கடலோடி - நரசய்யா !!!

’கடலோடி’

வயதுக்கு வந்திருந்த வேளையில்தான் ’நரசய்யா’வை நான் ஜூ.வி. கட்டுரைகள் வாயிலாக முதன் முதலாக வாசிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரைகளில் அவர், தான் வேலை செய்த பிரம்மாண்ட கப்பல்கள், கடலில் குட்டித் தீவுகளென அலையும் திமிங்கலங்கள், நெடிந்துயர்ந்த நீர்த்தூணாய் வானும் கடலும் கொள்ளும் கலவி.........இப்படி அவர் விவரிக்க விவரிக்க அப்படியே அந்தச் சாகஸங்களை கற்பனை செய்து, திளைத்துக் கிடந்திருக்கிறேன். பிறகு பல வருடங்கள் எனக்கும், ஜூவிக்குமான பிணைப்பு அறுபட, நரசய்யாவை அடியோடு மறந்தும் போயிருந்தேன்.


 

விகடன் கட்டுரைத் தொடரில், " நீங்கள் எழுத்தாளர்களென நம்புபவர்களெல்லோரையும் விட சிறந்தவர்கள் இவர்களென சாரு நிவேதிதா பட்டியலிட்டிருந்த எழுத்தாளர்களில்தான் மீண்டும் ’நரசய்யா’ என் கண்ணில் பட்டார். அதில் நரசய்யாவின் சிறந்த ஆக்கம் ’கடலோடி’ என்றும் சாரு பரிந்துரைத்திருந்தார்.

 

ஆனால் 2011 லிருந்து தேடி, இவ்வருடம்தான் புத்தக கண்காட்சியில் இந்த நூல் கிட்டியது.

வாங்கி வழக்கம்போல் நரசய்யாவை புத்தகப் பைக்குள் சிறைவைத்து, ஜிப்பை இழுத்து மூடிவிட்டேன்.

 

தெரியாத்தனமாய் அலமாரியில் நெடுநாளாய் தூங்கிகொண்டிருந்த நகுலனை தூசுதட்டி, வாசிக்க முயன்று, அரைப்பைத்தியமாகி அதை அப்படியே எடுத்த இடத்தில் வைத்துவிட்டு, ஏதாவது மிகச்சிறிய நூலாய் வாசிப்பது என இந்தக் கடலோடியை தேர்ந்தெடுத்தேன்.

 

ஆஹா, சுதந்திரம் அடைந்தபின்னரும், நம் கப்பற்படைக்கு வெள்ளைக்காரர்கள் கொண்டே பயிற்சி கொடுக்கப்பட்ட பயிற்சித் தளமான ஐஎன்எஸ் சிவாஜி, போர்க் கப்பல்கள், பயிற்சி, ஐஎன்எஸ் விக்ராந்த் என எளிமையான தமிழில், 1970களில் எழுதப்பட்ட ஒரு பயணக்கட்டுரை நூல். நிஜமான சாகஸங்கள் நிறைந்த நூல்.

 

பயணக்குறிப்புகளையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள், இடையிடையே தேர்ந்த பின் நவீனுத்தவ எழுத்துக்களையும், தத்துவங்களையெல்லாம் சொல்கிறார் பாருங்கள், அற்புதமாக இருக்கிறது.

 

இதோ நரசய்யாவின் சில சாம்பிள் எழுத்துக்கள் :-

 

பயண எழுத்து என்பது வெறுமனே நாம் பயணப்பட்ட இடங்களின் சிறப்புகளை அதிசயித்தோ, மிகைப்படுத்தியோ சொல்வது மட்டுமே ஆகாது. நிறைகளை மட்டுமே தாங்கி வரும் பல பயணக்கட்டுரைகளை நான் வாசிக்கும் நேரங்களில் எனக்கு ஏமாற்றமும், சலிப்புமே மிஞ்சுகிறது. அப்படிப்பட்ட பயண எழுத்தாளர்களுக்கு பிரயாணம் என்பது வேலைக்கிடையே ஒரு பொழுதுபோக்கு, ஆனால் எனக்கு பிரயாணம்தான் வேலையே !

 

இது இன்னொரு பத்தி :-

 

’கட்டுப்பாடு’ அதன் பொருளை மீறிவிட்டால் ’அடிமைத்தனம்’ ஆகிவிடுகிறது. அதன் பொருள் காலத்தையொட்டி மாறுகிறது. காலத்தில் மாறாவிடில் அக் கட்டுப்பாடு வெறுப்பிற்குத் தூண்டுகோலாக மாறிவிடுகிறது !!!

 

து பயணக்கட்டுரை நூல் என்பதை விட நரசய்யாவின் இளமைக்கால டைரிக் குறிப்புகள் என்பதுதான் சரி, தேர்ந்த இலக்கிய எழுத்தாளர்களைப் போன்ற நடை, ஆனால் எளிய தமிழில்.

 

சரி, இதைவவிட கடலோடியில் அப்படி என்னதான் பெரிய சிறப்பு ?

 USS Diablo while in the Caribbean in 1949

1970 - 71 பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில், விசாகப்பட்டினத்தில் இருந்த இந்தியாவின் ஒரே விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை தகர்க்க வந்த ஒரு பாகிஸ்தான் நீர் மூழ்கியை, விசாகைக்கு அருகே வைத்து, ஜல சமாதி ஆக்குகிறார்கள், அதை லைவ்வாக நாம் பார்ப்பது போல் எழுதுகிறார் நரசய்யா. எப்படி அவ்வளவு தத்ரூபமாக எழுதினாரென்றால், அப்போது அவர் வேலை செய்ததே ஐஎன்எஸ் விக்ராந்தில்தான் !

 

இதைவிட, இந்த ஐஎன்எஸ் விக்ராந்தை வாங்க, இங்கிலாந்து செல்லும் இந்தியக் குழுவிலும் நரசய்யா இருந்திருக்கிறார். கொடுமை என்னவென்றால் நம்முடைய அந்த(அப்போது) ஒரே விமானந்தாங்கி கப்பலும் பழைய கப்பல். அதுவும் இங்கிலாந்து இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய ஓல்ட் வெர்ஷன் நாசகாரி. அதை விமானந்தாங்கி கப்பலாக இங்கிலந்தில் ஒரு கப்பல்கட்டும் தளத்தில் வைத்து மாற்றி வடிவமைக்கிறார்கள், பல மாதங்கள் கூட இருந்து நரசய்யாவும், அந்தக் கப்பலைச் செலுத்துவது, பராமரிப்பது எப்படி என பயிற்சியும் எடுத்துக் கொள்கிறார்.

 

அந்தப் பயிற்சிக்காலங்களில் கிட்டும் வெளிநாட்டு அனுபவங்கள், கடற்படையில் இருக்கும் ஒழுக்கக்கேடுகள், அதிகாரிகள் - ஊழியர்கள் இடையே நடக்கும் ஈகோ மோதல்கள், விமானந்தாங்கி கப்பலில் இருக்கும் குறுகிய ரன்வேயில் எப்படி போர் விமானங்கள் ஏறி இறங்கும் என்கிற விவரங்கள் (இங்கு ஒரு நிமிடம் நிற்க)

 

சில மாதங்களுக்கு முன்தான் இந்தப் பழைய விக்ராந்துக்கு ஓய்வு கொடுத்து விட்டு, இன்னுமொரு பிரம்மாண்ட வி. தா போர்க்கப்பலான வீராட்டை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி. அதைப்பற்றி விகடன் எழுதியபோது, நரசய்யா எழுதியிருந்த அதே டெக்னிக்கைத்தான் போர் விமானங்கள் ரன்வேயில் ஏறி இறங்க உபயோகிப்பதாக எழுதியிருந்தார்கள், ஆனால் நரசய்யா இந்த டெக்னிக்குகள் பற்றி நமக்குச் சொன்ன காலம் 1972 !!!

 

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலங்களில் நம் கப்பற்படை எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது ? ஆனால் அதைவிடவும் பிரம்மாண்டமான வணிகக்கப்பல்கள் அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இருந்து உலகெங்கும் போய் வந்திருந்திருக்கின்றன, அப்படிப்பட்ட கப்பல் பாரம்பரீயத்தில் இருந்த இந்தியா...............கிழக்கிந்தியக் கம்பெனி போர்வையில் உள்ளே நுழைந்த வெள்ளைக்காரர்களால், சூழ்ச்சி செய்து சிறிது சிறிதாகச் சிதைக்கப்படுகிறது.

 

முகலாயர்களிடம் இருந்த எல்லாக் கப்பல்களையும், கப்பல்துறை நிர்வாகங்களையும்,  செல்லாக் காசாக்கிவிட்டு, கப்பல் போக்குவரத்தில் முழுக்க முழுக்க, இங்கிலாந்து கப்பல்கள் மட்டுமே கோலேச்சுவது போல செய்துவிட்டார்கள் வெள்ளையர்கள் அவர்கள் நம்மை ஆண்ட முன்னூறு வருடங்களில்............ :(

 

இதை மீறி, கப்பல் இயக்க முயன்ற வ.உ.சி, சிந்தியா போன்றவர்களுக்கெதிராக, அதிரடி விலைக்குறைப்பு, நிர்வாக ஒத்துழையாமை, அதிகார துஷ்பிரயோகம் என்று, அவர்களை நட்டத்திற்குள் தள்ளி, வழக்குகள் போட்டு, நிர்மூலமாக்கியிருக்கிறார்கள். ஆனால் சிந்தியா குடும்பம் மட்டும் சளைக்காமல் போராடுகிறது. காந்தியே சிந்தியாவின் இந்த துணிவைப் பாராட்டி, சிந்தியா கப்பல்களை இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறார். எனவே இந்தியா விடுதலை பெற்றபின், சிந்தியா இங்கிலாந்திற்கு அனுப்பிய முதல் பயணிகள் கப்பல் கிளம்பிய தினத்தையே வணிகக்கப்பல் தினமாக அறிவிக்கிறார்கள்.

 

விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் ஒரு கப்பல் கட்டும் தளத்தை சிந்தியா குழுமம் ஆரம்பிக்கிறது, ஆனால் அந் நிறுவனத்திற்கு இரும்புத்தகடுகளை ரேஷன் முறையில் தருகிறது வெள்ளையர் அரசு, மாறாக இங்கிலாந்திற்கு இந்தியாவில் இருந்து இரும்பை வெட்டி, கப்பல் கப்பலாக அனுப்பி வைக்கிறது, கப்பல் கட்டும் தளத்தில் பல வருடங்களாக பாடுபட்டும், வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பின், 1948ல் தான் கட்டிய முதல் கப்பலை வெள்ளோட்டம் விட முடிகிறது சிந்தியா குழுமத்தால்................. :(

 

மேற்கூறியச் சம்பவங்கள் நரசய்யா தான் பணியில் சேர்ந்தபின் நடந்தவைகள் அல்ல, கேள்விப்பட்டதையும் பொருத்தமான இடத்தில் பகிர்கிறார், ஆனால் இந்தப் புத்தகத்தை நான் வாங்கியதாகச் சொன்னதும், எனக்கொரு புக் வாங்கி அனுப்பவும் எனக் கோரிப் பெற்று வாசித்த, எங்கள் தளபதி ’பாஸ்கர் ராஜா’ "நரசய்யா வெள்ளைக்கார அடிமைமனோ பாவ அடிப்படையில் எழுதியிருக்கிறார்" என விசனப்பட்டிருந்தார் (மூன்று ஆச்சர்யக்குறிகள்) :)

 

இது மிகவும் பக்கங்கள் குறைந்த சிறு நூல் என்பதால், எந்தச் சலிப்புமில்லாமல் விரைந்து வாசித்து விடலாம் என்றாலும், உங்களுக்கு பயணக் கட்டுரைகள் மேல் சற்றேனும் ஆர்வமிருக்க வேண்டும், அதிலும் கடல், கப்பல், ராணுவம் என்கிற விஷயங்களில் சற்றேனும் பிடித்தம் இருக்க வேண்டும்......இல்லையேல் நரசய்யா அவ்வளவாக உங்களை கவர மாட்டார் :)

 

கடலோடி (பயணக் கட்டுரைகள்)

ஆசிரியர் - நரசய்யா

நிவேதிதா பதிப்பகம்,

சூளைமேடு, சென்னை-91.

போன் :- 044 6518 6885, 99628 96884

================= நன்றி ===================== 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!