சனி, 25 ஏப்ரல், 2015

சஞ்சாரம்

சஞ்சாரம்  - எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)
============================================
’சஞ்சாரம்’  நாவல் வெளியீட்டு நிகழ்வு, மிக எளிமையாக, ஆனால் நினைக்கும் போதெல்லாம் இனிக்கும் ஓர் அனுபவத்தைக் கொடுத்துவிட்டது.


Image result for சஞ்சாரம் நாவல்
சஞ்சாரம் எனில் ’இசை உலா’ & ’முடிவில்லா ஊர் சுற்றல்’ எனச் சிலவகைப்படும், என்று எளிய அறிமுக உரையோடு நிகழ்வை தொடங்கி வைத்தார் மனுஷ்யபுத்திரன்.  (பல புத்தக வெளியீட்டுகளை பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார், ஒரே ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டு அதை நடத்தி முடிப்பதற்குள் படாதபாடு பட்டுவிடும் நமக்கு, இவருடைய இந்த அயரா உழைப்பு, பெருவியப்பையும், அவர் மீது காதலையும் ஒருசேரத் தந்தது)முதல் நிகழ்வாக, திரு.ரவி சுப்ரமணியன், சில இலக்கிய ஆளுமைகளின் கவிதை மற்றும் சங்க காலப்பாடல்களை மிக மிக அழகாகப் பாடிக் காண்பித்தார்,  நிஜமான மார்கழி சீஸன் சபா கச்சேரியை அனுபவிப்பதற்கொப்பானதாக அமைந்து போனது அவரின் குரல்.


அடுத்து பேச வந்த டாக்டர் கே. எஸ். சுப்ரமணியன்  நூல் வெளியீடுகளில் வழக்கமாய்ப் பலரும் செய்வதைப்போல, நூலை பார்த்துப்.......பார்த்துப் பேசும் வகையில் சிறு சொற்பொழிவாற்றி கொஞ்சம் விழாவை சுணங்க வைக்க முயன்றாலும், அடுத்து பேச அழைக்கப்பட்ட பேராசிரியர் அருணன், அடடா, அடடா................!!!


ஒரு பெருமழை வானத்திரை கிழித்து கொட்டோ கொட்டென்று கொட்டி முடித்தபின் கிட்டும் பேரமைதியைப் போலிருந்தது அவர் பேசி முடித்தபோது அவை.  ஒரு நூலைப் பற்றி அறிமுகம் செய்ய அழைக்கப்படும் ஒருவர் இப்படித்தான் பேச வேண்டுமென்பேன்(இதற்கு முன் போனவருடம் இதே இடத்தில் இப்படி பாரதி கிருஷ்ணகுமார் பேசிப் பார்த்திருக்கிறேன்)


அதிலும், தன்னை ஈர்த்துவிட்ட ஒரு நாவலைப் பற்றி அதிக காதலோடு ஒருவர் விவரிக்கும்போது, நமக்கே அந்த நாவலை உடனடியாக வாங்கி வாசித்துவிட வேண்டும் என்கிற தூண்டுதலை கொண்டதாக இருக்க வேண்டும், இருந்தது.  அவர் உரையிலிருந்து சிற்சில.......


சஞ்சாரம் எனும் இந்த ராமகிருஷ்ணனின் நாவல், கரிசல் நில நாதஸ்வர கலைஞர்கள், பல நூற்றாண்டுகளாக நம்மால் அவமதிக்கப்பட்டு, புறக்கணிக்கப்படும் அவலத்தைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் அதுமட்டுமே இதிலில்லை, இதில் இன்னும் பலப் பல சமூக அவலங்களை அவர்களை வைத்து அழகாகச் சொல்லிச் செல்கிறார் எஸ்.ரா.


இதில் வரலாறு வருகிறது, வரலாற்றுப் புனைவும் வருகிறது.  அதாவது மாலிக்காபூர் தமிழ்நாட்டுப் படையெடுப்பின் போது, தன்  நாதஸ்வர இசையால் மயக்கி, அவனை அந்த ஊர்க் கோயிலை கொள்ளையிடாமல் தடுக்க வைப்பதாய் ஒரு புனைவு.


கோயில் கொள்ளை பற்றி அருணன் சொல்லிய ஓர் இடதுசாரிக்  கருத்து அபாரம்.  அந்தக் கால நம்ம அரசர்களைப் பற்றி இப்படிச் சொன்னார்.


கடவுள் மிக மிக எளிமையானவர், ஆனால் இந்த மனிதன் இருக்கிறானே அவன் ஆடம்பர , அகம்பாவமிக்கவன்.  தான் கொள்ளையிட்ட நகை, சொத்துக்களை முழுக்க கோயிலில் கொட்டி பாதுகாப்பவன்.    அதற்குத்தான் அவனுக்கு கோயிலும், கடவுளும் தேவையாயிருந்தது.  ஆக, இவனின் இந்த தந்திரம் கொள்ளையிட வரும் முஸ்லீம்களுக்குத் தெரியும், இவனுடையச் சொத்துக்கள் எல்லாம் அரண்மனையில் இருக்காது(அந்தப்புரம் வேண்டுமானால் இருக்கும்) கோயிலில்தான் இருக்கும், எனவேத்தான் அவன் கோயில்களைக் குறிவைத்துக் கொள்ளையிட்டான்.


இந்தியர்கள் வரலாற்றில் புராணங்களை மட்டுமே எழுதினர், ஆனால் இசையறிவு மிக்கவர்களாக இருந்தனர்.  முஸ்லீம்கள்தான் இந்திய வரலாற்றை முறையாகச் சொல்லினர் , மேலும் இந்தியர்கள் அளவிற்கு அவர்களுக்கு இசையறிவும் இருந்தது, அதனால் இசைக்கு மயங்கி மாலிக்காப்பூர் அந்தக் கோயில் கொள்ளையை விட்டுக்கொடுத்திருக்கலாம் என்கிற புனைவை நிஜமென்றும் ஏற்க முடிகிறது(இந்தியர்கள் எனில் ஹிந்துக்கள் எனக் கொள்ளல் அவசியம் ;) )


எஸ்.ராமகிருஷணன், நம்மாட்கள் வடக்கிலிருந்து வந்த ஷெனாயையெல்லாம் கூடக் கற்றுக்கொள்கிறார்களே, ஆனால் வடக்கத்தியர் ஏன் நாதஸ்வரத்தைக் கொண்டாடவில்லை, அட, அதைக் கற்றுக்கொள்வதில் கூட ஏன் அவர்கள் ஆர்வமே கொள்வதில்லை ? என்கிற கேள்வியை எழுப்புகிறார், நான் கேட்கிறேன்(அருணன்).........இங்கு தமிழ்நாட்டில், இதோ மார்கழி இசை விழாக்களில் ஓயாமல் பாடுகிறார்களே, அவர்களோ, அவர்களின் வாரிசுகளோ மட்டும் நாதஸ்வரத்தைக் கற்றுக்கொள்ளவா விரும்புகிறார்கள் ?  நாதஸ்வரக் கருவி ஒன்றும் உயர் வகுப்பினருக்கான இசைக் கருவி அல்லவே ?   நாதஸ்வரம், தவில், உருமிமேளமெல்லாம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டோருக்கான கருவியாயிற்றே ?  அவர்கள், அவர்களின் வாரிசுகள் மட்டுமென்ன நாதஸ்வரம் தமிழனின் மரபு என்று கற்றாக் கொண்டிருக்கிறார்கள் ???


இப்படி நாவலில் பல கிளறல்கள் வருகிறதாம்.  பேசப் பேச அருணனுக்கு மேலும் மேலும் தெம்பு கூடிக்கொண்டதே போனதே தவிர, சிறிதும் அவர் களைப்படையவில்லை.  ’இத விட்டுட்டேன், அத விட்டுட்டேன் ப்ளீஸ் அத சொல்லிட்டு முடிச்சிடறேன்’ என அவர் சொன்ன ஒவ்வொரு குறிப்புகளுமே, அபாரத் தூண்டல்களாக இருந்தன.  
அவர் உற்சாகத்தைக் கண்டு பயந்துபோன ஒளி ஓவியர் பிரபு காளிதாஸ் என் காதுக்குள், "விட்டாக்கா முழு நாவலச் சொல்லிடுவாரு போலயே ?" என்றார்.  சரியாய் அதே பொழுதில் அருணனும் எச்சரிக்கையடைந்தார்.  “சஞ்சாரம் கொடுத்த உச்ச போதையில் முழு நாவல் சம்பவங்களையும் உளறித் தொலைத்துவிடுவேன் போல, இத்துடன் முடிக்கிறேன்” என்றார்.  அவையே மயங்கிக் கிடந்தது(இவரை பல டிவி விவாதங்களில் பார்த்திருக்கிறேன், ஐசரி வேலனின் வதனம் போல் இவருக்கிருப்பதால் காமெடியர் என இவர் பேச்சைக் கேட்காமலேயே கடந்துவிடுவது வாடிக்கை.  அந்தக் கேவலமான என் கணிப்பிற்கு சம்மட்டியடி :(  இனி இவரைத் தவறவிடப் போவதில்லை, சார்ரி அருணன் சார்)


அவருடைய பேச்சு எப்படி இருந்தது என்பதற்கு, அடுத்து பேச வந்த ஜென்ராம் உரைதான் சான்று.   “இனி அடுத்து இந்த அவையில் யாரும் எதையும் பேசவே தேவையில்லை, பேசினாலும் எடுபடாது என்பதால், நான் நேரடியாக கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்றுவிடுகிறேன்”


அதன்படி, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், ஜென்ராம் இம் மூவரின் கலந்துரையாடல் தொடங்கியது.  அன்றுதான் முதன்முறையாக எஸ்.ராவின் குரலை நேரடியாகக் கேட்டேன்.  பாசாங்கில்லாமல் ஒரு பகடி சொல்லிவிட்டுச் சிரித்த அவர் உடல்மொழி கண்டு மயங்கினேன்.மனுஷ் ஆரம்பித்துவைத்தார்.  நாவலில் பக்கிரி சிந்திக்கும் ஒரு கருத்தைப் பற்றிய சந்தேகத்தை எஸ்.ராவிடம் கேட்டார்.


உச்ச மகிழ்ச்சியின் போதும் ஒருவன் ஏன் அழுதுவிடுகிறான் ?


”மனிதனுக்கு என்றுமே அதீத சந்தோஷம் பயத்தையே தருகிறது.  எல்லையில்லா மகிழ்ச்சி மேல் அவனுக்கு நம்பிக்கை இருப்பதில்லை.  அவன் வாழ்நாளில் எப்போதோ சந்தித்த அவமானம், தோல்வி, துக்கம்......இப்படி ஏதேனும் ஒன்று, அந்த உச்ச சந்தோஷத்தில் அடிக்கசப்பாய் அவனையறியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீராய் வழிந்து விடுகிறது”


இதை வாசிக்கையில் உங்கள் கண்கள் கசிந்தால், நீங்கள் மகிழ்ச்சியில் 
திளைக்கிறீர்கள் என அறிக !


”ஏன் கரிசல் நாதஸ்வரக் கலைஞர்கள் அவதியுறுகிறார்கள் ?”


தஞ்சாவூர் சுற்றியுள்ள ஊர்களில் வாழும் நாதஸ்வரக் கலைஞர்களை கம்பீரமான பட்டத்து யானைகளோடு ஒப்பிட்டோமானல் கரிசல் மண்ணில் வாழும் மரபுசார்ந்த இசைக் கலைஞர்கள் உழவு மாடுகளுக்கொப்பானவர்களெனலாம்.


வளமிக்க, தெருவுக்குத் தெரு கோயில்கள் இருக்கும் டெல்டா மாவட்டக் கலைஞர்கள் போலல்லாது, விவசாயம் செழித்தால் மட்டுமே உலை கொதிக்கக்கூடிய நிலையில்தான் கரிசல் மண் கிராமத்துக் கலைஞர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.  அவர்கள் ஆதிக்கச் சாதியில் பிறந்தவர்களில்லை. கடவுளுக்கு முன் நின்று வாசிக்கும் ஆசிகளைப் பெற்றிருந்தாலும், நிகழ்ச்சி முடிந்தபின்  கூலிக்கு அலைகழிக்கப்படுவார்கள்.  பந்தலில் ஒருசேர அமர்ந்து அவர்கள் சாப்பிட அனுமதியில்லை.


கரிசல் கிராமத்து விவசாயிகள், விவசாயம் செழிப்பாக இருக்கும்பட்சத்தில், தன் மண் சார்ந்த மரபு இசையான நாதஸ்வர, தவில், உருமிமேளச் சத்தத்தை மட்டுமே விரும்பிக் கேட்பவர்களாக இருந்தனர், இருக்கின்றனர்.  ஆனால் இன்று விவசாயத்தைச் சிறிது சிறிதாக தலைமுழுகி, ஒவ்வொரு விவசாயிகளாக நகரத்தை நோக்கி நகரும்போது, அவர்களை மட்டுமே சார்ந்திருந்த அந்த இசைக் கலைஞர்கள் எந்த வாய்ப்புகளுமில்லாமல் அந்த இசைக்கருவிகளை ஒதுக்க ஆரம்பித்தனர்.  


இன்னமும் அந்த இசைக்கருவிகளை கீழே கண்ட இடத்தில் வைப்பது போல அந்தக் கலைக்கான அவமதிப்பு என தன் மடியிலேயே தவிலை வைத்து தூங்கும் ஒரு சில கலைஞர்களுக்காக மட்டுமே அந்தக் கலை நீடிக்கிறது(இந்தியா முழுக்க எல்லாப் பேரூந்து நிலையத்திலும் படுத்துத் தூங்கிய பெருமை தனக்குண்டு என எஸ்.ரா கூறினார், அப்பேற்பட்ட ’ஊர் சுற்றி’ அவர் என நமக்குத் தெரியும்.  அப்படி ஒரு பேரூந்து நிலையத்தில், ஒரு தவில்காரர் தன் தவிலை கீழே வைப்பது அந்தக் கருவிக்கு இழுக்கு என்று தன் மடியிலேயே வைத்துக்கொண்டு தூங்கினாராம்) போட்டுக்கொள்ள கிழிசலில்லாத மாற்றுத்துணி இல்லாவிடினும் தன் நாதஸ்வரத்திற்கு பட்டாடை அணிவித்து பாதுக்காக்கும் ஏழைக் கலைஞனைப் பற்றிச் சொல்ல ஆசைப்பட்டதில் உருவானதே ’சஞ்சாரம்’.  பேச்சினிடையே நகரத்திற்கு நகரும் விவசாயிகள் பற்றியும், தன்னை வாழவைத்த சென்னை பற்றியும் பேசினார் எஸ்.ரா !


கிராமத்தில் விவசாயிகள் எல்லோரும் சுதந்திரமாக எல்லாத் தெருக்களுக்குள்ளெல்லாம் இப்போதும் போய்விட முடியாது.  அது இன்னார் தெரு, அவர்கள் தெரு, இவர்கள் தெரு எனப் பலவகைக் தெருக்கள் இருக்கும்.  ஒரு தெருவில் செருப்பு போடாமல் செல்ல நேரிடும், ஒரு தெருவில் துண்டை தலையில் கட்டாமல் செல்ல வேண்டும்...........இப்படியெல்லாம் அல்லல்கள் நகரத்தில் கிடையவே கிடையாதென்ற ஒரே ஆச்சர்யம்தான் அவனை விவசாயத்தை தலைமுழுகி துணிவாக நகரம் நோக்கிச் செல்ல வைக்கிறதெனலாம்.  நகரத்தில் விவசாயிகளுக்கு நாம் தரும் ஒரே சலுகை இந்த சுதந்திர உலா மட்டுமே 


முக்கியமாகச் சென்னையில் இந்த அவலங்கள் அறவேயில்லையென்று 
கூடச் சொல்ல முடியும்.  100 ஏக்கருக்குச் சொந்தமான ஒரு விவசாயி தன் எல்லா நிலங்களையும் மகன்களுக்கு, சகோதரர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, ஒரு குரங்கை வைத்து வித்தைக் காட்டி சம்பாதித்ததை தானறிவேன் என்றார்.


அதிலும் ஒரு விவசாயி, சென்னைக்கு கொத்தனாராக வந்தவர்.  ரசமட்டத்தை வைத்து சுவர் நேர்த்தையை சரிபார்க்கும் போதெல்லாம், பாதரசம் நிற்காமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டேயிருக்க, சென்னையின் எந்தச் சுவருமே அவருக்கு நேர்த்தியாய் இருப்பது போலவே காட்டாத எரிச்சலில், ”ஊரையே(சென்னை) தப்பாக் கட்டி வச்சிருங்காங்கடா” என்று புலம்பியதையும் கேட்டேன் என்றார்.


1987ல் சென்னை கோடம்பாக்க மேம்பாலத்தின் அடியில் தன் வாசத்தை தொடங்கிய எஸ்.ராமகிருஷ்ணனை, சென்னை வாரியணைத்துக் கொண்டதாகச் சொல்கிறார்.  ”சென்னை தோற்றவர்களுக்கான நகரம்.  நாள்தோறும் சென்னைக்கு வந்துக் கொண்டேயிருக்கிற தோல்வியாளர்கள், வந்தும் தோற்றுக்கொண்டேயிருப்பவர்கள்,  தங்களுடைய தோழனாக சென்னையை ஏற்கும்பட்சத்தில், சென்னை அவர்களை ஆசிர்வதிக்க ஆரம்பித்துவிடுகிறது.  இங்கு அடிமட்டத்தில் இருந்து மேலே ஏறியவர்கள் வென்றுவிட்டவர்கள் என்று அர்த்தமில்லை, படிக்கட்டுகள் போல தோற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரத்தில் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.


“கரிசல் கலைஞர்களை ஆதிக்கச் சாதிச் சிறுவர்கள் கூட துணிவாக அவமதிக்கிறார்கள் என்கிறீர்கள், ஆனால் உங்களின்  நாதஸ்வர வித்வான் கதாபாத்திரமொன்று, ஒரு சிறுவனை கண்டமேனிக்கு இழிவும், அவமானமும் படுத்துகிறதே, ஏன் இந்த முரண் ? மனுஷின் இந்தக் கேள்விக்கு எஸ்.ரா கொடுத்த பதில் உச்சம்.


“ஆம், கலைஞன் அப்படித்தான் இருப்பான்.  என்னதான் இழிவடைந்தாலும் எல்லோராலும் வாசித்துவிட முடியாத ஓர் இசைக்கருவி அவனுக்கு லாவகமாக வளைந்துக் கொடுக்கிறது.  அவன் வாசிப்பில் மயங்கி பலர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீரை பெருக வைக்கிறது.  அந்தக் கர்வம், தான் படும் இழிவை மறக்கடிக்கிறது, அவன் குணத்தைக் குலைக்கிறது, அதே இழிவை பிறர் மீது செலுத்த வைக்கிறது.  ஆனால் அவனால் அப்படித்தான் இருக்க முடியும், நான் சொல்வது கலைஞர்கள் பற்றி மட்டுமல்ல” என்று சொல்லி, மனுஷ்ய புத்திரனைப் பார்த்து கண்ணடித்தார்.


“போதிப்பவன் அந்தப் போதனைகள்படி நடப்பான் என எதிர்பாராதே” என்பது என் பழைய ட்வீட் ;)


அந்தக் கரிசல் கலைஞர்களின் வாழ்வாதாராமக இருந்தது, ஊரெங்கும் நிறைந்திருந்த சிறு கோயில்கள்தான்.  ஒவ்வொரு கோயிலிலும் காலை, மாலை, திருவிழாக்கள் சமயங்களில் வாசித்தலில்தான் அவர்களுக்கு ஒரு வாய் கூழ் குடிக்கவாவது உதவியது.  இன்று 70 விழுக்காடு கோயில்களிலும் ஒரே நேரத்தில் ஆட்டோமேட்டிக் மெஷினால் ஒலிக்கும் மேளம், ஜால்ரா, மணிச்சத்தம், ஒலிபெருக்கியில் வழியும் நாதஸ்வர இசை எனப் பெருகி................சிறிது சிறிதாக அக் கலைஞர்களை முழுமயாக அழித்துவிடும் அவலத்திற்கு கொண்டுச் சென்று விட்டது.


திருமணங்களில் கேரளாவிலிருந்து வரவழைக்கப்படும் செண்டை மேளச் சத்தத்தின் இடையே அவர்களின் நாதஸ்வர, தவிலை ஒலிக்கச் செய்யும் கீழ்மை, அவர்களை தம்மிசைக் கருவி மீதான பரம்பரைப் பாசத்தை அழிக்க வைக்கிறது.


இறுதியாக, ஏனோ கீழ்க்காணும் பத்தியை எஸ்.ரா சொன்னார்.


என்னால் இந்த நூல் வெளியீட்டை 10000 பேர்களுக்கு மத்தியில் வைத்தும் வெளியிட்டிருக்க முடியும், ஆனால் மனதுக்கு நெருக்கமான சிலர் முன் வெளியிட்டாலே போதுமானது என்ற நம்பிக்கையை பதிப்பாளர்கள் எனக்குத் தந்தனர்.   நான் பெற்ற வரமது.  ஓடக்காரனையும், அவன் ஓடத்தை நம்பிப் பயணிக்கும் பயணிகளாக இதை அவதானியுங்கள்.  நூல் சரிதான் என்றால், எப்படியாகிலும் அது எல்லோரையும் சென்றடைந்துவிடும்.  பயணம் முடிந்தவுடன் அவன் ஓடத்தை எந்தப் பயமுமின்றி அதைக் கரையோரத்தில் கட்டிப்போட்டுவிட்டுச் சென்றுவிடுவான், இந்த ஓடம் இலக்கைச் சரியாக சென்றடையும், நம்பிப் பயணியுங்கள் !  
              

                                                           _/\_


எனக்கிருக்கும் ஒரே ஒரு ஆறுதல், இந்த நாதஸ்வர தவில் விஷயத்தில் மட்டும் நான் கொஞ்சம் முன்னரே விழித்துக்கொண்டதுதான்.  அது நம்மிசை என்கிற கர்வம் எனக்குள் தில்லானா மோகனாம்பாளை பார்த்தோ, அனிருத்தின் வொய் திஸ் கொலைவெறி பாடல் உலகப்புகழ் பெற்றதிலோ உள்ளே புகுந்துவிட்டது. 


எங்கள் வீட்டுத் திருமணங்களில்(ஆரம்பத்துவைத்த பெருமை விருதுநகர் & சிவகாசி பணக்காரர்களையேச் சாரும்)  செண்டை மேளம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தபோது, வெளிப்படையாக விமர்சித்தேன்.  ”மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கத்தான் செய்கிறது ஆனால்  நம்ம இசை  பாரிஜாதப் பூ இல்லையா ???”


அதே போல, இரண்டு மாதங்களுக்கு முன்னர், என் வீட்டு வைபவத்துக்காக ஒரு நாதஸ்வர வித்வானைத் தேடிச் சென்று புக் செய்தேன்.  வழக்கமாக இரண்டு தவில் ஒரு நாதஸ்வரம் அல்லது இரண்டு நாதஸ்வரம் போதும் என்கிற நிகழ்ச்சிக்கு, நான் மூன்று நாதஸ்வரம், மூன்று தவில்கள், இன்னும் சிலர் வேண்டுமென்றேன், அவர் பெயரையும், அவரின் குழு பெயரையும் பெரிதாக பத்திரிக்கையில் அச்சடித்து ’சிறப்பிசை’ என்று எழுதினேன். 


அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அவ் வைபத்திற்கு உங்களெல்லோரையும் அழைக்கிறேன், வந்து நம் மண்ணின் இசையில் மூழ்கி முத்தெடுங்கள், பாட்டுக்கச்சேரி, செண்டை, பேண்ட் வாத்தியங்களெல்லாம் இருக்கவே இருக்காது :)   


நன்றி !!!


பகுதி - 2.


’சஞ்சாரம்’   நாவல் விமர்சன நிகழ்விற்காக, டிஸ்கவரி புக் பேலஸ் (சனிக்கிழமை) போயிருந்தேன்.  அரங்கு நிறைந்த கூட்டம்(May be 100 +)  உட்கார நாற்காலிகள் போதாமல் நின்றபடியும் பலர் ரசித்தனர் !.


எஸ்.ராமகிருஷ்ணன் மிகு உற்சாகத்தில் இருந்தார்.  சஞ்சாரம் நாவல் வாசித்த ஒரு சிலரைத் தவிர்த்து, பிறயெல்லோரையும் மிக ஈர்த்ததால் இருக்கலாம்.   நான் வாசித்தவகையிலும் வெகுஜனரஞ்சகமாக அருமையாகத்தான்  இருந்தது. 


சஞ்சாரம் நாவலின் மையக்கரு, மண்ணின் மங்கல இசையாக போற்றப்படும் நாதஸ்வரம் & தவில்  கலைஞர்கள கரிசல் ஊர்களில் கறிவேப்பிலையாக உபயோகித்துக் கொள்கிறார்கள்.  இசையை ஆள்பவர்களாக இருந்தாலும் சாதீய அடுக்கில் கீழ் நிலையில் இருக்கும் அவர்களுக்கு தொடர்ந்து அவமதிப்புகளும், துன்பங்களும் நிகழ்ந்துக் கொண்டேயிருக்கின்றன..........


இதை பக்கிரி, ரத்தினம் கதாபாத்திரங்களின் மூலமும், அடிக்கடி அவர்களின் பின்னோக்கிச் செல்லும் நினைவலைகள் மூலமும், சில வெகுபுனைவுக் கதைகள் மூலமும் அற்புதமாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.  ஆனால் ஒன்று, எஸ்.ரா என்றவுடன் ஆழ்ந்த இலக்கிய ஆர்வலராக வாசிக்கச் செல்பவருக்கு இந் நாவல் சற்றே ஏமாற்றம் கூடத் தரலாம், அதற்கு இக் கூட்டத்தில் சிறப்பான ஒரு விளக்கமளித்தார் எஸ்.ரா.


”அச்சடிக்கிற 300 புக் உடனடியா வித்துறுது.  எழுதுன எழுத்தாளனுக்கு பெரிய சந்தோஷம்.  உடனே அடுத்து எழுத ஆரம்பிச்சிடறான்.  ஆனா வாங்குன 300 பேர்ல 30 பேர் கூட அத படிக்கறதில்ல.  சரி அப்ப வாங்கி வச்ச மிச்ச ஆள் என்ன பண்றான் ?  அவனுக்கு மொத வேலையா அவனுடைய ஆதர்ஸ எழுத்தாளர் புக்க வாங்கிடணும், அவனுடைய இலக்கு அவ்வளவுதான், பிறகு சாவகாசமா பல வருஷம் கழிச்சி வாசிச்சிப்பான்.  


அட வாங்குன அந்த 300 பேர்ல பாதிபேர் உடனடியா படிச்சிட்டு, ’யோவ் உன் புக்கு நல்லால்ல’ன்னு உண்மையா விமர்சனம் சொன்னாப் போதும், அந்த எழுத்தாளன் அடுத்த புக்க எழுத கொஞ்சம் யோசிப்பான், போக 30 வருஷமா நவீன இலக்கியத்த வாசிக்க இருக்கிற ஆளுங்களே 1000 பேர்தான்.    சரி, இப்ப புதுசு புதுசா இளைஞர்கள் வராங்களேன்னு அந்த 1000,  2000 பேரா ஆகியிருக்குமேன்னு பாத்தா, புதுசா 1000 வந்தவுன்ன, அந்த பழைய 1000 பேர் படிக்கிறத அறவே நிறுத்திக்கிறான்.  


இந்த வீழ்ச்சிக்கு காரணம் இப்ப 30 - 40 வயசு இருக்கிற ஆளுங்கதான்.  அவங்கதான் ’இலக்கியம் உன்னதம்’ங்கிற உண்மைய அடுத்த தலைமுறைய கடத்தாதவங்க.  சுய நலமா சுகவாச வாழ்க்கை ஒண்ணே இலக்குன்னு இருந்துட்டவங்க.  இலக்கியம் தந்த இன்பத்த புது தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாம, ’நீங்களா தெரிஞ்சுக்குங்க’ன்னு அமைதி காத்தவங்க”  


அதே போல, எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நாவலில் நிறுவ விரும்பியது டெல்டா மாவட்ட  நாதஸ்வர வித்வான்களுக்கும், கரிசல் மண் வித்வான்களுக்குமிடையே ‘சன்மானம், மரியாதை, புகழ்’ வித்தியாசம் மலை -  மடு போன்றது என்பதைத்தான்.  ஆனால் ஏனோ விநாயக முருகன் டெல்டா மாவட்ட திருவாடுதுறை ராஜரத்தினம் புகழை, அவர் வாழ்க்கையை  தன் தொடக்கவுரையில் பேசிக்கொண்டிருந்தார்.


சஞ்சாரம் வாசிக்காதவர்களுக்கு வேண்டுமானால் விநாயக முருகன் பேசியது பெருமுவப்பைக் கொடுத்திருக்கலாம்.  எஸ்.ராமகிருஷ்ணன் திருவாடுதுறை ராஜரத்தினம் கதையைத்தான் சஞ்சாரத்தில் கூறியிருக்கிறார் என மகிழ்ந்து வாங்கினால் நிச்சயம் ஏமாறுவர்.  உதாரணத்திற்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கும்பகோணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெரியவர் ஒருவர், விநாயகமுருகனைப் பின்பற்றி,  ”ராஜரத்தினம் எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டார், வெற்றிலை போட்டார்” என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்( நம்ம ஊர்க்காரரா இருந்துட்டு நீ அதை மறக்கலாமா, இத விட்டுட்டியே என்று விநாயகமுருகனிடம் உரிமையாக கடிந்தெல்லாம் கொண்டார்)


நல்லவேளையாக தன் ஏற்புரையில் இதை கடுமையாக மறுத்தார் எஸ்.ரா.  ”தவறியும் கூட ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம் பற்றிய விவரணைகள் என் நாவலில் இடம் பெற்றுவிடக் கூடாது எனும் எச்சரிக்கையோடுதான் இந் நாவலை எழுதினேன், ஆனாலும் நாதஸ்வரம் என்றவுடனே நமக்கு இந்த இரு மேதைகள் மட்டுமே  நினைவுக்கு வருகின்றனர், இதைக்கூட கரிசல் மண் இசை மேதைகளின் துரதிர்ஷடம் எனலாம்” என்றார்.  விநாயக முருகனுக்கு அடுத்து பேசிய தீபா, காருக்குறிச்சி அருணாசலமும் என் தந்தையும் என புராணம் பாடியதால் வந்த வினை.  இருந்தும் தீபாவின் சரளமான உரை இனிமையாக இருந்தது :)


சரி, சஞ்சாரம் பற்றிய என் குறுவிமர்சனம்(பத்து பத்தி இருக்கும்) அது அடுத்து................ _/\_இறுதிப் பகுதிசஞ்சாரம்  நாவல் பற்றிய என் குறு விமர்சனம் !!!


சஞ்சாரம் சாமான்ய வாசகர்களையும் வசீகரிக்கும் நாவல்.  மிக எளிமையான வாக்கியங்கள்.  ’படிமங்களின் அடியாழ விழுமியங்கள் தொழும்  உள்ளொளி எதார்த்த தரிசனம்’ என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் இல்லை.   


மதுரையைத் தாண்டிய தென் தமிழக கரிசல் பூமியில், விவசாயிகளைச் சார்ந்திருந்த  நம் பாரம்பரீய இசைச் சமூகம், விவசாயி & விவசாயத்தின் வீழ்ச்சியால் எப்படிச் சிதறுண்டு, அலைக்கழிக்கப்படுகிறது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.


ஆதிக்கச் சாதியினரால் இன்றும், கலைஞர்களாய் இருந்தும் ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ என்பதால், எவ்வாறெல்லாம் அவர்களால் கட்டுப்படுத்தப் படுகிறார்கள், இன்னல் படுத்தப்படுகிறார்கள், இழிவு படுத்தப்படுகிறார்கள்............என்பதையும் புனைவாக சொல்லியிருக்கிறார்.  
நாதஸ்வர இசை ஏன் தமிழ் மக்களை ஆண்டாண்டுகாலமாக மயக்கி வைத்திருந்தது, அன்னியர்களையும் எப்படியெல்லாம் வசீகரித்தது என்று பல கிளைக்கதைகள் மூலம் சொல்கிறார்.  


மாலிக்காபூர் நாதஸ்வர இசைக்கு அடிமையாகி கோயில் கொள்ளையை விட்டுக்கொடுத்தது பற்றி ஓர் அத்தியாயம் வருகிறது.   அக்கதை ஒரு வெகுபுனைவு(ஃபேண்டஸி) ரகம் !


மாலிக்காபூர் அந்த கிராமத்துக் கோயிலை கொள்ளயடிக்க வந்த சமயம் பார்த்து கோயிலுக்குள்ளிலிருந்து மனதைப் பிழியும் இசை   வழிந்துக்கொண்டிருக்கிறது. ’

”இதென்ன இந்த இசை இப்படி என்னை உருக்குகிறதே ?  எந்த இசைக்கருவியிலிருந்து இப்படி ஒரு சங்கீதம் ?  ஆளேயில்லாத ஊரில் யாருக்க்காக இந்த இசை, யார் இதை வாசிப்பது, கோயில் கதவை உடையுங்கள், உள்ளே சென்று பார்ப்போம்”


அதற்குள் அந்த இசையை இசைப்பவர் பற்றிய விவரங்களை மாலிக்காபூரின் துணைத் தளபதிகள் சொல்லிவிடுகிறார்கள்.  அவர் இக்கோயிலில் இருக்கும் கடவுளுக்காக வாசிக்கிறாரம்,  அவர் வாசிப்பது அக் கடவுளுக்கு கேட்குமாம், ஏன் கோயிலிலுள்ள கற்சிலை கூட எழுந்தாடுமாம்.     


அதற்குள் குதிரை நுழையுமளவு அக்கோயிலின் சுற்றுச்சுவர் 
உடைக்கப்பட்டு உள்ளே மெய்க்காப்பாளர்களுடன் நுழைகிறான் மாலிக்காபூர்.  அங்கு கண்களை மூடி மெய்மறந்து கல் நாதஸ்வரத்தை இசைத்துக் கொண்டிருக்கிறார் லட்சய்யா. கோயிலின் பாரம்பரீய மாபெரும் நாதஸ்வர இசைக்கலைஞர்.


எள்ளலாக அவரைப் பார்த்து மாலிக்காபூர், “ அதென்ன நீ வாசித்தால் உன் கல் கடவுள் ரசித்துக் கேட்குமாமே,  சிற்பமெல்லாம் எழுந்தாடுமாம் ?  எங்கே இந்தக் கல் யானைக் காதை அசைத்துக் காட்டு பார்ப்போம்” என்கிறான். 


”நான் இசைத்து இந்த கல் யானைச்சிற்பம் காதுகளை அசைத்துவிட்டால் என் ஊர்க் கோயிலை கொள்ளையடிக்காமல் விட்டுவிடுவாயா ?” லட்சைய்யா அரிய கலைஞனுக்கேயுரிய துணிவுடன் டிமாண்ட் செய்கிறார். சம்மதிக்கிறான் மாலிக்காபூர்.


லட்சைய்யா, தன் கல் நாதஸ்வரத்தை இசைக்கத் தொடங்க, கேட்ட மாலிக்காபூர் & அவர் படையினர் அனைவருக்கும் அதீத இன்பத்தில், மயக்கமே வருகிறது.  இசை உச்சம் போகும் வேளையில் அந்தக் கோயிலின் கல் யானையின் காது அசைகிறது.  மாலிக்காபூரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.  இது கல் யானையே அல்ல, ஏதோ மாந்தீரிக தந்திரம் என்று அந்த யானையின் காதை ஓங்கி வாளால் வெட்டுகிறான்.  வாள்தான் நெளிகிறது.  இன்னும் சிலர் சேர்ந்து அந்த யானையின் ஒற்றைக் காதைச் சிதைக்கிறார்கள். ஆம் கல் யானைதன்.  இன்றும் அந்த ஒற்றைக் காது கொண்ட சிற்பத்தை அரட்டாணம் கைலாயநாதர் கோயிலில் காணலாமாம்.


இப்படிப்பட்ட ஓர் அதிசய இசை மேதையை தன் டெல்லிச் சக்கரவர்த்திக்கு(அலாவுதீன் கில்ஜி) அறிமுகப்படுத்த ஆசைப்பட்டு அவரை கையோடு அழைத்துச் செல்கிறான் மாலிக்காபூர்(வாக்கு தவறாமல் அந்தக் கோயிலையும் அவன் கொள்ளையிடவில்லை)  


அங்கு, தன் கல் நாதஸ்வர  இசையால் அரசவையையே சொக்க வைக்கிறார் லட்சைய்யா.  நாதஸ்வர இசையைக் கேட்டபின், அதுவரை வாசித்த பாரம்பரிய இசைக்கருவிகளையெல்லாம் புறக்கணிக்கிறார் சக்கரவர்த்தி.


ஒருமுறை அரசவையில் லட்சய்யா வாசிக்கும் வேளையில், மாலிக்காபூர் எலுமிச்சை வாசனை பரவுவதாக உணர்கிறான்.  லட்சய்யா வாசித்தபின் அங்கிருந்து போனவுடன், அந்த வாசனை இல்லை.  இவன் இசைக்கலைஞனா இல்லை ஏதும் செப்படி வித்தைக்காரனா ?  ஹக்கீமை அழைத்து இது சாத்தியமா எனக் கேட்கிறான்.


“ஆம் ஹுஸூர், இது பிரிவின் வாசனை, அவன் மக்களை விட்டுப் பிரித்து நாம் இங்கு அவனை அழைத்து வந்துவிட்டதால் அந்த வேதனையை இப்படி எலுமிச்சை வாசனையாய் பரவ விடுகிறான்.  அபூர்வக் கலைஞர்களுக்கு இதெல்லாம் சாத்தியமே, அவனை திரும்ப அனுப்பி விடுவோம்”


மயக்கும் இசை பொழியும் லட்சைய்யாவை மாலிக்காபூருக்கு திரும்ப அனுப்ப மனம் வரவில்லை.  ஆனால் அதன்பின் லட்சய்யா வாசித்தபொழுதெல்லாம் அந்த எலுமிச்சை நறுமணம் தவறாது வீசியது.  அது மனத்தை இன்னும் கிறுக்காக்கியது.  எப்படி தெரியுமா ?   “நான் ஏன் சக்கரவர்த்தியை கொன்று இந்த டெல்லி ராஜ்ஜியத்தை ஆளக்கூடாது ? ” என்று சிந்திக்குமளவு !   


ஏனோ அதன்பின் ஒவ்வொரு தீமையாக நடைபெற ஆரம்பிக்கிறது.  தொடர்ந்து அந்த நாதஸ்வர இசையைக் கேட்க கேட்க மாலிக்காபூருக்கு பித்து அதிகரித்து, ஒரு கட்டத்தில் மன்னரையே கொல்கிறான்.  மன்னனின் விசுவாசிகளால் சில நாட்களில் மாலிக்காபூரும் கொல்லப்படுகிறான்.  ஆனால் கொல்லப்படும் சில மணி நேரம் முன்னர்தான், ராஜ்ஜிய அழிவின் பிரதான காரணமே ’இந்தச் சைத்தான் லட்சையாவும் அவருடைய நாதஸ்வர இசைதான்’ என்று சொல்கிறான்.  


“இந்த இசையில் ஏதோ வசியம் இருக்கிறது. சைத்தான் இருக்கிறது.  இனி ஒருபோதும் (வடக்கு) இத் தேசத்தில் நாதஸ்வரம் இசைக்கவே படக்கூடாது” என உத்தரவிடுகிறான்.  லட்சைய்யாவையும் நாடு கடத்தச் சொல்கிறான்.  


ஆனால் கடத்துபவர்கள் அவரைக் கொன்று, லட்சைய்யாவின் உடலையும், அந்தக் கல் நாதஸ்வரத்தையும் யமுனை ஆற்றில் வீசி விடுவதாக முடிக்கிறார் ஆசிரியர்.  நாதஸ்வர இசை வட இந்தியாவில் இல்லாமல் போனதற்கு இது ஒரு காரணமாக இருக்கக் கூடும் என்பது இக் கதையின் நீதி :)


ஒருகாலத்தில் மிக வளமாக இருந்த கரிசல் பூமி, இன்று ஏன் இப்படி வாடி வதங்கிக் கிடக்கிறது என்பதற்கும் அத்துடன் வேம்பு எப்படி கரிசல் காட்டில் எல்லாவிடங்களிலும் தழைத்தோங்கி செழித்து வளர்கிறதென்பதற்கும் ’64 ஊரோடிப் பறவைகள்’ என்று ஓர் அத்தியாயத்தில்(வெகுபுனைவு கதைதான்....)சொல்கிறார்.  கரிசல் ஊர்களின் மேல் பறக்கும்போது அவை கேட்கும் கேள்வியிதுதானாம்.  “ஊராரே ஊராரே மண் வேணுமா.....பொன் வேணுமா ?”


ஒருவேளைச் சாப்பாட்டுக்கே பெருங் கேள்விக்குறியாய், வானம் பார்த்த பூமியாய் இருந்தபோது, அம் மக்கள் பொன்னை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் ?  மண் வேண்டுமென அவை தங்கள் ஊரைக் கடக்கும் போது இறைஞ்சி வேண்டுகிறார்கள்.  அப்பறவைகள் எந்த ஊரில் இறங்கிச் செல்கிறதோ, அப்பறவைகள் அவ்வூரைக் கடந்த மாத்திரத்தில் மழை பொழியுமாம்.


வருடத்தின் ஒரு சில நாட்களில் மட்டுமே வருகை தரும் அத் தெய்வாம்சப் பறவைகளினால் கரிசல் பூமியே ஒரு காலத்தில் செழிப்புற இருந்ததாம்.  குளம் குட்டைகள் வற்றும்போதெல்லாம் தவறாமல் வந்துவிடும் அந்த ஊரோடிப்பறவைகளின் தீனி, கரிசல் விவசாயிகள் தரும் ஒரே ஒரு நெல்மணிதானாம்.


மனிதனுக்கு துன்பமே என்னவென்று தெரியாமல் மறந்து போனால் என்ன செய்வான் தெரியுமா ???


ஊரோடிப்பறவைகளின் கருணையால் தொடர்ந்து பல வருடங்களாக மழை கொட்டோ கொட்டோவெனக் கொட்டி, எல்லா நீர் நிலைகளிலும் நீர் வற்றாமல் செழிப்பாயிருக்கத் தொடங்க, ஒவ்வொரு ஊரின் மேலும் பறந்துக் கொண்டே ஊரோடிப் பறவைகள், ’ஊராரே, மண் வேணுமா, பொன் வேணுமா எனக் கேட்க, மனிதர்கள் ”என்னத்துக்கு மண் ? அதான் இன்னும் பல வருஷத்துக்கு தண்ணி கிடக்கே ?” என ஒவ்வொரு ஊரிலும் ”பொன் கொடு” என வானத்தைப் பார்த்துக் கத்தியிருக்கின்றனர். 


ஆக்சுவலா என்ன ரூல்ஸ்ன்னா மண் கேட்டா மழை, பொன் கேட்டா நோ சர்வீஸ்.  அதே நேரத்துல எல்லாப் பயகளும் தப்பாம பொன் கேட்க, ஊரோடிப் பறவைகள் பசியால் வாட ஆரம்பித்துவிட்டன.  சில வருடங்களாகப் பறந்து பறந்து படிப்படியாக பசியால சாக ஆரம்பிக்கின்றன(இனி அப்படியே கொஞ்சம் கரிசல் ஸ்லாங்குக்கு போயிடலாம்)


ஆனா அதப்பத்தியெல்லாம் எந்தக் கவலையும் எவனுக்குமில்ல.  சில வருஷங்கள் கழிச்சித்தான், “ஆமால்ல, அப்படி சில பறவைங்க வருமே, இப்பம் ஏன் வர்றதேயில்ல ?”ன்னு சிந்திச்சான் பாருங்க.  ஏன் சிந்திச்சான் ?  வெக்கை சில வருஷமா கூடிக்கிட்டே வருது, குளம் குட்டை ஏரியெல்லாம் வத்திக்கிடே போகுது.


ஒரு சொட்டு மழையில்லாமயும் இருந்த தானிய சேமிப்புல அந்த வருஷம் கடந்துட்டான்.  அடுத்த வருஷமும் மழையில்ல, இருந்த கரையான் புத்து, எலி வளைல கெடந்த தானியத்த தின்னு, அந்த வருஷத்தையும் கடத்திட்டான்.  ஆனா அந்த மூணாம் வருஷமும் மழையில்லாமப் போச்சு பாருங்க, அப்ப பொலம்ப ஆரம்பிக்கிறான்.  சாமிகிட்ட வேண்டுதல் வைக்கிறான், பொங்க வைக்கிறான், கடா வெட்டுறான், ஊரோடிப் பறவைகள எங்க ஊருக்கு அனுப்பி வைன்னு !!!


63 பறவைங்க செத்து, கடைசியா ஒரே ஒரு பறவை மட்டும் உசுரோட இருக்கு.  தற்செயலா கரிசக் காட்டு மேல பறக்குது.  வழக்கமா பாடுற பாட்டக் கூடப் பாட அதுக்கு தெம்பில்ல.  ”ஊரோடிப்பறவையே மண்ணு கொடு மண்ணக் கொடு”ன்னு கெஞ்சறாய்ங்க.  இறங்கி துவண்டுக் கிடந்த அந்தப் பறவை சொல்லுது......”என்கிட்ட இருக்கிறது ஒரு சொட்டுத் கண்ணிதான் வேணுமா இல்ல போகட்டா ?”


’இந்தா இந்தச் சாகக் கிடக்கிற வேப்பஞ்செடிக்கு அந்த ஒரு சொட்டக் குடு’ன்னு ஒரு கிழவன் முன்னுக்கு வர, அந்த ஒரு சொட்டால வேப்பஞ்செடி துளிர்த்து, ஓங்கி சில வாரங்கள்லயே வளர ஆரம்பிக்குது.  அது வளர வளர மழை மீண்டும் பொழியத் துவங்குது.  கரிசல் மண் பூரா அந்த வேம்பால, வேம்பு இல்லாத கரிச ஊர்க் கிடையாதுன்ற அளவுக்கு பரவுது.  ஆனா அதுக்கப்புறமா......அந்தப் பறவைங்க வரத்து அடியோட நின்னுப் போச்சாம்.  அதனாலத்தான் கரிசல் மண்ல இப்பவும் விவசாயம் ஒங்கிச் செழிக்க முடியாம, வெக்கையான பூமியாவே இருக்காமாம் !!!


இப்படி நம்ம தாத்தா பேரப்பயகள மடியில போட்டுகிட்டு கதைகளச் சொல்றாப்பல சில கதைகள் சொல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.  அந்த பேரைங்களா இருந்து வாசிச்சா இந்தக் கதை உங்களை சொக்க வைக்கலாம்.  கொஞ்சம் இளந்தாரியா வளந்த பயகளா வாசிச்சா.........’அடப்போய்யா பெர்சு, நீயும் ஒன் ரீலும்’ன்னு கலாய்க்கவும் வைக்கலாம்.  எஸ்.ரா அந்தப் பெயரர்களுக்காகத்தான் இந்தக் கதைகளைச் சொல்ல விரும்பியதாகச் சொல்கிறார்.


சரி வெகுபுனைவ விட்டுட்டு புனைவுக்குள்ள போவோம் :)


நாவலின் கதாநாயகர்கள், ஆதிச்சச் சாதிவெறி பிடித்த குடிகாரன் ஒருவனால் தாக்கப்படுகிறார்கள்.  எதற்கு ?  வருடத்திற்கொருமுறை குலதெய்வச் சாமி கும்பிட வரும் பங்காளிகள் குடும்பங்கள் இடையே, வேட்டைக்குச் செல்லும் சாமிக்கு யார் வில் தருவது ? என்பதில் தகராறு.  ’என் வில்லத்தான் சாமி எடுத்துக்கிட்டு போகணும்’ன்னு இரு தரப்பும் மல்லுக் கட்டிக்கிட்டுக் கெடக்க, வாங்கின காசுக்கு நாம வந்த வேலையப் பாப்போம்ன்னு பக்கிரியும், ரத்தினமும் நாதஸ்வரத்த ஊத ஆரம்பிக்கிறாய்ங்க.


அதென்னமோ இந்தமாதிரி திருவிழா, சொந்தபந்தம், நண்பர்களா ஒண்ணு கூடிட்டா எல்லா பயகளுக்கும் அத்துமீறிடணும், தன் பலத்தக் காட்டிடணும்னு தோணுது.  அதேபோல திருவிழான்னவுன்ன அதுல கலந்துக்க வர்ற பொண்ணுகளுக்கும் அழகு ஒரு மடங்கு அதிகமா கூடிடுது.  அந்தக் குடிகாரனுக்கு தன் வீரத்தக் காட்ட இவிங்கள விட வேறெந்த இளிச்சவாய்ப் பயக கெடைப்பாய்ங்க ?  பளிர்ன்னு ரத்தினம் பிடறில அறையிறான்.  ”சாமிக்கு எவன் வில்லக் கொடுப்பான்னே தெரில, நீ அதுக்குள்ள வாய்ல தூக்கிவச்சி ஊத ஆரம்பிச்சிட்ட, நிறுத்துங்கடா தாயோளி மவனுகளா” இதுதான் நாவலோட தொடக்கப் பத்தியே !ரத்தினம் கொஞ்சம் முதிர்ந்த ஆளுன்றதால, குடிகாரச் சாதி கொழுப்பெடுத்த பய, அப்படித்தான்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு   நிறுத்திடறாரு. ஆனா பக்கிரி புது ஜெனரேஷன்.  “அண்ணே ஒங்க பிரச்சினை எங்களுக்கெப்படிண்ணே தெரியும், சொன்னாப் போதாதாண்ணே ?  கையெல்லாம் நீட்டிக்கிட்டு” என்றுவிடுகிறான்.


”ஒக்காலி எதுத்து பேசுற அளவுக்கு ஒங்களுக்கெல்லாம் எவண்டா தைரியம் கொடுத்தது, அவன் வாங்குன அப்பு பத்தாதா ?” 


“ கை நீட்டுற பழக்கமெல்லாம் என்கிட்ட வச்சிக்கிராதீங்க ?”என்று பக்கிரி சொல்லி முடிக்குமுன்னரே பக்கிரி கன்னத்தில் பளீரென அறை விழுகிறது.   சராமாரி அடிக்கவும் ஆரம்பிக்கிறான் அந்தக் குடிகாரன்.  சாதித் திமிர் அது.  ஊரே அவிங்க ஆளுகதான்.  தடுத்துவிடுவாகன்னு பாத்தா, அந்தக் குடிகாரப் பயலோடச் சேந்து, எத்து எக்ஸ்ட்ராவாக விழுகிறது பக்கிரிக்கு.


“எந்தூருடா நீங்க, வந்தமா வாசிச்சமான்னு கெடக்காம என்னடா எதுத்தெதுத்து பேச்சு வேண்டி கெடக்கு, குண்டி கொழுப்பு கூடிப்போச்சா ? போங்கடா”  இது அந்தக் குடிகாரனை அடக்கிவிட்டு இவர்களைப் பார்த்துக் கேட்ட பெரிசு.  


பக்கிரியின் விதி, இந்த ஒடுக்குமுறையை ஏற்க குணம் தடுத்துக்கொண்டே  இருக்கிறது.  அடங்க மறு, அத்துமீறு என அவன் உள்மனசு இறைந்துக்கொண்டேயிருக்க, திடுமென அவனை அடித்த அந்தக் குடிகாரன் மூக்கில் விடுகிறான் ஒரு குத்து.  அது கைதவறி குடிகாரன் உதட்டில் பட்டு, கொட கொடவென் ரத்தம் கொட்ட. ரத்தத்தைக் கண்டதும் குடிகாரனின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு மொத்தமும் கொதித்து, பக்கிரியைக் கட்டிப்பிடித்துச் சூழ்ந்து தாக்க ஆரம்பிக்கிறார்கள்.


ரத்தினம் எல்லார்க் கால்களிலும் விழுந்து மன்றாடிய பின்னர், “எங்க வந்து யார்கிட்ட ராங்கித்தனம் பண்றீங்க  நாயனம் வாசிக்கிற ஈனச்சாதிப் பயபுள்ளைகளா ? இவனுங்க ரெண்டு பேரையும் அந்த மரத்துல கட்டிப்போடுங்கடா” என்று ஒட்டுமொத்தக் கூட்டமும் முடிவெடுக்கிறது.   


ஒருகட்டத்தில் பங்காளிச் சண்டை சமாதானமாகி, ’குலசாமி’ ஒரு பங்காளி குடும்பம் கொடுத்த வில்லுடன் வேட்டைக்கு கிளம்பிவிடுகிறது.   சாமி வேட்டைக்கு போகப்போகும் நேரம் மங்கள இசை வாசிக்க வந்த நாயனக்காரர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.  உஷாராய் இதெல்லாம் நடக்குமெனக் கணித்த தவில்காரர்கள் பழனி & தண்டபாணி எப்போதோ அந்த ஊரைவிட்டு நழுவி ஓடியிருந்தார்கள்.  


“மயிராண்டிங்க இவனுங்க வாசிக்கலன்னா சாமி கெளம்பாதாக்கும், அந்த 
டேப்ரெக்கார்டர்ல நாதஸ்வர மியூசிக்க போடச் சொல்லுறா” என்கிறான் வில் கொடுத்த பங்காளி.


அந்த ஊர்ச் சிறுவர்கள் கூட இவர்களை நாம் அடிக்கலாம் எனத் துணிவதைக் 
காட்டும்போதுதான் கிராமத்து சாதிவன்மம் நம் கண்களுக்குப் புலப்படுகிறது.  தென்னங்குச்சியால் ஒரு சிறுவன் அவர்களை அடிக்கவும் செய்கிறான்.


சோறில்லை, தண்ணியில்லை.  கட்டிப்போட்டு அடிவாங்கிய இருவரும் துவண்டுச் சரிகின்றனர்.  முட்டிக்கொண்டு வரும் சிறுநீர் கழிக்கவாவது ’கட்டவுத்து விடுங்கய்யா’ என்று பூசாரியைப் பார்த்து கேட்கிறார் ரத்தினம்.  


எல்லா ஆட்டங்களும் ஓய்ந்து பந்தலின் கீழே பலரும் அசந்து உறங்கிவிட்டிருக்க, அந்தக் கும்மிருட்டில் வந்த கோயில் பூசாரி, “அவுத்துவிடுறேன், இனி இந்த ஊர் பக்கமே வந்துறக்கூடாதுடா, கமுக்கமா ஓடிருங்க” என்கிறார்.


பக்கிரிக்கு நிகழ்ந்திருந்த அவமானம், பலர் மிதித்ததினால் கிட்டிய வலி, பசி, தாகம், இழந்த வருமானம்..... எல்லாம் வக்கிரமாக உருமாறி, தப்பித்துப் போய்க்கொண்டிருக்கும் போதே, ரகசியமாக மீண்டும் வந்து பந்தலில் தீ வைத்துவிட்டு போக வைக்கிறது.  இவர்களிருவரையும் அடியோடு மறந்துப் போயிருந்த ஊர்மக்கள் தங்களுக்குள் எவனோதான் தீ வைத்துவிட்டான் என உள்ளூர்க் கலவரம் வெடிக்க பல உயிர்பலிகள் விழுகின்றன.


விசாரிக்க வரும் போலிஸ்க்கு பூசாரி கொடுக்கும் தகவலால், தீ வைத்தது பக்கிரி & ரத்தினம்தான் என தேட ஆரம்பிக்கின்றனர்.  இந்தப் புள்ளியில்தான் சஞ்சாரம் தொடங்குகிறது.  அதாவது ஊர்ச் சுற்றல்.  ஒவ்வொரு ஊராக மாறி மாறி பயணிக்கிறது இருவரின் உடல்களும், நினைவுகளும்.  தலைப்புக்கேற்ற அத்துணை ஒய்யார நடை, பத்தியமைப்புகள்.


”இந்த நாவலை வாசிப்பதன் மூலம் உங்களால் சற்றே அக் கலைஞர்கள் மேல் அன்புகாட்ட முடியுமென்றாலே இந் நாவல் பெருவெற்றியென நான் கருதிக்கொள்வேன்  அன்றி இந்த நாவல் லட்சங்களில் விற்க வேண்டுமென்றோ, விருதுகள் குவிக்க வேண்டுமென்பதோ என் உள்ளக்கிடக்கை அல்ல” என்றார் எஸ்.ரா.


ஆம், ஓர் எழுத்தாளனென்பவன் அவன் சமூகம் தொலைத்துக் கொண்டிருக்கும் சொர்க்கங்கள் பற்றிய எச்சரிக்கையையும், காப்பாற்றிக் காத்துக்கொள்ளக்கூடிய போதனைகளையும், அவர்களுக்குச் சொல்லத்தான் வேண்டும், அவன்தான் சமூகம் போற்றும் இலக்கியவாதி.  

Image result for s.ramakrishnan
Yes, ராமகிருஷ்ணன் என்னளவில்  நம் சமூகம் போற்றவேண்டிய இலக்கியவாதியே !!!


சஞ்சாரம் (உயிர்மை பதிப்பகம்)
ஆசிரியர் - எஸ்.ராமகிருஷ்ணன்,
முதல் பதிப்பு டிசம்பர் 2014.அ
விலை ரூ.370/-       


இதுவரை இப்பதிவில் சஞ்சரித்தமைக்கு என் உளமார்ந்த நன்றி !!!


கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகள், மேலே நான் கொடுத்திருக்கும் பத்திகளின் ஃபேஸ்புக் வடிவங்கள்.  மறுமொழி & விவாதங்களுடன் கீழே நிரடி அவ் வாசிப்பின்பம் பெறலாம், நன்றி ;) 

http://t.co/EEDj3nkxPb

http://t.co/TOYYeOy3kz

http://t.co/xKpzfuuvBU


                                                              - முற்றும் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக