புதன், 24 செப்டம்பர், 2014

அன்பில்லா சாருவுக்கு ஒரு கடிதம் !!!

அன்பில்லா சாருவுக்கு,

நான் ராஜா ராஜேந்திரன்நீங்கள் மறக்க நினைக்கும் ஒரு குரு துரோகி. நானும் அவ்வாறேதான் இனி என் வாழ்நாளில் உங்களுடன் அன்னம், தண்ணி, ஈமெயில், வாட்ஸ்அப் என்று, எந்தத் தொடர்புகளும் வைத்துக்கொள்ளக் கூடாது என்கிற வைராக்கியத்துடன் இருந்தேன்.

ஆனால் நேற்று நீங்கள் போட்ட உத்தம சிகாமணி வேடம், அந்த வைராக்கியத்தை அடித்து நொறுக்கிவிட்டதுநினைவிருக்கிறதா எழுத்தாளரே ? இதேபோல் ஒரு வேடமணிந்து "பெண்களால் எத்தனையோ ராஜ்ஜியங்கள் அழிந்துள்ளன" என நீங்கள் கூறிய ஒரு மொண்ணை அறிவுரையை, நான், இதென்ன ஆட்டோ வாசகம் என்றேன்.

முடிந்ததுஎல்லாம் முடிந்ததுகுரு நிந்தனை செய்த என்னை இயற்கை தண்டிக்கும்என்றீர்கள்.   வட்டத்தை கலைத்து விடுவேன் என்றீர்கள். காவிரி நீர் தமிழகத்திற்கு நிரந்தரமாக கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்சியே, அன்று வட்டத்தை கலைத்துவிட வேண்டாம் என்று உங்களிடம் மன்னிப்பு கோரினேன். ஆனாலும் பொறுக்க மாட்டாமல் என்னை நிரந்தரமாக ப்ளாக் செய்தீர்கள். அன்றிலிருந்து இந்த நொடிவரை நீங்கள் போடும் எந்தப் பதிவுகளும் என் கண்களுக்குத் தெரியாமல் ஞானக் குருடனாகிப் போனேன்

என்னதான் விகடனில் வந்த மனங்கொத்தி பறவை மூலமாய் நான் உங்களைத் தெரிந்துக் கொண்டாலும், இந்த இணைய உலகில் உங்களுடனான என் முதல் தொடர்பே மோதலில்தான் ஆரம்பித்தது. உங்களின் உயிர்மை கட்டுரையில் நீங்கள் தாழ்த்திப் பதிந்திருந்த கமலுக்கும், இளையராஜாவிற்கும் ஆதரவாய் நான் மறுமொழியாய் உங்கள் ஃபேஸ்புக் கமெண்ட் பாக்ஸில் பதிய, உடனடியாய் என்னை நீக்கச் சொல்லி யாருக்கோ ஆணையிட்டீர்கள். அவ்வளவு விமர்சனப் பக்குவம் கொண்டவரய்யா நீங்கள். இருந்தும் அது 2011, நான் உங்களை அவ்வளவாய் வாசித்திராத காலகட்டம், மீறிப் பேச வேண்டாம் என அடங்கி, அதன்பிறகே உங்கள் வாசக வட்டத்தில் நுழைய நேரிட்டது. ஆச்சர்யம், அங்கு நட்புக்கு எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்காத பாஸ்கர்ராஜா, பார்த்திபன், போன்றோரின் நட்பு அறிமுகமாகியது.இது போன்ற நண்பர்களெல்லாம் போற்றும் ஒரு நபர் நிச்சயம் திறமையானவராகவும், நல்லவராகவும்தான் இருப்பார் என அப்போது கண்மூடி நம்ப ஆரம்பித்துவிட்டேன், விளைவு என் நேரத்தையெல்லாம் அப்போது வட்டத்தில் செலவழிப்பது பாக்கியமென்றிருந்தேன்.

உங்களின் அடிவருடிகள் கூட உங்களுக்கு என்ன செய்தோம் ?’ எனச் சொல்வதை விரும்பமாட்டார்கள். என்னதான் உங்கள் குணங்களை பின்பற்ற விரும்பினாலும், கொஞ்சநஞ்சம் குறளும் படித்திருப்பார்கள் போல. நானும் உங்களிடமிருந்து பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் வெளிப்படையாக எவரையும் விமர்சிக்கத் தயங்காத குணத்தைக் கற்றுக் கொண்டிருந்தாலும், இந்தச் சொல்லிக்காட்டும் புத்தியை மட்டும் என்னைப் பற்ற விடாமல் பார்த்துக் கொண்டேன், அந்த எழவு விரதமும் இந்தக் கடிதத்தில் மரித்துப் போனதே என்பதுதான் பெருஞ்சோகம் :(

ராஸலீலாவில் ஃப்ரெஞ்ச், பாரீஸ், ப்ரான்ஸ் என மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளியிருப்பீர்கள் அல்லவா, அதனாலேயே எனக்கு பரிசாக கிட்டிய அதி அற்புத ஃப்ரான்ஸ் தேச அழகான பேனா ஒன்றை பேக்கிங்கைக் கூடப் பிரிக்காமல் பாதுகாத்து வைத்திருந்து உங்களின் 2011 பிறந்தநாளின்போது பரிசாயளித்தேன். உங்கள் ஆன்லைனில் கூட அதைச் சொல்லி பாராட்டியிருந்தீர்கள். சரி இதெல்லாம் அற்பம். என்னால் ஒரு நூறு பேரை உங்களுடைய தீவிர வாசகராக்க முடிந்தது, அது தெரியுமா எழுத்தாளரே ?

எக்ஸைல் வெளியீட்டின் போது அதன் மேலட்டையை ப்ரொஃபைல் படமாக வைத்துக்கொண்டுஃபேஸ்புக் உலாவரும்போது இதென்ன ?’ என்று வலையில் சிக்கியவர்களையெல்லாம் உங்களை வாசிக்கத் தூண்டியிருக்கிறேன்.

நம்பமாட்டீர்கள், இன்றும் எவராவது உங்களின் சிறந்த நூலெது என்று என்னிடம் வந்து வினவத்தான் செய்கிறார்கள், என் ப்ளாக்கில் உங்களைச் சிலாகித்து எழுதிய பதிவுகளின் லிங்குகளை அவர்களுக்கு கொடுக்கிறேன், ஆம், உங்களைப் புகழ்ந்து எழுதிய எந்தப் பதிவுகளையும் வைரஸ் வந்து தாக்காமல் அப்படியே போற்றிப் பாதுகாத்துதான் வருகிறேன், ஆனால் அதற்காக நீங்கள் செய்த கைமாறு என்ன தெரியுமா ?

2014 புத்தக கண்காட்சியில், வெளியில் நின்றுக் கொண்டிருந்த கணேசனுடனும், கார்த்திகேயனிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன், எதிர்பாராமல் அங்கு நீங்கள் வந்துவிட்டீர்கள். சற்றும் அதிராமல் எப்போதும் போலவே புன்னகை வழிய, ’வணக்கம் சாருஎன கைத் தொழுதேன். ப்ளாக் செய்துவிட்டால் ப்ளாக் செய்யப்பட்டவரின் பதிவுகள்தான் அய்யா கண்ணுக்குத் தெரியாது, ஆளே கூடவா தெரிய மாட்டார்கள் ? சிறிதும் என்னைக் கண்டுக்கொள்ளாமல், அவர்களிடம் போலாமா ?’ என்று கேட்டுவிட்டு எனக்கு புறமுதுகைக் காட்டினீர்கள் ! உங்கள் பணத்தைக் கொள்ளையிட்டேனா ? உங்கள் நூல்களை காப்பியடித்து எழுதி விற்று பணம் சம்பாதித்தேனா ? உங்களை கீழ்த்தரமான வசை வார்த்தைகள் சொல்லி பொதுவில் வைதேனா ? அப்படி என்னய்யா செய்துவிட்டேன் ?

நூலகத்திற்காக எக்ஸைலை ஏலம் விடுகிறேன் என்றீர்கள், 21001/- ரூபாயை நன்கொடையாய் கொடுத்தேன். சிறிதும் வெட்கமேயில்லாமல் ஸ்பானிஷ் மொழியில் எதையே மொழி பெயர்க்க பண உதவி கோரினீர்கள், வறிய நிலையிலும் 2000/- அனுப்பினேன், எத்தனையோ மாதம் சொல்லாமல் கொள்ளாமல் உங்கள் போனிற்கு டாப் அப் செய்திருக்கிறேன். நாகூரில் அண்டா குண்டா நிரம்ப நோண்புக் கஞ்சி கொடுப்பார்கள், இங்கு கொடுக்க ஆளில்லை என்றிருந்தீர்கள். உடனே எங்கள் ஏரியா செல்லத்துரை நாடார் பாத்திரக்கடைச் சென்று இருப்பதில் பெரிய துருப்பிடிக்க வாய்ப்பில்லாத இரும்புத் தூக்கு வாளி வாங்கி, ஓர் இஸ்லாமிய நண்பருடன் மசூதி சென்று சுடச் சுட நோண்புக் கஞ்சி வாங்கி உங்கள் வீடு தேடி வந்துக் கொடுத்திருக்கிறேன், மொறு மொறு சமோசாக்களுடன். இன்னும் எவ்வளவோ செய்துதான் இருப்பேன், பதிலுக்கு நீங்களும் எங்கள் வீட்டுத் திருமண விழா வந்து விழாவைச் சிறப்பித்திருக்கிறீர்கள், நானும் உங்கள் இல்ல திருமண விழா வந்தபோது சிறப்பாய்க் கவனித்தீர்கள், ஆனால் இதெல்லாம் மறந்துபோய், நீங்கள் வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொள்ளுமளவு நான் செய்தது என்ன ?

ஜி. நாகராஜனை, உயர்குடி பாப்பான் எனச் சொல்லி அவரெழுத்தை குறை கூறியதை பகிரங்கமாக எதிர்த்தேன், ஓர் எழுத்தாளரை மட்டம் தட்ட சாதி முலாம் பூசாதீர்கள் என்று, அது தவறா ?

சுந்தர ராமசாமியை, ஜெயமோகனை, அசோகமித்ரனை, விகடன் ரா.கண்ணனை, நாஞ்சில்நாடனை கொடும் வன்மம் கொண்டு தூற்றினீர்கள், அதை மட்டுப் படுத்த நினைத்தது தவறா ?

உங்களுக்கும் எனக்குமான பிணக்கு இதே கமல்ஹாசனால்தான் 2013ல் தொடங்கியது. இஸ்லாமியர்களுக்கு/ஐயங்கார்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் பேர்வழி என நீங்கள் விஸ்வரூபம் பற்றி அபத்தமாக உளறியதையெல்லாம் சிறிதும் கருணையில்லாமல் அங்கேயே நேரடியாய் விமர்சித்தேன், அது தவறா ? அதெல்லாம் நீங்கள் போதித்த பாடங்கள்தானே அய்யா ?

பாஸ்கராலும், பார்த்திபனாலும் அவர்களின் அன்பிற்கு ஆட்பட்டு உழைத்த வாசக நண்பர்களால் மட்டுமே உங்களின் பிழையுள்ள எக்ஸைல் வெளியீட்டு விழாவும் சரி, அதன் விற்பனையிலும் சரி, உங்கள் வாழ்நாளில்........(இன்னும் சொல்லப்போனால் கனிமொழி வந்து வெளிட்ட நூல்களின் விற்பனையை விட) கண்டிராத விற்பனையைக் கண்டீர்கள், பல்லாயிரம் பேர்களின் கைகளில் நூலாய்த் தவழ்ந்தீர்கள், இத்தனைக்கும் அப்போது வெட்சாட்டில் முழு இணைய உலகும், இலக்கிய உலகும் உங்களையும், எங்களையும் சொல்லொண்ணா வார்த்தைகளில் தூற்றிக்கொண்டிருந்த காலகட்டமது. ஆனால் அவர்களுக்கு நீங்கள் காட்டிய நன்றிகள் என்னென்ன தெரியுமா அரிய எழுத்தாளரே ??

என் மகளைக் கற்பழித்தவர்களொப்பான குணம் கொண்டவர்கள் பாஸ்கரும், பார்த்திபனும். அவர்களோடு எவ்விதத்திலும் தொடர்பு வைத்திருப்பவர்கள் இனி ஒருபோதும் என்னுடன் இருக்கலாகாது. ஒன்று அந்தக் கொடியவர்களுடன் செல்லுங்கள், அல்லது நியாயத் தராசு வைத்திருக்கும் என்னுடன் இருங்கள் என்று மாமல்லபுரக் கடற்கரை விடுதியில் வைத்து பல வாசகர்களிடம் சொன்னீர்கள். இத்தனைக்கும் அவர்கள் ஜாலியாக அளவளாவ ஒரு ஃபேஸ்புக் குழுமம் வைத்திருந்தார்கள், அதில் வாசக வட்ட நண்பர்கள் பலரும் இருந்தார்கள், இது எப்படியோ உங்கள் காதுகளுக்கு வந்துவிட்டது. அவர்கள் என்னமோ இவர்களை வைத்து பணம் சம்பாதிப்பதைப் போன்று திரித்துப் பேசினீர்கள்.

ஆனால் அன்று நீங்கள் இவ்வாறு கட்டளையிட்டது எவ்வளவு நல்லதற்கு எனத் தெரியுமா அரிய எழுத்தாளரே பல உற்ற நண்பர்களின் சுயரூபம் அன்று தெரிந்தது. நீங்கள் சொன்னதை அப்படியே ஏற்று பலரும் அக் குழுவிலிருந்து விலகினார்கள், இன்னும் ஒரு சிலர் பல அடிகள் பாய்ந்து, அவர்களிருவரின் தனிப்பட்ட நட்பைக் கூடத் துண்டித்துக்கொண்டனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடடா, பாஸ்கரும், பார்த்திபனும் உங்கள் ஆன்லைன் வரவுகளையெல்லாம் ஏமாற்றி கோடீஸ்வரர்களாகி விட்டவர்கள் அல்லவா ? உங்கள் எதிரிகளிடம் அவர்கள் வாங்கிய வசவுகளும், சாபங்களும் இன்னும் ஏழரை ஜென்மங்கள் எடுத்தாலும் தீராதேயய்யா ? அவர்களுக்கு நீங்கள் சூட்டிய பட்டங்கள் ரேப்பிஸ்ட், லூட்டர்ஸ், பெண் பிடிக்கும் இதல்ல தம்பி..............அடப்பாவி, அடப்பாவி இந்தப் பாவமெல்லாம் கங்கையில் குளித்தால்தான் தீருமா ? ராமேஸ்வரத்தில் மூழ்கினால்தான் போகுமா ?

பிரபு ராமகிருஷ்ணன்தான், உங்கள் வாசகர்களிலேயே நான் பார்த்த முதல் ஆள். பனையூர் வட்டச் சந்திப்பின் போதும் பார்த்திபன் ஏற்பாடு செய்திருந்த ஷோபா பங்களா தேடி, வீதியில் அலைந்துக் கொண்டிருந்தபோது, என்னைக் காரில் ஏற்றிக்கொண்டு விடுதி சேர்த்தவர். வேலை வெட்டியையெல்லாம் விட்டுவிட்டு, உங்களை வளைத்து வளைத்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருந்தவர்(இப்போது் அவரும் உங்களுக்கு ஆகாது)

அவருடைய திருமண விழாவில், அரங்கத்தின் பின்புறத்தில் நான், பாஸ்கர், பார்த்திபன், கமலின் கிராந்தே இதழ் பற்றி உங்களிடம் சொன்ன அந்த இளம் நிருபர் என பெருங்குழுமமாக அமர்ந்திருந்தோம். அந்த நிருபரிடம் பேச உள்ளே வந்த நீங்கள், பாஸ்கர், பார்த்திபனை பார்த்த மாத்திரத்தில் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றீர்கள். உங்கள் முகத்தின் மேல் சிவப்புஒளி ஒன்று பாய்ந்ததைக் கண்டேன். உங்களின் கோரைப்பற்கள் நீண்டு வெளியே வந்து அச்சத்தை மூட்டியது. வெடுக்கென தலையைத் திருப்பிக்கொண்டு..........அதே புறமுதுகு. தொப்பலாய் வேர்த்திருந்தது.

பிறகு அராத்து உள்ளே வந்து ஆழியின் காதுகுத்து விழாவிற்கு எங்களை அழைத்து, அழைப்பிதழ் கொடுத்து, பின் அந்த நிருபரை உங்களிடம் அழைத்துச் சென்றார். அவ்வளவு தீண்டத் தகாதவர்களல்லவா அவர்கள் ?? ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு அராத்து நூல் வெளியீட்டு விழா ’சுவரொட்டி ஒட்ட பாஸ்கர்தான் சிறந்த ஆள், அவர் எங்கே ?’ எனத் தேடினீர்கள் பாருங்கள், அன்று உங்கள் பேச்சைக் கேட்டு அவர்களைப் புறக்கணித்த உங்கள் அடிவருடிகளின் முகத்தைப் பார்க்க நான் ஆசைப்பட்டேன்.

சாரு, சர்க்கஸில் அந்தர்பல்டி அடிக்கும் வேலை செய்திருக்க வேண்டிய ஆளய்யா நீங்கள்தமிழர் சாபம் எழுத்தாளராகித் தொலைத்து எங்கள் நேரத்தைக் கொன்ற வண்ணமிருக்கிறீர்கள்.

எனக்கு குழந்தைகளைப் பிடிக்காதுநூல் உங்கள் கையிலிருந்தால் அதன் கடைசி அத்தியாயத்திற்குச் செல்லுங்கள். அதே நிருபர், அதே கமல், அதே கிராந்தே வருகிறது. அதில் நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள்

கிராந்தே அதன் ப்ளாஸ்டிக் ரேபர்கள் கூடப் பிரிக்கப்படாமல், பளபளவென அப்படியே டீப்பாய் மேலிருக்கிறது. அதாவது இதையெல்லாம் நான் படிக்கிறேன்எனக் கமல் சீன் போட்டு நிறுவ விரும்பினார் என அந்த நிருபர் சொன்னதாய் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நேற்று அதே கிராந்தேவைச் சொல்லி அவர் வாசிப்பதாய்ப் புகழ்கிறீர்கள்.  

இதில் ஒரே நேரத்தில் கமலையும், அந்த நிருபரையும் நீங்கள் அசிங்கப்படுதிதி விட்டீர்கள், அந்த நிருபர் நான் கமல் பற்றி அப்படிச் சொல்லவேயில்லை, இந்தப் புத்தகமெல்லாம் கூட கமல் படிக்கிறார் என்றுதான் சொல்லியிருந்தேன், சாரு கச்சாப் பொருளை இப்படி கசக்கித் தொலைவார் என எனக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று புலம்பினார்.

அட நம்ம எக்ஸைல் விமர்சனக் கூட்டம் ஒன்றை தேவநேயப் பாவணர் அரங்கில் நடத்தினோமே, நான் கூட அங்கு டீ பாய் வேலை செய்தேனே, கொடுமை என்னவென்றால் அந்த டீயே என்னுடையது............அந்தவிடத்தில் கூட நீங்கள் இந்தக் கிராந்தே சம்பவத்தைச் சொல்லி கமலை போலி வாசகர் என இகழ்ந்தீர்கள் அய்யா, அந்த அரங்கில் கமலைப் பேட்டியெடுத்த நிருபரும் இருந்தார். அவர் முன்னாலேயே அவர் சொன்னதாய் திரித்து ஒரு பொய் சொல்லிவிட்டு, இன்றென்னடா என்றால் கமல் அவரைப் பார்த்தவுடன் காலில் விழ வேண்டுமாமாம் !

கமல் இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா ? நேரே கிருஷ்ணனிடம் சென்று இவரை அழைக்கப்போகிறேன் என முன்பே சொலியிருந்தால் இந்த விழாவை புறக்கணித்திருப்பேனே என்று சொல்லி அந்த அரங்கை விட்டே வெளியேறியிருப்பேன், ம்ம்ம்ம்ம்ம்............ஆனால் கமல் கமல்தானய்யா !

அன்று ’கமல் தன்னுரையை சரியாய் நிகழ்த்தவில்லை, பெருத்த ஏமாற்றம்’ என ஒரு தோழி பகிர்ந்திருந்த பதிவைப் பார்த்தேன். அந்தத் தோழி, ’சாஎன்று ஆரம்பித்த மாத்திரத்தில், ஆரம்பித்தவரை அன்ஃப்ரண்ட் செய்யுமளவு உங்கள் மீது பற்று கொண்டவர், மருந்துக்கும் நீங்கள் அந்த விழாவில் கலந்துகொண்டிருந்தீர்கள் என எழுதவேயில்லை, இப்போதுதான் புரிகிறது, கமல் உங்களைக் கண்ட மாத்திரத்தில் மூட் ஆஃப் ஆகியிருந்திருக்கிறார், அய்யோ பாவம் கிருஷ்ணன், அனுதாபங்கள்.

என்னாலும் ஜெயமோகனுக்கு போட்டியாக இதே கடிதத்தை பல பத்திகள் எழுதமுடியும் என்றாலும் இன்று ஞாயிறு. குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்க விரும்புகிறேன், நீங்கள் விரித்த வலையில் இப்படி விழுந்து நான் சிக்கியிருந்திருக்கக் கூடாது, ஆனால் பலரும் உங்களின் அந்தக் கமலுக்கொரு கடிதம் படித்து கண்ணில் ஜலம் வச்சுண்டேன்என பதிலுரைப்பதால், அந்த அப்பாவி ஆடுகளின் நலனுக்காக என் பொழுதை வீணாக்குகிறேன்.

ராஜன் ராதாமணாளன் உங்களை அரிக்கி என்று எழுதியதற்காக நீங்கள் அவருக்கு கொடுக்க நினைத்த தண்டனை என்ன தெரியுமா சாரு ? அன்று நீங்கள் அப்படி பேசியதைப் பார்த்து, அத்துடன் உங்களைத் தலைமுழுகிய அந்த வாசகருக்கு உங்களின் வார்த்தைகள் அவர் வாழ்நாள் முழுக்க நினைவிலிருக்கும்அந்தப் பேச்சை, அந்த இடத்திலேயே கண்டித்தவர் டிமிட்ரிநாங்களெல்லாம் நீங்கள் உச்ச போதையில் உளறுகிறீர்கள் என விட்டுவிட்டோம், ஆனால் அந்தப் பேச்சால் உங்களிடமிருந்து நிரந்தரமாக விலகிய அந்த வாசகர் உங்கள் எழுத்தின்பால் அளவற்ற பற்றுக் கொண்டிருந்தவர். மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு அன்பளித்தவர். அன்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலிருந்திருந்தால், உங்களின் சுயரூபம் தெரியாமலேயே போயிருக்கும், நானும் காலெமெல்லாம் ஏமாந்திருப்பேன் என என்னிடம் சொல்லி தேங்க் காட் என்றார்.

ராஜன் உங்கள் எழுத்துக்களைத்தானே விமர்சித்தார் ? ஏன் நீங்கள் உத்தம தமிழ் எழுத்தாளன், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை என்றெல்லாம் யாரையும் நக்கல் செய்வதேயில்லையா ? அரிக்கி என்றது அவ்வளவு பெரிய குற்றம் என்றால், கமலை கீழ்த்தரமாக விமர்சித்துவிட்டு, அதைக் கண்டுக்கக் கூடாது என்றால்...................சிலேவுல கூட இதெல்லாம் நடக்காது.

இதையெல்லாம் ஏன் கசந்தார் சாரு தொடரில் எழுதுவதைக் கூடத் தவிர்த்தேன், அவ்வளவு குரூரமானதது.

கடைசியாக கானகன் வெளியீட்டு விழாவில் உங்கள் முன்தான் அமர்ந்திருந்தேன். என்னைப் பார்க்கும் வேளைகளில்லாம் முகத்தைச் சுருக்கிக்கொண்டீர்கள், என் பார்வையைத் தவிர்க்க விரும்பினீர்கள், உச்சகட்டமாய் என் நட்பை மறக்க விரும்புவதாய் பகிர்ந்திருந்தீர்கள்.

சாரு நீங்கள் ஒருவரைப் புகழ்ந்தால் அது சாபம். நீங்கள் ஒருவரை இகழ்ந்தால் அது வரம். எனக்கு தொடர்ந்து வரமளியுங்கள், அது ஒரு மயிரும் பலிக்கப்போவதில்லை என்றாலும் கூட.

நேரடியாய் பணம் கேளுங்கள், அல்லது பட வாய்ப்பு கேளுங்கள், அதை விடுத்து உத்தம வேடம் போடாதீர்கள், பாரதி தாசன் என்று சொல்லி அந்தத் தியாகியை அசிங்கப்படுத்தாதீர்கள். கடந்த மூன்று வருடங்களாய் ஒரே ஒரு கட்டுரைத் தொகுப்பைக் கூட வெளியிடத் துப்பில்லாமல் தமிழின் அரிய எழுத்தாளர் நான்என நா கூசாமல் பொய் சொல்லாதீர்கள், பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது என என் பக்கத்து வீட்டு நாயுடு ஆன்ட்டி அடிக்கடி சொல்வார்கள் !!!

நன்றி,

ராஜா ராஜேந்திரன்
சென்னை
-1. 

மேற்கண்ட கடிதத்தை சாருவின் ஜிமெயிலுக்கு 21/09/2014 ஞாயிறு அன்று அனுப்பிவிட்டேன். இது ஆபாசவகைக் கடிதமென்பதால், உத்தமர் ஏதேனும் எடிட் செய்யக்கூடும். எனவே அப்படியே உங்கள் பார்வைக்கு. இதில் நான் வரம்பு மீறியிருந்தால் என்னைக் கண்டியுங்கள், திருத்திக் கொள்வேன் :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக