திங்கள், 29 செப்டம்பர், 2014

கரிக்கும் கண்ணீர் !!!

உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !

ஆனால் நீங்கள்
உச்சிவெயிலில்
அண்ணாசாலையில்
வியர்வை வழிய
பல மணி நேரம்
காத்துக்கிடந்ததில்லை

உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !

உங்களின் வரலாற்றுச்
சிறப்புவாய்ந்த இருப்பிடங்கள்
ஒருபோதும் எவராலும்
பறிக்கப்பட்டிருக்காது

உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !

மகாமக ஜலக்கிரீடையில்
உங்கள் வீட்டாட்கள்
எவருக்கும் காயம் கூட
ஏற்பட்டிருக்காது

உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !

ஏன் என்றவுடன்
ஆட்டோவும்
எதற்கென்றவுடன்
அரிவாளும்
உங்களை நோக்கி
வந்தே இருக்காது

உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !

ராஜா வீட்டுக் கல்யாணத்தை
கேள்விப்பட்டிருப்பீர்கள்
நேரில் பார்த்தனுபவிக்கும்
பரவசத்தைக்
கொடுத்தவரல்லவா அவர்கள்

உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !

இறந்தகாலத்தில்
எவன் எக்கேடு
கெட்டிருந்தால் எனக்கென்ன ?
நிகழ்காலத்தில்
என் வாழ்வை
வளப்படுத்தியவர்கள் வாடினால்
நானழுவேன் எனச் சொல்லும்

உங்கள் கண்ணீர்
உண்மையானதுதான் !!!

 நன்றி,
ராஜா ராஜேந்திரன்
சென்னை-1.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக