பர்தா எனும் புனிதக்கவசமும் முல்லாக்களின் மூளைச்சலவையும் :(

போன டிசம்பர் 2014, உயிர்மையில் பேராண்மைமிக்க ஒரு கட்டுரையை வாசித்து மெய்சிலிர்த்துப் போனேன்.  அப்போதே அதை ஃபேஸ்புக்கில் பதிவுகளாகப் போட்டதோடு நில்லாமல் கட்டுரை ஆசிரியர்க்கு என் வாழ்த்துக்களையும் அவருடைய மின்னஞ்சலில் தெரிவித்தேன்.  ஆனால், அடுத்தடுத்த வேலைகளால் இறுதிப்பகுதியையும் எழுதாமல், முழுத்தொகுதியை என் வலைப்பக்கத்திலும் பதியாமல் விட்டுவிட்டேன், இதோ காலம் இன்று கனிந்தது.  கண்மூடித்தனமாக நம்பிக்கைகளை தோலுரிக்கும் வகையில் மிக அவசியமான கட்டுரை இது.




Image result for ஹெச் பீர்முஹம்மது

முதலில் என் கட்டுரைப் பற்றிய சிறு பார்வையுடன், பிறகு முழுக்க கட்டுரைக்குள் புகலாம்.  அவ்வப்போது நான் இடைபுகுவேன், இனி :-




’புனிதப் பொருளாகப் பெண்ணுடல் பர்தா என்கிற கருப்பு அங்கியும் தமிழ் முஸ்லீம் பெண்களும்’ என்கிற அட்டைப்படத் தலைப்பைப் பார்த்ததும் மண்டை சூடாகி, ‘ஏதேது, இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவது கட்டாயம்’ என்று கட்டுரை எழுதியிருப்பார் போல, வாசித்தபின் வசை மெயில் அனுப்பிட வேண்டியதுதான்’ என்று திரு.பீர் முகம்மதுவின் அந்தக் கட்டுரைக்குள் நுழைந்தால்........யா அல்லாஹ், என்னே ஒரு முற்போக்கான, துணிவான கட்டுரை !



Image result for பர்தா அணிந்து



நான் வளர்ந்தது, இஸ்லாமியர்கள் வசித்த பகுதி என்பதால், திடுக்கென நுழைந்த இந்த பர்தா கலாச்சாரம் எனக்கு கொஞ்சம் திகைப்பையும், அது ஆண்களால் வலுக்காட்டாயமாகத் திணிக்கப்பட்டதால் எரிச்சலையும், பின்னர் பர்தா இஸ்லாமியப் பெண்களால் வெகு ஆர்வமாக அணியப்பட, ஏமாற்றத்தையும் தந்தது.




என்னுடைய இஸ்லாமிய தோழனிடம், இது குறித்துப் பேசும்போது, “இல்ல நான் வேணாம்னுதான் சொல்றேன், அவதான் விரும்பிப் போட்டுக்குறா, அவ சுதந்திரத்துல ஏன் தலையிடணும் ?” என்று  பெண் விடுதலை பேசினார்கள், ஆனால் அதன் பின்னணியைக் கண்ணுற்ற போது உண்மை விளங்கியது.




என் உற்ற இஸ்லாமிய நண்பர் குடும்பத்துடன் பொருட்காட்சி போயிருந்தோம்.  அவர் அவருடைய மனைவி, பருவ வயது விளிம்பில் அவருடைய இரு பெண்கள்.  பர்தா கலாச்சாரம் பரவியிருந்தாலும் இம் மூவரும் அதை இதுவரை அணியவில்லை.   ராட்டினங்கள், டெல்லி அப்பளம் எல்லாம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த வேளையில் நண்பரின் உறவினர்கள் சிலரைச் சந்திக்க நேர்ந்து இவர்களிடம் மகிழ்ச்சியாக அளவளாவிக் கொண்டிருந்தனர் , அந்த உறவினர்கள் குழுமத்தில் எல்லோருமே ஆண்கள்.  பேசிக்கொண்டிருந்தபோதே  என் நண்பரை கொஞ்சம் தள்ளிக் கொண்டு போய் ஏதோ பேசினர்.  



வரும்போது நண்பர் கொஞ்சம் கடுகடுவென வந்தார்.  அவர் மனைவி என்னவென்று வினவியபோது, “ம், நீங்க புர்கா போட்டுகிட்டுதான் வெளிய வரணுமாம், அல்லா கூலிங்க........” இன்னும் சில வசை வார்த்தைகளைச் சேர்த்துப் பேசினார்.  ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தின் மூன்று பெண்களும் வீட்டிலிருந்து பக்கத்து தெரு போகும் போதும் பர்தா அணிந்தபடிதான் சென்றனர், அச் சிறுமிகள் பள்ளிக்கு கரி மூட்டையாய்ச் செல்லத் தொடங்கிய போது வலித்தது.




’பர்தா பெண்களை பாதுகாக்கும் கவசம்’ என இங்கு எவனாவது பிதற்றும் போது, கண்டபடி வைதிருக்கிறேன்.  “உன் மதத்தில் ஓராயிரம் பிழைகளை வைத்துக் கொண்டு, நீ என்ன என் மதப் பிழைகளை குறை கூறவது ?” என முஷ்டியை உயர்த்திக் கொண்டு வரும்போது, என் மதப் பிழைகளை நான் விமர்சித்த பத்திகளைக் காட்டி, எனக்கு மதமென்னும் மதம் இன்னும் பிடிக்கவில்லை என்று வாதிட்டதமுண்டு.




இதுபற்றி ஏன் இஸ்லாமிய மதத்தின் முற்போக்குவாதிகள் கூட எழுதத் தயங்குகிறார்கள் ? என நான் ஏங்கியதுண்டு, அதிலும் முக்கியமாய் முற்போக்குக் கொள்கைகள் கொண்ட இஸ்லாமியப் பெண்கள் எவரேனும் இதற்கு எதிராகப் பொங்கியெழக்கூடும் எனக் காத்திருந்ததுமுண்டு.   நல்லவேளையாக இந்தக் கலாச்சாரத்திற்குக் காரணமான இனமே அதற்கெதிராக ஆதாரத்துடன் காட்டுப் பொந்தில் அக்கினிக்குஞ்சை விதைத்திருக்கிறது, இனி வெந்து தணிய வேண்டும் காடு.  இனி அந்தக் கட்டுரையில் தேர்ந்தெடுத்த பத்திகளை அடுத்தடுத்து தருகிறேன், விவாதிப்போம்.




நமக்கெதுக்கு இந்த வீண் வேலை என்பவர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கவும்.  கட்டுரையாளரின் மின்னஞ்சல் முகவரியை நான் தரப்போவதால் உங்களின் எதிர்ப்பு /ஆதரவுகளை நேரடியாகவே ஆசிரியருக்கு நீங்கள் அனுப்பலாம், தொடர்ந்து வாசியுங்கள் !




பர்தா என்ற கருப்பு அங்கியும் தமிழ் முஸ்லீம் பெண்களும் 
-எச். பீர்முஹம்மது(உயிர்மை) பகுதி 1
=========================================================

Disclaimer :- கீழே தொடரும் பத்திகளின் முழுச் சொந்தக்காரர் கட்டுரையாசிரியர் பீர் முஹம்மதுவே ஆகும்.  அவருடைய மின்னஞ்சல் முகவரி  mohammed.peer1@gmail.com  இங்கு விவாதம் செய்யத் தயார், ஆனால் கண்டனங்கள், ஆலோசனைகள், மாற்றுக் கருத்துக்கள், பாராட்டுகளை மேலுள்ள இந்த முகவரிக்கு அனுப்புங்கள் !



இனி பீர் முஹம்மது கட்டுரையிலிருந்து.....................



இந்திய அளவில் கணிசமாக அல்லது தமிழ்நாட்டுச் சூழலில், பெரும்பான்மையான முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தா என்ற கருப்பு அங்கி அரபு நாட்டின் இறக்குமதியாகும்.   அபயா என்று அரேபியில் அழைக்கப்படும் இது பாரசீகத்தில் பர்தா என்றும் உருது மொழியில் புர்கா என்றும் அழைக்கப்படுகிறது.



உலகமயமாக்கலின் பெயரால் வளரும் நாடுகளின் மேற்கத்திய கலாச்சாரம் ஊடுருவும் அல்லது அறிமுகமாகும் நிலையில் சவூதி அரேபியாவை மையப்படுத்தி அதன் கலாச்சாரம் மற்றும் சிந்தனைகள் உலகம் முழுக்க திணிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.



19ம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவில் உருவான வஹ்ஹாபிய தூய்மைவாத கோட்பாட்டிற்குப் பிறகு இது மேலும் தீவிரமடைந்துக் கொண்டிருக்கிறது, அதாவது சவூதி அரேபியாவில் மழைபெய்தால் இங்கு குடைபிடிப்பது.




1400 ஆண்டுகளுக்கு முந்தைய சவூதி அரேபியா என்பது இனக்குழு சமூக அமைப்பை சார்ந்திருந்தது.  இஸ்லாம் தோன்றியதாக அறியப்படும் ஏழாம் நூற்றாண்டு காலத்தில் இனக்குழு ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு கீழே அந்தரங்க உறுப்பை மட்டுமே மறைக்கும் வகையில் உடை அணிந்திருந்தனர்.  அதே காலகட்டத்தில் உலகின் பல்வேறு சமூகங்களிலும் இந்த நடைமுறை இருந்தது.  மேலும் கடும் கோடை காலத்தில் முழு நிர்வாணமாக நடந்தனர்.  காரணம் உச்சியைப் பிளக்கும் அன்றைய பாலைவன வெயிலுக்கு அவர்களுக்கு நிர்வாணம்தான் நிவாரணம் அளித்தது.




இங்கு கவனிக்க வேண்டியது தைக்கப்பட்ட உடை அறிமுகமில்லாத அன்றைய காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் மறைப்பதற்குப் பயன்படுத்தியது தோல் மற்றும் இலைதழைகள்தான்.  அன்றைய காலகட்ட இனக்குழு பெண்களிடையே மார்பகத்தை மறைக்கும் பழக்கமில்லை.  உலக வரலாற்றில் பெண்ணின் மார்பகம் என்பது நீண்டகாலமாக காமக் குறியீடாகப் பார்க்கப்படவில்லை.  ஆனால் அன்றைய உயர்குடி அரபுப்பெண்கள் மார்பகத்தை மறைக்கும் நடைமுறையை மேற்கொண்டிருந்தனர்.  தான் சார்ந்த சமூக மதிப்பீடுகளை பழங்குடி மக்களுக்கு அறிமுகம் செய்து அவர்களை நாகரீக காலகட்டத்திற்கு மாறுதல் அடையச் செய்யும் முயற்சிதான் இஸ்லாமியப் பிரதிகளில் உடை குறித்த விஷயங்களின் வெளிப்பாடு.




சமூகச் சூழலை அதன் இயக்கத்தைப் புரிந்துக் கொள்ளாமல் இயந்திரத்தனமாகப் புரிந்துக் கொண்டதன் விளைவுதான் தற்போது இஸ்லாமிய சமூகத்தில் உடை பற்றின இத்தனை குழப்பத்திற்கும், திரிபுவாதத்திற்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.  அதுவும் பெண் உடை குறித்து மட்டுமே இப்படியான அதீத குழப்பம் எழும்போது தவிர்க்க முடியாமல் அதற்குப் பின்னால் மிதமிஞ்சிய தீவிர ஆணாதிக்கம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.




கி.பி.13ம் நூற்றாண்டில் அரபு பிராந்தியத்தில் அப்பாஸிய மன்னர்களின் ஆட்சி வீழ்ந்து மங்கோலியர்கள் அரபு பிரதேசத்தை  தங்கள் வசப்படுத்தியதைத் தொடர்ந்து  முல்லாக்களின் கையில்  மத அதிகாரம் வந்தது.  அன்று முதல் பெண்களுக்கான எல்லா கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வந்தன.




பெண்கள் வீட்டின் சமையலறைக்குள் இருக்க அறிவுறத்தப்பட்டனர்.  அவள்மீது தற்போது தூக்கி சுமக்கப்பட்டு நகர்ந்து கொண்டிருக்கும் ‘கண்ணியம்’ என்ற முத்திரை குத்தப்பட்டது.  இதனை மீறுவோர் நடத்தை சார்ந்த குணாம்ச கொலைக்கு உட்படுத்தப்பட்டனர்.  மேலும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமானால் ஆண் துணை இல்லாமல் வெளியே வர முடியாது.  அவ்வாறு தனியாக வெளிவந்தால் அவள் தண்டிக்கப்பட்டாள்.  இதன் தொடர்ச்சியில் ஒரு பெண் பருவமடைந்தால் அப்பெண்ணிற்கான கல்வி மறுக்கப்பட்டது.  மேலும் சிறு குழந்தையாக இருந்தாலும் பெண்குழந்தை என்றால் அவளுக்கு வீட்டிலேயே கல்வி அளிக்கப்பட வேண்டும், அதுவே உசிதமானது என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.



ஒவ்வொரு நாட்டிலும் இருந்த இஸ்லாமிய அரசுகள் இதனை அமல்படுத்தின,  மேலும் இஸ்லாம் அல்லாத நாடுகளில் முல்லாக்களின் ஆதரவாளர்கள் இதனை அமல்படுத்தினர்.




(இன்னும் பர்தாக்குள்ளயே போலல்ல ?  அடுத்த பத்தில எடுத்தவுன்னயே பர்தாவுக்குள்ளதான் போகப் போறீங்க, காத்திருங்கள் ப்ளீஸ் )
-----------************----------------***********-----------------*************-------------------




பர்தா என்ற கருப்பு அங்கியும் தமிழ் முஸ்லீம் பெண்களும்
- எச். பீர்முஹம்மது(உயிர்மை) பகுதி 2
===================================================

தற்போது நடைமுறையில் இருக்கும் பர்தா என்ற கருப்பு அங்கி 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அரபு நாட்டில் அறிமுகமானது( இதன் மூலவடிவத்தை ஈரானின் பார்சி மதத்தினர்தான் முதன் முதலாக கடைபிடித்தனர் என்ற வரலாற்றுக்குறிப்பு காணப்படுகிறது)




ஐரோப்பிய காலணியாக்கத்திற்கு அரபு நாடுகள் உட்படுத்தப்பட்ட போது அங்கிருந்து இந்த உடை வடிவமைக்கப்பட்டது.  தைக்கப்பட்ட உடை அறிமுகப்படுத்தப்பட்டதன் தொடர்ச்சி இது.  19ம் நூற்றாண்டில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இது அரபு நாட்டுப் பெண்களிடம் வேகமாக ஊடுருவியது.  முல்லாக்கள் மற்றும் மத அடிப்படைவாத அமைப்புகள் இதன் தீவிரப் பிரச்சாரகர்களாக இருந்தனர்.




பர்தாவின் போலித்தனங்களுக்கும், கலாச்சார கட்டமைப்பிற்கும் எதிராக 19 மற்றும் 20ம் நூற்றாண்டில் எகிப்தின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களாக இருந்த காசிம் அமீன், காலித் அப்துல் கரீம், இப்னு தோரா, அல் அஸ்வாமி போன்றவர்கள் பிரச்சாரம் செய்தனர்.  பர்தா முறையை கடுமையாக எதிர்த்து இஸ்லாமிய மதத்தின் பெண்களின் உடை என்பது என்ன என்ற உண்மையை அம்பலப்படுத்தினர், இதற்காக இது குறித்த நூல்கள் அவர்களால் எழுதப்பட்டன.




இஸ்லாமிய உலகம் இன்று எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்களில் கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றிய பார்வை முக்கியமானது. அடிப்படைவாதம் வேர்கொள்ளும் இடம் இதுவே.  செருப்பு அணிவதில் தொடங்கி நடப்பது மற்றும் படுப்பது வரை இஸ்லாமாக இருக்க வேண்டும் என்று அடிப்படைவாதிகள் முன்வைக்கின்றனர்.  இங்கு பர்தாவின் பெயரில் சவூதி அரேபிய கலாச்சாரத்தை உலகம் முழுக்க வாழும் முஸ்லீம் பெண்களின் மீது திணிக்கிறார்கள்.




கீழே தொடர்வது எகிப்து இஸ்லாமிய அறிஞர் காசிம் அமீன் தன் ‘பெண் விடுதலை’ என்ற நூலில் சொல்லியது,



// பர்தா(கருப்பு அங்கி) மற்றும் நிகாப்(முகமூடி) திட்டவட்டமாக இஸ்லாமிய கட்டளையோ, வழிபாடோ, சமூக விதியோ இல்லை, மாறாக அது குழப்பவாதத்தின் தோற்றம், பர்தா என்பது பெண்களை வீட்டில் அடைத்து வைத்து, அவர்களை வெளியே விடாமல், மற்ற ஆண்களுடன் கலக்காமல் இருக்க ஆண்கள் கண்டுபிடித்த ஒன்றே, மேலும் இந்த மரபு என்பது ஏழாம் நூற்றாண்டில் நபியின் மனைவிகளுக்கு சொல்லப்பட்ட ஒரு விதிமுறையாகும் //




மற்றொரு அறிஞரான காலித் அப்துல் கரீம் இவ்வாறு கூறுகிறார்.  // இஸ்லாமியப் பெண் அவள் விரும்பும் எந்த உடையையும் அணியலாம்.  மேலும் நபியின் காலத்தில் பெண்கள் வெவேறு உடைகளை அணிந்தனர் //



சவூதி மற்றும் ஈரானில் பரவிய பர்தாவானது அரபு பெண்களின் அடிப்படை உடை, பாலைவனச் சூழலுக்கு ஏற்ற உடை.  அவர்களிடையே உள்ளாடைகள் கூட மிகத் தாமதமாகத்தான் அறிமுகமாயின.  அரபு நாடுகள் காலணி ஆதிக்க நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்று, பெட்ரோல் வளத்தால் அங்கு வந்த பணப்பெருக்கம் காரணமாக  அவர்கள் உடை கலாச்சாரத்தில் மேற்கத்திய ஊடுருவல் ஏற்பட்டது.  ஜீன்ஸ் பேண்ட் டாப் மற்றும் பனியன்கள் அணிந்து அதன் மேல் பர்தாவை அணிந்துக் கொண்டனர்.  இன்றும் கூட மேற்கண்ட நாடுகளில் வயதான பெண்கள் வெறும் பர்தாவை மட்டுமே தங்கள் உடையாக அணிகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.




தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உருது முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் துப்பட்டா என்ற வெள்ளை மேலங்கிதான் நடைமுறையில் இருந்தது.  கல்பாக்கம் முதல் காயல்பட்டிணம் வரை, திருச்சி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தமிழ் கலாச்சாரம் சார்ந்த சேலை, தாவணி போன்ற உடைகளோடு இயல்பான முறையில் தலையில் முக்காடு அணியும் வழக்கம் மட்டுமே இருந்தது.




இந் நிலையில் தமிழ்நாட்டு முஸ்லீம் இளைஞர்கள் பிழைப்பு தேடி அரபு நாட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த பெண்களின் உடை,  அடிமை மனோபாவம் மற்றும் அரபு மோகம் காரணமாக, பர்தா இங்கு ஊடுருவியது, எல்லாம் அங்கிருந்து திரும்பும்போது, தங்களின் குடும்பப் பெண்களுக்கு, மனைவிகளுக்கு இந்தப் பர்தாவை வாங்கி வரத் தொடங்கினர்.



தென் மற்றும் கொங்கு மாவட்டங்களில் மேட்டுக்குடி வர்க்க முஸ்லீம் பெண்களிடம் இந்த முறை முதலில் ஊடுருவியது.  இது 90 களின் தொடக்கத்தில் நிகழ்ந்தது.  இதனை மற்ற இஸ்லாமியப் பெண்கள் வித்தியாசமாகப் பார்த்தனர்.  உயர்குலப் பெண்களின் அடையாளமாக பர்தாவை, அணியாத முஸ்லீம் பெண்கள் கருதினர்.



ஹாஹாஹா இங்கு நான் இடை புகுகிறேன்.   நம்மாளுக சாதி மதம் வித்தியாசமில்லாம ஃபாரின் பொருளுங்கன்னா உலகமயமாகிப் போன இப்பவும் வாயப் பிளக்கிறவகளாச்சே..........இஸ்லாம் பிறந்த அரபு மண்ணின் உடையை அணிவதென்றால் எவ்வளவு புண்ணியம், பெருமை ?



ஆனால் அதே பர்தா ஸ்டைலில் இருக்கும் அரேபிய ஆண்களின் உடையை இங்கு ஆண்கள் விரும்பி அணிய முடியுமா ?  ’வெற்றிக் கொடி கட்டு’ படத்தில் வடிவேலு ஜிங்குச்சா கலரில் அரேபிய உடையணிந்து நடக்கும்போது எவ்வளவு காமெடியாக இருந்தது ?




கோமாளியாக்கி கிண்டல் பண்ணுவார்கள் என ஆண்கள் நாசூக்காக அரேபிய உடைகளைத் தவிர்த்துவிட, நம் பெண்கள் மட்டும் வழக்கம் போல ஏமாந்து பர்தாவை புனித ஆடை என ஏற்று இறுக்கத் தழுவிக் கொண்டனர்.  இந்தப் பர்தா புனிதத்தின் பின்னால் இருக்கும் வணிகச் சூழ்ச்சி என்னவென்று அடுத்த பகுதியில், பீர் முஹம்மது சொன்னதை சொல்கிறேன் !!!

தொடரும்..............

----------------------****************-------------------------****************---------------


பர்தா என்ற கருப்பு அங்கியும் தமிழ் முஸ்லீம் பெண்களும்
- எச். பீர்முஹம்மது(உயிர்மை) பகுதி 3
==============================


புனிதம் சார்ந்த பிராண்ட் வகையாக இருப்பதால் பர்தாவை உள்ளூர் வியாபாரிகள் பலர் அரபுநாட்டிலிருந்து கொள்முதல் செய்து கொள்ளை விலைக்கு விற்றனர்.  பின்னர் உள்ளூர் ஜவுளித் தயாரிப்பாளர்கள் இந்தப் ’புனித’ ரகசியத்தை அறிந்துக்கொண்டதால் உள்ளூர் தயாரிப்புகளில் இறங்கினர்.    ஒரு சேலை விற்பதை விட மிக எளிதாக அவர்களால் இங்கு பர்தாவை விற்க முடிகிறது.




பர்தா என்பது நிர்பந்தம் சார்ந்த புனிதக் குறியீடாக இருப்பதால் இதன் தொடர்ச்சியில் வெள்ளை துப்பட்டா அணியும் வழக்கமுள்ள பகுதிகளைச் சார்ந்த பெண்கள் எல்லோரும் படிப்படியாக இதற்கு மாறினர், அல்லது மாறுவதற்கு மறைமுகமாக நிர்பந்திக்கப்பட்டனர்.




இதன் தொடர்ச்சியில் பர்தா வழக்கமில்லாத தென்மாவட்டப் பெண்கள் எல்லாம் இதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.  அவர்கள் மற்றும் கடந்து போன தலைமுறை சார்ந்த பெண்கள் எல்லாம் இதனை அணிந்துக் கொள்ளாத காரணத்தால் மிகப்பெரும் பாவச் செயலை செய்ததாக பிரச்சாரம் செய்யப்பட்டது.




முல்லாக்களும், மதவெறி அமைப்புகளைச் சார்ந்த ஆண்களும் இதன் பிரதான விளம்பரதாரர்களாக மாறினர்.  ஆதிகாலத்திலேயே இந்தக் கருப்பு உடை வழக்கில் இருப்பதாக போலியான விளம்பரம் சமூக மனங்களில் புகுத்தப்பட்டது.


மேலும் வளைகுட நாடுகளில் மூளைச்சலவை செய்யப்படும் இளைஞர்களும் பர்தா சலவை செய்யப்பட்டு அவர்களின் பெண்களை இதனைக் கடைபிடிக்க வலியுறுத்தினர்.    இதன் காரணமாக தென்மாவட்டங்களில் குமரி மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்கள் எல்லாம் 90 விழுக்காடு மாறிவிட்டன.




கருப்பு நிற மேலங்கியைப் பெண்களின் நடத்தை விதியாக மாற்றிவிட்டதால், இதனை அணியாவிட்டால் மோசமான நடத்தை கொண்டவள் என்றப் பொதுபுத்தியை உருவாக்கி, அவர்களை இதனை அணியும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.




இயல்பாகவே நடத்தை சார்ந்த குணாம்சக் கொலைக்குப் பெண்கள் ஆளாகி இருப்பதால் அவர்களுக்கு இதனை அணிவதைத் தவிர வேறு வழி இல்லை.  ( நடத்தை சார்ந்த குணாம்சக் கொலை என்றால் என்ன ?  இறுதியில் சொல்கிறேன்)  மதவெறி பிடித்த ஆண்கள் சமூக வெளியில், அறிவுலகில் இதுகுறித்து விமர்சனம் வரும்போது அது பெண்ணின் விருப்பம் என்ற அப்பட்டமான பொய்யைத் திருப்பித் திருப்பி மொழிகின்றனர்.




ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அதுவும் இறுகிய வட்டத்தில் இருந்து வெளிபடுத்தும்ப்போது அதனை உண்மையாக்கி விடலாம் என்ற எண்ணமே அதற்குக் காரணம்.  இது குறித்து உண்மையான நிலவரத்தை அறிய கள ஆய்வை  நான் மேற்கொண்டேன்(பீர் முஹம்மது)  பல்வேறு நண்பர்கள், பெண்கள் மற்றும் அமைப்புகள் வழியாக இந்த ஆய்வு தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருட காலமாக நடத்தப்பட்டது.




ஆய்வில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பெண்கள் தாங்கள் குடும்ப ஆண்களின் & சமூகத்தின் நிர்பந்தம் காரணமாகத்தான் இந்த கருப்பு மேலங்கியை அணிகிறோம் என்றார்கள்.  ஒரு சில இடங்களில் நடந்த கூத்து இது.  வெள்ளைத் துப்பட்டா கலாச்சாரம் மாறி, அங்கு பர்தாவை தேர்ந்தெடுத்த மாத்திரத்தில், கூடுதலாக முகமூடி வழக்கிற்கு வந்துள்ளது.  இதற்கும் அவர்கள் புனிதப் பிரதிகளைக் மேற்கோள் காட்டி முகமூடியை அணிய வைக்கின்றனர்.  அதற்குக் ’கண்ணியம்’ என்ற முத்திரை குத்தப்படுகிறது.




இதில் மற்றொரு கொடுமை என்பது, இதைப் பெண்கள் எப்படி அமல்படுத்த வேண்டும் என்கிற விஷயத்தில் இந்திய முல்லாக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.


ஒருவர் முகத்தை முழுமையாக மறைக்க வேண்டுமென்கிறார்(ஆப்கானிஸ்தான் மாதிரி)

மற்றொருவர் தபால்பெட்டி மாதிரி கண்கள் மட்டும் தெரியலாம் என்கிறார்.

Image result for பர்தா

இன்னொருவர் மூக்கு வரை துணியால் மறைத்தால் போதும் என்கிறார்.
இந்த இடைவெளிக்குள் என்ன கவர்ச்சியைக் கண்டுபிடித்தார்கள் எனத் தெரியவில்லை.


சரி இந்தப் பர்தாவால் பெண்கள் படும் சிக்கல்கள், ஆதாயங்கள் என்னென்னவென்று அடுத்த பகுதியில் பார்ப்போம், காத்திருங்கள் ;)

தொடரும்....................



இது நான் :-      

நடத்த சார்ந்த குணாம்சக் கொலை என்றால் என்ன ?



தென் தமிழகத்தில் உண்மையிலே நடந்த சம்பவம் இது.  ஒரு இஸ்லாமியப் பெண் மிகக் கோரமாக கழுத்தறுபட்டு இறந்துக் கிடக்கிறாள்.  மதக் கொள்கைகளுக்கெதிராகவும், மதப் பெயரை அவப்படுத்தும் வகையிலும் அப் பெண் நடந்துக் கொண்டதால் அவளைக் கொன்றதாக ஓர் இஸ்லாமிய அமைப்பு பெயர் போட்டு ஒரு துண்டறிக்கை அவளருகில் கிடந்தது.   அதில் மேலும், இஸ்லாமிய பெண்கள் உடனடியாக தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் கொலைகள் தொடரும் என இருந்தது.


ஆம், அந்தப் பெண் ஒரு வேசி.  உங்களுக்குள் இப்போது  ஓர் அலட்சியம் தோன்றியிருக்கும் :(  ஆனால் அதை இப்படி பாருங்கள்.  இஸ்லாமிய ஆண் வேறெந்த மத வேசிகளுடன் கொட்டமடிக்கலாம், ஆனால் இஸ்லாமியப் பெண்ணொருத்தி வேசியாக இருந்தால், அது மதத்திற்கெதிரானது.  இந்த அமைப்பினர் ஒருவேளை இஸ்லாமிய பெண்களில் வேசியாக இருப்பவரையும், இஸ்லாமிய ஆண்களில் வேசியிடம் போகுபவரையும் கொல்வோம் என்றிருந்தால், அவர்களின் தார்மீகம் கண்டு கொஞ்சம் மகிழ்ந்திருக்கலாம் ;)




இதே போல கஷ்மீரில் ஓர் அமைப்பு பெண்கள் சிறுமிகளாக இருந்தாலும் நிச்சயம் பர்தா அணிய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  ஒரு சிலர் உதாசீனப்படுத்த அவர்கள் கையிலெடுத்தது ஆசிட்.  ஆம், சில பள்ளிச் சிறுமிகளின் முகத்தில் ஆசிட் ஊற்றினர்.



கஷ்மீரில் பாடல் & ஆடல் நிகழ்ச்சிகள் நடத்தில் ஒரு கல்லூரி மாணவிகள் குழுவை, கடுமையாக எச்சரித்து தடை செய்தது ஒரு குழு, மீறி ஆடியிருந்தால் மலாலாவைச் சுட்டது போல சுட்டிருப்பார்கள், அப் பெண்கள் புத்திசாலிகள் அத்தோடு அக்குழுவைக் கலைத்துவிட்டனர் என நினைக்கிறேன்.




இன்னும் இந்தப் புனித அங்கி பற்றி வரும், ஆனால் அடுத்த பகுதியோடு நிறைவு பெறும்  !!!

---------------********--------------********---------------*********-------------------*****



பர்தா என்ற கருப்பு அங்கியும் தமிழ் முஸ்லீம் பெண்களும்
எச். பீர் முஹம்மது.  பகுதி 4 (இறுதிப்பகுதி)
=================================

பீர் முஹம்மதுவின் கள ஆய்வில், இஸ்லாமியப்பெண்கள் இப் பர்தாவால் படும் அவதிகளைப் பற்றியும் அவருக்குச் சொல்லியிருக்கிறார்கள்.



சிக்கலான இடங்களில் நடப்பதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும், மூச்சு விடுவதற்கும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.  முகம் அதிகமாக வியர்க்கிறது.  முகத்திற்கு சூரிய ஒளி மூலம் இயல்பாக கிடைக்க வேண்டிய வைட்டமின் டி இதனால் தடைப்படுகிறது.



பர்தா வெயில் காலங்களில் தங்களை அதிகம் வாட்டுவதாகவும் தெரிவித்தார்கள்.  அதுவும் கருப்பு நிறமாக இருந்து வெப்பத்தை அதிக அளவில் உமிழ்வதால் அவர்களுக்கு இன்னும் அதிக சிரமம் ஏற்படுகிறது.  



இந்த நிலையில் இவர்கள் முகமூடி காரணமாக தங்களுக்குத் தடையாக இருக்கும் விஷயங்களை எதிர்க்கொண்டு சாகஸம் செய்துக் காட்டவேண்டுமென்றும் கூட அறிவுறத்தப்படுகின்றனர்.  குறிப்பாக முகத்திரையை விலக்காமல் உணவு உண்பது, தண்ணீர் குடிப்பது போன்ற சாகஸங்கள்.  புனிதப் பிரதியை தங்களுக்குச் சாதகமாக வளைத்து இதனைப் பெண்கள் மீது  திணித்ததில் பிற்போக்கு முல்லாக்கள் வெற்றிகண்டு விட்டார்கள்.



அதே நேரத்தில் இந்தியாவில் கணிசமாக முஸ்லீம்கள் வாழும் கேரளாவில் முகமூடி வழக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  தாங்கள் ஆண்களால் எவ்வாறு அப்பாவித்தனமாக ஏமாற்றப்படுகிறோம் என்பதை இந்தப் பெண்கள் புரிந்துக்கொள்வதே இல்லை.  பல இடங்களில் இந்த முகமூடி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.  குறிப்பாக ஆண்களின் குற்றச்செயல்களுக்கு சிறந்த பாதுகாப்பு கருவியாக இருக்கிறது.



சரி, பர்தாவை விரும்பி அணியும் இஸ்லாமியப் பெண்களுக்கு அது சில ஆதாயங்களையும் கொடுத்திருக்கிறது.



எதற்கெடுத்தாலும் அவசரமாக மட்டுமே கிளம்பிச் செல்லும் இக்கால வாழ்க்கை முறையில், பெண்களுக்கு பர்தா மிகச் சிறப்பாய் பயன்படுகிறது.  பிற பெண்களைப் போல ஆற அமர மாற்று உடை அணிந்துச் செல்லத் தேவையில்லை. போட்டிருக்கும் உடையின் மேலேயே பர்தாவைப் போட்டுக்கொண்டு போய் விடலாம்.  ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் சீருடை அணியும் மாணவிகளில் சிலர்,  சீருடை அணிய அவசியமின்றி, இரவாடைகள் மேலேயே வெறும் பர்தாவை மட்டும் அணிந்துக்கொண்டு பள்ளி கல்லூரி செல்லவும் பர்தா பயன்படுகிறது.



புனித அடையாளமாக பர்தாவை ஊன்றி விதைத்து விட்டதால், எளிய மற்றும் நடுத்தர மக்களை வர்த்தக ரீதியாக பர்தா வியாபாரிகள் நன்கு சுரண்டுகின்றனர்.



ரூபாய் 2500 முதல்  25000 வரை புர்காக்களை வர்த்தகர்கள் சந்தையில் விற்கிறார்கள்.   உச்ச கொடுமை என்னவென்றால் இந்த வணிகச் சுரண்டலைப் பற்றிய சிறிய பிரக்ஞையும் இன்றி, தங்களின் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்கு கூட, பர்தாவை வாங்கிக்கொடுத்து, அச் சிறுமிகள் அணிவதை மிகப் பெருமிதத்துடன்  பார்ப்பதுதான் :(



பெரியார் மட்டுமே எந்த மதபாகுபாடுமின்றி சமூகத்தில் பெண்களுக்கெதிரான கொடுமைகளை எதிர்த்தவர்.  இந்தக் கோஷா முறையை கடுமையாக கண்டித்து எழுதினார், பேசினார்.  ஆனால் அவரை விட்டு விலகியோ அல்லது அவருக்குப் பின்னாலோ வந்த திராவிட இயக்கத்தினர்  சிறுபான்மையினர் வாக்கிற்காக இந்தக் கோஷாவை சிறுபான்மையினர் பாதுகாப்பு அல்லது அவர்களுக்கான மத உரிமை என்கிற பெயரில் பெரிதுபடுத்தி எதிர்க்கவேயில்லை.


மிகப் பின்னடைவாக தமிழக அரசியலில் இருந்த சில இஸ்லாமிய அறிவுஜீவிகள்  & கவிஞர்கள் காலப்போக்கில் பெரிய ஆணாதிக்கவாதிகளாக மாறியதைச் சொல்லலாம்.  தொடர்ந்து கலகம் செய்து களமாட வேண்டிய அவர்கள்  ’மத விரோதி’ பட்டத்திற்கு அஞ்சி, வாளாவிருந்து விட்டனர்.  தமிழக இஸ்லாமியப்பெண்கள் சமூக விழிப்புணர்வுக்கு இருந்த  பல தடைக்கற்களுக்குள் ஒன்றாக இவர்களின் மெளனமும் ஆகிப் போனதெனலாம் :(


சிலர் ஊடகங்களில், ’பர்தா ஒருபோதும் பெண்களின் முன்னேற்றத்துக்கு தடையாய் இருந்தது இல்லை என்றும், ஈரானில் பெண்கள் பர்தா அணிந்துக்கொண்டே சினிமா உலகில் இயக்குனர்களாகக் கூட கொடிகட்டி பறக்கிறார்கள்’ என்றும் உதாரணம் காட்டுவதுண்டு.



ஈரானில் பர்தா அணிய வேண்டுமென்பது சட்டம்.  அங்கு பர்தா அணியாவிட்டால் கிரிமினல் குற்றம்.  எனவே அங்கு பெண்கள் பர்தா அணிகிறார்கள்.  இதை இப்படிச் சொன்னால் உங்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும்.  அவர்கள் பர்தா அணிகிறார்கள் அதனால் இருக்கிறார்கள்.  இங்கு சூழ்நிலை அப்படி இல்லவே இல்லை.  இங்கு இஸ்லாமியப் பெண்கள் பர்தா உடுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள்.  பர்தா அணியாமல் இருந்தால் அவர்களைத் தண்டிக்க தாலிபான்கள் இங்கு இல்லை, ஆனால் தாலிபன் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் பர்தாவை மறுத்து உலவும் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட இஸ்லாமியப் பெண்களை கண்ணியமற்றவர் என்று நிறுவ அயராது பாடுபடுகின்றனர்.




இப்படி பர்தா அணியாமல், பொதுவெளியில் வரும் இஸ்லாமியப் பெண்கள் சந்திக்கும் அவதூறுகள், சிக்கல்கள், அவமானங்கள் அதிகம்.  பெரும்பாலும் இவைகள் ஆண்களால் நிகழ்த்தப்படுபவை.  இதுவே பர்தாவை புனிதச் சின்னமாக  நிறுவி அடக்கி ஆள முயல்வது ஆண்கள்தான் என்பதன் பெருஞ்சான்று.




தற்போதைய ஊடக வளர்ச்சி காரணமாக, அரபுக் கலாச்சாரம்,  பெண்ணுரிமை குறித்து விவாதம் மிக அவசியம்.  ஆனால்  இதைப் பொதுவெளியில் விவாதிக்கப் பயந்து விஜய் டிவியில் நடக்கவிருந்த விவாதத்தை ஒளிபரப்ப விடாமல் தடுத்தார்கள்.  அவ்வாறு தடுக்கும் சக்திகளின் பின்னால் பெரும் வியாபாரிகள் இருந்தார்கள் எனச் சொல்லப்படுகிறது.



Image result for afghanistan women
தமிழ்நாட்டை  முழுவதாக ஆப்கானிஸ்தானாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.  இதனைத் தடுப்பதும், அதுகுறித்த விமர்சனங்களை, மாற்றுக்கருத்தை முன்வைப்பதும் அவசியம்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பர்தா என்பது பெண்களின் ஆறாவது கடமையாக, மிகவும் உணர்ச்சிவயப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டிருக்கும் சூழலில், வெறுமனே அடையாளங்களை வைத்து சலுகைகளைத் தேடாமல் எழுத்து வெளியில் இருப்பவர்கள், இது குறித்த அறிவைத் தேடுவதோடு, ஆழ்ந்த அவதானங்களோடும், சிந்தனையோடும் தங்கள் பார்வைகளை விரிவுபடுத்திக் கொள்வது அவசியம்.



அதுவே அவர்களுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் நல்லது.  இல்லாவிட்டால் காலம் அவர்களை அம்பலப்படுத்திவிடும்.



அப்பாடா............இதுவரை  இனமான பீர் முஹம்மதுவின் அபார கட்டுரையைப் பார்த்தோம்.



நான் விரும்பியது இதுவே.  எனக்கு இஸ்லாமியர்களிலிருந்து இதுபோன்ற துணிவான பகுத்தறிவாளர்கள் வரவே மாட்டார்களா என்றிருந்த நெடுநாளைய ஏக்கம் இப்போது முழுமையாகத் தீர்ந்தது.  



இஸ்லாமியர்களின் பெரியாராக பீர் முஹம்மது உருவாக வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமியப் பெண்கள் பீர் முஹம்மதுவின் கருத்து எனும் விதை மூலம் பெரு விருட்சமாக வளர வேண்டும்.  பெண்ணுரிமைகளை தட்டிக்கேட்டு பெறவேண்டும் இன்ஸாஹ் அல்லாஹ் !!!



நன்றி



முற்றும். 
   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!