ஊழல் நம் பிறப்புரிமை :(

என் லேப்டாப்பின் வலது மூலையில் சில நாட்களாக, இப்படி ஒரு ’குழுமம்’ இயங்குவதாகக் காட்டிக்கொண்டே இருந்தது.  என்னுடைய உற்ற தோழர்கள் வேறு அதன் முகப்பு படங்களில் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தனர். 

ஏதோ ஒர் உறுத்தல், என்னை அந்தக் குழுமத்தில் இணைய விடாமல் தடுத்துக் கொண்டேயிருந்தது. 
இதோ கீழேயுள்ள இந்தக் குழுமம்தான் அது.  நீங்களும் இதில் உறுப்பினராய் இருக்கக்கூடும், வாழ்த்துகள் :)))

// நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்.
4,387 members Closed Group

அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தனது சொந்த நலனுக்காகவோ தனது உற்றார் உறவினர்களின் நலனுக்காக துளி அளவு கூட ஆதாயத்தை அடைந்து இருந்தாலும் அது ஊழலே, அது இந்த நாட்டின் மிகப்பெரிய கேடாக உள்ளது. அப்படிப்பட்ட ஊழல்வாதிகளை தோலுரித்து காட்டுவோம். வாருங்கள் நண்பர்களே //

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  இந்த ஊழல் பற்றி ஒரு சுவையான விவாதம் நடந்தது என் நண்பரின் அலுவலகத்தில் !  அது, ’யாரால் ஊழல் இந் நாட்டில் பெருகியது ?’  மூன்று நண்பர்கள் அவரவர்களாக ஆளுக்கொரு தலைப்பை எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தனர்.

முதலாமவர், ’அரசியல்வாதிகளால்தான் இந்தியா சீரழிந்தது என ஆரம்பித்தார்.  எதற்கெடுத்தாலும் லஞ்சம், கமிஷன், மாமன் மச்சானுக்கு டெண்டர், வாரிசு அரசியல், ஊழல், ஆக்கிரமிப்பு......சீச்சீ, இவனுங்கள கில்லட்டின்ல போட்டு வெட்னா போதும், இந்தியாதான் உலகின் சிறந்த வல்லரசு’ என்றார் !  


இரண்டாமவர், ‘தப்பு, தப்பு இந்த அயோக்கிய அரசு அதிகாரிகள், ஊழியர்களால்தான் இவ்வளவு அக்கப்போரே’ என ஆரம்பித்தார்.  சுதந்திரமடைந்த வேளையில், அப்போது வெள்ளையர் ஆட்சியில் அரசு வேலைகளில் இருந்த முற்பட்ட/ஆதிக்கச் சாதியினர், புதிதாய் அரசியலில் மேலே வந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் குறுக்குவழிகள் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தனர்.  வாழையடிவாழையாக இவர்களும், அரசியல்வாதிகளும் துணிந்து கூட்டுக் கொள்ளை அடித்து, நாட்டைக் குட்டிச்சுவராக்கி விட்டனர்.  அரசுஊழியர்கள் எல்லோரையுமே கழுவிலேற்றினாலே போதும், நாடு செழிப்பாகும்’ என்று முடித்தார் !   


மூன்றாமவர், ’பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களுமே, அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, ஊழலை வளர்த்தனர், இவர்கள் அனைவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்துவிட்டு, நாடு கடத்திவிட்டால், இந்தியா சிஙப்பூரை விடத் தூய்மையாகும்’ என்று எழுந்தபடி சொல்லிவிட்டு, வாயில் போட்டிருந்த பான்பராக்கை, வெளியே படிக்கட்டுச் சுவரில் துப்பினார் ! 


மூவரும் முடித்துவிட்டு, நான் யார்பக்கம் என்பது போல என்னை நோக்கினர்.  நான், ‘ நீங்கள்தான் முழு ஊழல்வாதிகள், உங்களை கொல்லவேண்டாம், சவுக்கால் முதுகில் நாலு விளாசு, விளாசி, சில கேள்விகள் கேட்டால் போதும், நாடு சுபிட்சமாகிவிடும்’ என்றேன்.

’ஆ, இவர் பெரிய பருப்பு,  நீ யோக்கியமா ?’

’சரி, நீங்கள் இல்லை, நாம் !! ’

’அதெப்படி ?’

’இப்ப இரண்டாவதா, அரசு ஊழியர திட்னாரில்ல, அவர் முந்தாநேத்து என்ன பண்ணினார் ?  தன்னோட பதினாலு வயசு பையன், அவரோட பைக்க ட்யூசனுக்கு எடுத்துட்டு போயி, ட்ராபிக் போலிஸ்ல மாட்னவுன்ன போன்ல, நூறு ரூபா லஞ்சம் கொடுத்துட்டு, வண்டிய எடுத்துட்டு வரச் சொன்னாரு, நியாயமா லைசென்ஸ் இல்லாம வண்டிய ஓட்றது தப்புன்னு அவர் பையனுக்குச் சொல்லிக் குடுக்கல, கொடுமையா அந்தச் சின்னப் பையனுக்கு லஞ்சம் கொடுக்கக் கத்துக் கொடுத்ததோடு மட்டுமில்லாம, பணமிருந்தா சட்டத்த மீறலாம்னு வெதச்சிட்டாரு’ என்றேன்.   இரண்டாமவர் முகம் கருத்தது.  


’இல்லன்னா மட்டும் அவனுங்க காசு வாங்காம விட்றுவாங்களா ?’ என்றார் எந்தக் குற்ற உணர்ச்சியுமில்லாமல் !

’சரி, முதலாமவர் என்ன பண்ணினார், அவரோட பொண்ணு எண்ணூத்தி அம்பது மார்க்தான், இன்ஜீனியரிங் கவுன்ஸ்லிங்க் போனா நல்ல காலேஜோ, நல்ல கோர்ஸோ கிடைக்காதுன்னுட்டு, எட்டு லட்ச ரூபா லஞ்சம் கொடுத்து, பிரபல காலேஜ்ல ஈசி சேத்தாரு.........’


‘யோவ், நான் சேக்கலன்னா வேறொருத்தன் சேக்கப்போறான் ?’

’உண்மைதான், ஆனா, ஆயிரத்து நூறு மார்க் வாங்குன ஒரு ஏழைப் பொண்ணோட சீட்டாச்சே அது ?’

‘சரி என்னதான் பண்றது இப்போ ?  ஒரே ஒரு பொண்ணு, அவள அவ இஷ்டத்துக்கு படிக்க வக்கலன்னா, நீங்க என்ன பெரிய மீச வச்ச ஆம்பளன்னு, வீட்ல பொண்டாட்டி டார்ச்சர், இங்க நீ’

லஞ்சம் பற்றிய கூச்சமில்லாத அப்பா, அம்மா, மகன், மகள் என்று மொத்தச் சமூகம் நாறியிருந்தது !

அதற்குள் அடுத்தவர் தாமே முன்வந்து, ’த்ரீ பேஸ் மீட்டர் தட்டுப்பாட்டின்போது, சீனியாரிட்டியை பெற தாமே யோசனையும், லஞ்சமும் கொடுத்து பெற்றதை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார், கார் பார்க்கிங்குக்காக ரோட்டில் ஒன்றரை அடி ஆக்கிரமிக்க...........’

‘போதும், போதும் என்று கையமர்த்தினேன்.
மூவரையும் பார்க்க பரிதாபமாக இருந்தது. 

’சரி, சரி, ஃபீல் பண்ணாதீங்க, வாங்க, ‘ நாங்க ஊழலுக்கு ஆதரவானவர்கள்’ ன்னு ஒரு குழுமத்தை ஆரம்பிப்போம், ’ என்றேன் :((  






 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!