சனி, 10 மே, 2014

CREDIT CARD அராஜகங்கள் (ஒரு சாம்பிள்)

இந்தப் பெரிய அப்பாடக்கர் கம்பெனிகளின் தைரியத்திற்கு, எனக்கு நடந்த சம்பவம் சின்ன சாம்பிள்.


ஐசிஐசிஐ பேங்க் நான் கோராமல்(எப்போதோ கோரியிருந்தேனாம், அப்போது ரிஜக்ட் பண்ணிவிட்டார்களாம், அவர்களாக மறு பரிசீலனை பண்ணி அனுப்பினார்களாம்) ஒரு கடனட்டையும், 15000/- ரூபாய்க்கு ஒரு DD யும் எனக்கு அனுப்பியிருந்தார்கள்.

அதெப்படி நாம் கோராமல் அனுப்ப முடியுமென்பவர்களுக்கு ஒரு ப்ளாஷ்பேக்.
2002 - 2003 காலங்களில் வட சென்னையில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு க்ரெடிட் கார்டு வழங்கப்படக் கூடாதென ரகசிய சுற்றறிக்கை வங்கிகளுக்கிடையே உண்டு.  இது தெரிந்திருந்தும் திடீரென விதிகள் மாற்றப்படலாமெனக் கருதி பேங்க் ஏஜண்ட்கள் எங்கள் வங்கியில் ’உங்களுக்கு நாங்கள் வாங்கித் தருகிறோம்,  நீங்க ஃபார்ம ஃபில்அப் பண்ணிக் கொடுங்க’  என்று வாங்கிச் செல்வர்.

ஆனால், பலமுறை ’வி ரெக்ரெட் டு இன்ஃபார்ம் யுதட் யுவர் அப்ளிகேஷன் ரிஜக்டட்’ என்றே க்ளைமேக்ஸாக இருக்கும்.  பிறகெப்படியோ வட சென்னை ஆட்களையும் நம்பி எனக்கு ஒரு வங்கி துணிந்து க்ரெடிட் கார்ட் கொடுத்துவிட்டது.

அவ்வளவுதான் ஏதாவது ஒரு பேங்க் கார்ட் கொடுத்துவிட்டால் போதும், வரிசையாக பல வங்கிகள் கண்ணை மூடிக்கொண்டு நாங்களும் தருகிறோம், போதததற்கு நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் கார்ட் நிலுவைத் தொகைக்கு ஜீரோ விழுக்காடு வட்டியில் DD யும் கொடுக்கிறோம் ப்ளீஸ் என்பார்கள்.

இப்படி யாரோ விரித்த வலையில் விழுந்திருக்கிறேன்.  அது எப்போதோ நடந்து, வராமல் போகவே மறந்திருக்கிறேன். ப்ளாஷ் பேக் முடிந்தது.  இனி கதைக்கு வருவோம்.

அனுப்புனர் பகுதியில் அவர்களுடைய பரோடா கிளை விலாசமிருந்ததால், 'இதெல்லாம் நான் கோரவேயில்லை, உங்கள் பாசத்திற்கு நன்றி' என்று அந்த அட்டையை சுக்கு பத்தாக வெட்டி அந்த DD யுடன் சேர்த்து திரும்ப அனுப்பிவிட்டேன்.  அனுப்பிய கவரோடு அதை மறந்தும் போனேன்.

ஒன்றரை மாதங்கள் கடந்து ஒரு ஸ்டேட்மெண்ட்.  15000/- மொத்த பாக்கித்தொகை, மினிமம் இன்ன தொகை கட்டுங்கள் என்று.  கொதித்துபோய் அவர்கள் பேங்க் போனைப் போட்டால் அந்த மெஷின் நூறு ஆரம்பக் கேள்விகளை கேட்டபின் கடைசியாக போன் பின் நம்பர் கேட்டது.

கார்டே தேவையில்லை என்றானபின் பின் எதற்கு ? என அதைத் தெரிந்து கொள்ளவேயில்லை, ஆக அத்தனை நிமிடங்களும் வீணாய் போனது. வெந்த மன நிலையில் ஒரு கடிதம் எழுதி அதை அதே விலாசத்திற்கு அனுப்பினேன்.


ம்ஹூம், மறு மாதம் வந்த ஸ்டேட்மெண்ட் நம்ம டெம்ப்பை ஓர் அங்குலம் உயர்த்தியது.  மொத்த பாக்கி 15000/- அதற்கு வட்டி 500/-  மினிமம் தொகையை கட்டாததற்கு ஃபெனால்ட்டி 500/- ஆக மொத்தம் 16000/- இதற்கான மினிமம் தொகை ****

’போங்கடா நீங்களும் உங்க சிஸ்டமும்’ என அதை தூரப்போட்டுவிட்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது மூன்றாம் மாதமும், நான்காம் மாதமும் வட்டியும், குட்டியுமாய் பெருகிக் கொண்டே போனது.

ஒவ்வொரு மாதமும் அந்த ஸ்டேட்மெண்டைப் பார்க்கும்போதும் எரிச்சலும்,,அவ்வளவு பெரிய வங்கி காட்டும் அலட்சியமும் கடுங்கோபத்தை கிளறியபடியே இருந்தது.  இந் நிலையில் ஒரு ஃபோன். இங்க்லீஷ் பெண்மணி போல.  “சார், நீங்க அஞ்சு மாசமா ட்யூ ஒரு ரூபா கூட கட்டாம இருக்கீங்க, உங்க கணக்குல 20000/- க்கும் மேல பாக்கியாயிடுச்சி”


”நான் உபயோகிக்காத தொகைக்கு நீங்க பண்ணுகிற டார்ச்சர் மிக அதிகம், உடனடியா ஸ்டேட்மெண்ட் அனுப்பறத நிறுத்துங்க” என்று கடுமையாக கூறிவிட்டு ஃபோனை கட் பண்ணினேன்.

அடுத்த நாள் தமிழ் ஃபோன். “அதெப்படி சார் நீங்க யூஸ் பண்ணாம நாங்க ஸ்டேட்மெண்ட் அனுப்புவோம் ?” என்று அறிவாளித்தனமாய் கேள்வி கேட்டார்.

”என் பெயரில், என் பாங்க் அக்கவுண்ட் நம்பர் போட்டுத்தான் அந்த டிடி இருந்தது.  ஆக, அந்தத் தொகையை நான் மட்டுமே உபயோகிக்க முடியும், என்னோட நாலு மாத பேங்க் ஸ்டேட்மெண்ட் மூலம் அந்தத் தொகையை நான் உபயோகிக்கவில்லை என என்னால் நிருபிக்க முடியும், உங்களால் அந்தத் தொகையை நான் உபயோகித்தேன் என நிருபிக்க முடியுமா ?” என்று மிகக் கடுமையாக எகிறினேன்(தமிழ் என்பதால்.... :) )

சில நாட்கள் அமைதியாக கழிந்தது.  ’ஆஹா, சாமர்த்தியமாகப் பேசி சமாளித்து விட்டோம் போல’ என அக மகிழ்ந்த ஓர் அதிகாலை ஐந்தரைக்கு வீட்டில் காலிங் பெல்.  ”இத்தனை காலையில் நம்மைத் தேடி யார் வந்திருப்பது ?” எனக் கதவைத் திறந்தால் டை கட்டியபடி ஒருவரும்(அதிகாலை 05 : 31) கட்டுமஸ்தாய் ஒருவரும், ’குட் மார்னிங் சார், நாங்க ஐசிஐசிஐ பேங்க்லருந்து வர்றோம்’

எனக்கு எப்படியிருந்திருக்கும் ?

இருந்தாலும் கோபத்தை மிகவும் கட்டுபடுத்திக் கொண்டு, ஆரம்பத்தில் இருந்து நடந்ததை முழுதாகச் சொல்லி, எல்லா விவரங்களும், ஆதாரங்களும் ஆஃபிஸில் இருப்பதால், நீங்கள் மாலை அலுவலகத்திற்கு வந்தால் தருகிறேன் என்று அமைதியாக பதிலளித்தேன்.

ஆனால் இது போன்ற ஆட்களுக்கு இம்மாதிரி பதிலளித்தால் அது நாம் பணத்தை ஏமாற்றி சத்தாய்ப்பதாக கருதிவிடுவார்கள் போல :(  அதாவது ”இவன் காச யூஸே பண்ணலன்னா அதெப்படி வீட்டுக்குள்ள கூப்பிட்டு ஒக்கார வச்சி பேசுவான் ?  காச்மூச்னு கத்தி வாசல்லயே துரத்தி அடிச்சிருப்பானே ?”

”ஹல்லோ ப்ரதர், நீங்க சொல்றது எதுவும் நம்பறாப்பல இல்ல, எல்லா டாக்குமெண்டையும் எடுத்துட்டு சாந்தோம் ப்ராஞ்சுக்கு நீங்க வாங்க,, இப்ப மினிமம் சார்ஜ் 5000/- மட்டும் கொடுங்க”
இது அந்தக் கட்டுமஸ்தானவர் உதிர்த்தது

சட்டென்று அவர் தோளை அந்த டைக்காரர் அழுத்தி, “இருப்பா, சார், நீங்க இன்னிக்கே வரணும்னு அவசியமில்ல, ரெண்டு நாள் கழிச்சி வாங்க, இப்ப அஞ்சாயிரம் கேஷ், செக் எதுனாலும் கொடுங்க”

“ஓக்கே, ஒரு நிமிஷம் என் வக்கீல்கிட்ட நீங்க பேசிடுங்க” என்று நிஜமாகவே என் வக்கீல் நண்பனை அழைக்க போன் புக்கில் அவனைத் தேடினேன்.

“இருங்க பாஸ், அஞ்சாயிரம் வேணாம், மூணாயிரம் கொடுங்க”

“ஓ, அப்ப இருங்க நான் பேசாம போலீஸையே.கூப்பிட்றேன்” என்று கொஞ்சம் குரலை உயர்த்தினேன்.

“கூப்டு, பயமா எங்களுக்கு, த்தா காச வாங்கிட்டு டபாய்க்....” டைக்காரர் கட்டுமஸ்தரை பிடித்து வெளியே தள்ளினார்.  அதுவரை உள்ளறையில் படுத்திருந்த மனைவியும் குரல் கடாமுடாவென இருக்கவே, ‘என்னங்க ?’ என்று வெளியே வந்தாள்.  அவளுக்கு இந்த மேட்டர் ஒரே ஒரு சதவிகிதம் கூடத் தெரியாது

“ஹல்லோவ், உங்க ரெண்டு பேரு பெயரச் சொல்லுங்க, எங்க வரணும், வக்கீலோட வர்றேன்”

“ஓக்கே பாஸ், நீங்க மினிமம் கட்டினீங்கன்னா உங்களுக்கு நல்லதுன்னு சொன்னோம், நீங்க கோபப் படுறீங்க(!!!), சாந்தோம் ப்ராஞ்ச் வந்துடுங்க” என்றவாறே இருவரும் கிளம்பினர்.

“உங்க விசிட்டிங் கார்ட் கொடுங்க’ என்றேன்.

“நான் அங்கதான் பாஸ் இருப்பேன், நீங்க நேர்ல வாங்க”

’இனி இதை லேசில் விடக்கூடாது’ என்று ஐகோர்ட்டில் வக்கீல் நண்பனைப் பார்த்து உடனடியாக கன்ஸ்யூமர் கோர்ட்டில் இந்த வங்கி மேல் ஒரு மோசடி வழக்கை போடச் சொன்னேன்.

அவனும் எல்லா ஆதாரங்களையும் வாங்கிப் பார்த்தபின், ’அல்வா மாதிரி ஒன்றரை லட்சம் வரை  மான நட்ட ஈடு கேட்டுடலாம்’ என்று பக்காவாக ஒரு நோட்டிஸ் தயார் செய்து, அதை ஐசிஐசிஐ பதிவு அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம் என இரு விலாத்திற்கும் பதிவுத் தபாலில் அனுப்பினான்,  நண்பன் என்பதால் 500/- ரூபாய் மட்டுமே ஃபீஸ் வாங்கினான்.

அதன் பிறகு நடந்ததுதான் ஆன்ட்டி க்ளைமாக்ஸ்.

சில வாரங்கள் கழித்து, நீங்கள் திரும்ப அனுப்பிய டிடி கிடைத்துவிட்டது, ஆனால் ’ஃபெனால்ட்டி தொகை,மற்றும்  நிர்வாகச் செலவு 9500/- நீங்கள் கட்டத்தான் வேண்டும்’

இம்முறை அக்கடிதம் ஹைதராபாத் விலாசத்திலிருந்து வந்ததால், “உங்களுக்கு நட்ட ஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியபின்னரும் இது போன்ற கடிதம் அனுப்புவதற்கு உங்களுக்கு பெரும் மனோதிடம் வேண்டும்” என்று எழுதி அந்த நோட்டிஸ் காப்பி ஒன்றை இணைத்து அனுப்பினேன்.

ஒரு வாரத்தில் செல்ஃபோனில் இப்படி ஒரு மெசேஜ். Total Payable Amount Rs.9500/-

Received payment Rs.9500/- on.........., now Nil Balance.

கடைசி வரை அவர்கள் தவறு செய்ததாக ஒத்துக்கொள்ளவே இல்லை, மாறாக அந்தத் தண்டத் தொககளை அவர்களே செலுத்திவிட்டு, நான் செலுத்தியது போல ஜோடித்துவிட்டார்கள்

வக்கீல் நண்பனிடம் சொல்லி என்ன பண்ணலாம் என்றேன்.

”விட்டுடுடா....அவந்தான் பணிஞ்சிட்டானே, என்ன மீசைல மண் ஒட்டலன்றான், கோர்ட்ல இழுத்தா குறஞ்சது 50000/- பிடிங்கிடலாம், ஆனா அதுக்கு பல கோர்ட்,, பல வருஷம் ஆகும், இதே வேலைன்னு அலையணும், இந்த வீக பாயிண்ட வச்சிதான்  அவனுங்க இந்தக் குருட்டுத் தைரியத்துல மோதறது, இருந்தாலும்  நீ ரெடின்னாசொல்லு”

”சரி, இன்னொரு முறை இதப் பத்தி எவனாவது கேட்டு வரட்டும், அப்ப வச்சிக்கலாம் கச்சேரிய” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அது ஆச்சு எட்டு வருஷம், எதுவும் வரல, எவனும் வரல.  ஆனா எல்லா ப்ருஃப்பையும் பத்திரமா ஃபைல்ல போட்டு வச்சிருக்கேன் !!!

.                                                               -/\-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக