அம்பையின் அதிர்ச்சிக் கதை

மனத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டே இந்தப் பத்தியைத் தொடரவும், இல்லையேல் உங்களை அழவைத்த பாவத்திற்கு நான் ஆளாக நேரிடும் !

முதன் முதலாக, ‘அம்பை’யின் கதையை உயிர்மையில் வாசித்தேன்.  சிறுகதையல்ல நெடுங்கதை.  இலக்கியப் பத்திரிக்கைக்கேயுரிய தரத்தில் மெல்ல ஊர்ந்தது.  ஆனால் அழகான, எளிமையான எழுத்துக்கள்.

மகராஷ்ட்ரா ’தானே’ நகரிலிருந்து, மும்பை ’மத்’ தீவுக் கடற்கரைச் சுற்றுலாவிற்கு வந்த மூன்று இளம்பெண்கள் மாயமாகிறார்கள்.  முறையே 14, 12, 10 வயதுப் பெண்கள்.  அவர்களைக் காணாது அப்பனுக்கு(அப்பாவுக்கு எனப் போட்டிருக்கலாம், ஆனா......?) மயக்கம் வந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறான்.  கணவன் இருக்கும் நிலையில், தன் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் எனப் பயந்து, குழம்பித் தனித்திருக்கும் தாய்(கையில் நான்கு வயது சிறுவன்) ஒரு தனியார் துப்பறியும் பெண்ணிடம் தங்கியிருக்க, அந்தக் கேஸை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியால் அனுப்பி வைக்கப்படுகிறார்.  அந்த டிடெக்டிவ் தம் பங்கிற்கு காவல்துறைக்கு அந்தச் சிறுமிகளைத் தேடுவதில் உதவி செய்கிறார்.

மூத்த பெண்ணிற்கு ரெண்டுங்கெட்டான் வயது என்பதால் காதல் கீதல் எனச் சிக்கியிருப்பாளோ என்று ஒரு கோணத்தில் விசாரணை நகர்கிறது.  அவர்கள் தொலைந்து போன கடற்கரையைச் சலித்ததில் அவளுடைய செல்ஃபோன் கிட்டிவிடுகிறது(இளநீர் விற்பவன் எடுத்து வைத்திருந்திருக்கிறான்)  வந்த/போன/தவறிய அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் ஆராய்ந்ததில் அவளுக்கு எந்தத் தீயத் தொடர்புகளுமில்லை என ருசுவாகிறது.

இரு நாட்களாகியும், கடத்தல்காரர்களிடமிருந்தும் எந்த அழைப்புமில்லை, கடலில் எந்தப் பிணங்களும் மிதக்கவில்லை, கேஸின் எந்த சிறு முடிச்சும் அவிழவில்லை.  சிறுமிகளின் தாயாரை அழைத்துக் கொண்டு அந்த டிடெக்டிவ் 'தானே' நகரின் அவர்களுடைய வீட்டிற்குச் செல்கிறார். 

அங்கு, அந்த மூத்தப் பெண்ணிற்கு தொடர்ந்து நகைச்சுவைத் துணுக்குகளை மெசேஜ் செய்யும் பள்ளித் தோழனிடம் கேட்டு, அவளுடைய ஃபேஸ்புக் கணக்கு கண்டறியப்பட்டு சோதிக்கப்படுகிறது.  வழக்கம் போல பூ, குடை வைத்திருக்கும் பெண், முகம் மறைத்த கார்ட்டுன் பொம்மைகள் என ஃப்ரொபைல் படங்களை மாற்றுவதைத் தவிர பெரிய விவாதங்களிலோ, மற்ற நெருக்கமான எந்த புகைப்படங்களோ இதிலில்லை.  இருக்கும் ஓரிரு படங்களிலும் அவள் போஸ் கொடுக்கத் தயங்கி, யாருடைய பின்புறமாய் ஒளிந்து கொள்வதுபோலவே காணப்படுகிறாள்.

மையமாக உணரப்படும் கருத்து அந்தப் பெண் ஏனோ தொடர் சோகத்தில் இருந்திருக்கிறாள்,   நீச்சல்குளத்தில் ஒருமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள்(பள்ளி நண்பன் எதேச்சையாக விசாரணைக்கு இச் சேதி உதவுமோ என சொல்லுகிறான்)

அடுத்து அவளுடைய அப்பனின் அறை சோதிக்கப்படுகிறது.  தினமும் தூக்க மாத்திரை உதவியில்லாமல் அவனால் தூங்கவே முடிவதில்லை என மிச்சமிருந்த தூக்கமாத்திரைப் பட்டைகள் மூலம் தெரியவருகிறது.  அவனுடைய அறை மேஜை ட்ராயரில் இருந்த பல காகித டாக்குமெண்ட்களிடையே பழைய திருமணப்பத்திரிகை ஒன்று கிட்டுகிறது.  அதே அறையில் ஓர் இளம்பெண்ணின் புகைப்படமும் இருக்கிறது.

விசாரித்ததில், ”அது நின்று போன திருமணமென்றும், பல வருடங்களுக்கு முன்னர் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பாக, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஓடிப் போன கணவரின் ‘தங்கை’யின் புகைப்படம்தான் அதுவென்றும் சிறுமிகளின் தாயார் சொல்கிறார்.  அவளால் கணவரின்  பாரம்பரியமிக்க அக் குடும்பமே சிதறி சின்னாபின்னமாகி, தன் கணவன் கிட்டத்தட்ட அப்போது பைத்தியம் பிடித்த நிலையையடைந்தாகச் சொன்னார்கள்” என்றும் கேள்விப்பட்டேன் என்கிறார். 

அந்தத் தனியார் பெண் டிடெக்டிவ் இந்த நிகழ்வுகள் கேஸின் முடிச்சை எவ்விதத்திலாவது அவிழ்க்க உதவலாம் என ஏனோ அவதானிக்கிறார்.  ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் ராகவன் ஸ்மெல் என கமல் ஒருவாறாக யூகிப்பார் அது சரியாக இருந்துவிடுமில்லையா அது போல.

அந்தப் பத்திரிக்கையின் உதவி கொண்டு இப்போதிருக்கும் அறிவியல் வளர்ச்சியினால் மணமகன் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்வதை அறிகிறார் டிடெக்டிவ்.  நடக்காத திருமணத்தின் மணமகன் இங்கெதற்கு என உங்களைப் போலவே நானும் அலட்சியாமாய் உதடு சுழித்தேன்.  

நம் சார்பாக, அதேக் கேள்வியை ஸ்ரீவத்ஸவ்(மணமகன்) கேட்கிறான். 
”அந்தப் பெண்ணால் எங்களுக்கும் மானமே போயிற்று, மூன்று மாத அவமானங்களுக்குப் பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு பழையதை மறந்திருக்கிறேன், பதினைந்து வருடங்களுக்குப் பிறகு வடுவாகிவிட்டதை, ஏன் நோண்டி காயத்தை உருவாக்குகிறீர்கள் ?”  என படபடக்கிறான்.

டிடெக்டிவ், ஓடிப்போன மணப்பெண்ணுடைய அண்ணனின் மூன்று இளம்பெண்கள் காணாமல் போனதைச் சொல்கிறார்.  “யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன ?” எனச் சொல்லி வத்ஸவ் போனை வைப்பார் எனப் பார்த்தால், ”எதற்கும் நீங்கள் என் மனைவியிடம் இரவில் ஸ்கைப்பில் பேசுங்கள்” என ஆச்சர்யமான ஒரு பதிலைச் சொல்கிறார்.

ஸ்கைப்பில் வந்த பெண் உருவத்தைப் பார்த்து டிடெக்டிவ் அலறிவிடுகிறார். எந்தக் கல்யாணம் நின்று விட்டதெனச் சொன்னார்களோ அந்தத் திருமணமே நடந்திருக்கிறது, ஆனால் யாருக்குமே தெரியாமல் ஏன் ? 

ஆம், சிறுமிகளின் ஓடிப்போன அத்தைதான் அது.  ’இதென்ன கூத்து’ என வினவுகிறார் டிடெக்டிவ்.

”நான், அப்போது ஒரு கயவனிடம் சிக்கியிருந்தேன், நான் பருவமடைந்த காலத்திலிருந்து அவன் என்னைச் சிதைத்துக் கொண்டிருந்தான், என் திருமணத்தை அவன் அடியோடு விரும்பவில்லை, என்னைக் காரில் கடத்திக் கொல்ல நினைத்தான், நான் ஓடும் காரிலிருந்து குதித்துத் தப்பினேன்”

கடும் அதிர்ச்சியடைந்த டிடெக்டிவ், “ நீ படித்த பெண்ணாயிற்றே, அக் கயவனைப் பற்றி உன் பாசமிக்க அண்ணனிடமாவது சொல்லி அவனிடமிருந்து தப்பித்திருக்கலாமே, அந்தக் கயவனுக்கு உன் பாசக்கார அண்ணன்  நிச்சயம் கடுமையான தண்டனையைக் கொடுத்திருப்பானல்லவா ?  நீ எவனோடோ ஓடிவிட்டாய் என்றல்லவா எல்லோரும் உங்கள் குடும்பத்தை கரித்துக் கொட்டிவிட்டார்கள் ?”

“இல்லை மேம், அவனால் அக் கயவனைத் தண்டிக்க முடியாது, ஏனெனில், ‘கயவனே’ அவன்தான்’ !!!

பளாரென யாரோ நம்மை அறைந்தது போன்று நாம் அதிர்வதைப் போலவே டிடெக்டிவ்வும் அதிர்கிறார், ஆனால் முதன்முதலாக ஒரு முடிச்சு அவிழ்ந்ததைப் போல் ஃபீலிங் வருகிறது.

தன் நண்பர் போலிஸ் அதிகாரிக்கு இந்த விஷயத்தை பாஸ் செய்கிறார் அப்பெண் டிடெக்டிவ்.  சிறு நாடகம் ஒன்றை நடத்த அந்தக் காவலதிகாரி முடிவு செய்கிறார்.  ’அதற்கு ஒத்துழைக்க முடியுமா ?’ என அத் தங்கையை இந்தியா அழைக்கிறார்.  தன் மருமகள்களுக்காக அத் தம்பதி உடனடியாக சிங்கப்பூரிலிருந்து மும்பைக்கு கிளம்புகிறது.

மருத்துவமனையில் கண்விழிக்கும் தந்தை(கோபால்), ”இன்னுமா என் பெண்களை கண்டுபிடிக்கவில்லை, என்ன காவல்துறையிது எனக் கடுமையாகத் திட்டுகிறார், என்னை விடுங்கள், நானே என் பெண்களை கடற்கரையில் போய்த் தேடுகிறேன்” என்கிறார். 

”பாவம் நீங்கள் உயிருக்குயிராய் நேசிப்பவர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் உங்களைத் தவிக்கவிட்டுவிட்டு போய்விடுகிறார்களே, உங்கள் தங்கையைப் போல்.............ஆனால் அதுமாதிரி இப்போது நிகழாது, நாங்கள் அவசியம் உங்கள் பெண்களை கண்டுபிடித்துவிடுவோம்” என்கிறார் அந்தக் காவலதிகாரி(கோவிந்த்)

சம்பந்தா சம்பந்தமில்லாமல் இதில் ஏன் என் தங்கை வருகிறாள், அதுவுமில்லாமல் அவள் ஓடிப்போனது பதினைந்து வருடங்களுக்கு முன்னால்...... இவர்களுக்கு எப்படித் தெரிந்தது என வெளிர்கிறார் கோபால்.

திறமையான போலிஸ் எப்போதுமே எதிராளியின் கண்களை உற்றே பார்க்கும், அப்போதுதான் நொடியில் தோன்றி மறையும் இது போன்ற உணர்ச்சிகளையெல்லாம் உள்வாங்க முடியும்.

அந்த நேரம் பார்த்து அந்த டிடெக்டிவ்வுடன், கோபாலின் தங்கை, மருத்துவமனை அறைக்குள் நுழைய, அவளைப் பார்த்தவுடன் கோபால், ’எல்லாம் முடிந்து போயிற்று’ என்றுணர்ந்து கேவிக்கேவி அழ ஆரம்பிக்கிறார்.

கோபாலின் மனைவி(அர்ச்சனா)யிடம் முன்பே இத் தங்கை பற்றிய அதிர்வுச் செய்திகளை சொன்னவுடன்தான், அர்ச்சனா ஒருமுறை தன் மூத்தபெண் தீபிகா இரவு நேரங்களில் ’அப்பா தன்னுடன் தப்பாக நடந்து கொள்ள முயல்கிறார்’ எனச் சொன்னதாகவும், தான் அதை மறுத்து அவளைக் கண்டித்ததாகவும் நினைவு கூர்ந்திருந்தார், இதனாலேயேத்தான் மேலே நிகழ்ந்த நாடகத்திற்கே எண்ணம் உதயமாயிற்று.

“தான் விதைத்ததில் விளைந்த மாங்கனியை ருசிக்க தனக்கே அதிக உரிமையிருப்பதாக கோபால் நம்பினார்” உண்மையில் இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் ’ஷாஜகான் சரிதை’யை எழுதிய வரலாற்றாசிரியர்.  இதை மதனின் ’வந்தார்கள் வென்றார்கள்’  நூலில் ஏற்கனவே படித்திருந்தேன். ’அம்பை’ மிகப் பொருத்தமாக இவ்வரியை இதில் கையாண்டிருக்கிறார்.     
தன்னால் தூக்க மாத்திரை உதவியின்றி தூங்க முடியாதென்பதை மனைவி அர்ச்சனவை பரிபூர்ணமாக நம்ப வைத்திருக்கிறார் கோபால்.  தாமே பாலை ஆற்றி, ஒரு டம்ளரில் தூக்க மாத்திரையை போட்டுக் குடித்து விட்டு, மறு டம்ளர் பாலை அர்ச்சனாவிற்கு குடிக்கக் கொடுப்பது தின வாடிக்கை என அர்ச்சனா டிடெக்டிவ் சுதாவிடம் கூறியபோதுதான், ”அடிப்பாவி, அவன் உனக்குத்தான் தூக்கமாத்திரை கலந்த பாலை தினம் குடிக்கக் கொடுத்துவிட்டு, நீ தூங்கிய பின் உன் மகளிடம்.........”

“ஆமாம், தினமும் அர்ச்சனாவைத் தூங்கச் செய்த பின், தீபிகாவை(மூத்த 14 வயது பெண்) மிரட்டி என் பலத்தால் அவள் திமிறலை அடக்கி உறவு கொள்வேன், ஆனால் என்னுடைய எல்லாத் தவறுக்கும் அவள்தான் முழு காரணம், அம்மாவிடம் சொல்வேன், தற்கொலை செய்துகொள்வேன்,  எனச் சொல்வாளே ஒழிய எதையும் செய்யவில்லை.  ஆனால் என்னுடைய பார்வை இரண்டாம் பெண்(12 வயது)ணிடம் போன போதுதான் மிகவும் முரட்டுத்தனமாக கத்த ஆரம்பித்தாள்.  இம்முறை அவள் யாரிடமாவது சொல்லி என்னை அசிங்கப்படுத்திவிடுவாள் எனப் பயந்து போனேன், எனவே இந்தக் கடற்கரைச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தேன்.  என் மூன்று பெண்களை மட்டும் ஆளரவமற்ற கடற்கரை ஓரமாய் அழைத்துச் சென்று, மணலில் ஓர் ஆழமான குழி வெட்டி புதுவகை விளையாட்டு எனச் சொல்லி அவர்களை ஒவ்வொருவராக கடலில் அமிழ்த்திக் கொலை செய்து அந்தக் குழியில் போட்டு மூடிவிட்டேன்”

இந்தக் கதை பாதி நிஜமாய் மும்பையில் நிகழ்ந்ததுதான்.  மீதி அம்பையின் புனைவு.  பெண்களாய் பிறந்தததற்கு அவர்கள் சந்திக்கும் சில அதிபயங்கர மனிதர்களைப் பற்றி, அவர்களால் உடனடியாக வெளியே சொல்லி விட முடிவதில்லை.  அதுவே அவர்களின் பலவீனமாகவும், மிருகங்களுக்கு பலமாகவும் ஆகிப்போகிறது :(((

 நான் சொன்னது கதைச்சுருக்கம் மட்டுமே.  படிப்படியாய் அவிழும் முடிச்சுகளோடு கதை சொல்லும் அம்பையின் எழுத்துகளில் இந்த கதையை வாசித்துவிடுங்கள். 
        
              ----------------------------------சார்ர்ர்ரி--------------------------------






      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!