சனி, 10 மே, 2014

ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள் !!!

எனக்கு பவர்ஸ்டாரின் பாடி லாங்க்வேஜைப் பார்த்தாலே பத்திகிட்டு வரும்.  இந்த அழகில் சில வருடங்களுக்கு முன்பு, இங்கு, தெரிந்தோ/தெரியாமலோ, விளையாட்டுக்கோ/ரசித்தோ பலரும் அவரைப் பற்றிப் போற்றி, பதிவுகளாக வெளியிட்டுக் கடுப்பேற்றினர்.

அதன் பின்விளைவாய், அவரை பல பிரபல நிறுவனங்களும் தங்கள் தயாரிப்பில் நடிக்க வைத்தனர்.  பத்துக்கும் மேற்பட்ட பண மோசடி குற்ற வழக்குகளை அவர் மேல் பதிந்து, குண்டர் சட்டம் வரை அவர் மீது பாய்ச்சப்பட்டிருப்பினும், சிறிதும் பொறுப்பின்றி அவரை பலப் பிரபல ஊடகங்களும் விருந்தினராக தங்கள் நிகழ்ச்சியில் வரவழைத்து, மக்கள் மத்தியில் போலிப் பிரபல்யத்தை உருவாக்கினர்

இப்படி,விளையாட்டுக்குச் செய்து உயர்ந்துவிடும் சில போலிப் பிரபலங்களால் நாடே நாசமாகிப் போகவும் வாய்ப்புண்டு.  அதற்கு அதி சிறந்த உதாரணமாய்த் திகழ்ந்தவர்தான் அடால்ஃப் ஹிட்லர்.


எதற்கு இத்தனை வியாக்கியானங்கள் கொடுத்தேனெனில் இங்கு பலருக்கும் ஹிட்லர் ஓர் ஆதர்ஸ நாயகன்.  நானே கூட என் டீனேஜில் ஹிட்லரின் பேப்பர் கட்டிங்கை வீட்டுச் சுவரில் ஒட்டி வைத்தவன்தான், காரணம் நம்மை பெரிதாய் ஆட்டுவித்த வெள்ளைக்காரனை சில வருடங்களுக்கு தூங்காமல் புலம்பவிட்ட பெருமை ஹிட்லருக்கு உண்டு.  ஆனால் யதார்த்தம் வேறுமாதிரியாகிப் போனது.

ஹிட்லரை பேரளவிற்கு நம்பிய ஜேர்மானியர்களின் பல வருடத் தூக்கத்தை மட்டுமல்லாது, உயிர், உடமை, ஊனம் என முடக்கிப்போட்டதும் அதே ஹிட்லரே :(

’ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள்’ இது 1965 ல் தோராளி சங்கர் என்பவரால், எளிய தமிழ் நடையில் எழுதப்பட்ட நூல்.  இந்த நூலை அவர் 15க்கும் மேற்பட்ட உலக நூல்கள் மற்றும் கடற்போர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளில் ஆராய்ந்து எழுதியுள்ளார், ஹிட்லரின் மெய்ன் கம்ப் உட்பட, பல கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுடன்.


12 - 13 வயதிலேயே கப்பல், அதிலும் போர்க்கப்பல் என்றால் எனக்கு உயிர்.  அதனாலேயே பள்ளி என்ஸிஸியில் நேவலில் சேர்ந்தேன்.  நேவி மாஸ்டர் அறையில் பெரிதாய் மாட்டப்பட்டிருக்கும் கப்பல் புகைப்படங்களை வைத்த கண் எடுக்காமல் சொக்கி பார்த்துக்கொண்டிருப்பேன், அதனாலேயே எனக்கு இந்தப் புத்தகம் மேல் பெருமீர்ப்பு ஏற்பட்டதில் வியப்பில்லை, ஆனால் வெறும் 100 அல்லது 150 பக்கங்களில் சொல்லிவிடக்கூடிய விவரங்களை, திரும்ப திரும்பச் சொல்லி, நீட்டி, 500 பக்கங்கள் வரை ஆசிரியர் இழுத்து விட்டிருந்ததால், ஏதோ தேர்வுக்கு படித்த நிலையையடைந்தேன் :(

”என்னடா ஹிட்லர பவர்ஸ்டார் ரேஞ்சுக்கு ஒப்பிடுற ?” என்று ஹிட்லர் ஃபேன்ஸ் கோவிக்க வேண்டாம்.  ஆரம்பத்தில் பவர்ஸ்டார் இடத்தில் மோடியை, அல்லது அர்விந்த் கெஜ்ரிவாலைத்தான் எழுத எண்ணியிருந்தேன், பிறகந்த எண்ணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளி வைத்துவிட்டேன்.  அடுத்த வருடம் தேவைப்பட்டால் எடிட் செய்திவிடுகிறேன், ப்ளீஸ் கூல் :)

இந் நூல் ஹிட்லர் தந்தையின் சுய சரிதையோடு தொடங்குகிறது.  ஹிட்லர் தன் காதலியோடு தற்கொலை செய்துக்கொண்டபின்,, மெய்க்காப்பாளர்களால் எரிக்கப்பட்டு சாம்பலை குழி தோண்டிப் புதைப்பதோடு முடிவுறுகிறது.  ஆனால் இவைகள் வெறும் ஐம்பது பக்கங்கள் கூட இல்லை, மீதி 450 பக்கங்களும் யூ - போட், நாசகாரிக் கப்பல், ரோந்துக் கப்பல், வணிகக் கப்பல், டர்பிடோ, ஒன்பது எம் எம் பீரங்கி, 12 எம் எம் பீரங்கி, சுரங்க வெடிகள், ஆர்க்டிக் கடல், அட்லாண்டிக் கடல், மத்தியத் தரைக்கடல், இங்க்லீஷ் கால்வாய் என கடலும், கப்பல்களும்தான்......... 


ஹிட்லரின் பிறப்பே அலாதி.  அவர் ஜேர்மானியரே அல்ல.  ஆஸ்திரியாவை பூர்வீகமாகக் கொண்டவர்.  ஹிட்லரின் தந்தைக்கு ’யார் தந்தை’ என்றே பல வருடங்களுக்கு தெரியாமல் இருந்ததாம்.  பிறகெப்படியோ தெரியவரும் வேளையில், கொஞ்சம் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்று ஹிட்லரை பெருமூச்சு விட வைக்கிறது.     

பழைய தமிழ்ச் சினிமாவைப் போல மிகச் சோகமான குடும்பப்பின்னணியில் பிறந்து, தன் இளமைக்கால வாழ்வை போராட்டங்களும், அவமானங்களும், ஏமாற்றங்களுமாய் கழிக்கிறார்.  இன்னொரு கொடுமை அவர் வயதுக்கு வரும் வேளையில், நோய்வாய்ப்பட்டதில் அவ லட்சணமாக வேறிருக்கிறார். படிப்பு சரியாய் வரவில்லை.  ஓவியத்தில் அதிக ஈடுபாடு உண்டு, ஆனால் அவரின் ஓவியங்கள் பல இடங்களிலும் சரியில்லை என நிராகரிக்கப்படுகிறது.

ஆனால்  நம்மைப் போல் சிறந்த வாசிப்பாளராகவும் இருந்து விட, வரலாற்று நூல்களை பெரிதும் விரும்பி வாசிக்கிறார். பல வரலாற்று நூல்களை வாசித்தபடியே, நெப்போலியனையும், மகா ப்ரடெரிக்கையும் வாசித்த வேளையில், அவர்களின் அளப்பரிய வீரத்தை எண்ணி உணர்ச்சி வயப்படுகிறார்.  அப்படியே  பிஸ்மார்க், ஜேர்மானிய அரசர் கெய்சர் பற்றி வாசிக்கும்போது துணுக்குறுகிறார்.

உலகிலேயே ஆரிய ஜேர்மானிய இனமே புத்திசாலியென்றும், வீரமானவர்கள் என்றும், உலகை ஆளும் சக்தி அவர்களுக்கு மட்டுமே உண்டு, ஆனால் ஜேர்மானியர்களை நம்பி கழுத்தறுத்துக் கொண்டிருப்பவர்கள் வளமிக்க யூதர்களே என ஆணித்தரமாக நம்ப ஆரம்பிக்கிறார்

“பிறப்பால் ஆஸ்திரியா வாசியாக இருந்தாலும் தானும் ஓர் ஆரியனே என இனப்பாசம் கொண்டார்.  ஜேர்மானியனாகவே மாறி ஜேர்மனிக்கு யூதர்கள் இழைக்கும் கொடுமைகளை தன்னால் இயன்ற அளவு களையவேண்டுமென விழைகிறார்.  வியன்னாவிலிருந்து ஜேரமனியின் மூனிச் நகரை அடைகிறார்..

இங்கு ஃபேஸ்புக்கில் நீங்கள் தமிழரிடையே எளிதில் புகழ்பெற உங்களுக்கு இரண்டே வழிகளுண்டு. ஒன்று தமிழனை பிற இனங்களோடு ஒப்பிட்டு சகட்டுமேனிக்கு திட்டுவது.  இவ்வகையினர் தமிழர் என்றவுடன் வாமிட் செய்துவிடுவர்.  இரண்டாவது தமிழனைத் தவிர பிற எந்த ஓர் இனத்தையும் மட்டம் தட்டுவது.  இவ்வகையினர் அதே போல், தமிழரில்லை எனத் தெரிந்ததும் வாமிட் உமிழ்வர்.  இது ஏதோ இப்போது தோன்றிய கலாச்சாரமல்ல, ஹிட்லர் உயரப் பின்பற்றிய பழங்கொள்கையே.

ஹிட்லர் மூனிச் சென்றதும் தன் நட்பு வட்டாரத்தைப் பெரிதாக்கினார்.  நிறைய வரலாறு வாசித்தவரென்பதால் வைகோ போல, சீமான் போல பல வரலாற்றுதாரணங்கள் கூறி, ஓங்கிய குரலில், கைகளை முன்னே நீட்டி, காற்றைக் குத்தி, மேசையைத்தட்டி, ஜேர்மானியர்களின் தீரத்தையும், யூதர்களும், பிரிட்டீஷாரும் எவ்வாறெல்லாம் ஆரிய இனத்திற்கு துரோகமிழைத்தனரென்றும் ஆதாரத்துடன் பேசுவார்.  ”குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் சில மாதங்களில் உலகப் போர் தொடங்கப்போகிறது, அப்போது தெரியும் இந்த ஜேர்மானியரின் வீரம் உலகுக்கு” என்று தலைவர் சாரு போல கணித்தார்..  


எறும்பு உட்கார எருமை மாடு அசைந்ததைப் போன்று அப்படியே அதுவும் பலித்தது.  ஆமாம் 1914ல் முதல் உலகப்போர் தொடங்கியது.
ஜேர்மனி ராணுவத்திற்கு ஜேர்மானியரைத் தவிர பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஆட்களை தேர்ந்தெடுப்பதை அறிந்த ஹிட்லர், மிக விரும்பி ஜேர்மன் ராணுவத்தின் காலாட்படை வீரனாகச் சேர்கிறார்.  ஜேர்மானிய தலைவர்கள் மீதிருந்த பற்றுதல் காரணமாக பலப் போர்க்களங்களின் வீர தீரத்துடன் சண்டை புரிகிறார்.  போர்க்களங்களில் செய்திப் பரிமாற்றப் பிரிவில் பணிபுரிந்தாலும் சமயங்களில் சில சாகஸங்கள் புரிந்ததால் 1914 & 1918 ல் இரும்புச் சிலவை’ பரிசுகளைப் பெறுகிறார்.  Iron Cross பெறுவது ஒரு ஜேர்மானிய காலாட்படை ராணுவ வீரனுக்கு  நாம் பாரத் ரத்னா பெறுவதைப் போன்ற பெருமை.


ஆனால் முதல் உலகப்போரில் மிக மிக மோசமாக தோல்வியுறுகிறது ஜேர்மனி.  போரில் காயம்பட்டு மேலும் அடிபட்ட புலி போலாகிறார் ஹிட்லர்.  ஜேர்மனியிலிருந்த ஒரு லோக்கல் கட்சியில் சில காலம் உறுப்பினராயிருந்து, அது கலகலத்து போகும் வேளையில்  நாஜிக்கட்சி எனப் புது பெயரிட்டு தாமே அதற்கு தலைவனாகிறார்.ஹிட்லர்.

நாஜிக்கட்சியின் தலையாய கொள்கை என்ன தெரியுமா ? ’ஹிம்சை’.
ஆம், ஹிம்சைத் தத்துவத்தின் அடிப்படைதான் நாஜிக்கட்சியின் செயல்பாடுகள்.  ஆஸ்வால்ட் ஸ்பெங்க்லர் எனும் ஜேர்மன் தத்துவ மேதையே ஹிம்சை தத்துவத்தைச் சொன்னவர்.  பிடியுங்கள் இதோ அந்த தத்துவம் :-

”மனிதன் பிறவுயிர்களை வதைத்துண்ணும் ஒரு மிருகம். துணிச்சல், வஞ்சனை, குரூரம் இவைகளின் இருப்பிடம் மனிதன்.  இரக்கம், இணக்கம், அமைதி என்பன பல்லில்லாத உணர்ச்சிகள்.  வதைத்து உண்ணும் மிருகத்தின் இன உணர்ச்சிகளில் துவேஷ உணர்ச்சியே உண்மையானதாகும். மனிதன் சிங்கத்தைப் போன்றே இருக்க வேண்டும்.  சிங்கம் தன் குகையில் தனக்குச் சரிச்சம பலமுள்ள ஒரு சிங்கத்தை தரிக்க விடாது.  மனிதன் கூட்டம் கூட்டமாக பசுக்களைப் போல இங்குமங்கும் அலையக்கூடாது. சிங்கம் போல வாழ வேண்டுமாயின் மனிதனுக்கு யுத்தமே மேலான தர்மமும், ஆனந்தமுமாகும்”  இத்தகைய ஹிம்சா தத்துவத்திலிருந்து தன் நாஸிஸத்தை உருவி அறிவித்தான் ஹிட்லர்.  இது நாஸிஸம் :-

“ நாடு அல்லது அரசு எல்லா அதிகாரமுமுடையது.  குடிகளின் நலத்தைக் காட்டிலும் நாட்டின் நலமே பெரிது.  நாட்டின் நலத்தைக் காட்டி குடிமக்களின் உரிமையை தாராளமாகப் பறித்துவிடலாம்.  அரசாங்கத்தையோ, தலைவரையோ எதிர்த்துப் பேசுபவனை நாட்டு நலனுக்காகத் தண்டித்தும் விடலாம்”  இடாலி முசோலினியின் பாஸிஸமும் கிட்டத்தட்ட இதுவே !

அவ்வளவுதான். ”வஞ்சிக்கப்பட்ட நம் நாடு, உலகின் உயரிய ஆரிய இனம், பழகிக் கழுத்தறுத்த யூதர்கள், மண்ணாசை வெறிபிடித்த பிரிட்டீஷார் எனப் பேசிப் பேசியே ஜேர்மனியில் நாஜிக் கட்சி பெரும்புகழ் பெற்று ஆளும்கட்சியானதோடு மட்டுமல்லாமல் ஹிட்லரை ஜேர்மனின் சான்ஸிலராக்கியும் விட்டுவிட்டது.  பிறகேன் சீமானுக்கு, ராமதாஸ்க்கெல்லாம் அந்த ஆசை வராது ?


என்ன பேராச்சர்யமெனில் ஹிட்லர் தலைமையில்  ஜேர்மன் எல்லாத்துறையிலும் பெரு வளர்ச்சி பெற்றது.  முதல் உலகப்போரில் பெருமழிவுக்கு காரணமானது ஜேர்மனிதான் என்று முதல் உலகப்போரில் வென்ற அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள் ஜேர்மனியிடம் பெரும் நட்டஈட்டுத்தொகையைக் கோரிப் பெற்றன.   நாட்டின் பல இடங்களைப் பிரித்து தங்கள் ஆளுமையில் எடுத்துக்கொண்டு, இரும்பு, நிலக்கரி, எண்ணெய் வளங்களை பல வருடங்களுக்கு உறிஞ்சின.  நான்கு கப்பல்களுக்கு மேல் வைத்துக்கொள்ளக் கூடாது, அழிவு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது, காலாட்படைகளின் எண்ணிக்கை கூடக்கூடாதென ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் ஜேர்மன் மீது விதிக்கப்பட்டு, இக் கட்டளைகளை கண்காணிக்க சர்வதேச சங்கமும் இருந்தது.  ஆனால் இத் தடைகளுக்கு காலக்கெடு இருந்தது.இந்தத் தடைக்காலம் முடிய முழு ஜேர்மனியே காத்துக் கிடந்ததைப் போல், ஹிட்லர் தலைமையில் போர்க்கப்பல்கள், யூ போட் என அழைக்கப்பட்ட நீர் மூழ்கி கப்பல்கள், பிரம்மாண்ட டாங்குகள், போர் விமானங்கள்,பல  மில்லியன்.காலாட்படைகள் என விஸ்வரூபம் எடுத்தது.   இளையராஜா இசைக்கு மயங்கிக்கிடந்த ஒரு  தலைமுறையைப் போல ஹிட்லரின் உணர்ச்சிமிகு பேச்சுக்கு ஜேர்மன் இனமே மதி மயங்கிக் கிடந்தது.  அவர் என்ன சொன்னாலும் நம்ப மக்கள் தயாராக இருந்தனர்.   நம்ம  ’நாட்மோர் தென் பிஃப்டீன் டேய்ஸ் நாராயணசாமி’யை விட நூறு மடங்கு புளுகர் ’கோயபல்ஸ்’ வேறு இல்லாததை பொல்லாததாக புனைந்து வெறியேற்றினார்.


இந்த சண்டமாருதப் படையை பார்க்கப் பார்க்க ஹிட்லருக்கு உலகே தன் காலடியில் மண்டியிடுவதாகக் கனா காண ஆரம்பித்தார்.  இன்னொரு உலகப்போர் ஏற்படாதா என ஏங்க ஆரம்பித்தார்.  ஆனால் முதல் உலகப்போரில் பங்கேற்றிருந்த பல நாடுகளும் நொந்து நூலாகிக் கிடந்ததால் ’இழந்ததை முதலில் மீட்டுருவாக்கம் செய்வோம்’ என வெள்ளைக்கொடி பிடிப்பதிலேயே ஆர்வம் காட்டின.


’நாமே தேரை இழுத்து தெருவில் விட்டால்தான் தள்ளி விட ஆள் வருவார்கள்’ என தங்களின் யு போட் & கடற்சுரங்க வெடிகளின் உதவியுடன் பிரிட்டனின் பல வாணிப கப்பல்களை மூழ்கடித்து இரண்டாம் உலகப்போருக்கான விதையை ஊன்றினார் ஹிட்லர்.

ஜேர்மன் கப்பல் கட்டும் தளங்களில் மாதத்திற்கு 20 போர்க் கப்பல்கள் தயாரிக்குமளவு வளமானது ஜேர்மனி.  பிறகென்ன ருத்ரதாண்டவமாடினார் ஹிட்லர்.  கிட்டத்தட்ட உலகின் எந்த நாட்டுக் கப்பல்களாயினும் அதைக் கருணையின்றி மூழ்கடித்தது ஹிட்லரின் யூ போட்கள்.  500க்கும் மேற்பட்ட (பல்லாயிரம் டன்கள் எடை கொண்ட)
கப்பல்களை இழந்தது பிரிட்டன்.  அப்போது உலகில் தன்னிகரில்லா கடற்படையையும், உலகையே ஆண்டுக் கொண்டிருந்த வெள்ளையர்களை பெரிதும் கலங்க வைத்தார் ஹிட்லர்.

பாட்ஷாவில் நம்ம பாலகுமாரன் இப்படி ஒரு வசனம் எழுதியிருந்தார்.
”ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய அள்ளிக் கொடுப்பான், ஆனா கடைசில கை விட்டுடுவான்”  ஆம், அப்படியே நிகழ்ந்தது.  ஹிட்லர் வெற்றி மேல் வெற்றி பெற்றான்.  பிரிட்டனின் பல நாசகாரிக் கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்கள்,  ஓட்டை விழுந்த இரும்புத் தொட்டி போல  கடலில் மூழ்கின.பிரிட்டன் ஆரம்பத்தில் ரஷ்ய உதவியை நாட, ரஷ்யாவை முடக்க, ரஷ்யாவுக்குச் செல்லும் எல்லாக் கப்பல்களையும் மூழ்கடித்தது ஜேர்மனின் கப்பற்படை.  உணவுக்கும், சண்டையிட ஆயுதத்திற்கும், எரிபொருளுக்கு எண்ணெய்க்கும் ரஷ்யா தவிக்க ஆரம்பித்தது.  முதலில் நார்வேயையும், பிறகு போலந்தையும், அதன் பிறகு ஃப்ரான்ஸையும் வெற்றி கொண்ட ஹிட்லர், தன் பார்வையை 
பிரிட்டன் மீதும் ரஷ்யா மீதும் செலுத்தினார்.பிரிட்டனின் முக்கிய நகரங்களான லண்டன், க்ளாஸ்கோ, கவிண்டி மீது போர் விமானங்கள் மூலம் தொடர் குண்டு வீச்சை செயல்படுத்தினார். ஹிட்லரை மாபெரும் அழிவுசக்தியென ஒவ்வொரு வெள்ளையனும் அன்று அஞ்சியிருப்பர்.  இங்க்லீஷ் கால்வாயில் கப்பல்கள் மூலம் ஒரு லட்சம் பேரைக் கொண்டுச் சேர்த்து பிரிட்டனை தங்கள் காலடியில் எடுத்து வரலாம் என்கிற யோசனையும் இருந்தது.  


இந் நிலையில் ஆர்க்டிக் கடல் பிரதேசம் ஜேர்மானியர்கள் கடற்படை வசம் முழுமையாக வரவே, தன்னுடைய பெரிய காலாட்படையை ரஷ்யா நோக்கி அனுப்பி வைத்தார் ஹிட்லர்.  ஸ்வஸ்திகா சின்னமணிந்த நாஜிப்படை வியத்தகு வெற்றியை ஆரம்பத்தில் பெற்றது.  நெப்போலியன் தன் படைகளை ரஷ்யக் குளிருக்குப் பலியிட்டதை வாசித்திருந்ததால், ரஷ்யாவின் கடுங்குளிர்காலம் ஆரம்பிக்குமுன் ரஷ்யாவை வீழ்த்திவிடலாம் என்பது ஹிட்லரின் ஆசை, பேராசை :)

பத்தாததற்கு இரண்டாம் உலகப்போரில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த அமெரிக்காவை சீண்டுவது போல், அமெரிக்க கடற்கரை வரைச் சென்று யு -போட்கள் வாலாட்டி தம் தைரியத்தைப் பறைசாற்றி வந்திருந்தன.  அமெரிக்கா இங்கிலாந்துக்கு ஆயுத உதவி அளிக்கப்போகிறது என உளவறிந்த ஹிட்லர், அமெரிக்காவின் சில வணிக கப்ப்லகளை தாக்க உத்தரவிட்டார்.  அதன்படி பல அமெரிக்கக் கப்பல்கள் கடலுக்கு இரையாயின.  சும்மாக் கிடந்தச் சங்கை ஊஊஊ வென தனக்குத்தானே ஊதிக்கொண்டார் ஹிட்லர்.


ஏராளமான கப்பல்களையும், கடற்படைத் தளங்களையும் இழந்திருந்த பிரிட்டன், அமெரிக்காவிடமிருந்து 50 போர்க்கப்பல்களை லீசுக்கு வாங்கியது.  அமெரிக்கா ஒத்துழைக்க ஆரம்பித்ததும் பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள் புது உத்வேகம் பெற்றன.  அதற்கேற்றார் போல் ரஷ்யாவில் கடுங்குளிர் ஆரம்பிக்க ஜேர்மன் படைகளுக்கு தளவாடங்கள், உணவுப் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது.

பல்வேறு கடல்களில் இருந்த தம் கப்பல்களை ரஷ்யா நோக்கிச் செல்ல ஹிட்லர் பணிக்க, அதைப் பல ஜேர்மன் தளபதிகள் தடுக்க முயன்றிருக்கின்றனர்.  ஆனால் தான் என்கிற கர்வமும், சிடு மூஞ்சியுமான ஹிட்லரிடம் அது செல்லுபடியாகவில்லை.  அப்படிப் போன ஜேர்மன் கப்பல்கள் எல்லாம் மூழ்கடிக்கப்பட்டன, அல்லது முடமாக்கப்பட்டன.

போதாக்குறைக்கு ஜப்பான் பேர்ல் ஹார்பரில் அமெரிக்காவிற்கு எதிராக அதிரடித் தாக்குதல் நடத்திய பிறகு,  நேச நாடுகள் வெகுண்டு தங்களுடைய மாபெரும் சேனையை ஜேர்மனிக்கு எதிராக இறக்கின. அந்தப் படையின் அளவைப் பாருங்கள்.

30 லட்சம் போர் வீரர்கள்
4000 போர்க் கப்பல்கள்
11000 போர் விமானங்கள்


ரஷ்யாவின் செஞ்சேனைப் படையின் ஆறு லட்சம் வீரர்கள், பெர்லினைத் தகர்க்க மட்டுமே திரண்டு வந்திருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், ஹிட்லர் மேல் எவ்வளவு வெறுப்பிருந்திருக்கும் ?

போரின் இறுதிக்கட்டங்களில், நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்டு, ஜேர்மனிக்கு, இரும்புத் தட்டுப்பாடு, நிலக்கரித் தட்டுப்பாடு, பெட்ரோல் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு சிறுகச் சிறுக நாஜிக்களின் திமிர், கொட்டம், அளவற்ற தைரியம் அடங்கத் தொடங்கியது.  பெட்ரோல் இன்றி போர் விமானங்கள் தரையில் நின்றனவாம், போர்க்கப்பல்கள் துறைமுகங்களில் கிடந்தனவாம்.  பல கப்பல்கள் எரிபொருளின்றி ஆங்காங்கே சரணைடைந்துக் கொண்டிருந்தனவாம்.


ஆக, ஹிட்லர் இவ் உலகிற்கு முதன்முதலாக தாங்கள் ஓர் ஒப்பற்ற ராணுவம் என்பதை தங்களுடைய கடற்படை மூலமே நிருபித்ததால் இந்தக் கடற்போர் சாகஸங்கள் வாசிக்க அவசியமாகிப் போகிறது.

ஹிட்லரின் ரசிகர்கள் இவையெல்லாமே ’வெள்ளையனின் பார்வை’, நிஜம் வேறு, அப்பாவி ஹிட்லர் அல்லது ஜேர்மானியர்களின் வளர்ச்சி பொறுக்க மாட்டாதே, வல்லரசுகள் கூட்டுச் சேர்ந்து, அவனை அழித்து விட்டதாகவும்(சதாம் ஹுசேனைப் போட்டது போல்) ஹிட்லர் தற்கொலை பண்ணி இறக்கவில்லை, அவர் தென்னமரிக்க நாடொன்றுக்கு தப்பி ஓடிவிட்டதாகவும், அங்கு 90 வயது வரை வாழ்ந்து பேரன், கொள்ளுப்பேரன் வரை பார்த்ததாகவும் சொல்வார்கள்.  ’ஓ அப்படியா, ரொம்பச் சந்தோஷம்’ என அதையும் ஆமோதித்தால் அவர்கள் இரவு நிம்மதியாக தூங்குவார்கள், பாவம் அவர்கள் தூக்கத்தைக் கெடுப்பானேன் ?


விடுதலைப்புலிகள் விரைந்து அழிய பெருங்காரணமாயிருந்தது அவர்களின் விமானப்படை.  என்னடா ஒரு போராளிக்குழுவிற்கு விமான பாகங்கள் அதை இணைத்து உருவாக்கும் தொழில் நுட்பங்கள், விமானிகள், ஓடு பாதைகள் கிட்டுமளவு சக்தி பெருகிவிட்டதெனில், இனி அவர்களால் எந் நாட்டிற்கும் சவால் விடக்கூடிய அளவிற்கு பாதுகாப்பு அரணைத் தகர்க்க முடியுமே என்றஞ்சித்தான், பல நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கை கோர்த்தன(மறைமுகமாகவோ, நேரிடியாகவோ அமெரிக்காவும் கூட, காரணம் 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல்)


அதேப்போலத்தான், ஹிட்லரின் யூ - போட்( சின்ன நீர் மூழ்கிக் கப்பல்கள்) க்கு அஞ்சியே பல வல்லரசுகள் ஹிட்லருக்கு எதிராக கைகோர்த்தன என்றால் அது மிகையாகாது.  ஏனெனில் இரண்டாம் உலகப்போரில் அவைகள் சாதித்த சாதனைகள் அம்மாதிரி.

உங்களுக்கும் அத்தகைய கடற்போர்களில், நீர் மூழ்கிகளில், நாசகாரி போர்க்கப்பல்களில் ஆர்வமிருப்பின் நிச்சயம் இப் புத்தகத்தை வாசிக்கலாம்.  1939 -1945 வரை சின்ன இடைவெளி இல்லாமல் ஹிட்லரின் கடல் சாகஸங்களை பல ஆதாரத்துடன் இந் நூல் சொல்கிறது.

ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள்
ஆசிரியர் - தோராளிசங்கர்
சென்னை புக்ஸ் வெளியீடு, மடிப்பாக்கம், சென்னை-91.
போன் - 044 2224 0229, 94449 61447
விலை ரூ.300/-
பக்கங்கள் 488.
முதல் வெளியீடு -1965.
திருத்தப்பட்ட பதிப்பு - 2012
  


.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக