட்டு வெளியே போகிறான்.  அவன் என்ன சொல்கிறான் எனப் புரியாவிட்டாலும், அவன் வா என்றுதான் சொல்கிறான் என அவதானித்து உடமைகளுடன் இருவரும் அந்த அழுக்கன் உடன் செல்கின்றனர். (மொத்த நாவலிலேயே இந்தப் பத்திதான் உலக மகா சோகமானது.  ஏன் என்பதை நீங்கள் நாவலை வாசிக்கும்போது உணர்வீர்கள்)

ரியாத்தை விட்டு பல நூறு கிலோமீட்டர் ஓட்டை வேனில் பயணம்.  இறங்கும்போது நள்ளிரவோ, முன்னதிகாலையோ........ஆனால், சுற்றிலும் ஒரு கட்டிடமுமில்லை என்பது மட்டும் உறுதியாகிறது.
மோசமான நாற்றம் மூக்கைத் துளைத்து வாந்தியைத் தூண்டுகிறது.  தூரத்தில் ஒரு கொட்டிலில் சில ஆடுகளின் மந்தை இருப்பது கண்ணில் மசமசவெனத் தெரிகிறது, ஆனால் ஏனென்று புரியவில்லை.  உடன் வந்த ஹக்கீமை, நஜீப்பிடமிருந்து பிரித்து, மீண்டும் அதே வேனில் அழுக்கு அரபி கூட்டிச் சென்றுவிடுகிறான்.

பொழுது புலர்ந்து, சூரியனின் உக்கிர வெளிச்சம் பாயும்போதுதான் நஜீப், ஒரு பாலைவனத்தில் நடுவில் இருப்பது தெரியவருகிறது.  அது ஆட்டு மந்தை அல்ல, ஆட்டுப் பண்ணை.  பல நூறு ஆடுகளும், பக்கத்தில் சில நூறு ஒட்டகங்களும் கொண்ட பெரிய பண்ணை.  சரி ஏதோ ஆட்டுப்பண்ணையில் எளிய வேலைகளிருக்கும் என எண்ணிய நஜீப்பிடம், ஆட்டுப்பாலை கறந்து வரச்சொல்லி  புது அரபி ஒருவன் ஆணையிடுகிறான்.  அவன்தான் தன்னுடைய முதலாளி என்பதை உணர்கிறான். 

’காதல்’ படத்தில் ஆரம்பம் & முடிவில் காட்டப்படும் ’பரத்’தை கண்முன் கொண்டு வாருங்கள்.  அதைவிட பத்து மடங்கு கோரமாய் ஓர் உருவம்.  அந்த அழுக்கு அரபியை விட பேரழுக்காய், கெட்ட நாற்றத்துடன் இருந்த ஒருவன்தான் தனக்கு சீனியர் என்பதையும் புரிந்து கொள்கிறான் நஜீப்.  கொலை பட்டினியாய் கிடந்த நஜீப்க்கு குபூஸ் என்றழைக்கப்படும் ரொட்டி வீசப்படுகிறது.  அதைத் தண்ணியிலோ, சமயத்தில் ஆட்டுப்பாலிலோ தொட்டுச் சாப்பிடுவது.....இது மட்டுமே உணவு.  சரி ஏன் இவனுடைய சீனியர் இவ்வளவு கேவலமாய் காட்சியளிக்கிறான் என்பதை உணரும் கட்டம் நஜீப்பிற்கு வருகிறது.

குழப்பம், ஏமாற்றம், கொடுமை என்று ஆன நஜீப்பிற்கு புது உணவால் அஜீரணக் கோளாறு வர, ’ஒதுங்க’ இடம் தேடுகிறான்.  ’அப்படியெல்லாம் பிரத்யோகமான அறை இங்கு கிடையாது, அப்படி அந்த புதரோராமக போய் வா’ என்கிறான் சீனியர்.  திருப்தியாக போய் வந்தபின், எங்கு கழுவ ? தூரத்தில் ஒரு தண்ணீர்டேங்க்.  அந்த சுடுபாலவனத்தில், சில்லென்ற அத் தண்ணீரின் ஸ்பரிஸம் குட்டிச் சொர்க்கமாய்த் தெரிகிறது நஜீப்பிற்கு.  ஒரு குவளையைத்தான் செலவழித்திருப்பான், முதுகில் ஓங்கி யாராலோ எட்டிவிடப்பட்டு, மண்ணில் குப்புற விழுகிறான்.

’இங்கு தண்ணிர் குடிக்க மட்டுமே உபயோகிக்கப்பட வேண்டும், மேலும் ஆடுகளுக்கும், ஒட்டகங்களுக்கும் குடிக்க மட்டுமே நீர்.  அதுவும் பல நூறு கிலோ மீட்டர்கள் தூரத்திலிருந்து விலைக்கு வாங்கப்படுகிறது.  என்றாவது மழை பெய்தால் குளித்துக் கொள்ளலாம்.  அதுவரை குளியல் கிடையாது.  வெளியே ஒதுங்கப் போனால் கிடைக்கும் கல்லில் அல்லது போட்டுக்கொண்டிருக்கும் ஆடையில் துடைத்துக் கொள்ள வேண்டுமேயன்றி, இப்படி தண்ணீரை உபயோகப்படுத்தினால் இதுதான் தண்டனை’ என்றவாரே, தலையில் கட்ட பயன்படுத்தும் பெல்ட்டால் விளாசுகிறார், அந்த அரபி முதலாளி !

ஒருமுறை அந்த அழுக்கன், ‘தப்பிச்சி, கிப்பிச்சி போயிடலாமுன்னு மனசால கூட நினச்சுறாத, சுத்தி பாலைவனம், சாப்பாடு தண்ணியில்லாம நாலே நாள்ல செத்துருவ, தவறி இவன் கண்ணுல மாட்னா, சுட்டுக் கொன்னு இந்த மண்ணுல புதச்சுடுவான், கேக்க நாதியில்ல” என்று பயமுறுத்தி வைத்தான்.

காலை எழுந்ததும் ஆட்டுப்பாலைக் கறந்து, ஒரு பங்கை முதலாளியிடம் கொடுத்துவிட்டு, மீதிப் பங்கை பிஞ்சு ஆடுகளுக்கு கொடுக்க வேண்டும்(அவைகளை தாயுடன் சேர்த்துவைத்தால், தாய் ஆடு சதை பிடிக்காதாம்) மேலும் பால் மிஞ்சியிருந்தால் குபூஸ் தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.  நஜீப் உடலிலும் அழுக்கும், தாடியும் வளர ஆரம்பித்துவிடுகிறது.

கர்ப்பினி மனைவியுடனும், விதவைத் தாயுடனும் தொடர்பே கொள்ள முடியாத அளவு ஒரு மோசமான சிறையில் மாட்டிக்கொண்ட நஜீப்பிற்கு அந்த நரக வாழ்வு ஒரு கட்டத்தில் பழகிப் போகிறது.  திடீரென அந்த கொல்லீக் அழுக்கன் காணாமல் போகிறான்.  ’பாவி தம்மைத் தனியாக மாட்டி விட்டுவிட்டு தப்பித்துவிட்டானே’ என எண்ணிக் கொள்கிறான் நஜீப்(ஒரு நாள் அந்த அழுக்கன் பிணம் இடறி மண்ணில் விழுகிறான் நஜீப்)


வேறு எந்த பொழுதுபோக்குமே இல்லாததால், ஆடுகளுக்கு தனக்குப் பிடித்த பெயர்களாய் வைத்து அவைகளுடன் உரையாட ஆரம்பித்துவிடுகிறான் நஜீப்.  செழுமையான ஒரு பெண் ஆட்டிற்கு புல்கட்டு ரமணி எனப் பெயர் வைத்து சதா அதைக் காதலிக்கிறான்.  ஓர் ஆண் ஆட்டுக் கன்றுக்கு, பிறக்கப்போகும் அவன் மகனுக்கு வைக்கவிருந்த நபீல் எனப் பெயரிட்டு அதை மகன் போலவே பாவிக்கிறான். 

கொடூரமான ஒரு நரகவாழ்வில் காமம் என்றால் என்ன என்பதே அவனுக்கு ம(றந்)ரத்துப் போனது.  எதேச்சையாய் ஓரிரவு அவனையும் மீறி அந்தக் காமப் பிசாசு விஸ்வரூபமெடுத்து, புல்கட்டு ரமணியை புணரச் செய்துவிட வைக்கிறது :(


ஆடுகளையும், சமயங்களில் ஒட்டகங்களையும் அந்த பரந்த பாலைவனத்தில் 120 -130 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலில் அலைந்து திரிந்து மேய்ப்பான்.  இரவானால் கடும்குளிரில் அதே பாலவனத்தில் படுத்துக் கிடப்பான்.  ’அல்லாஹ் உன் கோபம் தீரும்வரை என்னை வதைத்துக் கொள், ஆனால், கொன்றுவிடாதே, என்னை நம்பியும் ஜீவன்கள் தாயகத்தில் உள்ளன’ என்று வானத்தை நோக்கி அழுகிறான்.


அல்லாஹ் ஒரு சோமலியன் உருவில் வருகிறான்.  அருகில் வேறு ஒரு மஸாராவில்(மந்தை) வேலைபார்க்கும்  ஹக்கீமிற்கு துணையாய் வேலை செய்ய வரும் அந்த சோமாலியனுக்கு பாலைவன அறிவு அதிகம்.  அதைவைத்து ஒரு நாள் அந்தப் பாழாய்போன நரகத்தில் இருந்து தப்புகிறார்கள் மூவரும்.

பல நாள் மோசமான பயணத்திற்கு பின் நஜீப் மட்டுமே அந்தப் பயணத்தில் உயிர் தப்புகிறான்.  ஹக்கீம் உடல் கூட கிட்டாதளவு ஒரு மண்புயல் அவனை மூடிவிடுகிறது.  அடிக்கும் மற்றொரு பேய்க்காற்றில் அல்லாஹ் வடிவான அந்தச் சோமலியன் மறைகிறான்.  குத்துயிராய் நஜீப் நகரம் நோக்கிச் செல்லும் சாலையை ஒருவாறாக அடைந்து அத்துணை கோர உருவில் இருப்பினும் அல்லாஹ் கருணையினால் ஒரு நல்ல அரபி கொடுக்கும் லிப்டால் நகரத்தை வந்தடைகிறான்.

காய்கறிச்சந்தையில் இறங்கும் அவனுக்கு சக மலையாளிகள் உதவியால் புணர்ஜென்மம் கிட்டுகிறது.   உடலெங்கும் பட்ட காயங்கள் ஆற சிகிச்சை தரப்படுகிறது.  அப்போதுதான் தற்செயலாக கண்ணாடியில் அவன் உருவத்தை தரிசிக்கிறான்.  யா அல்லாஹ் அது அவனே அல்ல :(  அவன் அந்த பாலை நரகத்தில் இருந்த நாட்கள் எவ்வளவு என்பதையும் அறிய நேர்கிறது.  கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள்.  கையில் நயா பைசா இல்லை.  இதுபோக, தாயகம் திரும்ப வேண்டுமானால் முறைப்படி ஆவணம் ஏதுமில்லை. அப்படி இந்திய தூதரகம் மூலம் தாயகம் திரும்ப வேண்டுமானால் ஜெயிலில் இருக்க வேண்டும்.  நண்பர்கள் நஜீப்பை சரணடையச் சொல்கிறார்கள்.

பேராச்சர்யமாய் அந்த ஜெயில் வாழ்க்கை நம்மையும் ’ஒரு முறை அரபு ஜெயில் பார்த்துவிடு’ என ஆசையைத் தூண்டுகிறது.  ஆனால் வாரத்தில் ஒரு நாள் நடக்கும் ’அந்தக்’ கொடுமை, அரபு நாடுகளின் சர்வாதிகாரத்தை வெளிபடுத்துகிறது. அந்த ஒரு நாளின்போது ஜெயில் கைதிகள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு, அவர்களுடைய பழைய அரபு முதலாளிகளை ஏமாற்றிவிட்டு ஓடி வந்திருந்தால், அதே அர்பாபுக்காளால் தண்டிக்கப்பட்டு, மீண்டும் அவர்களை இழுத்துப் போக அனுமதிக்கபடும் நாள்.  அரக்கர்களுக்கு அரசு ஒத்துழைக்கும் தினம்.  எத்தனையோ அர்பாபுக்கள் வந்தும், நஜீப்பின் அரபி மட்டும் வரவேயில்லை.

நஜீப் அரபு நாடுகளுக்கு செலுத்த வேண்டிய எல்லாத் தண்டங்களையும் இந்தியத் தூதரகம் செலுத்தி, அவன் தாயகம் திரும்பும் நாள் குறிக்கப்படுகிறது.  கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக அந்த பரேட் நாள்.  அல்லாஹ் நஜீப்பை பார்த்து புன்முறுவல் பூக்கிறார்.  வரிசையில் நிற்கும் நஜீப் கண்ணில் அவனுடைய  நாசமாய்ப் போன அந்த அர்பாபு படுகிறான்.

கையில் இருக்கும் ஒரு தாளுடன், நஜீப்பை உற்று உற்று பார்க்கிறான் அந்த அரக்க அரபி.  அவன் தேடிய ஆள் நஜீப் அல்ல என விலகிப் போகிறான்.(ஆரம்பத்தில் ஏர்போர்ட்டில் ஒரு அழுக்கன் தேடுவானில்லையா அதை நினைவுக்கு கொண்டு வாருங்கள்)              

இப்படியாக ஒரு வழியாய் நஜீப் கேரளா வந்து சேர்கிறான்.  இப்போது நபீல் எனும் அவன் மகன், மனைவியுடன் வாழ்கிறான்.

படிப்பதற்கு சாதாரணமாய்க் கூட இருக்கலாம். ஆனால் பென்யாமின் எனும் மலையாள எழுத்தாளர் எழுதிய இந் நாவலை தமிழில் மொழிபெயர்த்த எஸ்.ராமன் எழுத்து உங்களை கொஞ்ச நேரமாவது கதறி அழ வைக்கும். வதை வர்ணனைகளும், பாலைவனத்தில் தப்பிக்கும் போது அனுபவிக்கும் இன்ப துன்பங்களையும் எழுத்தில் வாசிக்கும்போது இது தவிர்க்க முடியாத ஓர் இலக்கியம் என புலப்படும் !!


ஆடு ஜீவிதம் -பென்யாமின் (தமிழில் :எஸ்.ராமன்)
உயிர்மை பதிப்பகம், விலை ரூ.140/- 2010 வெளியீடு
   
== பொறுமையாய் பயணித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி ==


            

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!