வியாழன், 21 நவம்பர், 2013

என்னமா பீதிய கெளப்புறாய்ங்க !!!

அய்யகோ, என் நாவலுக்காக( :) ) வைத்திருந்த சம்பவங்களையெல்லாம் இந்த கோபிநாத் இப்படி கிளறி விட்டு விட்டாரே......ஸோ ஸேட்
:(
என் பதினேழு வயதில் அண்டை வீட்டருகே நடந்த *திகில் சம்பவமிது(*இளகிய இதயம் கொண்டோர், கர்ப்பிணிப் பெண்கள், சிறார்கள், பேய்களை நம்புபவர், நீங்கதாங்க அவசியம் வாசிக்கணும், இருங்க)

சிறுவயதில் கிரிக்கெட் மேட்ச் விளையாட, சுடுகாடு அருகாமையில்தான் மைதானமிருந்தது.  ஆகையால் கிரிக்கெட் விளையாடி விட்டோ அல்லது எதிரணி ஃபீல்டிங் செய்யும் சமயங்களிலோ அந்த சுடுகாட்டுக்குள் நுழைந்து, ஃபுட்பால் விளையாடுவோம், ஃபுட்பால் எது தெரியுமா ?  அங்குச் சிதறிக் கிடக்கும் முழு மண்டையோடுகள்தான் !

ஈஈஈயென வெட்கமில்லாமல் இளித்தபடியிருக்கும் இந்த மண்டையோடுகளுக்கா பயப்படுவது ?  இங்க ஓர் இலக்கிய சிந்தனைய பாருங்க, இந்த மனுஷப் பய, இதே ஓட்டுக்கு மேல தோலும், உதடுமிருக்கப்ப என்னென்ன சீனெல்லாம் போடுறான் ?  கமுக்கமா சிரிக்கிறது, நக்கலா நகைக்கிறது, அடுத்தவன் படுற கஷ்டத்தைப் பார்த்து வெறித்தனமா சிரிக்கிறது, காதலோட சிரிக்கிறது............ம்ஹூம், அப்படி ஒன்னுமே கிடையாது, ஓட்டுக்காக காலச் சொறியிற அரசியல்வாதிய மிஞ்சுன இளிப்பு, வெடுக் வெடுக்கென அந்தப் பல்லையெல்லாம் பிடுங்குவோம் !


எதற்காக இந்த உதார் என்றால், என்னோட இளம்வயது தைரியத்த நான் சொல்லனுமா இல்லையா ? அதற்காக பேய்ப்படம் பார்த்தால் பயப்படாமலெல்லாம் இருக்க மாட்டேன், பேய்ப்படங்களின் இசையமைப்பாளர்களுக்கென்று ஒரு மரியாதையை கொடுக்கத்தான் செய்வேன், பேய் நம்பிக்கை மட்டும் அறவே இல்லை.

இப்படி இருந்த ஒரு பகுத்தறிவுவாதியின் வாழ்க்கையில் திடீர் திருப்பமாக அந்தப் பயங்கர சம்பவம் நிகழ்ந்தது.  அப்போது, எங்கள் வீடு அடுக்குமாடி குடியிருப்பு.  ஒரே வரிசையில் எட்டெட்டு வீடுகளாய் நான்கு மாடி கட்டிடம் அது.  திடுமேன ஓஓஓ வென பெண்கள் அலறும் சத்தம், ரத்தம் பேரதிகம் பம்ப் செய்யப்பட்டு இதயம் ஒரு விநாடி நின்றது.  வெளியே சென்று பார்த்தால், உக்கிரமாய்த் திமிறிக் கொண்டிருந்த  நண்பனின் தம்பியை சில பெண்கள் கட்டுப்படுத்த முயன்றுக்கொண்டிருந்தனர்.

அவனை அருகில் சென்று பார்த்தபோது கால்களும், கைகளும் உதற ஆரம்பித்துவிட்டது.  உடனடியாக அக்கம்பக்கம் எந்த ஆண்களுமில்லாதலால், அவனைக் கட்டுப்படுத்த என்னிடம் தள்ளிவிட்டனர் அந்தப் பெண்கள்.  புஸ் புஸ் என பெருமூச்சு விட்டபடி, உக்கிரமான கண்ணோடு வெறித்தபடி, தொடர்ந்து நாக்கை நீட்டி, உள்ளே இழுத்து என அவன் செய்த செய்கைகள் பேரச்சத்தைக் கொடுத்தன.

‘என்னை விடுங்க, என்னை விடுங்க, விடுறா, விடுறீ, அவன இங்கிருந்து துரத்தாம விடமாட்டேன், விடுறா, டேய்ய்......’ என கத்திக்கொண்டே என் பிடியில் இருந்து நழுவப்பார்த்தான்.  அவனுடைய இரு தோள்களின் வழியே என் கைகளை விட்டு இறுக்கிப் பிடித்திருந்தேன். 

’ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ், டேய்ய்’..... நான் தோற்கப்போகிறேன் என தெரிந்துவிட்டது, ஆச்சர்யம் என்னவெனில் என்னை விட இளையவன் ஒருவனுக்கு அதெப்படி இவ்வளவு பலம் திடீரென வந்தது ?
அருகிலிருந்த மூதாட்டி, “அம்மா, தாயி யாரும்மா நீ, இங்க ஏன் வந்த, சின்ன பையன்மா, பாவம்டீ” என அந்தப் பையனிடம் பேச ஆரம்பித்தார்.  எத்தனையோ பெண்கள் சாமியாடி பார்த்திருக்கிறேன், ஒரு சிறுவன் ஆடி, அதுவும் என் கைப்பிடியில்.

‘ ஏய், நான்தாண்டி நாகாத்தம்மா வந்திருக்கேன், அவன ஏண்டி இங்க குடி வச்சீங்க, நான் இருக்கிற இடத்துல அவன் இருக்கலாமா ? அவன இந்த இடத்த விட்டு தொரத்துறேன், டே விடுறா என்னை’ என்று திமிறி என் பிடியிலிருந்து நழுவி கீழே ஊர்ந்தான். 

ஆமாம் நண்பர்களே, அப்படியே ஒரு மலைப்பாம்பைப் போல வளைந்து வளைந்து ஊர்ந்து என் வீடிருக்கும் திசை நோக்கிச் சென்றான்.  எல்லோரும் வாயடைத்து, கண்ணில் திகிலுடன் என்னாகுமோ என பார்த்தபடி இருந்தனர்.  அதுவரை சாமியாட்டம் பொய்யென அவதானித்திருந்த என் பகுத்தறிவு தூள்தூளாய் நொறுங்கியது.  என்னதான் ட்ராமா என்றாலும், ஒரு மனிதனால் பாம்பைப் போல், பாம்பின் உடல்மொழிகளோடு ஊர்ந்து போக முடியுமா ?அதற்குள் பல ஆண்கள் வந்துவிட, ஊர்ந்தவனை துணிந்து, தடுக்க முயன்றோம்.


வந்தது பாம்பு தெய்வம் என புரிந்துபோனதால், கடித்து கிடித்து வைத்தால் விஷமேறிச் சாவோம் என சுற்றியிருந்தவர்கள் கத்த ஆரம்பித்துவிட்டனர்.  நாங்கள் அவன் வாய்க்கருகே போகாமல் எச்சரிக்கையாக சூழ்நிலையைக் கையாண்டோம்.  நல்லவேளையாக அருகிலிருந்த ஒரு அம்மன் கோவில் பூசாரி வந்து சேர்ந்தார்.  அவர் வேப்பிலை, விபூதி, மஞ்சத்தண்ணீ சகிதம் அவனைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.  இரண்டு மணி நேரம் கழித்து அவனைப் பார்க்கப் போனேன், குறட்டை ஒலியுடன் தூங்கிக் கொண்டிருந்தான் !

அப்போது, என் பக்கத்துவீட்டில் புதியதாக சில மாதங்களுக்கு முன்னர்தான் ஒரு குடும்பம் வந்திருந்தனர். (அந்த வீட்டுப் பெரியவர்தான் எனக்கு கண்ணதாசனின் அர்த்தமுள்ள்ள இந்துமதம் வாசிக்கக் கொடுத்து, விடுமுறைத் திருநாள் மோசடிகளை பிற்காலத்தில் உணர வழிவகை செய்தவர்)  அவர்களின் குலதெவம் “ரத்தக் காட்டேரி” 

ஒரு நாள், ”நாளை இரவு எங்கள் வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யப்போவதால், உங்கள் குழந்தைகளை இரவு வெளியே உலவ விட வேண்டாம்” என என் அம்மாவை எச்சரித்தனர்.  அக்கம்பக்க வீடுகளிலும்.
ஆனால், இதெல்லாம் முடிந்து சில நாட்களுக்கு பின்னர்தான் மேலே சொன்ன அந்த நாகாத்தம்மன் அக்கப்போர்.  நாகாத்தம்மனும், ரத்தக்காட்டேரியும் அக்கா தம்பியாமாம், அவர்களிருவருக்கும் எப்போதும் ஆகாதாமாம், அந்த வீட்டில் ரத்தக் காட்டேரி இருக்கிறதாம்(பாவிங்களா அது என்னோட பக்கத்து வீடு, மேலும் தனியாத்தான் பால்கனியில் படுத்துக் கிடப்பேன், கன்னிப்பையன், தலைச்சன் வேற)


அதனால்தான் அதை விரட்ட நாகாத்தம்மன் அந்தப் பையன் மேல் வந்திறங்கியிருக்கிறாள் என பூசாரி புனைவை, அபுனைவாக்க..........மவனே, பத்து நாளைக்கு எவனும் ராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அங்கு கூடுவதில்லை, கடைகன்னிக்கு போவதில்லை, பால்கனியில் படுக்கவில்லை.  பதினோறாவது நாள் வழக்கம் போல தனியே பால்கனியில் நான் படுக்க, படுக்கையைத் தூக்கி வெளியே போட்டேன்.  அக்கம்பக்கத்தினர் ’லூசுப்பய’ என்பதாய் என்னைப் பார்த்தனர்.  காரணம் இருக்குல்ல !

தீவிரமாய் யோகா செய்துக் கொண்டிருந்த காலமது.  பத்மாசனம், சர்வங்காசனம், ஹலாசனம், சிரசாசனம், தனுராசனம் போட்டுக் கொண்டிருக்கும் போது அந்த எண்ணம் உதித்தது.  ‘மனிதனால் பாம்பு போல் வளைந்து, நெளிந்து தரையில் ஊர்ந்து போக முடியுமா ?’ முயன்று பார்த்தேன்.  அட, மிகச் சர்வ சாதாரணமாக அவனை விட அழகாக ஊர்ந்து போக முடிந்தது.  பிறகு நாக்கைத் துருத்தி, மூச்சை புஸ்ஸென விட்டும் சோதித்தேன், அவனாவது அனகோண்டா போல ஸ்லோவாகப் போனான், நான் கட்டுவிரியன், கண்ணாடிவிரியனுக்கெல்லாம் சவால் விட்டேன், பெயருக்கேற்ப நாகமானேன்.  பழையபடி என்னுள் பகுத்தறிவாளன் புகுந்தான் !


சில நாட்களிலேயே பக்கத்துவீட்டில் காலி செய்துக்கொண்டு திருச்சிக்கு போய்விட்டனர், காட்டேரிய என்ன பண்ணாங்கன்னு தெரியல, ஒரு சில மாதங்களுக்கு அப்புறமாத்தான் அந்த ஆன்ட்டி க்ளைமாக்ஸ்.  எந்த வீட்டிலிருந்து நாகாத்தம்மன் வந்தாளோ, அந்த வீட்டிற்கும் குலதெய்வம் ரத்தக் காட்டேரிதானாமாம் !

’கருமாந்திரம் புடிச்சவனுங்களா’ என நண்பனிடம் தலையில் அடித்துக் கொண்டேன்.  “இல்ல மச்சான், ரத்தக் காட்டேரியல்லாம் வீட்ல வச்சு கும்பிடக்கூடாது, கும்பிட்றப்போ யாராவது குறுக்குல வந்துட்டா, அடிச்சிரும், ரத்தம் கக்கி செத்துருவாங்க” அன்னிக்கு இதப்பத்தி எங்கம்மா எல்லோருகிட்டயும் சொல்லிட்ட்ருந்தப்ப என் தம்பி எங்கம்மாவையே வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டிருந்தான், அதுக்கப்புறம் நடந்ததுதான் உனக்கேத் தெரியுமே ?’

”சரிடா, நீங்க ஏன் இப்ப இங்க கும்பிட்றீங்க”

“மச்சான் நீ சொன்னா என்னை கிண்டல் பண்ணுவ, அதான் தயங்குறேன்”

“சொல்லித் தொலை”

“உங்க பக்கத்து வீட்ல காலி பண்ணவங்க, ரத்தக் காட்டெரிய அம்போன்னு விட்டுட்டு போய்ட்டாங்கடா”


என் உடல்மொழியைப் பார்த்தவன், ‘அதுக்குத்தான் மயிரு உங்கிட்ட சொல்லமாட்டேன்னேன்”

“சரி, சரி, மேல சொல்லு மச்சான்”

‘அது என் தம்பி மேல வந்து சொல்லி அழுதுச்சி, அதான் மொத மொறையா எங்க வீட்ல வச்சி கும்பிட்றோம், மச்சான் இன்னிக்கு ஒரு நாள் உள்ள பட்றா, ப்ளீஸ்”
                                        ==முற்றும்==  

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக