நாட்டுக்கு இதெல்லாம் அவசியமாய்யா ?
நான் ரசித்த ஆளுமைகளெல்லாம் சிறுகச் சிறுக சரிந்து கொண்டே வருவதை கண்ணுறுகிறேன் !
2010 ல் என்னுடைய டாப் 10 தமிழ் சினிமா இயக்குனர்களாக நான் பட்டியலிட்டவர்கள் :- மணிரத்னம், ஷங்கர், பாலா, அமீர், கவுதம்மேனன், செல்வராகவன், மிஷ்கின், வெங்கட்பிரபு, சேரன், வசந்தபாலன் !
மணியின் பலம் இராவணனிலேயே தெரிந்துவிட்டது, சரி இனி இவரை க்ளாஸிக் வரிசையில் சேர்த்துவிடலாம் என முடிவு செய்த வேளையில் கடல் வந்து, அப்படி சேர்க்காவிட்டால் ’நீ முட்டாள்’ எனச் சொன்னது, ஆக, அந்த இடம் வெற்றிடமாய் உள்ளது.
ஷங்கரைப் பொறுத்தவரையில் அவருடைய எந்திரன் & நண்பன் அபார வெற்றிதான் வணிகரீதியில். ஆனால் முன்னதை குப்பை என்றும், பின்னதை ரீமேக்தானே என்றும் மேதைகள் மட்டம் தட்ட முயல்கிறார்கள். அதைப்பற்றி ஷங்கர் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தன்னுடைய எஸ் ப்ரொடக்ஷன் மூலம் நட்டத்தைத்தான் சந்தித்துள்ளேன் என்கிறார்.
வணிக சினிமா மூலம் இவர் சம்பாதித்தால்தான் பிற புது சிந்தனையாளர்கள் மூலம் நல்ல படம் கிட்டும். எனவே பட்டியலில் இவருக்கே இப்போது முதலிடம் கொடுக்க வேண்டும். ஆனாலும் ஐ வந்துவிடட்டுமெனப் பார்க்கிறேன் !
பாலாவின் ’அவன் இவன்’ பார்த்தபின், என் கண் வால்ட்டேர்(விஷால்) கண் போலவே மாறியிருந்தது. பிதாமகன், சேது, நான் கடவுள் கொடுத்த பாலாவா இது....என்று, அஞ்சியபடியே ‘பரதேசி’யை பார்த்தபின், பாலாவை டாப் 3ல் வைத்திருந்த என் கையாலேயே அறைபட்டேன்.
ராம் படத்தை திருட்டு டிவிடியில் பார்த்தேன். இதற்கான தண்டனை எனக்கு நரகத்தில் உண்டு, என்றாலும் பொதுவாக தரமில்லாத திருட்டு டிவிடியில் படம் பார்க்கும்போது ஒளியும் ஒலியும் அவ்வளவு துல்லியமாக இருக்காது. எனவே, அப்படி பார்க்க நேரிடும் போது ஸ்கிப் செய்து தாவித் தாவி ஒரு படத்தை முக்கால் மணி நேரத்தில் பார்த்து வெறுப்பது என் பாணி.
ஆனால், இந்த ராம் படத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை டிவி திரையை விட்டு கண்ணகற்றாமல் பார்த்தேன். இந்தப் படத்தை தவறவிட்டேனே பாவி, என்று பருத்திவீரன் படம் வந்த போது, ’இவர் ஒரு சிறப்பான இயக்குனர், வாருங்கள்’ என பத்து பேரை அழைத்துக் கொண்டு போய், பாவத்தைக் கழுவினேன்.
அப்பேற்பட்ட அமீர், நீண்ட இடைவெளிக்கு பின் கொடுத்த ஆதிபகவனைப் பார்த்தபோது, பின்னந்தலையில் மடேர் மடேர் என அடித்துக் கொண்டேன்.
கோவாவில் சற்றே சறுக்கினாலும் மங்காத்தாவில் சிக்ஸர் அடித்து வெங்கட் ஒரு படி இறங்கி, இரண்டு படி ஏறிவிட்டார்.
சேரன் அறத்தை விதைக்க நினைக்கும் ஓர் இயக்குனர். கொஞ்சம் அழகாய் இருந்து தொலைத்துவிட்டால், ’சார் நீங்களே இந்த கேரக்டர பண்ணிடலாமே ?’ என பகடி செய்யும் கும்பல் இங்கதிகம். அந்தப் பகடியைப் போய் நிஜமென நம்பி நடிப்புக் கிணற்றில் விழுந்து, நீச்சல் கற்றுக் கொண்டிருக்கும் இயக்குன நடிகர் நம்ம சேரன்.
பொக்கிஷம் படத்தில் பத்மபிரியா நடிப்புக்கு ஆஸ்கரே கொடுக்கலாம், ஆனால் அந்தக்குழு, தலைவர் நடிப்பையும் சேர்த்துப் பார்த்துத் தொலைத்தால் ஆஸ்கர் குழுவையே தற்காலிகமாக கலைக்க நேரிடும் என்பதால், பாவம் அந்தப் புள்ளைக்கு விருது கிடைக்காமல் போய்விட்டது. திரைக் கதையிலும் கொஞ்சம் சொதப்பல்(எனக்கு மிகப் பிடித்த படம்) சேரனும், தனக்கு நன்கு வருவதை ஒதுக்கிவிட்டு, முழு நேர நடிகராகி விட்டார். அந்த இடத்தையும் யாருக்காவது கொடுத்துவிடலாம் !
கவுதம் மேனனின் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வி.தா.வ எல்லாமே மாஸ்டர் பீஸ். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைக்கதை ஒழுங்காக அமைத்திருந்தால், அந்தப் படம் கூட கவர்ந்திருக்கக்கூடும். நடுநிசி நாய்களும், நீதானே பொன் வசந்தமும் கவுதமை கவிழ்த்துவிட்டது. இன்னமும் வாய்ப்பிருக்கிறது, ஆனால் அவர் களம் மாறி சிந்தித்தால் மட்டுமே சாத்தியம் !
மிஷ்கினின், சித்திரம் பேசுதடி படத்துக்கு விகடன் கொடுத்த மதிப்பு பார்த்துதான் அப் படம் போனேன். நாயகியின் அப்பா சாகப்போகுமுன், மகளிடம் முகம் கொடுத்துப் பேசாமல், முதுகு காட்டியபடியே பதிலளித்துவிட்டு, தூக்கில் தொங்குவார். தப்புசெய்து விட்டதைக் காட்ட, முதுகு காட்டுவது ஒரு குறியீடு என அப்போதேச் சொல்லினர். ’அஞ்சாதே’ படத்தையெல்லாம் அணு அணுவாய் ரசித்தேன்.
ஆயுதபாணி ரவுடிகள் வெறுங்கையுடன் மோதும் ஹீரோவுக்காக, ஒவ்வொருவராய் வந்து அடிவாங்குவதைக் கூட ஜீரணித்திருந்தேன். ஆனால், முகமூடி மற்றும் ஓ.ஆ.விலும், முழு முழுக்க குறியீடுகளால் நிரப்பி, தலையில் ஓங்கிக் குட்டி, ’மசாலா பால் குடிப்பவனுக்கு அமிர்தத்தின் ருசி எப்படிடா தெரியும் ?’ என அவமதித்ததால், அவரை பட்டியலில் வைப்பதா வேண்டாமா என்றே குழப்பமாகிவிட்டது.
வெயில், அங்காடித்தெரு மட்டுமல்லாமல், அரவான் கூட எனக்கு மிக பிடித்த படம்தான். ஆனால் சமரசமில்லாத திரைக்கதையும், வரலாறும் பலருக்கு புரியாதலால், இது தோல்விப்படமென பலர் அவதானிக்கிறார்கள். அப்படியெல்லாமில்லை. ஓரளவு வெற்றிப்படம்தான், என்ன முந்தைய படங்களைப் போல் பரவலாகப் பேசப்படவில்லை. வசந்தபாலன் பட்டியலில் முன்னேறுகிறார்.
அனுராக் கஷ்யப்பின் கேங்க்ஸ் ஆப் வசிப்பூரை விட புதுப்பேட்டைதான் சூப்பர் என வாதாடி அனுராக்கின் வெறி பிடித்த ரசிகர்களிடமெல்லாம் வசை வாங்குமளவிற்கு செல்வராகவனின் பரம விசிறி நான். அவருடைய ஆயிரத்தில் ஒருவன் படத்தை பித்துப் பிடித்து பல முறை பார்த்தவன். அதன் முக்கிய காரணம் நான் ஒரு சோழ வெறியன். என் பரம்பரையை ஆராய்ந்தால் நான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் என்றாலும், சிறுவயதில் இருந்து கேட்ட ராஜராஜ, ராஜேந்திர, கரிகால் சோழன் கதைகளால், எனக்குச் சோழன் என்றாலே ஒரு மயக்கமுண்டு.
இந்த மயக்கத்திலேயே மயக்கமென்ன படம் போனால், அதுவும் மிக பிடித்தது. இப்படிச் சொன்னால் நம்மை சில இடங்களில் பிராந்தோ எனப் பார்ப்பார்கள். அதற்கெல்லாம் அஞ்சுவதே இல்லை. ஆனால், இன்னும் இரண்டாம் உலகம் பார்க்கவேயில்லை, பார்த்தவர்களெல்லாம் அவரை சைக்கோ, மெண்டல், எனச் சொல்லி திட்டுமளவிற்கு மோசமாய் படைத்துள்ளார் எனக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியில் இருக்கிறேன்.
பட்டியலை சீர் செய்யும் நேரம் வந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், வெற்றிமாறன், பிரபு சாலமன்...............இன்னும் க்யூவில் இருக்கும் பலரையும் உள்ளிழுக்க வேண்டும். ஐ வந்தபின்(2014) பட்டியலை மாற்றிவிடலாம், அதுவரை ஒரே ஒரு வெற்றிப்படம் கொடுத்தவர்களை விட்டுவிட்டு, தரமான படங்களை கொடுக்கும் நட்சத்திர இயக்குனர்களை இங்கு பட்டியலிடுங்கள் தோழர்களே !
கருத்துகள்
கருத்துரையிடுக