சனி, 20 செப்டம்பர், 2014

ஜில்லா !!!

ஜில்லா -ஒரு ஜாலி விமர்சனம்
================================
எச்சரிக்கை :-

1.) இந்தப் பத்தி புரியவேண்டுமாயின், உங்களுக்கு சமகால இலக்கியத்திலிருக்கும் அரசியல் ஞானம் வேண்டும்.

2.) விஜய் நடித்த(மூன்று ஆச்சர்யக்குறிகள்) ஜில்லா படத்தை அவசியம் பார்த்திருக்க வேண்டும்.
( ’நாங்க ஏன் மிட்நைட்டு 12 மணிக்கு சுடுகாடு போகணும் ?’ எனக் கேட்கும் அறிவுஜீவிகள் உடனடியாக எஸ்ஸாகி விடவும்)

இனி.............

சிவன் என்றழைக்கப்படும் மோகன்லால் ஒரு கம்ப்ளீட் பின்நவீனுத்துவ எழுத்தாளராக தான் மட்டுமே தமிழுக்கு இருக்க வேண்டுமென வெறி கொள்கிறார்
.


சிவன், தன் முன்னோடியாக ஏற்று, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய பின்நவீனுத்துவ ஆளுமை வ...ஜெயபாலன், திடுமென சிவன் அறவே வெறுக்கும் ஒரு மொக்கை எழுத்தாளனை வாரிசு எனச் சொல்லிவிட, அவரை மட்டுப்படுத்த ஒரு நாள் நள்ளிரவு, தன் வாசக வட்ட அன்பர்களுடன் அவர் முன் ஆஜராகி, ஒரு ஸ்டேடஸை தூக்கி எறிகிறார்.

"சங்கரா, சங்கரான்னு(சிவனின் மற்றொரு பெயர் என்பதிது இங்கு குறியீடு) சாவப்போற வயசுல சொல்லிகிட்டு, கம்முனு கெடக்காம இதென்ன கூத்து ? லைக் இல்ல கமெண்ட இதுல போடு" அந்த ஸ்டேடஸில் கடும் அதிர்ச்சியாகும் வ...ஜெயபாலன், அந்த ஸ்டேஸையே குறுங்கத்தியென பாவித்து, லைக் போட்டுவிட்டு மரிக்கிறார்.

சிவன்டா, போஸ்ட்மார்டனிஸத்துல அவனுக்கு மிஞ்சி இங்க இனி எவன்டா ?’.............என்றபடி தன் வெள்ளிக்கரை வேட்டியை தூக்கி மடித்துக்கட்டிக்கொண்டு, தன் பரிவாரங்களுடன் தமிழை தன் கட்டுக்குள் கொண்டுவருகிறார் மோகன்லால் என்கிற சிவன்.

வழக்கமாக அதிகாலை மெயில் பாக்ஸை திறக்கும் சிவன், தற்செயலாக ப்ளிங் ஆகும் குட்மார்னிங் மெசேஜால் கவரப்பட்டு(ப்ரொபைல் போட்டோவில் ஒரு பேரழகி) சாட் செய்ய ஆரம்பிக்கிறார். வழக்கம் போல அது ஈரமாகும்வரை நீண்டு பின்னர் ஸ்க்ரீன்ஷாட், குமுறல், வசைமழை, கொத்து பரோட்டோ எனக் குதறப்பட்டு சிவன் கையறு நிலையில் நிராயுதபாணியாக நிற்கிறார்.

"தப்பு பண்ணிட்ட சிவன், தப்பு பண்ணிட்ட” என்று ஸ்க்ரீன்ஷாட் ஆதாரத்துடன் குத்தவரும் வில்லனை, "ஏன்டா சிவன் எழுதின பகுதிய மட்டும் காட்டுற, அந்த பொண்ணு எழுதினதையும் காட்டுடா" என்ற கேள்விக் கணையை, இடது கையை நீட்டி, வலது கண்ணை மூடிக்கொண்டு குறி பார்த்து வில்லன் மேல் எறிகிறார் ஷக்தி எனும் விஜய்.

கதாநாயகன் எண்ட்ரிவிசில் பறக்கிறது. அந்தோ பரிதாபம், இந்த உதவிக்காக ஃபேக் ஐடிக்களால் ஷக்தியின் ஆயிரம் வருட பரம்பரையே தொடர் வசைகளுக்கு உள்ளாகிறது. அதிலிருந்து ஃபேக் ஐடி ஆடையணிந்து யார் வந்தாலும் அவர்களை கடும்வெறுப்புடன் காறி உமிழ்கிறார் ஷக்தி எனும் ஹீரோ.

தகுந்த சமயத்தில் தன் மானம் காத்த ஷக்தியை தன்னுடைய இலக்கிய வாரிசென அறிவிக்கிறார் சிவன். அதற்கப்புறம் தன் வட்டத்தை ஸோர்பான் பல்கலைக்கழகமாக மாற்ற விழைகிறார். பின் நவீனுத்துவத்தில் எதிரிகளே இல்லாத அவரும் ஷக்தியும் எழுதிக் குவிக்கும் நாவல்களை வாசிக்கச் சகியாது பல தற்கொலைகள் நிகழ்கின்றன.

திடுமென ஒரு ஐடி மிக அழகான கேள்விகளுடன், ஃபேக் ஐடியாக, ஃபேஸ்புக்கிற்கு ட்ரான்ஸ்பராகி வருகிறது. மிகச் சாமர்த்தியமான, தைரியமான அந்த ஐடி, நேரே சிவன் வட்டத்திற்குள் எப்படியோ நுழைந்து, இதுவரை யாருமே செய்யத் துணிந்திராத, ஒரு செயலைச் செய்கிறது. ஆம், சிவனை டேக் செய்து சில கேள்விகளை கேட்கிறது.

1.)  உங்களால் வாசகிகளின் மின்னஞ்சல் இல்லாமல் ஒரே ஒரு நாவல் எழுத முடியுமா ?

2.) செக்ஸ், வக்கிர வார்த்தைகள், குடி கொண்டாட்டம் இவைகள் இல்லாத சில பத்திகளை உருவாக்க முடியுமா ?

3.) மலையாளிகளை விட தமிழன் சிறந்த வாசிப்பாளன்தான் என ஒரு முறையாவது ஒத்துக்கொள்ள முடியுமா ?

வினாக்களுக்கு விடையேயில்லாத மோகன்லால் கண்கலங்குகிறார். அசிங்க அசிங்கமாய் திட்டி ப்ளாக் செய்யலாமென்றால் வந்த ஐடி தன் வேலை முடிந்ததும், அதுவாக லீவ் க்ரூப் வேறு கொடுத்துவிட்டது.

சிவன் கலங்கி இதுவரை பார்த்திராத ஷக்தி ருத்ரதாண்டவம் ஆட முடிவெடுக்கும் வேளையில் அதைக் கையமர்த்தி தடுக்கிறார் மோகன்லால்.

"ஆயிடு, நீ ஆயிடு"

'வந்தவன் இந்த ஆயி, மலத்தையும் சொல்லாம இருக்க முடியுமான்னு ஒரு கேள்விய கேக்காம போயிட்டானே' என முனகும் விஜய், "ஆயிடறேன், எங்க, ஏன் ?" என்கிறார்.

"ஷக்தி, அவங்க ஃபேக் ஐடி இருக்கிற தைரியத்துல, கருத்துச் சுதந்திரம், கழுதச் சுதந்திரம்ன்னுட்டு, ஒரு வட்டத்த உருவாக்கிநம்மள அசிங்கப்படுத்துறாங்கல்ல, நீ அவங்க வட்டத்துக்குள்ள நுழையனும், அங்க அட்மினா ஆகணும், நீதான் அட்மின்னு வந்தாச்சுன்னா, எவனாவது நம்ம எதிர்த்து பதிவு போட முடியுமா ? ஆதாரங்கள்னு எதையும் லீக் பண்ண முடியுமா ? நீ ஃபேக் ஐடி ஒன்ன இப்பவே, இந்த நொடியே க்ரியேட் பண்ற, உன்ன அங்க அட்மினாக்குற வேலைகளை, ஏற்கனவே அங்கிருக்கிற நம்மாளுங்க பாத்துக்குவாங்க"

"ஐயோ அப்பா, காதலி ஃபேக்ஐடி வச்சிருந்தான்ற ஒரே காரணத்துக்காக அவளையே ப்ளாக் பண்ணி, ரிப்போர்ட்டும் பண்ணவன், நான் எப்படி ? சரி மொதமுறையா என் அப்பா கண்கலங்கி பாத்துட்டேன், ஆயிடறேன்"

விஜய் ஸ்க்ரீனில் நம்மை நோக்கிப் பார்த்து, "ஃபேக் ஐடி, நானு ? ஹாஹா" என்கிறார். குழந்தைகள் உருண்டு புரண்டுச் சிரித்து, அந்தக் கொடுமையை ரசிக்கத் தயாராகின்றன.

ஷக்திதான் வந்திருக்கும் ஃபேக்ஐடி என்பதை சிவனின் எதிரிகளால் கண்டே பிடிக்க முடியவில்லை
. அவருடைய எழுத்தாற்றலால் எதிரிகள் அணி, அவரை துணை அட்மினாக நியமிக்கின்றன.
வழக்கமாக, சிவன் போடும் மரணமொக்கைப் பதிவுகளையெல்லாம் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, பகடி செய்யும் பல ஃபேக் ஐடிக்களை சாமர்த்தியமாக ப்ளாக் செய்து வந்த வேலையை செவ்வனச் செய்து கொண்டிருந்தார் ஷக்தி. இதனால் எதிர்வினையின்றி சிவன் முக்கிய எழுத்தாளராகிறார்.

ஒரு நாள், "தண்ணீரில் மின்சாரம் இருப்பதால், அதைப் பிரித்து பயன்படுத்த வேண்டும்" என்றொரு பதிவு சிவனிடம் இருந்து வர, ஊரே அதை வாசித்து நம்பி, மின்சாரம் தடைப்பட்ட நேரங்களில், குடங்களில் இருக்கும் நீரை ஸ்விட்ச் போர்டில் ஊத்த, அச் சமயம் பார்த்து மின்சாரம் வந்து எல்லா மின் இணைப்புகளும் வெடித்துச் சிதறி....................

ஷக்தியின் ஃபேக்ஐடி காதலி, "பார், ஒம் மூஞ்ச கண்ணாடில போய் பார், பழைய ஃபேக் ஐடிக்களா இருந்தா, இந்நேரம் இத ஓர் அபத்தம்னு நிருபிச்சி, அந்த அப்பாவி மக்கள காப்பாத்திருப்பாங்க, இப்போ ?
சாதாரணமா நாலு மணி நேரம் போற கரண்ட், இப்ப இருபத்தி நாலு மணி நேரமும் இல்லாமப் போச்சு, யார் காரணம் ? எல்லாம் உங்கப்பாதான்"

ஷக்தி முதன்முறையாக தன் அப்பாவின் அபத்தங்களை ஒரு விமர்சகன் பார்வையில் பார்க்கிறான்
. ப்ளாக் செய்த பழைய அட்மின்களை அன் ப்ளாக் செய்து, பழைய எல்லா அபத்தப் பதிவுகளின் ஸ்க்ரீன்ஷாட்களைக் கோரிப் பெறுகிறான். பின்னனியில் ட்ரம்ஸூம், ட்ரம்பெர்ட்டும் கர்ண கொடூரமாய் அலறி, விஜய் கோபத்தின் உச்சிக்குப் போகிறார் எனக் காட்டுகின்றன.
சிவன் வட்டத்தின் கேட்டை எட்டி உதைத்து ஒரு ஸ்டேடஸ் போடுகிறார் ஷக்தி.
நிறுத்தணும், நீ எல்லாத்தையும் நிறுத்தணும், மாறணும், நீ ஒரு ஃபிக்சன் எழுத்தாளரா மாறணும்
            
                                  ==இடைவேளை==

"என்னாச்சு உனக்கு ? இதெல்லாம் சரின்னு தெரிஞ்சிதான இங்கிருந்த ?" மோகன்லால்

"ஆமா, ஆமா இங்கருந்து பாக்கிறது சரின்னு தெரிஞ்சதெல்லாமே, ஒரு விமர்சகனா ஃபேக் ஐடிலருந்து பாக்கிறப்ப தப்பா தெரிதே ?" விஜய்

"என்னோட 200 பக்க முன்னுரையப் போட்டு உன்னோட 225 பக்க புத்தகத்த வெளியிட்ட மொக்க பீஸ் நீ, நான் ஏன் ஒன் பேச்ச கேக்கணும் ? இவ்வளவு நாளா போஸ்ட்மார்ட்டனிஸ போர்வைல, என் டைரிக் குறிப்பு, என் பொண்டாட்டி டைரிக் குறிப்பு, என்னோட வளர்ப்பு பிராணிங்க டைரிக் குறிப்ப திரும்ப திரும்ப எழுதி, வாங்காதவன மானம் கெட்டவனேன்னு திட்டி என் பொழப்ப நடத்திகிட்டுருக்கேன், திடுப்னு புனைகதை எழுதுன்னா, நான் எங்க போவேன் ? விமர்சகனா இருக்கிறதாலத்தான இந்த வீராவேசம், இரு உன்ன அந்த வட்டத்த விட்டே தூக்க வைக்கிறேன்" என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மோகன்லால் அடுத்தடுத்த கமெண்ட போட, வட்டத்தில் தீ பரவுகிறது.

எதிர்பாரா திருப்பமாய் துணை அட்மினாய் இருந்த ஷக்தி இணை அட்மினாய் ஃபேக் ஐடிக்கள் வட்டத்தில் பதவி உயுர்வு பெறுகிறார்.

ஷக்தி சிவனை விட்டு நீங்கியதில், சிவனை வசியம் செய்ய, அவருடைய உள்வட்ட அன்பர்கள், தொடர்ந்து கவிதைகள், பாலியல் கதைகளாக எழுதி, வட்டத்தில் போஸ்ட் செய்ய, அதை தன் ஆன்லைனில் வெளியிட்டு ப்ரமோட் செய்கிறார் சிவன்.

சில உள்வட்ட இலக்கிய வெறியர்கள்
, ’முன்னுரை கொடு, முன்னுரை கொடுஎனச் சிவனை தொடர்ந்து நெருக்குதல் கொடுப்பதை அறியும் விஜய், நேரடியாக களத்தில் குதிக்கிறார்.

நச்சரிக்கும் மொக்கை பீஸ்களின் எழுத்திலுள்ள குறைகளை விமர்சித்து தோலுரித்து எழுதி, அதை மோகன்லாலின் ஈமெயிலுக்கு அனுப்பி வைக்கிறார்.
பொதுவாக ஆண்களின் மெயில்களை சிவன் பார்ப்பதில்லை என்பதால் மோகன்லால் அதைப் படிக்காமலயே டெலிட் செய்து விடுகிறார்.
க்ளைமேக்ஸ்
:- மாற்றுவழியறியாத விஜய், ஓர் அயல்தேச இளம் நடிகையின் ப்ரொஃபைல் போட்டோ கொண்ட ஃபேக்ஐடியை உருவாக்கி மீண்டும் அப் போஸ்ட்களை அனுப்பி வைக்கிறார்.

அதைக் கவனியாத மோகன்லால்
, புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஆட்டோவில் கிளம்பி விடுகிறார்.
விழாமேடையில் தாமெழுதிய முன்னுரையை மீள் வாசிக்கிறார். ’என்னா எழுத்துடாஎன்று தன்னைத் தானே ,தன்னிடமே புகழ்ந்து கொள்கிறார் சிவன்.

வாசகரொருவரின் கவிதைத் தொகுப்பது
. சங்ககால பானபத்திர ஓணாண்டிப் புலவரோடு ஒப்பிட்டு, அவரின் சில கவிதைகளை மேற்கோள் காட்டி தன் வாசகனை உயர்த்திப் பிடித்து பல பக்கங்கள் எழுதிய முன்னுரை அது.

பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்த சிவனுக்கு கடும் அதிர்ச்சி. முன்னுரை முடிந்ததும், கடைசி பக்கத்தில் "எனக்காக மதிப்புரை எழுதிய அல்டிமேட் சிவனுக்கு இந் நூலை அர்ப்பணிக்கிறேன், நன்றி என்றதோடு முடிந்திருந்தது அந் நூல்.

அந்த நேரம் பார்த்து காலில் ஏதோ அரிக்க
, கீழே குனிய முற்படும் மோகன்லாலில் சட்டைப் பையிலிருந்து செல்ஃபோன் கீழே விழுகிறது. சேதமாகியிருக்குமோ எனப் பதறியபடி செல்போனின் ஸ்க்ரீன் பார்க்கும் மோகன்லாலின் கண்ணில் படுகிறது அந்த ஈமெயில் மெசேஜ் குறி !  (அதுவரை தடங், தடங் கென ட்ரம்ஸடித்துக் கொண்டிருந்த பின்னனி இசையமைப்பாளர் இப்போது ஷெனாயை நம் காதுகளில் ஊற்றுகிறார்)
எல்லோரும் பேசிமுடித்துஃபைனல் டச்சாக மோகன்லால் பேச அழைக்கப்படுகிறார். அமைதியாக எழும் மோகன்லால், மைக் முன் நின்று, அக் கவிதைப் புத்தகத்தை துண்டு துண்டாய்க் கிழித்து தன் தலை மேல் தூக்கி விசிறுகிறார். விறுவிறுவென மேடையை விட்டு கீழே இறங்குகிறார். அங்கு ஷக்தியை நேருக்கு நேர் பார்க்கிறார். விஜய்யும் மோகன்லாலும் லேசே புன்னகைக்கிறார்கள். பிறகு தோளோடு தோளோடு இடித்துக் கொள்கிறார்கள்.  (பின்னணியில் சிவனும் ஷக்தியும் சேந்தா மாஸூடா, ரெண்டு பேரையும் நம்புறவன் செம லூஸூடா என்ற பாடல் ஒலிக்கிறது) சிவன் எனும் மோகன்லால் மேலே விசிறி எறிந்த காகிதங்கள், பூக்களாய் மாறி அவர்களிருவர் மேலும் விழுகின்றன.                              

                         ===  சுபம் ===  மார்க் 180/100

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக