தாய்மையெனும் போலிப் புனிதம் - ப்ரியா தம்பி


பிரியா தம்பியின், ‘பேசாத பேச்செல்லாம்’ நடுவில் சில வாரங்கள் வாசிக்காமல் தவிர்த்து விட்டிருந்தேன். மொத்த ஆண்களுமே அட்டைப் பூச்சிகள் எனும் ரேஞ்சில் அவரெழுத்துகள் இருக்க, ’ஆமா, நாங்க அப்படித்தான்’ என்கிறார் போல, தாவி லூஸுப்பையனிடம் போய்விடுவேன் (லூஸூப்பையனின் எழுத்துகள் இப்போதெல்லாம் சிரிப்பை வரவழைப்பதற்கு பதில் கடுப்புகளை கிளப்புவது தனி ஸ்டேடஸ் ;) )


ஆனால் போன வாரமோ, அதற்கு முந்தைய வாரமோ என நினைவு. இரவு சாப்பாட்டிற்குத் தொட்டுக் கொள்ள, 'பேசாத பேச்சு'தான் கிட்டியது. அதில் இரண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்துவிட்டு, அதன்பின், ராஜ வாழ்க்கை வாழும் ஒரு ஜோடியைப் பற்றி எழுதியிருந்தார்.



”பொண்ணுங்களுக்கு கல்யாணம் கட்டிக் கொடுத்தாச்சு பேரன் பேத்திய எடுத்தாச்சு, அதென்ன இன்னமும் தோளும் தோளும் இடிச்சிகிட்டு, கை கோர்த்துக்கிட்டு சோடியா சுத்தறது ” என்கிற ரீதியிலான நம் சமூகத்தின் ஆயிரம் வருட டெம்ப்ளேட் வசனங்கள் கொண்டு குதறிய பின்னரும், அந்த இணை அடங்குவதாயில்லை, சமூகம் அடக்க முடியாததை காலன் அடக்கி விடுகிறான் :(



இறந்து கிடக்கும் கணவனின் தலைமாட்டில் இருந்துக் கொண்டு, சவத்திற்கு முத்த மழை பொழிகிறாள் கிழவி. ஊரே சங்கோஜத்தில் நெளிகிறது. ம்ஹூம் பிணத்தைத் தூக்கும்வரை, கிழவனை முத்தச் சிறையிலிருந்து விடுவிக்கவேயில்லை அவள்.



இதேபோன்று பாயில் இறந்துக் கிடந்த தன் அன்புக் கணவனை அள்ளியள்ளி முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பாட்டியை, நான் நேரிடையாகவே என் வாழ்வில் சந்தித்ததுண்டு. இதுபற்றி, அவரின் மருமகள்கள் அடுப்பங்கரைக்குள் நமுட்டுச் சிரிப்புடன் அவர்களுக்குள் அளவளாவியதைக் கேட்டதுமுண்டு. இதனாலோ என்னமோ அந்தக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்துப்போனது.



இதே கட்டுரையில், ”எப்படா பொணத்த எடுப்பீங்க, எனக்குப் பசிக்குது” என வெளிப்படையாக இறந்தபின்னரும் கணவனை வெறுக்கும் ஒரு கேரக்டரையும் சொல்கிறார் ப்ரியா !



இருந்தும் வழக்கம் போல, நேற்றும் ’அப்புறம் வாசிக்கலாம்’ என்றே விட்டுவிட்டேன். இதோ இப்ப இப்ப ஓர் அரை மணிக்கு முன்னதான், ’மணி தனுஷ்கொடி’ போன் போட்டு, ”அந்தக் கட்டுரையில் ஒரு விசேஷம் உண்டு, படிச்சிட்டு எழுது” என்றார். வாசித்தேன்.



ஆஹா, பிரியா தம்பியின் மாஸ்டர் பீஸ் கட்டுரை இது. அவர் இந்தக் கட்டுரையில் எழுதின இறுதிப் பத்தியிலிருந்து தொடங்குகிறேன் :-



// குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண் ஒருத்தியின் குற்றவுணர்வுக்கு முன்பு,


குழந்தை பெத்துக்க முடியாம நீயெல்லாம் பொண்ணா ? என ஒருத்தி மீது விசிறியடிக்கப்படும் வசவுக்கு முன்பு,


பேருந்து நிலையத்தின் கழிவறை இருட்டில் ஒருத்தி குழந்தை பெற்றுக் கொள்ளும் இயலாமையின் முன்பு,


ஏழாவதா பெத்துக்கிறியே, வெக்கமா இல்லயா ? என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் குழந்தையோடு மருத்துவமனையில் இருந்து ஓடும் ஒரு பெண்ணின் அவமானத்திற்கு முன்பு,


யாருக்குப் பிறந்த குழந்தை என்றே தெரியாமல் குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு கதவடைக்கும் ஒரு பாலியல் தொழிலாளியின் கண்ணீருக்கு முன்பு,


நான் மட்டும், ‘தாய்மை’ குறித்துப் பெருமைப் பட என்ன இருக்கிறது ? //

தாய்மையே புனிதம் என்று தேனொழுகச் சொல்லி, பெண்மையை வதைக்கும் யதார்த்த வலிகளை ’நறுக்’கெனப் பதித்திருந்தார் ப்ரியா !


நாங்கள் செல்லமாக ’தல’ என்றழைக்கும் எங்கள் மனோஜ் சாரின் ஒரு சிறுகதையை மேற்கோள் காட்டி, தாய்மை பட்ட பாட்டை விளக்கியிருக்கிறார், அதுதான் கட்டுரையின் ஹைலைட்டே :)


மனோஜ் சாரின் ’மஹல்’ எனும் சிறுகதை. லதா பிரபு, இதை நீங்கள் அவசியம் வாசித்தே ஆக வேண்டும் :)


// ஷாஜகானின் காதல் நாயகி என நாம் சொல்லிக்கொண்டிருக்கும் மும்தாஜுக்கு 13 வது பிரசவம். அதில் ரத்தப்போக்கு ஏற்பட்டுத்தான் அவள் இறந்தாள்.


குழந்தை பிறந்ததும் ஷாஜகான் பார்க்க வந்தபோது வெறுப்பு மிளிரும் கண்களால், “என்னைப் பார்க்க வராதே” என மும்தாஜ் தடுப்பார். அவள் இறந்தபோது, அவள் கண்களில் மிச்சம் இருந்தது ஷாஜகான் மீதான வெறுப்பு மட்டுமே :(

13 பிரசவங்கள் தின்ற அவளது உடலில் இருந்தும், மனதில் இருந்தும் வேறு என்ன உணர்வு வெளிப்பட்டிருக்க முடியும் ? மிகச் சந்தோஷமாக நடனமாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமிக்கு ஷாஜகானின் காதல் கொடுத்தது மரணத்தை மட்டும்தான். ‘இதுதான் காதலா ?’ என அந்தக் கதை கேள்வி எழுப்பியிருக்கும்.


கதையின் முடிவில் யமுனை நதிக்கரையோர நாடோடிக் கதை ஒன்றையும் மனோஜ் சொல்லியிருப்பார். கதைப்படி, மும்தாஜ் இறந்த பிறகே அவளது வேதனையை ஷாஜகான் உணர்கிறார்.


மகனால் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஷாஜகானின் ஒரே இறுதி விருப்பம், ’தன் மரணத்திற்குப் பிறகு மும்தாஜின் பக்கத்தில் தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும்’ என்பதுதான்.

ஷாஜகான் இறந்த பிறகு, அவரது உடலை வீரர்கள் படகில் ஏற்றி, யமுனையின் அந்தப் பக்கத்தில் இருக்கும் தாஜ்மஹலுக்குக் கொண்டுசெல்கிறார்கள். வழியில் திடீரென யமுனையில் வெள்ளப்பெருக்கு. அப்போது, ‘அந்த உடலை என்னிடம் கொண்டு வராதீர்கள்’ என அசீரிரீயாக மும்தாஜின் குரல் கேட்கிறது.



படகு தடுமாறி, ஷாஜகானின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி உடைந்து, ஷாஜகானின் உடல் யமுனை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. இப்போதைய தாஜ்மஹலில் மும்தாஜூக்குப் பக்கத்தில் இருப்பது வெறும் பெட்டி மாத்திரமே.

மும்தாஜ் தன் பக்கத்தில் ஷாஜகானை அனுமதிக்கவேயில்லை என அந்த நாடோடிக் கதை சொல்கிறது.


இந்தக் கதையை முதலில் சொன்னது நிச்சயம் ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும். மும்தாஜின் வாழ்க்கையை வாழ் நேர்ந்த ஏதோ ஒரு நிமிடத்தில் அவள் இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியிருப்பாள்.


ஆனால், ’தாய்மை’ என்கிற வார்த்தையைச் சுற்றி நாம் எவ்வளவு கோட்டிங் புனித பெயிண்ட்களை அடிக்கிறோம் ???


கொஞ்சம் யோசித்தால், ஷாஜகான் மிகச் சிறந்த காதலன் என மும்தாஜ் பதிவு செய்யவேயில்லை :) தாய்மை என்கிற உணர்வு ‘புனிதம்’ என எந்தப் பெண்ணும் சொல்லாதது போலவே :( //

நன்றி பிரியா தம்பி & மனோஜ் சார் !!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!