கெட்ட வார்த்தை பேசுவோம் !!!

கெட்ட வார்த்தை பேசுவோம் -பெருமாள்முருகன்
********************************************************************
ஒரு வருடமாய் அலமாரியில் தூசி படிந்து, புது புத்தகத்திற்குரிய வாசனையை கிட்டத்தட்ட இழந்திருந்த இந் நூலை, சமீபத்தில் சென்றிருந்த பிஸினெஸ் டூரில், ரயில் பயணவேளைகளின் போது வாசித்தேன்.

வாசிக்க ஆரம்பித்தவுடன் அசூயையின் காரணமாக முகம் சுளித்து அவதிப்பட்டேன். அல்குல், கொங்கை, சிதி, சுண்ணி என தொடர்ந்து பத்திக்கு பத்தி கவுச்சிஅய்யய்யோ, இந்தப் புத்தகத்தைப் போய் திறந்தவெளியில் வைத்திருந்தோமே, வீட்டுப் பெண்மணிகள் எதேச்சையாய் வாசித்து நம்மைப் பற்றி என்ன நினைத்திருப்பார்களோ என்ற கிலி வேறு பற்றியது.

பெருமாள்முருகனே ஆரம்பத்தில், சொந்தப் பெயரை மறைத்து, புனைப் பெயரில்தான் இதைத் தொடராக எழுதினாராம் ! ஆனால், இந்த நூலை முழுதாய் வாசித்ததும், செக்ஸ் & ஆண் பெண் பாலியல் உறுப்புகள் பற்றி பேசும் போதோ, எழுதும் போதோ, வாசிக்கும் போதோ, நாம் போடும் போலி வேஷங்களையும், நம் பண்டைய இலக்கியவாதிகளின் சுதந்திரத்தையும் ஒப்பிட்டபோது, இயல்பை, அவசியமான ஒன்றை, இப்படி மூடிப் பேசி மூடிப் பேசி, நடித்து ஏமாந்து வந்தோமே என்று பட்டது.

19ம் நூற்றாண்டு வரை நம் முன்னோரிடையே இயல்பாய் பரவியிருந்த பாலியல் சொற்கள், பாலியல் கதைகள், பாலியல் பழமொழிகள், இவைகளெல்லாம், இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் நுழைந்த மெக்காலே முறை கல்வி கற்ற அறிவுஜீவிகளால், அசிங்கமாகவும், நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமாகவும் பார்க்கப்பட்டு, அப்போது நம்முடைய பண்டைய இலக்கியங்களை ஓலைச்சுவடியிலிருந்து, நூல்களாகத் தொகுத்த இவர்களால், இத்தைகைய இயல்பான பாலியல் வர்ணனைகள் மறைக்கப்பட்டு, நாம் போலி வேஷம் பூண, அடிக்கல் நாட்டினார்கள்.

அதே இருபதாம் நூற்றாண்டின் இடையே, தீவிர நாத்திக பிரச்சாரம் மேற்கொண்ட கழக அன்பர்கள் கூட, நம்முடைய பண்டைய இலக்கியங்களில் விரவியிருந்த, சுதந்திரமான பாலியல் வர்ணனைகளை இவைகள் இந்துமதத்தின் அப்பட்டமான அயோக்கியத்தனமென்றுகுத்திக் காட்டி, அப்போதைய நாகரீக அறிவுஜீவிகளுக்கு இணையாக, இன்றைய நம்முடைய முகமூடி நிலைஅஸ்திவாரத்தைப் பலப்படுத்தினார்கள் !

இவர்களின் இச்செயல்களை வன்மையான கண்டனங்களோடு வசை பாடியவாறே, நம்முடைய பண்டைய சங்ககால நூல்கள் முதற்கொண்டு(குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு.......) திருக்குறள், இடைக்கால கம்பர், காளமேகப் புலவர், நாட்டுப்புறப் பாடல்கள், வட்டார வழக்குச் சொற்கள் என எல்லாவற்றிலுமிருந்து பலப்பல ஆதாரங்களை எடுத்துக் காட்டி, பாலியல் சொற்கள் நம்மிடையே எவ்வாறு சர்வ சாதாரணமாக புழங்கி வந்திருந்தன என நிருபிக்கிறார் பெருமாள்முருகன்.

ஒரு சில சாம்பிள்களைப் பாருங்கள்.
'வாம மேகலையிற வளர்ந்தது அல்குலே' -கம்பர்
*இளகிய இதயம் கொண்ட இந்து அன்பர்கள் தவிர்க்கலாம்)


தன் மனத்துக்கு மிகவும் பிடித்த ராமன், வில்லை முறித்துவிட்டான் எனச் சேதி கேட்டதுமே மகிழ்ச்சியில் அவளுடைய இடையில் இருந்த மேகலை எனும் ஆபரணம் தெறித்து அறுந்ததுஎன்றே கம்ப ராமாயாணச் செய்யுளை, உரைநடையாக மாற்றிய, இருபதாம் நூற்றாண்டின் பண்பாட்டுக் காவலர்கள் நமக்குச் சொன்னது

ஆனால், கம்பர் சொல்ல வந்தது என்ன தெரியுமா ?


'வெற்றி பெற்றுவிட்டான் காதலன். எனவே, மனம் கவந்த காதலனையே கைப்பிடிக்கப்போகிறோம்என்ற உச்ச பரவசத்தில் சீதையின் அல்குல் புடைத்துப் பெருத்து, இடை மேலிருந்த மேகலை தெறித்து அறுந்ததாம் !


இதுபோக ராமனே, இதுவரை சீதையைக் கண்டிராத, சீதையைத் தேடிப் போகப் போகும் அனுமனிடம் சீதையின் அங்க அடையாளமாக, ‘செப்பென்பென், கலசமென்பன், செவ்விள நீரும் தேர்வன்என்கிறார்.


சரி, அகலிகையிடம் அவளின் கணவர் போன்றே மாறுவேடத்தில் போய் மேட்டர் முடித்த இந்திரனுக்கு உடல் முழுக்க ஆயிரம் கண்ணாக இருக்கக் கடவதுசாபம் கிட்டியது என்றுதானே சொன்னார்கள் ?


அது ஆயிரம் கண்ணில்லையாம், ஆயிரம் பெண்பிறப்புறுப்புகள் !


ஆம், ஆயிரம் அல்குல்கள். இது போக அவனுடைய ஆண்குறியும், விரைகளும் அறுந்துபோக வேண்டுமென்பதும் சாபத்தில் ஒரு பகுதியாம்

இதெல்லாம் இலக்கியத்தில் இருப்பதுதான். ஆனால், நமக்கு ஏன் கண்கள் என்று சொன்னார்கள் ?


பெண், பெண்.....என தராதரம் பார்க்காமல், சதா அலைந்த இந்திரனுக்கு, ’உனக்கு அல்குல் மேல்தானே வெறி ?  பிடி.... உடல் முழுக்க அல்குல்என்ற அகலிகை கணவரின் சாபத்தால், ’மரத்தில் கிழ வவ்வால்கள்தொங்கிக் கொண்டிருப்பதைப் போல், அல்குல்கள் இந்திரன் உடல் முழுக்கத் தொங்கி, பார்க்கக் கோராமையாக இருந்ததாம்.


கதறியழுத இந்திரன் சாபமிட்ட முனிவரிடம் சாபவிமோச்சனம் கோர, ’சரி, சரி பிழைத்துப் போ, உன் கண்களுக்கு மட்டுமே அது அல்குலாகத் தோன்றும், பிறருக்கு கண்களாகவே தோன்றும்’  என்ற விமோச்சனத்தை மட்டுமே  நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்


திருவேங்கடநாதன் எழுதிய பிரபோத சந்திரோதயம்எனும் நூலில்தான் மேலேயுள்ள இந்த இந்திரன் சாபம் பற்றிய வர்ணனை வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை, இந்த இலக்கியம் கல்லூரிகளில் பாடமாக இருந்ததாம். பாடத்தை நடத்திய உ.வே.சா, படு ஆபாசமென இந்தப் பகுதிகளை அப்படியே கடந்து, வெறும் சாப விமோச்சனத்தை மட்டுமே பாடமாக நடத்தினாராம், உச்சபட்ச கொடுமையாக இதை எளிய உரையாக்கிப் பதித்த, இவருடைய மாணவர் வ. வேணுகோபாலன், இந்த அல்குல் பற்றிய வவ்வால் உவமைப் பகுதிகளையே அடியோடு நீக்கிவிட்டாராம் !


பிறன்மனை என்றும் பாராமல் மோகித்து, சூழ்ச்சியால் சுகம் அனுபவித்த இந்திரனுக்கு, அல்குல் மேல் என்னதான் பெருமோகம் இருப்பினும், உடல் முழுக்க அல்குல் எனில் அளவுக்கு மீறிய அமுதம் போலாகி கசந்திருக்கும் பாவம் :(


அந்தா பதன் சொற்ற சாபத்தி
னால்நொந்த் தகங் குன்றியே
முந்தா யிரம் கோச நெடுமா
மரம்தூங்கும் முதுவா வல்போல்........


நெடு மாமரத்தில் தலைகீழாகத் தொங்கும் கிழ வவ்வால்களை உற்று நோக்க வேண்டும், உவமை சரியா என்று.


சிவனை, காளமேகப் புலவர் கலாய்த்து எழுதிய கவிதைகளையெல்லாம் பதிவேற்றினால் அதி தீவிர சைவ அன்பர்கள் கொதித்தெழக்கூடும்.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி, மாதவியின் பாலியலங்க அழகை, இளங்கோ வர்ணித்ததை நம் கண்ணுக்கோ, காதுக்கோ இதுவரை தெரியாமல் மறைத்தே விட்டனர்.


சரி, இந்த ஆம்பளப் புலவன்களுக்கு வேறென்ன வேல இத விட்டான்னுசலிப்பவர்கள் முகத்தில் கரியைப் பூசுகிறார் பத்துப் பாட்டில் வரும் முடத்தாமக் கண்ணியர். பெண் புலவர். அடடா, இவருடைய உவமைகளைப் படித்தவுடன் ஆயிரம் பொற்கிழிகள் உடனடியாக பரிசளிக்க ஆசை வருகிறது.


ஈர்க்கும் இடைபோகா ஏரிள வனமுலைஒரு பெண்ணின் அங்க அவயங்களை வர்ணித்தவாறே வரும் கவிதாயினியின் ஒரு வரி இது. அர்த்தம்தான் செம. அடுத்த பத்தில சொல்றேன். அடுத்து இடை, வயிறு, தொப்புள் என்றிறங்கி, ‘வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்என்று தயக்கமில்லாமல் தொடர்கிறார்.


திரண்டு வளர்ந்த அவளின் அவ்விரண்டு அழகிய இளமுலைகளின் செழிப்பு எப்படியெனில் அவையிடையே ஈர்க்குச்சியைக் கூட செருக முடியாதாம் !!! ’


பல்காழ் அல்குல்எனில் பல வண்ண மணிகளைக் கொண்டு அலங்கரிக்கபட்ட மேகலையை அணிந்திருக்கும் அல்குல் எனப் பொருள்படுகிறது. அப்ப, ’வண்டிருப் பன்ன எனில்’ ? பல வண்டுகள் ஒன்று சேர்ந்து ஒருப் பூவை மொய்ப்பது போன்ற காட்சியளித்ததாம் அவளின் அல்குல் !!!


எதற்காக இவ்வளவு நீட்டி முழக்க வேண்டுமெனில், சில இலக்கியத்தரமான நாவலில் சில இடங்களில் வரும் பாலியல் பகுதிகளை, அறச்சீற்ற பண்பாட்டு கலாச்சாரக் காவலர்கள் பெரிதும் எதிர்ப்பார்கள் அல்லவா, அது அவர்களைச் சொல்லி குற்றமில்லை. இதெல்லாம் பாவம் என மறைத்த நாகரீக அறிவுஜீவிகளும், தவறு என வாதிட்ட நாத்திகப் போற்றிகளும்தான் முழுக் காரணம். அவர்களால் விதைத்தவைகள்தான் இன்று மரமாகி, தோப்பாகி சலசலத்துக் கொண்டிருக்கின்றன.


நம்மிடையே இயல்பாய் இருந்த இவைகளை மறைத்துவிட்டு, பிறகு அஞ்சி, கூசி, ஒளிந்து மோசமானவைகளை வாசித்து, சந்தேகம் கேட்க யாருமின்றி, சீரழிந்து, சமூகம் கெட்டுவிட்டது எனப் புலம்பி, செக்ஸ் கல்வி அவசியம் என, அபவுட்டர்னில் மீண்டும் பண்டைய இலக்கியமே அறிவார்ந்தது எனப் போய் முடியும்.

நன்றிபெருமாள் முருகன்.

கெட்ட வார்த்தை பேசுவோம் (கலப்பை பதிப்பகம்)
  
 
 
 

 
 
 



 
 
 
 

 
 

 
 
 
 
 
 
 
 
 


 
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்