சனி, 3 மே, 2014

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாத்தியாரே !!!

பேராசான்களில் தலையானவரான எங்கள் சுஜாதாவின் பிறந்த நாள் இன்று.


இந்த எலக்ட்ரானிக் புரட்சியின்போது வாத்தியார் உயிரோடு இல்லையே என்று காலன் மீது கோபம் வருகிறது.  

இருந்திருந்தால் இன்று அவருடைய ஃபேஸ்புக் வாசகர் வட்டத்தில் கமலோடு, ரஜினியோடு, ஷங்கரோடு, கலைஞரோடு இணைந்து நானும் வாழ்த்து மடல் எழுதியிருந்திருப்பேன்.

’கனவுத் தொழிற்சாலை’ நாவலை மீள் வாசிக்க கையில் எடுத்தேன்.


இக்கதை, விகடனில் தொடர்கதையாக எழுதப்பட்டது.  தொடர்கதையின் முதல் அத்தியாயத்தை மட்டும் வாசித்துப் பார்க்க, நடிகை லட்சுமி மற்றும் இயக்குனர் மகேந்திரனிடம் கொடுத்து, அவர்கள் வாசித்த பின், அந்த ஒரே ஒரு அத்தியாயாத்தை வைத்துக் கொண்டு சுஜாதா, லட்சுமி, மகேந்திரன், உடன் விகடன் ஆசிரியர்(பால சுப்ரமணியன் அல்லது மதன் ?) நால்வரும் விவாதிக்கின்றனர்.  


நாவல் முழுக்க சினிமா உலகையேச் சுற்றி வரப்போகும் கதை என்பதால் இந்த ஏற்பாடு.  அநேகமாய் இச் சந்திப்பு 1979 - 1980 ம் வருடங்களில் நிகழ்ந்திருக்க வேண்டும்.  இனி அவர்கள் உரையாடிய பகுதிகளில் சில தேர்ந்தெடுத்த பத்திகளைப் பாருங்கள் :)

லட்சுமி - “இப்ப நீங்க நம்ம தமிழ் ஸ்டார்ஸ பத்திப் பேசுறீங்கன்னு நினைக்கிறேன், இந்த ஸ்டார்ஸ் வந்து ஸ்டானிஸ்லவ்ஸ்கி, கோடார்டு பத்தி நினைப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா ?  I don’t think stars will think about that"


சுஜாதா - அப்படியா.... ?

லட்சுமி - ஸ்டார்ஸ்னு எடுத்துகிட்டா அது தமிழா இருக்கட்டும், ஹிந்தியா இருக்கட்டும், இவங்களப் பத்தியெல்லாம் சொன்னா, ‘இதெல்லாம் எந்த மார்க்கெட்லே கிடைக்கும்னுதான் கேப்பாங்க......!

சுஜாதா - நான் அதை எப்படி உபயோகப்படுத்தியிருக்கேன்னா, ‘ நான் படிச்சிருக்கேன்’ன்னு இவன் சொல்லிப்பான்.....உண்மையிலே இவன் படிச்சிருக்க மாட்டான்.....ஒரு பெருமைக்கு சொல்லுவான்.  எவ்வளவோ டைரக்டர்களுக்குத் தெரிஞ்சிருக்கு, அவங்க பேசுறதிலேருந்து இவன் தெரிஞ்சிக்கிறான்......

மகேந்திரன் - இப்ப நீங்க நினைக்கிற மாதிரி ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க.....ஆனா அவங்க ஸ்டார்ஸ் இல்ல.


லட்சுமி - நான் ஒண்ணு உங்களக் கேக்கணும்.  உங்க கதைல வர்ற ஹீரோஸ் ஒரே மாதிரியா இருக்காங்களே....எல்லோரும் ஒரு இண்டலெக்சுவல் டைப், உங்க இந்தக் கதையோட ஹீரோவாவது ஒரு காமன் ஹீரோவா ஏன் இருக்கக் கூடாது ?  

சுஜாதா - நீங்க கொஞ்சம் அவசரப்படுறீங்கன்னு நினைக்கிறேன், இந்த ஒரு அத்தியாயத்த வச்சிகிட்டு எந்த முடிவுக்கும் வந்துடக் கூடாதில்லையா ?

லட்சுமி - ஆமா, ஆமா, ஒரு ரீலைப் பாத்துட்டு படத்த ஜட்ஜ் பண்றது எவ்வளவு தப்போ, அது மாதிரிதான் இதுவும்......என் கைல ஒரு அத்தியாயம்தான் கொடுத்தாங்க !

சுஜாதா - என் கைலயும் இப்ப ஒரு அத்தியாயம்தான் இருக்கு :)

மகேந்திரன் - நீங்க ஸ்டார்ஸ் இன்டெலிஜென்ஸ் பத்தி பேசறதாலச் சொல்றேன், இப்ப இன்னொரு இது ஆரம்பிச்சிருக்கு, அதாவது ஸ்டார்ஸ் பின்னாடி கூட்டம் வருது, பரவசமா பேசுறது........இதெல்லாம் டைரக்டர்கள்கிட்ட இது உள்ளூர ஒர்க் பண்ணிக்கிட்டே இருக்கு......... ’நாமதான் இவன ஸ்டாராக்கினோம், நம்ம ஸ்க்ரிப்ட் இல்லாம இருந்திருந்தா, இவனத் தூக்கிப் போட்டிருப்பாங்க, இப்பப்பாத்தா நாம வெறுமனே போய்க்கிட்டிருக்கோம், அவன்ச் சுத்தித்தான் கூட்டம்.........இப்படி

லட்சுமி - உண்மைதான்......

மகேந்திரன் - அதனால நாங்க புது மாதிரியா படம் எடுக்கிறோம்ங்கிற போர்வைல புது ஸ்டார்ஸ் போட்டுக்கிட்டிருக்கோம்.

லட்சுமி - எக்ஸ்க்யூஸ்மீ....இவர் கதை எழுத நீங்க நிறைய விஷயம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க, கேள்வி கேட்கிறதுக்குப் பதிலா you are giving more stuff to him !

சுஜாதா - ஹாஹா  I am very happy, எனக்கு இதுதான் தேவை, இப்ப பேசுற டயலாக் எல்லாத்தையுமே நான் நிறைய யூஸ் பண்ணப் போறேன்........

லட்சுமி - உங்க கதைகள்ல எவ்வளவு சினிமாவா வந்திருக்கு ?

சுஜாதா - காயத்ரி வந்திருக்கு, ப்ரியா, நினைத்தாலே இனிக்கும்....

லட்சுமி - Are you happy with all the films ?

சுஜாதா - No...not at all அதானலத்தான் இந்தக் கதையையே எழுத ஆரம்பிச்சேன்

லட்சுமி - அவங்க எடுத்திருக்காங்கன்னு நினைக்கிறீங்களா, கெடுத்திருக்காங்கன்னு நினைக்கிறீங்களா ?

சுஜாதா - ரொம்பவே கெடுக்கிறாங்க.....

மகேந்திரன் - உங்க கதையோட ட்ரீட்மெண்ட்டக் காட்டணும்னு டிமாண்ட் பண்றீங்களோ ?

சுஜாதா - இப்பத்தான் கத்துகிட்ருக்கேன், அதுமில்லாம எழுத்துல வர்றத படிக்கிறவங்கள விட சினிமா  பாக்கிறவங்க ஏராளம்.  பஞ்சு அருணாச்சலம் சொன்னார்,  “நீங்க ப்ரியாவுக்கு ட்ரீட்மெண்ட் எழுதியிருந்தா ஒரு வாரத்தில படம் படுத்திருக்கும்”னு  

லட்சுமி - சென்ஸார் இருக்கணும்கிறீங்களா, வேண்டாங்கிறீங்களா ?

மகேந்திரன் - இருக்கணும்........ஆனா அதிலே யார் இருக்கிறாங்ககன்றதுதான் முக்கியம், இப்ப சமீபத்துல என்னோட உதிரிப் பூக்கள் படத்த சென்ஸார்ல பாத்தாங்க, அது ஒரு நீட் பிக்சர், இருந்தாலும் அதுக்கு ‘A' செர்டிபிகேட் கொடுத்திருக்காங்க, என்ன காரணம்னு கேட்டேன், ‘இதுல வர்ற விஜயன் கேரக்டர் ரொம்ப சேடிஸ்டா இருக்கான், குழந்தைங்க பாத்தா கெட்டுப் போயிடுவாங்க’ன்னாங்க.  ‘அந்தக் கெட்டவன்’ கடைசில ப்னீஷ் ஆயிடறானே.......இப்படிப்பட்டவனா இருக்கக்கூடாதுன்னு இந்தக் கேரக்டர் மூலமா ஒரு பாடம் குழந்தைகளுக்கு கிடைக்குமே’ன்னு சொன்னேன்.  இல்ல இல்லங்கிறாங்க.  நாளைக்கு நான் ராமாயணம் எடுப்பேன், ராவணன் மத்தவன் பொண்டாட்டிய கடத்திகிட்டு போறானே......அதுக்கும் 'A' சர்டிபிகேட் கொடுப்பீங்களா ? ன்னு
கேட்டேன்.  அது வந்து சென்ஸார், சாடிஸ்ட் ன்னு மழுப்புறாங்க, இவங்கள வச்சிகிட்டு என்ன பண்ண முடியும் ?

சுஜாதா - இப்ப நான் வெளிநாடு போயிருந்தபோது Blue Films பார்த்தேன்.  அங்க சென்ஸாரே கிடையாது.  ஆனா அந்த மாதிரி படத்துக்கு வெறும் பத்து பேர் சிகரெட்ட பிடிச்சிகிட்டு.......அவங்க படத்த கூட ஒழுங்காப் பாக்கிறதில்ல, கூட்டமெல்லாம் லாஸ்ட் டிஸ்னி படத்துக்குத்தான், இங்க சென்ஸார்கிட்டருந்து தப்பிச்சிட்டு வர்ற ஒன்னு ரெண்டு சீனுங்கதான் ரொம்ப வல்கரா இருக்கு, ரெண்டு பேரு மூக்க மூக்க முகர்ந்து பாத்துகிட்டிருக்கும்போது கேமரா நேரா ரெண்டு பூ ஒண்ணோட ஒண்ணு சேர்றா மாதிரி காட்டப் போயிடுது.....இங்கதான் இமாஜினேஷன் அதிகமாயிடுது.....

லட்சுமி - அப்ப இந்தியாவுல சென்ஸார் வேண்டான்னு சொல்றீங்களா ?

சுஜாதா - இந்த மாதிரி வேண்டாங்குறேன்....

லட்சுமி - மேல்நாட்டு ரசிகத்தன்மைக்கும், நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு, இங்க சென்ஸார்ஷிப் கண்டிப்பா வேணும்னு நான் நினைக்கிறேன்

மகேந்திரன் - நான் சுஜாதா சொல்றதுதான் சரின்னு நினைக்கிறேன்

லட்சுமி - நீங்க சென்சாரால கஷ்டப்பட்டதால அப்படி சொல்றீங்க.....

மகேந்திரன் - நானுன்னில்ல, இனி எல்லோருமே கஷ்டப்படப் போறோம்.

சுஜாதா - இந்தக் கதைல கூட ஒருத்தன் கஷ்டப்படப் போறான், சென்ஸார் போர்டால அவன் தலைமயிறப் பிச்சிகிட்டு ஓடப்போறான்......

மகேந்திரன் - அது மாதிரி நல்லா எழுதுங்க சார்

சுஜாதா - சட்டத்தினால ஒழுக்க நெறிமுறையெல்லாம் கொண்டு வர முடியாது, மதுவிலக்கையே பாருங்களேன்......இப்ப நம்ம தமிழ்ப்படங்கள்ல வர்ற காதல் காட்சிகள் ந்யூட் ஃபில்ம்ஸ விட  எக்ஸைட்மெண்ட் கொடுக்கிறது........அதுக்குன்னு சென்ஸாரே வேண்டாம்னும் சொல்லிட முடியல.  நான் பாலம்னு ஒரு கதை எழுதினேன், அதுல கொலையை நியாயப்படுத்தினேன்.  அத வாசிச்சிட்டு ஒருத்தர் 14 பக்கத்துக்கு மேல எனக்கு கடிதாசி எழுதிட்டு.....’இப்ப உன்னையே எனக்கு கொல்லணும் போலருக்கு, வரட்டுமா ?’ ன்னு கேட்டிருந்தாரு.  அதுக்கப்புறமாத்தான் நாம எழுதனத எவ்வளவு பேரு வாசிக்கிறாங்க, அது எவ்வளவு பேர பாதிக்குதுன்னு புரிஞ்சிகிட்டேன், நாமே நமக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்க அந்தச் சம்பவம் உபயோகமாச்சு, அதே மாதிரி சினிமாக்காரங்களும் சுய கட்டுப்பாட்டோட எடுக்கணும்.

லட்சுமி - நான் அதைத்தான் சொல்ல வரேன்.  நமக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது....... நமக்கு யாராவது ஒருத்தர் ‘செய்யாதே....செய்யாதே’ன்னு சொல்லிகிட்டே இருக்கணும்

மகேந்திரன் - நானும் சென்ஸார் போர்டே இருக்கக்கூடாதுன்னு சொல்ல வரல, இந்த மீடியத்தப் புரிஞ்சவங்க பார்க்கணும்.....சினிமாவப்பத்தி ஒண்ணுமே தெரியாத யாரோ வந்து கலெக்டர் ஆபீஸ் ஜாப் மாதிரி உட்கார்ந்துட்டுப் போனா எப்படி சார் ?

லட்சுமி - சினிமாவ கம்ளீட்டா தெரிஞ்சவங்க ஒக்காந்தா எல்லாத்தையும் அனுமதிச்சுடுவாங்களே சார், வெளியாள் இருந்தாத்தானே எது வேணும், எது வேணாம், எந்தக் காட்சி தங்களைப் பாதிக்கறதுன்னு சொல்ல முடியும் ?

மகேந்திரன் - சுஜாதா சார், நீங்க அருண் உயரத்துக்குச் சொல்லியிருக்கிற உதாரணம் அழகா இருந்தது......

லட்சுமி - சீச்சீ.......அப்ப அதெல்லாம் நீங்க ஒத்துக்கிறீங்க, அருணோட உயரம், அவன் நெஞ்சுல சாயற ஹீரோயினோட தலைவகிடும், மார்பு உள்ளாடைகளும் பாக்கற அளவுக்கு.........மகேந்திரன் நீங்க ரொம்ப பார்ஷியல் !  எழுத்தில வரும்போது ரசிக்கலாம், சினிமாவுக்கு வரும்போது ஆபாசம்ங்கறீங்க....... நீங்க சுஜாதாவைத்தான் சப்போர்ட் பண்றீங்க, சுஜாதாவோ, வேணுகோபலனோ, சிவ சங்கரியோ எழுதுனா ரைட்ன்னு சொல்வீங்க, இதயே கண்ணதாசன், வாலி எழுதுனா ஆபாசம்னு சொல்லிடறதா ?  மூக்க மூக்க இடிச்சிகிட்டு அப்புறம் பூவக் காட்டி இமாஜினேஷனுக்கு விட்டா அபாயம்னு சொல்றீங்க.......அதே மாதிரி நீங்க பாதி சொல்லி மீதிய இமாஜினேஷனுக்கு விடறது மட்டும் ஆபத்தில்லையா ?


விகடன் ஆசிரியர் - இந்தக் கேள்விக்கு ஒரு சின்ன பதில் இருக்கு........ஒரு எழுத்தாளன் எழுதப் படிக்கத் தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் எழுதறான்........அவங்களோட ஐடியாக்கள் கன்னா பின்னாவெனப் போறதில்ல, ஆனா கண்ணாலப் பாத்து, காதால கேட்டுப் புரிந்துக் கொள்ளக்கூடிய சினிமாவை எல்லோரும் ரசிக்கிறாங்க, அங்கதான் எச்சரிக்கையோடு எதையும் சொல்ல வேண்டியதிருக்கு......

மகேந்திரன் - நீங்க இன்னொன்னப் பத்தி அவசியம் எழுதணும், அதாவது இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளப் பத்தி........!  அவங்களை எப்படித் தெரியுமா ட்ரீட் பண்ணுவாங்க ?  ஆடு மாடு மாதிரி சார், ‘ஏ வா போ’ ன்னு......!

லட்சுமி - ஏன் ஜூனியர் ஆர்டிஸ்ட்க்குப் போறீங்க.......புது முகமா இருந்தாலே போதும்.....பாவம், அந்தப் பொண்ணு நின்னுகிட்டேயிருக்கும், ஆனா இதுல பத்து வருஷம் ஆன ஹீரோ ஒருத்தர் வந்தா உடனே எல்லோரும் ரெடியா எழுந்து நிக்கணும், எழுந்திருக்கலேன்னா ‘அண்ணன் வர்றார் எழுந்துக்கோ’ன்னு சொல்வாங்க, 'Get Lost' அண்ணனாவது தம்பியாவது’ன்னு
சொல்ல எத்தனைப் பேருக்கு தைரியமிருக்கு ?

மகேந்திரன் - புது முகங்கள அப்படிச் சொல்லாதீங்க...இரண்டு சீன் ஆகட் பண்ணியாச்சு.....ஒரு ஷெட்யூல் முடிஞ்சிப் போச்சுன்னா போதும், Next schedule she will come with a chair..........

லட்சுமி - அது ஏன் தெரியுமா ?  அவளுக்கு யாரும் சேர் போடறதேயில்ல........ :(  சார், உங்க கதைல வர்ற ஹீரோயின் ரொம்ப இன்டலிஜெண்டா இருப்பாளா ?

சுஜாதா - ஆமாம், என் கதாநாயகி கதாநாயகனையே மிஞ்சப் போறா........She will overtake him.

லட்சுமி - நான் அத விரும்பறேன்.  ஏன்னா சினிமா ஹீரோயின்னாலே, ‘அவ கூடுவாஞ்சேரில இருக்கா.....வறட்டி தட்டிண்டிருந்தா, சினிமாவுல சேர்ந்து ஒரு ஸ்ரீ யோ, ப்ரியாவோ சேத்துக்கிட்டான்னு கேலி பண்றதே வழக்கமாப் போச்சு, மதன் ஜோக்ஸ நான் என்ஜாய் பண்ணுவேன், இருந்தாலும் ஹீரோயின்னா அவளுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு கிண்டல் பண்றது அவர் வழக்கமா இருக்கு, தெரிந்தோ தெரியாமலோ நாம எல்லோரும் மேல் ஷாவனிஸ்ட்டா இருக்கோம்........


சுஜாதா - இங்கே நான் ஒண்ணு கேட்க விரும்பறேன்.  கதாநாயகிகள்ல கொஞ்சம் புகழுக்கு வந்தவங்க கூட வேணும்னே கொஞ்சம் அதிகப்படியா குழந்தைத்தனத்த பேச்சில காட்டுறாங்க.......எதுக்கு இந்த நடிப்பு ?  அவங்க ஹேண்ட்பேகத் திறந்தா அமுல், க்ளாக்ஸோ எல்லாம் கூட இருக்கும்போலருக்கு........?

லட்சுமி - சினிமாவுல மட்டும்தானா இப்படி ? நான் எவ்வளவோ பெண்களை வாழ்க்கையிலே சந்திக்கிறேன், தமிழை இங்க்லீஷ் மாதிரி ‘அவ ஷொன்னா......இவா ஷொன்னா’னு பேசிண்டு........

சுஜாதா - இது மாதிரி போலியா பேசறவங்க பல பேர நானும் பார்த்திருக்கிறேன்.  ஏன் எங்கிட்டயே, “ நல்லா எழுதறீங்க சார், ரொம்ப நல்லா எழுதறீங்க......என் ஒய்ஃப்தான் படிப்பா...... நான் இதெல்லாம் படிக்கிறதில்ல”  அவனே படிச்சிருப்பான்.  துருவித் துருவிக் கேட்டா எல்லாத்தையும் ஒப்பிப்பான்.

லட்சுமி -  இதெல்லாம் ‘ நாங்க எல்லாம் தமிழ்ப்படம் பார்க்கிறதில்ல’ன்னு சொல்ற கேஸ்.........

சுஜாதா - இன்னும் சில பேர் இருக்காங்க.....’சார் ரொம்ப நன்னா எழுதறீங்க......அதான் அந்த பொன் விலங்கு.....ப்யூட்டிஃபுல் சார்.
ஐயோ சார் அது நான் எழுதனதில்லேன்னு சொன்னா......’அப்படின்னா சிவகாமி சபதமான்னு மாத்திப்பாங்க.......

மகேந்திரன் - சினிமாவுல மத்த சில டெக்னீஷியன்களும் ரொம்ப கஷ்டப்படுவாங்க, பாவம் ப்ரொடக்‌ஷன் ட்ரைவர்ஸ்.  ராத்திரி மூணு மணியானாலும் அவங்க சாப்பிட்டிருக்க மாட்டாங்க....

லட்சுமி - பார்க்கப்போனா ரொம்பக் கஷ்டப்படறது தயாரிப்பாளர்தான்...

சுஜாதா - அவன் வேணும்னே இதுக்குள்ள நுழையறான், அவன் பேசாம வீட்லயே இருந்திருக்கலாம், பொண்டாட்டி நகைகள வித்துட்டு, இங்க வரணும்னு என்ன தலையெழுத்து ?  அவன் இப்படித்தான் பாடம் கத்துக்கணும்........

லட்சுமி - உங்களோட பேசிக்கிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல....

சுஜாதா - எனக்கு நிறைய விஷயம் கிடச்சிருக்கு உங்க ரெண்டு பேரயும் சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.

                  === HAPPY BIRTHDAY SIR ===

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக