என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ?
நெல்சன் ஷேவியர் என்னை விட வேகமிக்கவர். நேற்றே எழுத ஆரம்பித்த இக் கட்டூரையை சாவகாசமாக இன்றைய வெள்ளிக்கு உபயோகிக்கலாம் என்றிருந்த என் சோம்பலுக்கு சம்மட்டி அடி. அழகாக இன்றைய சன் செய்தி விவாததிற்கு பயன்படுத்திக் கொண்டார் !!! சுதேசி விதேசி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் சுதேசி எனில் உள் நாட்டு ரசிகர் என்றும் விதேசி வெளி நாட்டு(பொருட்களின்) ரசிகர் என்றும் எளிதில் அவதானிக்கலாம். நம் நாடு, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில், பெருமளவு அன்னியப் பொருட்களின் மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. வெளிநாட்டு உடைகள், வெளிநாட்டு தின்பண்டங்கள், அலங்கார ஆபரண ஆடம்பர அணிகலன்கள், என மக்கள் ஃபாரின் பொருள் எனில் அதை உசத்தியாகவும், தரமாகவும் கருதிக் கொண்டிருந்தார்கள். உள் நாட்டுப் பொருள்களை ஏளனம் செய்தும், அதை உதாசீனப்படுத்தியும் அறவே புறக்கணித்தனர். விளைவு, வெள்ளைக்காரன் ஏற்கனவே சுரண்டிய இந்தியப் பொதுச் சொத்துக்கள் போதாதென, எல்லா இந்தியர்களிடமிருந்தும் மறைமுகமாக கொள்ளையடித்தான். நெல் & கோதுமை விளைந்த மண்ணெல்லாம் பரு...