திங்கள், 22 ஜூலை, 2013

’குட்டி’ பேய்க்கதை !!!

தடக்...தடக்...தடக்....கென இயல்புக்கு மாறாக வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கும் இதயம், பக்கென்று தொண்டை வரை வந்தடைக்கும் ’பயத்தை’ அனுபவித்திருக்கிறீர்களா ?

நேற்று முன்னதிகாலை மூன்று மணி, செல் அலாரம் முணுமுணுக்க, தண்ணியடிக்க எழுந்தேன் (சாமிகளா......’இவனுமா ?’ ன்னு சலிக்காதீங்க, கார்ப்பரேஷன் தண்ணிய நம்பி வாழ்ற லோயர்மிடில் க்ளாஸ் ஜீவன் நான்)

ஐந்து குடங்கள், ஒரிரு வாளிகள் நிரப்பியபின்னர், வாஷிங்மெஷினில் துணியைப் போட்டு டெலிகேட் மோட் (42 நிமிடங்கள்) செட் செய்துவிட்டு, இந்த 42 நிமிடங்கள் போரடிக்காமல் இருக்க, ஜெயமோகனின் ‘காடு’ நாவலைக் கையிலெடுத்தேன் !


இனி ஜெமோவின் ருத்ர தாண்டவம் :-

300 வருடங்களுக்கு முன்னர், சேர நாட்டு திருவனந்தபுர அரசில் நடந்த (நடந்ததாக சொல்லப்பட்ட) ஒரு கதை !

திருவனந்தபுர ராஜாவுக்கும், ராணிக்கும் ஒரு மனக்குறை. நாட்டின் அடுத்த ஒரே வாரிசான இளவரசன் அடிக்கடி வாத நோயால் முடங்கிப்போவதுதான் ! (மூத்தவன் ஒருவன் இருந்தான், அவன் திடீரென மனம் பேதலித்து, ராஜ வாழ்வைத் துறந்து, பழனி படிக்கட்டில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறான், மீட்க முடியவில்லை)

அரண்மனை வைத்தியர்கள், அயல் தேசத்து சிறப்பு மருத்துவர்கள் எனப் பலரும் இளையராஜாவின் வாத நோயை நிரந்தரமாக குணப்படுத்திவிட எவ்வளவோ முயல்கிறார்கள், ம்ஹூம், எல்லாம் தற்காலிகத் தீர்வாகத்தான் முடிகிறது. போதாதற்கு இப்போது மிகவும் மோசமாய், இளவரசரின் கால்கள், யானைத்துதிக்கை போல் வீங்கி, லேசாக உடல் அசைந்தாலும், பெரும் வேதனையைக் கொடுத்தது.

தற்செயலாய் வந்திருந்த கொச்சி நாட்டு ராணியின், பரிந்துரையின் பேரில், வாத நோய் ஸ்பெஷலிஸ்ட்டான ’வாத நம்பூதிரி’ அழைக்கப்படுகிறார். வந்தவர் உண்மையிலேயே கில்லிதான், வந்ததுமே இது நரம்புவாதம் என அறிகிறார். இத்துணை நாட்களாக இதை ரத்தவாதமெனவும், எலும்புவாதமெனவுமே சிகிச்சை கொடுத்துவந்தனர் என அறிக !

நரம்புவாத சிகிச்சை 100 % சக்ஸஸ் ஆக வேண்டுமெனில், ’காஞ்சிர மர’க் கட்டில் தேவை என டிமாண்ட் செய்கிறார் நம்பூதிரி, அதுவும் இணைப்புகள் இல்லாமல் ஒரே மரப் பலகை தேவை என்கிறார். ஏனெனில் காஞ்சிரமரம் வாதத்தை இறக்கும் சஞ்சீவினி. பொதுமக்கள் இவன் ஒரு டுபாக்கூர், சிகிச்சை பலனளிக்காது என்பதால் இல்லாததை கேட்கிறான் என உள்ளூர பேசிக்கொண்டனர். காரணம் காஞ்சிர மரம் அத்தனை அகலமாக வளராது, ஐம்பதுவருடம் தாண்டிய ஒரு திடமான காஞ்சிர மரம் அதிகபட்சம் தென்னைமர அகலம் வளருமாம் !

ஆனால், மகாராஜா இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார். அவருடைய ஆளுகைக்கு கீழே உள்ள காடுகளை நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு அப்படி ஒரு காஞ்சிர மரத்தை தேட உத்தரவிடுகிறார். ஒரு மாதமாக சேர நாடுகளின் அடர்காடுகள் எல்லாம் அலசப்படுகின்றன.  அட, என்ன ஆச்சர்யம், ஒரு காட்டில் பிரம்மாண்டமான ஒரு காஞ்சிரமரத்தை கண்டும்பிடித்து விடுகிறார்கள். மன்னருக்கு ஏக மகிழ்ச்சி, பணத்தை தண்ணீராக இறைத்து அம் மரத்தை அறுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்ய, ஒரு சிறப்புத் தளபதியை அங்கு அனுப்பிவைக்கிறார்.


உயரமான அந்த மலைக்காட்டுக்கு, மரமிருக்கும் இடம்வரை பாதை போடப்படுகிறது. மரமறுக்க இரண்டு ஆசாரிகள் நியமிக்கப்பட்டார்கள். இவ்விருவர் தலைமையில் ஏகப்பட்ட மர அறுப்பாளர்கள் அக்காட்டுக்குள் நுழைந்து அந்த பிரம்மாண்ட காஞ்சிர மரத்தைப் பார்த்ததுமே அச்சம் கொள்கின்றனர். அருகில் இருந்த பிற மரங்கள் முதலில் சீவப்படுகின்றன. அருகிலிருந்த மரங்கள் சரிந்ததும், இபோது தனித்திருந்த மரம் இன்னும் அச்சத்தை கொடுத்தது. ரெகார்ட்ப்ரேக் அடிமரச் சுற்றளவு கிட்டத்தட்ட இருபதடி இருந்தது.

சரி, இனி மரமறுக்கும் படலம் தொடர்கிறது. கிளைகளை வெட்டிச் சீவவே சில வாரங்கள் ஆனது. அதற்குள் பல தடங்கல்கள். கசப்பு என்றால் அப்படி ஒரு கசப்புக் காற்று அம் மரத்தில் இருந்து எல்லோரையும் தாக்கியது. பணியாளர்கள் பலரும் ஒவ்வொருவராக நோய்வாய்ப் பட்டுக் கொண்டே இருந்தனர். அவர்கள் வாய் கசந்தது, கண்கள் கசந்தது, காது கசந்தது, ஏன் அவர்களின் வியர்வை கூட கசந்ததாய் அவர்கள் வீட்டுப் பெண்கள் சொன்னார்கள். ஏதோ ஒரு பிரச்சனை அம் மரத்தில் இருப்பதாக அஞ்சி, அப் பரிதாபத்திற்குரிய பணியாளர்கள், மேற்கொண்டு காட்டுக்குச் செல்ல மறுக்கின்றனர்.

சரிதான்......அங்க என்ன குடியாட்சியா நடைபெறுகிறது ?  ’அறுக்க வரீங்களா இல்ல தலைய சீவவா ?’ என்று சிறப்புத் தளபதி மிரட்ட,  அறுப்பு தொடர்கிறது. ஒவ்வொருவராய் ஜூரத்தில் விழுந்து இறக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், வெற்றிகரமாக மரம் அறுத்து சாய்க்கப்படுகிறது. அப்பப்பா........சரிந்த மர அகலம், நிற்கும் ஆட்களை விட உயரமாய் உள்ளது. ஒரு மரப் பலகை என்ன......இளையராஜா அரண்மனையையே இம் மரம் கொண்டு கட்டி விட முடியும் என ஆசாரிகள் பிரமிக்கிறார்கள்.

காஞ்சிர மரம், பலகை பலகைகளாக அறுக்கப்பட்டு, ஒன்பது இரும்புச் சக்கர மாட்டு வண்டிகளில் ஏற்றப்பட்டு, அரண்மனை கொண்டுச் செல்லப் படுகிறது. மலைச்சரிவின் ஆரம்பத்தில் மாட்டு வண்டிகள் வந்துக் கொண்டிருக்கும்போது, மூத்த ஆசாரி மனம் பேதலித்த நிலையில் தலை விரிக் கோலமாய், வண்டிகள் முன்வந்து, ”போகாதீர்கள், போகாதீர்கள், ரத்தம், ரத்தம்” என்று மறிக்கிறான். ‘அய்யய்யோ, ஆசாரி வழி விடுங்கள் என்று வண்டிக்காரர்கள் கதற, மாடுகளின் கடிவாளத்தை எவ்வளவு இழுத்தும், சரிவுப் பாதையால் அது முடியாமல் போக, ஒன்பது மாட்டு வண்டிகளும் ஏறி, மூத்த ஆசாரி ரத்தச் சேறாகிச் சாகிறான். இளைய ஆசாரியும் மர்மமான முறையில் அடுத்த நாளே கண்கள் பிதுங்கி, ரத்தம் கக்கிச் செத்துப் போனான்.


போகும் வழியில், இரண்டு மாட்டுவண்டிகள் குடைசரிந்து, மாட்டுடன் ஓட்டி வந்தவர்களும் மாண்டனர். கடைசியில், மிஞ்சிய வண்டிகள் அரண்மனைக்கருகே நிர்மாணிக்கப்பட்டிருந்த தச்சுக்கூடம் போய்ச்சேர்ந்தன. ஆனால் அடுத்த சில நாட்களில் வண்டியோட்டிகள், மாடுகள் என எல்லோருமே ரத்தம் கக்கி இறந்துபோயினர். நம்ம சிறப்புத் தளபதி, அவர் வீட்டு கட்டிலுக்கடியில் எதையோ பார்த்து மிரண்ட விழிகளுடன், மூக்கில் ரத்தம் வழிய இறந்துக் கிடந்தார், வாயில் அவர் நாக்கு கடிபட்டு இரண்டு துண்டாயிருந்தது.

காட்டு மரம் என்பதால், ‘தச்சு சாந்தி’ செய்தபிறகே, தச்சுவேலைகளை தொடங்கவேண்டுமென்பது நியதி. இரண்டு எருமைகள் பலியிடப்படுகின்றன. தச்சுசாந்தி செய்த ஆசாரி, ‘ நம்மள சிறப்பா ராசா கவனிப்பாரு போல’ என்ற நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு, அவருடைய கட்டைவிரலை வெட்டி, அந்த தச்சு சாந்தி நிறைவுபெற்றது. மரப்பலகைகள்....கட்டில், மேசை, நாற்காலிகள் என உரு மாறின. காஞ்சிரப் புரை(அறை) ஒன்றையே, நம்பூதிரி ஆலோசனை பேரில் உருவாக்கிவிட்டனர் ஆசாரிகள்.

சரி, இவ்வளவு செலவு செய்து, சிரமப்பட்டு, மகன் குணமாகாவிட்டால்...? ’மவனே அப்ப இருக்குடா உனக்கு சேதி’ அப்படி தோற்றுப்போனால் நம்பூதிரி நெற்றியில் சூடான சங்கு கொண்டு முத்திரையிட்டு நாடு கடத்துவது என மகாராஜா, மருத்துவருக்கு கடுங்காவல் போட்டுவிடுகிறார்.  ஆனால், சிகிச்சை ஆரம்பமானதும், காஞ்சிரமரம் நம்பூதிரியை கைவிடவில்லை. இளவரசர் சரியாய் ஒரு மண்டலத்தில் பூரண குணமாகிறார். சின்னராசாவின் தேகம் ச்சும்மா தக தக வென தங்கம் போல் மின்னுகிறது. மன்னர் மிக அக மகிழ்ந்து, நம்பூதிரிக்கு பட்டும், பொன்னும் அள்ளிக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.

(அப்பாடா...முடிச்சுட்டான்னு எஸ்கேப் ஆக நினைக்காதீங்க, இவ்வளவு நேரம் சொன்னது ஒன்னுமேயில்ல, இனிமேத்தான் மேட்டரே ! மூஞ்சக் கழுவிட்டு வந்து டீ யக் குடிச்சிகிட்டே தொடருங்க)

அழகு சொரூபனான இளையராஜா, காலையில் எல்லாம் சராசரி நடவடிக்கையில் இருப்பதுபோல் தெரிந்தாலும் மாலையில் அந்த காஞ்சிரப் புரையில் போய்த் தஞ்சமடைவதையே மிகவும் விரும்பியவர் போல நடந்துக் கொண்டார். அன்றாட அரசு அலுவல்களில் ஈடுபட்டாலும், ராஜ வம்சத்துக்கே உரிய, சிற்ப, ஓவிய, நாட்டிய, வேட்டை போன்ற ரசனை அறவே இல்லாதவராக, சிகிச்சைக்குப் பின் மாறிப் போனார். இதை விட பெருங்கொடுமை, அவர் பெண்களைக் கண்டாலே கூசி ஒதுங்குவது போல் பாவனை செய்ததுதான்.

இதுபோக அந்தக் காஞ்சிரப் புரையில் இளவரசர் இருக்கும் வேளையில் அவ்வப்போது பெண் குரல் கேட்டது. சில சமயங்களில் இளவரசர் முனகுவது, சிரிப்பது, அழுவது, ஈனக் குரலில் பிதற்றுவது போலெல்லாம் ஒலிகள் கேட்பதாக மன்னருக்கு புகார் போனது. அந்தப் புரையில் ஏதும் ரகசிய அறைகள் கிடையாது, வெளியிலிருந்து பெண்கள் யாருமறியாவண்ணம் உள்ளே புகமுடியாது என தலைமை தச்சர் சொல்லியிருந்தார்.

’திருமண வயதில் இதென்ன அலங்கோலம் ?’ என மகாராணி வருந்தினார். உதவிக்கு அரண்மணை தலைமைப் பெண் பணியாளரை நாடினார். அந்தம்மா அரசர் அந்தப்புர ‘மேற்படி’ சமாச்சாரத்துக்கும் வேற பொறுப்பு. எனவே ‘பீஸ்’ செமையா இருக்கும், அரசரே இந்தம்மா அழகில்.......(சரி, விஷத்துக்கு வருவோம், மேல வர்ணிச்சா பாலகணேசன் போன்ற அறச்சீற்றாளர்களுக்கெல்லாம் இப்பிப்ப செம கோபம் வந்துற்து)

இந்தம்மாவே இப்படின்னா இவங்களுக்கு ஒரு அழகான பொண்ணு, அது, எம்மா.....செப்புச் செல போல சும்மா வடிவாயிருந்தா, அவள வச்சு இளவரசன மயக்கிடலாம்னு மூவரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.  இளையராஜா நடமாடும் இடங்களில் எல்லாம் அவர் கண்ணில் படும்படியாக அந்த அழகியை உலவ விட்டனர்.  ம்க்கும்....மனுஷன் கண்டுகொள்ளவே இல்லை. சரி, இனி அடுத்து அதிரடிதான் என்று, இளவரசர் இல்லாத நேரம் பார்த்து அழகியை அந்தக் காஞ்சிரப் புரைக்குள் அனுப்பிவைத்தனர்.

சிறிது நேரத்தில், பெண்கள் வழக்கமாக அலறுவது போல், வ்வீலென்று பெருங்குரலில் கத்தியபடி அந்த அழகி அந்தக் காஞ்சிப்புரையிலிருந்து ஓடி வந்து அவள் தாயின் மடியில் வீழ்ந்தாள். ‘ஐயோ மோளே....என்ன ஆச்சு ?’ என மகளை நிமிர்த்திப் பார்த்த அந்தம்மா கடும் அதிர்ச்சியில் பேச்சு மூச்சில்லாமல் உறைந்தார். மகளின் பல் முழுக்க ரத்தம், கண்ணில் கருவிழி மேலேறி, வெள்ளையாய் காட்சியளித்தது.

மகனுக்குத் திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகும் என பெற்றோர்கள் முடிவுசெய்தனர். திருவனந்தபுர மகாராஜாவாயிற்றே பெண்ணா கிடைக்காது ?  பக்கத்து நாட்டு இளவரசியை மகனுக்கு மணமுடித்து வைத்தனர்.  வந்த ரெண்டாவது நாளிலேயே அச் சூழலலை முழுமையாகக் கிரகித்தாள் அந்த புத்திசாலிப் பெண்.  ஓர் இரவு, காஞ்சிரப் புரையின் உள்ளேயிருக்கும் இளவரசனிடம் தானும் உள்ளே வர அனுமதி கேட்டாள் இளவரசி. ‘முடியாது பெண்ணே, நீ போய் உன் அறையில் படு, என் உடல் முழுக்க விஷம், என் அருகில் நீ படுக்கக் கூடாது’ என்று உள்ளேயிருந்தே உத்தரவிட்டான் இளையராஜா.

இது தொடர ஆரம்பிக்க, ஒரு நாள் இளவரசி, அந்த காஞ்சிரப் புரைக்குள் இளவரசர் இருக்கும் வேளையில் எப்படியாவது நுழைந்துவிடுவது என தன்னிச்சையாக முடிவெடுக்கிறாள். அதன்படியே ஒரு நாள் நள்ளிரவு, புரைக்குள் அருகே சத்தமெழுப்பாமல் வந்து நின்றாள். உள்ளே இளவரசர் யாரோ ஒரு பெண்ணிடம் சிரித்துப் பேசுவது கேட்கிறது. திடீரென குரல் அடங்கி, இன்பத்தில் திளைக்கும் போதெழுப்பும் ஈனஸ்வர முனகல்கள் ஒலிக்க ஆரம்பித்தது. பொறுக்கமாட்டாத இளவரசி புரைக்கதவை படீரெனத் தள்ள, கதவு திறந்து அவள் கண்ட காட்சி................!!!

காஞ்சிரமரத்தில் செய்திருந்த நாற்காலியில் ஆடையின்றி இளவரசர் அமர்ந்திருக்க, அவர் தொடைகளின் மேல் ஒரு கரிய பெண். நேருக்கு நேராய் அந்தப் பெண்ணின் கண்களை இளவரசியால் நோக்க முடியவில்லை. கண் இருள ஆரம்பித்தது. அதிர்ச்சியில் உறைந்தாலும் சுதாரித்து, கண்ணை கசக்கிவிட்டுக் கொண்டு மீண்டும் பார்க்க யத்தனித்தபோது அந்தப் பெண் அங்கில்லை. இந்த பிரவேசத்தை சற்றும் எதிர்பாராத இளவரசர், ‘ராணி, நான் சொல்வதைக் கேள்’ என்று எழுவதற்குள், ஓடி வந்து மாமியார் மடியில் முகம் புதைத்து, அழ ஆரம்பித்தாள்.

இது ஏதோ மோகினி வேலை போல என எல்லோரும் உணர்ந்தனர். ஊரிலேயே பெரிய மாந்த்ரீகவாதி, ‘மந்திர நம்பூதிரி’ வரவழைக்கப்பட்டார்.
இளவரசியிடம் கண்டதை அப்படியே சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

”இளவரசர் மேல் அமர்ந்திருந்த அந்தப் பெண் கருப்பு என்றால் கருப்பு, அப்படி ஒரு கருப்பு........கரிய நிறம். இளவரசரை விட ஒரு முழம் அதிக உயரம். விரிந்திருந்த கரிய கூந்தல் தரை வரை புரண்டுக் கொண்டிருந்தது. செக்கச் சிவந்த உதடு. அய்யோ என்னைத் திரும்பிப் பார்த்த அந்த பச்சை நிறக் கண்கள்..............”

மாந்த்ரீகருக்கு எல்லாம் புரிந்து போனது. ‘ நல்லது, மோளே, எல்லா உண்மையையும் அப்படியே சொல்லி விட்டாய், இல்லையாயின் உன் கனவில் அவ்வுருவம் வந்து, ரத்தம் கக்கிச் செத்திருப்பாய்’ திரும்பி மகாராணியைப் பார்த்தவர் சொன்னார், ‘மகாராணி, வந்திருப்பது வன நீலி !!!

”எண்ட அனந்த பத்மனாபா’ என்று அலறினாள் மகாராணி.

(இங்கேதான் ஆரம்பப் பத்தி சம்பவம் எனக்கு நிகழ்ந்தது. ‘என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க இவ்வளவு நேரமா ?’ ன்னு ஒரு குரல். மயிரிழையில் உயிர் தப்பினேன் எனலாம், ஏனெனில் அது பழக்கப்பட்ட குரல். ’கருமாந்திரம் புடிச்சவளே, கொலுசு எங்க போச்சி ? சத்தமில்லாம இப்படியா வந்து கத்துவ ?’ ”அதத்தான் மாத்திக் கொடுங்கன்னு கேட்டேன், பாக்கலாம், பாக்கலாம்னு இழுத்துகிட்டே போனிங்க, அறுந்துபோச்சு.......ஆளக் காணுமேன்னு, பாக்க வந்தா.....ச்சே” என்று கோபித்துக் கொண்டு, படுக்கையறைக் கதவை ஓங்கி அறைந்து சாத்தினாள்)

”பயப்பட வேண்டாம் மகாராணி, இவ்வளவு பெரிய காஞ்சிர மரம் கிட்டியது என்றபோதே நாம் எச்சரிக்கையாயிருந்திருக்க வேண்டும். வன நீலி குடியிருந்ததாலேயே அம் மரம் அப்படி ஒரு பிரம்மாண்டத்தைப் பெற்றிருந்திருக்கிறது. மரத்துடன் நீலியும் இங்கே வந்துவிட்டாள். எல்லாம் நல்லதற்கே. வந்தவள் இளவரசரின் அழகில் மயங்கிவிட்டடாள். இல்லாவிடில், நரி புகுந்த கோழிக் கூண்டாயிருந்திருக்கும் இந்த அரண்மனை. எப்படியும் அவளை இளவரசர் விலக நினைக்கும்போது அடித்துவிடுவாள், அதற்குள் நாம் முந்தி ‘சாந்தி பூஜை’ செய்து அடக்கிவிடலாம் என்று பேராறுதல் கூறினார்.


பிரம்மாண்டமாக, 18 நாள் அந்த ‘சாந்தி பூஜை’ நடைபெற்றது. 108 உயிர்ப்பலிகள் கொடுக்கப்பட்டன. ஏழு நரபலிகள் வேறு தரப்பட்டது.  பலிபூஜையின் முடிவாக, காலபைரவரை தம் சக்தியால் அந்தக் காஞ்சிரப் புரைக்குள் நிறுவினார் நம்பூதிரி, இதனால் வெளியேறியாக வேண்டிய ‘வன நீலி’யைத் திருப்திப்படுத்தி, வெட்டி வைத்த எருமைத் தலையில் வந்தமர வைத்தார். 

சவமான அந்த எருமைத்தலையின் விழிகள் திறந்து மூடியது. காதுகள் அசைந்தது. பலிகளால் திருப்தியான நீலி, மாந்த்ரீகவாதி கையில் வைத்திருந்த பித்தளை ஆணியில் இறங்கினாள். அந்த ஆணியை ஒர் அடர்ந்த காட்டுக்குள் இருந்த வளர்ந்த காஞ்சிர மரத்தின் அருகில் இருந்த ஒரு சின்ன காஞ்சிர மரத்தில் அறைந்தார் அந்த மந்திரவாதி.

இப்போதும் கூட கேரளக் காட்டுக்குள் ஒரு வேளை அந்தக் காஞ்சிர மரமிருக்க வாய்ப்புண்டு, மரப்பட்டையினுள் அந்த ஆணி மறைந்திருக்கும். தேடிப்பார்த்து, ஆணியைப் புடுங்கி, நீலிக்கு ஃப்ரெண்ட் ரெக்கொஸ்ட் கொடுங்கள் :))
                                                                                                                 =முற்றும்=    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக